Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 27

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 27

ஒருகணம் திகைத்தாலும் பின்சுதாரித்தவன் “என்ன?” என்றான்.
அந்தக் குரலின் அழுத்தமும் அவனது கூரிய பார்வையும் அருணாச்சலத்தையும் ஒரு கணம் தயங்க வைத்தது.

“இல்ல என்பையன் சின்ன வயசுல தொலைஞ்சு போயிட்டான். பேரும் அருள்தான்… அருளரசன்… வயசும் உன்…உங்க வயசுதான் இருக்கும்.அதுதான் கேட்டேன். “

“வயசுல பெரியவங்க நீங்க…
ஒருமையிலேயே கூப்புடலாம்… ஆனால் ஸாரி என்னோட பேரு அருளரசன் இல்ல… அருளாளன்.”
டென்த் சர்ட்டிபிகேட்டில் கவனக்குறைவாக பேரை மாற்றி எழுதித்தொலைத்திருந்த ஆசிரியருக்கு இப்பொழுது மானசீகமாக நன்றி சொல்லிய படி சொன்னான் அவன்.

( ஆசிரியர் குறிப்பு : சகோக்களே,
உடனே விவேகன் பெயரை மாத்திச் சொன்னதாகச் சொன்னானேன்னு கேட்கப்படாது. அதுக்குரிய விளக்கம் பின்னால் வரும்.)

“உன் குடும்பம்… “அப்பொழுதும் விடாமல் இழுத்தார் அவர்.

“எங்கப்பா பேரு வெற்றி, எங்கம்மா பேரு வாணி, எனக்கு மேகலை,விவேகன்னு ஒரு தங்கச்சியும் தம்பியும் இருக்காங்க…” என்றவன் நாகாபரணத்திடம் நீங்க கொடுத்ததா சொல்லச்சொல்லிருக்க பஃண்ட் இங்க நிஜமாகவே வந்தாகணும். இல்லன்னா பின்விளைவு எப்படி இருக்கும்ன்னு தெரியாது. இப்ப நீங்க கிளம்பலாம் எனக்கு வேற வேலையிருக்கு.” அவன் வாயிலைக் காட்ட, நாகாபரணம் எரிச்சலுடனும் அருணாச்சலம் யோசனையுடனும் வெளியேறினர்.

“மிஸ்டர் கோஸ்ட் “

அமிழ்தா அழைக்க, மென்மையாகப் பிடித்திருந்த அவளது கையை விட்ட அருள் என்ன என்பது போல அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.

“எனக்குக் கொசுவர்த்தின்னா அலர்ஜி…”
இதை இப்பொழுது எதற்கு சொல்கிறாள் என்று புரியாமல் “ஏன்ப்பா கொசு எதுவும் கடிக்குதா?” என்று அவளைச் சுற்றிப் பார்த்தபடி கேட்டான் அவன்.

அவளோ வேப்பமரக்காற்று குளுகுளுவென்று வீச, காலாட்டியபடி ஹாயாகத்தான் அமர்ந்திருந்தாள்.

“கொசுத்தொல்லையெல்லாம் ஒண்ணுமில்ல.. கொசுவர்த்தித் தொல்லைதான் ஜாஸ்தியா இருக்கு…”

அவனுக்கு இன்னமும் அவள் என்ன சொல்கிறாள் எதைச் சொல்கிறாள் எதற்குச் சொல்கிறாள் என்று புரியவில்லை…

“புரியல…”

“திண்டிலிருந்து பட்டெனக் கீழே குதித்தவள், தெரியாத்தனமா உன்கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்டுட்டேன் அதுக்குன்னு இப்படி கையைப் பிடிச்சு ரீல் சுத்திக் காட்டிட்டு இருக்க… நீ ரெண்டு வருஷம் இந்த ஊர்ல வேலை பார்த்துருக்க… இப்பதான் ஒரு வாரக்கதையே போயிருக்கு… அவ்வளத்தையும் இப்படி சீன் பை சீனாக் காட்டுனன்னா தாங்க மாட்டேன்…”

அவளை ஒரு முறை முறைத்துவிட்டு ” நீ கேட்டன்னுதான் பண்ணேன். உனக்குத் தேவையில்லன்னா எனக்கும் அவசியமில்ல…” என்று அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினான் அவன்.

“ஹலோ, தேவையில்லன்னு யார் சொன்னது? இந்த ஊர்ல வேலையை ஒழுங்கா பார்த்த ஒரே கலெக்டர் நீங்க மட்டும் தான்.
அதனால அஸ் அ கொலிக்கா நீங்க என்னென்ன பண்ணீங்கங்கற விஷயம் எனக்குத் தேவைதான் ஆனால் இவ்வளவு லென்த்தியா வேண்டாம்.
ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா… ஷார்ப் அன்ட் ஸ்பைசியா சொன்னாப் போதும். “

அவன் கடுப்பாய் முறைக்க, அவள் திருதிருவென்று விழித்தாள்.

“இது என்ன? குழந்தைகளுக்கான பெட் டைம் ஸ்டோரியா? ஸ்வீட்டா இருக்கறதுக்கு… இல்ல ஸ்பைசியா இருக்க ஏதாவது லவ், ஆக்ஸன் ஸ்டோரியா?
நான் என்னைப் பெத்த தகப்பன் கையால செத்த கதை. இது உனக்கு எப்படிஎப்படி? ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா ஷார்ப் அன்ட் ஸ்பைசியா இருக்கணுமா?”
கேள்விகள் கோபமாய்க் கேட்பது போல இருந்தாலும் உண்மையில் அவனது குரலில் கோபம் இல்லை.

“ஐயோடா சார் கோபப்டுறீங்களாக்கும்…உன்னால நான் பார்த்த பேய்ப்படங்கள்ல இருந்த பேய்களோட மதிப்பெல்லாம் சேர்ந்து போய்க்கிட்டு இருக்கு… என்ன லுக்கு… நீ உன்னைக் கோபக்காரன்னு சொல்லி என்னைப் பயமுறுத்தனப்பவே எனக்கு லைட்டா டவுட்டு வந்துச்சு கோபத்துக்கும் உன் மூஞ்சிக்கும் சம்பந்தமே இல்லையேன்னு.”

“அப்படியெல்லாம் நினைச்ச மாதிரி தெரியலையே… பயந்து நடுநடுங்கின மாதிரில்ல தெரிஞ்சுச்சு… ஒரு வேளை அது வேற யாரோவோ…” என்று சுற்றும்முற்றும் பார்த்தான் நக்கலாக வினவியபடி.

“என்ன அமி உன்னைப் பேய்லாம் கலாய்க்குது. அது சரி அவன் முதல்ல இருந்தே அதுதான பண்ணிகிட்டு இருந்திருக்கான். நமக்குத்தான் தெரியல… சரிசரி விடுவிடு… “தனக்குள் பேசியவள்,
உனக்குப் பசிக்குமா? என்று அவனிடம் கேட்டாள்.

“லூசு… நான்தான் செத்துட்டேன்ல அப்பறம் எப்படி பசிக்கும்? பசி தாகம்லாம் எடுக்காது. “

“அப்பறம் இந்தப் பாசம், கோபம்லாம்? அது மட்டும் செத்தப்பறம் வருது?”

“மேடம் அமிழ்தா ஞானசேகரன். பசிதாகம் எல்லாம் உடலோட உணர்வுகள் அதெல்லாம் உடலோட போயிருச்சு.
ஆனா இந்தப் பாசம், கோபம், வருத்தம்…காதல் இதெல்லாம் உயிரோட உணர்வுகள்.
உயிர் உடலை விட்டுப் பிரிஞ்சாலும் அது உயிரை விட்டுப் பிரியாமத்தான் இருக்கும்… “

“ஓ…”உதடுகளைக் குவித்தவள் ” பட். யு நோ வன் திங். என்னோட உயிர் இன்னும் பிரியல…” என்றாள்.

“அதுக்கென்ன? பிரிக்கணுமா?” இதழ்களில் புன்னகையை அடக்கியபடி கேட்டான்.

‘அடேய். இப்பதான உன்னை ஹார்ம்லெஸ்ன்னு நினைச்சேன். அதுக்குள்ள என் உசிர எடுக்கப்பார்க்குற… ‘

அவன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே சிரிக்க, அவள் தொடர்ந்தாள்.

“அதனால எனக்குப் பசிக்கும்.”

“ஆனா மணி ஆறரைதான ஆகுது…”

“மணி ஆறரைதான் ஆனா உள்ள ரெண்டு ஏழரை இருக்கு. என் கூடப்பிறந்தது ஒன்னு. உன் கூட வளர்ந்தது ஒன்னு. அந்தக் கெங்கம்மா அக்கா வேற அப்படியே போய் செட்டில் ஆகிருச்சு. சோ நான்தான் போய் சமைக்கணும்.”

“இடத்தைக் காலி பண்ணுன்னு இன்டைரக்டா சொல்ற அப்படித்தான” என்றுவிட்டு அவன் மறைவதற்காக கண்களை மூடப்போக “இல்ல இல்ல” என்றாள் அவள் வேகமாக.

“என்ன டைரக்டாதான் சொன்னேன்னு மொக்கையா கலாய்க்க போறியா “என்றான் அருளாளன்.

“சை இல்ல… அது வந்து… அது வந்து…” அவள் தயங்க, “என்னன்னுசொல்லித்தொலை…”

“நான் சப்பாத்தி நல்லா செய்வேன்.”

“சரி அதுக்கென்ன? “

“ஆனா சப்பாத்தி மட்டும்தான் நல்லா செய்வேன்.”

“ஆங்? “அவன் நகைக்க ஆரம்பித்தான்.

“ஆமாம் டிரைனிங் பீரியட்ல நார்த் இந்தியா தான…
சோ சப்பாத்தி மட்டும்தான் தேவைப்பட்டுச்சு…
அதனால அதை மட்டும் கத்துக்கிட்டேன். இப்பவே ஒருவாரமா விதவிதமா சப்பாத்தி மட்டும் தான் போட்டுட்டு இருக்கேன். காலையிலயும் மதியமும் சந்தனாவே நான் வேலைக்குப் போறேன்னு சமைச்சுருறா… அதனால பிரச்சனை இல்ல…
ஆனா இன்னைக்குக் கால்ல விழுகாத குறையா ரெண்டும் கதறிருச்சுங்க… சப்பாத்தி மட்டும் வேண்டாம்ன்னு…
சோ பிளீஸ் ஹெல்ப் மீ…”

அவன் இன்னும் சிரிப்பதை நிறுத்தவில்லை… நகைத்தவாறே இவ்வளவு நேரம் அவள் அமர்ந்திருந்த திண்டில் அமர்ந்தவன் சிரிப்பைக் குறைத்து அவள் இவ்வளவு நேரம் செய்து கொண்டிருந்ததைப் போலவே விளையாட்டுப் போக்கில் கால்களை ஆட்ட ஆரம்பித்தான்.

பின்,” கண்கள் மட்டும் சிரிக்க, நான் என்ன அலாவுதீன் அற்புத விளக்குப் பூதமா? உனக்கு உதவி தேவைப்படுறப்பல்லாம் விளக்கைத் தேய்ச்சு தேய்ச்சு மைடியர் கோஸ்ட்ன்னு ஹெல்ப்புக்குக் கூப்புட?” என்றான்.

‘பயபுள்ள நாம சொன்னதை அப்படியே சொல்லுதே’. மனதில் நினைத்தவள்,
” பேய்ன்னா தன்னைக்கொன்னவங்களைப் போய்ப் பழிவாங்கணும்… இப்படி ஒரு பச்சமண்ணு அறியாம தெரியாம சொன்னதெல்லாம் மனசுல வச்சகிட்டு சொல்லிக்காட்டிப் பழிவாங்கக் கூடாது.”

“எங்கப்பா அந்தப் பச்ச மண்ணு… எனக்கு இங்க இருக்குற எந்த மண்ணும் பச்சையாத் தெரியலையே… மண்ணு கலர்ல தான தெரியுது…”

“மிஸ்டர் கோஸ்ட் பிளீஸ்… “

“சரி சரி வந்துத்தொலை…”

உண்மையில் அவனது பழைய நினைவுகளில் ஆழ ஆழ அவளுக்குத் தாங்க இயலா வலி கூடுவது போல இருந்தது.
அவன் சிறுகுழந்தைகளோடு சிறுகுழந்தையாக மாறி விளையாட்டாகப் பேசி அவற்றைக் கொஞ்சியபோது அவனது முகத்தில் இருந்த வசீகரமும் களையும் அவனைக் கொஞ்சத் தூண்டியது.
அது அவன் உயிரோடு இருந்திருக்கலாமே என்னும் ஆற்றாமையைத்தான் கூட்டியது. அதிலும் அருணாச்சலம் நீ என்மகன் தானே என்று கேட்ட பொழுது இவன் சொல்லியிருக்கலாமே என்று மனம் துடித்தத்துடிப்பில் தான் அதனை நிறுத்தினாள்.
ஆனால் அவனைப் பிரியவும் மனம் இல்லை. அவன் தனியாக இருந்து அந்த நினைவுகளில் ஆழத் தொடங்கிவிட்டால்? அதனால் தான் சப்பாத்தி மேலும் சந்தனா மேலும் பழியைத் தூக்கிப்போட்டு
(அது உண்மையும் கூட) அவனைத் தன்னுடனே அழைத்துச் சென்றாள்.

இருவரும் சமையலறைக்குச் செல்ல அவன் அங்கிருந்த மேடையில் அமர்ந்தான்.

“இப்படி உட்கார்ந்தா எப்படி?”

“ஹலோ மேடம்… சமைச்சுல்லாம் தரமுடியாது. நான் சொல்றேன் சொல்ல சொல்ல சமைச்சுக்கோ…”

“ஆங்? “

“இது கூட ஆப்ஷனல் தான். வேணும்ன்னா பண்ணலாம். இல்லன்னா நான் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்கேன். நீ சப்பாத்தியே துணைன்னு போய்க்கிட்டே இரு…”

வேகமாகத் தலையாட்டியவள் “வேண்டாம் வேண்டாம் பேய் சாரே துணை…
நீங்க கைட் பண்ணாலே போதும்… தங்கள் சித்தம் என்பாக்கியம்…”என்றாள்.

“அது சரி, எனக்குச் சமைக்கத்தெரியும்ன்னு உனக்கு யார் சொன்னது? “

“அதுவா…நேத்து யூடியுப் பார்த்து ஒரு சன்னா மசாலா டிரை பண்ணேன்.
பார்க்க என்னவோ நல்லா வந்த மாதிரி தான் தெரிஞ்சது…
ஆனா சாப்பிடத்தான் முடியல…
அரைச்சு ஊத்தின எதுலயும் பச்சை வாசனைப் போகவே இல்ல…
பாவம் விவேகன்… அதை எடுத்து வாயில வச்சுட்டு எங்கண்ணன் சூப்பரா சமைப்பாருன்னு சொல்லி அப்படியே கண்கலங்கிட்டான். சந்தனா தான் அவங்க அண்ணன் இறந்து போயிட்டாரு அதனால கண்கலங்கறான்னு என்கிட்ட சொன்னா… நானும் அப்ப அவன் அருணாச்சலத்தோட பையன்னு நினைச்சுருந்ததால அந்த அண்ணனை வளர்த்த இடத்துல இருந்த மூத்தப்பையன்னு நினைச்சு சும்மா இருந்துட்டேன். இன்னைக்கு நீங்க சொல்லவும்தான் அது நீங்க தான்னு தெரிஞ்சுச்சு…”

“இதுக்குப் பேசாம உன் தங்கச்சிட்டயே நைட்டும் சமைக்கச் சொல்லிரலாம்ல…”

“சொல்லிரலாம்… ஆனா என்னை வச்சு செய்வா… சப்பாத்தியை வச்சு அவகிட்ட நான் என்னமோ மாஸ்டர்செப் ரேஞ்சுக்கு சீன் போட்டு வச்சுருக்கேன்… நேத்தே அது புஸ்ஸீன்னு போயிருக்கும்.ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்சுட்டேன்…அதான்.”

“சரி சரி என்ன செய்யப் போற…”

“ம்ம்… வெண்பொங்கல் செய்யலாமா? காலேஜ் படிக்கறப்ப நான் செஞ்ச வெண்பொங்கல் களிக்கும் பசைக்கும் இடைப்பட்ட பதத்தில வந்துருச்சு… அதை வச்சுதான் இன்னமும் என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பா சோ… வெண்பொங்கல்- சாம்பார்.”

“சரி… முதல்ல துவரம்பருப்பை எடுத்துக் களைஞ்சுட்டு மஞ்சள்தூளும் பெருங்காயமும் போட்டு தண்ணீ ஊத்தி ஒரு குக்கர்ல வேகவை.”

“அளவு?”

ஒரு குறிப்பிட்ட தம்ளரைக்காட்டினான்.

அளந்து அவன் சொன்னபடி செய்தாள்.

“குக்கர் டயர் சரியா இருக்கான்னு பார்த்துட்டு பூட்டு. இல்லன்னா அது வெடிச்சு நீயும் என்கூட துணைக்கு வந்துருவ…”

“என்னை உன்கூட கூட்டிட்டுப் போறதிலயே குறியா இருடா…”

“என்னது?”

“ஒண்ணுமில்ல பேய்சார் அடுத்து என்ன பண்ணனும்?”

“புளியை ஊறவை…”

“அளவு?”

“காட்டு…ம்ம்… போதும்… அடுத்து நெய், மிளகு, சீரகம், கருவேப்பிலை, பச்சரிசி, பாசிப்பருப்பு இதெல்லாம் எடு. “

அவள் எடுத்து வந்ததைச் சரி பார்த்தவன், அரிசியைப் பார்த்துவிட்டு அவளை ஒரு பார்வை பார்த்தான்.

“என்ன பேய் சார்?
இதுல பொங்கல் நல்லா வராதா?”

“சேச்சே பொங்கி பொங்கி வரும்…”

“ஆங்?”

“இது இட்லி அரிசி… இதுல செஞ்சன்னா பொங்கல் வராது நல்லா பொங்கின மாவு வரும். எடுத்து தோசை ஊத்தி சாப்பிடு””

“ஹிஹி… “அசடு வழிந்தவள் மாறிமாறி இரண்டு அரிசியை எடுத்துக்காட்டி வாங்கிக்கட்டி விட்டு சரியான அரிசியை எடுத்தாள்.

பருப்பு அளந்த தம்ளரை விட கொஞ்சம் பெரிய சைஸ் தம்ளரை எடுக்கச் சொன்னான்.

எடுத்தாள்.

“அதுல முக்கால் பங்கு அரிசியும் கால் பங்கு பாசிப்பருப்பும் போட்டு நிறைச்சு அளந்து பாத்திரத்தில போட்டு ஓரமா வை.”

“ம்ம். அதே தம்ளரைக் கழுவிட்டு அதுல ரெண்டரை பங்கு தண்ணீரை அளந்து இன்னொரு பாத்திரத்தில எடுத்து வை.”

செய்தாள்.

“பருப்பு 5 விசில் அடிச்சுருச்சு… இறக்கு..”

“ம்ம்…”

“இப்ப இன்னொரு குக்கரை எடுத்து அடுப்புல வை…”

“நெய்யை ஊத்து. “

“மிளகு,சீரகம், கருவேப்பிலையைப் போடு.
ம்ம். நல்லா பொரிஞ்சுருச்சு.அளந்து வச்ச தண்ணியை ஊத்து.
தண்ணி கொதிக்கிறதுக்குள்ள அளந்து வச்ச அரிசி பருப்பைக் களைஞ்சுட்டு வா…”

வந்தாள்.

“போடு.”

போட்டு விட்டு, குக்கரை மூடப் போனாள்.

“ஏய் உப்பு போடல… “

“சாரி, சாரி… அளவு?”

“காட்டு… ம்ம்…. போதும்… இப்ப மூடியைப் போடு…”

“ஆவி வரவும் விசில் போட்டு மூணு விசில்ல இறக்கு…”

“நீங்க ஆல்ரெடி இங்கதான இருக்கீங்க மிஸ்டர் கோஸ்ட்…”

அவன் முறைக்க கீழே குனிந்து சாம்பாருக்கு எடுத்து வைத்தக் காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்.
அவன் ஒவ்வொன்றாகச் சொல்லச்சொல்ல சாம்பாரையும் செய்து முடித்துக் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும் சந்தனா வரவும் சரியாக இருந்தது…

“ம்ம்ம்… “கமழ்ந்து கொண்டிருந்த மணத்தை முகர்ந்தவள், “அக்கா வாடையே சூப்பரா அடிக்குது… நான் கூட உன்னை என்னமோன்னு நினைச்சேன் நீ வேற லெவல் போ…”

“அதெல்லாம் அக்காவோட கைமணம் அப்படி ” என்க, அமர்ந்திருந்தவன் அவளைக் கேவலமாகப் பார்த்தான்.

அதில் சடாரென இந்தப்பக்கம் திரும்பியவள், “சரிசரி நீ போய் விவேகனைச் சாப்பிடக் கூட்டிட்டு வா…” என்றாள்.

அவள் செல்லவும் “தேங்க்யூ சோமச் மிஸ்டர் கோஸ்ட் “என்றாள்.
புன்னகைத்தவன் ” நன்றி நான்தான் சொல்லணும்.”

“எதுக்கு?”

அவளது கேள்விக்குப் பதில் சொல்லாமலே “சாப்பிட்டுட்டு மாடிக்கு வா” என்று விட்டு மறைந்து விட்டான் அவன்.

சந்தனாவிடம் ஏதோ வம்பிழுத்தபடி அமர்ந்திருந்த விவேகன் தட்டில் பரிமாறப்பட்ட வெண்பொங்கலைக் கண்டதும் அப்படியே தட்டைத் தள்ளினான்.

‘அய்யோ பாவம் பிள்ளை நேத்துப் பண்ண சன்னா மசாலால ரொம்ப பயந்துருச்சோ…’ அமிழ்தா மனதுள் எண்ணமிட,
அக்கா செம… செம…வேற லெவல் டேஸ்ட் ” என்று சொல்லிக்கொண்டிருந்த சந்தனா திகைத்து “என்னாச்சு விவேக்” என்றாள்..

“ஒண்ணுமில்ல சந்து… எனக்குப் பொங்கல் வேண்டாம். மதியம் வச்ச சோறு எதுவும் இருக்கா என்ன? “என்றான்.

“பயப்படாத விவேகன் நேத்து சன்னா மசாலா மாதிரில்லாம் இருக்காது பயப்படாம சாப்பிடு “என்றாள் அமிழ்தாவும்.

“அதில்லக்கா… நான் வெண்பொங்கல் சாப்பிடமாட்டேன்.நான் சின்ன வயசுல இருந்தே எங்கம்மா பண்ற பொங்கலைக் கூட சாப்பிட மாட்டேன். எந்த ஹோட்டல்லயும் சாப்பிட மாட்டேன்.”

“ஏன் பிடிக்காதா?”

“இல்ல ரொம்பப் பிடிக்கும்… “

“புரியலை. சாப்பிட மாட்டேன்ங்கிற… பிடிக்கும்ங்கற… ” இருவரும் குழப்பமாகப் பார்க்க,

“இல்லக்கா எனக்குப் பொங்கல் ரொம்பப் பிடிக்கும்… ஆனா அது எங்க அண்ணன் செஞ்சா மட்டும்தான். அந்த டேஸ்ட் வேற யார் செஞ்சாலும் வராது… பிளீஸ்… வேற ஏதாவது மதியம் வச்ச சாதம் அந்த மாதிரி இருந்தா தாங்க…”

“ஆனா இன்னைக்கு எதுவும் இல்லையே விவேக்….”

“அப்ப பரவால்ல… நான் காலையில சாப்பிட்டுக்குறேன். அவன் எழப்போக, விவேகன் பிளீஸ் உங்க அண்ணன் கண்டிப்பா உங்க கூடவே தான் இருப்பாரு…நீ இப்படி சாப்பிடாம போனேன்னா அதைப் பாக்குற உங்க அண்ணனுக்கு சந்தோஷமாவா இருக்கும்… தயவு செஞ்சு சாப்பிடு… இன்னொரு தடவை வெண்பொங்கல் செய்யல… இப்ப சாப்பிடு பிளீஸ்…”என்று அவனை அமர வைத்தாள் அமிழ்தா.

அவன் ஒருவாறு அமர்ந்து விட்டான். ஆனால் உணவை அளைந்தானே தவிர ஒருவாய் கூட எடுத்து உண்ணவில்லை.
சந்தனாவிடம் கண்காட்டிவிட்டு வேறுபேச்சை மாற்றினாள்.
இருவரும் எங்கெங்கோ சென்று வந்தார்கள்.
ஆனால் அவன் தட்டையே தான் வெறித்துக் கொண்டிருந்தான்.
தன் அண்ணனோடு செலவிட்ட சுகத்தருணங்கள் அவன் நினைவில் நிழலாடுகின்றன என்பது புரிந்தது.

பேச்சுமாற்று முயற்சியின் ஒருபகுதியாக நினைத்து, “அக்கா பொங்கல்ல முந்திரிப்பருப்பு போடலையா?”.என்றாள் சந்தனா.

“முந்திரிப்பருப்பா வெண்பொங்கல்லயா? போடுவாங்களா? யாருக்குத் தெரியும் ?” என்று மனதில் நினைத்தவள் விவேகனைக் கண்காட்டி ‘அதையே பேசுகிறாயே’ என்று சமாளித்தாள்.

சந்தனாவும் அதை உணர்ந்து வேறு பேச்சிற்குத் தாவ, “இப்ப என்ன சொன்ன?” என்றான் விவேகன்.

“ஸாரி விவேக்…”

“ச்ச்…என்ன சொன்ன?”

“முந்திரிப்பருப்பு போடலைன்னு…”

“அக்கா நீங்க முந்திரிப்பருப்பு போடலையா?”

‘முந்திரிப்பருப்பு தானடா போடல… என்னமோ முதலமைச்சர் சைன் போடலங்கற மாதிரி மாறிமாறி கேக்குறீங்களேடா’ என்று மனதில் நினைத்தவள்,’ இல்லை ‘என்று தலையாட்டினாள்.

இவ்வளவு நேரம் உணவை அளைந்து கொண்டிருந்தவன் ஒருவாய் எடுத்து உண்டு பார்த்தான்.
தன்னையே நம்ப இயலாதவன் போல ஒருகணம் திகைத்தவன் மீண்டும் இரண்டு வாய் வேகமாக எடுத்து உண்டு பார்த்தான். அவனையறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட அமிழ்தாவைப் பார்த்து ‘ரொம்ப தேங்க்ஸ்கா’ என்றவன் ஆசைஆசையாக உண்பதில் முனைய, அருள் எதற்கு நன்றி சொல்லிச் சென்றான் என்பது அவளுக்குப் புரிந்தது.

ஆனால் சந்தனா ஒன்றும் புரியாமல் அவனையே பார்க்க, விவேகன் அவளைப் பார்த்து அசட்டுச் சிரிப்பொன்றை உதித்து விட்டு,” எங்கண்ணனும் முந்திரிப்பருப்பு போட மாட்டான், அந்த டேஸ்ட் எனக்குப் பிடிக்காதுன்னே… அதனாலதான் சாப்பிட்டுப் பார்த்தேன். ஆனா இது கண்டிப்பா நான் எதிர்ப்பார்க்கவே இல்ல… எங்கண்ணனே வந்து சமைச்சுக் கொடுத்த மாதிரி இருக்கு” என்றான் நெகிழ்ச்சியாக.

‘சொன்னாலும் சொல்லலன்னாலும் அதுதானே உண்மை’
என்று மனதில் நினைத்த அமிழ்தா உண்பதில் கவனத்தைச் செலுத்தினாள்.

பாத்திரங்களையும் சமையலறையையும் மூவரும் இணைந்து சுத்தப்படுத்திவிட்டு சற்று நேரம் கழித்து அமிழ்தா மாடிக்குச் சென்றாள்.

அங்கு மாடிக் கைப்பிடிச்சுவரில் அமர்ந்து கைகளைக் கட்டியவாறு வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் அருளரசன்.

“என்ன மிஸ்டர் கோஸ்ட் எப்ப சொர்க்கத்துக்குப் போகலாம்ன்னு பார்க்குறீங்களா?” என்றாள் அவனது அருகில் வந்து நின்றவள்.

“இந்த பூமியை விட சொர்க்கமும் கிடையாது…நரகமும் கிடையாது அமிழ்தா…”

“அப்போ இறந்து போனவங்களாம் என்ன ஆவாங்க? எல்லாருமே உங்களை மாதிரிதான் மாறுவாங்களா?”

“இல்லப்பா… ஒவ்வொருத்தரோட பிறவிக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம் இருக்கும்… அதை முழுமையாக வாழ்ந்து முடிச்சவங்க இறந்தவுடனே அடுத்தப் பிறவி எடுப்பாங்க… முழுமையா வாழ்ந்து முடிக்காதவங்க ஆத்மா வடிவில அந்தக்காலம் முடியறவரைக் காத்திருக்கணும்.”

“உங்களுக்கு… உங்களுக்கு எவ்வளவு காலம் இருந்தது?”

“எழுபத்தெட்டு… “அவன் அமைதியாகச் சொன்னான்.

“நீங்க இறக்கறப்ப உங்க வயசு?”

“இருபத்தாறு… “இதுவும் அமைதியாகத்தான் வந்தது.

“இப்ப ரெண்டு வருஷம்…அப்ப…
நீங்க இன்னும் ஐம்பது வருஷம் இப்படி ஆத்மாவா இருக்கணுமா?”

“ம்ம்… “அதே சலனமற்ற அமைதி…
அவனுடைய அந்த அமைதியில் அவள் பிரளயமாக வெடித்தாள்.

” ம்ம்? என்னம்மோ பெரிசா சொன்னீங்க? உங்க அப்பா. அதான்… உங்க அரூ..ணா தன் பையன் என்ன சொன்னாலும் கேட்பாருன்னு…
போய்ச் சொல்லித் தொலைச்சிருக்க வேண்டியதுதான…
நானா இருந்தா இறங்குன உடனே நேரடியா போய் நான்தான்யா உன் பிள்ளை உன் கூட வரணும்ன்னா விட்டுத்தொலைன்னு ஒரு பெரிய லிஸ்டே போட்டுருப்பேன்.
நீ என்னன்னா லூசு மாய்க்கானா அந்தாளு கையாலயே செத்துத் தொலைச்சுருக்க… சரி கொலை பண்ணக் கூப்புடுறாய்ங்கன்னு தெரியலை…
அங்க போய்ட்ட…
உங்கப்பன் அடிக்கும் போது திரும்பி அடிக்க வேண்டாம் யாருன்னாலும் பாசம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் வாய்ல என்ன கொழுக்கட்டையா வச்சுருந்த சொல்லித்தொலைச்சுருக்க வேண்டியதுதான நான் தான் உன் அருமை மகன்னு…கொலை பண்ற வர வேடிக்கை பார்த்துட்டு இருப்பியா?”

விரக்தியும் வெறுமையும் கலந்து சிரித்தவன், பின் சொன்னான்.

“கொலை பண்ணக் கூப்புடுறாங்கன்னு தெரியாமல்லாம் போகல அமி… சொல்லப்போனா… அருணா என்னைக் கொலை பண்ணவே கூப்புடல… நான்தான் கொலை பண்ண வச்சேன்.”

(தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 27”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *