Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

“சக்தி…அம்மு… சக்தியரசன்… “

“ஸாரி எனக்கு அப்படி யாரையும் ஞாபகம் இல்ல…” என்று விட்டுப் போனைக் கட் செய்தாள்.

இவ்வளவு நேரம் ஒதுக்கி வைத்திருந்த கோபம் உலைக்களனாய் வெளிப்பட அது அவளது முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அது புரிந்தவனாய் அருளாளன் அமைதி காக்க, மீண்டும் அலைபேசி அழைத்தது.

அதை யாரென்று பார்க்காமல் எடுத்தவள் “மகனே நீ மட்டும் என்கையில கிடைச்ச செத்துருவ…”என்றாள்.

எதிர்ப்புறத்தில் ‘ஏன்மா’ என்று அருணாச்சலத்தின் குரல் கேட்க, நழுவ முயன்ற போனை அவளது கை இறுகப்பிடித்தது.

அவளுக்கு அது அருணாச்சலத்தின் குரல் என்று தெரியவில்லை.

சக்தியின் குரலுக்குப் பதிலாக வேறு ஏதோ சற்று வயதில் மூத்த ஆண்குரல் கேட்கவும் பதறிப்போய் அந்த எண்ணைப் பார்த்தாள்.

அது முன்னால் அழைத்த சக்தியின் எண்ணுக்குப் பதிலாக வேறொன்றாக இருக்க, வேறு யாரையோ திட்டிவிட்டோமே என மனதில் நொந்துகொண்டே, ‘ஸாரி… ஹலோ…’ என்றாள்.

“இது கலெக்டர் அமிழ்தா ஞானசேகரன் நம்பர்தான?”

“ஆமாம் அமிழ்தாதான் பேசுறேன்… நீங்க…”

“என்னம்மா ஒரு கலெக்டரா இருந்துட்டு இவ்வளவு கீழ இறங்கி பேசற…”

“ஏன் சார் கலெக்டரா இருந்தா அவங்களுக்கு நெருக்கமானவங்கட்ட சகஜமா பேச மாட்டாங்களா? நான் பிரெண்டுட்ட பேசிட்டு இருந்தேன். நீங்க கூப்பிடவும் என்பிரெண்டுன்னு நினைச்சு அப்படி பேசிட்டேன்…. ஸாரி சார்… நீங்க யாரு பேசறீங்க… அதை முதல்ல சொல்லுங்க…”

“நான் அருணாச்சலம் பேசறேன்…”

“ஆங்…சொல்லுங்க என்ன விஷயம்? ” குரலில் வயதில் மூத்தவரைத் திட்டிவிட்டோமே என்ற குற்றஉணர்வு போய் அலட்சியம் தொற்றியது.

“என்னம்மா இவ்வளவு விட்டேத்தியா பேசுற… இவ்வளவு நேரம் குரல்ல இருந்த மரியாதை இப்ப இருக்க மாதிரி தெரியலையே…”

“மரியாதையா அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு?”

“என்னது?”

“இல்ல சார்… ஊர்ல தான் உங்களுக்கு நிறைய மரியாதை இருக்கே நான் வேற தனியா கொடுக்கணுமான்னு சொன்னேன்… வேற ஒண்ணும் இல்ல.. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க…”

“என்னம்மா நக்கலா?”

“சேச்சே நான் எதுக்குத் தேவையில்லாம உங்ககிட்ட நக்கலா பேசப்போறேன்… சொல்லுங்க… எதுக்குக் கூப்பிட்டிங்க?”

“எனக்கும் தேவையில்லாம யார்கிட்டயும் பேசுற வழக்கம் கிடையாது… நீ தான் தேவையில்லாம என் வழியில குறுக்கே வந்துகிட்டு இருக்க… நான் ஊர்ல இல்லாத நேரமா பாத்து என்னோட ரெண்டு நிறுவனத்துக்கு சீல் வச்சுருக்க…. அந்த ரெண்டு கட்டடத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா? தப்பு பண்ணிகிட்டு இருக்கம்மா…”

“யார் சார் தப்பு பண்றது? அந்த ரெண்டு கட்டடத்துல்ல ஒண்ணு அரசாங்கத்துக்குச் சொந்தமான இடத்துல இருக்கு… இன்னொன்னு ஆத்துக்குள்ள இருக்கு… ஆறு தண்ணி இல்லாம வறண்டு இருக்கலாம். ஆனா அதுக்காக அந்த இடத்துல நீங்க கட்டிடம் கட்டி வச்சுருப்பீங்களா? ஆத்தை ஆக்கிரமிப்பு பண்ணிருக்கீங்க… “

“ஆக்கிரமிப்பை அகற்றணும்ன்னா எவனாவது பிளாட்பாரத்துல பிளாஸ்டிக் பொம்மை வித்துக்கிட்டு இருப்பான். அவனைப்போய் விரட்டுவிடு… வழக்கமா உன்னைமாதிரி அதிகாரிங்கல்லாம் அதைத்தான செய்வீங்க… நீ ஏன் என்கிட்ட வர்ற? ஆரம்பத்திலேயே சொல்றேன்… என் வழியில இருந்து விலகுன்னனா உனக்கு நல்லது… அப்பறம் பாதி வழியில விலக நினைச்சேன்னா இது ஒத்தையடிப்பாதை…. திரும்பிப்போக வழியிருக்காது…நான் ஊருக்கு வர்றதுக்குள்ள நீ வச்ச சீலை நீயே உடைச்சங்கற செய்தி எனக்கு வரணும்…இல்லன்னா….புரிஞ்சுருக்கும்ன்னு நினைக்குறேன்…”

தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது…

கிட்டத்தட்ட…..கிட்டத்தட்டவெல்லாம் இல்லை…. அப்பட்டமான மிரட்டல் இது.

அவள் எரிச்சலுடன் போனைப் பார்க்க, அதுவோ மீண்டும் அழைத்தது,

இப்போது…. “சக்தி.”

“இவனுங்களோட…”

முணகியபடி போனை எடுத்துக் காதில் வைத்தாள்.

“அம்மு…”

“அம்மு கிம்முன்னு பம்மாத… எதுக்குக் கூப்பிட்டுத் தொலைஞ்சன்னு சொல்லித்தொலை…”

“அது… வந்து…ஸாரி அம்மு அப்படி பேசுனதுக்கு…”

“ரொம்ப சீக்கிரமா கேக்குற போல ….இத்தன நாள் கழிச்சு இதுக்கா கூப்பிட்ட என்ன விஷயம்ன்னு சொல்லித்தொலை…”

“அது போன்ல சொல்ல முடியாது அம்மு நேர்லதான் சொல்ல முடியும்…”

“சரி அப்ப நேர்ல வா…

“இப்பயா…

“ஆமாம்…அதான் உங்கப்பன் தான் ஊர்ல இல்லல்ல…வா

“அவர் ஊர்ல இல்லன்னு உனக்கு எப்படி தெரியும்?

“ச்ச்.. நீ வர்றதா இருந்தா இப்ப வா… இல்லன்னா போய்த் தூங்கித்தொலை…

“இல்ல இல்ல பக்கத்துல தான் இருக்கேன் வந்துறேன்”

இப்பொழுது இவள் போனைக் கட் செய்திருந்தாள்.

அருளாளன் அவளையே யோசனையாகப் பார்த்திருக்கவும் என்னவென்று வினவினாள்.

“இங்க பாரு அமிழ்தா நான் சக்தியை அப்படி பண்ணச்சொல்லி உன்கிட்ட சொன்னது அவன் அந்த அருணாச்சலத்தோட கையில சிக்காம இருக்கறதுக்குத் தான்… அவன் பண்ணி வச்சுருக்க வேலை அப்படி… இதுல நீ சக்திக்குத் தான் உதவி பண்றியே தவிர எனக்கு இல்ல… அதை மனசுல வச்சுக்கோ…”

“சரி… இப்ப இதை எதுக்கு என்கிட்ட சொல்றீங்க?”

“எதுக்குன்னா நீ எனக்கு உதவி பண்றதா நினைச்சுகிட்டு உன்னுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்துல என்கிட்ட பதில் உதவி எதிர்பார்க்கக்கூடாது. அதாவது அருணாச்சலத்தைப் பகைச்சுக்கறதும் பகைக்காம இருக்கறதும் உன்னுடைய சொந்த விருப்பம். நான் உனக்குத் துணைக்கு இருக்கேன்ங்கற தைரியத்துல எதிர்க்கக்கூடாது. அருணாச்சலத்துக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ அதை எனக்குக் கொடுத்துக்கத் தெரியும்… நீ உன்னுடைய வேலையை மட்டும் பார்த்தா போதும்…”

“நான் என்னுடைய வேலையைத்தான் அருளாளன் பார்த்துட்டு இருக்கேன். நீங்க என்ன அலாவுதின் அற்புத விளக்குப் பூதமா? ஏதாவது பிரச்சனைன்னா விளக்கைத் தேய்ச்சு தேய்ச்சு மைடியர் கோஸ்ட்ன்னு உதவிக்குக் கூப்பிட? நீங்க இல்லாம இருந்துருந்தாலும் நான் இதையே தான் பண்ணிருப்பேன்… நீங்கதான் என்னைப் பிடிச்சுத் தொங்கிட்டு இருக்கீங்க…போங்க…போய் ஏதாவது புளியமரத்திலயோ இல்லன்னா முருங்கைமரத்திலயோ ஏறித் தொங்குங்க…”

இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டிருக்கும் போதே வெளியே பேச்சுக்குரல் கேட்டது.

சக்திதான் வாட்ச்மேனிடம் எதையோ கூறிக்கொண்டிருந்தான். இவள் கைகாட்டவும் அவர் வழிவிட்டுவிட, வந்தான்.

வந்தவன் ‘அம்மு…’ ஆரம்பிப்பதற்குள் கன்னத்தைக் கையால் தாங்கியிருந்தான்.அவனை சோபா தாங்கியிருந்தது…

அவன் திகைக்கவில்லை. எதிர்ப்பார்த்திருந்ததுதான். ஆனால் இவ்வளவு ஓங்கி விழும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.கன்னத்தைத் தேய்த்து விட்டவன் ‘ஸா…’பேச முயற்சிக்க, அவனைப் பேசவிடாமல் சராமாரியாக அறைகள் விழுந்திருந்தது…

தாங்கவும் மாட்டாமல் தடுக்கவும் முடியாமல் அவன் இரண்டு கன்னங்களையும் கைகளால் மூடிக்கொள்ள, அருகில் கிடந்த தலையணையை எடுத்தாள்.

“நீ இப்ப கையால கவனிச்சத விடவா அந்தத் தலகாணி அடி வலிச்சுரப்போது… தலைகாணிதான் பிஞ்சு போகும்… போதும் விட்டுரு… “கைகளைக் கன்னத்தில் இருந்து எடுக்காமலேயே கெஞ்சினான்.

“உன்னைத் தலைகாணியால அடிக்…கப்போறேன்னு யார் சொன்னா? ஆங்..”. என்றவள், அந்தத் தலையணையை அவன் முகத்தில் வைத்து அழுத்தினாள்.

முகத்தோடு கைகளும் அதில் சிக்கிக்கொள்ள, அவன் மூச்சுக்குத் திணற, “ஏய் என்ன பண்ற…” என்று அருளாளன் தான் பதறினான்.

“நான் கொலைக்கேஸ்ல உள்ளே போனாலும் பரவால்ல… இவனை இன்னைக்குக் கொல்லாம விடமாட்டேன்…”

“நீ கொலைக்கேஸ்ல உள்ளே போறதுக்கு என் மச்சான் தான் கிடைச்சானா? விடு அவனை…” அவளைப் பிடித்து இழுத்தான்.

சக்தி பெரிய பெரிய மூச்சுக்களாக வாங்கி தன்னைச் சமனப்படுத்த, அவள் ‘மச்சானா?’ என்று இவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.

“ம்ம்… ஆமா, மனைவியோட அண்ணன், தங்கச்சியோட கணவன் எல்லாம் மச்சான் முறைதான சொல்லுவாங்க…” என்றான் அவன் .

“அதான் அதை நீங்க ஏன் சொல்றீங்க… அவனுக்கு அக்கா தங்கச்சி யாரும் கிடையாது. “அவள் மனதுக்குள்ளேயே அவனிடம் வினவினாள்.

“அதான் நீ இருக்கல்ல… அன்னைக்கு என்னமோ அண்ணன் மாதிரின்ன” என்றான் நக்கலாக…

“இவன் என்ன சொல்ல வர்றான்…” அவள் குழப்பமாய்ப் பார்க்க, அவனோ, ‘முதல்ல அவனுக்குக் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வந்து கொடு…செத்துப்பிழைச்சுருக்கான்’ என்றான் இருமிக்கொண்டிருந்த சக்தியைக் காட்டி.

அவளும் சக்தி பலமாய் இருமுவதைக் கண்டுவிட்டுத் தண்ணீரை எடுத்துவந்து நீட்டினாள். முறைத்துக்கொண்டேதான்.

அதை வாங்கிக்குடித்தவன், மேலும் சிலபல மூச்சுக்களை இழுத்துவிட்டுவிட்டு, “கொலைகாரி… ஏன்டி இப்படி பண்ண?” பரிதாபமாக வினவினான்.

அவள் மீண்டும் அந்தத் தலையணையைக் குறிப்பாகப் பார்த்துக்கொண்டே “எதுக்காகப் பண்ணேன்னு உனக்குத் தெரியல… அப்படித்தான” என, தம்ளரைக் குனிந்துக் கீழே வைத்தவன் அப்படியே தடாலென அவள்; கால்களில் விழுந்து விட்டான்.

“அம்மாத்தாயே அன்னைக்கு எனக்கு வேற வழி தெரியலை… அந்த அருணாச்சலத்துக்கு முன்னாடி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்குற மாதிரி காட்டிக்க வேண்டாம்ன்னு நினைச்சேன்… அதனால அப்படி பேச வேண்டியதாகிருச்சு… தயவு செஞ்சு மன்னிச்சுரு…”

“எந்திரிச்சுத்தொலை…”

“மன்னிச்சுட்டல்ல “என்றான் எழுந்தவன்.

அவள் ஒன்றும் சொல்லாமல் முறைக்க, மீண்டும் கீழே குனியப்போனான்.

அவனைத் தடுத்தவள் “உன்னைக் கொன்னுருவேன்… எதுக்குடா இப்படில்லாம் பண்ணிட்டு இருக்க? என்றாள்.

காலில் விழுந்ததைக் கேட்கிறாள் என நினைத்து,”மன்னிப்புக்கேட்க…” எனவும் அவள் கடுப்பானாள்.

“டேய்…. அதைக் கேட்கல…” அவனை சோபாவில் அமரவைத்து தானும் அருகில் அமர்ந்தவள், “எதுக்கு அந்த அருணாச்சலத்துக்கு மகனா நடிச்சுட்டு இருக்க?” என வினவினாள்.

இவ்வளவு நேரம் இயல்பாக இருந்த சக்தியின் முகம் இறுகியது. கண்ணை மூடி சோபாவில் சாய்ந்தவன் ஆழமாக மூச்சுக்களை எடுக்க, அவளது அருகில் சோபாவின் கைப்பகுதியில் அமர்ந்திருந்த அருளாளனை நோக்கினாள். அவனுடைய முகமும் இயல்பாக இல்லை. “சக்தி…சக்தி…” என அவனது தோளை மென்மையாகத் தட்ட எழுந்தவன், பெருமூச்சை விட்டபடி தண்ணீர் என சைகையில் கேட்டான். அவள் தர, அருந்தி முடித்தவன், அந்த தம்ளரையே கையில் வைத்துச் சுற்றியபடி பார்த்துக்கொண்டிருக்கவும் “சக்தி…” என்றாள் மீண்டும்.

” நீ டிரைனிங் போறதுக்கு முன்னாடி நான் என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கா?”

“ம்ம்…யாரையோ காதலிக்குறேன்னு சொன்ன… ஜர்னலிசம் படிக்கிற ஒரு பொண்ணு… கரெக்டா…என்கிட்டதான் முதல்ல சொல்றதா சொல்லி சொன்ன….பேர் கூட ஏதோ கலைன்னு சொன்ன ஞாபகம்…”

“ம்.மேகலை” என வறட்டுப்புன்னகை ஒன்றை சிந்தியவன்,” இந்த ஊர்ல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அருளாளன்னு ஒரு கலெக்டர் இறந்து போனதா பேசிக்குவாங்க… கேட்டுருக்கியா…”

“ம்ம் ஆனா அவருக்கும் நீ காதலிக்கறதுக்கும் அருணாச்சலத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“அருளாளன் நீங்க எல்லாரும் நினைக்குற மாதிரி ஆக்ஸிடன்ட்ல இறக்கல. அவரைக்கொன்னது அருணாச்சலம்.” சொல்லிவிட்டு அவன் அவளது முகத்தைப் பார்க்க, அவன் எதிர்பார்த்த திகைப்போ அதிர்ச்சியோ இல்லாமல் அது நிர்மலமாக இருந்தது.

அவன் அவளது முகத்தையே பார்க்க

“அதுதான் தெரியுமே நீ அங்க என்ன பண்ணிட்டு இருக்க அதைச் சொல்லு முதல்ல…” என்றாள் அமிழ்தா.

அவளைக் குழப்பமாகப் பார்த்தான் சக்தி. ” அது உனக்கு எப்படி தெரியும்…நெற்றியை விரல்களால் தேய்த்தவன், ஆமாம்… முதல்ல, நான் அருணாச்சலத்தோட மகன் இல்லன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்றான்.

“ஷ் அதை அப்பறம் சொல்றேன். நீ முதல்ல சொல்லு. உனக்கும் அருணாச்சலத்துக்கும் அருளாளனுக்கும் மேகலாவுக்கும் என்ன சம்பந்தம்? ”

“அருளாளனைக் கொன்னது அருணாச்சலம்…”

“ம்ம்…”

“மேகலா என்னோட காதலி…”

‘ம்ம்…”

“அருளாளன் மேகலாவோட அண்ணன்…”

‘ஓஓ இதுனால தான் சாருக்கு முதல்ல இருந்தே சக்தி மேல சாப்ட் கார்னர்ரா?’ என்று நினைத்தவள், சக்தியின் தலையில் கொட்டினாள்.

அவன் நிமிர்ந்து பார்க்க, “உன் காதலிக்காக, அவன் அண்ணன் சாவுக்குப் பழி வாங்கணும்ன்னு நினைக்குறதெல்லாம் சரிதான். அதுக்கு எதுக்குடா மகனா ‘நடிச்சு ஏமாத்திட்டு இருக்க… எதுனாலும் முகத்துக்கு நேரா நின்னு பண்ண வேண்டியதுதான? முதுகுக்குப் பின்னாடி குத்துவியா?”

“அவ அண்ணன் சாவுக்காகன்னு இல்ல அம்மு… அவளே இப்ப முழு உயிரா இல்ல…”

“என்னடாசொல்ற…”

“ம்ம் ஆமா அம்மு அவங்க அண்ணன் இறந்ததுக்கப்பறம் அவ ரொம்ப உடைஞ்சு போயிருந்தா….அவ அண்ணனும் அவளும் ரொம்ப க்ளோஸ்… என்னோட பர்ஸ்ட் பிரெண்ட் எங்கண்ணன் தான்னு சொல்லிட்டே இருப்பா அடிக்கடி… ஒரு சின்ன கெட்டப்பழக்கம் கூட இல்லாத அவளோட அண்ணனைப் போதை மருந்து எடுத்துக்கிட்டு இறந்துபோனாருன்னு சொன்னத அவளால தாங்கவே முடியலை… எங்க அண்ணனோட சாவுக்கு நியாயம் வாங்காம விடமாட்டேன்னு சொல்லிகி;ட்டே இருந்தா… எனக்கு அந்த நேரம் பார்த்து ரொம்ப முக்கியமான ஒரு கேஸ் வரவும் அவளை விட்டுட்டுப் போயிருந்தேன். என்கிட்டதான் இங்க வரப்போறதா போன் பண்ணி சொல்லிட்டுப் போனா… வேற ஊர்ல இருந்த என்னால அவளைத் தடுக்க முடியல…மகன் இறந்த சோகத்துல இருந்த அவங்க பேரன்ட்ஸு ம் மகளைக் கவனிக்கல… நான் ஊருக்குத் திரும்பி வந்தப்ப அவ கோமாக்குப் போயிருந்தா…யாரோ அவளோட அண்ணனைப் போதை மருந்து எடுத்துக்கிட்டாருன்னு சொன்னதையே தாங்க முடியாத அவளையே காரணமா வச்சு அவரைப் பெத்தவங்களையே அவர் போதை மருந்து பழக்கமுள்ளவர்ன்னு சொல்ல வச்சானுங்க இந்தக்கோஷ்டி… செத்துப்போனவர் முக்கியமா உயிரேர்டு போராடிட்டு இருக்கிற மகள் முக்கியமான்னு யோசிச்சப்ப அவங்க பேரன்ட்ஸ் மகள் பக்கம் வந்துட்டாங்க…ஆனா அவ என்னைக்குமே அவங்க அண்ணன் பக்கம் தான்…இரண்டு வருஷம் ஆகுது… ஒரு சின்ன அசைவு, நம்பிக்கை கூட இல்ல… பிழைச்சு வர்றது கஷ்டம்தான்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. வருவாளா என்னன்னு கூட தெரியல…” அவன் உடைந்து அழ ஆரம்பிக்க, அவனது முதுகை மெல்லத் தட்டிக்கொடுத்தபடி அருகிலிருந்தவனைப் பார்த்தாள். அவன் அசையாமல் எங்கோ வெறித்தமர்ந்திருக்க, அருள்… அருள்… மனதால் அவனை அழைத்தாள். அவளது எட்டாவது அழைப்பில் அவளது புறம் திரும்பியவன், தேம்பிக்கொண்டிருந்த சக்தியைப் பார்த்துவிட்டு “தேவைப்பட்டா கூப்பிடு நான் வரேன்…”என்றுவிட்டுக் கரைந்தான். அவளது மனமும் வேதனையில் கரைந்தது. இவன் அழுது தீர்த்துவிடலாம். ஆனால் அவனால் அழமுடியுமா என்று கூடத் தெரியவில்லையே… அவள் மனம் பரிதவிக்க, தானாகவே அழுவதை நிறுத்திய சக்தியின் முகத்தில் ஒரு தீர்க்கம் தெரிந்தது.

“அவ திரும்பி வருவாளா இல்லையான்னு எனக்குத் தெரியாது ஆனா அவ ஆசைப்பட்டது நடக்கணும்ன்னு தோணுச்சு. அதனாலதான் பிராக்டிஸை விட்டுட்டு இங்க வந்தேன். எப்படியாவது ஏதாவது எவிடன்ஸ் கிடைக்கும்ங்கற நம்பிக்கைல டிரைவரா சேர்ந்தேன். அன்னைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை…திடீர்ன்னு அந்த ஆளா என்னைப் பார்த்து அரசு அரசுன்னு பிதற்றினாரு. அவரோட பையன் ஏதோ பயர் ஆக்ஸிடன்ட் அப்ப காணாம போயிருந்தான்னு தெரியும். அந்த வீட்லயே இருந்ததனால சில தகவல்களை அவங்க பையனைப் பத்தி தெரிஞ்சுக்க முடிஞ்சது. அதை வச்சுதான் சமாளிச்சுட்டு இருக்கேன். ஆனா எப்ப மாட்டப்போறேன்னு தெரியல… இந்தப் பிரச்சனைல உன்னை உள்ள இழுத்துவிட விரும்பல… எப்பன்னாலும் நான் மாட்டலாம்… அன்னைக்குக் கூட அவரோட பையன் அவரை எப்பயும் கூப்பிடுற மாதிரி கூப்புட சொன்னாரு… ஆனா யாருக்கு அவர் பையன் அவரை எப்படி கூப்பிடுவான்னு தெரியும்…”

“எனக்குத் தெரியும்…”

ஒரு குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தனர். விவேகன் கதவுநிலையில் சாய்ந்து நின்றிருந்தான். இவர்கள் இருவரும் கேள்வியாக நோக்க,

“அருணா… அருணாச்சலத்தோட பையன் அவரை அருணான்னு கூப்பிடுவான்.” என்றபடி அருகில் வந்தான் அவன்.

                                          (தொடரும்...)

வணக்கம் மக்களே,

கொரானா தான். அது உடலைப் பாதிக்குதோ இல்லையோ மனசை நல்லாவே பாதிக்குறதைப் பார்க்க முடியுது. நிறைய தற்கொலைகள், கொலைகள் கூட மனநலம் பாதிக்கப்பட்டு நடக்குது…

அதனால ஏற்கனவே சொன்னதுதான்… உடல் ஆரோக்கியத்தை விட மனஆரோக்கியம் ரொம்ப முக்கியம்… மனம் பாதிக்காம இருந்தா உடல் என்ன பாதிப்படைஞ்சாலும் மீண்டுரலாம்…

தனிமைப்படுத்தப்பபட்டதால மனநலம் பாதிக்கப்பட்டு ஒருவர் மூதாட்டியைக் கடித்துக்கொலை செய்து விட்டதாகவும், கொரானா பாதிப்பு இருக்கலாம்ன்னு இரண்டு முறை மருத்துவப்பரிசோதனை செஞ்சு இல்லைன்னு நிரூபணமான பின்னும் தன் ஊர்மக்கள் உள்ளே விடதாதலால இளைஞர் ஒருவர் தற்கொலை பண்ணிக்கிட்டதாகவும் செய்திகள் வந்ததாலதான் இப்ப இதைப்பத்திப் பேசிகிட்டு இருக்கேன்.

நமக்கு எல்லா விதமான சுமூகமான சூழ்நிலை இருக்கறப்ப காட்டற மனிதநேயத்தை விட, நாமளே கஷ்டத்துல இருக்கறப்ப காட்டுற பிறருக்கு காட்டுற மனிதநேயம் தான் விலைமதிப்பில்லாதது. மனிதர்கள் கொசுவோ எலியோ கிடையாது. நோயைப் பரப்புறாங்கன்னு பிடிச்சு, அடிச்சுக் கொல்ல… மனிதர்கள்.

நாம பாதுகாப்பா இருக்கணும் அது ரொம்பவே அவசியம்தான்… அதுக்காக நம்முடைய பாதுகாப்பு நடவடிக்கை மற்றவர்களுடைய உயிருக்கே அச்சுறுத்தலா அமைஞ்சுரக் கூடாது.

நாம் இன்னும் கால் கிணறு கூட தாண்டலை… அதுக்குள்ள நாம கொரானாவைக் கொன்னுட்டோம்ன்னு கொண்டாடுறத விட, பாதுகாப்பாகவும் பயமில்லாமலும் இருக்குறது அவசியம்…

தீதும் நன்றும் பிறர்தர வாரா…

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன…

2 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *