Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

(“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை… ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாளன்.

அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன்.

அந்த இளைஞனை அமிழ்தாவின் கண்கள் கேள்வியோடும் அருளாளனின் கண்கள் யோசனையுடனும் அளவிட ஆரம்பித்தன.)அந்த இளைஞன் நடக்கவே மிகவும் சிரமப்பட்ட மாதிரி இருந்தது. அவனைத் தோள் கொடுத்துக் கைத்தாங்கலாகச் சந்தனா பிடித்திருந்தாள். அவர்கள் இருவரும் இவர்களை நோக்கி வராமல் அருகிலிருந்த ஒரு கட்டடத்துள் நுழைந்தனர். அந்தக் கட்டடத்தின் வாயிலில் இருந்த பெயர்ப்பலகை அது ஒரு மருத்துவமனை என அறிவித்தது. இதைக் கண்ட அமிழ்தா சாலையைக் கடந்து எதிர்ப்புறம் இருந்த அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தாள். அருளாளனும் தான்.

அந்த இளைஞன் அங்கு காலைத் தாங்கியபடி காத்திருப்போருக்கான நாற்காலியில் அமர்ந்திருக்க, சந்தனா ரிசப்ஷனில் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தாள்.

அவளது தோளைத் தட்டி இங்க என்ன பண்ற சந்தனா என அமிழ்தா வினவவும், திடீரென அவளைக் கண்டதாலும் அவளது குரலில் இருந்த அழுத்தத்தாலும் ஒருகணம் தடுமாறி முகம் வெளிறிய சந்தனா “அக்கா அது வந்து பிரெண்டுக்கா… பஸ் படிக்கட்டுல இருந்து விழுந்துட்டான்க்கா நல்ல அடி…”

அமிழ்தா அப்பொழுதுதான் வாயிலில் நின்றிருந்த அவர்களது கல்லூரி பேருந்தைப் பார்த்தாள்.

“பஸ் படிக்கட்டுல இருந்தா…” அமிழ்தா கேட்டுக்கொண்டிருக்க, சந்தனாவின் பின்னால் அவளது ஆசிரியையின் செருமல் கேட்டது.
அது கேட்டு திரும்பியவளை அவர் கண்கள் எச்சரித்தன.
அவை கொடுத்த குறிப்பில் மிரண்டு அவள் வாயை மூடிவிட, “நீ போய் விவேகனுக்குத் துணைக்கு இரும்மா” என்று அவளை அனுப்பியவர்
அமிழ்தாவிடம் திரும்பி, “அது ஒண்ணுமில்ல மேடம் சின்ன ஆக்ஸிடன்ட்.” என்றார் அவர்.

“எது மேடம் சின்ன ஆக்ஸிடன்ட்? பஸ் படிக்கட்டுல இருந்து விழுகுறதா? இதேது மலைப்பாதையில விழுந்துருந்தா என்ன ஆகிருக்கும்? மாணவர்களைக் கூட்டிட்டு வர்றோம்ன்னா ஒரு பொறுப்பு வேண்டாமா? அப்ப என்னடான்னா இவளை கவனமில்லாம விட்டுட்டுப் போனீங்க… இப்ப இந்தப்பையன் கீழே விழுந்துருக்கான்…” குரல் என்னவோ அமைதியாகத்தான் இருந்தது ஆனால் வார்த்தையில் சூடு தெரிய அந்த ஆசிரியருக்கு வார்த்தை வர மறுத்தது.

“இல்ல மேடம்… சாப்பிட இறங்கிட்டு ஏறுரப்ப, இந்தப்பையன் ஏறிட்டு இருக்கறது தெரியாம டிரைவர் பஸ்ஸை எடுத்துட்டாரு…அப்பக் கீழே விழுந்துட்டான்…

“அதைத்தான் நானும் கேக்குறேன்… யாரு ஏறுராங்க யாரு இறங்குறாங்கன்னு பார்க்க வேண்டியது யார் பொறுப்பு? என்ன மேடம் நீங்க…பசங்களுக்குச் சொல்லிக்கொடுக்கறவங்க நீங்க, உங்களுக்குச் சொல்லிக்கொடுக்கணுமா?”

“சாரி மேடம்…”

“ச்ச்.. சரி வாங்க…” என்றவள் தங்கையை நோக்கிச்செல்ல அவரும் பின்தொடர்ந்தார். அருளாளனது பார்வை அந்த இளைஞனிடமே யோசனையாகப் படர்வதைப் பார்த்தவளுக்கும் இவன் ஏன் அவனையே இப்படி பார்த்துக்கிட்டு இருக்கான் என்னும் யோசனை வந்தது.

செவிலியர் ஒருவர் அதற்குள் ‘விவேகன் வாங்க…’ என்று அழைக்க, சந்தனாவும் ஆசிரியரும் அவனைத் தாங்கியபடி உள்ளே அழைத்துச்சென்றனர்.

அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவள், “அருளாளனிடம் ஏன் அவனையே அப்படி பார்க்குறீங்க…” எனக் கேட்டாள்.

‘ஒண்ணுமில்ல… சும்மாதான்’ என்று அவன் தலையாட்டினாலும் அது உண்மையில்லை என்று அவளுக்குத் தோன்றியது. இருந்தாலும் தோளைக் குலுக்கி விட்டு, தனக்கு முன்னால் அமர்ந்திருந்த நாற்காலியில் தாயின் தோளில் சுகமாக முகம் பதித்துக்கொண்டு தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தாள்.
கட்டைவிரலை வாய்க்குக் கொடுத்துக் கைச்சப்பிக் கொண்டிருந்த அதன் கன்னங்கள் அழகான கிண்ணங்களாக உப்பித்தெரிய…
தன் முகத்தில் புன்னகையை நிறைத்துப் புருவங்களைத் தூக்கி, என்னவென்று வினவ அதுவோ இவள் பார்க்கவும் வாயிலிருந்து கையை விடுவித்துவிட்டு முகத்தைத் திருப்பி தாயின் தோளில் மேலும் சுகமாக சாய்த்துக்கொண்டு வேறுபுறம் தன்கண்களைத் திருப்பியது. ஆனால் இவள் அதன்மீதிருந்து பார்வையைத் திருப்பாமல் அதையே பார்த்திருக்க, சில நொடிகள் கழித்து மீண்டும் இவள் புறம் திரும்பியது. இவள் அதைப் பார்த்து மேலும் சிரிக்க இம்முறை முகத்தைத் திருப்பாமல் இரண்டு முறை இமைதட்டி விழித்து விட்டு அழகாய்ச் சிரிக்க, அந்தச் சிரிப்பில் விழுந்தவள் அதற்குக் கண்களாலேயே விளையாட்டுக் காட்டி, அந்த மழலையை மேலும் சிரிக்கவைத்து அதன் சிரிப்பை ரசித்துக்கொண்டிருக்க, அவளது விழி விளையாட்டை அவளிடமிருந்து விழி பிரிக்காமல் ரசித்துக்கொண்டிருந்தான் அருளாளன்.

தன் முறை வரவும் அந்தக் குழந்தையின் தாய் அதைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட, இவளைப் பார்த்தபடியே சென்ற அந்தக்குழந்தை பார்வைவட்டத்திலிருந்து விலகும்வரை அதையே பார்த்திருந்தவள், அது விலகியவுடன் அருகிலிருந்தவனைப் பார்த்தாள்.
அவள் பார்க்கவும் சட்டென்று அவளிடமிருந்து பார்வையை விலக்கியவன், அந்தக் குழந்தை சென்ற திசையையே பார்த்தான்.
‘அழகுல்ல… ‘அவனும் அந்தக்குழந்தை போன திசையைப்பார்ப்பதைப் பார்த்துவிட்டு வினவினாள்.

“ம்ம் ஆமா ரொம்பவே அழகுதான்… “அவனும் அதை(?) ஆமோதித்தான்.

அவள் மேலும் சில வெற்று நிமிடங்கள் போவோரையும் வருவோரையும் வேடிக்கைப்பார்க்க, (அவன் யாரைப் பார்த்திருப்பான் என்றுதான் உங்களுக்குத் தெரியுமே…)
சந்தனாவும் ஆசிரியையும் அந்த விவேகனும் வந்தார்கள். அவனது காலில் ஒரு பெரியகட்டு சுற்றப்பட்டிருந்தது. அவனை ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு,” அக்கா நான் போய் மெடிசன்ஸ் வாங்கிட்டு வரேன்” என்று சந்தனா நகர்ந்து விட, “அப்ப ரொம்ப தாங்க்ஸ் மேடம்” என்று விட்டு அந்த ஆசிரியரும் வாசலை நோக்கிச் சென்றார். ‘வேறு ஏதோ வேலையாகச் செல்கிறார் போல’ என்று அந்த விவேகனை நோக்கி “இப்ப வலி பரவால்லையா தம்பி? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றாள்.

“தம்பின்னுலாம் சொல்லாதீங்கக்கா… ஒரு வாரத்துக்குக் காலை அசைக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க… அசைச்சா பெரிய பிரச்சனையாகிருமாம்…”

‘தம்பின்னு சொல்லாதீங்க அக்காவா? இவன் என்ன புது லூசா இருக்கான்?’ என்று மனதில் நினைத்தவள், “ஒரு வாரத்துக்குக் காலை அசைக்கக் கூடாதா அப்பறம் எப்படி ஊருக்குப் போவ?”

“ஊருக்கா? டிராவல்லாம் பண்ணா நான் நடக்குறதையே மறந்துற வேண்டியதுதான்னு டாக்டர் சொல்லிட்டாங்க….அதான் அங்கிள் போன்ல மேம்கிட்ட பேசிட்டாரே. பிரச்சனை இல்ல…”
அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சந்தனாவும் வந்துவிட,” சரி இவங்க அங்கிள் வர்ற வரைக்கும் நான் துணைக்கு இருக்கேன். நீ பஸ்க்குப் போ” என்றாள் அவளிடம்.
“என்னோட அங்கிளா?”

“ம்ம்… ஆமா போன்ல பேசுனாங்கன்னு சொன்னல… கொஞ்ச நேரத்துல வந்துருவாங்கதானே இல்ல ரொம்ப லேட்டாகும்மா… “அவள் அவனிடம் கேட்க, சந்தனா மிடறு விழுங்கி விட்டு, “நம்ம அப்பாதான்க்கா மேம்கிட்ட பேசுனாரு…”

“என்னது… “

“ஆமாக்கா நீ பாத்துக்குவன்னு அப்பா சொல்லவும் தான்க்கா என்னையும் இவனையும் விட்டுட்டுப் போனாங்க…”

“விட்டுட்டா?” அவள் வாயிலைப் பார்க்க, அங்கு அவர்களது கல்லூரி பேருந்து இல்லை…

“அப்பா எதுக்குடி அப்படி போன் பண்ணி சொன்னாரு…”

“நான்தான்க்கா…. சொல்ல…ச்சொன்னேன்.”

அமிழ்தாவின் கண்கள் கக்கிய கனலில் சந்தனா பயந்துதான் போனாள்.
அவளிடம் எதுவும் பேசாமல் முறைத்தபடி தந்தையை அலைபேசியில் தொடர்புகொண்டாள்.
எதிர்பார்த்திருந்தவர் போல உடனே எடுத்து விட,
“அப்பா என்னதுப்பா இது…எதுக்குப்பா இப்படி சொல்லி வச்சுருக்கீங்க… “

“எதைம்மா…”

“நான் என்ன கேக்குறேன்னு உங்களுக்குத் தெரியலை… அப்படித்தான?”

“விவேகனைச் சொல்லிறியாம்மா…”

“தெரியுதுல்லப்பா… “

“சரி விடும்மா விடும்மா அவனைக் கொஞ்சம் நல்லபடியா பாத்துக்கம்மா…”

“என்னது அவனை நான் பாத்துக்கவா? என்னப்பா உளர்றீங்க? யார் என்னன்னே தெரியாத பையன்னை நாங்க எப்படி பாத்துக்கிறது…அவனோட பேரண்ட்ஸ் போன் பண்ணி வரச்சொல்லுங்க… இல்லன்னா நம்பர் கொடுங்க… நம்பர் கொடுங்க…”

“இல்லம்மா அவன் சந்தனாவோட திக் பிரெண்டு. எங்களுக்கும் நல்ல பழக்கம் தான். பலதடவை நம்ம வீட்டுக்கு வந்துருக்கான். நீ வெளியூர்ல இருந்ததுனால உனக்குத்தெரியலை…அதுவுமில்லாம அவனோட பேமிலி வெளிநாட்ல இருக்காங்கடா… அந்தப் பையனுக்குச் சொந்தக்காரங்கன்னு வேற யாரும் இல்லம்மா…”

“சரி அதுக்கு இப்ப என்னை என்ன பண்ணச்சொல்றீங்க?”

“அவனைக் கொஞ்சம் உங்க கூட வீட்ல வச்சுப் பாத்துக்கோ… அவ்வளவுதான்…”
அமிழ்தாவிற்குச் சுருசுருவெனக் கோபம் எகிறியது…
“அவ்வளவுதானா? நாங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்க இடத்துல இவனை எப்படிப்பா… புரிஞ்சுதான் பேசுறீங்களா?”

“நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோடா… நாங்க ஊருக்குப் போயிருக்கப்ப சக்தி உங்களுக்குத் துணைக்கு வந்து இருந்ததில்லையாம்மா? அப்படி நினைச்சுக்கோடா…”

“அப்பா அது சக்க்திப்பா… “

“ஆமாம்மா அவன் உன்னோட பிரெண்டு…விவேகன் சந்தனாவோட பிரெண்டு… எங்களுக்கு ரெண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் தெரியலையே… எல்லாத்துக்கும் மேல என் பொண்ணுங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்குடா… சக்தின்னாலும் விவேகன்னாலும் அவங்களை தைரியமா உங்களோட இருக்கச் சொல்றது அவங்க மேல இருக்குற நம்பிக்கைன்னால இல்ல… உங்க மேல இருக்குற நம்பிக்கைல… பாத்து எல்லா வசதியும் பண்ணிக்கொடுப்பா… வச்சுறேன்…”

“அப்பா… அப்பா…”

வைத்துவிட்டார்.

சந்தனாவையும் அந்த விவேகனையும் முறைத்தாள்
.
“அவன் போலாமாக்கா” என்று கேட்க, “அப்ப நான் இவ்வளவு நேரம் எங்கப்பாட்ட பேசுனது எதுவுமே உன்காதில்ல விழுகல்ல… அப்படிதான… ஒரு மரியாதைக்கு வாய்வார்த்தைக்காகவாவது நான் வேற எங்கேயாவது தங்கிக்கிறேன்னு சொல்றியா? “

“இஇஇஇ…. உங்க தம்பி மாதிரி நினைச்சுக்கோங்கக்கா…”

“நான் நினைக்குறது இருக்கட்டும்… நீ நினைக்கணுமே” என்றவள், சந்தனாவிடம் “சந்தனா… எப்பவும் சக்தி மொட்டமாடில்ல தான தூங்குவான்… உன் பிரெண்டும் அங்கையே சமாளிச்சுக்குவாப்லல” எனவும் இருவரும் திருதிருவென விழித்தனர்.

“மொட்டமாடியா இந்தக்கால வச்சுகிட்டு எப்படிக்கா…”அவன் சொல்ல,

“ஆமாக்கா…உடம்பு வேற முடியாதப்ப கஷ்டம்க்கா…” சந்தனாவும் ஒத்து ஊதினாள்.

‘இப்ப மட்டும் மூளை நல்லா வேலை செய்யும்… ‘அவளை அடிக்குரலிலேயே கடிந்தவள், பிரதாப்பிடம் கேட்டுப்பார்க்கலாமா… அவருக்கு 6ம் வகுப்பு படிக்கும் பெண் மட்டும்தானே என யோசிக்க,
“இல்ல இவனை நீ உங்கக்கூடவே தங்க வை… “என்றான் அருளாளன்.
“ச்ச் இது எங்க வீட்டு விஷயம் நீங்க தலையிட வேண்டாம். “மனதாலேயே பதிலளித்தாள்.
“ப்ச். இவன் நமக்குத் தேவைப்படுவான். அதுக்குத்தான் சொல்றேன் . தங்க வை…”

“நமக்கா உனக்குன்னு சொல்லு…இந்த மூஞ்சியைப் பார்த்தா எதுக்குமே தேவைப்படாத மாதிரி இருக்கான். இவனுக்கு எதுக்குத் தேவைப்படுவானோ… ஏற்கனவே ஒரு பேயையே என்னால சமாளிக்க முடியல…இதுல இந்த ரெண்டு பிசாசுங்க வேறையா…சரி வந்துத் தொலைங்க…”

வழக்கம் போல ஆட்டோ கிடைக்க மறுத்தது… கிடைத்த ஒரு ஆட்டோவில், அவளது பகுதிக்கு முந்தைய பகுதியைச் சொல்லி ஏறிவிட்டு, அங்கு அந்த ஆட்டோ டிரைவர் இறங்கச்சொல்லவும் ” அண்ணா சாரிண்ணா… கொஞ்சம் நெக்ஸ்ட் ஸ்டாப்ல மட்டும் இறக்கி விட்டுருங்கண்ணா…”
என்றாள்.
“நெக்ஸ்ட் ஸ்டாப்ன்னா… கலெக்டர் குவார்ட்டஸா?”

“ம்ம் ஆமாண்ணா…இந்தப்பையனுக்குக் கொஞ்சம் கால்ல அடி… நடக்க முடியாது… அதனாலதான்…”

“அங்கெல்லாம் போகாதும்மா… பேய் நடமாடுற இடம்மா அது… நடக்க முடியாதுன்னா உருட்டிவிட்டுக் கூட்டிட்டுப் போங்க… இப்ப இறங்…” சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென முன்புறம் திரும்பி ஆட்டோவை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பிக்க, சந்தனாவும் விவேகனும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்தனர்.
அமிழ்தாவிற்குப் புரிந்ததால் அவள் வேடிக்கைப்பார்ப்பது போல வெளியே பார்த்தாள்.

வீட்டின் முன்னால் ஆட்டோவை நிறுத்தவும் அமிழ்தாவும் சந்தனாவும் இறங்கிவிட, விவேகன் இறங்கச் சிரமப்பட்டான்… சந்தனாவால் அவனது முழு எடையையும் தாங்க முடியவில்லை.அமிழ்தாவைப் பார்க்க, அவளோ கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்த்தாள்.
அப்பொழுது அந்த ஆட்டோ டிரைவர் அவளை விலகச்சொல்லிவிட்டு அவனைக் கைத்தாங்கலாக இறக்கி உள்ளே அழைத்துச் செல்லவும் சந்தனாவிற்குக் கிட்டத்தட்ட மயக்கமே வந்தது.
“அக்கா இந்த நாலுநாள்ல எந்த டிரைவரும் இந்த வீட்டுக்காகத்தான் இந்தப்பக்கமே வர மாட்டாங்க… இவர் என்னன்னா வீட்டுக்குள்ளேயே போறாரு… ஆனா அவரும் முன்னாடி வரமாட்டேன்னுதான சொன்னாரு… திடீர்ன்னு என்னாச்சுக்கா… எதுவும் ஆவிகீவி புகுந்துருச்சோ…” அவள் சந்தேகம் கேட்க, அவளை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் உள்ளே சென்றாள் அமிழ்தா.

உள்ளே அழைத்துச்சென்றவன் விவேகனை ஹால் ஷோபாவில் அமர வைக்க, விவேகனோ அவனிடம்” நிஜமாவே இங்க பேய் நடமாட்டம் இருக்காண்ணே… “என்று சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தான்…

‘பேய்கிட்டயே பேய்நடமாட்டம் இருக்கான்னு கேக்குற பார்த்தியா… அங்க நிக்குறடா நீ …’ என்று மனதில் அவனுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக்கொண்டிருந்தாள் அமிழ்தா.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்றுவிட்டு வெளியேறியவனைப் பின்தொடர்ந்தவள், வாசலுக்கு வந்தவுடன் “இப்படி பொய் சொல்றீங்களே மிஸ்டர் கோஸ்ட் …நியாயமா?” என்றாள்.

அவளை வெறுமனே முறைத்துவிட்டுக் கையை நீட்டினான். அவள் கேள்வியாக நோக்க,” ஆட்டோவுக்குப் பணம் கொடுக்க வேண்டாமா? பாவம் உங்களுக்காகத் தேவையில்லாம அவன் உடம்புல வேற புகுந்துருக்கேன். எக்ஸ்ட்ராவாவே கொடு…” எனவும் “ஸாரி” என்றபடி கேட்டதை விட அதிகமாகவே எடுத்துக்கொடுத்தாள்.
அதை அந்த ஆட்டோ டிரைவரின் சட்டைப்பையில் வைத்தவன் போய் ஆட்டோவை எடுக்க, அவள் மீண்டும் கேள்வியாக நோக்கவும் “உங்களை இறங்கச்சொன்ன இடத்துல போய் விட்டுட்டு வந்துர்றேன். இல்லன்னா தேவையில்லாத குழப்பம் வரும்…” என்றுவிட்டு சொன்னபடி செய்து விட்டு வந்தான்.

அவன் வெளியேறவும் சுற்றி ஆளரவம் இல்லாமல் பையில் பணம் மட்டும் இருப்பதைப் பார்த்தவுடன் என்ன நடந்தது என்று புரியாமல் குழம்பிய டிரைவர் ஆட்டோவைக்கிளப்பினார் ‘இனி இந்தளவு கூட இந்தப்பக்கம் வரக்கூடாது ‘என மனதில் நினைத்தபடி…

அருளாளன் மீண்டும் அந்த வீட்டினுள் வரும் போது விவேகன் சந்தனாவிடம் “நிஜமாவே இந்த வீடு பேய் கன்ட்ரோல்ல இல்லல்ல…” என்று கேட்டுக்கொண்டிருந்தான்.

‘சேச்சே வீடெல்லாம் இல்ல ஊரே பேய் கன்ட்ரோல்ல தான் இருக்கு.’ நினைத்தபடி அமிழ்தா அமைதியாக அமர்ந்திருந்தாள்.

சந்தனாவோ” அதெல்லாம் இல்லடா… நான் நாலு நாள் இங்கதான் இருந்தேன். ஒண்ணுமே இல்ல நீயா எதையாவது நினைச்சுப் பயப்படாத… வேணும்ன்னா அக்காட்ட கேட்டுப்பாரு… “எனவும் அமிழ்தாவிடம் திரும்பி “ஏன்க்கா அப்படிதான பேய்லாம் இந்த வீட்ல நடமாடலைதான.” என்றான்.

“சேச்சே நடமாடல்லாம் இல்ல… என்று அவனிடம் சொன்னவள், ‘உன் பக்கத்துல தான் சமத்தா உட்கார்ந்துருக்கு’ என்பதைச் சொல்லாமல் விட்டாள். அருளாளன் அதைத்தான் செய்திருந்தான். அவன் அருகில் அமர்ந்திருந்தான்.

“சரி அந்தப் பேச்சைல்லாம் விடுங்க. சந்தனா தம்பிக்கு அந்தப்பக்கம் இருக்குற ரூமைக் காட்டு. நீ போய் ரெஸ்ட் எடு..”எனவும் சந்தனா கைத்தாங்கலாக அழைத்துச்செல்ல அவன் காலைத்தாங்கியபடி நடந்து சென்றான்.

அவர்கள் கண்மறையும் வரை பார்த்திருந்து விட்டு, ‘இவனால உங்களுக்கு என்ன பயன்?’ என்றாள்.

“ம்ம்… நான் நினைக்குறது உண்மையா இருந்தா அருணாச்சலத்துக்குக் கொடுக்க வேண்டிய பரிசை இவன் வழியா கொடுக்கலாம்ன்னு தோணுது…”

அவளுக்கு ஒரு நிமிடம் திக்கென்றது. ‘அருணாச்சலத்துக்குப் பரிசா… அடப்பாவி…அப்ப பலி கொடுக்கத்தான் இவ்வளவு பரிவா கூட்டிட்டு வந்தானா?’’

“அவன் பாவம்… வெள்ளந்தியா தெரியுறான்…”

“நான் நினைக்குறது உண்மையா இருந்தான்னு தானே சொன்னேன். அவனை இப்பவே ஏதாவது பண்ணப் போறேன்னு சொன்னனா? இன்னொன்னு ஞாபகம் வச்சுக்கோ… வெள்ளந்தியா தெரியறவங்கல்லாம் வெள்ளந்தி கிடையாது…”

அவன் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் சந்தனாவிடம் “நான் இருக்கறதை உங்கக்கா கொஞ்சம் அன்கம்பர்டபிளா பீல் பண்றாங்கன்னு நினைக்குறேன். வேணும்ன்னா நைட்டு உங்க ரூம் கதவை உள்பக்கமா தாழ் போட்டுக்கோங்க…” என்று சொல்லிக்கொண்டிருந்தான் விவேகன்.

“நாங்க எதுக்கு உள்பக்கமா தாழ்ப் போடணும்” என்றவளை என்மேல் அவ்வளவு நம்பிக்கையா என்று மெச்சுதலாகப் பார்த்தான். ஆனால் அந்த மெச்சுதல் உடனேயே மழையில்லா மேகமாய்க் கலைய, “நீ வெளியே வர வேண்டிய அவசியம் என்ன?” என்றபடி அவனது அறைக்கதவை வெளிப்புறமாகத் தாழிட்டு விட்டுச்சென்றுவிட்டாள் அவள்.
‘நான் வெளியில வரவேண்டிய அவசியம் என்னவா? ‘என தலையில் கைவைத்தவன், ‘சரி அதான் இன்னும் ஒருவாரம் இருக்கே’ என்று நினைத்தபடி உறங்கத்தொடங்கினான்.

கீழே வந்தவள் அமிழ்தாவை உறங்க அழைக்க, ‘இல்ல நான் தூங்கக் கொஞ்சம் லேட்டாகும் நீ தூங்கு” என்று அனுப்பி வைக்கவும் அவளும் சரியெனச் சென்றுவிட்டாள்.

அவள் செல்லவும் அருகில் அமர்ந்திருந்தவனிடம் “அப்ப இப்ப சக்திட்ட பேசவா?” என்று ஆலோசனை கேட்டாள்.

“ம்ம் பேசு…”

அவள் சக்திக்கு அழைக்கப்போக, யாரோ அவளை அழைத்தார்கள்.

தெரியாத எண்ணாக இருக்கவும் புருவத்தைச் சுருக்கியபடி எடுத்து ஹலோ என்றாள்.

எதிர்ப்புறம் அமைதியாக இருக்க, “ஹலோ ஹலோ யாருங்க… பேசுறீங்க…” என்றாள்.
அமைதியாகவே இருக்கவும் யாராவது அலுவல் விஷயமாக இந்த ஊர்க்காரராக இருக்கக் கூடுமோ என்று எண்ணியவள், “யார்ரீ மாத்தாடி” என்றும் கேட்டுப்பார்த்தாள்.
ஆனால் மறுபக்கம் அமைதியாகவே இருக்கவே தொடர்பைத் துண்டித்து விடலாம் என்று எண்ணிய சமயம் ‘அம்மு…’ என்ற குரல் கேட்டது…
இப்பொழுது அமைதி காப்பது இவள் முறையாகி விட, அவன் ” அம்மு… அம்மு ஹலோ ஹலோ…”என்றான்.

“அம்மு…”

“—- டிஸ்ரிக்ட் கலெக்டர் அமிழ்தா ஞானசேகரன் ஐ.ஏ.எஸ் ஸ்பீக்கிங்… யார் பேசறீங்க…”ஆளுமை நிறைந்த குரல் அழுத்ததிருத்தமாய் வெளிப்பட்டது.

“ச…ச…சக்தி தான் பேசறேன்…”

“எந்த சக்தி…”

“சக்தி அம்மு… சக்தியரசன்… “

“ஸாரி எனக்கு அப்படி யாரையும் ஞாபகம் இல்ல…” என்று விட்டுப் போனைக் கட் செய்தாள்.

இவ்வளவு நேரம் ஒதுக்கி வைத்திருந்த கோபம் உலைக்களனாய் வெளிப்பட அது அவளது முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அது புரிந்தவனாய் அருளாளன் அமைதி காக்க, மீண்டும் அலைபேசி அழைத்தது.
அதை யாரென்று பார்க்காமல் எடுத்தவள் “மகனே நீ மட்டும் என்கையில கிடைச்ச செத்துருவ…”என்றாள்.

எதிர்ப்புறத்தில் ‘ஏன்மா’ என்று அருணாச்சலத்தின் குரல் கேட்க, நழுவ முயன்ற போனை அவளது கை இறுகப்பிடித்தது.

(தொடரும்…)

2 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *