Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28

கண்களில் சாந்தம் மின்ன சொன்னவனை அமிழ்தா மேலும் கீழும் பார்த்தாள்.

என்ன? அவன் கேள்வியாக நோக்க,
“இல்ல நீ செத்துப்போறதுக்கு முன்னாடி ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டியா என்ன?” என்றவள்
அவனுடைய முறைப்பை எதிர்ப்பார்த்தாஎதிர்ப்பார்த்தால்  அவன் அதே நிர்மலமான பார்வையைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

அதில் மேலும் கடுப்பானவள் “டேய்…பைத்தியம் கூட இப்படில்லாம் பண்ணாது… உங்கப்பா என்ன தப்பு பண்ணிருந்தாலும் சொல்லிப் புரிய வச்சுருக்கணும்… இல்லன்னா போயான்னு உதறிட்டுப் போயிட்டேயிருந்திருக்கணும். அதை விட்டுட்டு உசிரக் கொடுத்து வச்சுருக்க… எனக்கு அப்படியே கோபம் கோபமா வருது… அதை விட வாயில கெட்டக்கேவலமா வருது…ஏதாவது சொல்லிர போறேன்… ஒழுங்கு மரியாதையா போயிரு…”
எனத் திட்டியே விட்டாள்.

“சரி “என்று தோள்களைக் குலுக்கியவன் கண்களை மூட, அவள் அவனது கையைப் பிடித்திருந்தாள்.

“டேய் இருடா… போன்னா போயிருவியா… உன்னெல்லாம் பெத்தாங்களா… இல்ல பிரோகிராம் பண்ணி செஞ்சாங்களா? ஏன்டா இப்படி இருக்க? கோபப்பட்டா ஒண்ணு சமாதானப்படுத்து இல்லன்னா பதிலுக்குக் கோபப்படு… அன்னைக்கு என்னவோ பெரிய இவனாட்டம் நான் பெரிய கோபக்காரன்ன… அதெல்லாம் புருடாதானா? “

அவள் பாவமாகக் கேட்க,
மெல்லப் புன்னகைத்தவன்,
“நான் சொன்னது உண்மைதான் அமிழ்தா… நான் கோபக்காரன்தான். ஆனா அந்தக் கோபம் எல்லா நேரத்துலயும் வர்ற கோபம் கிடையாது. எப்பவாவது வர்ற கோபம். எப்பவாவது வர்றதுனாலயே அதோட வீரியம் ஜாஸ்தியா இருக்கும் எதிர்க்க இருக்கறவங்களால தாங்க முடியாத அளவுக்கு… இந்த விஷயத்துல நான் அப்படியே எங்கப்பா மாதிரி… அன்னைக்குக் ரெண்டு பேருக்குமே அந்தக் கோபத்தோட அளவு கட்டுக்கடங்காம இருந்தது. அந்தக் கோபத்துல தான் அப்படி பண்ணேன்…”

அவன் விண்ணையே பார்த்துப் பேசிக் கொண்டிருக்க, தானும் மேலே பார்த்தவள் அங்கு ஒன்றும் தெரியாமல் அவனை அழைத்தாள்.

“மிஸ்டர் கோஸ்ட்… “

“என்ன?”

“இதுக்கு நீ ரீலே சுத்திரு…புரியாத மாதிரியே பேசிச் சாவடிக்காத… முடியல…நீ எதுக்காகக் கோபப்பட்ட? உங்கப்பா எதுக்காக????
தலையும் புரியாம வாலும் புரியாம… கடுப்பாகுது…”

“நேரம் ஆகும் பரவாலையா? “

‘என்னை மட்டும் கரெக்டா பழிவாங்குடா’

‘என்ன? ‘

“ஒண்ணுமில்ல… பரவால்லன்னு சொன்னேன். “

அவளது கையைப் பற்றினான்.

**********************************************

“ஹலோ அண்ணா…”

“ஆங்… சொல்லுங்க நான் சொன்ன விஷயம் என்னாச்சு?”

“அந்தக் கலெக்டர் அருளாளனோட அப்பா பேரு வெற்றிண்ணே… டாக்டர்… அம்மா பேரு வாணி, டீச்சர். அருளாளன்தான் மூத்தப்பையன் அவனுக்கு அடுத்து மேகலைன்னு ஒரு பொண்ணு ஜர்னலிசம் செகண்ட் இயர் படிக்குது.அதுக்கடுத்து இன்னொரு பையன் பேரு விவேகன் 12ங்கிளாஸ் படிக்குறான். “

“நல்லா விசாரிச்சுப் பார்த்துட்டீங்களா?
நல்லா விசாரிச்சுட்டேண்ணே… அந்த டாக்டர் படிக்கறதுக்கு வெளிநாட்டுக்குப் போனவரு… அங்கேயே கல்யாணம் பண்ணி குழந்தைங்க எல்லாம் பிறந்துருக்காங்க… ரொம்ப நாள் கழிச்சுதான் ஊருக்கு வந்துருக்காரு… அப்படி அவர் வர்றப்பவே இந்தப்பையன் கூடத்தான் வந்துருக்கான் அவங்களோட மூத்தப்பையன்னா…எல்லாருமே இதைத்தான் சொல்றாங்க… இவன் நம்ம தம்பி இல்லைங்கண்ணே…”

“சரிப்பா வை…”

தொடர்பைத் துண்டித்துவிட்டு நாற்காலியில் பின்னால் சாய்ந்தார் அருணாச்சலம். மூடியிருந்த அவரது கண்களில் நிராசையும் ஏமாற்றமும் நிறைந்திருந்தது. இத்தனைக்கும் அவர் இதனை முதல் முறை கேட்கவில்லை.ஏறக்குறைய பத்துப்பதினைந்து பேரிடம் விசாரிக்கச்சொல்லியிருந்தார்.
அத்தனை பேரிடம் இருந்தும் இதே பதில் தான் வந்தது.
இதற்கு முன்பும் அவர் எத்தனையோ முறை அவருடைய மகனை எங்கெங்கோ தேடியிருக்கிறார்.
அத்தனை முறையும் எதிர்மறைப்பதில் தான் வந்திருக்கிறது. ஆனால் எப்பொழுதும் அவருடைய நம்பிக்கையை அவை குலைத்ததில்லை.
ஆனால் இன்று ஏனோ இவன் தன்னுடைய மகன் இல்லை என்பதை அவருடைய மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
இவன் இல்லையென்றால் தன்னுடைய மகன் கிடைக்கவே மாட்டான் என்று அவருடைய மனம் நம்பத் தொடங்கியதில் அவருடைய உள்ளத்தில் வெறுமை வியாபித்திருந்தது.
அந்த வெறுமை அருகில் வந்து நின்ற அவரது மனைவி அழைத்ததைக் கூடத் தாமதமாகத்தான் அவருடைய மூளைக்குக் கடத்தியது.
ஒரு வழியாக அழைப்பு சென்று விட மெல்லக் கண்களைத் திறந்தார் அவர்.

“என்னங்க அப்ப இருந்து கூப்புட்டுக்கிட்டே இருக்கேன். கவனிக்கவே இல்ல… உடம்புக்கு எதுவும் செய்யுதா என்ன?” அக்கறையாகக் கேட்ட மனைவியை நிமிர்ந்து பார்த்தார்.

பத்மினி வெளியே செல்ல தயாராகி நின்றிருந்தார். ‘வேறு எங்கே? அவளுக்கு மாலை நேரத்தில் பூங்காவில் மெல்ல நடக்கப் பிடிக்கும்… அதற்குத்தான் தயாராயிருப்பாள்… சொல்லிவிட்டுச் செல்லலாம் என்று வந்திருப்பாள். அவள் நிம்மதியாக இருப்பதே இந்தக் கொஞ்ச நேரம்தான் அதையும் மகனைப் பற்றிப் பேசிக் கெடுக்க வேண்டாம்’ என்று எண்ணியவர்
“ஒண்ணுமில்லம்மா லைட்டா தலைவலிக்குது… அவ்வளவுதான். தூங்கினா சரியாப் போயிரும்…நீ எங்கம்மா? பார்க்குக்குத் தான? “என்று கேட்டார்.

‘ஆமாங்க…”

“சரி பார்த்துப் போயிட்டு வா… “என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிப் பின்னால் சாய்ந்தவரை ஏனோ இன்று தனியாக விட்டுவிட்டுச் செல்ல மனம் வரவில்லை பத்மினிக்கு.

அவரை எழுப்பியவர் ” மேலே  போய்த் தூங்குங்க வாங்க.” என்றார்.

“நான் போய்த் தூங்கிக்குறேன்பா நீ கிளம்பு…

“இல்லைங்க எனக்கு இன்னைக்கு லைட்டா கால் வலிக்கிற மாதிரி இருக்கு. அதனால போகல… “

கிளம்பி நின்றபின் கால்வலி வந்ததன் ரகசியம் அருணாச்சலத்துக்கும் புரிந்தது. மனைவியின் அன்பில் மெல்லப் புன்னகைத்தவர் அறையில் சென்று படுத்தார்.
அவரது அருகில் அமர்ந்த பத்மினி ஒரு கையால் மெல்ல தலையைத் தடவிக் கொடுக்க, மனைவியின் மறுகையைப் பிடித்தபடி உறங்கத் தொடங்கியவரின் மனவலி சற்றுக் குறைவது போல இருந்தது.

*************

இருபத்தைந்தாவது முறையாக அந்தச் சிறிய பூங்காவைச் சுற்றி வந்தவன் அங்கிருந்த நாற்காலியில் தொய்வுடன் அமர்ந்து கைக்கடிகாரத்தைத் திருப்பி மணியைப் பார்த்தான்.
ம்ஹீம் அவர் வழக்கமாக வரும் நேரம் கடந்து போய் வெகுநேரம் கடந்திருந்தது.
வானமும் தன்முகத்தில் மெல்ல இருள் அரிதாரத்தைப் பூச தயாராகிக்கொண்டிருந்தது.
இரண்டு வாரங்களாகத் தாயை வெறுமனே கண்ணால் பார்க்க மட்டும் இந்;தப் பூங்காவிற்கு வந்துகொண்டிருந்த அருளாளன் இன்று எப்படியாவது தன்னுடைய தயக்கத்தைத் தாண்டி அவரிடம் பேசிவிட வேண்டும் என்று நினைத்திருந்தான்.

ஆனால் இன்று அவர் வரவில்லை. பெருமூச்சுடன் பின்னால் சாய்ந்து இருகைகளையும் அந்த நீளமான மூன்று நான்கு பேர் அமரும் நாற்காலியின் மேற்பகுதியில் விரித்தவன் கால்மேல் கால் போட்டு அமர்ந்து கண்களை மூடினான். ஒரு ஐந்து நிமிடங்கள் அவ்வாறு கடந்திருக்கும்.

அருகில் ‘அண்ணா ‘என்றொரு இளம்குரல் கேட்க, மெல்ல தலைநிமிர்ந்தவன், கைகளை முன்னுக்குக் கொண்டு வந்து கால்களை இறக்கினான். அங்கு நின்றிருந்த சிறுமியைக் கண்டு முகம் மலர “ஹேய் மாதவி மேடம்… எப்படி இருக்கீங்க…” என்றான்.
“நல்லா இருக்கேண்ணா… நீங்க…”

“சூப்பரா இருக்கேன் சரி நீங்க இங்க என்ன பண்றீங்க?”

“அங்க சாயங்காலம் வரைதாண்ணா பாட்டி இருப்பாங்க. அப்பறம் இங்கதான் வருவாங்க. நீங்க பார்த்ததில்லயா?”

அவன் எங்கே பார்த்தான் அவன் தாயைப் பார்க்க முடிவதே அரைமணிநேரம்… அதை வீணாக்க அவன் விரும்பியதில்லை.
அவன் கவனம் அவரைத் தவிர்த்து வேறு எங்கும் சென்றதில்லை.

“இல்லையேடா… “

“ஆனா நான் உங்களை தினமும் பார்ப்பேன்ண்ணா. “

“அப்படிங்களா மேடம் இன்னைக்குத்தான் வந்து பேசணும்ன்னு தோணுச்சா? அது சரி… நீங்க ஏன் பாட்டியை விட்டுட்டு இங்க வந்தீங்க?”

“வெளியே லைட் மஞ்சக்கலர்ல தானண்ணா இருக்கும். வெள்ளையா இருக்காதுலண்ணா…” இங்க இருக்குல்ல என்று சுற்றிலும் ஜொலித்த பிரகாசமான விளக்கைக் காட்டியவள் “அதனால உள்ள உட்கார்ந்து ஹோம்வொர்க் செஞ்சுகிட்டு இருந்தேன்.” என்றாள்.

“ஓ… அப்படியா சரிம்மா ஆனா எப்ப கிளம்புவீங்க?”

“இந்தப் பார்க் எட்டு மணிக்குத்தானண்ணா பூட்டுவாங்க அதுவரைக்கும் இருப்போம்.”

“அப்ப சாப்பாடு?”

“அதெல்லாம் வீட்டுக்குப் போய் மின்னல் வேகத்தில செஞ்சுருவோம்ல…”

அவள் சொன்ன மாடுலேசனில் சிரித்தவன் “என்னமோ நீங்களே செய்யுற மாதிரி சொல்றீங்க மேடம்?” என்றான்.

“நான்தான்ண்ணா செய்வேன்.”

“நீ சமையல் செய்வியா? அந்த ஏழாம் வகுப்பு சிறுமியை ஆச்சரியமாகப் பார்த்தபடிக் கேட்டான் அவன்.”

“ம்ம் ஆமாண்ணா பாட்டி பாவம்ல… அதுவுமில்லாம பழத்தைக் கொள்முதல் பண்ண விடியறதுக்கு முன்னாடியே போயிருவாங்க… அதனால எனக்குக் காலையிலயும் மதியத்துக்கும் சமைச்சுப் பழகிருச்சு… நைட்டும் பாட்டி கஷ்டப்படுறாங்கன்னு  பண்ண ஆரம்பிச்சுட்டேன்.”

அவனுக்கே முழுமையாக சமையல் கைவரப் பெற்றது கல்லூரிபடிக்கும் போதுதான். அதுவரை,
வெறுமனே தோசை, ஆம்லேட்,டீ,காபி,கஞ்சி இதுபோன்ற அரிச்சுவடிகள் தான் தெரியும். அது கூட பள்ளியின் இறுதிப்படிநிலைகளில்தான்.
ஆனால் இவள் இந்தச் சிறுவயதில் மூன்று வேளை முழுமையாகச் சமைப்பாளா?
என்று ஆச்சரியமாகப் பார்க்க, அவளோ அவனை ஒரு தயக்கத்துடன் பார்த்தாள்.

எதையோ கேட்கத் தயங்குகிறாள் என்பதைப் புரிந்தவன்” என்னடா ஏதாவது வேணுமா?” என்றான்.

“அது…. உங்களுக்கு மேத்ஸ் வருமாண்ணா?”

“நல்லாவே வரும்டா…”

முகம் பிரகாசமடைய ‘அப்ப எனக்குச் சொல்லிக்கொடுக்கிறீங்களா?” என்று கேட்க,
அந்தப்பிரகாசம் அவனது முகத்திலும் பரவ “சொல்லிக்கொடுக்கலாமே…” என்றுத் தலையசைத்தான் அருளாளன்.

“ஒரு நிமிஷம்ண்ணா பையை எடுத்துட்டு வந்துர்றேன் “என்று நடக்க மாதவி என்றழைத்தவன் “பொறு நான் வர்றேன்” என்று கூட நடந்தான்.

ஒரு மரத்தடியில் ஒரு பள்ளிப்பையொன்று கிடந்தது.
அதனை எடுத்தவள் “அண்ணா நான் இங்க உட்கார்ந்து தான் படிப்பேன் உங்களுக்கு அங்க சேர் தான் சரியா வரும்ன்னா அங்கேயே போலாம்…” என்றாள்.

அவளது கையிலிருந்து பையை வாங்கியவன் ” எனக்குக் கீழே உட்கார்ந்து படிக்கத்தான் பிடிக்கும். என்றபடி கீழே சம்மணமிட்டு அமர்ந்தான்.

“எனக்கும்…”

“ஹைஃபை”

“ஹைஃபை” என்று கைகளை அடித்தவள், கணக்குப் புத்தகத்தை எடுத்துப் பக்கத்தைப் பிரித்து இந்த சம்ண்ணா என்று ஒரு நோட்டையும் எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

புத்தகத்தில் இருந்த கணக்கைப் பார்த்தவன் நோட்டில் போட்டுப் பார்த்து விடையையும் சரிபார்த்தவன் அவளுக்குச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தான். சில நிமிடங்களில் புரிந்து விட, “என்னண்ணா இவ்வளவு ஈசியா இருக்கு… நான் எவ்வளவு நேரம் மண்டையைப் பிச்சுக்கிட்டேன் தெரியுமா?” என்று குதூகலித்தவளிடம் மேலும் சில பயிற்சிக்கணக்குக்களைக் கொடுத்து செய்யச்சொல்லி, சரியான விடைக்குப் பாராட்டும் தவறான விடைக்கு விளக்கமும் கொடுத்தான்.

பூங்காவிலுள்ள விளக்குகள் அணைக்கப்படத் தொடங்கவும் கிளம்பினர்.
புத்தகங்களை எடுத்துவைத்து விட்டு வெளியே நடக்கும் போது

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ண்ணா…”

“வெல்கம் மேடம்.”

“உங்களுக்கு நேரம் இருந்துச்சுன்னா தினமும் இப்படி சொல்லித்தரீங்களா?”

“சாயங்காலம் நான் வெட்டியாத்தான் இருப்பேன். ஸோ… கண்டிப்பா…”

“ஐ தாங்க்ஸ்ண்ணா சரி உங்க பேரு?”

“அருள்.”

“நீங்க என்னண்ணா பண்றீங்க? “

“அது…” அவன் சொல்லும்முன்னர் அவள் பாட்டி அழைக்க, “சரிண்ணா நாளைக்குப் பார்ப்போம்” என்று விட்டு ஓடிவிட்டாள்.

மறுநாளும் அவன் அதேபோல் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்க, மாதவி பயிற்சிக்கணக்குக்களைச் செய்யும்போதெல்லாம் அவனுடைய கண்கள் பத்மினியையே பின்தொடர்ந்து கொண்டிருந்தது…

போய்ப்பேசலாம்தான். ஆனால் மாதவியிடம் என்னவென்று சொல்லிவிட்டுப் போவது? அப்படியே போனாலும் போனாலும் அவரிடம் என்னவென்று சொல்வது? கண்டிப்பாக மகன் என்று சொல்ல முடியாது.அருணாச்சலம் பத்மினியிடம் சொல்லாத பல விஷயங்கள் உண்டென்றாலும் பத்மினியைப் பொறுத்தவரை அருணாச்சலம் அறியாததென்று அவரிடம் ஒன்றுமில்லை. திடீரென்று போய் நிற்பது போல் இல்லாமல் இயல்பாகப் பேச்சுக்கொடுப்பது போல வேறு ஏதாவது பேச வேண்டும்…. ஆனால் அதை இப்பொழுது எப்படி செய்வது என்று தெரியாமல் அவன் உழன்றுக்கொண்டிருந்த போது பத்மினியே அவன் எதிரில் வந்து நின்றார்.

                                          ( தொடரும்….)

First of all sorry for the short and late Ud…
வேற மாதிரி டைப்பண்ணிட்டு அதை அழிச்சுட்டு திரும்ப இதை டைப் பண்ணேன்.
அதான் காரணம்.

அப்பறம் ஒரு முக்கியமான  Disclaimer போன பதிவுல  சொல்ல நினைச்சேன் மறந்துட்டேன்.வேற ஒண்ணுமில்ல…
அந்த சொர்க்கம் நரகம் ஆயுட்காலம் இதெல்லாம் முன்னப்பின்ன செத்துப்பழக்கமில்லாததால எனக்கும் தெரியாது…
சும்மா கதைக்காக அடிச்சு விட்டது தான்.
உண்மைன்னு  நம்பிராதீங்க…
நம்ப மாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் சொல்ல வேண்டியது நம்ம கடமையில்லையா…

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *