Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 23

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 23

அவன் மிக மென்மையாகத் தட்டியதாலோ என்னவோ,
அவள் அதை உணராமல் கதவைத் தட்டுவதிலேயே குறியாக இருந்தாள். ‘அமிழ்தா…’ என அவன் அழைக்கப்போகும் முன் விவேகன் கதவைத் திறந்துவிட, அமைதியானான் அருளாளன்.

“என்னக்கா…”

” விவேகன்…உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்… நீதான் அருணாச்சலத்தோட பையன்னு யார்கிட்டயும் சொல்லக்கூடாது… “

“நான் ஏன்க்கா சொல்லப்போறேன்? நான் மனசால கூட அப்படி நினைக்க மாட்டேன்…”

“ம்ம்…ஆமா ஆமா… இது ரொம்ப ரொம்ப முக்கியம் தப்பித்தவறி மனசால கூட நினைச்சுராத… உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன்…புரிஞ்சுதா?”

“இதைச் சொல்லவா இப்படி கதவைத் தட்டுனீங்க… நான் அப்படில்லாம் கனவில கூட நினைக்க மாட்டேன் போங்கக்கா… போய்த்தூங்குங்க…குட்நைட்…” அவன் கொட்டாவி விட்டபடி கதவை மூடிவிட,
‘அடேய் இது உன் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்டா…
இதுக்குப் போயான்னு கேக்குற…
அந்த அருளுக்கு மட்டும் நீதான் அருணாச்சலத்தோட பையன்னு தெரிஞ்சா நீயும் பேயாத்தான்டா சுத்தணும்’ என்று மனதில் புலம்பியவாறே திரும்பியவள், எதிரே கைகளைக் கட்டி தன்மேல் கூர்ப்பார்வையைச் செலுத்தியபடி நின்றிருந்த அருளாளனைக் கண்டதும் உள்ளிழுத்த மூச்சை வெளிவிட மறந்தாள்.

அவள் மூச்சடைத்து நிற்க, அவன் அவளது அருகில் வந்தான்.
தன்னையறியாமல் பின்னால் நகர்ந்தவளின் சொற்கள், வாயிலிருந்து வெளிவராமல் திண்டாடின… “அ…அ…அரு…அரு…அரு…அருள்”
நகர்ந்துகொண்டே சென்றவள் இடையிலிருந்த நாற்காலியைக் கவனிக்காமல் கால் இடறி கீழே விழப்போக விழாமல் பிடித்திருந்தான் அருளாளன்.

சற்றுத் தடுமாறி நிலைத்தவள், “நீங்க எப்ப வந்தீங்க?” என்று அவன் இவளை எதுவும் கேட்கும்முன் இவனைக் கேள்விக்கு ஆட்படுத்தினாள்.

அவன் பதில் சொல்லாமல் இருவரும் நின்றிருந்த இடத்திலிருந்த ஜன்னல் வழியே வெளியே காட்டினான்…
அங்கே மூன்று வேப்ப மரங்கள்தான் காற்றுக்கு அசைந்து கொண்டிருந்தது…

புரியாமல்,
“அந்த வேப்பமரம்தான் உங்க வாசஸ்தலமா? புளியமரம்…முருங்கைமரத்துலலாம் தங்கமாட்டிங்களா?” என்று கேட்டாள்.

அவன் முறைக்கவும் எங்க ஊர்ப்பக்கமெல்லாம் பேய் அங்க தான் தங்கும் ன்னு சொல்வாங்க… என்று விளக்கினாள்.

“புளியமரம் புளி கொடுக்கும்… முருங்கை மரம் காய் கொடுக்கும்… தேவையுள்ள மரங்கள்… வெட்டக்கூடாது…
இன்னொன்னு புளியமரம் சூடு… முருங்கை மரத்தில் பூச்சி அதிகமாக இருக்கும்… பொதுவாகவே இரவு நேரத்தில் மரங்களுக்கு அடியில் ஆக்ஸிஜன் கம்மியா இருக்கும்… அதனால மூச்சுத்திணறல் வர வாய்ப்பிருக்கும்… இதனால் அங்க தங்கக் கூடாது… சும்மா சொன்னா கேப்பாங்களா? அதான் பேய்ன்னு பயமுறுத்திச் சொன்னாங்க… “

“இந்த லெக்சர்லாம் ஒரு பேய்கிட்டயே கேட்டுக் கிட்டு இருக்கேன் பாத்தியா என் தலைவிதி… ” நொந்தவள் “அப்ப பேய்லாம் எங்கதான் இருக்கும்?” என்றாள்.

“எங்கேயும் இருக்கும்… “

“ஆஅ… அதுசரி நாம பேய்கிட்டதான பேச்சுவார்த்தையே நடத்திட்டு இருக்கோம்… ” என்று எண்ணியவள் “நான் என்ன கேட்டேன்… நீங்க என்ன சொல்லிட்டு இருக்கீங்க” என்றாள் அவன் அமைதியாகப் பேசிக்கொண்டிருப்பதால் விவேகனுடன் பேசியதைக் கேட்டிருக்க மாட்டான் என்ற தைரியத்தில்.

மீண்டும் அந்த மரங்களைக் காட்டியவன் “இரவு நேரத்தில அது காத்துக்கு அசையுறது ரொம்ப அழகா இருக்கும்…இங்க இருந்து பார்த்தா மூணு மரங்களும் ஒரே நேர்க்கோட்டில தெரியும்… அதைப் பார்த்துகிட்டு இருந்தா மனசு சாந்தமடையும்… உயிரோட இருக்கறப்ப இருந்தே, ஏதாவது மனசு கஷ்டமா இருந்ததுன்னா இங்கதான் வருவேன்… அதே மாதிரி இப்பயும் நான் இங்கதான் வந்தேன்…
நீ நினைச்ச மாதிரி வேற எங்கையும் போல…
அப்பதான் நீயும் சக்தியும் பேசிகிட்டு இருக்கறப்ப, இவனோட அறை ஜன்னல் பக்கமா ஏதோ பூனை ஓடிருக்கும் போல… அதைப்பார்த்துப் பயந்தவன், பயத்துல கதவைத் தட்டிகிட்டே இருந்தான். உன் அருமைத்தங்கச்சிதான் வெளியில கூடிக் கதவைப் பூட்டி வச்சுருந்தாளே…
பாவமேன்னு நான்தான் கதவைத் திறந்துவிட்டேன்…
ஆனா யாரும் இல்லாததைப் பார்த்து இன்னமும் பயந்துதான் ஹாலுக்கு வந்தான்…
நொண்டிக்கிட்டே போனதால கீழே விழுந்துரக்கூடாதேன்னு நானும் பின்னாடியேதான் வந்தேன்…”

“அப்ப அவன் பேசுனதெல்லாம்…”

“சகலமும் கேட்டுகிட்டுதான் இருந்தேன்…”

அமிழ்தாவிற்கு ஐயோவென்று இருந்தது…

“அருள்….”

“ம்ம்…”

“பாவம் அருள்… நல்லப்பையன் அருள்…”

“நீயே அவனை இன்னைக்கு சாயங்காலம்தான் பார்த்த… அப்பறம் எப்படி நல்லப்பையன்னு சொல்ற…”

“எங்கப்பா சொன்னாரு… அருள்… எங்கப்பா அவ்வளவு சீக்கிரத்துல யாரையும் நல்லவன்னு சொல்லமாட்டாரு… அவரே சொல்றாருன்னா…கண்டிப்பா நல்லவனாத்தான் இருப்பான்… அதுவுமில்லாம நல்லவனா இல்லைன்னா ஏன் பல வருஷத்துக்கு முன்னாடியே அருணாச்சலத்தைப் பார்த்தும் அவன் திரும்பிப் போகணும் நீங்களே சொல்லுங்க… அதுவுமில்லாம இவன் இருந்தாத்தான் சக்திக்கு ஏதாவதுன்னா காப்பாத்த முடியும்…அருள் ப்ளீஸ்…”

அவன் எதுவும் சொல்லாமலேயே மறைய, கடுப்பானவள்,
“டேய் பேயே ஏதாவது சொல்லிட்டுப்போடா…” என்று கத்தினாள்.

அவளுக்குப் பதில் சொல்வது போல அங்கிருந்த ஜன்னல் கதவிரண்டும் படாரென்று அறைந்து சாத்தின…

அதே வேகத்தில் போய் அந்த ஜன்னல் கதவைத் திறந்து வைத்தவள், விவேகனை எதுவும் செய்து விடுவானோ என்ற பயத்தில் ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு அந்த ஜன்னல் வழியே வெளியேயே வெறித்துக்கொண்டிருந்தாள்…

அவன் சுட்டிக்காட்டிய அந்த வேப்பமரங்கள் மெல்ல மெல்ல அவளது மனதிற்கும் அமைதி அளிப்பது போல இருக்க, அந்த ஜன்னல் சட்டத்திலேயே தலைவைத்து அப்படியே உறங்கிப்போனாள்.

காலை வெயில் சுளிரென அடித்துக் கன்னத்தில் சூடு பரவுவதை உணர்ந்தவள் மெல்லக் கண்விழித்தாள்…

தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்தவள் முதலில் செய்த வேலை விவேகனது அறைக்கதவைத் தட்டியதுதான்…

ஒற்றை விரலால் நாசூக்காக இடைவெளிவிட்டு இருமுறை தட்டி எந்தப் பதிலும் வராமல் போகவே ஐந்து விரலையும் பதித்து விடாமல் தட்டினாள்…

ஒவ்வொரு நிமிடம் கழிய கழிய அமிழ்தாவின் இதயத்துடிப்பு கூடியது.

அதற்கேற்ப தட்டலின் சத்தமும் அதிகமாகவே அவள் தட்டியதட்டில் அவளது அறையில் படுத்திருந்த சந்தனாவே விழித்து வந்து விட, அவன் இன்னும் திறக்கவில்லை…

“அக்கா என்னக்கா ஆச்சு…”

“ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேன் திறக்கலடி…”

“ஐயோ அக்கா அவன் உள்ளே பூட்டலை நான்தான் வெளியே கூடிப் பூட்டிருந்தேன்…” என்றபடி சந்தனா தாழ்ப்பாளைப் பார்க்க, அது உள்ளே தான் பூட்டியிருந்தது…

அவளும் என்னசெய்வதென்று தெரியாமல், “விவேகன், விவேகன்…”எனக் கதவைத்தட்ட, பதில் வராமல் போகவே இருவரும் கையைப் பிசைந்து கொண்டிருக்கையில் போர்வையால் முழுவதுமாக முகத்தோடு முக்காடிட்டு மூடிய ஒரு உருவம் வந்துக் கதவைத் திறந்தது…

அதைக் கண்டு, சந்தனா அலறி “ஐயோ….அக்கா பேய்” என அமிழ்தாவின் பின்னால் ஒளிய,
அவள் அலறிய அலறலில் ” பேயா????” என அந்த உருவமும் அலறியபடிப் போர்வையை நீக்கியது.
விவேகன்தான்…

“அடப்பாவி இப்படியா வந்துக் கதவைத்திறப்ப… நான் பயந்துட்டேன்…”நெஞ்சில் கைவைத்தபடி சந்தனா சொன்னாள்.

“நீ கத்துன கத்துல நானும்தான் பயந்துட்டேன்…காலங்காத்தால கதவைத் தட்டி இப்படியா மனுஷனைப் பயமுறுத்துவீங்க…”

“நான் ஒண்ணும் கதவைத்தட்டல…அக்காதான்” என அமிழ்தாவைக் கையைக் காட்டினாள் அவள்.

“ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா…” அமிழ்தாவின் அதட்டலில் இருவரும் வாயை மூடினர்…

“நீ ஏன் இவ்வளவு நேரமா கதவைத் திறக்கல?” என்று அவனைப் பார்த்து வினவினாள் அமிழ்தா.

“ தூங்கிட்டேன்க்கா… லீவு நாள்ல ஏழு மணியே எனக்கு மிட்நைட்க்கா… நீங்க ஏன்க்கா கதவைத் தட்டினீங்க?

“அது…அதுஇப்ப இவனுங்களுக்கு என்ன சொல்றது?” வேகமாக யோசித்தவள்,
“உங்க பேரன்ட்ஸ் நம்பர் இருந்தா கொடு விவேகன்…
பேசுறேன்னு சொன்னேன்ல அதுக்குத் தான் கதவைத் தட்டினேன்…”
குறித்து வைக்க போனோ பேப்பரோ இல்லாமல் வந்திருப்பவளைத் தூக்கக்கலக்கத்தோடே மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒரு துண்டுச்சீட்டில் இரண்டு நம்பர்களை எழுதிக்கொடுத்தான் அவன்…
சரி என அதை வாங்கிக்கொண்டு அலுவலகத்திற்குத் தயாராகிக் கிளம்பியவள்,
கிளம்பும்முன் சந்தனாவிடம் அவனது அருகிலேயே இருக்கச்சொல்லிவிட்டுச்சென்றாள்.

அலுவலகத்திற்குத் வந்தவளைக் குழப்பத்துடனும் கவலையுடனும் எதிர்கொண்டார் பிரதாப்…

அவரது முகவாட்டத்தைக் கவனித்து என்னவென்று வினவியவளிடம் “ஒன்றுமில்லை மேடம் “என சமாளிக்க ‘ஏதேனும் குடும்பப்பிரச்சனை போல’ என மேலே ஒன்றும் கேட்காமல் விட்டு விட்டு அவள் வேலையில் மூழ்க,
சில மணிநேரங்கள் கழித்து “மேடம்…”என்றபடி வந்து நின்றார் அவர்…

அவள் கேள்வியாக நோக்க,

“காலையில வந்ததுல இருந்தே போன்கால் மேல போன்கால் மேடம்…”

அவரிடமிருந்து பார்வையைப் பிரித்து முன்னால் இருந்த கணினியில் ஓடவிட்டவள்,
“என்ன போன்கால்ஸ் சார்? அந்த அருணாச்சலம் கட்டடம் விஷயமாவா? “

“ஆமா மேடம்…”

“மிரட்டலா?”

“எஸ் மேடம்…”

“எப்படிப்பட்ட மிரட்டல்கள்?”

“காது கூசுது மேடம்…”

“அதான் நேத்து அருணாச்சலமே என்னை போன்லயே கூப்டுட்டுப் பேசுனாரே… இப்ப இவங்கல்லாம் யாரு?”

“இது அருணாச்சலம் சார் சொல்லி நடக்குற மாதிரி தெரியலை மேடம்… பேச்சைப் பார்த்தா எம்.எல்.ஏவோட ஆட்கள் மாதிரிதான் தெரியுது…”

“இந்தக் கட்டடத்துக்கும் எம்.எல்.ஏவுக்கும் என்ன சம்பந்தம்?”

“அருணாச்சலத்தோட எல்லா விஷயங்களிலும் அவருக்குச் சம்பந்தம் இருக்கும் மேடம் * என்றவர் சற்றுத்தயங்கிப்பின் ‘ மேடம்’ என்று அழைக்க, கணினியில் பதித்திருந்த கண்களைப் பிரித்து அவரைப் பார்த்தாள் அவள்.

ஒருகணம்தான். பின் மீண்டும் கணினியில் கண்ணைப் பதித்தவள், “சொல்லுங்க சார்” என, “மேம் நீங்க கொஞ்சம் அருணாச்சலத்தைப் பகைச்சுக்காம இருக்கறது நல்லதுன்னு எனக்குத் தோணுது மேம்…”என்றார்.

சடக்கென நிமிர்ந்து பார்த்த அவளது கூரிய பார்வையில் தலையைக் குனிந்தவரைப் பார்த்தவாறே அங்கிருந்த பென் ஸ்டான்டிலிருந்து ஒரு கிளிக் பேனாவை எடுத்து இருக்கையில் பின்னால் சாய்ந்தவள், அதனை இருமுறை அழுத்தி அழுத்தி விடுவித்துவிட்டு, “ம்ம் நல்லது சொன்னாக்கேக்கணும்ல… சரி கேட்டுரலாம் பிரதாப் சார்… போய் அந்த ஆர்டரைக் கேன்சல் பண்ணதா ஒரு ஆர்டர் ரெடி பண்ணிக் கொண்டு வாங்க…”என்று கட்டளையிட்டாள்.

அவர் அதுபோல ஒரு அரசாணையைத் தயாரித்துக்கொண்டுவர, அதைப் படித்தவள்,
பச்சை மையால் கையெழுத்திட்டு அவள் கையாலேயே முத்திரையும் பதித்தாள். அருணாச்சலத்தின் அலுவலகத்திற்கு பேக்ஸம் அவளே செய்தாள்.

சற்று நேரம் கழித்து ஒரு கோப்பைத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்த அமிழ்தாவின் அலைபேசி அடிக்க, அதை எடுத்துக் காதில் வைத்தவள், “அமிழ்தா ஞானசேகரன் ஹியர்” என்றாள்.

“தெரிஞ்சுதானம்மா கூப்புட்டது…ஆனா பரவால்ல…
சின்னப்பொண்ணா இருந்தாலும் பிழைக்கத்தெரிஞ்ச பொண்ணா இருக்க…
எங்களுக்கு ரெண்டு வருஷம் இனி எந்தக்கவலையும் இல்ல போ…
ரொம்ப சந்தோஷம்… “என்று அருணாச்சலத்தின் குரல் உற்சாகமாய்க் கேட்டது.

“அருணாச்சலம் சாரா? நீங்க எப்ப சார் ஊர்ல இருந்து வருவீங்க?”

“இன்னும் ரெண்டுநாள் ஆகும்மா… ஏன்மா எதுவும் கவனிக்கணுமா என்ன? அப்படின்னா சொல்லு…தாராளாமா செஞ்சுரலாம்…”

“அப்படில்லாம் இல்லசார்…நேர்ல பார்க்க வேண்டி வரும் அதுக்காகத்தான்.”

“ஓ…போன்ல கேக்க ஒருமாதிரி இருக்கா?சரிம்மா நான் நாளைக்கழிச்சு நைட்டே ஊருக்கு வந்துருவேன்… வியாழக்கிழமை என் வீட்டுக்கோ இல்லன்னா ஆபிஸ்க்கோ வா…இல்லன்னா சொல்லு நான் வர்றேன்…கூச்சப்படாம என்ன வேணும்ன்னாலும் கேளு என்ன? சரிம்மா வச்சுர்றேன்” அவர் வைத்துவிட, அமிழ்தாவும் போனைத் தூக்கி மேசையில் போட்டுவிட்டு மீண்டும் கோப்பில் ஆழ்ந்தாள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பிரதாப்பின் மனதில் இவள் அருளாளனைப் போல என்று நினைத்தது தவறோ என்னும் எண்ணம் முதல்முறையாகத் தோன்றியது. பின் ஒரு பெருமூச்சை விட்டவர் அவரைப்போல இறந்துவிட வேண்டாம் என்று நாம்தானே கூறினோம் என்று மனதைச் சமாதானப்படுத்திவிட்டு அவரும் வேலையில் மூழ்கினார்.

இரண்டு நாள் கழித்து விடியற்காலையில் ஜன்னல் வழியே அந்த வேப்ப மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்… தாய்ச்சொல் கேட்டுத் தலையசைக்கும் சின்னஞ்சிறு குழந்தையின் தலையாட்டல் போல தென்றல் சொல் கேட்டு அழகாய்த் தழையசைத்துக் கொண்டிருந்தன அவை… அதனை ரசித்தாள் என்பதை விட, அவனது ரசனையை ரசித்தாள் என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்…
இருநாட்களாக அருளாளனைக் காணாமல் என்னவோ போலிருந்தது அவளுக்கு… அன்று சென்றவன்தான் வரவில்லை… அல்லது அவளது கண்ணிற்குத் தெரியவில்லை என்று சொல்லவேண்டுமோ?
அவளுடனேதான் இருக்கிறான் என்று அவளது ஆழ்மனம் ஆணித்தரமாக வலியுறுத்திக்கொண்டேதான் இருந்தது. இருந்தாலும் அவளது கண்ணிற்குத் தென்பட்டால்தான் என்னவாம் என்று தோன்றியது அவளுக்கு…
ஆனால் ஏன் இப்படியெல்லாம் தோன்றுகின்றன என்று யோசிக்கத் தோன்றவில்லை…
அவன் ஏன் வரவில்லை என்றுதான் மனம் மீண்டும் மீண்டும் சிந்தித்துக்கொண்டிருந்தது…
அருள்…அருள் அழைத்துப்பார்த்தாள்…
ம்ஹீம் இதோடு எத்தனையாவது முறை என்று தெரியாது… கோபமாக இருக்குமோ?
அவளது மனம் உழன்று கொண்டிருக்க, “அக்கா” என்று அருகில் வந்த சந்தனா தேநீரை அவள் கையில் கொடுத்தாள். அதை வாங்கியவள் மெல்லப்பருகியவாறே மீண்டும் யோசனையில் ஆழ, “என்னக்கா வேலையில எதுவும் பிரச்சனையா?” சந்தனா கேட்க, “பிரச்சனைன்னுலாம் எதுவும் இல்ல” என்றுவிட்டு தலையசைத்தவளுக்கு அருணாச்சலத்தின் நினைவு வர தேநீரைப் பருகி முடித்துவிட்டு அவருக்கு அழைத்தாள்.

“என்ன சார் ஊருக்கு வந்துட்டீங்களா?”

“ம்ம்… வந்துட்டேம்மா…நீ எப்ப வர்ற…”

“ஒரு பதினொரு மணி போல பார்க்கலாம் சார்…”

“ம்ம்; சரிம்மா எங்க?”

“நான் போன் பண்ணி சொல்றேன் சார்…”

“சரிம்மா வச்சுர்றேன்…”

மீண்டும் அவருக்கு அமிழ்தாவின் அழைப்பு வந்த பொழுது சரியாக மணி பத்து ஐம்பத்தைந்து…
அருகிலிருந்த நாகாபரணத்திடம் அதைக்காட்ட அந்த எம். எல். ஏ இகழ்ச்சியாகச் சிரித்தார்…

எடுத்தவர்,
“சொல்லும்மா… எங்க வரணும்? “என்று கேட்டார்.

“உங்களோட மாலுக்கே வாங்க சார்…”

“அங்க எதுக்கும்மா?” அருணாச்சலத்தின் புருவங்கள் சுருங்கியது.

“நான் வச்ச சீலை நானே உடைச்சுத் தரணும்ன்னு ஆசைப்பட்டிங்கள்ல சார்… வாங்க சார்… நான் ஆர்டரைக் கேன்சல் பண்ணாலும் இன்னும் அது செயல்பாட்டிற்கு வரலை போலயே… அதுக்காகத்தான் சார் இங்கையே வாங்க…நானே என்கையால அந்த சீலை உடைச்சுத் தரேன். மறக்காம எம்.எல்.ஏ சாரையும் கூட்டிட்டு வாங்க…” என்றாள்.

“சரிம்மா” என்று போனை வைத்தவர் கிளம்பப்போக,
அவரது கையைப் பிடித்துத் தடுத்த நாகாபரணம்
“அண்ணே கொஞ்சம் நேரம் காத்திருக்கட்டும்ண்ணே… இவளை மாதிரி ஆளுங்களையெல்லாம் காத்திருக்க வச்சு காத்திருக்க வச்சு எலும்புத்துண்டைத் தூக்கிப்போட்டாத்தான் நன்றியோடு இருப்பாங்க…”

அருணாச்சலம் யோசித்தாலும் அமர்ந்துவிட, அரைமணிநேரம் கழித்து நிதானமாக வந்து சேர்ந்த பொழுது….
அவர்கள் கண்ணெதிரே,
இரண்டு புல்டோசர்கள் முட்டித்தள்ள, அப்படியே சரிந்து விழுந்து கொண்டிருந்தது,
ஆற்றை ஆக்கிரமித்து அவர்கள் கட்டியிருந்த அந்த ஐந்து மாடிக்கட்டிடம்…

அதைத் தன்னுடைய காரின் மீது ஸ்டைலாக சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு கூலாக வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தாள் அமிழ்தா…
அமிழ்தா ஞானசேகரன் ஐ. ஏ. எஸ்…

                      (தொடரும்...)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *