Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 29

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 29

சுடுகாட்டில் தென்றல் வீசினால் -29

அவர் இந்தப்பக்கம் வருவது தெரிந்ததும் மெல்ல கண்களை மாதவியின் புறம் திருப்பினான்.
அந்த நேரம் சரியாக மாதவி உதவிக்கு வந்தாள்.
செய்து முடித்தக் கணக்கை “அண்ணா சரியான்னு பாருங்க” என்று அவனிடம் கொடுத்து.
சில வினாடிகளிலேயே அது சரியென்று தெரிந்து விட்டது அவனுக்கு.
இருந்தாலும் பத்மினி தங்களை நோக்கியே வருகிறார் என்பதை உணர்ந்து,
ஏதோ உலக அளவில் விடுவிக்க இயலாது என விஞ்ஞானிகள் கைவிரித்துவிட்ட புதிர் போல ஏழாம் வகுப்பு பாடத்திலேயே எளிமையான அந்த கணக்கை உன்னிப்பாகக் கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தான் அந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலகன்.

“என்னண்ணா தப்பா?” மாதவி கேட்டுக்கொண்டிருக்கையிலேயே மாதவி என்றழைத்த பத்மினியின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், வேகமாக எழுந்தாள். அவனும்தான்…
பின்னே? தாயின் முகத்தை அருகில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு மட்டும் இருக்காதா என்ன?

“அம்மா நீங்களா? ஆமா நேத்து ஏன் வரலை? நான் உங்களைத் தேடிக்கிட்டே இருந்தேன்.” என்று மாதவி சொல்ல நானும் தான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தான் அருளாளன்.

“ஒண்ணுமில்லடா கொஞ்சம் உடம்பு சரியில்ல அவ்வளவுதான். “

“இப்போ சரியாகிருச்சாம்மா?”

“சரியாகிருச்சுடா…”

“அப்பறம் இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன். இந்த அண்ணா என்னோட புது பிரெண்டும்மா… மேத்ஸ்தான வரலைன்னு உங்ககிட்ட சொல்வேன்… சூப்பரா சொல்லிக்கொடுக்குறாங்க தெரியுமா? “

“அப்படியா செல்லம் சந்தோஷம்…ஷ்ஷ் அப்பறம் மாதவி செல்லம் பாட்டிக்கிட்ட நல்ல பழமா கொஞ்சம் எடுத்துவைக்கச்சொல்றியா? நான் சொல்லணும்ன்னு நினைச்சேன். மறந்துட்டேன். கோவிச்சுக்காம போய்ச் சொல்லிட்டு வர முடியுமாடா? “

“இதோ போறேன்மா…” விரைந்தவள் பார்வை வட்டத்திலிருந்து மறையவும் இவன்புறம் திரும்பியவர் இவனிடம் ஏதோ கேட்க முனையும் முன் இவன் கேட்டான், “என்னாச்சு?”

அவர் புரியாமல் பார்த்தார். “என்னது என்னாச்சு?”

“இல்ல உங்களுக்கு உடம்புக்கு…”

“எனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்ல…”

“அப்ப வீட்ல…”

“யாருக்கும் எதுவும் இல்ல…”

அதற்கு மேல் அவனுக்கு என்ன கேட்பதென்று தெரியவில்லை. ஆனால் அவர் கேட்டார்.
“தம்பி நீங்க யாரு? மாதவியை உங்களுக்கு எப்படி தெரியும்?”

“அவங்க பாட்டி நான் வேலை பார்க்கிற இடத்துக்குப் பக்கத்துல தான் வியாபாரம் பார்த்துகிட்டு இருப்பாங்க… அப்படிதான் தெரியும்…”

“அப்ப…கலெக்டர் ஆபிஸில வேலை பார்க்கிறீங்க அப்படிதான? “

“ம்ம் ஆனா இதெல்லாம் எதுக்குக் கேக்குறீங்க?”

லேசாகத் தயங்கியவர் “தம்பி மாதவி அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டா… ஆனா யாரையாவது நம்பிட்டான்னா கண்மூடித்தனமா நம்புவா… சின்னபொண்ணுதான… பாட்டியும் வயசானவங்க…நீங்க பார்க்க நல்லவராதான் தெரியிறீங்க… ஆனா எந்தப் புத்துல எந்தப்பாம்பு இருக்கும்ன்னு தெரியாது. இந்த உலகத்துல இப்பல்லாம் பச்சப்பிள்ளைகளுக்குக் கூடப் பாதுகாப்பு இருக்கறதுல்ல…” அவர் இழுக்க, அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அவனுக்குப் புரிந்தது.

‘அம்மா நான் உன் பிள்ளைம்மா… அப்படிப்பட்ட கேவலமான பிறவி இல்ல…’ என்று மனதில் நொந்தவன் அம்மா என்று அழுத்தமான குரலில் அவரை அழைத்தான்.
அந்த அழைப்பு அவரை என்னமோ செய்தது.

“ நீங்க நினைக்கிற மாதிரி ஆள் நான் கிடையாது. என்னைப் பெத்தவங்களும் அப்படிப்பட்டவங்க கிடையாது… என்னை வளர்த்ததும் அப்படி வளர்க்கல…”

“தம்பி நான்தான் உங்ககிட்ட சொன்னேனே… நான் உங்களைத் தப்பா நினைக்கல… நீங்கன்னு இல்ல யாராயிருந்தாலும் நான் இதே எச்சரிக்கையைத்தான் கொடுத்துருப்பேன். மாதவி அப்பாம்மா இல்லாத பொண்ணு. ஆனா அப்பாம்மா இல்லங்கறதுக்காக தவறாப் பயன்படுத்தலாம்ன்னு நினைக்கிற ஒருவரா நீங்க இருக்கமாட்டிங்கன்னு நம்புறேன்.
ஒரு வேளை அப்படி இருந்துட்டீங்கன்னா இந்தப்பக்கம் தலைவச்சுக் கூட படுத்துர வேண்டாம்…
விளைவு விபரீதமா இருக்கும்…”

அவர் மிரட்டியதில் வேறு யாராயிருந்தாலும் பயம் வந்திருக்கும். என்ன இருந்தாலும் அருணாச்சலத்தின் மனைவியல்லவா? ஆனால் அவனுக்கோ சிரிப்புதான் வந்தது. அதே அருணாச்சலத்தின் மகன்தானே அவனும்.
‘யம்மா தாயே உன் புருஷன்தான் மிரட்டுவாருன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ வந்து மிரட்டிட்டு இருக்க… அது சரி… யார்கிட்ட இப்படி மிரட்ட கத்துக்கிட்ட… அருணாகிட்டயா’ என்று மனதில் நினைத்தவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
அதை அடக்கியவன், “மேடம். நான் கலெக்டர் ஆபிஸ்ல வேலை பார்க்குறேன்னு சொன்னேன்ல என்ன வேலை பார்க்கிறேன்னு நீங்க கேட்கவே இல்ல…”
என்று கேட்டான்.

குழம்பினாலும் “என்ன வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டார் அவர்.

“கலெக்டர் வேலை…”

“ஆங்?”

“ஆமாம். நான் தான் இந்த ஊரோட கலெக்டர். “

ஒரு மாவட்ட ஆட்சியன் தன் அலுவலக வாயிலில் உட்கார்ந்து பழம் விற்றுக்கொண்டிருக்கும் ஒருவரின் பேத்திக்கு கணக்கு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறானா?
அதுவும் இந்தச்சிறிய பூங்காவின் மரத்தடியில் தரையில் அமர்ந்து…

அவர் ஆச்சரியமாகப் பார்க்க,
“அது சரி… நீங்க எதுக்கு மாதவி மேல இவ்வளவு அக்கறை வச்சுருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” அவன் கேட்டான்.
“அது அது வந்து …”அவர் திணறிக்கொண்டிருக்கையிலேயே “பாட்டிக்கிட்ட சொல்லிட்டேன்மா… எடுத்துவைக்கிறேன்னு சொல்லிருக்காங்க….”என்றபடி மாதவி வந்தாள்.
அருளிடம் “அண்ணா அந்த சம் ரைட்டாண்ணா…” என
“ரைட்தான்டா அடுத்ததைப் பார்க்கலாம் வா… ” என்று அமர்ந்து அடுத்தக் கணக்கைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்க அங்கு நின்று என்ன செய்வது என்று அறியாமல் பத்மினியும் கிளம்பினார்.

குழம்பிய மனதுடன் வீட்டுக்குச் செல்ல அங்கோ அருணாச்சலத்தின் முகத்திலும் அதீதக் குழப்பம் தென்பட்டது.
சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடியிருந்தவர் ஒற்றைக்கையை நெற்றியில் வைத்து அழுத்தியபடி மெல்ல முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தார்.

ஆடிக்கொண்டிருந்த நாற்காலியின் கைப்பிடியைப் பிடித்து அதை நிறுத்திய பத்மினி அவரை அழைத்தார்.

கண்களைத்திறந்தவரிடம் “என்னப்பா? எதுவும் பிரச்சினையா என்ன? நேத்தில இருந்து உங்க முகமே சரியில்ல… எதுனாலும் சொல்லுங்க…” என்று மென்மையாகக்கேட்டார்.

அவருக்குப் பதில் சொல்லாமல் மீண்டும் முன்னும் பின்னும் ஆட ஆரம்பித்தவர் சில நொடி மௌனத்திற்குப்பின் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தார்.
மனைவியையும் அருகிலிருந்த நாற்காலியில் அமரச்சொன்னவர் மீண்டும் மௌனம் காத்தார்.

“என்னங்க சொல்லுங்க…” பத்மினி கேட்க, சிறு பெருமூச்சொன்றை விட்டவர்
“எனக்கு ஒருத்தனைப் பார்த்தா நம்ம அரசுன்னு தோணுச்சும்மா…”

“என்னங்க சொல்றீங்க நம்ம பையனா? எங்கங்க இருக்கான்? “அவர் பரபரக்க,
“எனக்குத் தோணுச்சுன்னு தானடா சொன்னேன். ஆனா அவன் நம்ம அரசு இல்ல… “

“எதை வச்சுங்க அப்படி சொல்றீங்க?”

“சாதாரண விஷயத்துல சந்தேகம் வந்தாலே விசாரிக்காம இருக்க மாட்டேன். நம்ம பையன் விஷயத்துல விசாரிக்காம இருப்பனப்பா? அதுவுமில்லாம நம்ம அரசு என்னைப் பார்த்தா என்ன பண்ணுவான்?”

“வேற என்னங்க பண்ணுவான் அப்பான்னு ஓடி வருவான்…”

லேசாகப் புன்னகைத்தவர்,
“அப்பான்னு ஓடிவரமாட்டான் அருணான்னு ஓடி வருவான் ஆனா… இவன் என்னை நேருக்கு நேரா எத்தனை தடவை பார்த்துட்டான் தெரியுமா? ஆனா ஒரு தடவை கூட என்கிட்ட அப்படி பேசல… நேராவே கேட்டேன் நீதான் என்பையனான்னு? அதுக்கு அவன் அப்பா அம்மான்னு வேற யார் பேரையோ சொன்னான். அவன் மட்டுமில்ல… விசாரிச்ச எல்லாருமே அதைத்தான் சொல்றாங்க…” அவர் குரல் கலங்க,

“எதை வச்சுங்க உங்களுக்கு அவன் நம்ம பையன்னு தோணுச்சு? நம்ம பையன் பேரா இவனுக்கும்?”

“இல்லடா அதாவது முழுசா இல்ல… . நாம நம்ம பையனுக்கு எப்படி பேரு வச்சோம்… இந்த உலகத்தையே ஆளணும்ன்னு அரசன்னு நான் சொன்னேன். அவனுக்கு அருளும் இருக்கணும்ன்னு நீ அடம் பிடிச்சதால சரி ரெண்டும் இருக்கட்டும்ன்னு அருளரசன்னு வச்சோம். இவனுக்கு ஏதோ சாமியார் பேரு மாதிரி அருளாளன்னு இருக்கு…எனக்கு… எனக்கு அவனைப் பார்க்குறப்ப இவன்தான் நம்ம பையன்னு தோணுச்சுடா… ஆனா எதுனாலன்னு தெரியல…”

அருளாளன் என்றாலும் அருளை ஆள்பவன்…
அருளுக்கு அரசன் என்று தானே அர்த்தம் என்று பத்மினிக்குத் தோன்றியதுதான். ஆனால் கலங்கிய முகத்தோடு கணவரைப் பார்க்க விரும்பவில்லை அவர்.

“ஏங்க அது நம்ம பையன்னா இருக்காதுங்க… நம்ம அரசா இருந்தா உங்களை இப்படி கலங்க விட்டு வேடிக்கை பார்க்க மாட்டான்.”

கலங்கியிருந்த அருணாச்சலத்தின் முகமும் குரலும் இறுக்கமடைந்தது.

” ஆமா… அவன் என் அரசு கிடையாது…அவன் என் அரசு கிடையாது…அவன் என் அரசு கிடையாது… அவன் என் அரசு கிடையாது… அவன் என் அரசு கிடையாது… அவன் என் அரசு கிடையாது…” என்று உன்மத்தம் பிடித்தவர் போல பிதற்ற, ‘என்னங்க” என்று அவரைப் பிடித்து உலுக்கினார் பத்மினி.

அவர் உலுக்கிய உலுக்கலில் நாற்காலியில் இருந்து எழுந்தவர் “ஆமாம் அவன் என் அரசு கிடையாது… அந்தக் கலெக்டர் அருளாளன் என்னோட மகன் கிடையாது…” என்று கத்த  அங்கிருந்த தண்ணீரை எடுத்து பத்மினி குடிக்கச்சொல்ல மடமடவென்று குடித்தார்.

அவர் ஆசுவாசமடையவும்
“என்னங்க சொல்றீங்க? கலெக்டரா?” என்று கேட்க அதற்கு அமைதியான குரலில் பதில் வந்தது.

“ஆமாம்… இந்த ஊர் கலெக்டர்தான். இப்பவே எனக்கு எவ்வளவு குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சுருக்கான் தெரியுமா? அவன் எப்படி என் மகனாக முடியும்? மகனோங்கற பாசம் தான் என்னைத் தடுத்துக்கிட்டு இருந்துச்சு… ஆனா என் அரசுகிட்ட காட்ட வேண்டிய பாசத்தைக் கண்டவன் கிட்டலாம் காட்டலாமா சொல்லு… அவனுக்கு இந்த அருணாச்சலம் யாருங்கிறதைக் காட்டணும்… அருணாச்சலத்தைப் பகைச்சுக்கிட்டா என்ன ஆகும்ன்னு காட்டணும்?”
சொல்லிவிட்டு வேகமாக படியேற,
அவரது அமைதியான குரல் ஆபத்தானது என்பதை அறிந்திருந்த பத்மினிக்கோ சற்று நேரத்திற்கு முன்னால் கலெக்டர் என்று கூறியவன் அம்மா என்று அழைத்த போது தன் மனம் பிசைவுற்றது காரணமின்றி நினைவு வந்தது.

“மெல்லினமே… மெல்லினமே…
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்…

என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி…
அதை வானம் அண்ணாந்து பார்க்கும்…

நான் தூரத் தெரியும் வானம்…
நீ துப்பட்டாவில் இழுத்தாய்….

என் இருபத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்?

உன்னைக் காணும்முன்னே என் உலகம் தொடங்கவில்லை…
உன்னைக் கண்டபின்னே என் உலகம் இயங்குதடி…

வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்ன்ன்….”

சோபாவில் படுத்துக் கால்களை அதன் கைப்பிடியில் போட்டு ஹெட்செட்டின் வழி காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலை இணைந்து பாடிக்கொண்டிருந்தவன் போனில் நோட்டிபிகேஷன் வரவும் பாடலை நிறுத்தி அதனைப்பார்த்தான்.

மின்னஞ்சலொன்று வந்திருந்தது.
அது கூறிய செய்தியை அவன் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க, அவனது அலைபேசி அழைத்தது.

அழைப்பை எடுத்தவனின் காதுகளில் அருணாச்சலத்தின் குரல் நக்கலாக ஒலித்தது.

“என்ன கலெக்டர் சார்…
ஸாரி ஸாரி இப்ப கலெக்டர்ன்னு சொல்லக் கூடாதோ…
வெட்டி ஆபிசர்ன்னு வேணும்ன்னா சொல்லலாம்…
என்ன சார் சொல்லலாம்தானே…”

அலைபேசியைப் பிடித்திருந்த அருளாளனின் கைப்பிடி இறுகியது…
   
                                     (தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *