தன் முன்னால் வந்து நின்ற பிரதாப்பை நிமிர்ந்து பார்த்தான் அருளாளன்…
“என்ன சார்? எதுவும் விவகாரமா?”
தன் வாய்திறந்து சொல்லும் முன்னே சரியாகக் கண்டறிந்தவனைக் கண்டு மனதுள் ஆச்சரியம் நிறைந்தது அவருக்கு… இத்தனை வருட அனுபவத்தில் அவர் நன்றாகக் கற்று வைத்திருந்த ஒரு விஷயம் மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருப்பதுதான்…
அது இல்லையென்றால் அவரால் இத்தனை வகைப்பட்ட மனிதர்களுடன் பணியாற்றி இருக்க முடியாது…
எதையும் காட்டாத தன் முகபாவத்திலிருந்தே இவன் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறான் என்றால் ‘ இளம்வயதினன், விளையாட்டுக் குணம் நிறைந்தவன்’ என்று தாம் எண்ணியதையெல்லாம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் போல என்று மனதுள் நினைத்தவர் “ஆமாம் சார்..” என்றார்.
“நாகாபரணமா? அருணாச்சலமா? “
“நாகாபரணம் சார்…”
“என்னவாம்?”
“வெளியில உட்கார்ந்துக்காரு சார்…”
“உட்கார்ந்துக்கட்டும்… அதுக்கு என்ன பண்றது? போன் பண்ணிக்கேட்டப்பவே பார்க்க முடியாதுன்னு சொன்னோம்ல… அதையும் மீறி வந்தா அவருக்கு வேற வேலைவெட்டி இல்லன்னு அர்த்தம்… நமக்கு இல்லாம இருக்குமா?”
“நம்ம ஆபிஸ்; வாசல்ல மருந்துக்குக் கூட மரம் கிடையாது சார்…”
“ம்ம்… நானும் கவனிச்சேன்… சீக்கிரமே நடுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…”
புருவங்களைச் சுருக்கியவன் சொல்ல,
“அது இல்ல சார் வெளியிலன்னா ஆபிஸ் வாசல்ல தார்ரோட்டுல உட்கார்ந்துக்காரு சார்… உங்களைப் பார்த்தே ஆகணும்ன்னு…”
“வாட்? ” என்றவன் கடிகாரத்தைப் பார்த்தான்… அது தன்னுடைய இரண்டு முட்களையும் பன்னிரண்டில் பொருத்தியிருந்தது.
கோடைக்காலம்… கொளுத்தும் வெயில்;…
“உள்ளே வரமாட்டாறாரு சார் நீங்க வந்தாத்தான் வருவேன்னு அடம்பிடிச்சுட்டு இருக்காரு சார்… அவர் கூட ஒரு நாலைஞ்சு பேர் வேற இருக்காங்க சார்…”
“ஓ… அப்படியா…வந்துட்டாப் போச்சு…” பார்த்துக்கொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு எழுந்தான்.
“அண்ணா கலெக்டர் வர்றாருண்ணா” என்பதைக் கேட்டவுடன் ‘அதுக்குள்ள வர்றான்னா பயந்தவனா தான் இருப்பான்’ என்று மனம் எண்ணமிட, அலட்சியப்புன்னகை சிந்தியபடி திரும்பிய நாகாபரணத்தின் விழிகள் பிரதாப்,சர்வேசன் பின்தொடர, வந்துகொண்டிருந்தவனைக் கண்டதும் வெளிறிப் பிதுங்கின…
“ஐயோ இந்தக் கிறுக்கனா கலெக்டர்…” என்று உள்ளே உதறல் எடுக்க அவருக்குக் கண்முன் தண்டவாளம் வந்து போனது…
இருந்தாலும் கஷ்டப்பட்டு சுதாரித்து, காட்டிக்கொண்டிருந்த பந்தாவை விடாமல் அவர் மேலாண்மை செய்து கொண்டிருக்க சரியாக அவரை நோக்கி வருவது போலவே வந்து அவரைக் கண்டுகொள்ளாமல் கடந்துபோனான் அவன்…
அவரது பின்னால் உச்சி வெயிலில் தார்ரோட்டில் அமர்ந்திருந்த கூட்டத்தையும் அவர்கள் ஏதோ கல்யாண மண்டபத்தில் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து கதைபேசிக்கொண்டிருப்பது போலப் பார்த்துவிட்டு தாண்டிச்சென்றவனை இவன் எப்ப என்ன செய்வான்னே தெரிஞ்சு தொலையமாட்டேங்குதே என்று மனதுள் குழம்பியபடி பின்தொடரப்போன பிரதாப்பையும் சர்வேசனையும் வேண்டாம் என்று தடுத்தவன் வாயிலையும் கடந்து வெளியே செல்ல விருட்டென்று எழுந்தார் நாகாபரணம்…
அவரைப்பின்தொடர்ந்து பரபரத்தபடி அந்தக்கூட்டமும் எழுந்தது.
வெளியே சென்றவன் சற்று தூரம் தள்ளி கட்டிட நிழலில் சுவரோடு சுவராக ஒட்டியபடி அமர்ந்து மாம்பழம் விற்றுக்கொண்டிருந்த ஒரு வயதான பெண்மணியிடம் போய் நின்றான்.
“மரத்துலேயே பழுத்த பழம்யா தேனா இனிக்கும்…” என்று வந்து நின்றவனிடம் வியாபாரத்தை அவர் பார்க்க முயல,
இரண்டு மாம்பழங்களை வாங்குவதற்குப் பார்ப்பது போல, எடுத்துப்பார்த்தான் அவன்.
“அதெல்லாம் நல்ல பழம்தாம்ப்பா எவ்வளவு போட என்று கேட்க, ” ஒரு கிலோ கொடுங்க பாட்டி” என்றவன் அவரிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
“நீங்க ஏன் இப்படி வெயில்ல உட்கார்ந்து வியாபாரம் பார்த்துகிட்டு இருக்கீங்க? நிழலான இடமா பார்த்து உட்காரலாம்ல…”
“வெயில்ல காயுறதெல்லாம் பார்த்தா வயிறுதான் காயும்… பழத்து மேல வெயில் படாம இருந்தா போதும்… நமக்கு மேல லேசாப்பட்டாதான் என்ன? ரொம்ப அடிச்சா அப்பப்ப இடம் மாறிக்க வேண்டியதுதான? நல்ல கிராமத்துக் கட்டை நமக்குலாம் ஒண்ணும் ஆகாது…” அந்தப்பாட்டி கழுத்தை நீட்டி இழுத்தார்.
” ஏன்மா நீங்க இந்த முதியோர் உதவித்தொகையெல்லாம் வாங்கலையா?”
“ம்க்கும் என்னத்த வாங்க? அதை வாங்கப்போய் இங்க வியாபாரத்தை விட்டதுதான் மிச்சம்… என்னத்துக்குன்னு வந்துட்டேன்… அதோட இவளோட அப்பன்ஆத்தா என்னை நம்பிதான் விட்டுட்டுப் போயிட்டாங்க… நமக்குத்தான் படிக்கத்தெரில… இவளாவது படிச்சு நல்லா வரணும்…” என்று அருகில் பள்ளிச் சீருடையும் பாதி ரிப்பன் அவிழ்ந்து போன இரட்டைச்சடையுமாய் தனியாக ஒரு ஒட்டுச்சில்லைத் தூக்கிப்போட்டு நொண்டியடித்து விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுமியைக் காட்டியவர் பழத்தை நிறுத்து அவனிடம் கொடுக்க அவர் கொடுத்த பையைப் பார்த்தவன் வியந்தான்…
“பாலீத்தின் பை பயன்படுத்துறதில்லையா?” அவன் கேட்டுக்கொண்டிருக்க,
“ அதெல்லாம் பயன்படுத்தக்கூடாதுண்ணா” பின்னாலிருந்து ஓர் இளம்குரல் அதிகாரமாய்க் கேட்டது.
அந்தச் சிறுமிதான்.
அந்த அதிகாரத்தை ரசித்தவன், “ஏன்? அப்படி எதுவும் ரூல்ஸ் இப்ப இல்லையே” என்றான்.
“ஏன்னு இவ்வளவு வளர்ந்துருக்கீங்க உங்களுக்குத் தெரியாது? அது கெடுதின்னு… ஒரு ரூபாய் சேர்த்துக் கொடுத்து இதுல வாங்கிட்டுப் போறதுன்னா போங்க…இல்லன்னா கையில தூக்கிட்டுப் போங்க…”
“ஏய்… சும்மா இருடி…” என்று அவளை அடக்கி விட்டு, இவதான் தம்பி ஏதோ ஸ்கூல்ல சொன்னாங்கன்னு என்னை அந்தப்பையை வாங்கவே விடுறதுல்ல…அவங்க அம்மா உசிரோட இருந்தப்ப இருந்த தையல் மிஷினும் அவ சொல்லிக்கொடுத்தத் தையலும் வச்சிகிட்டுப் பாலீத்தின் பை வாங்குற காசில எடைக்கடைல பழையத்துணி வாங்கி, தைச்சுக்கொடுத்து இதைத்தான் கொடுக்கணும்ன்னு ஒரே பிடிவாதம் பிடிச்சு இப்படி கொடுக்க வச்சகிட்டு இருக்கா…நீங்களாவது கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டுப் போங்க கேக்குறாளான்னு பார்ப்போம்…”
“சொல்லிட்டாப்போச்சு…” என்று அவளது அருகில் வந்தவன், “மேடம்… என்னபடிக்கிறீங்க…”என்றான்.
“ஏழாங்கிளாஸ்…”
“பேரு…”
“மாதவி..”
“ இங்க பாருங்க மாதவி மேடம்…பிடிவாதம்லாம் பிடிக்கக்கூடாது…” என்று பாட்டிக்குக் கேட்கும்படி சத்தமாகக் கூறியவன், அவளருகில் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும்படி,
“ஆனா இந்த மாதிரி ஏதாவது ஒரு நல்ல விஷயத்துக்குப் பிடிச்சுட்டோம்ன்னா அந்தப்பிடிவாதத்தோட பிடியை விடவே கூடாது” என்று தன்கையிலிருந்த பையைத் தூக்கிக் காட்டினான்…
“அப்ப நான் செஞ்சது சரின்னு சொல்றீங்களாண்ணா?” அவளும் அவனைப் போலவே ரகசியக்குரலில் கேட்க, அவளது முகத்தில் மகிழ்ச்சி மின்ன அதை ரசித்தவனது முகத்திலும் அது பிரதிபலித்தது..
“அதிலென்ன மேடத்துக்கு சந்தேகம்?”
“யாருமே இதைச் சொல்லலண்ணா…பிளாஸ்டிக்கோட தீமைகளெல்லாம் சொல்லிக்கொடுத்த எங்க டீச்சர் கூட நான் இப்படி பண்றேன்னு சொன்னப்ப வெட்டிவேலை பார்க்காத… பாடத்துல படிக்கிறதெல்லாம் நிஜ வாழ்க்கைல பண்ண முடியாதுன்னுதான் சொன்னாங்க தெரியுமா?”
“ அப்படில்லாம் கிடையாது… படிக்கிறதை அப்ளே பண்ணாதான் நாம படிச்சதுக்கு உண்மையாவே படிப்புன்னு அர்த்தம்… இனிமேல் யாரும் உன்னை இதுக்குத் திட்டலாம் மாட்டாங்க…”
அவன் சொல்லவும் அவளது கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது… “எப்படிண்ணா? உண்மையாவா?”
“உண்மையாவே… ஏன்னா… நம்ம ஊர் கலெக்டர் பிளாஸ்டிக்கைத் தடைபண்ண சொல்லிட்டாராம்… அதனால இனி எல்லாருமே இதுக்குத்தான் மாறியாகணும்…” என்று கையில் வைத்திருந்த பையைக் காட்ட,
“ஹை சூப்பர்” என்று குதூகலித்தாள் அவள்.
நாகாபரணம் அழைக்க, அலைபேசியை எடுத்து “அண்ணா அந்தப் புது கலெக்டர் யாருன்னு…” என்று அவர் ஏதோ சொல்ல வர, “அங்கு தான் வந்துகிட்டு இருக்கேன் நேர்ல பேசிக்கலாம்”; என்று தொடர்பைத் துண்டித்த அருணாச்சலத்தின் கண்களில் இந்தக் காட்சிதான் பட்டது…
‘இவன் என்ன எப்பப் பார்த்தாலும் ஏதாவது சின்னப்புள்ளை கூடப் பேசிட்டு இருக்கான்’ என்று புன்னகையுடன் எண்ணியவர் காரை நிறுத்த சொன்னார்.
காரிலிருந்து இறங்கியவரைக் கண்டு அந்தச் சிறுமி தன்னிச்சையாய்ப் பின்வாங்க, திரும்பியவன் அவரை நேர்ப்பார்வை பார்த்தான்.
அவரைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தவன் ,சிறுமியிடம் ஒரு கையசைப்புடன் நகர முயல,
“தம்பி நில்லுப்பா… என்னை ஞாபகம் இல்லையா” என்று கேட்டார்…
“உங்க ஞாபகம்… எனக்கு… இல்லாம… நடக்குற காரியமா அருணா?” அவன் மனதில் நினைத்துக்கொண்டிருக்க, “அன்னைக்கு ரயில்வே ஸ்டேஷன்… குட்டிப்பையன்…” என்று நினைவுப்படுத்த முயன்றார் அவர்…
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு சொல்லுங்க…சொல்லுங்க சார்…” என்றபடி அவன் நடக்கத் தொடங்க, ஓட்டுநரிடம் கண்ணைக்காட்டி விட்டு அவரும் அவனோடு நடந்தார்.
அவருக்கு என்ன பேசவென்று தெரியவில்லை…
அவனுக்கு எப்படி பேசவென்று தெரியவில்லை…
சில நொடி அமைதியாகவே கழிய, “என்னப்பா பஸ் ஸ்டான்ட் அந்தப்பக்கம் இருக்கு இந்தப்பக்கம் போற” என்றார் அருணாச்சலமாகவே…
“நான் பஸ் ஸ்டாண்டுக்குப் போகல சார்… கலெக்டர் ஆபிஸ்க்குப் போறேன்…”
“அப்படியா நானும் அங்கதான்பா போறேன்…”
“எதுக்கு சார் போறீங்க? எதுவும் பெட்டிசன் கொடுக்கணுமா என்ன?”
தெரிந்துகொண்டேதான் கேட்டான்.
அவர் தெரியாமல் கேட்கிறான் என்று நினைத்துப் பதிலளித்தார்.
“இல்ல இல்ல… கலெக்டரை ஒரு விஷயமாப் பார்க்கணும்…”
“ஓ…”
“நீ?”
“நான் அங்கதான் வேலை பார்க்குறேன்…”
“அப்படியா… ரொம்ப சந்தோஷம்… ஆமா…கலெக்டர் மாறியிருக்காராம்மே…”
“ம்ம் ஆமா”
“ஆள் கொஞ்சம் கெடுபிடி போலயே…”
“அதெல்லாம் தெரியலை…”
“அது சரி நீயும் புதுசுதான…”
பேசிக்கொண்டே அலுவலகத்தை அடைந்திருந்தார்கள்…
“சரி தம்பி உன்பேரு என்ன?”
“அருள…அருள்… அருளாளன்” என்று சொல்லிவிட்டு அவன் நாகாபரணத்தை சமாதானப்படுத்திக் கொண்டிருந்த பிரதாப்பை நோக்கிச் சென்றான்….
“ஒரு ரொம்ப முக்கியமான விஷயமா சார் போயிருக்காரு சார்… இப்ப வந்துருவார்…” அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவரது அருகில் வந்தவன் “இந்தாங்க சார்… பாப்பாக்குக் கொண்டுபோய்க் கொடுங்க” என்று வாங்கிவந்த மாம்பழத்தை அவரது கையிலும் சர்வேசன் கையிலும் கொடுத்தான்.
‘இதுக்கா இவ்வளவு வேகமா போனான்’ என்பது போல பிரதாப் அவனைப் பார்க்க, நாகாபரணமோ அருள் என்று அவன் கூறியதில் யோசனையுடன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்த அருணாச்சலத்திடம் சென்றார்…
“அண்ணா அவன் யாருன்னு தெரியுதா? அவன்தான் கலெக்டராம்ண்ணா… கண்டுக்கிடாத மாதிரியே போறான்… இப்ப நீங்க வந்துட்டீங்கல… எப்படி கண்டுக்கிடாம இருக்கான்னு நானும் பார்க்குறேன்” என்று திரும்ப அவன் எப்பொழுதோ இடத்தைக் காலி செய்திருந்தான்.
“கலெக்டரா?” என்று புருவம் சுருக்க, “ஆமாண்ணா… சரியான திமிரு பிடிச்சவனா இருப்பான் போல… அதான் அன்னைக்கே பார்த்தோமே”
நாகாபரணம் பொரும அவரைச் சமாதானப்படுத்தி, கலெக்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டுக் காத்திருக்க ஆரம்பித்தார் அவர்…
ஆனால் அவனோ அவர்களைக் கண்டுகொள்ளாமல் அலுவலக வளாகத்தைத் தனியாகச் சுற்றிக்கொண்டிருந்தான்.
அங்கு வந்திருந்த வயதானவர்களிடம் தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் பேச்சுக்கொடுத்து எவ்வளவு நாட்களாக வருகிறீர்கள்? என்ற கேள்வியைக் கேட்க, எல்லாரும் நாளா? என்று சிரித்துவிட்டு இத்தனை மாதங்கள் வருடங்கள் என்று சொல்ல சொல்ல முகம் இறுகியவன் தன் அறையை அடைந்தான்.
பிரதாப்பை அழைத்தவன், முதியோர் உதவித்தொகை சம்பந்தப்பட்ட அனைத்துக் கோப்புகளையும் எடுத்து வரச்சொன்னான்…
சில மணித்துளிகளில் வந்துவிட, அவை அனைத்தையும் ஆராய்ந்தவன் பிரதாப்பை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான்…
ஒரே ஒரு பார்வைதான்… சொல்லப்போனால் அதில் கோபமோ கடுமையோ அந்த மாதிரி எதுவுமே இல்லை…
ஆனால் அதுவே அவருக்கு உள்ளுக்குள் ஒரு சில்லிப்பை ஏற்படுத்தியது.
மேசையில் இருந்த தாள்களில் தேடி ஒரு கடிதத்தை எடுத்தவன் “இதைப்படிங்க…” என்று அவர் கையில் கொடுத்தான்.
அதை வாங்கியவர் “சார் கவர்ல கலெக்டர் மட்டும்தான் படிக்கணும்… ரொம்ப முக்கியமான அரசாங்க ரகசியம்ன்னு இருக்கே சார்”
“பரவால்ல படிங்க…”
“மதிப்பிற்குரியவராக இருப்பீர்கள் என்று நம்பும் கலெக்டர் அவர்களுக்கு,
வணக்கம்… கூடவே மன்னிப்பும்… இதில் எந்த ரகசியமும் இல்லை… ஆனால் தங்களிடம் செல்லாமல் வேறு எங்காவது இந்தக் கடிதம் சென்று விடுமோ என்னும் பயத்தில் தான் இப்படி எழுதினேன்…
நான் ஒரு ஏழாம் வகுப்பு மாணவி. என்பாட்டி தினமும் உங்கள் அலுவலகத்திற்கு அருகில் தான் அந்தந்தக் காலத்திற்கேற்ப எதையாவது விற்றுக்கொண்டிருப்பார்.
முதியோர் உதவித்தொகை கிடைக்கும் என்று அருகிலுள்ளவர்கள் சொன்னதையெண்ணி தானும் அதற்குப் போன வருடம் பதிவு செய்தார்.
ஆனால் இன்னும் வரவில்லை…
அவருக்கு மட்டுமில்லை.. எங்கள் பகுதியில் இருக்கும் யாருக்குமே வரவில்லை…
இது அதைக் கேட்டு எழுதிய மனுவல்ல… எனக்கு ஒரு சந்தேகம் அதைத் தீர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்…
நான் என்னுடைய பாட்டிக்குத் துணையாக அவ்வபொழுது வியாபாரத்திற்கு வருவதுண்டு…
அப்பொழுதெல்லாம் உங்கள் அலுவலகத்தில் ஏதோ பெரிய பெரிய வேலைகள் நடப்பதாக பாட்டி கூறுவார்கள்… ஆனால் நீங்களெல்லாம் வேலை பார்க்கிறீர்களா என்ன??????????”
இங்க் பேனாவால் குண்டுகுண்டான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியில் அவர் நிற்க,
“என்ன பிரதாப் சார்… இதுக்கு என்ன பதில் எழுத… வேலை பார்க்கறதே இல்ல…. பார்த்தாலும் நமக்கு சம்பளம் கொடுக்குற முதலாளிங்களுக்கு அதுதான் மக்களுக்குப் பார்க்கறதில்லன்னு பதில் எழுதிருவோமா?”
“சார்…”
“ஒரு பயனாளருக்குக் கூட இந்த நிதியில இருந்து பணம் போய்ச் சேரல… ஆனா யாரெல்லாம் தொடர்ந்து மனு கொடுத்துக்கிட்டு இருக்காங்களோ அவங்களுக்குப் பணம் அனுப்பப்பட்டதா ரெக்கார்ட் இருக்கு… ஆறு வருஷமா மனு கொடுத்துகிட்டு இருக்கறவரோட மனு ஆறு நாள்லயே பரீசீலிக்கப்பட்டு நடவடிக்கைப்பட்டதா ரெக்கார்ட் இருக்கு… ஆனா அந்த மனுஷன் இன்னமும் இங்க நடைநடையா நடந்துகிட்டு இருக்காரு… என்னது இது?”
“சார்… என்னுடைய வேலை கட்டளைகளை நிறைவேத்துறது மட்டும்தான்… எனக்கு அந்த மாதிரியான கட்டளைகள் வரலை சார்…” அவர் தலையைக் குனிந்தபடி சொல்ல, உஷ்ணமாகப் பார்த்தவன்
, “சரி ரொம்ப சந்தோஷம்… இந்த எல்லாருக்குமே உடனடியா… அன்டர்லைன் த வேர்ட்… உடனடியா… காலதாமதம் இல்லாம போய்ச்சேர வேண்டியது போய்ச்சேரணும்… அதுக்கு வழிவகை செய்ங்க… இது என் ஆர்டர்…போங்க… போய் உங்க வேலையைப் பாருங்க…”
“ ஒரு நிமிஷம்… வெளில வெயிட் பண்ணிட்டு இருக்கறவங்கள உள்ள அனுப்புங்க…”
“சார் நிறைய பேர் இருக்காங்க… மணி ரெண்டாகிருச்சு… நீங்க இன்னும் சாப்பிடல…”
உணவு நேரத்தில் தான் வெளியே சுற்றியிருந்தான்.
“பரவால்ல… நான் பார்த்துட்டே சாப்பிட்டுக்குறேன்… ஆனா ஒரு முக்கியமான விஷயம்… அந்த அருணாச்சலத்தையும் நாகாபரணத்தையும் தவிர்த்து எல்லாரையும் அனுப்புங்க…”
வரிசையாக வந்தவர்கள் அனைவரும் பார்த்துவிட்டு இன்முகத்துடன் வெளியேற, நாகாபரணம் கடுப்பானார்.
“அண்ணா நம்மள மட்டும்தான் அவன் மணிக்கணக்கா உட்கார வச்சுருக்கான். மத்தவங்க எல்லாரும் பார்த்துட்டுப் போயிட்டாங்க… வேணும்ன்னே பண்றமாதிரி இருக்கு…”
அவர் ஏழாவது முறையாகப் புலம்ப அருணாச்சலம் பொறுமை என்று கைகாட்டிக்கொண்டிருக்கும் போது பிரதாப் வந்து “சார் உங்க ரெண்டு பேரையும் கூப்புடுறாரு வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
“உட்காருங்க சார்… உட்காருங்க சார்…” புன்னகை முகமாகவே சொன்னான்.
“என்ன தம்பி நாலு மணிநேரம் கழிச்சுதான் கூப்புடணும்ன்னு தோணும் போல… வேலையை சரியா பார்க்க மாட்டீங்களா?”
“வேலையைச் சரியாப் பார்த்ததுனாலதான் கூப்புடல…”
“ஆங்? ”
“வேலை அதிகம்ன்னு பார்க்க முடியாதுன்னு சொல்லியும் பார்க்க வந்துருக்கீங்களே அதைச் சொன்னேன். சொல்லுங்க என்ன விஷயம்? ”
“வந்து ஒரு வாரம் கூட ஆகலை… அதுக்குள்ள நிறைய தேவையில்லாத வேலை பார்க்குற போல… எங்களோட நிறுவனங்கள்ல பாதிக்கும் மேல நோட்டீஸ் அனுப்பி வச்சுருக்க… அதுவும் மூடச்சொல்லி… எங்ககிட்ட வம்பிழுக்கிறது உனக்கு நல்லதே கிடையாது… எந்த தைரியத்துல இதெல்லாம் பண்ணிட்டு இருக்க?” நாகாபரணம் தீவிரமாக மிரட்டமுயன்றபடி, அருணாச்சலத்தை ஓரக்கண்ணால் பார்க்க, அவரோ இவருடன் பேசிக்கொண்டிருந்த அருளாளனின் முகத்தையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார்.
“நீங்க எந்த தைரியத்துல முதியோர் உதவித் தொகைக்கு வர்ற பஃண்ட்ல கை வச்சிருக்கீங்க?”
“என்ன உளர்ற?”
“நான் ஒண்ணும் உளரல… எம். எல். ஏ வழியாக வரவேண்டிய நிதி வந்தாத்தான கொடுக்க முடியும்? ஆனால் அப்படிப்பட்ட நிதி எதுவும் இங்க வரவே இல்லையே… ஆனால் பயனர்களுக்குப் போயிட்டதா பதிவு இருக்கு…ஒரு வேளை நீங்களே வீடுவீடா போய் டோர் டெலிவரி பண்ணிட்டீங்களா என்ன? ” நக்கலாகக் கேட்டான்.
“ஹலோ கலெக்டர் சார் பார்த்துப் பேசுங்க…
நான் இப்ப எம். எல். ஏ வே கிடையாது… “
“நீங்க மட்டுமில்ல யாருமே கிடையாது… ஜெயிச்சவரை தான் ரிசைன் பண்ண வச்சுட்டீங்களே… ஸாரி… ஸாரி… உடல் நலக்குறைவுனால ரிசைன் பண்ணிட்டாரே…
அவர் ஒரு மாசம் கூட எம். எல். ஏ வா இல்ல…
ஆனால் ரெக்கார்ட்ஸ் வருடக்கணக்கில் இருக்கு….
நீங்க தான அப்பல்லாம் எம். எல். ஏ வா இருந்துருக்கீங்க மாண்புமிகு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களே…”
அவர் திகைத்துப் போய் அமர்ந்திருக்க, அவன் தொடர்ந்தான்.
“இடைத்தேர்தல் வேற சீக்கிரமே வரப்போகுதாம்மே… இதையெல்லாம் என்ன பண்ணலாம்? எங்க அனுப்பலாம்?… கோர்ட்ல கேஸ் பைல் பண்ணலாமா? இல்ல எலெக்ஷன் கமிஷனுக்கு அனுப்பலாமா? இல்ல சார் பயப்படவே பயப்படாத பத்திரிக்கைக்கு அனுப்பலாமா?”
அவன் தீவிரமாக யோசிப்பது போல, சத்தமாக உரைக்க அவர் வயிற்றில் புளியைக் கரைப்பது போல இருந்தது…
எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அருணாச்சலத்தை,
“அண்ணா என்னண்ணா பண்றீங்க? என்னன்னு கேளுங்கண்ணா…” எனத் தூண்டிவிட்டார்.
ஆனால் அவர் கேட்டதில் இவர் நொந்து போனார்.
“நீ என்னோட பையன் அரசுதான?”
வேறு எதையோ எதிர்ப்பார்த்திருந்த அருளாளனும் இதைக்கேட்டு ஸ்தம்பித்தான்.
(தொடரும்….)
(அமியை மிஸ் பண்றீங்கல்ல… நானும்தான்ப்பா 🙌🙌🙌🙌
சீக்கிரம் வந்துருவா…)
Acho kandu pidichitane
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️