அவளுடைய இதயம் வழக்கத்தை விட வேகமாக இரத்தத்தை பம்ப் செய்ய ஆரம்பித்தது.
பெருமூச்செடுத்து தன்னைச் சமனப்படுத்த முயன்றவள் எதனுடைய கூரிய பற்களோ அவளுடைய விரல்களைப் பற்றியிருப்பது போல உணர்ந்தாள். ‘ஒன்றுமிருக்காது…ஒன்றுமிருக்காது…’ தனக்குத்தானே திடமூட்டிக் கொண்டு
அருகே சென்று கூர்ந்து பார்த்தாள்.
அவளுடைய முகத்திலிருந்த லேசான பயம் போய் ஏராளமான அவமானம் அப்பிக்கொண்டது.
கூடவே வெளியே தெரியாத அளவு சற்று நிம்மதியும் …
‘முதல்ல இதைப் பார்க்கிற இடத்துலலெல்லாம் மாட்டுறத விடணும்’ முணுமுணுத்தபடியே அதிலிருந்து கையை விடுவித்தாள்.
ஆம். முந்தைய நாள் அந்த ஜன்னல் கம்பியில் மாட்டி விட்டு அவள் எடுக்க மறந்திருந்தது கிளட்ச்தான்அது. அதனைக் கைப்பையில் போட்டவளுக்குத் தான் பயந்ததை நினைத்து அவமானமாக இருந்தது.
தூங்காமல் இரவு நேரப் பயணம்; துணைக்கு யாருமில்லாமல் தனியாகப் பயணம் செய்வது; இரயிலின் ஒலியும் சிலரின் குறட்டை ஒலியும் தவிர வேறு ஓசை இல்லாத, இரவுக்கே உரிய ஒருவிதமான அமானுஷ்ய அமைதி; இவையெல்லாம் கலந்து அப்படித் தோன்றியிருக்கும் என சமாதானமடைய அவளால் முடியவில்லை…
இவற்றுக்கெல்லாம் பயப்படுபவள் அவள் அல்ல.
ஆனால்…..???
ஒருவேளை தற்போது போகுமிடத்தைப் பற்றிய தகவல்கள் அவளது மனதைக் குழப்பியடிக்கிறதோ?’ சிந்தனைகளில் ஆழத்தொடங்கியவளைப் படுத்திருந்த பெரியவரின் இருமல் உறுமல் நடப்பிற்குக் கொண்டுவந்தது.இறங்க வேண்டிய இடம் வருவதை வேகம் குறைந்த ரயில் உணர்த்த, பெட்டிகளை நிமிர்த்தி பைகளை அவற்றின்மேல் வைத்து இழுத்துக் கொண்டு வாயிலை வந்தடைந்தாள்.
ரயில் நிற்கவும் உடைமைகளை எடுத்துக் கொண்டு இறங்கினாள். நின்று பேச நேரமில்லை என நிலையத்திடம் கூறுவது போன்ற கூவலோடு ரயில் கிளம்ப, ரயிலின் அந்த அவசரஅவசரமான ஓட்டமே, அந்த நிலையமோ அது அமைந்திருந்த நகரமோ அவ்வளவு பெரிதில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லியது. அனாமத்தாகக் கிடந்த ரயில் நிலையம் அதனை வழிமொழிய சுற்றிலும் பார்த்தாள். ஆள் நடமாட்டம் பெரிதும் இல்லை. நிலையத்தில் இருந்த ஓரிருவரும் தங்களது உடைமைகளையே தலையணைகளாக மாற்றி உறங்கிக் கொண்டிருந்தனர்.
உடலைத் துளைத்தக் குளிர் சற்று உள்ளத்தையும் ஊடுருவது போல் இருக்க அணிந்திருந்த முழுக்கைச் சுடிதாரை இழுத்து விட்டவளுக்குத் தங்கை அதை அணியச்சொல்லி அடம்பிடித்தது நினைவு வர இதழ்களில் மென்னகை படர்ந்தது.
“அக்கா…அக்கா…இந்தச் சுடிய போடுக்கா, உனக்கு சூப்பரா இருக்கும்க்கா.’
‘என்ன அதிசயமா இருக்கு? எப்பவும் எங்கிட்ட இருக்குற டிரஸ்ஸ பிடுங்கத் தான செய்வ.இப்ப நீயே உன்னோட சுடிதாரை வந்து கொடுக்குற…என்ன விசயம்?’ இவள் ஸ்டைலாக புருவம் தூக்கி வினவ அவள் தங்கையோ அசடு வழிந்தபடி,
‘அது ஒண்ணுமில்லக்கா…உன் வேலைக்கு புல்ஹண்ட் தானக்கா போடணும்.’என்றாள்.
‘அப்படியெல்லாம் எந்த ரூல்ஸ்ம் இல்லையே, உனக்கு யார் அப்படி சொன்னது?’
‘இல்லக்கா… படத்தில எல்லாம் அப்படித்தானக்கா வருது.’
‘அடியேய் சந்தனா, நீ என்னைக்கும் இல்லாம இத்தனை அக்கா போடுறப்பவே உனக்கு எங்கிட்ட என்னமோ ஆகணும்ன்னு தெரியுது.சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வா.எனக்கு நேரமில்ல’
துணிகளை அடுக்கியபடி இவள் கூற ஒருவழியாக அவளது தங்கை விஷயத்துக்கு வந்தாள்.
‘அது வந்துக்கா, நாளைக்கழிச்சு எங்க காலெஜ் கல்ச்சுரல் பங்க்ஷன்க்கா…’
‘அதுக்கு?’
‘எங்க எல்லாரையும் ஸ்கைபுளு கலர்ல டிரெஸ் பண்ண சொல்லிருந்தாங்க…’
தங்கை எங்கு வருகிறாள் என்று அவளுக்குப் புரிந்து விட்டது.தான் தற்பொழுது அணிவதற்காக எடுத்துவைத்திருந்த ஆகாய வண்ணச்சுடிதார் அவளைப் பார்த்துப் பளிச்செனச் சிரித்தது.
மனதிற்குள் சிரித்தவள்,உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு,
‘சரி அதுக்கென்ன இப்ப’ குரலில் கடுமையைக் கூட்டிக் கேட்டாள்.
அதில் பொறுமையிழந்த சந்தனா ‘எனக்கு அதுக்கு இந்தச் சுடிதார் வேணும்’ அவளுடைய ஆகாயவண்ணச் சுடிதாரைக் காட்டியவள், நீ இதைப் போட்டுட்டுப் போ, எனக்கு அதைக் கொடு’ பட்டென்று கூறிவிட்டாள்.
‘ஓ. மேடம் பண்டமாற்றா பண்றீங்க பண்டமாற்று’ மனதில் நினைத்தவள் ‘அதுக்கென்ன செல்லக்குட்டி, என் சந்துவுக்கு இல்லாததா, கொடுத்துட்டா போச்சு. கொடுங்க அந்தச் சுடிதாரை அக்கா போட்டுக்குறேன்.இத நீங்க வச்சுக்குங்க, என்றபடி தன்னிடம் இருந்த சுடிதாரை எடுத்துக்கொண்டு, தங்கையிடம் இருந்த சுடிதாரையும் மறுகையில் வாங்கியவள் நொடியில் இரண்டையும் பெட்டியில் வைத்து மூடினாள்.
அவளது செயலில் திகைத்துப் போன சந்தனா ‘ஏய் எருமமாடு என்ன பண்ற’ எனத்திட்டிக்கொண்டு அருகில் வருவதற்குள் நம்பர் லாக்கையும் போட்டு முடித்தாள்.
‘அம்மா…அம்மா…’ என சந்தனா கத்திய கத்தில், பேப்பர் படித்துக்கொண்டிருந்த தமயந்தி பேப்பரை அப்படியே பறக்கவிட்டுவிட்டு ‘என்னடி’ என்றபடி வந்தார்.
‘அம்மா இவ என்னோட சுடிதாரை எடுத்து வைச்சுகிட்டு தரமாட்டேங்குறாமா’
‘இதுக்காடி இந்தக் கத்து கத்துன’ என்றவர்
‘என்ன அமிழ்தா இது’ எனக் கேட்க ,
‘அமிழ்தாவாம் அமிழ்தா பேரைத் தப்பா வச்சிருக்கீங்க .விஷம், விஷம், உடம்பு பூரா விஷம். விஷம்ன்னு வச்சிருக்கணும்.’ சந்தனா முணங்கினாள்.
‘முதல்ல அவளை என்னன்னு கேளுங்கம்மா அவதான்; என் சுடிதாரை கேட்டா அதுவும் அப்பா என்னோட பிறந்தநாளைக்கு எடுத்துக்கொடுத்த சுடிதார் அது…’
‘நான் ஒண்ணும் ஆசைக்குன்னு அதைக் கேக்கல்ல என் காலெஜ் பங்க்ஷனுக்காகத்தான் கேட்டேன்.எதுக்கு புதுசா எடுத்துகிட்டு? இது வெட்டியா தான இருக்கு, ‘
‘உன் காலெஜ் பங்க்ஷனுக்குச் சுடிதார் வேணும்னா நீ போய் கடையில தேடி எடுத்திருக்கணும். அதை விட்டுட்டு நான் எங்கப்பா எனக்கு எடுத்துக்கொடுத்த சுடிதாரைப் போட மனசில்லாம எடுத்து வச்சிருந்தா அதை நீ வெட்டியா இருக்குன்னு எடுக்கக்கூடாது.மைண்ட் இட்.
அப்பறம் என்ன சொன்ன? எனக்கு விஷம்ன்னு பேரு வச்சிருக்கணுமா?உனக்குதாண்டி விறகுக்கட்டைன்னு பேரு வச்சிருக்கணும். விறகுக்கட்டை விறகுக்கட்டை’. என்றவள்,
தாயிடம் திரும்பி
‘பாருங்கம்மா கொஞ்சம் கூட அக்காங்கற மரியாதை இல்லாம எப்படி பேசுறான்னு விஷம்ங்கறா எருமங்கறா’என தங்கையை முந்திக்கொண்டுப் புகார் கொடுத்தாள்.
‘ஏய் நீயும்தானடி இப்ப என்னை விறகுக்கட்டைன்னு சொன்ன?’ சந்தனாவும் மல்லுக்கட்ட ,
‘நிறுத்துங்கடி….
சந்தனா…
அமிழ்தா ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிஸர். இப்ப கலெக்டர் வேற… அதைவிட உன் அக்கா…என்னதான் இருந்தாலும் உன்னைவிட மூத்தவ. அதுக்காவது மரியாதைக் கொடு.” என அதட்டினார் தமயந்தி.
‘கலெக்டராம் கலெக்டர். பண்றதெல்லாம் களவாணித்தனம் இவளுக்கு மரியாதை ஒரு கேடு.என்னோட ரெண்டு சுடிதாரும் போச்சு’
தமயந்தியின் காதுகளில் விழாமலும் அமிழ்தாவின் காதுகளில் தெளிவாக விழுமாறும் முணுமுணுத்தபடி அமிழ்தாவை முறைத்துக்கொண்டே சென்றாள் சந்தனா.
‘அமிழ்தா நீயும் ஏன்டி அவளை இப்படி வம்பிழுக்குற’ எனக் கேட்ட தாயிடம்,
‘சும்மாதான் தந்தி.ஒரு டைம்பாஸ் வேணாமா?’ என்று கண்ணடித்துச் சிரித்தாள் அமிழ்தா.
“என்னது தந்தியா? உனக்குக் கொழுப்பு கூடிருச்சுடி” எனக் கட்டிலில் கிடந்த ஓலைவிசிறியை எடுத்துக்கொண்டுத் துரத்த ஆரம்பித்தார் தமயந்தி.
‘அம்மா வேண்டாம்மா இப்பதானம்மா நீயே சொன்ன, நான் கலெக்டர்ம்மா, கலெக்டர விசிறிக்காம்பால எல்லாம் அடிக்கக் கூடாதும்மா’
ஓடியபடி ஹாலை அடைந்து தந்தையின் பின் ஒளிந்தாள்.
‘அப்பா அப்பா தந்தி அடிக்குதுப்பா காப்பாத்துங்கப்பா.’
‘யாரும்மா தந்தி அடிச்சா? என்னம்மா ஆச்சு?’ அவளது தந்தை ஞானசேகரன் சீரியசாகக் கேட்டார்.
‘ஐயோ, அப்பா, அந்த லூசு, அம்மாவைத்தான் தந்தின்னு சொல்லுது. ‘
சந்தனா சொல்ல அப்பொழுது தான் கையில் விசிறியோடு நின்ற மனைவியைப் பார்த்தார்.
‘அம்மாவை ஏன்டா தந்தின்னு சொன்ன? ‘
தந்தை வினவ ,
‘ஏன்பா அன்னைக்கு நீங்க அம்மாக்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டு மந்தி மந்தின்னு திட்டுனீங்களே அப்படி சொல்லணுமா?’ என அவரை வசமாக மாட்டிவிட்டாள்.
கையில் விசிறியோடு நின்ற மனைவியைப் பார்த்துப் பயத்தில், ‘நான் அப்படிலாம் சொல்லுவனா மந்தி…,சீ…,தந்தி…,சீச்சீ..,தமயந்தி…’ என உளற ஆரம்பித்தார்.
முறைத்த மனைவியை ‘நான் அப்படில்லாம் சொல்லுவனடா மதிச்செல்லம்’ என சமாதானப்படுத்த ஆரம்பித்த தந்தையைப் பார்த்துச் சிரித்தவளுக்கு முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு நின்ற தங்கையைப் பார்த்து இன்னும் சிரிப்பு வந்தது.
அவளிடம் சென்று ஒரு பார்சலை நீட்டினாள். சிலநொடிகள் எங்கேயோ பார்ப்பது போல சீன் போட்ட சந்தனாவுக்கு அதற்கு மேல் முடியவில்லை.
அமிழ்தாவை முறைத்துக்கொண்டே அதைப் பிடுங்கிப் பிரித்துப் பார்த்தவள், அதிலிருந்ததைக் கண்டதும் பாய்ந்து வந்து அவளது கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘என் செல்ல அக்கான்னா அக்காதான்’ என கன்னத்தில் முத்தமிட்டாள்.
அதைக்கண்ட தமயந்தியும் ஞானசேகரனும் தங்களுடைய விழிகளையே நம்பமுடியாமல் விழிக்க சந்தனா அந்தப் பார்சலைக் காட்டினாள்.
அதில் ஏழு சுடிதார்கள் இருந்தன.
எல்லாமே சந்தனாவுக்குப் பிடித்த வண்ணங்களில் அழகழகான டிசைன்களோடு நல்ல துணியில் நேர்த்தியாக தைக்கப்பட்டிருந்தது. அதிலும் ஒன்று ஆகாய வண்ணத்தில் மற்றவற்றை விட சற்று விலை உயர்ந்ததாக கண்ணைப் பறித்தது.
அவற்றைப் பார்த்து ஞானசேகரன் சிரிக்க ,
தமயந்தியோ ‘ஏன்டி நான் உன்னை ஒண்ணுதான வாங்கிட்டு வரச்சொன்னேன்.நீ ஏன் ஏழு வாங்கிட்டு வந்துருக்க’ என்றார்.
‘அதில்லைம்மா.நான் இனி எப்ப வரமுடியும்ன்னு தெரியல்ல அதான் மொத்தம்மா வாங்கிட்டு வந்துட்டேன்’ என்று கூறும்போதே,
தந்தையின் முகம் வாடியதைக் கவனித்து தங்கையிடம்
‘சந்தும்மா போய் டிரஸ்ஸை எடுத்து வைடா ‘ என அவள் ‘சரிக்கா’ என்றபடி தன் அறையை நோக்கி ஓடினாள். தாயிடம் ‘அம்மா பால்கொழுக்கட்டை கேட்டேனே’ என நினைவுபடுத்த அவரும் சமையலறையை நோக்கிச் சென்றார்.
“சொல்லுங்கப்பா என்கிட்ட என்ன சொல்லணும்? ” என்றபடி தந்தையைக் கேள்வியாக நோக்க,
மனதிற்குள் மகளின் கூர்மையை மெச்சிய படி
“அந்த ஊரைப் பத்தி என்னென்னமோ சொல்றாங்களேடா,?”என்றார் அவர்.
“என்னப்பா சொல்றாங்க?’ என்றாள் இவள்.
“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அந்த ஊரில ஒரு கலெக்டர் இறந்து போனதாகவும் அதுக்குப் பின்னாடி அந்த ஊருக்குப் போஸ்டிங்க்ல போன 5 கலெக்டர்களுமே இரண்டு, மூணு மாசத்துக்கு மேல அந்த ஊரில் வேலை பார்க்கலன்னும் அதுக்குக் காரணம் முதல்ல இறந்து போனவருடைய ஆன்மாதான்னும் அந்த ஆன்மா நடமாட்டம் அங்க இருந்து அவங்களை ஆட்டுவிக்கறதாவும் அந்த ஊரில மக்கள் பேசிக்கறாங்களேம்மா. “
“ஆமாப்பா.நானும் கேள்விப்பட்டேன். நான் மாநகராட்சி ஆணையாளரா இருந்தப்பவே எனக்குக் குடைச்சல் கொடுத்த அந்த மினிஸ்டர் இந்த ஊருக்கு மாற்றலோட மாவட்ட ஆட்சியரா பதவி உயர்வு வந்ததும் ஆபிஸ்க்கே நேரா வந்து வாழ்த்துத் தெரிவிச்சதுமே விசாரிச்சுட்டேன். “
“என்னடா இவ்வளவு சாதாரணமா சொல்ற? “
“ஆமாப்பா.உப்பு சப்பில்லாத இந்த விஷயத்தை சாதாரணமா சொல்லாம திகில் பட எபெக்ட்லயா சொல்ல முடியும்? “
என்றவள் அவருடைய கண்ணை நேராக நோக்கி,
“ஏம்பா உங்கப் பொண்ணோட திறமையில உங்களுக்கு நம்பிக்கை இல்லையாப்பா?”என்றும் கேட்டாள்.
“நம்பிக்கைக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்? இப்பவும் உன் திறமைல எனக்குத் துளிகூட சந்தேகமில்லை.ஆனால் முன்னாடி உனக்கு எதிரா இருந்தவங்க எல்லாம் மனுஷங்க.ஆனா இங்க ஏதோ அமானுஷ்யம் இருக்கதாலடா சொல்றாங்க.அதான் பயமா இருக்கு” சொல்லியவரின் கண்களில் முதலில் தெளிவும் பின்சிறு குழந்தையின் பயமும் தெரிந்தது.
அவரருகில் வந்து கையைப் பிடித்து
“அப்பா அமானுஷ்யமும் இல்ல. ஒண்ணுமில்ல.அந்த ஊருல எந்த ஆவியோட வேலையும் கிடையாது.
ஏதோ ஆசாமிகளோட வேலைதான்.
எனக்குப் பாதுகாப்பு பலமாவே இருக்கும்.அந்த ஆசாமிகள் கிட்ட இருந்து பாதுகாக்க அதுவே போதும். அப்படியே ஆவி, பேய்,பிசாசுன்னு ஒண்ணு இருந்தாலும் நாம பயப்பட வேண்டியதில்ல.
ஏன்னா இந்த உலகத்தில மனுஷங்கள விட மோசமான ஒண்ணுண்ணோ கொடூரமான ஒண்ணுண்ணோ ஒண்ணு கிடையவே கிடையாது.
அந்த மனுஷங்களையே சமாளிக்கிறோம்.
ஆவியா நம்மள எதுவும் பண்ணப்போது?”
கண்ணைச்சிமிட்டிச் சிரித்தவளைப் பார்க்கும்போது ஏதோ தெளிவு பிறந்தது போல இருக்க ஞானசேகரனும் சிரித்தார்.
“சேகரன், அங்க என்ன பேச்சு? வந்து வெல்லத்தைத் தட்டிக்கொடுங்க, வாங்க.”
மனைவியின் குரல் கேட்க, மகளின் தலையைத்தடவி “சரிடா போய்ட்டு வா” என்றவர் ,
அப்பொழுதும் மனம் கேட்காமல் “வேணும்னா நானும் கூட வரவா” என “ஹலோ, ஹெச்ஓடி சார், அப்ப இங்க இருக்க ஸ்டூடன்ஸ் நிலைமை என்னாகிறது?” என இடுப்பில் கைவைத்துக் கேட்ட மகளைப் பார்த்து சிரித்தவர் …
‘சேகரன்’ என்னும் மனைவியின் குரல் கேட்க ‘வரேன்டா’ என்றபடி விரைந்தார்…”
வீட்டில் நிகழ்ந்த நினைவுகளை நினைத்தபடியே நடந்து சாலைக்கு வந்தாள்.
சாலையிலும் அதே ஆளைக் கொல்லும் அமைதி.
பகல் என்றால்கூட யாராவது வரவேற்க இல்லையெனில் வழிகாட்ட வந்திருக்கலாம்.அவளும் இன்று வருவதாகத் தகவல் சொல்லவில்லை. அவளுக்கு சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஏதாவது வாகனத்தை புக் செய்யலாம் என்றால்,
செல்போனும் கூட தன்னுடைய சக்தியெல்லாம் இழந்து செயலற்றுக் கிடந்தது.
வெகுநேரத்திற்குப் பின் அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி ‘கலெக்டர் மனைக்குப் போக வேண்டும்’ எனக் கூற ஆட்டோ டிரைவர் பேயறைந்தாற்போல அரண்டுபோய் முழித்தான்.
(தொடரும்….)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Apadi ena amanushyam iruku anga ellam ivlo thigil kelapuringa
நம்ம ஹீரோ தான் சிஸ்
Interesting