Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 2

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 2

“என்னங்க… “

குரல் கேட்டுத் திரும்பினார் அருணாச்சலம்.

“என்னம்மா…” சட்டையின் கையை மடித்து விட்டபடி மனைவியை ஏறிட்டார்.

“அஅஅ…..அது… அது வ… அது வந்து…” தயங்கித் திக்கிய பத்மினிக்குள் கேட்பதா வேண்டாமா என ஒரு மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

“என்ன வந்து? ” ஊடுருவும் பார்வையோடு கேட்ட அழுத்தமான குரலில், இருந்த கொஞ்சநஞ்ச தைரியமும் இருந்த இடம் தெரியாமல் போனது.

“ஒண்ணுமில்லைங்க… மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வர்றீங்களா இல்லையான்னு கேட்கத்…தான் வந்தேன். ” பத்மினி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நிமிர்ந்து பார்த்த அருணாச்சலத்தின் பார்வை அவர் அதனை நம்பவில்லை என்பதனைப் பறைசாற்றியது.

“மதியச்சாப்பாடெல்லாம் இருக்கட்டும். முதல்ல போய்க் காலைச்சாப்பாட எடுத்து வை…போ… “

கட்டளைக்குத் தலையசைவால் பணிந்த பத்மினி உணவை எடுத்து வைக்கத் தொடங்கினார். ” ஆகெல்லா அல்லாரீ நானு ஹேளுவதன்னா கேளி, சரிசரி.நிம்மாத்ரா நேரவாகி மாத்தாடு பேக்கு. சமயா சிக்குவாகா நம் ஜாகக்கே பண்ணி… ” போனில் பேசியபடி வந்த அருணாச்சலம் தொடர்பைத் துண்டித்து விட்டு உண்ணலானார்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிய, “சரி சொல்லு” என்றார் இட்டிலியைப் பிய்த்து சட்டினியில் தோய்த்தபடி.

“என்னங்க சொல்ல”

“அப்ப சொல்ல வந்தத சொல்லு. “

“அதான் சொன்னேனேங்க. மதியச்சாப்பா… “

கையசைவால் நிறுத்தியவர் ” உனக்குப் பொய் சொல்ல வராதுன்னு எனக்குத் தெரியுங்கறது உனக்கும் தெரியும்… அப்படியும் சொல்ற… சரி விடு, நான் மதியச் சாப்பாட்டுக்கு வர்றனா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போற? அன்னைக்கு எனக்குத் தெரியாம எவனுக்கோ சோறு போட்டுக்கிட்டு இருந்தியே.அந்த மாதிரி எதுவும் பண்ணப் போறியா?” அமைதியாக ஆரம்பித்து சீறலில் முடிந்திருந்தது அருணாச்சலத்தின் குரல்.

“ஏங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்தத இன்னமும் சொல்லிக் காட்டிட்டு இருக்கீங்க? இத்தனைக்கும் இத்தன வருஷத்துல உங்ககிட்ட கேக்காம பண்ணது அது ஒண்ணு தான். நான் வேறெந்த தப்பும் பண்ணலயேங்க… அதையுமே தப்புன்னு சொல்ல முடியாதே. நம்ம மகன் வயசுங்க அந்தப்பையனுக்கு. பசிக்குதுன்னு கேட்டான்.சாப்பாடு போட்டேன்.நீங்க வரவும் அவன் சாப்பிடக் கூட இல்லையேங்க. பசிக்குதுன்னு கேட்டவனுக்குச் சாப்பாடு போட்டதென்ன அவ்வளவு பெரிய தப்பா? ” ஆதங்கத்துடன் கேட்டார் பத்மினி.

“ஏய். நிறுத்துடி. என்னமோ ரோட்ல பசில தவிச்சுகிட்டு இருந்தவனுக்குச் சோறு போட்ட மாதிரி பேசுற. மொழியும் தெரியாம ஒண்ணும் தெரியாம வந்து இன்னைக்கு இந்த இடத்துல இருக்கேன்னா எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பேன்… ஆனா இந்த முப்பத்தஞ்சு வருஷத்துல அத அசைச்சுப் பார்த்தவன்னா அவன் மட்டும் தான். அவன் இருந்த வரைக்கும் என் கண்ணுல விரல விட்டு ஆட்டாத குறையா என்ன பாடு படுத்திருப்பான். அதுவும் அன்னைக்கு… அவனால நான் அவ்வளவு பேர் மத்தில அசிங்கப்பட்டுட்டு வந்து பாத்தா…
என் வீட்டுல…
என் அருமைப் பொண்டாட்டி…நீ…
அவனுக்கு வடிச்சுக் கொட்டிட்டு இருக்க. அதப் பாத்துட்டு நான் எப்படிடி சும்மா இருப்பேன். இல்ல அந்த நாள தான் எப்படி மறப்பேன்? இப்ப நினைச்சாலும் எனக்கு அவன் மேல ஆத்திரம் அடங்காம வருது” கொதிநிலையை அடைந்திருந்தார் அருணாச்சலம்.

“சரி விடுங்க, என்ன இருந்தாலும் அந்தப் பையனே இப்ப இல்ல. இறந்து போனவங்களைப் பத்தித் தப்பா பேச வேண்டாங்க. அவங்க அம்மாஅப்பா கதறுன கதறலே எனக்குள்ள இன்னமும் என் காதில ஒலிச்சுகிட்டு இருக்கு.அந்தம்மா வேற என்னென்னமோ சொல்லுச்சேங்க. அதனால நம்மப்பையனுக்கு எதுவும் ஆகிருமோன்னு பயமா இருக்குங்க” கலங்கிய பத்மினியின் கண்களில் கண்ணீர் தேங்கியது.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீயா எதையாவது நினைச்சிட்டுக் கவலப்படாத… ஆனானப்பட்ட கலெக்டர் அவனாலயே ஒண்ணும் செய்ய முடியல. அவன் செத்தப்பறம் அவங்க அம்மா சாபம் தான் பலிக்கப் போகு தாக்கும். ” மேசையை விட்டு எழுந்தபடி சொன்ன அருணாச்சலத்தின் குரல் இறங்கியிருந்தது.

“ஆமாங்க. அவங்கப் பையன நீங்க ஏதாவது பண்ணிருந்தான்னு சொல்லித்தான சொன்னாங்க. நீங்க தான் எதுவும் பண்ணலையேங்க.” என்றவர் மெதுவாக “நீங்க நிஜமாவே அந்தப்பையன எதுவும் பண்ணலலங்க ” கேட்டே விட்டார்.

அங்கு ஒருகணம் மயான அமைதி நிலவியது.

“அப்ப நீயே என்னை நம்பல. அப்படித்தான? ” கேட்கும் போதே அருணாச்சலத்திற்கு உள்ளூர உறுத்தியது.

“இல்லங்க. அந்தப்பையனோட இறப்பு என்னை ரொம்ப பாதிச்சுருச்சு. நம்மப்பையனுக்கும் அவன் வயசுதானங்க. அவனுக்கும் இந்த மாதிரி ஏதாவது நடந்திருச்சுன்னா… “சொல்லும் போதே பத்மினியின் குரல் நடுங்கி உடைந்தது.

“சீ… வாயக்கழுவுடி. என்னப்பேச்சு பேசுற”

“பின்ன என்னங்க? ஒரு வருஷமா ரெண்டு வருஷமா?பதினேழு வருஷங்க… நம்மப்பிள்ள எங்கப்போனான் என்ன ஆனான்? எதுவுமே தெரியலையே… “கதறி அழுகத் தொடங்கிய பத்மினியை மார்பில் சாய்த்துத் தலையைத் தடவி விட்டபடி,
” நம்மப்பையன் எங்க இருந்தாலும் இந்நேரம் ராஜா மாதிரி இருப்பான். ம். அழக்கூடாது.ம். ” ஏதேதோ சொல்லி ஒரு வழியாகத் தேற்றிய அருணாச்சலம் போகும்போது “நான் மதியச் சாப்பாட்டுக்கு வரல. ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ சாப்பிட்டு எந்தத் தொல்லையும் இல்லாம கொஞ்சம் தூங்கு. என்ன? ” என்றபடி வெளியேறினார்.

“காடினா தெகி” டிரைவருக்கு உத்தரவிட்டபடி காரில் ஏறி அமர்ந்த வரின் மனக்கண்ணில் மரணத்தைக் கண்ணெதிரே கண்டும் துளி அச்சமின்றி சிரித்துக்கொண்டிருந்தவனின் முகம் தோன்றியது. அவனுடைய மூச்சு முழுமையாக நிற்கும் வரையில் முகமெங்கும் இரத்தம் வழிந்த போதிலும் அவனுடைய கண்ணில் இருந்த ஒளியும் பார்வையில் இருந்த மிடுக்கும் சற்றும் குறையாமல் தான் இருந்தது.

அந்த முகம் எப்படி அவருடைய மனதில் அன்று கண்டது போலவே பதிந்திருந்ததோ அதுபோல அவன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளும் இன்று கேட்பது போலவே அவருடைய செவிகளில் எதிரொலித்தது.

“நீங்க இப்படியே பாவம் மேல பாவம் பண்ணிகிட்டே இருந்தீங்கன்னா நீங்க வலைவீசித் தேடிக்கிட்டு இருக்குற உங்கப் பையன் கிடைக்கவே மாட்டான் மிஸ்டர் அருணாச்சலம்.நான் கிடைக்கவும் விட மாட்டேன்”

அதற்கு பிறகு தான் அவருக்கு வெறியேறியதே. ஆனால் இன்று ஏனோ அவனை அவ்வளவு கொடூரமாக கொன்றிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தவரை “சார் சார் சார் ” என்று கத்திய டிரைவரின் குரல் நனவுலகிற்கு கொண்டு வந்தது.

சுற்றிப் பார்த்தார். கார் அந்த நீண்டக் பாலத்தில் அதிவேகத்தில் கட்டுப்பாடின்றி அங்குமிங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது. கீழே ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. எதிரே அசுர வேகத்தில் லாரி ஒன்று காது கிழியும்படி ஹாரன் எழுப்பியபடி வந்துகொண்டிருந்தது.

கண்களை இறுக மூடிக் கொண்டவரின் மனதில் பத்மினியும் பத்து வயதில் காணாமல் போன மகனும் வந்து போயினர்.

(வருவான்…)

4 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *