Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 24

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 24

நாகாபரணம் அந்தக் கட்டிடம் இடிந்து விழுவதை ஆற்றாமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, அருணாச்சலத்தின் பார்வையோ அதில் ஒருகணம் படிந்து விட்டு அங்கு அலட்சியமாக நின்றிருந்த அமிழ்தாவின் மேல் நிலைத்தது.

அவள் நின்றிருந்த தோரணை வேறு ஒருவனை நினைவூட்ட… கண்ணில் கனல் பறக்க, காரிலிருந்து இறங்கி அவளை நோக்கிச்சென்றார் அவர்.

அவளோ அந்தக் கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனவுடன் அங்கிருந்த அதிகாரிகளிடம் ஏதோ கூறிவிட்டு தன் காரில் ஏறப்போனாள்.

சர்வேசன் (டபாலி) கார்க்கதவைச் திறக்க, அதைத் தடுத்து நிறுத்தியது அவரின் கை. நிமிர்ந்து பார்த்த அமிழ்தா கார்க்கதவைத் தானே அறைந்து சாற்றினாள்.

பின் மீண்டும் அதனில் சாய்ந்து, கையைத் திருப்பி மணியைப் பார்த்தவள், “என்ன சார் ஒரு பங்க்சுவாலிட்டி வேண்டாமா? நான் உங்களைப் பதினொரு மணிக்குத் தான வரச்சொன்னேன். அரைமணி நேரம் கழிச்சு வந்துருக்கீங்க… இப்பப் பாருங்க… எனக்கும் இன்னொரு வேலை வந்துருச்சு… இன்னைக்கு இனி முடியாது… இன்னொரு நாள் பேசலாம்… அப்பவாது கரெக்ட் டைம்க்கு வந்துருங்க என்ன..” அவளென்னவோ முகத்தையும் குரலையும் இயல்பாக வைத்துக்கொண்டு சீரியஸாகத்தான் சொன்னாள்.
ஆனால் அவள் கிண்டலடிக்கிறாள் என்பது புரியாத அளவுக்கு அருணாச்சலம் ஒன்றும் முட்டாள் அல்லவே…

அருணாச்சலம் பொங்கிய கோபத்தை அடக்கிக்கொண்டு முறைக்க, அவரைத் தொடர்ந்து வந்திருந்த நாகாபரணமோ துள்ளினார்.

“ஏய்… எங்ககிட்ட என்ன சொன்ன? இப்ப என்ன பண்ணி வச்சுருக்க?

“என்ன சொன்னேன்?ம்ம்…” ஒற்றை விரலால் வலப்புற நெற்றியைத் தேய்த்தவள் சாய்ந்திருந்த காரிலிருந்து நிமிர்ந்தாள்.
“ஷ்ஷ் ஆமால்ல மறந்தே போயிட்டேன்….” என்று திடீரென நினைவு வந்தது போல, “பிரதாப் சார் உங்ககிட்ட கொடுத்தேன்ல அதைக் கொடுங்க” என்க, அவர் காரினுள்ளிருந்து எதையோ எடுத்துக்கொடுத்தார்…

அதை வாங்கியவள், உடைக்கப்பட்டிருந்த அந்தக் கனமானபூட்டையும் அரக்குப் பூசியிருந்த வெள்ளைத்துணியையும் அருணாச்சலத்தின் கையில் திணித்தாள்.

“இந்தாங்க சார்… நீங்க ஆசையா கேட்டீங்கன்னுதான் இடிக்கச்சொல்றதுக்கு முன்னாடி மெனக்கெட்டு சீலை உடைச்சு உங்களுக்காகவே பத்திரப்படுத்தி வச்சுருந்தேன்… இதைப்…..போய் மறக்கப் பார்த்தேன்… நல்ல வேளை…. சார் ஞாபகப்படுத்திட்டார் தாங்க்ஸ் சார்…” என அருணாச்சலத்திடம் ஆரம்பித்து நாகாபரணத்திடம் புன்னகை முகமாக முடித்தாள்.

குரலிலோ முகத்திலோ கொஞ்சம்கூட நக்கலைக் காட்டாமல் தீவிரமாக அவள் நன்றி நவின்ற விதத்தில் அருகிலிருந்த பிரதாப்பிற்கும் சர்வேசனுக்கும் சிரிப்பு வரத்தான் செய்தது.
கூடவே அருளாளனுடைய நினைவும்… எதிராளிகள் எவ்வளவு அசரடித்தாலும் அசராத நிதானமான கம்பீரம் அருளாளனுடையது.
எதிராளிகளையே நிதானிக்க வைத்துப் பின் தலைத்தட்டிக் குப்புற விழ வைக்கிற அதிரடி அமிழ்தாவினுடையது. பிரதாப்புடைய மனம் ஒப்பிட்டுப் பார்த்தது…
ஆனால் கிண்டலடிக்கிறோம் என்பதையே உணர விடாமல் எதிராளிகள் முகத்தில் ஈயாட விடுவதில் இருவரும் ஒன்றுதான் என்று தோன்ற, வந்த புன்னகையை அடக்கியவர் அருளாளனுக்கு வந்த முடிவு இவளுக்கும் வந்து விடக்கூடாது என்று மனதில் புன்னகை முகமாகப் பதிந்திருந்த அருளாளனிடமே வேண்டினார் .
அந்த வேண்டுதல் அவனுக்குக் கேட்கத்தான் செய்தது. ஆனால் அவருடைய பயத்திற்கு அவசியமின்றி அவன்தான் அவளருகிலேயே இருக்கிறானே…
பின் அவளை யாரால் என்ன செய்து விட முடியும்?
அவனது சாவே அவன் நினைக்காமல் அவன் அருகில் வரவில்லையே… அப்படியிருக்க, அவனது அமியை யாரால் நெருங்கிவிட முடியும்?

அவள் நக்கலில் கடுப்படைந்த நாகாபரணம் வந்த கோபத்தை அடக்காமல் “என்னடி” என்று கையை ஓங்க, ஓங்கிய அவரது வலக்கையை தனது இடக்கையால் பிடித்தவள்,

அந்தக்கையை அப்படியே ஏதோ மரக்கிளையை ஒடிப்பது போல சடக்கென இறக்கினாள்.

அவரது கையை அவள் கீழே இறக்கும்போதே வலியும் சேர்ந்து மொத்தமாய் அந்தக்கையில் இறங்கியது. அதோடு விடாமல் மேலும் அழுத்தம் வேறு கொடுத்தாள்…

பார்க்கத்தான் மென்மையாக இருந்தாள்… ஆனால் அவளது அந்த ஒற்றைக்கையில் இருந்த அசாத்திய வலிமையை அவரால் தாங்க இயலவில்லை…

வலி கூடவே “என்னடி பண்ற விடு…” என்றார் அழுவதற்கும் அலறுவதற்கும் இடைப்பட்ட குரலில்…

கையை விடாமல் “ஷ்ஷ்…” என்று தன் வலதுகை ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்து எச்சரித்தவள், “மரியாதை…மரியாதை ரொம்ப முக்கியம் எம்.எல்.ஏ சார்…

நான் என்ன உங்க வேலைக்காரியான்னுலாம் கேட்க மாட்டேன்…
நான் ஐ.ஏ.எஸ் ஆபிஸர்தான்…
ஆனா வேலைக்காரங்களாகவே இருந்தாலும் மரியாதை கொடுக்கணும்… கொடுக்கக் கத்துக்கோங்க…
புரிஞ்சுதா…”
அமைதியான குரல்…
ஆனால் அழுத்தமான குரல்…
அந்த ‘புரிஞ்சுதா’வில் அழுத்தம் கூடிய போது அவள் பிடித்திருந்த அந்தக்கையிலும் அழுத்தம் கூடியது…
“நான் ஒண்ணும் உங்க ஷீ லேஸ் கட்டிவிடுற மாதிரியான அதிகாரிங்கள்ல ஒருத்தி கிடையாது… அமிழ்தா… அமிழ்தா ஞானசேகரன்… முதல்ல அதை நல்லா மனசுல பதிச்சு வச்சுக்கோங்க…” என்றவள் கையோடு சேர்த்து உதற, சற்றுத் தள்ளிப்போய்த் தடுமாறி விழுந்தவரைப் பின்னால் நின்ற அவரது அடிவருடிகள் இருவர் தாங்கினர்…
அவரும் கையை உதறத்தான் நினைத்தார்….
ஆனால் அசைக்கக் கூட முடியவில்லை…

“ஏய்… எவ்வளவு தைரியம் இருந்தா எங்க கட்டிடத்தை சொல்லாம கொள்ளாம இடிச்சதுமில்லாம என் கையையே உடைப்ப…”

“உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே கை ஓங்குவிங்க…
இந்தக் கட்டடமே உங்க ரெண்டு பேர் பேர்ல இல்ல…யார் பேர்ல இந்தக்கட்டிடம் இருக்கோ அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டுதான் பண்ணோம்…” என்று அவள் கூறவும் அருணாச்சலத்தின் பார்வை அருகில் நின்றிருந்த அவரது பினாமியைச் சுட்டெரித்தது…

அவள் தொடர்ந்தாள்…
“ இது ஆறு இருக்குற மணற்பாங்கான இடம்ன்னு ஆற்றைச் சுத்தியே இரண்டு மாடிக்கு மேல கட்ட யாருக்குமே அனுமதி இல்ல… நீங்க எவ்வளவு தைரியம் இருந்தா ஆத்துக்குள்ளேயே 5 மாடிக்கட்டிடம் கட்டி வச்சிருப்பிங்க…நான் இதை இடிக்காம நீங்க இன்னொரு கட்டடம் கட்டுரதுக்குப் பூமி பூஜை போட்டுட்டுப் போகவா? ஆறு என்ன உங்கப்பன் வீட்டுச் சொத்தா? எதிர்ப்பார்க்காத நேரத்துல இந்தக் கட்டடம் இடிஞ்சு விழுந்தா எவ்வளவு உயிர் போகும் தெரியுமா? அந்த இன்னொரு கட்டடம் ஆனா சேப்பா தான் இருக்கு நீங்க என்னதான் அரசாங்க இடத்தை ஆக்கிரமிச்சுக் கட்டிருந்தாலும் அதைக் கட்டுனவங்களோட உழைப்பை வீணாக்க விரும்பல…அந்த ஒரே காரணத்துக்காகத் தான் அதை இடிக்கல… ஆனா அதை இந்நேரம் சீஸ் பண்ணிருப்பாங்க… வேற அரசாங்கப்பயன்பாட்டுக்கு அது போகும்… முதல்ல கொஞ்சம் மரியாதையா பேசக் கத்துக்கிட்டு அதுக்கப்பறம் என் விஷயத்துல தலையிடுங்க… இல்லைன்னா அப்பறம் நான் வேற விதமா மரியாதை செய்ய வேண்டியிருக்கும்…” சொல்லியபடி கார்க்கதவைத் திறந்தவள், ஏறாமல் மீண்டும் திரும்பினாள்…

“அப்பறம் இன்னொரு விஷயம்… உடனே என்னையும் தீர்த்துக்கட்டிரலாம்ன்னு பிளான் போட்டுராதீங்க…
நான் அருளாளன் அளவு நல்லவ கிடையாது…
என்னை சாகடிக்க நினைச்சீங்கன்னா சாகும்போது என்னை சாகடிக்க நினைச்சவங்களையும் சேர்த்துச் சாகடிக்காம சாகமாட்டேன்…
சந்தேகமா இருந்தா எனக்கு டிரான்ஸ்பர் போட்டவுடனே சந்தோஷமா வழியனுப்பி வச்ச உங்க பிரெண்டு கிருஷ்ணய்யா கிட்ட கேட்டுப்பாருங்க…
அவரோட ஆளுங்க நாலு பேரு இன்னமும் ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காங்க…” சொல்லிவிட்டு காரில் ஏறிக் கிளம்பிவிட, அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தில் கையில் அவள் திணித்துச்சென்றிருந்த பூட்டைக் கடாசினார் அருணாச்சலம்…
அது மிகச்சரியாக நாகாபரணத்தின் காலில் நச்சென விழுந்தது…

சற்று நேரம் அமைதியாக பயணம் கழிய அருகில் அமர்ந்திருந்த பிரதாப் மெதுவாக, “உங்களுக்கு கராத்தே பாக்ஸிங் ஏதாவது தெரியுமா மேம்?” என்றார்…

அவள் ஒருகணம் கேள்வியாக நோக்கிவிட்டு, “ஓ…அந்த நாலு பேரா” என்று வினவினாள். அவர் ஆமோதிப்பாய் தலையசைக்க, லேசாகச் சிரித்தவள், “கராத்தே தெரியும்தான்… ஆனா அதுக்குக் காரணம்…சிலம்பம் … சிலம்பம்ல இன்டர்நேஷனல் சாம்பியன்” என்றாள்…

“இன்டர்நேஷனலா? அப்ப மத்தநாடுகள்லயும் சிலம்பம் இருக்காமா?” என்று கேட்டார் சர்வேசன்…

“இருக்குண்ணா… ஆனா நம்ம அளவு ஆக்ரோஷமா சுத்தமாட்டாங்க… நான் கத்துக்கிட்டது எங்க தாத்தாகிட்ட… சுத்துரப்ப தொட நினைச்சாக்கூட கை உடைஞ்சிரும்… கம்பால தடுக்கலன்னா எலும்பு பேந்துரும்…”

“ஆனா எல்லா நேரத்துலயும் கம்பு எப்படி மேடம்?” பிரதாப் இழுக்க,

கைப்பையிலிருந்து ஒரு உறையிடப்பட்ட குடை போன்ற பொருளை எடுத்தாள்.

“குடையவே கம்பா பயன்படுத்திப்பீங்களாம்மா?” சர்வேசன் கேட்க, சிரித்தவள்,

“இது குடையில்லண்ணா…” என உறையைப் பிரிக்க, உள்ளே மடக்கப்பட்ட ஸ்டில் கம்பி சிரித்தது…
எங்கே சென்றாலும் இதை ஏன் தூக்கிக்கொண்டு செல்கிறாள் என்று எண்ணியிருந்தது இப்போது விளங்கியது… மரக்கம்பிற்கே எலும்பு பெயரும் என்றால் இன்னமும் அவர்கள் மருத்துவமனையில் இருப்பதன் ரகசியம் புரிந்தது…

அவர்கள் இருவரும் புன்னகைக்க, இணைந்து புன்னகைத்தபடி, வந்து விட்ட அலுவலகத்தில் இறங்கியவளுக்கு அப்பொழுதுதான் இன்னொன்று தோன்றியது.
தானே நாலு பேரைச் சமாளித்தால்? அருளாளன்??? அவனுக்கு அந்த வலிமை கூட இல்லாமல் இருந்திருக்கும் என்று அவளுக்குத் தோன்றவில்லை…
என்னதான் போதை மருந்து செலுத்தியிருந்தாலும் கூட அதைச் செலுத்தும் வரை…

மனம் குழம்ப, வேகமாக தனது அறையை அடைந்தவள், கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்து வைத்திருந்த அந்த வீடியோவை ஓட விட்டாள். அவள் முன்பு பார்த்த போது போதை மருந்து செலுத்துவதிலிருந்து பார்த்தாளே தவிர அதற்கு முன் பார்க்கவில்லை…

அவள் நினைத்தது சரியாக, அவன் தன்னைத் தாக்க வந்தவர்களைப் பதிலுக்குத் தாக்கத்தான் செய்தான்…

இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு எந்தவிதக் காயமோ களைப்போ ஏற்படவில்லை..
.
காவல்துறை அதிகாரியான கமிஷனர் கூட அவன் அடித்த அடியில் விழுந்து சரிய… அவன் விழுந்தது என்னவோ அருணாச்சலத்தின் அடியில்தான்…

மேலும் சில நிமிடங்கள் இதேபோல் கழிய கண்டதை நம்ப இயலாமல் மீண்டும் ஓடவிட்டுப்பார்த்தாள்…
உண்மைதான்… மற்றவர்களை வெளுத்து வாங்கியவன் அருணாச்சலத்திடம் மட்டும் வெறுமனே அடிவாங்கிக்கொண்டிருந்தான்… அடிகளைத் தடுக்கக் கூட இல்லை… அவர் காலை வைத்து அழுத்திய போது கூட, கழுத்து நெறியாமல் காத்திருந்தானே தவிர வேறு எதுவும் செய்யவில்லை…

அவரது காலை அப்படியே பிடித்து வாரியிருந்தால் கூட அருணாச்சலம் விழுந்திருப்பார்…
அவனும் மிக எளிதாக அடுத்து நடந்தவற்றைத் தடுத்திருக்கலாம்…
ஆனால் ஏன் செய்யவில்லை?
கேள்வி பெரிதாக மனதைக் குடைய அதைப் பற்றி யோசிக்க விடாமல் அடுத்தடுத்து வந்த வேலைகள் அவளை ஆக்கிரமித்தன…

அதில் கவனத்தைச் செலுத்தியவளுக்கு மீண்டும் வீடு வந்து சேர்ந்ததும் இந்த நினைவு மனதில் முழுவதுமாய்ப் படர, சந்தனாவிடமும் விவேகனிடமும் சற்றுப் பேசிவிட்டு, மெல்ல தோட்டத்துப்பக்கம் நகர்ந்தாள்…
மறக்காமல் ப்ளுடூத்தை எடுத்துச்சென்றவளைப் பார்த்த விவேகன் “உங்கக்கா ஏன் எப்பப் பார்த்தாலும் கொள்ளைக்கூட்டத்தலைவி மாதிரி ப்ளுடூத்தும் கையுமாவே இருக்காங்க…” என்று சந்தனாவிடம் வினவ அவனுக்கு முறைப்புதான் பரிசாகக்கிடைத்தது.

அந்த மூன்று வேப்பமரங்களின் அருகில் சென்றவள் நடுநாயகமாக இருந்த பெரிய வேப்பமரத்தின் கீழ் இருந்த திண்டில் அமர்ந்தாள்….

“அருள்…அருள்…”

“——-“

“நீங்க என்கூடவேதான் இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும்… தயவுசெஞ்சு முன்னாடி வாங்க… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…ப்ளீஸ்…”

“சொல்லு…”

அவனைக் கண்டவுடன் தாய் முகம் கண்ட சேயாக எழுந்தவளது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அவனுக்கு மகிழ்ச்சிக்குப் பதில் வலிதான் வந்தது…
இறந்தபோது அனுபவித்த வலியை விட அதிகமாக…

அதை அவன் முகம் காட்டவும் “என்ன அருள் என்மேல எதுவும் கோபமா?” என்று மென்மையாக வினவினாள்…

அந்த மென்மை மேலும் வலியூட்ட, முகத்தை இறுக்கமாக்கியவன், “கோபமெல்லாம் இல்ல” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு…

“அப்பறம் ஏன் அருள் என்கண்ணுக்கு நீங்க தென்படவே இல்ல…”

“நிலைக்காதுன்னு தெரிஞ்ச ஒரு விஷயத்தைப் பண்ணக்கூடாது அமிழ்தா…ஆரம்பத்திலேயே அழிச்சுரணும்…”

“புரியலை…”

“சில விஷயங்கள் புரியாமலே இருக்கறதுதான் நல்லது…”

அவள் மேலும் புரியாமல் பார்க்க, “எதுக்குக் கூப்பிட்ட அதைச் சொல்லு…” என்றான்.

அவளுக்கும் அது நினைவு வர, அவளது சந்தேகத்தைக் கேட்டாள்.

“எல்லாரையும் அடிச்சுருக்கீங்க…ஆனா அந்த அருணாச்சலம்தான்… அவர் மேல உங்க கை படவே இல்லையே ஏன்? அப்ப அவரை அடிச்சுருந்தா இப்ப உயிரோட இருந்துருப்பீங்களே…” அவளது கேள்வி ஆதங்கத்தோடு வெளிவர பதில் பேசாமல் நின்றிருந்தான் அவன்…

“சொல்லுங்க அருள்… அப்பவே அவரைப் பதிலுக்கு அடிச்சுருந்தா இல்லைன்னா கொலையே கூடப் பண்ணிருக்கலாமே…தற்காப்புக்காக எதுவும் பண்ணலாமே… தப்பில்லையே… அப்ப அதைச் செய்யாம இருந்துட்டு இப்ப வந்து ஒரு அப்பாவி பையனைக் கொலை பண்ணுவேன்னு சொல்லிட்டு இருக்கீங்க… அவங்க அப்பா பண்ண தப்புக்கு விவேகன் என்ன பண்ணுவான் நீங்களே சொல்லுங்க…அந்த அருணாச்சலத்தை ஏதாவது செஞ்சாக்கூட பரவாயில்லை… சொல்லிக்கொண்டே போனவளை அமைதியாகப் பார்த்தவன்,
“விவேகனோட அப்பா என்ன தப்பு பண்ணாரு” என்றான் அமைதியாக…

அதில் குழம்பியவள் “என்ன தப்பு பண்ணாரா? என்ன பண்ணல? அவர் கையால செத்தும் இப்படி கேட்டுகிட்டு இருக்கீங்க…”

“அதெல்லாம் பண்ணது அருணாச்சலம்… விவேகனோட அப்பா என்ன தப்பு பண்ணாரு? அதோட நான் எப்ப அவனைக் கொலை பண்றேன்னு சொன்னேன்?” அவன் நிறுத்தி நிதானமாகக் கேட்க மேலும் குழம்பினாள் அவள்…

“நீங்கதான ஏதோ புத்திர சோகம்… அருணாச்சலத்துக்கு அதுதான் சரியான தண்டனைன்னு என்னென்னமோ சொன்னீங்க?”

சற்று நேரம் அந்த வேப்பமரத்தையே பார்த்துக்கொண்டிருந்தவன், பின் அவளை நேராகப் பார்த்து,

“அந்தத் தண்டனையை நான் அவருக்கு எப்பவோ… சரியாச்சொன்னா இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கொடுத்துட்டேன் அமி” என்றான் அமைதியாக…

அவன் சொன்னதன் பொருள் சில கணங்கள் கழித்து முழுமையாக உறைக்க, “அப்…அப்…அப்…அப்படி…ன்னா அப்படின்னா?” அவளுக்கு வார்த்தைகள் திக்க,

“ஆமாம்…” அவனது குரல் உறுதியாக வெளிப்பட்டது…

                                    (தொடரும்...)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 24”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *