Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 25

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 25

சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 25

சிலுசிலுவென்ற காற்று முகத்தில் படிய அந்த ஊரில் கால் வைத்தவனுக்கு மனதுள் ஒரு சிலிர்ப்பு அவனை அறியாமல் ஊடுருவியது.

எத்தனை வருடங்கள்???

சுத்தமான அந்த மாலைநேரக்காற்றை மெல்ல உள்ளிழுத்தான் அவன்.

அலைபேசி தன் அழகிய கீதத்தால் அழைப்பு விடுக்க, அதை எடுத்தவன் எண்ணைப் பார்க்கவும் தன்னையறியாமல் முகம் புன்னகையில் படர அழைப்பை ஏற்றான்.

“என்ன நூடுல்ஸ் இப்பதான் வந்து இறங்குனேன். அதுக்குள்ள உனக்கு பட்சி சொல்லிருச்சு போல… டூ மினிட்ஸ் நூடுல்ஸ விட பாஸ்ட்டா இருக்கியே…”

“டேய்… உன்னை… அப்படி கூப்பிடாத கூப்பிடாதன்னு சொல்லிருக்கனா இல்லையா…” எதிர்முனையிலிருந்தவள் கொதித்தாள்.

இவன் பதில் சொல்லாமல் கலகலவென நகைக்க, அவளது அருகிலிருந்த விவேகனோ “அப்படித்தான் கூப்பிடுவோம் என்னண்ணா?” என்க, ‘தம்பிடா…’ என்றபடியே அந்த ரயில் நிலையத்தில் இருந்த கல்பெஞ்சில் அமர்ந்தான்.

“மேகி… அண்ணனா? ஊருக்குப் போய்ட்டானாமா?” என்றொரு பெண்குரல் கேட்டது.

“ யம்மா… அதான் மேகலைன்னு பேர் வச்சுருக்கீங்கல… மேகா, மேகலா, இப்படி ஏதாவது கூப்பிட வேண்டியதுதான… நீங்க மேகி மேகின்னு கூப்புட கூப்புட அந்த தடிமாடும் இந்த எருமமாடும் நூடுல்ஸ் நூடுல்ஸ்ன்னு கூப்புட்டு என் உசிர வாங்குதுங்க… இதுங்க கூப்புட்டாலும் பரவால்ல… அன்னைக்கு இந்த எரும என்னை என் பிரெண்ட்ஸ் முன்னாடி கூப்பிட்டு அதுங்களும் அப்படிதான் கூப்பிடுதுங்க…” என அருகிலிருந்த தம்பியின் முதுகில் போனிலிருந்த அண்ணனுக்கும் சேர்த்துச் சாத்து சாத்து என்று சாத்தினாள் அவள்.

அவளின் தலையில் கொட்டியவர் தம்பியை அடிக்காத, அண்ணனைத் திட்டாதன்னு சொன்னாக் கேக்குறியா என்றபடி போனை வாங்கி,

“போயிட்டியாப்பா”

“ம்ம்…ஆமாம்மா… இப்ப தான் இறங்குனேன்…”

“ஆமாடா நீ காலைல கிளம்புனதுல இருந்து வீடு வெறிச்சுன்னே இருக்கு… அதான் இதுங்க ரெண்டும் நீ இந்நேரம் போயிருப்பன்னு போன் பண்ணுச்சுங்க…”

“இல்லம்மா. ரயிலைக் கிராஸிங்ல போட்டுட்டாங்க… அதான் லேட்டாகிருச்சு… இல்லன்னா இந்நேரம் வீட்டுக்குப் போயிருப்பேன்…”

“சரிப்பா போயிட்டுப் பேசு… அப்பா இன்னும் வரலை…வந்ததும் பேசச் சொல்றேன். நேராநேராத்துக்கு கரெக்டா சாப்பிடு…வேலை வேலைன்னு சாப்பிடாம இருந்துராத…”

“சரிம்மா”

“சரிடா… இதுங்கட்ட கொடுக்குறேன் பேசு…”

“கொடுங்கம்மா…”

“என்னத்தைக் கொடுக்கறது… எல்லாம் ஸ்பீக்கர்ல தான் இருக்கு… பேசும் பேசித்தொலையும்…”

“என்ன தம்பி கவனிப்பு செமத்தியா கொடுக்கப்பட்டது போல..”

“சொல்லுவடா… சொல்லுவ… ஏன்; சொல்ல மாட்ட… உனக்கும் சேத்து இந்த நூடுல்ஸ் என்னை வேகவச்சுகிட்டு இருக்கு…திரும்பி இங்க வருவலடி… அப்ப உனக்கும் செமத்தியா இருக்கும்டா”

“டேய்… நானே இப்பதான் நிம்மதியா இருக்கேன். அது உனக்குப் பொறுக்கலையா? திரும்பவுமா? ”

“ மகனே நீ எங்க போனாலும் திரும்ப இங்கதானடி வரணும்… அப்ப உன்னை அப்பாகிட்ட சொல்லி உள்ள விடாம வெளியே பிளாட்பாரத்துல உக்கார வைக்கல என் பேரு மேகலை இல்ல…”

“ஆல்ரெடி உட்கார வச்சுட்ட செல்லம்… இங்க ரயில்வே பிளாட்பாரத்துல தான் உட்கார்ந்துருக்கேன். சரி அதெல்லாம் இருக்கட்டும்… நான் இங்க வந்துட்டேன்னு ரெண்டு பேரும் வெட்டியா வெப்சீரிஸ் பார்க்காம ஒழுங்கா பாடத்தைப் படிங்க. க்வெஸ்டின் கேப்பேன். நைட்டு… .டேய் அவளாவது அரியர் வச்சுக் கிளியர் பண்ணிக்கலாம்… உனக்குப் பப்ளிக் எக்ஸாம் ஒழுங்கு மரியாதையா படி…”

“ஹலோ அண்ணா ஹலோ ஹலோ ஹ…லோ அண்ணா சரியா கேக்கலண்ணா….” இருவரும் ஒருசேர கோரஸ் போட்டார்கள்…

“ஏன்டா உனக்கு ஏதாவது கேக்குது…”

“இல்லையேக்கா… அண்ணா அண்ணா சத்தமா பேசுண்ணா…”

“ கேக்காதே… உங்க ரெண்டு பேர் ஸ்பீக்கரும் எப்ப வொர்க்கிங் கண்டிஷன்ல இருக்கும்… எப்ப அவுட் ஆப் ஆர்டர்ல போகும்ன்னு எனக்குத் தெரியும்… பரிட்சைக்கு முதல்நாள் ராத்திரி போன் பண்ணி அதைச் சொல்லிக்கொடு… இதைச் சொல்லிக்குடுன்னு உயிரை வாங்குங்க… வச்சுக்குறேன்..”

“ஹலோ அண்ணா கொஞ்சம் சத்தமா பேசுண்ணா… இங்க ஒண்ணுமே கேட்கமாட்டேங்குது…”

“இவ்வளவு நேரம் கேட்டது… இப்ப மட்டும் கேக்கலையா? சரி நைட்டுப் பேசுறேன் போனை வைங்க…”

“ஆ சரிண்ணா டாட்டா…”

“இது மட்டும் கேட்டுருமே…போய்த்தொலைங்க…பை…”

“ஹிஹஹிஹி…”

இவனும் சிரித்தபடி போனைக் கட்செய்து விட்டு நிமிர, எதிரில் ஒருவர் கையில் மலர்க்கொத்துடன் போனில் எதையோ டைப் செய்து விட்டு யாரையோ எதிர்பார்த்தத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்தவன், தனக்கு வந்த மெஸேஜையும் பார்த்துவிட்டு அவரருகில் சென்றான்.

“மிஸ்டர். பிரதாப்?’ என்ற கேள்வியோடு…

அவர் தலையசைத்துவிட்டு இவனைக் கேள்வியோடு நோக்க,

ஐ ம் அருளாளன்… என்று கையை நீட்டினான் அவரிடம்.

அவர் சற்றுத் திகைப்போடு பார்க்க, “அருளாளன்…இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்க கலெக்டர்” என, அவர் அவசரமாக அவனிடம் அந்த மலர்க்கொத்தை நீட்டி வெல்கம் சார் என்றார்.

அதைப் புன்னகையுடன் ஏற்றவன் மீண்டும் கையை நீட்ட, அவர் குழப்பமாக நோக்க, “என்ன சார் கையெல்லாம் கொடுக்க மாட்டீங்களா? சரி வணக்கம்” என்று கைகுவித்தான்.

அய்யோ அப்படில்லாம் இல்ல சார்… இவ்வளவு சின்ன வயசா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கல… சாரி சார்” என்றபடி கையை நீட்ட அவரிடம் கைகுலுக்கியவன் “ஏன் சார்? அருளாளன்ங்கற பேருக்குக் குறைந்தபட்சம் 50 வயசாவது இருக்கும்ன்னு எதிர்பார்த்தீங்களா? ” என்றபடி தன்னுடைய அடையாள அட்டையை எடுத்துக்காட்டினான்.

“சார் வெளியில் கார் வெயிட்டிங்க்ல இருக்கு… போலாமா சார்?”

“ம்ம் போகலாம் ” வலக்கையால் வைத்திருந்த பெட்டியை இழுத்துக்கொண்டு இடக்கையால் அலட்சியமாகத் தலைமுடியைக் கோதிவிட்டபடி நடக்க, அது அழகாகக் கலைந்து படிந்து அவனுக்கு அழகூட்டியது.
எந்த வேறுபாடும் காட்டாமல் கலகலவென பேசியபடியே வந்தவனைப் பார்த்தவுடனேயே பிரதாப்பிற்கு மிகவும் பிடித்துப்போனது…
இருவரும் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருக்க, திடீரென நின்றான் அருளாளன்…

எதிர்ப்புற நடைமேடையிலிருந்து ஒரு ஐந்து வயது சிறுவன் மின்னல் வேகத்தில் தண்டவாளத்தில் குதித்துக்கொண்டிருந்தான். குதித்த வேகத்தில் இந்தப்புற தண்டவாளத்தையும் கடந்து இந்த நடைமேடையில் ஏறினான்… அதே வேகத்தில் மீண்டும் ஓடப்போக, அவனது சட்டையை இழுத்து அவனைப் பிடித்தான் அருளாளன்.

வலையில் சிக்கிய சிறு முயல்குட்டி போல அவன் திருதிருவென்று விழிக்க, தன் முழங்கால் உயரமே இருந்த அந்தப் பெரிய மனிதனின் உயரத்திற்குச் சரியாக மண்டியிட்டு அமர்ந்தவன்,” எதுக்கு சார் இவ்வளவு வேகம்? எந்தக்கோட்டையைப் பிடிக்கப்போறீங்க…ம்ம்… “புருவத்தை உயர்த்தி வினவினான்.

நான் பிடிக்கல… அப்பா பிடிச்சுரக்…கூடாது…” என எதிர்ப்புறம் கைகாட்டினான்… தந்தைக்கு ஆட்டம் காட்டிவிட்டு ஓடி வந்திருக்கிறான் என்பது புரிந்தது…
ஆனால் ஏதேனும் ரயில் வந்திருந்தால்… எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக்கூடும்?

அவன் கைகாட்டிய மனிதர் இந்தப்புறம் வர முயன்று கொண்டிருக்க, அவரை வரவிடாமல் யாரோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர்…

சிறு

வனைத் தூக்கியவன், பிரதாப்பிடம் அவனது தந்தை பார்த்தால் சைகை காட்டச்சொல்லிவிட்டு படிக்கட்டை நோக்கிச் சென்றான்.

அருளாளனின் முகத்திலிருக்கும் வசீகரமும் கண்களின் சிரிப்பும் அனைவரையும் ஈர்க்கக்கூடியது… அதோடு தனக்குச் சரியாக மண்டியிட்டு, விளையாட்டாக அவன் பேசியது அந்தச் சிறுவனையும் ஈர்த்ததுதான்… அவன் தூக்கியிருந்ததும் பிடித்திருந்தது… அவன் கைவளைவில் வசதியாகவே அமர்ந்திருந்தான்… எனினும் இக்கால குழந்தைகளுக்கே உரிய எச்சரிக்கை உணர்வில், “அப்பாஅம்மா சொல்லிருக்காங்க… தெரியாதவங்க கூடல்லாம் போகக்கூடாது….” அவன் தலையை ஆட்டியபடி மழலையில் சொல்ல, “அதுக்கு முதல்ல நீங்க அப்பாம்மாவை விட்டுட்டு இப்படி தெரியாமல்லாம் ஓடக்கூடாது…” அவனைப் போலவே தலையை ஆட்டி அவன் சொன்ன மாடுலேசனிலேயே சொல்லியவன், படியில் கால் வைத்தநொடி தன்கையை நீட்டினார் படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருந்த அருணாச்சலம்…

இங்கு வருகிறோம் என்று எண்ணியதில் இருந்தே அவன் மனதில் அவரைப் பார்க்கவேண்டும் என்னும் எண்ணம் அவனையறியாமல் வேரூன்றியிருந்ததது… எதிர்ப்பார்த்துக் காத்திருந்த தருணம் எதிர்பாராத தருணத்தில் வந்துவிட, அருணா என்று துள்ளிய மனதைக் கஷ்டப்பட்டு அடக்கியவன், எதற்காக கையை நீட்டுகிறார் என்று கேள்வியாகப் பார்த்தான்.

சிறுவனைக் காட்டியவர் ” அவங்க அப்பா அப்ப இருந்து கையில சிக்காம ஆட்டம் காட்டிட்டு இருக்கான்… ரயில் வந்திருந்தா என்ன ஆகிருக்கும்? நல்ல வேளை நீ பிடிச்சிட்ட… கொடு தம்பி… நான் அவங்க அப்பாகிட்ட கொடுத்துர்றேன்” என்றார்.

“நானும் வர்றேன் வாங்க..”.கையிலிருந்த சிறுவனை செல்லமாக உலுக்கியவன் “சார் திரும்ப ஓடுனா பிடிக்க வசதியாக இருக்கும்…” என்று சிரித்தவாறு படி ஏறத்தொடங்க அவரும் சிரித்தபடியே ஏறினார்.
அவன் சொன்னது போலவே, அந்த நடைமேடையில் இறங்கவுமே திமிறினான் அவன். தந்தையைப் பார்த்துவிட்டதால் வந்த திமிறல் என்பதை உணர்ந்தவன் இறக்கிவிட, தன் மின்னல் வேகத்தில் அவரை அடைந்தவனைக் கண்ட அருணாச்சலம் அருகில் நின்றவனைப் பார்த்துப் புன்னகைத்தார்…
ஏனென்றே தெரியாமல் அருளாளனைக் காணும்போதே இனம் புரியாத மகிழ்ச்சியில் மனம் நிறைய,யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசிவிடாதவர் அவனிடம் இயல்பாக பேச்சுக்கொடுத்தார்…

“அப்ப்ப்பா… என்ன வேகம்? அப்படியே என் பையனைப் பார்த்த மாதிரி இருக்கு… அவனும் இப்படித்தான்… கையில சிக்க மாட்டான்… பயங்கரமா ஓட விடுவான்… அவன் பின்னாடி ஓடிஓடியே எனக்குப் பாதிநாள் கழிஞ்சுரும்… ஆனா இவனை மாதிரி கிடையாது… கொஞ்சம் ஆட்டங்காட்டிட்டு அவனாவே திரும்ப என்கிட்ட வந்துருவான்… ஆனா அதெல்லாம் அப்ப…”
மகிழ்ச்சியாக ஆரம்பித்தவரின் குரலில் இறுதியில் சோகம் இழையோடியது…

அந்தக்குரல் அவனை என்னவோ செய்தது… ‘இப்பவும் வந்துட்டேன் அருணா…’ என்று அவரைக் கட்டியணைக்க ஆணையிட்ட மனதிற்குக் கஷ்டப்பட்டு அணை போட்டவன் வெறுமனே புன்னகைத்தபடி அவரைப் பார்த்தவன் “ஆனா நீங்க இதைச் செஞ்சுருக்க மாட்டீங்கள்ல…” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான்.
ஓடிவந்த மகனைக் கண்ட சிறுவனது தந்தை முதலில் போட்டது என்னமோ இரண்டு அடிதான்…
அதைக் காட்டியவன் சிரிக்க, அருணாச்சலமும் சிரித்தார்…
இருவரது கண்களும் அந்தச் சிறுவனையும் அவனது தந்தையையுமே நோக்கின.

வாங்கிய அடியில் மகன் தேம்ப அவனை அள்ளி அணைத்து இருகன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டுவிட்டு” இனி இப்படியெல்லாம் ஓடக்கூடாது சரியா” என்று அவனைக்கேட்க, சரியென்று அழகாய்த் தலையசைத்தவன், தன் தந்தையின் கன்னத்தில் பதிலுக்கு முத்தமிட்டான்…

அழகான இந்தக்காட்சியை ரசித்த அருளாளனது கண்கள் தன்னையறியாமல் அருணாச்சலத்தை நோக்க, அவரது கண்களில் தெரிந்த அந்த ஏக்கம் அவனது இதயத்தைப் பிசைந்தது.
தன்னைக் காணும் போதெல்லாம் மகிழ்ச்சியை மட்டுமே அந்தக் கண்களில் கண்டிருக்கிறான்… பிற சமயங்களிலும் சில நேரம் உறுதி… சில நேரம் தைரியம்… ஒரே ஒருமுறை அன்று அவனை அந்த லாரியில் போட்டகணம் மட்டும் சிறிதாக பயம்… ஆனால் இந்த ஏக்கம்… காண முடியவில்லை… மீண்டும் தன் அருணாவின் கண்களில் அந்த மகிழ்ச்சியைக் காண வேண்டும் போல் இருக்க, தன்னையறியாமல் அவரை அழைக்கப்போனவனைத் தடுத்து நிறுத்தியது பளாரென்ற அறைச்சத்தம்…

மீண்டும் சிறுவன் அடிவாங்கி விட்டானா? என்று திகைத்து நோக்க, அச்சிறுவனின் தந்தை வாங்கியிருந்தார்… வேறு யாருமில்லை… அச்சிறுவனின் தந்தையிடம் வாக்குவாதம் நிகழ்த்திக்கொண்டிருந்த நாகாபரணம் தான்…

ஏய் உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே இடிச்சுத் தள்ளிட்டுப் போயிருப்ப…
நான் யாருன்னு தெரியுமா? அவர் கேட்டுக்கொண்டிருக்க, தன்னருகில் வந்து நின்றிருந்த பிரதாப்பைக் கேள்வியாகப் பார்த்தான் அருளாளன்.

“ முன்னாள் எம்.எல்.ஏ… சார்” பதில் வந்தது.

நாகா என்று அருகில் சென்ற அருணாச்சலத்தையும் மீறி
“நீங்க சும்மா இருங்கண்ணா… இடிச்சுட்டு அவன் வாட்டுக்குப் போய்கிட்டு இருக்கான்… “என்று அவர் கொந்தளிக்க,
“ஸாரி சார் என் பையன் தண்டவாளத்தில ஓடிட்டான் அதனால தான்… பாக்கலை… மன்னிச்சுருங்க…… “கையெடுத்துக் கும்பிட்டார் சிறுவனின் தந்தை.

தண்டவாளத்தில ஓடுனா என்ன? தண்டவாளத்துல இறங்குறவங்க எல்லாரும் என்ன அடிபட்டா சாகிறாங்க…அப்படியே செத்தாலும் அது அவன் விதி…அதுக்காக கண்மண் தெரியாம இப்படித்தான் ஓடுவியா உன்னால என்மேல கொதிக்கிற காபி கொட்டிருச்சு தெரியுமா? நாங்க நினைச்சா உன் பையன் மட்டுமில்ல… குடும்பமே இருக்காது… “அவரின் மிரட்டலில் தொய்ந்து போனவர் எதுவும் செய்ய இயலாமல் கூனிக்குறுகி, அந்த நிலையத்தை விட்டு அகன்றார்…

பால்மணம் மாறாமல் சிரித்துக்கொண்டிருந்த சிறுவன், தன் தந்தையை அடிக்கவும் திகைத்துப் போய் தந்தையின் தோளிலிருந்து திரும்பி திகைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டே போக, அவனது அந்த இயலாமை நிறைந்த பார்வை அருளாளனை என்னவோ செய்தது…
அவனுக்கு அவனுடைய அருணாவை மிகவும் பிடிக்கும்தான்… அவரும் மிகவும் நல்லவர்தான்… ஆனால் அது அவனுக்கு மட்டும்தான்… நாணயத்தின் பக்கம் ஒன்றாக மட்டும் இருந்து விடுவதில்லையே…

தந்தையின் கண்களில் கண்ட உணர்வுகளை மனதுள் பட்டியலிட்டவனுக்குக் கடைசியாகப் பார்த்த தந்தையின் கண்களில் இருந்த குரூரம் நினைவு வந்து தொலைத்தது… இப்பொழுது என்னவோ நாகா நாகா என்று இவரை அடக்கத்தான் முயன்று கொண்டிருந்தார்… ஆனால் அன்று? காலடியில் கிடந்த துண்டிக்கப்பட்ட கையும் அந்த மனிதனின் அலறலும் அருகில் அவரது மனைவி மக்களின் கதறலும் இரத்தம் சொட்ட அரிவாளும் கையுமாக நின்ற தந்தையும் நினைவு வந்து அவனது அத்தனை உணர்வுகளையும் மழுங்கடிக்க, சுற்றும் முற்றும் பார்த்தவன் “பிரதாப் சார் இந்த ஸ்டேஷன்ல சிசிடிவி இருக்கா என்ன?” என்று கேட்டான்.

என்ன நடந்து கொண்டிருக்கிறது இவன் என்ன கேட்கிறான் என்று ஒருகணம் திகைத்தாலும் இல்ல சார்… பெரிய ஸ்டேஷன் இல்லங்கறதால இல்ல…”

“ பெரிய ஸ்டேஷனோ சின்ன ஸ்டேஷனோ சிசிடிவி இருக்கணும் சார்… ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ண சொல்லுங்க…”

அவர் அடித்ததில் அங்கு நின்றிருந்த சிலரும் கலைந்து போக, இவர்கள் பேசியது இருந்த அனைவர் காதிலும் தெளிவாகக்கேட்டது…
இவன் புறம் திரும்பிய நாகாபரணம் “என்னடா… யார்டா நீ சிசிடிவி இருந்தா என்னடா பண்ணுவ? என்ன ஏதாவது பத்திரிக்கைக்குக் கொடுப்பியா? பொது இடத்தில் ஒருவரை அறைந்த எம்எல்ஏன்னு… இல்ல கம்பௌயிண்ட் பண்ணுவியா? கொடுத்துக்கோ… யாருக்குத் தெரிஞ்சாலும் எனக்கு ஒண்ணும் பயமில்ல… “

கிரீன்

சிக்னலைப் பார்த்தவாறு சிரித்தவன், “நீங்க பண்ணது யாருக்காவது தெரியணுங்கறதுக்காக கேட்கல… நான் பண்ணப்போறது யாருக்கும் தெரியக்கூடாதுங்கறதுக்காகக் கேட்குறேன்…” என்றான்.

ஆங்…” அவர் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவரை நடைமேடையிலிருந்து தண்டவாளத்தில் தள்ளிவிட்டவன் தானும் குதித்திருந்தான்.

என்ன செய்கிறான் இவன் என அனைவரும் பதற, அருணாச்சலத்திற்கு ஏனோ பதட்டம் சற்று அதிகமாக இருந்தது. ஆனால் நாகாபரணத்திற்கு ஏதோ ஆகிவிடுமோ என்று அல்ல…
அவனுக்கு ஏதோ ஆகிவிடுமோ என மனம் பதறியதில் அவருக்குக் குழப்பம் வேறு வந்தது.

அவன் தள்ளியதில் திகைத்தவர் எழ முயற்சி செய்ய, அவரை எழ விடாமல் தோள்களைப் பிடித்து அமர வைத்தான் அவன்.
“டேய் … என்னடா பண்ற… தண்டவாளம்டா… எழுந்திருக்க விடுடா… “அவர் பதறினார்.

ஆமா சார் தண்டவாளம்தான்… இது கூடவா தெரியாம இருப்பாங்க…” அவர் எவ்வளவுக்கு எவ்வளவு பதறினாரோ அவன் அவ்வளவுக்கு அவ்வளவு பதறாமல் பதிலளித்தான் அவன்…

அனோன்ஸ்மென்டைக் கேளுடா… இந்தத் தண்டவாளத்துல சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரப்போகுதுன்னு சொல்றாங்க… பிளாட்பாரத்தில் நிக்கறவங்களையே தள்ளி நிக்க சொல்றாங்க…எழுந்திரிக்க விடுடா..” அவர் மீண்டும் எழ முயற்சி செய்ய நின்று கொண்டிருந்தவன், இம்முறை தன் கையைக் கொடுத்தான்.

அதைப் பிடித்து எழுந்தவர் சற்று ஆசுவாசமடைய நேரம் கொடுத்தவன், அவர் தண்டவாளத்தை விட்டுக் காலை வெளியே வைக்கப்போகையில் பிடித்திருந்த கையைப் பிடித்து இழுத்து மீண்டும் அமர வைத்தான் அவன்.

“லூசாடா நீ… டிரைன் வரப்போதுடா தண்டவாளத்துல இருக்கோம்… எழுந்திருக்க விடு…”

“அட விடுங்க சார்… தண்டவாளத்துல இறங்குனவங்க எல்லாரும் சாகவா செய்றாங்க… “என்று அலட்சியமாக அவரது பதிலையே திருப்பியடித்தவன், மிக முக்கியமாக அவரிடம் அந்த நிலையில் சந்தேகம் வேறு கேட்டான்.

“ ஏன் சார் இப்ப வர்ற டிரைன் இந்த ஊரில நிக்காம போகுமாமே… நெட்ல பார்த்தேன்… சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேறல்ல… கண்டிப்பா வேற லெவல் வேகத்துலதான் வரும்… இல்லையா?” அவனது குரலில் இருந்த உற்சாகத்தில் அவருக்குக் கதி கலங்கியது…

” அதான் எல்லாம் தெரியுதுல்ல… அப்பறம் ஏன்டா இப்படி டிரைன் வந்தா செத்துருவோம்டா…”

“நம்ம விதி அப்படி இருந்தா என்ன பண்ண முடியும் சொல்லுங்க…”

“அடேய்… உனக்குச் சாகணும்ன்னு ஆசை இருந்தா தனியா போய்ச் சாவுடா என்னை ஏன்டா இழுத்து வச்சுருக்க…” அவர் எழ முயன்றார்…

அவன் விட்டால்தானே… கையைப் பிடித்திருந்தவன், “அதெப்படி” என அவர் எழ எழ இழுத்துவிட்டுவிட்டு,

“நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரம்… நீலம் கூட வானில் இல்லை..

எங்கும் வெள்ளை மேகமே…

போக போக தூரம் இன்னும் நீளுமே…” என வானத்தைப் பார்த்துப் பாடி வேறு கொண்டிருந்தான்..

நாகாபரணத்திற்கு அதில் உச்சக்கட்ட வெறுப்பேறியது…

“ஏய்… யார் பெத்த பிள்ளைடா நீ…ஏன்டா இராகுகாலமா என் உயிரை வாங்குற…”

அருணாச்சலம், பிரதாப் உட்பட அங்கிருந்த யாருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை…

ஏனென்றால் அங்கு கிரீன் சிக்னல் விழுந்திருந்தது… அவர்களை இழுத்துவரவேண்டுமென்றால் கூட இறங்கித்தான் செல்ல வேண்டும்… அழைத்ததை அவன் காதிலேயே வாங்கவில்லை…

இரயிலின் ஓசை வேறு தூரத்தில் கேட்க, பதட்டம் தான் கூடியது… தண்டவாளம் அதிரத் தொடங்க, நாகாபரணத்தின் கண்ணில் மரணபயத்தைக் கண்டவன், நடைமேடையில் தாவி ஏறி, அவரது கையையும் பிடித்துத் தூக்கி விட்டான்.

அவர்கள் ஏறிய சில நிமிடங்களிலேயே அசுர வேகத்தில் அந்த அதிவிரைவு ரயில் அந்த தண்டவாளத்தில் நிலையத்தைக் கடந்து செல்ல, நாகாபரணத்தின் இதயமும் அதே வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தது.

பிரதாப் அருளாளனை அடப்பாவி என்பது போல பார்க்க, கண்ணடித்துச் சிரித்தவன், அவரை அழைத்துக்கொண்டு விறுவிறுவென நடக்க, அவனை அருணாச்சலத்தின் பார்வை இனம் புரியாத உணர்வுடன் பின்தொடர்ந்தது.

இரவு உணவு உண்ணும் போது தனியாகச் சிரித்துக் கொண்டிருந்தவரை வித்தியாசமாகப் பார்த்தார் பத்மினி.

“என்னங்க? இடியாப்பத்தைப் பார்த்துச் சிரிச்சிட்டு இருக்கீங்க?”

அவர் கேட்ட விதத்தில் மேலும் சிரித்தவர் “இன்னைக்கு ஒரு சரியான வானரத்;தைப் பார்த்தேன்டி… பாவம் நாகா…” என்று விட்டு அவரிடம் நடந்ததைச் சொன்னார்.

பத்மினிக்கு அதில் சிரிப்பு வரவில்லை.

“ யாருங்க அது? சரியான லூசுப்பயப்பிள்ளையா இருப்பான் போல… ஒண்ணுகிடக்க ஒண்ணு ஏதாவது ஆகிருந்தா என்ன பண்றது? தம்பி பாவம்…”

நாகாபரணத்திற்காகப் பரிந்தார்.

“நீ வேற சும்மா இரு… ஏதோ சின்ன பையன் விளையாட்டா பண்ணிட்டான்னு போகாம அவன் சும்மாவே தய்யாதக்கான்னு குதிச்சிட்டு இருந்தான்.”

அன்று இரவு உறக்கத்திற்கு முன் அவருடைய நினைவில் அவன்தான் நிறைந்திருந்தான்…

மனதில் நிறைந்திருந்த அவனுடைய குறும்பு நிறைந்த புன்னகை முகம் அவரது மகனை நினைவூட்ட அவருக்கு அப்படியும் இருக்குமோ என்று தோன்றியது… செவிகளில், பிறந்த குழந்தையைப் பார்த்தே “உம்மகன் அப்படியே எங்க அய்யன் சாயல்டா ” என்று சொன்ன தந்தையின் சொற்கள் எதிரொலித்தது… ஆனால் தன் தந்தையே பத்து வயதில் இழந்து விட்ட அவரது தந்தையின் சாயலை எங்கே போய்த் தேடுவது?
ஒரு புகைப்படம் கூட இல்லை… ஆனால் அவர் வர்ணித்த அந்த கம்பீரம் இவனிடம் தெரிவது போல ஒரு உணர்வும் வர, உண்மையில் அதற்கு மேல் யோசிக்க, அவருக்குப் பயமாக இருந்தது…
இதற்கு முன் இதுபோன்ற எத்தனைஎத்தனையோ யூகங்கள் பொய்த்துப்போனதாலோ என்னவோ அவருக்கு இந்த முறை அவருடைய உள்ளுணர்வை நம்பத் தோன்றவில்லை… நம்பத் தோன்றவில்லை என்பதை விட எதிர்ப்பார்த்து ஏமாற மனமில்லை…(நம்பியிருக்கலாம்…)

இருப்பினும் மனக்கண்ணில் நிறைந்த அவனது முகம் அவருக்கு ஏனோ நிம்மதியான உறக்கத்தை அளிக்க, நெடுநாளைக்குப் பின் மகன் பற்றிய சிந்தனையிலிருந்து சீக்கிரம் உறக்கம் வந்தது அவருக்கு…

ஆனால் படுத்தவுடன் உறங்கும்படி தன் மனதைப் பழக்கி வைத்திருந்த அவருடைய மகன் அன்று உறக்கம் வராமல் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து அறையை அளப்பதும், படுக்கையில் அமர்வதும், படுப்பதும், உறங்க முயல்வதும், இயலாமல் எழுவதும், மீண்டும் நடப்பதுமாய் அலமரத்துக் கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட பதினோரு வருடங்களாக, தன் பதினான்கு வயதிலிருந்து அவனுக்கு வரும் நினைவுகள்தான், ஆனால் அவை அப்பொழுதெல்லாம் அவனை விட்டு தூரத்தில் இருந்தன… ஆனால் இப்பொழுது எங்கோ வந்த ஆழிப்பேரலை அவனை நோக்கி வருவதைப் போல அவை அவனில் அலைமோத, அவற்றை அடக்கும் வழி தெரியாமல் அலைக்கழிந்து கொண்டிருந்தது அவன் மனம்…
அதில் அதிகம் பங்கு வகித்ததென்னவோ அவன் தந்தையின் ஏக்கம் நிறைந்த கண்கள் தான்…
அவை அவனை வீழ்த்த முயல சிரமப்பட்டு வெகுநேரம் கழித்து மனதை ஒருமுகப்படுத்தியவன் தன் மடிக்கணினியில் அவன் சேகரித்து வைத்திருந்த தகவல்களைத் திறந்தான்…

இவை ஏறத்தாழ எட்டு வருடங்களாக, அவன் மாணவப்பத்திரிக்கையாளராகப் பணிபுரிகிறேன் பேர்வழி என்று வீட்டில் சொல்லிவிட்டு சேகரிக்க ஆரம்பித்தது… கல்லூரி முடித்த கையோடு யு.பி.எஸ்.சி பாஸாகி ஐ.ஏ.எஸ் ஆனாலும் இதனை அவன் விடவே இல்லை…

தன் தந்தையின் மொத்த சரித்திரமல்லவா? இரத்த சரித்திரம் என்று எண்ணியவனின் இதழ்கள் தன்னையறியாமல் இகழ்வாய் வளைந்தன…

தன் அருணா ஒருவேளை தவறானவர் இல்லையோ என்னும் நப்பாசையில் சேகரிக்க ஆரம்பித்தது…
அவனது ஆசையில் பாறாங்கற்களாய்த் தொடர்ந்து விழ, அவற்றையெல்லாம் பொறுக்கி வைத்த கற்குவியல்கள் இவை… அவருடைய குவாரிகளில் இருந்த கற்களை விட அதிகமாகவே இருந்தது…
ஒருவர் இருவர் என்றால் தேடிப்போய் ஏதாவது பிராயச்சித்தமாவது செய்யலாம்… ஆனால் இங்கோ மடிக்கணினியில் இவன் பக்கத்தை உருட்ட உருட்ட அது உருண்டு கொண்டே இருந்தது…
அவை மெல்ல மெல்ல அவனுடைய உணர்வுகளைத் துடைக்கத் தொடங்க, அருணாவின் மகன் அருளரசனாகச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, ஆட்சியர் அருளாளனாகச் சிந்திக்க ஆரம்பித்தான் அவன்.

அதன் விளைவு…. அடுத்த வாரம் அவனுடைய அலுவலக வாயிலில் வந்து நின்றது…

                                  (தொடரும்...)

2 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 25”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *