Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 30

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 30

“என்ன பதிலையே காணோம்…ஆமா பாவம் துறுதுறுன்னு வேலை பார்த்துக்கிட்டு இருந்தவன எந்த வேலையும் பார்க்கக் கூடாதுன்னு கையைக் கட்டிப்போட்டா நீயும் என்ன செய்வ சொல்லு… ஆனா வேலையே செய்யலன்னாலும் சம்பளம்லாம் சரியா வந்துரும்ல… அப்படி எதுவும் வரலைன்னா சொல்லு… ஐஞ்சோ பத்தோ போடுறேன் என்ன?”


“மிஸ்டர் அருணாச்சலம்….”


“அட கோவிச்சுக்காதீங்க தம்பி… பேங்க் அக்கவுண்ட்ல போட்டு விடுறேன்னு சொன்னேன். அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க…”


“மிஸ்டர் அருணாச்சலம்… உங்கக்கிட்ட இருக்குற பணம் எப்படி வந்துச்சுன்னு எனக்குத் தெரியும்… அதுல இருந்து ஒரு பைசா கூட எனக்குத் தேவையில்ல… என் பேரு வெயிட்டிங் லிஸ்ட்க்குத் தான் போயிருக்கே தவிர, நான் இன்னமும் அருளாளன் ஐ.ஏ.எஸ் தான். அதை மனசுல வச்சுட்டுப் பேசுங்க…”


“அடேய் அதையும் பண்ணலாம்ன்னு தான் நினைச்சேன்… சின்னப்பையன் பாவம்ன்னு தான் வெயிட்டிங் லிஸ்டோட வி;ட்டேன். இப்ப கூட ஒண்ணுமில்ல… எனக்கு ஆதரவா இருக்கேன்னு சொல்லு… அட ஆதரவா கூட வேண்டாம்… கண்டும் காணாம கூட இரு போதும்… திரும்ப இதே ஊருல போஸ்டிங் போட சொல்றேன்.”


“காலம்பூரா என்பேர் காத்திருப்புப்பட்டியல்ல இருந்தாலும் பரவால்ல…உங்களுக்குத் துணைபோவேன்னு மட்டும் கனவுல கூட நினைச்சுராதீங்க…”


“அப்ப நீயும் உனக்கு வேற போஸ்டிங் வரும்ன்னு கனவுல கூட நினைச்சுராத… சொல்லிருக்கது இந்த அருணாச்சலம்… என்னை மீறி எவனாலயும் உனக்கு எந்த உதவியும் பண்ண முடியாது.நீ காலம் பூரா இப்படி காத்திருப்புப் பட்டியல்ல கையையும் காலையும் கட்டிப்போட்ட மாதிரிதான் இருக்கணும். அதுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். “

தொடர்பைத் துண்டித்திருந்தார்…


அடுத்தநாள் காலை பொறுப்புகளை விடுவிக்க அலுவலகம் சென்றவனைப் பிரதாப் கண்ணில் கவலையோடு பார்த்தார்.

“சார்…”


“என்ன பிரதாப் சார்…”

“சார் உங்களுக்கு ஏதாவது இடைஞ்சல் கொடுப்பாங்கன்னு நினைச்சேன் அதை இவ்வளவு சீக்கிரம் கொடுப்பாங்கன்னு நினைக்கல… உங்களை மாதிரி ஒரு யங், எனர்ஜிடிக் அன்ட் என்துஸ்டிக்கான கலெக்டர் கிட்ட நான் இதுவரை வேலைபார்த்ததுல… இனிமே பார்ப்பனான்னும் தெரியல… இப்ப கூடுதல் மாவட்ட ஆட்சியரா அந்த மாநகராட்சி ஆணையாளரைத்தான் போட்டுருக்காங்க. கூடிய சீக்கிரமே அவர் நிரந்தரமாகக் கூட மாறலாம். அவர் எப்படின்னு நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்ல… இடைத்தேர்தல் வேற வரப்போகுது. எலெக்ஷன் இன்சார்ஜா கலெக்டரத்தான் போடுவாங்க… ஊரு என்ன ஆகப்போகுதோன்னு கவலையா இருக்கு சார். உங்களை மாதிரி ஒருத்தர் வரவும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா அந்த சந்தோஷத்துக்கு ஆயுள் இவ்வளவு கம்மின்னு தெரியாம போயிருச்சு… “
கண்ணில் இருந்த உண்மையான அக்கறை அவருடைய குரலிலும் தெரிந்தது.


“சார்… எனக்கு ஆக்சுவலா இவங்க கொஞ்சம் லீவுதான் வாங்கிக்கொடுத்துருக்காங்க… கொஞ்சநாள் நல்லா ரெஸ்ட் எடுக்குறதுக்கு… விடுங்க பிரதாப் சார்… நான் என்ன இந்த ஊருக்கா முதன்முதல் போஸ்டிங்கல வந்துருக்கேன். சின்ன வயசா இருந்தாலும் நானும் பல ஊர்ல சப் கலெக்டர், மாநகராட்சி ஆணையர், கலெக்டர் இப்படில்லாம் இருந்துட்டுதான் வந்துருக்கேன். அங்க இவங்கள மாதிரி ஆளுங்களைப் பார்க்கவும் செஞ்சுருக்கேன். எனக்கு இது புதுசு கிடையாது. நான் ஒண்ணும் இவங்க வெயிட்டிங் லிஸ்ட்க்குப் பேரை மாத்தினவுடனே அப்படியான்னு வாங்கிட்டுப் போயிர மாட்டேன். அந்த அருணாச்சலத்தால என்ன பண்ணமுடியுமோ அவர் அதைப் பண்ணிட்டாரு… இந்த அருளாளனால என்ன பண்ண முடியுமோ அதை நான் பண்ண வேண்டாம்?”


“சார்?”

அவன் வெறுமனே புன்னகைக்க,

“சார் என்ன பண்றதா இருந்தாலும்  இதைக் கொகொஞ்சம்மனசுல வச்சுக்கோங்ககே சார் …அந்த அருணாச்சலத்துக்குப் பிடிவாதம் அதிகம் . ஒண்ணை நினைச்சுட்டாருன்னே அதை முடிக்காம விட மாட்டாரு… இப்ப அவருடைய குறி உங்க மேல இருக்கு…நீங்க விலகிப்போறதுதான் பெஸ்ட்ன்னு எனக்குத் தோணுது சார்… இது என்னோட வேண்டுகோள் ப்ளீஸ்…”


“அவர்கிட்ட இருக்குற பிடிவாதம் என்கிட்ட மட்டும் எப்படி இல்லாம இருக்கும்?”


“சார்?”


“ஐ மீன் அவருக்கே பிடிவாதம் இருக்குன்னா எனக்கு எப்படி இல்லாம இருக்கும்… உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா பிரதாப் சார்? எங்கப்பா ரொம்ப பிடிவாதக்காரர்… எங்கம்மா அதுக்கு மேல… சொல்லப்போனா எங்கப்பாவை விட எங்கம்மாகிட்ட இருக்குற உறுதிதான் ஜாஸ்தி… ஆனா அது வெளில தெரியாது… ரெண்டும் தனித்தனியா இருக்குறப்பவே அதுக்கு சக்தி அதிகம்… அது ரெண்டும் சேர்ந்து இருக்கற எங்கிட்ட அது எந்த அளவுல இருக்கும்? அதோட போதாக்குறைக்கு எங்கப்பா வேற நான் அவங்க தாத்தா குணம்ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு… அந்த மனுஷனுக்கும் இந்தப்பிடிவாதம்;; கொஞ்சம் தூக்கல்தானாம்… சரி மரபுல தான் இப்படின்னு பார்த்தா வளர்ப்பும் அப்படிதான். முதல்ல நான் நினைச்சதெல்லாம் நடத்திக்கொடுத்து வளர்த்தாங்க… அதுக்கப்பறம் எப்படி நினைச்சதை நடத்தி முடிக்கிறதுன்னு சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க… என் பிடிவாதத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல சார்… நீங்க வீணா கவலைப்படாதீங்க நான் சமாளிச்சுக்குவேன்” என்றவனிடம் சார் என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தார் அவர்.


மாதவியுடையதுதான். தனக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தவன்தான் கலெக்டர் என்று தெரியாமலேயே முன்னால் எழுதிய கடிதத்திற்கு மன்னிப்பும் உடனடியாக எடுத்த நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்திருந்தாள் அந்தச்சிறுமி. போன முறை மதிப்பிற்குரியவராக இருப்பீர்கள் என்று நம்பும் கலெக்டர் அவர்களுக்கு என்று ஆரம்பித்திருந்த கடிதம் இம்முறை பெருமதிப்பிற்குரிய கலெக்டர் அவர்களுக்கு என்று ஆரம்பித்திருந்தது.

அந்தக் கடிதத்தைப் படித்து முடித்தவனின் முகம் மென்னகையில் மலர, அதைப் பிரதாப்பிடம் காட்டியவன் “உண்மையில் இந்த மாதிரி நம்ம வேலையில மக்களுக்கு ஏற்படுகிற மனநிறைவுதான் சார் நமக்கான ஊதியம்” என்றவன்,                                                                                                                        கையோடு அமர்ந்து பதில்கடிதம் ஒன்றை எழுதிப் பத்திரப்படுத்திவிட்டுப் பணிகளைத் தொடர்ந்தான். விடைபெறும் வரைப் பொறுப்புகள் அவனுடையதுதானே…

மாலை பிரதாப்பையும் சர்வேசனையும் கட்டியணைத்தவன் விடைபெறுகையில் இருவரும் நெகிழ்ந்துதான் போனார்கள்… கூடவே கலங்கியும்…
வீட்டிற்குச் சென்று உடைமைகளை எடுத்தவன் அந்தப் பூங்காவிற்குச்

சென்றான். வாயிலில் எப்பொழுதும் அமர்ந்திருக்கும் மாதவியின் பாட்டியைக் காணவில்லை… வேகமாக பூங்காவை அலசியவனின் கண்களில் மாதவியும் படவில்லை… ஆனால் அவன் அவளை மட்டும் தேடவில்லையே. அவனது பின்னால் தம்பி என்று அவன் தேடிய அவனது அன்னையின் குரல் கேட்கவும் சட்டெனத் திரும்பினான்.
“மாதவியைத் தேடுறியாப்பா?”


“ம்ம் ஆமாம்மா எங்க?”


“அவங்களோட ஊர்ல இந்த நேரத்துல திருவிழாப்பா… அதுக்குப் போயிருப்பாங்க…உங்கிட்ட சொல்லலயா?”

 
“இல்லம்மா மறந்துருப்பாளா இருக்கும் பரவால்ல… அவ வந்தான்னா நான் ஊருக்குப் போயிட்டேன்னு மட்டும் சொல்லிரீங்களா?”


“ஊருக்கா?”

“ம்ம் ஆமாம்மா வேலை விஷயமா…”


“திரும்பி வந்துருவீங்களா?”


“முடிஞ்சாம்மா… ஆனா 99 சதவீதம் வாய்ப்பில்ல…”


“புரியல…”

“வெயிட்டிங் லிஸ்ட்ல போட்டுருக்காங்கம்மா… அடுத்து சில ஐ.ஏ.எஸ் ஆபிசர்களை மாற்றல் செய்யறப்ப தான் என்னையும் ஏதாவது பொறுப்புக்கு மாத்துவாங்க.அது எப்பப் போடுவாங்கன்னு தெரியாது. ஏன் அப்படியே மத்தவங்களுக்குப் போட்டாலும் எனக்கு போடணும்ங்கற அவசியம் கிடையாது.”

 
“அப்ப கிட்டத்தட்ட வேலை இல்லாத மாதிரியா?”


“ஆமாம்மா… சம்பளம் வரும்… ஆனா வேலை செய்ய முடியாது…”


தன்னருமைக்கணவரின் வேலை என்று அவருக்குப் புரிந்தது… ஆனால் அவரால் இந்த விஷயங்களில் எதுவும் செய்ய முடியாது. இவனோ தன் அன்னையை ஆசைதீர அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டிருந்தான்.

“ஸாரிப்பா…”


“எதுக்கும்மா?”


“அது… நான் அருணாச்சலத்தோட மனைவி…”


‘அது எனக்குத் தெரியாதா ஏன்ம்மா நீ வேற…’ “சரிம்மா அதுக்கென்ன?”


“இல்லப்பா என் கணவருக்கும் உங்களுக்கும் ஏதோ பிரச்சனைன்னு …

“ஆமாம்மா பிரச்சனைதான்… அதுக்கென்ன?

அவர் சொல்லத்தயங்க,

“இங்க பாருங்கம்மா… அவருக்கும் எனக்கும் பஞ்சாயத்து வாய்க்கால் தகராறு இதெல்லாம் ஆபிஸோட… எனக்கு உங்களை மிஸஸ். அருணாச்சலம் ங்கறத விட மிஸஸ். பத்மினிங்கற வகையில தான் தெரியும்…”

சொல்லிக்கொண்டு போனவன் நாக்கைக் கடிக்க, என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும் என்று சரியாகக் கேட்டு விட்டார் அவர்.


“மாதவி சொன்னாம்மா…” சமாளித்தவன், இன்னும் நின்று பேசிக்கொண்டிருந்தால் எதையாவது உளறிவிடுவானோ என்ற பயத்தில் கடிகாரத்தைப் பார்ப்பது போல பாவனை காட்டிவிட்டு, “சரிம்மா எனக்கு டிரைன்க்கு லேட்டாகிருச்சு… வெளியில் ஆட்டோ வேற வெயிட்டிங்கல்ல இருக்கு… நான் வர்றேன்…” என்று கிளம்பினான்.


“சரிப்பா பார்த்துப் போயிட்டு வாங்க” என்றவர் அவன் சென்று ஆட்டோவில் ஏறும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். ஏறிய பின் ஆட்டோ அந்தத் தெருவைக்கடக்கும் வரை அவனுடைய பார்வை பின்னாலேயே இருந்தது. தெருவைக்கடக்கவும் பின்னால் சாய்ந்து பெருமூச்சுக்களை எடுத்துவிட்டவனின் மனம் வலிக்கத்தான் செய்தது. அவனுடைய பார்வை இந்தப்பக்கம் திரும்பியவுடன் தன் பார்வையைத் திருப்பிய பத்மினியின் மனமும் காரணம் தெரியாமல் வலிக்கத்தான் செய்தது. மனதில் ஏதோ யோசனை ஓடுகிறது என்பதற்கான தடம் அவரது முகத்தில்தெரிந்தது.

அழைப்பு மணியை அழுத்தி ஐந்து நிமிடங்களுக்கு மேலாகியும் கதவு திறக்காமல் இருக்கவே மீண்டும் இருமுறை தொடர்ந்து அழுத்தினான் அவன். பதில் இல்லாமல் போக விடாமல் தொடர்ந்து அழுத்தப் படாரென்று திறந்தது கதவு. திறந்த வேகத்தில் இவனைப் பார்த்ததும் ‘தெய்வமே தெய்வமே என்று வடிவேலு மாடுலேசனில் பாடியவன் கட்டிக்கொண்டான். ஆனால் முன்னால் அல்ல… முதுகிற்குப் பின்னால் வந்து ஒளிவது போல கழுத்தைக் கட்டிக்கொண்ட விவேகன் “அண்ணா காப்பாத்துண்ணா” என்று கதற, “என்னாச்சுடா ” என்றான் அருளாளன்.

“அண்ணா காப்பாத்துண்ணா…

“எதில இருந்துடா காப்பாத்த.? அதை முதல்ல சொல்லு … எதுன்னாலும் கழுத்தை விட்டுட்டு சொல்லித்தொல… முதுகுல இருக்குற பையோட சேர்த்து இழுக்குது… “

அவனோ,”அடேய் அண்ணா… தம்பி இந்தக் கதறு கதறிகிட்டு இருக்கேன். உனக்குக் கழுத்தாடா முக்கியம் கழுத்து” என்று அதையும் கதறலாகவே கூறி இன்னும் நன்றாக வேதாளம் போல் ஏறித் தொங்கினான்.

அந்த வேதாளத்தைத் தன்னிலிருந்துப் பிரித்தெடுத்து அவனை முன்னால் இழுத்தவன், கையை கழுத்தடியில் கொடுத்து கழுத்தை முன்னும் பின்னும் அசைக்கத் தொடங்கினான்.

அந்தக்கையைப் பிடித்த விவேகன் ,” டேய் அண்ணா… இங்க ஒருத்தன் உயிரக்கொடுத்துக் கத்திக்கிட்டு இருக்கேன். நீ கழுத்துக்கு மசாஜ் பண்ணிட்டு இருக்க… காப்பாத்துடா…”

“அடச்சை… காப்பாத்து காப்பாத்துங்கற… எதுல இருந்துன்னு சொல்லித்தொலை… என்ன கரப்பான்பூச்சியா?”

“சை… அதெல்லாம் என் லெவலுக்கு ரொம்ப கம்மி…”

“நீ அதுக்குப் பயந்ததே இல்லையாக்கும்…”

“அண்ண்ணா…”

“பின்ன என்ன எலியா?”

“இது ரொம்ப பெரிசு…”

“அப்பறம் என்னடா? ஏதாவது பூரான் தேள் பாம்பு அப்படி ஏதாவது வந்துருச்சா என்ன?”

“ஏன்டா சைனாக்காரன் சாப்பாடா சொல்றியே… அவனுங்க சாப்பிடுற மெயின் ஐயிட்டத்தை விட்டுட்டியே…”

“ஏய்… அது அவங்க உணவுப்பழக்கம்… நாம கிண்டல் பண்ணக்கூடாது…”


அய்யா சாமி…”

சரி சரி என்னன்னு சொல்லித்தொலை…”

நூடுல்ஸ்டா நூடுல்ஸ்…”

அடச்சை… நம்ம நூடுல்ஸ்க்கா இந்தப்பயம் பயந்த… நீ ஏதாவது பண்ணி வச்சிருப்ப… உள்ள வந்துத் தொலை… “

நான் எதுவும் பண்ணி வைக்கலடா… அவதான் பண்ணி வச்சுட்டு உயிர வாங்குறா…நம்ம நூடுல்ஸ் இல்லடா நூடுல்ஸோட நூடுல்ஸ்…”

ஒரு இழவும் புரியல… வா உள்ள போவோம்… சும்மாவே டயர்டா இருக்கு… டிரைன்ல லாங் டிராவல் பண்ணி வந்துருக்கேன். வாசல்ல நிக்க வச்சே உயிரை வாங்காத…”

அண்ணா வேண்டாம் உள்ள போகாத… உயிருக்கு உத்திரவாதம் கிடையாது… வா நம்ம ரெண்டு பேரும் அப்படியே காமவுண்ட் சுவரேறி குதிச்சு ஓடிப்போயிருவோம்.”
அவன் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே விவேக் என்று குரலில் தேனொழுக அழைத்தபடி வந்த தங்கையைக் கண்டு முகம் மலர்ந்தவனுக்கு அவளது கையிலிருந்த தட்டில் இரத்த நிறத்தில் விகாரமாகத் தோற்றமளித்த நூடுல்ஸைப் பார்த்ததும் விவேகன் சொன்னது புரிந்தது.

“ ஸாரி அட்ரஸ் மாறி வந்துட்டேன்” என்று பின்னால் திரும்பியவனது முதுகில் இருந்த பையைப் பிடித்திழுத்து நிறுத்திய விவேகன்
“ ஒழுங்கா ஒண்ணாப்போயிரலாம்ன்னு சொன்னப்பவே வந்துருக்கணும்… இப்ப தனியா எஸ்கேப் ஆகலாம்ன்னு பார்க்குறியா நோ வே… ஒழுங்கு மரியாதையா அவ்வளவையும் தின்னு என்னைக் காப்பாத்துற…”

அருளாளனைக் கண்டதும் அண்ணா என்று ஆசையாக ஓடி வர, இவர்கள் இருவரும் அவள் ஓடிவந்த வேகத்தில் கையிலிருந்த தட்டு கீழே விழுந்துவிடும் என்று ஆசையாகப் பார்த்தார்கள்.
ஆனால் மிக அழகாக தட்டுக் கீழே விழாமல் ஓடிவந்தவள் அதைப் பத்திரமாக விவேகனது கையில் கொடுத்துவிட்டு இவனது தோளில் சாய்ந்தாள்.
அவளது தலையைப் பரிவுடன் தடவிவிட்டவன் விவேகனிடம் கண்ணைக் காட்ட கட்டை விரலை மேலே தூக்கிக் காட்டியவன் முகத்தை அண்ணனது தோளில் புதைத்து சாய்ந்திருந்தவளது தலைக்கு மேல் தட்டை உயர்த்தி விட்டு டங்கென்று போட்டான்.

அந்தச் சத்தத்தில் திரும்பியவள் வாயைத்திறக்கும் முன்னரே விவேகனிடம் கண்ணடித்துவிட்டு ஒப்புக்கு வசைபாடிய அருளாளன், “எவ்வளவு ஆசைஆசையா கஷ்டப்பட்டு செஞ்சுருப்பா… இப்படி பண்ணிட்டியேடா” என்று பினிஷிங் டச் கொடுத்தான்.

அதில் உருகி விட்டவள், “அண்ணா பாவம்ண்ணா திட்டாதண்ணா… அவன்தான்ண்ணா ரொம்பப் பாவம் நான் பண்றத ஆசையா பக்கத்துலயே இருந்து பார்த்துக்கிட்டு இருந்தான் தெரியுமா?” அவள் சொல்லும்போது சிரிப்பு வரத்தான் செய்தது. இருவரும் கஷ்டப்பட்டு அடக்க ,  அவளோ, “ஆனா இப்ப இதை யாரு க்ளீன் பண்றது? ” எனக்கேட்டாள்.

எதிரியைத் தடம் தெரியாமல் அழிக்க விரும்பும் போர் வீரன் போல “நான் பண்றேன்க்கா” என்று ஆவலாக முன்வந்தான் விவேகன்.

ரொம்ப தேங்க்ஸ்டா..

அதை நான் தான் சொல்லணும்…

என்னது?

ஸாரி சொல்லணும்ன்னு சொன்னேன்க்கா…

பரவால்லடா… அண்ணா நீ முதல்ல உள்ள வந்து பிரஷ் ஆகு… நான் அம்மாகிட்ட சொல்றேன் என்று உள்ளே செல்ல,
அவளது தலை மறையவும் ஹைபை தட்டியவர்கள் அடக்க இயலாமல் நகைத்தார்கள்…
மாறிமாறி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து நகைத்துக்கொண்டே இருந்தவர்கள் அண்ணா என்று மேகலையின் சத்தம் கேட்கவும் மீண்டும் ஒருமுறை ஹைபை தட்டிவிட்டு விவேகன் தரையைச் சுத்தப்படுத்தவும் அருளாளன் தன்னைச் சுத்தப்படுத்தவும் சென்றனர்.

குளித்துவிட்டு வந்தவனிடம் மேகலை அலைபேசியை நீட்டினாள். அவனது (வளர்ப்பு) அன்னைதான்…

அருள்…என்னப்பா ஊருக்கு வந்துருக்கியாமே…

ஆமாம்மா…

என்னப்பா திடீர்ன்னு…

நீங்க ஊருக்கு வாங்கம்மா சொல்றேன்…

எதுவும் பிரச்சினை இல்லலடா?

அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா…

உங்களுக்கு அங்க ஒண்ணும் அன்ஈஸியா இல்லலம்மா…

அதெல்லாம் இல்லடா… எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?

பின்ன? இவ்வளவு நாள் கழிச்சு உங்க பிறந்தவீட்டுக்குப் போயிருக்கீங்க சந்தோஷமா இருக்காதா என்ன? என்ஜாய்…

டேய்… என்று சிரித்தவர் சரிசரி உங்க அப்பாட்ட பேசு என்று அவரிடம் அலைபேசியைக் கொடுத்தார்.

டேய் மகனே…

என்னப்பா…ரெண்டு மாமாங்கம் கழிச்சு மாமனார் வீட்டுக்குப் போயிருக்கீங்க… எப்படி இருக்கு மாப்பிள்ளை மரியாதையெல்லாம்…

வேற லெவல்ல…

வேற லெவல்லா? என் பொண்ணை ஏன்டா கூட்டிட்டுப்போனன்னு கட்டிவச்சு அடிக்கலையா உங்களை அவங்க…

அடேய்…

அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரனா என்றொரு முதிய குரல் கேட்க, ஆமா மாமா உங்க மூத்த பேரன் என்று பதிலளித்த வெற்றி, தாத்தா கேக்குறாங்க பேசு…என்று போனைத் தன் மாமனாரிடம் கொடுத்தார்.

வெற்றி தாய்தந்தையற்றவர் என காதலுக்கு வாணியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் மேற்படிப்பிற்காக மேலைநாடு சென்ற வெற்றியுடன் வாணியும் இணைந்தே சென்றார்.
ஓடியெல்லாம் போகவில்லை… நீங்கள் மறுக்கிறீர்கள் நானும் மாறமாட்டேன் என்று அனைவரும் இருக்கும்போது கூறிவிட்டுத்தான் வெளியேறினார்.
அதில் பல வருடங்களாகப் பேசாமல் இருந்தவர்களைப் பிள்ளைகள் மூவரும் தான் முதலில் போய்ப்பார்த்துப் பேசினார்கள்.
அருளாளனின் ஐடியாதான். என்னதான் மகிழ்ச்சியாக இருப்பது போல இருந்தாலும் தாய்தந்தையின் நினைவு அவ்வபொழுது வாணிக்கு வருவதை அவனால் உணர முடிந்தது.
அனுபவிப்பவன்தானே அவனும்…

அனாதைப்பயலை நம்பிப்போய் அழிந்துவிடப்போகிறாய் என்று திட்டியவர்கள் மணிமணியாய் மூன்றுப்பிள்ளைகளைக் கண்டவுடன் அதுவும் மூத்த மகன் (முதலில் பேசத் தொடங்கிய மேகலை அப்படித்தானே அறிமுகப்படுத்தினாள்.) கலெக்டர் எனவும் தானாக மரியாதை வந்தது. சமாதானமாகிவிட, உறவுப்பயிரை வளர்ப்பதில் முனைந்தனர் அதில் ஒரு படிதான் இது,..

அந்தத்தாத்தாவைத் தொடர்ந்து பேசிய பலரிடமும் இயல்பாக கலகலவென்று பேசி முடித்தவனுக்கு தொடர்பைத் துண்டித்தபொழுது கண்ணில் நீர் துளிர்த்திருந்தது.
அனைவரும் அவனை அந்தக்குடும்பத்தின் மூத்த வாரிசாகவே நினைத்துப்பேசினர். அதன் பொருள்? வெற்றியும் வாணியும் அவனை யாருடமும் விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதானே… ஏன் மேகலைக்கும் விவேகனுக்கும் கூட தெரியாது…
இவன் அவர்களுக்குக் கிடைக்கும் போது மேகலைக்கு விவரம் தெரியாத வயது… விவேகன் பிறக்கவே இல்லை…
இன்று வரை அவர்களைப் பொறுத்தவரை அவன் அவர்களது சொந்த அண்ணன்தான். மூவரையும் பிரித்துப் பார்க்கும் வகையில் கண்டிப்பும் சரி… பாசமும் சரி…
கூடுதலாகவோ குறைவாகவோ வழங்கப்பட்டதில்லை…
மூவருக்கும் சமம்தான்.

பாசம் வற்றிப்போன கொடுமைப்படுத்தும் இடத்தில் இருந்தாலாவது பரவாயில்லை… இவ்வளவு பாசத்தை அள்ளிக்கொடுக்கும் இடத்தில் இருந்துகொண்டு ஏன் அவனால் அருணாவையும் பத்மினியையும் மறக்க இயலவில்லை என்பதுதான் அவனுக்குப் புரியாத புதிராக இருந்தது.
அவர்கள் பாசத்தை கொடுக்குமளவு நான் வைக்கவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி வேறு மனதைத் தைத்தது.
யோசனையில் சிலையாக அமர்ந்திருந்தவனை உலுக்கி போனைக் கட் செய்து விட்டாயா என்று சைகையில் கேட்டார்கள் அவனது அருமை தங்கையும் தம்பியும்.

அவன் ஒப்புதலாகத் தலையாட்டவும் அவனது இருபுறமும் தொப்பென்று அமர்ந்தவர்கள் ” நீ பேசினது கேட்ட எங்களுக்கே டயர்ட் ஆகிருச்சு…உனக்குக் கண்ணு கலங்குனதுல ஆச்சரியமே இல்ல…

நல்ல வேளை நாங்க போய்க் கதவைச் சாத்திக்கிட்டோம்…” என்றவர்களின் காதுகளை இருகையால் பிடித்துத் திருகியவன் ” அப்ப வேணும்ன்னே தான் கூப்புட கூப்புட வரலையா? “

ஷ்ஷ்;…. “கஷ்டப்பட்டுக் காதுகளை விடுவித்தவர்கள்,
“அப்பறம் என்னண்ணா? குடும்பமா அது? குட்டிக்கிராமம்… அவ்வளவுபேர்ட்டயும் நேர்ல பேசுறதே கஷ்டம்… இதுல போன்ல வேற…சரி அதை விடு… அண்ணா நீ போய் நல்ல சாப்பாடா செஞ்சு கொடுண்ணா… “

என்னது? நல்ல சாப்பாடா? அப்ப நான் சமைச்சது நல்லா இல்லைன்னு சொல்றியாடா நீ”

சேச்சே… உன் சாப்பாடைப் போய் அப்படி சொல்லுவனாக்கா? நேத்து எப்பேர்ப்பட்ட தோசை ஊத்திக்கொடுத்த… அப்படியே சும்மா இட்லி கூடத் தோத்துப்போயிரும்… அப்படி ஒரு தோசையை நான் சாப்பிட்டது… ஏன் பார்த்தது கூட இல்லையே… எங்க நல்ல நேரம் சாரி கெட்ட நேரம் உன் நூடுல்ஸைத்தான் சாப்பிட முடியாம போயிருச்சு… அதான் அண்ணன் கிட்ட அக்கா அளவு இல்லன்னாலும் ஏதாவது நல்ல சாப்பாடா செஞ்சு கொடுன்னு சொன்னேன்.”

ஓ அப்படியா ஒரு நிமிஷம்” என்று சமையலறைக்குள் சென்றவள் ஒரு பெரிய சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தாள்.

நீ இப்படி பீல் பண்ணக்கூடாதுன்னுதான்டா திரும்பவும்  இருந்த நேரத்துல சமைச்சுட்டேன்… என்ன பார்க்குற… எல்லாமே அதே ரேஷியோதான்…”

என்னது அதே ரேஷியோவா?”

ஆமாம். ஒரு தடவை உனக்கு ஞாபகம் இருக்கா? இதே மாதிரி அம்மா ஒரு கல்யாணத்துக்குப் போனாங்கள்ல…அப்ப இதே நூடுல்ஸைத் தான் செஞ்சு காலேஜ்க்குக் கொண்டு போனேன். ஒரு பிரண்ட் பசிக்குதுன்னு கேட்டாங்கன்னு கொடுத்தேன். எவ்வளவு ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டாங்க தெரியுமா?”

இதை… ரசிச்சு… ரசிச்சு…”

ம்ம்;… அதோட எவ்வளவு பாராட்டு தெரியுமா? நான் ஹோட்டல் ஆரம்பிச்சா இந்த ஊர்ல ஒரு ஹோட்டல் கூட இருக்காதுன்னு சொன்னாங்க தெரியுமா?”

ஆமாமாம்… மக்கள் கோபத்துல உன் ஹோட்டல மட்டும் இல்ல… எல்லா ஹோட்டலையுமே தீவச்சு எரிச்சுருவாங்க…”

என்னது…”

ஒண்ணுமில்லையே….”

டேய் ஒருவேளை நல்லா இருந்துச்சோ என்னமோ சாப்பிடாம கிண்டல் பண்ணாத”
என்ற அருளாளன் அதை எடுத்து வாயில் வைத்தான்.

அவனிடம்” நல்லாருக்குல்லண்ணா “என்று மேகலையிடம் எதுவும் சொல்லாமல் கொஞ்சத்தை எடுத்து அவளுக்கும் ஊட்டிவிட்டான். (திணித்தான்)
வாயில் வைத்தவுடனேயே புரையேறினாலும்  அவள்  இருமிக்கொண்டே “சூப்பரா இருக்குலண்ணா” என இப்பொழுது அருளாளனுக்குப் புரையேறியது.

என்னண்ணா… சூப்பரா இருக்குலண்ணா… அதே ரேஷியோ எல்லாம் கரெக்டா இருக்குங்களாண்ணா?

இல்லைன்னா நான் சொல்றேன் செக் பண்ணிக்கோங்கண்ணா…

ரெண்டு பாக்கெட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்ங்கண்ணா…

அதுக்கு  இன்ஸ்டன்ட் மசாலாவோட ரெண்டு பெரிய குழிக்கரண்டி மிளகாப்பொடிங்கண்ணா
அதே அளவு உப்புங்கண்ணா  இன்னும் வேற என்னென்ன கருமமோங்கண்ணா
சமையல்ல நீ அம்மாக்கு ஹெல்ப் பண்றேன் பண்றேன்னு போய் இந்தக் கருமம் கூட செய்யத் தெரியாம வளர்த்து வச்சுருக்கீங்க இதை… ஒழுங்கு மரியாதையா உன் தங்கச்சிக்குச் சமைக்கக் கத்துக்nகொடு. இல்லன்னா வர்றவன் ரொம்பப்பாவம்…” கிண்டலடித்தபடியே இருவரிடமும் தண்ணீரை நீட்டினான் விவேகன்.

அதைக் குடித்து ஆசுவாசப்படுத்தி விட்டு “இதை நீ செஞ்சதைக் கூட மன்னிச்சுருவேன். ஆனா இதைச் சாப்பிட்டுப்பார்த்தும் சூப்பரா இருக்குன்னு சொன்ன பார்த்தியா… அதைத்தான் என்னால தாங்க முடியல”… என்றவனிடம் “நல்லா தான இருக்கு…சக்தி கூட நல்லாதான் இருக்குன்னு சொன்னாங்க…” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்தாள்.

அம்மா தாயே யார் அந்த சக்தி… மனுஷியா இல்ல வேற எதுவுமா? அவ கிட்டயே போய் கொடு சாப்பிடட்டும். எங்களை ஆளை விடு. ” என்றுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என இருவரும் கழன்று விட
‘ சை.. இப்படி உளறிட்டோமே…நல்லவேளை அண்ணன் சக்திங்கற பேரை பொண்ணுன்னு நினைச்சுட்டான் ‘என்று அவளும் தப்பித்த நிம்மதியில் நகர்ந்தாள்.

மதியத்திற்கு மேல் டி.வி முன் அமர்ந்திருந்தவர்களிடம் வந்தவள், “அண்ணா பீல்டு வொர்க் விஷயமாக ஒரு பிரண்டைப் பார்க்கணும் போயிட்டு வரேன்ணா “என்றாள் அருளாளனிடம்.

எங்கடா?

பக்கத்துல தான்ணா… சாரங்கன் நகர் வரை…

சரி போய்ட்டு வா…

திரும்பியவளை விவேகனின் குரல் தடுத்தது.

“நில்லு ஞாயித்துக்கிழமை உனக்கு என்ன பீல்டு வொர்க்கு?”

‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி பிடுங்குமாம்… அண்ணனே ஒண்ணும் சொல்லல… இவனை…’
மனதில் அந்தப் பூசாரிக்கு அர்ச்சனை செய்தவள்,
“நீ சின்னப்பையன் உனக்குத் தெரியாது…
நீ ஒழுங்கா பப்ளிக் எக்ஸாம்க்குப் படி… “
என்று அவனை அடக்கி விட்டு ‘வரேன்ண்ணா ‘என்று ஸ்கூட்டியை எடுத்து விட்டு சிட்டாகப் பறந்து விட்டாள்.

சற்று நேரத்தில் பார்த்துக்கொண்டிருந்த படம் முடிந்துவிட,

அண்ணா போர் அடிக்குது… வெளியில எங்கையாவது கூட்டிட்டுப் போடா…

அடேய் பப்ளிக் எக்ஸாமை வச்சுக்கிட்டுப் படம் பார்க்கிறதே தப்பு… இதுல உனக்கு ஊர் வேற சுத்தணுமா? என்று தலையில் கொட்டியவனைப் பார்த்து,

நீயுமா? முடியலடா அண்ணா… எல்லாரும் படிபடின்னு டார்ச்சர் பண்றாங்கடா யாரைப் பார்த்தாலும் உனக்குப் பப்ளிக் எக்ஸாம் தான தானன்னு போறவன் வாரவன்லாம் படிபடின்னு அட்வைஸ் பண்றான்டா அண்ணா மூச்சு முட்டுது… அப்பாகிட்ட கேட்டா எக்ஸாம் முடியட்டும் முடியட்டும்ங்கிறாரு… தனியாவும் விட மாட்டேங்குறாங்க… பிரெண்ட்ஸ கூப்பிட்டா எந்தப்பக்கியும் பயத்துல புக்கை விட்டு நகர மாட்டேங்குதுங்க…

நாளைக்கழிச்சு பரிட்சையை வச்சுக்கிட்டு அதுவும் பிசிக்ஸ் பரிட்சையை வச்சுக்கிட்டு எவன் வருவான்?

நான் வருவேன்டா கூட்டிட்டுப் போ பிளீஸ்…

பாவமாகச்  சொல்லியபடி

மேலே சாய்ந்தவனது தலையைச் செல்லமாகக் கலைத்துவிட்டவன்
“சரி … ஆனா எங்க?”என்றான்.

எங்கையாவது…. பைக் போன போக்குல கூட்டிட்டுப் போடா… வீட்டுக்குள்ளேயே இருந்தா வெறும் ஈக்குவேசனும் டெரிவேசனுமா தலைக்குள்ள சுத்துது…”

சரி வந்துத்தொலை…”

அண்ணா நான் ஓட்டவா?”

சார் அடங்குறீங்களா? உனக்கு எக்ஸாம் லீவுல நானே பைக் ஓட்ட சொல்லித்தரேன். எல்எல்ஆர் போட்டு அப்படியே லைசென்ஸ்ம் வாங்கிரலாம். இப்ப ஒழுங்கு மரியாதையா மூடிட்டு உட்காரு…

மிதமான வேகத்தில் அதிகப்போக்குவரத்தற்ற இடங்களில் வண்டியைச் செலுத்தியவன், அப்படியே கடற்கரைச் சாலையில் வண்டியை விட்டான்.

அண்ணா கடல்காத்து மனசை ரிலாக்ஸ் ஆக்குதுண்ணா… அப்படியே நிறுத்துண்ணா கொஞ்ச நேரம் பீச்ல போய் கால் நனைச்சுட்டு வருவோம்…

அதுக்குத் தான் வந்தேன்

வா…

கடலலை காலை நனைத்தலைக்க, காலடியில் மண் கரைந்திழுக்க… அந்த சுகமான உணர்வை அலைகளில் இறங்கி ரசித்து விளையாடிவிட்டு, சற்று நேரம் கழித்து மண்ணில் வந்து அமர்ந்தனர் இருவரும்…

அவர்களின் பின்னால் ஒரு குரல் கேட்டது.

என்ன அம்மு எவ்வளவு நேரம்? கலை அப்ப இருந்து உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? சீக்கிரம் வா…

போனைக்கட்செய்தவன்,

சாரிப்பா… பேக் பண்ணிட்டு இருக்காளாம்… டிரைனிங்க்கு நாளைக்குக் கிளம்பணும்ல… வந்துட்டே இருக்கா…

பரவால்ல சக்தி… அதனால ஒண்ணுமில்ல நான் வெயிட் பண்ணிப்பார்த்துட்டே போறேன்…

மேகலையின் குரல் கேட்க ஒருசேரத் திரும்பினர் இருவரும்…

(தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *