“எப்பன்னாலும் நான் மாட்டலாம்… அன்னைக்குக் கூட அவரோட பையன் அவரை எப்பயும் கூப்பிடுற மாதிரி கூப்புட சொன்னாரு… ஆனா யாருக்கு அவர் பையன் அவரை எப்படி கூப்பிடுவான்னு தெரியும்…”
“எனக்குத் தெரியும்…”
ஒரு குரல் கேட்க நிமிர்ந்து பார்த்தனர். விவேகன் கதவுநிலையில் சாய்ந்து நின்றிருந்தான். இவர்கள் இருவரும் கேள்வியாக நோக்க,
“அருணா… அருணாச்சலத்தோட பையன் அவரை அருணான்னு கூப்பிடுவான்.” என்றபடி அருகில் வந்தான் அவன்.
நிதானமாக நடந்து அருகில் வந்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அமிழ்தாவின் கண்ணில் கூர்மை ஏற, சக்தியோ “எப்படி சொல்ற? உனக்கு எப்படி தெரியும்? என்று வினவினான் .
அதற்குப் பதில் சொல்லாமல் சற்று நேரம் கீழே குனிந்து தரையையே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.விவேகன் .
“கேக்குறான்ல பதில் சொல்லு. உனக்கு எப்படி தெரியும்?” என்றாள் அமிழ்தா.
தலையை நிமிர்த்தாமல் தரையை வெறித்தபடியே அவன் சொல்ல ஆரம்பித்தான்.
“அருணாச்சலத்தோட பையனுக்கு அவங்க அப்பான்னா ரொம்பப்பிடிக்கும். ரொம்பன்னா ரொம்பவே…அம்மாவையும் பிடிக்கும்தான்… ஆனா அவனுக்கு அவங்க அப்பா கொஞ்சம் ஸ்பெஷல்தான். அவருக்கும் அப்படித்தான். அவனுக்கு ஒரு பத்து வயசு இருக்கும்… அப்ப அவரோட எதிரிங்களால அவரைக் கொலைபண்ண முயற்சி நடந்துச்சு…எதிரிங்கன்னா யாரோ இல்ல… கூட இருக்கறவங்களாலேயே… அவரோட குடும்பத்தையே தீவிபத்துல சிக்க வைக்கப்பாத்தாங்க… அவங்க மூணு பேரைக் கொல்றதுக்காகவே அவங்க பேக்டரியைத் தீப்பிடிக்க வைக்க, மாடியில இருந்த அறையில இவங்க மூணு பேர் மட்டும் சிக்கிக்கிட்டாங்க. நாலாபக்கமும் தீ சூழ, பயந்து அழுதுட்டுருந்த பையன் மேல ஒரு கட்டைத் தீயோட விழவும், தீக்காயம் பட்டுருச்சு… மகன் கதற, அதைத் தாங்க முடியாம பத்மினி பதற, கீழே ஏதோ லாரி கிளம்பிர சத்தம் கேட்க அதைப்பார்த்த அருணாச்சலம் ஒரு முடிவுக்கு வந்தார்…. மகனைத் தூக்கி ரெண்டு கன்னத்துலயும் மாறிமாறி முத்தம் கொடுத்தவர் எங்க தன்னோட எதிரிகள் யார்கைலயாவது மாட்டிருவானோங்கற பயத்துல, “யார்கிட்டயும் உன்னைப் பத்தின எந்தத் தகவலையும் சொல்லிராத… அப்பாக்கு ஒண்ணும் ஆகலைன்னா கண்டிப்பா நீ எங்க இருந்தாலும் நானே வந்து கூட்டிட்டுப் போயிருவேன்னு…” சொல்லிட்டு கிளம்பிக்கிட்டு இருந்த லாரியைப் பாத்து மகனைத் தூக்கிப் போட்டாரு… அது தலையணைகள் தயார் செய்யுற இடம்தான். அதுனாலதான் சீக்கிரமா தீப்பிடிச்சதும்… லாரிலயும் தலையணைகள் தான் இருந்துச்சு அவனுக்கு அதுனால பெருசா அடி எதுவும் படலை… ஆனா அவங்க அம்மாப்பாவுக்கு ஏதாவது ஆகிருக்கும்மோங்கற பயத்துல அழுதுட்டே இருந்தான்… தீக்காயமும் வலிக்க, அழுதழுது அப்படியே தூங்கிட்டான்… ரொம்ப நேரம் கழிச்சு ஏதோவொரு நெடுஞ்சாலையில லாரி போறப்ப, ஹாரன் சத்தம் ரொம்பக்கேட்க, தூக்கம் லேசாக் கலைய புரண்டவன் லாரில இருந்து விழுந்து ரோட்டுல விழுந்திருந்தான். விழுந்த வேகத்துல தூக்கம் முழுசாக் கலைய அவன் பாத்தது… பக்கத்துல இருந்த அசுரத்தனமான லாரியோட சக்கரங்களைத்தான்… அவனுக்கு அழக்கூட வாய்வரலை… பயத்துல உறைஞ்சு போய் இருந்தப்ப அவனை யாரோ அள்ளி எடுத்துத்தூக்கினாங்க… ஒரு பெண்… அவங்க தூக்கியிருந்தது அவங்க அம்மா கையில இருந்த மாதிரியே இருக்கவும் அவங்க தோள்ல அப்படியே சாஞ்சு அழ ஆரம்பிச்சான்… அவங்க அப்பா சொல்லிருந்ததனால அவனைப் பத்தின எந்த தகவலும் அவங்ககிட்ட சொல்லல… பேரைக்கூட, எவ்வளவோ கேட்டுப்பார்;த்தாங்க… வெறுமனே அழுதானே தவிர எந்தத் தகவலும் சொல்லல… அவன் உடம்புல இருந்த தீக்காயமும் அம்மா அப்பா நெருப்புல சிக்கிட்டாங்க என்னும் அவனுடைய அழுகையும் அவங்களை வேற மாதிர எண்ண வச்சுச்சு… அவனை அவங்களே தத்தெடுத்து வளக்க ஆரம்பிச்சாங்க… தங்களுக்குப் பிடிச்ச ஒரு பேரும் வச்சுக்கிட்டாங்க…”
‘அந்தப்பேர்தான் விவேகனா?’ என அமிழ்தாவும் சக்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள விவேகன் தொடர்ந்தான்…
“ஆனா அவனுக்கு அவனுடைய அம்மா ஞாபகமும் அப்பா ஞாபகமும் வந்துகிட்டே தான் இருந்தது…யார்கிட்டயும் சொல்லக்கூடாதுங்கற அவங்க அப்பாவோட கட்டளைதான் அவனைத் தடுத்ததும் கூட… அப்பா வந்துருவாரு கூட்டிட்டுப்போயிருவாருன்னு ரொம்ப நம்பிக்கையோட காத்திருந்தான். ஆறு வருஷமா… ஆனா அவர் வரவே இல்ல… அவனை வளர்த்தவங்க கோடை விடுமுறையில வெளி ஊர்களுக்குச் சுற்றுலா செல்றது வழக்கம்… அப்படி ஒரு சுற்றுலாவுக்கு இந்த ஊர் பேரைச்சொல்லிப்போலாமான்னு கேட்டான்… அவங்களும் ரொம்ப சந்தோஷமா சரின்னு கூட்டிட்டுப்போனாங்க… தன்னுடைய அம்மாப்பாவுக்கு எதுவும் ஆகிருக்கக் கூடாதுன்னு பயணம் முழுக்க அதே நினைவாதான் போனான்…வெளியே காட்டிக்காம அவங்க அப்பாம்மாவைப் பத்தி ஏதாவது பேச்சு அடிபடுதான்னு பார்த்தான்…அவனும் சின்னப்பையன் தான… வேற எப்படி தேடுறதுன்னும் தெரியலை…நேரடியா விசாரிக்கவும் பயமா இருந்தது… இப்ப தன்னை வளர்க்குறவங்களுக்கு ஏதாவது ஆகிட்டா???? அதுவுமில்லாம வேற ஏதாவது செய்தி வந்துருச்சுன்னா? அவனால தாங்கவே முடியாது.
முதல் நாள் அவனுக்கு அவங்க அப்பாம்மாவைப்பத்தின எந்தத்தகவலும் கிடைக்கல… இரண்டாவது நாள்…மூணாவது நாள்.. ம்ஹீம்… நாலாவது நாள் அவங்க ஊருக்குத் திரும்பணும்… பஸ்ஸில் ஏறி அமர்ந்த பின்னும் கூட தன்னுடைய பெற்றோர் கண்ணில் பட்டு விடமாட்டார்களா என்று துழாவிதான் கொண்டிருந்தான் அவன்… அவனுடைய நாலு வருட நினைப்பும் நாலு நாள் தேடலும் நிறைவேறுவது போல தன்னுடைய தாய்தந்தை இருவரையுமே கண்டான் அவன்… இதயமே வெளியிலேயே வந்துக் குதிப்பது போல் மகிழ்ச்சியில் துள்ள, வேகமாக இருக்கையிலிருந்து எழுந்து கூட்டத்தால் நிரம்பி வழிந்த பேருந்தில் கஷ்டப்பட்டு மனித வெள்ளத்தில் நீந்தி வெளியே வந்தான்…வருகையிலேயே அவனுடைய அம்மா வெளியேறுவது தெரிய அவனுக்கு ஐயோவென்று இருந்தது. தாயைக் கண்கள் தேடியவாறே அவன் பேருந்து படிக்கட்டிலிருந்து தரையில் ஒரு காலை வைக்க முயன்ற நொடி காலில் ஏதோ தெறித்தது போல இருந்தது… என்னவென்று பார்த்தவன் திகைத்துப்போய் நின்றான். யாரோ ஒருவருடய துண்டிக்கப்பட்ட கை அவனுடைய காலடியில் கிடந்தது. அலறல் சத்தமொன்றும் கேட்க அது வந்த திசைப்பார்த்தான். அங்கு ஒருவர் ரத்தவெள்ளத்தில் கிடக்க, அவரது அருகில் நின்ற அருணாச்சலத்தின் கையில் இருந்த அரிவாளில் இரத்தம் சொட்டுச்சொட்டாக வடிந்துக்கொண்டிருந்தது… தன்னுடைய ஆசைத்தந்தையின் இந்த அவதாரத்தில் அவனது சப்தநாடியும் ஒடுங்கி ஸ்தம்பித்து நிற்க, பேருந்தோ பயணிகளின் பயத்தில் பரபரப்புடன் கிளம்பியது… அவனது ஒரு கால் பஸ் படிக்கட்டிலிருக்க, ஒருகால் இன்னமும் அந்தரத்தில்தான் தொங்கிக்கொண்டிருந்தது… அது தார்ரோட்டில் உராயத்தொடங்குவதைக் கூட அறியாமல் அவன் நிற்க, தன்னையறியாமல் அருணாச்சலத்தின் முகத்தை நோக்கிச் சென்றவனின் பார்வை அவருடைய கையில் அரிவாளைத்தான் பார்த்தது…படிக்கட்டிலேயே நின்றுகொண்டிருந்தவனை அவனது வளர்ப்புத்தந்தை வந்துதான் மீண்டும் இருக்கைக்கு அழைத்துச்சென்றார். காலில் இருந்த ரத்தத்தைக் கண்டு அவர் பதற, அவரது தோளில் சாய்ந்தவனது தலையை அக்காட்சியைக் கண்டு பயந்துவிட்டான் என்று எண்ணித் தடவிவிட்டார். அவனோ, நான் உங்கப்பையனாவே இருந்துக்கறேன்பா என்று மனதில் நினைத்தபடி கண்களை இறுக மூடினான்…”
விவேகன் சொல்லி முடிக்க, அமிழ்தாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…
ஆனால் சக்தி அனலாகக் கொதித்தான்…” ஓ… அப்ப அவர் பையனுக்கு மட்டும் எதுவும் ஆகக்கூடாது… ஆனா ஊர்ல இருக்க யாருக்கு என்ன ஆனாலும் பரவால்ல… அப்படித்தான… “
“சக்தி…” அமிழ்தா அவனை அடக்க முயல,
“நீ சும்மாரு அம்மு… இவனுக்கு ஒரு சின்ன தீக்காயம் பட்டவுடனே பதறுவாராம்… ஆனா என் கலையோட அண்ணனைத் தீ வைச்சு எரிச்சுருக்காரு அம்மு… எவ்வளவு வலிச்சுருக்கும்… தலையில பலமான அடி பட்டுருக்கு… சித்ரவதை பண்ணி சாகடிச்சுருக்காரு… இதுல போதை ஊசி வேற… அவரைக் கொலை பண்ணது மட்டுமில்;லாம அவர் மேல மக்கள் வச்சுருந்த நம்பிக்கையையும் நல்ல பெயரையும் கொலை பண்ணிருக்காரு… இவனுங்க பண்ண வேலையால இந்த ஊருல அவருக்கு மதிப்பே இல்ல தெரியுமா அவர் எவ்வளவு நல்லது பண்ணியும்… நீ வேணா பாத்துகிட்டே இரு அந்தாளு பண்ண மொத்தப்பாவமும் அவர் பையன் தலையில தான் போய் விடியும்…நல்ல சாவே வரா…” விவேகனை விஷமமாகப் பார்த்துக்கொண்டே ஆதங்கத்துடன் சொல்ல,
“சக்தீஇஇஇஇஇஇ…அறிவில்ல உனக்கு? அந்தாளு பண்ண பாவத்துக்கு அவர் பையன் என்ன பண்ணுவான்…பார்த்துப்பேசு…அவனே அவங்கப்பா பண்ற வேலை பிடிக்காமதான் அவரைப்பார்த்தும் திரும்பிப் போயிருக்கான்…அதுவுமில்லாம நம்ம சாவு எப்படி வரும்ன்னு தெரியாதப்ப அடுத்தவங்க சாவைப் பத்தி பேசக்கூடாது…” அமிழ்தாவின் குரல் கண்டிப்புடன் ஒலித்தது…
“ம்க்கும்…அந்த ஆளு ஒவ்வொரு தடவையும் எங்கிட்ட அரசு அரசுன்னு உருகறப்ப அப்படியே பத்திகிட்டு வர்றது எனக்குத்தான தெரியும்…”முணகினான் அவன்…
“அது நீயா இழுத்துக்கிட்டது… அந்த அருணாச்சலம் தான் மோசமானவருன்னு தெரியுதுல்ல… மாட்டுன்னா என்ன நடக்கும்ன்னு தெரிஞ்சே இப்படி ஏமாத்திகிட்டு இருக்க… முதல்ல நீ எப்படி தப்பிக்கறதுன்னு பார்த்தியா? அருளாளனை அவர்தான் கொலைபண்ணாருன்னு ஆதாரத்தை எடுத்துட்டாலும் அதை எப்படி கொண்டு சேர்ப்ப? அதுக்கு நீ உயிரோட இருக்கணும்ங்கற அறிவு இருந்தா இதைப் பண்ணிருப்பியா? என்னைக்கு நீ அவரோட பையன் இல்லன்னு அவருக்குத் தெரியுதோ அன்னைக்கு உன் உயிர் உன்னோடதா இருக்காது… விஷயத்தோட வீரியம் உனக்குப் புரியுதா இல்லையா?”
“எனக்கு முக்கியம் ஆதாரம் தான். அது கிடைச்சா போதும்… “சக்தி சொல்லிக்கொண்டிருக்கும் போதே ‘சே…’என்றுவிட்டு அமிழ்தா எழுந்து சென்றாள்.
இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க, லேப்டாப்புடன் வந்தவள், அதிலிருந்த வீடியோவை ஓட விட்டாள்.
ஏனோ அருளாளனின் அனுபவித்த வலியை அவளது உடல் உணர்வது போல் இருக்க அமிழ்தா எழுந்து சென்று ஜன்னல் வழியாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாள்.
வெகுநேரம் கழித்து அவள் திரும்பும் போது அதைப் பார்த்து முடித்திருந்த சக்தியின் கண்கள் இரத்தமாய் சிவந்தும் விவேகனது உதடுகள் இரத்தப்பசையற்று வெளுத்துமிருந்தன…சக்தி லேப்டாப்பைப் படாரென்று மூடிய சத்தத்தில் தான் அவள் திரும்பியிருந்ததே…
அந்த லேப்டாப்பைக் கையில் எடுத்தவன்,” இதை வச்சு உங்கப்பனை ஒரு வழி பண்ணல, நான் என் கலையோட காதலனே இல்ல…” என்று விவேகனைப் பார்த்து சொல்லிவிட்டுக் கிளம்பப்போக, “அறிவுகெட்டவனே” என்று அழைத்தாள் அமிழ்தா.
அதில் நின்று முறைத்தவனது கையில் இருந்த லேப்டாப்பைப் பிடுங்கி அறைக்குள் பத்திரப்படுத்தி விட்டு வந்தவள்,” பாம்புகிட்டப்போய் சுத்திக்கோ சுத்திக்கோன்னு வாலன்டியரா காலை நீட்டி சுத்த வச்சுருக்க, அது கடிக்காம நம்ம காலையும் எடுக்கணும்… அது பல்லையும் பிடுங்கணும்… அதுக்கான வழியை யோசி…”
“ச்ச்… சான்ஸ் இல்ல அம்மு ” என்றான் சலிப்பாக…
“ஏன்டா உன் மேகலை இன்னும் உயிரோட தான இருக்கா… அவ நல்லபடியா வர்றப்ப சேர்ந்து வாழ நீ இருக்க வேண்டாமா?” காட்டமாகக் கேட்டாள்.
“வருவாளா அம்மு? ஏக்கத்துடன் கேட்டான்…
“அதெல்லாம் வருவா… நீ முதல்ல அந்த அருணாச்சலத்துகிட்ட இருந்து தப்பிச்சு வர்ற வழியைப் பாரு…”
“ஆனா எப்படி அம்மு? பேசாம இவன்தான்யா உன் பிள்ளைன்னு சொல்லிட்டா?” விவேகனைக்காட்டிக்கேட்க, அவனோ “ஐயோ இப்படிப்பட்ட கொலைகாரர்கிட்டல்லாம் போய் என்னால மகனா இருக்க முடியாது. கூசுது. ஒட்டிகிட்டு இருந்த கொஞ்சநஞ்ச பாசமும் அந்த வீடியோவைப் பார்த்ததுல போயிருச்சு” என்று பதறினான்.
“இல்லடா… அது சரியா வராது… எப்படின்னாலும் நீ மாட்டுவ… பேசாம இப்படி பண்ணுவோம்” என்று அருளாளன் சொன்னதைச் சொன்னாள்.
“ஆனா அதுக்கு வாய்ப்பு கிடைக்கணுமே அம்மு…”
“கிடைக்கும்… நீ முதல்ல அவசரப்படுறதை நிறுத்து… செத்துப்போனவனே இரண்டு வருஷமா காத்துகிட்டு இருக்கான்…நீ என்னடான்னா?…”
“என்னது?” சக்தியும் விவேகனும் கோரஸாய்க் கேட்டனர்…
“செத்துப் போகாம இருக்கணும்ன்னா இரண்டு வருஷம் ஆனாலும் பரவால்லன்னு வெயிட் பண்ணுன்னு சொன்னேன்…” சமாளித்தாள்.
“சரி… ஆனா அதுவரைக்கும் அவரையும் அந்தப் பத்மினி அம்மாவையும் சமாளிக்கணும்மே …”சக்தி கேட்க “அதுக்கு நான் ஹெல்ப் பண்றேன் என்றான் விவேகன்.”ஏதாவது பிரச்சனைன்னா சின்ன வயசுல இருந்தது மறந்துட்டேன்னு சொல்லுங்க… அதுக்கு மீறின்னா என்னட்ட கேளுங்க நான் சொல்றேன். மேக்ஸிமம் எல்லாமே சொல்லிட்டேன். “என்றான் அவன்.
நம்பலாமா? என்பது போல பார்த்து விட்டு “உங்கப்பனை மாதிரி பண்ணிர மாட்டியே “என்று கேட்டான் சக்தி.
“அவருமே கெட்டவர்தானே தவிர துரோகி கிடையாது… நம்பலாம்…”
“ரோஷம்… பெத்த பெருமைதான்…”
“சக்தீ…” என்றவள் விவேகனிடம் “உன் பேரண்ட்ஸ் அதாவது வளர்த்தவங்க வெளிநாட்டுலதான இருக்காங்க? எப்ப வருவாங்க?” என்றாள்.
“ஒன் இயர் ஆகும்க்கா…”
“ம்ம்…நீயும் சந்தனாவும் தான பேட்ச்மேட்ஸ் உங்களோட பைனல் இயர் பிராஜெக்ட்க்கு…” என்று கேட்டாள்.
எதற்கு இப்பொழுது இதைக் கேட்கிறாள் என்று தெரியாமல் போனாலும் அவன் ஆம் எனத் தலையாட்ட, “நிலத்தடி நீர் சம்பந்தப்பட்டதுதான உங்க தலைப்பு? ” என்று மீண்டும் வினவினாள். அவன் மீண்டும் ஆமென தலையாட்ட, சக்திதான் கடுப்பானான்.
“இப்ப இதெல்லாம் எதுக்கு விசாரிச்சுட்டு இருக்க…”
அவனைப் பார்வையால் அடக்கியவள், “பிராஜெக்ட் மட்டும்தான இந்த வருஷம்? கிளாஸஸ் இருக்காதுல்ல…பேசாம இந்த ஊர்லயே உங்க பிராஜெக்ட்டைப் பண்ணுங்க…”
“பண்ணலாம்தானே… காலெஜ்ல ஒண்ணும் சொல்லமாட்டாங்களே ?” என்று கேட்க, விவேகன் இல்லையெனத் தலையாட்டினான்.
“சரி அப்ப நான் எதுக்கும் உன் பேரண்ட்ஸ்ட்டயும் எங்க பேரண்ட்ஸ்ட்டயும் காலையில பேசிர்றேன்… நீ போய்த் தூங்கு போ…”
அவன் செல்லவும்
“இப்ப எதுக்கு இந்த ஓணானை வேட்டில கட்டிட்டு அலையப்போரேன்னு அடம்பிடிக்குற …” என்றான் சக்தி நக்கலாக …
“ஆஅஅஅ….நீ வேலில போனதை வீட்டுக்குள்ள எடுத்து விட்டதுக்கு…” அவன் பாணியிலேயே பதிலளித்தவள் “பைத்தியமே என்ன இருந்தாலும் அவன் அருணாச்சலத்தோட பையன்… அருணாச்சலம் யார் சொன்னாலும் கேட்க மாட்டாரு… ஆனா அவர் பையன் சொன்னா கேப்பாரு. நாளைக்கே நீ எசகுபிசகா மாட்டுன்னன்னா அவன் காப்பாத்துவான்… அதுக்காகத் தான் அவனை இங்கையே இருக்கச்சொல்றேன்… புரிஞ்சுதா… “
“ஆனா நீங்க ரெண்டு பேர் மட்டும் இருக்கற இடத்துல…”
“அடேய்… நான் அமிழ்தா… அவ என்னோட தங்கச்சி சந்தனா… எங்ககிட்ட வாலாட்ட முடியாது…. அவனையும் பார்த்தா அப்படிப்பட்டவனா தோணலை…”
“நான் உங்களை சொல்லலடி…என்ன இருந்தாலும் அவன் அருணாச்சலத்தோட மகன்தானே…”
“ஹலோ…அப்படி பார்த்தா இப்ப நீங்கதான் அவரோட அபிசியல் மகன்… போங்க… போய் சொன்னதை ஒழுங்காச் செய்ங்க…இடத்தைக் காலி பண்ணு காத்து வரட்டும்..”. என்றாள்.
அவள் சொன்ன தோரணையில் சிரித்தவன் அவளது தலையில் குட்டிவிட்டு வரேன் என்றபடி கிளம்பினான்.
வந்து படுத்தவளுக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது. முதலில் அருளாளன் தான்… பேயைக் கண்டு பயம் வருவதற்கு மாறாக அவன் அருகிலிருந்தால் ஒரு பாதுகாப்பு உணர்வு வருவது ஏன் என்று யோசித்தாள். இத்தனைக்கும் அவன் என்னை உதவிக்குக் கூப்பிடக்கூடாது என்று சொல்லியபின்னும்… அவனது உதவியை அவள் எதிர்பார்க்கவில்லைதான் அவனிடமே சொன்னது போல அவனைப் பாரா விட்டாலும் இதையேதான் செய்திருப்பாள்… ஆனால் அவனது அருகாமையை அவளது மனம் எதிர்ப்பார்;ப்பது போல இருந்தது. அவன் உதவிக்குக் கூப்பிடக்கூடாது என்று சொல்லியது நினைவுக்கு வரவும் அருணாச்சலமது மிரட்டல் நினைவுக்கு வந்ததுதான். ஆனால் அதைத் தொடர்ந்து இவள் அவனை புளியமரத்திலோ முருங்கைமரத்திலோ போய்த்தொங்கச் சொன்னதும் நினைவுக்கு வந்தது… இந்நேரம் அப்படித்தான் எங்காவது தொங்கிக்கொண்டிருப்பானா? பேய்க்கு வாக்கப்பட்டால் முருங்கைமரம் ஏறித்தான் ஆகணுமோ? என்றெல்லாம் தோன்ற, பேய்க்கு வாக்கப்பட்டாலா? எனக்கு எதுக்கு இப்படில்லாம் தோணுது… அவள் மேலே யோசிக்க முயன்ற நொடி அருகில் படுத்திருந்த சந்தனா மேலே கையைப் போட்;டாள்… அவளது கையைப் பற்றியவளுக்கு மேகலையின் நினைவு வந்தது. அண்ணன் மீது என்ன ஒரு அன்பு என்று சிலிர்க்கக்கூடச் செய்தது. சக்தியின் மீதும் பெருமிதம் வந்தது. ஆனால் அவள் மனம் மீண்டும் அருளாளனிடம் தான் வந்தது. சக்தி மேகலையைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்த போது அழுத சக்தியை விட்டுவிட்டு அழாத அருளாளனைப் பற்றி அவளது மனம் ஏன் வருந்தியது என்று யோசித்துப்பார்த்தாள்… காரணம் தெரியவில்லை… அவன் மேல் அவளுக்குப் பரிதாபம் எல்லாம் தோன்றவில்லை… ஆனால் அவனுக்கு நிகழ்ந்ததை அவளே அனுபவிப்பது போன்ற வலி…இதயத்தின் ஆழத்தை யாரோ கடைவது போல…அது ஏன் என்றும் தெரியவில்லை…அந்த வலி நினைவு வரவும் அவனது இறப்பும் அதைத் தொடர்ந்து அருணாச்சலமும் விவேகனும் நினைவுக்கு வந்தனர்… அருணாச்சலத்திடமிருந்து சக்தியை மீட்பதற்கான வழி விவேகன் என்றுதான் அவளுக்குத்தோன்றியது… யோசித்தவாறே உழன்று கொண்டிருந்தவள் இன்னொன்று தோன்றவும் எழுந்து அமர்ந்தாள்.
‘அருணாச்சலத்திடமிருந்து சக்தியை விவேகன் காப்பாற்றி விடலாம் … அருளாளனிடமிருந்து விவேகனை யார் காப்பாற்றுவது?’ விவேகனது கள்ளங்கபடமற்ற முகம் மனக்கண்ணில் தோன்ற, எச்சரித்து வைக்கலாம் என்று எழுந்து அவனது அறைவாயிலுக்குச் சென்றாள்.
“விவேகன்…விவேகன்…”
அவள் அவனது அறைக்கதவைத்தட்ட, அமைதியாக அவளது தோளைத்தட்டினான் அருளாளன்.
(தொடரும்...)
Nice epi👍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️