Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 31

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 31

“கரையில நின்னு வெயிட் பண்ணுறதுக்கு கடல் அலையில நின்னு வெயிட் பண்ணலாமே?

“ஆங்?

“இல்ல சும்மா தான நிக்குறோம்… அலையில கால் நனைக்கலாமான்னு…
சிரித்தவள், “சரி வாங்க…” என்று விட்டு, அண்ணனையும் தம்பியையும் தாண்டிச் சென்றபோதிலும் கூட அவளது கண்கள் சக்தியைத் தாண்டி அவர்கள் புறம் திரும்பவில்லை…

“அண்ணா என்னண்ணா இது? யார்ண்ணா அது அக்கா கூட?

“எனக்கும் தெரியல… மே பீ பிரண்டா இருக்கலாம்…

“ஆனா எனக்கு அப்படி தோணலண்ணா…

“விவா… நம்ம வீட்டுப் பொண்ணுங்களை நாமளே நம்பலன்னா வேற யார் நம்புவா? நான் பேசிக்கிறேன்… நீ நம்ம வண்டி பக்கத்துல போய் வெயிட் பண்ணு…

“என்ன ஏன்ண்ணா அனுப்புற?

“உனக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை வளரணும்டா… அதோட நீயும் வளரணும்…

“என்னது நான் வளரணுமா? உன்னை விட கொஞ்சம் தானடா ஹைட் கம்மி… இந்த ஹைட் போதுமே…”

காதில் ஆட்காட்டி விரலை வைத்து தேய்த்தவன் “காது வலிக்குது…” என,
“சரி போறேன்… “என்று கிளம்பினான் விவேகன் .

“பத்திரம்…பரிட்சைக்குப் பயந்து எங்கையாவது ஓடிப்போயிராத…

“இந்த ஐடியா கூட நல்லாருக்கே…

“மகனே நீ எங்க போனாலும் என்னால கண்டுபிடிக்க முடியும்… ஒழுங்கு மரியாதையா வண்டி பக்கத்துல நில்லு…

“சரி சரி…

அவன் சென்றதும் தங்கையைப் பார்த்தான்… அவள் இன்னமும் இவர்களைக் கவனிக்கவில்லை… அவளது கவனமெல்லாம் கடலில் தான் இருந்தது… அல்லது காதலிலோ?

“மேகலா…” அவளை அழைத்தான்… எப்பொழுதும் அழைப்பது போலத்தான்…
ஆனால் அவனது தங்கைக்குக் கிலியூட்ட திடீரெனக் கேட்ட அண்ணனது அமைதியான குரலே போதுமானதாக இருந்தது. அவனின் கம்பீரக்குரல் அவளது காதுகளை ஊடுருவ, திடுக்கிட்டுத் திரும்பியவள் தடுமாறிவிழப்போக சக்தி தாங்கிப்பிடித்தான். அதில் அவளது முகம் இன்னும் பேயடித்தது போல மாற “அண்ணா” என்றபடி வேகமாக அலையை விட்டு வெளியே வந்தாள்.

“என்னடா பிரண்ட மீட் பண்ணிட்டியா?” சக்தியை அளவெடுத்தவனின் கூர்பார்வையில் இப்பொழுது சக்திக்கு உதறலெடுத்தது…

“ஆ…ஆமாண்ணா… இவர்தான்… சக்தி… சக்தியரசன்… லாயரா பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்காருண்ணா…”

“சக்தி… உங்கக்கிட்ட சொல்லிருக்கேன்ல… இது எங்கண்ணன்…”
அவள் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்க, “அருளாளன்…”என்று லேசாக நடுங்கிக்கொண்டிருந்த சக்தியின் கையைப்பிடித்துக் குலுக்கியவன் மேகலையிடம் திரும்பி “சரிடா நான் தம்பியோட வந்தேன்… அவன் வெளில வெயிட் பண்றான் நான் கிளம்புறேன். வர்றேன் மிஸ்டர் சக்தி” என்று விட்டு கிளம்பினான். அவன் எதையாவது கேட்டிருந்தாலாவது பரவாயில்லை… எதுவுமே சொல்லாமல் போகவும் மேகலைக்கே ஒரு மாதிரி இருந்தது.

“அண்ணா” அவனை நிறுத்தவள், “எனக்கும் வேலை முடிஞ்சிருச்சுண்ணா நானும் வர்றேன்… வர்றேன் சக்தி பை…” என சக்தியிடம் கண்களால் மன்னிப்பை வேண்டிவிட்டு அண்ணனைப் பின்தொடர்ந்தாள் அவள்.
மணலில் கால் புதைய நிதானமாக நடந்து கொண்டிருந்தவன் எதுவும் கேட்காமலேயே அமைதியாக வர, என்னவோ போல் இருந்தது மேகலைக்கு…

“அண்ணா…

“என்னடா..

“அது சக்திண்ணா…

“அதான் சொன்னியேடா…

“அது… அது… வந்து எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்ண்ணா…

நடந்துகொண்டிருந்தவன் நின்று தங்கையை நிதானப்பார்வை பார்த்தான்.

“பிடிக்கும்ன்னா… பிரெண்டாவா?”

“அ…அதுக்கும் மேல பிடிக்கும்ண்ணா” சொல்லிவிட்டு சட்டெனத் தலையைக் குனிந்தாள்.

“சாரிண்ணா…

“எதுக்கு…”

“பீல்டு வொர்க்ன்னு பொய் சொல்லிட்டு வந்ததுக்கு…அது தப்புதாண்ணா… ஆனா நான் அவரை பீல்டு வொர்க் போறப்ப தான் பார்த்தேன்… ரொம்ப நல்லவர்ண்ணா… ப்ளீஸ்ண்ணா…”

“உன் நூடுல்ஸைச் சாப்பிட்டா உடனே நல்லவனா?” இவ்வளவு நேரம் சீரியஸாக நின்றிருந்தவன் முகத்தில் புன்னகையுடன் விளையாட்டாகப் பேசவும் அவளுடைய முகமும் மலர்ந்தது…

அண்ணா என்று கட்டிக்கொண்டவள், “ரொம்ப தேங்க்ஸ்ண்ணா” என்றாள்.

“எதுக்குத் தேங்க்ஸ் சொல்ற…”

“நீ ஒத்துக்கிட்டதுக்கு…”

“நான் ஒத்துக்கவே இல்லையே…”

“அண்ண்ணா…”

“அவன் நிஜமாவே நல்லவனா இருந்தா நானே அப்பாம்மா கிட்ட பேசுறேன்… ஆனா நான் விசாரிக்கணும்…”

“அவர் நல்லவர்தான்ண்ணா…”

“இப்பதான கேட்டேன் உன் நூடுல்ஸைச் சாப்பிட்டா நல்லவனான்னு? அவனுக்கும் இதே மாதிரி ஒரு தங்கச்சி இருக்கலாம்…எல்லா தங்கச்சிங்களுக்கும் முதல் பரிசோதனை எலி அண்ணன் தான? அதுல பழகிருக்கலாம்…”

“அவருக்கு யாருமே கிடையாதுண்ணா… பிரெண்ட்ஸ் கூட அவ்வளவா கிடையாது… ரொம்ப ரிசர்வ் டைப்… ஆனா ஒரே ஒரு க்ளோஸ் பிரெண்ட் இருக்காங்க… அவங்கதான் நீங்க சொன்ன டெஸ்டிங்லாம் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்…அன்னைக்கு சாப்பிடுறப்ப கூட அம்மு செய்யுற சாப்பாடுக்கு முன்னாடி இதெல்லாம் அமிர்தம்ன்னு சொல்லிட்டேதான்ண்ணா சாப்பிட்டாரு… “

“அப்படி யார்க்கிட்டயாவது டிரைனிங் எடுத்தவனா இருந்தா உன்னை நம்பி கொடுக்கலாம்” என்றவன் தங்கையின் முகம் மிளிர்வதைப் பார்த்துவிட்டு “நல்லவனா இருந்தா” என்று சேர்த்துச் சொன்னான்.

“நல்லவர்தான்ண்ணா… என்று அவள் சிணுங்கவும்

“சரி பார்ப்போம் வா விவா வெயிட் பண்றான்…”

“என்னது அவனா?

“ஆமாம்…

“அய்யோ…

அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவனது வண்டியருகில் வந்து விட்டனர்…

விவேகன் அவளை முறைக்க, “அண்ணா வண்டியை எடுத்துட்டு வர்றேன்னு அவள் கிளம்பப் பார்க்க “அண்ணா நான் அக்கா கூட போறேன் என்றான் விவேகன்.

“ஏன்டா?

“ஒண்ணுமில்ல… சும்மாதான் நான் அக்கா கூட போறேன்… நான் வர்றதுல்ல உனக்கு எதுவும் பிரச்சனையாக்கா?

“இ… இல்ல…

“அப்ப வா…

“டேய் லூசு… என்கூட வாடா…” அவளிடம் ஏதோ வம்பிழுக்கப் போகிறான் என்பதை உணர்ந்தவன் அழைத்தான்… ஆனால் அவன் வரவேண்டுமே…

“இல்லடா நான் அக்காக்கூடயே வர்றேன்.. நீ வா… எனக்கு பைக்ல உட்கார்றத விட ஸ்கூட்டில உட்கார்ந்து வர்றது வசதியா இருக்கும்…”

“சரி … கவனம்…”

“சரிண்ணா… பை…”

அவர்கள் இருவரும் சென்றுவிட, பின்னால் திரும்பினால் ஒருத்தி சைக்கிளில் சர்க்கஸ் செய்து கொண்டிருந்தாள்…ரோட்டில் கிடந்த மண் சைக்கிள் சக்கரத்தைச் சறுக்கி விட, விழப்போகிறோம் என்று தெரிந்தது… ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை…

அருகில் கிடந்த பெரிய பெரிய கூர்மையான கற்கள் கண்ணில் பட ‘ விழுந்தா ஸ்ட்ரைட்டா கல்லுல தான் தலை லேன்ட் ஆகும்… போச்சு… இன்னைக்கு மண்டையில் அடிபட்டுப் போய்ச்சேர போறடி அமி…’ என்று நினைத்தவாறு சைக்கிளோடு சாய்ந்த பொழுது அவளது தலை எதிலோ மோதியது…

” அய்யோ கல்லுல மோதிட்டனா ஆனா வலிக்கவே இல்ல..”. என்று நிமிர்ந்து பார்க்க, அங்கே கல்லிற்கு பதிலாக ஆண்மகன் ஒருவனின் வலிய நெஞ்சம் இருந்தது… அவள் விழுந்து விடாமல் சைக்கிள் ஹேன்ட் பாரையும் கேரியரையும் இணைத்துப் பிடித்திருந்தான் அவன். கீழே விழவில்லை… என்ற நிம்மதி வந்தாலும் திடீரென அருகில் உணர்ந்த அன்னிய ஆண்மகனது ஸ்பரிசம் திடுக்கிடலை ஏற்படுத்த விரைவாக இறங்க முயன்றாள் அமிழ்தா… அவளின் அவசரத்தில் சைக்கிள் மீண்டும் சாய பயத்தில் அவனது தோளையே பற்றினாள் அவள்.

சைக்கிளை நன்றாகப் பிடித்த அருளாளன் “பொறுமைங்க… மெதுவா இறங்குங்க…விழ மாட்டீங்க… நான்தான் இருக்கேன்ல… என்னை நம்பி இறங்குங்க…விழ விட மாட்டேன் பயப்படாம இறங்குங்க…”.

அவன் சொன்னது போல அவள் மெதுவாக இறங்கிவிட சைக்கிளை ஓரமாக நிறுத்தி ஸ்டாண்ட் போட்டவன், “மணல்ல போகும்போது கவனமா போங்க என்ன?” என்றுவிட்டு வண்டியைக் கிளப்பினான்…

சரியென்று தலையாட்டிவிட்டு நின்றவளுக்கு, பதட்டத்தில் நன்றியுரைக்கவில்லை என்பது உறைக்க, “சார் தேங்க் யூ சோ மச்…” என்றாள் சத்தமாக. அவளது நன்றியை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக வளைவில் வளைந்திருந்தவனின் வாட்ச் கட்டியிருந்த இடக்கை மட்டும் உயர, தோளைக் குலுக்கி விட்டு சக்தியை நோக்கிச் சென்றாள் அமிழ்தா.

விழுந்துவிடக்கூடாது என்ற பதட்டத்தில் அவளும் அவனது முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லை… விட்டுவிடக்கூடாது என்ற கவனத்தில் அவனும் குனிந்து அவளது முகத்தைப் பார்க்கவில்லை.. தான் பேயாக மாறிய பின்தான் .தன்னுடைய தேவதையிடம் பழகும் வாய்ப்பு கிடைக்குமென்று அவனெங்கே கண்டான்?

வீட்டினுள் நுழைகையில் விவேகனும் மேகலையும் கதவைத் திறந்து கொண்டிருந்தனர். ஆனால் ஒருவரது முகத்தை ஒருவர் பாராமல் ஆளுக்கொரு திசையில் திரும்பிக்கொண்டு உள்ளே நுழைந்து ஆளுக்கொரு திசையில் சென்று விட, பின்தொடர்ந்த அருளாளன் எத்திசையில் செல்வது என்று தெரியாமல் தோளைக் குலுக்கி விட்டு, இருவருக்கும் எதிர்த்திசையில் சென்றான். வழக்கமாக இருவரும் ஓரிடத்தில் ஒரு நிமிடம் நின்றாலே ஒன்பது சண்டை வெடிக்கும்… அதைத் தீர்த்து வைப்பதிலேயே அவனது சக்தி தீர்ந்து விடும்… ஆனால் இன்றோ வந்து ஒருமணிநேரத்திற்கு மேலாகியும் வீடு அமைதிப்பூங்காவாகத் திகழ, உணவை செய்து முடித்துவிட்டு உணவுண்ண அழைத்தான்…. மாறிமாறி அழைத்தும் இருவரும் வராமல் போகவே, “இப்ப வர்றீங்களா என்னங்கடா?” என்று போட்ட அதட்டலில் இருவரும் வந்து விட்டனர். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் எதிரியைப்போல் முறைத்துக்கொண்டிருக்க, அருளாளன் மிகக்கவனமாக உணவில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியபடி உண்டு கொண்டிருந்தான். நிமிர்ந்தால் அவன்தலைதானே உருளும்… என்னதான் எச்சரிக்கையோடு இருந்தாலும் நடக்கவேண்டியவை நடந்துதானே தீரும்…

மேகலைக்குப் புரையேற, தண்ணீரை எடுத்துக்கொடுத்தான்.” தண்ணி மட்டும் கொடுக்கக்கூடாதுண்ணா தலையையும் தட்டி விடணும்” என்றபடி வந்த விவேகன் அவளது தலையைத் தட்டி(?) விட்டான். அது மேகலையினுள் உறங்கிக்கொண்டிருந்த மிருகத்தைத் தட்டி எழுப்பி விட, அருளாளனுக்குத்தான் உலகம் தட்டாமாலையாகச் சுற்றியது. ஒருவழியாக, அவர்களது பஞ்சாயத்தை முடித்து வைத்து உண்ண வைத்து தூங்க அனுப்பியவன் தாய்தந்தைக்காகக் காத்திருந்தான்.

தந்தை மட்டும் வர,
“என்னப்பா அம்மாவைக் காணோம்?”

“ரொம்ப நாள் கழிச்சுப் பொழியுற பாசமழை இல்லையா கொஞ்சம் கனமழையா பெய்யுதுடா. உங்கம்மாவை அங்கேயே இருக்க சொன்னாங்க… அவளும் சரின்னு அங்கேயே செட்டிலாகிட்டா…”

“அவங்க அங்க செட்டிலானது உங்கக் கவலையா? இல்ல உங்களை செட்டிலாகச் சொல்லலங்கறது உங்க கவலையா?”

“என்னையும்தான்டா சொன்னாங்க… என்னால தான் பிள்ளைங்கள பிரிஞ்சு இருக்க முடியாதுன்னு வந்துட்டேன்…”

“ஆஹான்? பொண்டாட்டி வீட்ல இல்லாம நாம மட்டும் என்ஜாய் பண்ணுவோம்ன்னு ஓடிவந்துட்டு நல்லா சமாளிக்கிறீங்கப்பா…”

“தெரியுதுலடா மகனே… அப்பறம் எதுக்கு கேக்குற…”

“சரி விடுங்க விடுங்க சாப்பிட்டீங்களாப்பா?”

“சாப்பாடெல்லாம் போட்டுதான்டா அனுப்புனாங்க… இங்க எல்லாரும் சாப்பிட்டீங்களா?”

“ம்ம்…சாப்பிட்டோம்பா…”

“சரிடா குட்நைட்…”

“அப்ப்பா…”

“என்னடா?”

“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்பா…”

“சொல்லு அருள்…” மகனின் குரலில் இருந்த தீவிரம் உணர்ந்து கேட்டார்.

“அப்பா அது வந்து நம்ம மேகலா…”

“மேகலா?”

“ஒரு பையனைப் பிடிக்கும்ன்னு சொன்னாப்பா….”

“பேரு சக்தியரசன்… ஜீனியர் லாயர் கரெக்டா?”

“உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாளாப்பா?” அவனுள் நிம்மதி பரவியது. ஆனால் அது அடுத்த நொடியே காணாமல் போனது வெற்றி சொன்ன பதிலில்.

“அவ சொல்லலப்பா… ஆனா என் பிள்ளைங்க என்னென்ன பண்றாங்கன்னு எனக்கு எப்படிப்பா தெரியாம இருக்கும்… எல்லாம் தெரியத்தானே செய்யும்…

“அவரது குரலில் இருந்த அழுத்தம் அவர் மேகலையைப் பற்றி மட்டும் பேசவில்லை என்பதை அவனுக்கு உணர்த்தியது.

“அப்பா?”

“ஆமாப்பா… என்பொண்ணு அங்கங்க வெளியில் தென்படுறப்பவே அந்தப்பையனைப் பத்தி விசாரிக்கவும் செஞ்சேன். என் பையன் ரொம்ப நாளா ஒருத்தரைப் பத்தி மட்டுமே விசாரிச்சுட்டு இருக்கறதைப் பத்தியும் விசாரிச்சேன்…”

அருளாளனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. “அப்பா எனக்கு உங்க மேல பாசம் இல்லாம இல்லப்பா… ஆனா அவங்களை… அவங்களையும் என்னால் விடவும் முடியலப்பா… எத்தனை வருஷமோ முயற்சி பண்ணிட்டேன்பா… பகல் முழுக்க, என்ன செஞ்சாலும் நைட்டு தூங்கும் போது அவங்க முகம் தான் பா ஞாபகம் வருது… நான் விலகி இருக்கத்தான்பா முயற்சி செய்யறேன் ஆனா முடியல…” அவனுடைய கண்கள் கலங்க…

“ஏன்டா விலகி இருக்கணும்?” அவனது தலையைத் தன் தோளில் சாய்க்க, அந்தத் தோளில் வாகாகச் சாய்ந்தவன், பதில் சொல்லாமலே இருக்க, “வந்த நாலு வருஷமா உன் பதினாலு வயசு வரைக்கும் நீ எங்கக் கேட்ட ஒட்டவே இல்ல அருள்… மேகலையை மட்டும்தான் பாப்பான்னு பாப்பான்னு கொஞ்சுவ… விவேகன் பிறந்ததுக்கப்பறம் அவனையும்… ஆனா உன்னைப் பத்தின எந்தத் தகவலையும் எங்கக்கிட்ட சொல்லவே இல்ல… எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போயிருவாருன்னு மட்டும் தான் சொல்லிட்டே இருப்ப… ஆனா உங்கப்பா யாரு? உங்க ஊரு எது? எதுவும் சொல்ல மாட்ட? உன்பேரையே நீ எங்கக்கிட்ட ரெண்டு மாசம் கழிச்சுதான் சொன்ன… சொன்னதுக்கப்பறமும் உன் பேரை மட்டும் வச்சு என்ன விசாரிக்கறதுன்னும் எங்களுக்குத் தெரியல…நாலு வருஷம் கழிச்சு எங்கப் போகலாம்ன்னு கேட்டப்ப நீயாவே அந்த ஊர் பேர சொன்ன… நெட்ல சர்ச் பண்ணி சொல்ற மாதிரிதான் சொன்ன… ஆனா சந்தேகம் வந்தது… அங்க போனதுக்கப்பறம் நீ எங்களை விட்டுப் போயிருவன்னு பயமும் வந்துது… ஆனா அதிசயமா அதுக்குப் பிறகுதான் நீ எங்களோட இன்னமும் நெருங்க ஆரம்பிச்ச… போலிஸ் டிபார்ட்மென்ட்ல இருந்த பிரண்ட்டுட்ட அங்க எதுவும் மிஸ்ஸிங் கேஸ் இருக்கான்னு கேட்டேன்… அங்க எந்த கேஸீம் பைல் ஆகல… ஆனால் செல்வாக்கு நிறைஞ்ச ஒருத்தர் தன் மகனை நாலு வருஷமா தேடிட்டு இருக்கறதாவும் சொன்னாங்க… நீ எதுக்காக அங்க போயும் திரும்பி வந்தன்னு எனக்குத் தெரியல… நீயா சொல்லுவன்னு பார்த்தேன்… ஆனா உனக்குச் சொல்லத் தோணவே இல்லலடா மகனே…” அவரது தோளில் சாய்ந்திருந்தவன், அப்படியே மடியில் முகம் புதைத்துப் படுத்தான்…

அவனது தலையைக் கோதிவிட்ட அவரது விரல்கள், அவனது முதுகின் அதிர்வை உணர, “அருள்… அருள்… அழுகிறியாடா?” அவனை எழுப்ப முயன்றார்.

அவன் எழாமல் மேலும் முகம் புதைக்கவே, மெல்ல ஒருகையால் தலையைத் தடவி விட்டவர், மறுகையால் அவனது முதுகைத் தட்டிக் கொடுத்தார்… அவன் அழுது அவர் பார்த்ததில்லை… அந்தச் சிறுவயதில் அவ்வளவு அழுத்தமா? என்று அவரே வியந்துதான் இருக்கிறார்.

அப்படிப்பட்டவன் இன்று அழுகிறான்… அழட்டும் என்று தோன்றியது… எத்தனையோ வருடங்களாக யாருமறியாமல் தனியாக மனதில் சுமக்கும் பாரம் கண்ணீரில் கரையட்டுமே என்று தோன்றியது…

சற்று நேரம் கழித்து “அருள் போதும்டா இதுக்கே அழுதா எப்படி…இன்னும் எவ்வளவு இருக்கு? கல்யாணம்லாம் பண்ணா தினமும் அழுக வேண்டிவரும்டா” வேடிக்கையாகப் பேச முயன்றார் ஆனால் முடியவில்லை…

“அருள் போதும்டா… பிளீஸ்டா வேண்டாம்டா… அப்பாவுக்காகடா…” கெஞ்ச எழுந்திருந்தான்.

“போதும் அருள் நீ அழுக வேண்டிய அவசியமில்லடா…”

“எல்லாரையும் அழுக வைக்கிறவருக்கு மகனாப் பிறந்தவன் அழுதுதானப்பா ஆகணும்…” விரக்தியில் உடைந்த குரலில் அவன் சொல்ல,

“வேண்டாம் அருள்… நீ எதுவும் சொல்ல வேண்டாம் போய் முகத்தைக் கழுவு… அப்பா போய் தண்ணி எடுத்துட்டு வர்றேன்… குடிச்சுட்டுப் படு… காலையில பேசிக்கலாம்…” அவர் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே இரண்டு கரங்கள் இரு தம்ளர்களில் அவன் முன்னால் தண்ணீரை நீட்டின…

விவேகனும் மேகலையும் தான்… சிவந்த விழிகளால் இருவரையும் உணர்ச்சியற்றப்பார்வை ஒன்றைப்பார்த்தவன், இரண்டையும் இருகரங்களால் வாங்கினான். இரண்டையும் மெல்ல அருந்தி முடித்தவன், குளியலறைக்குச் சென்று இரண்டு கைகளாலும் நீரை அள்ளி முகத்தில் தொடர்ந்து அறைந்தான்… உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் குளிர்விக்க, முகத்தைத் துடைத்தபடி வந்தவனை மூவரும் எதுவுமே கேட்கவில்லை… ஆனால் அவர்களுடைய கண்கள் கேட்டன. தந்தையின் கண்கள் மன்னிப்பு கேட்டன… தங்கையின் கண்கள் விளக்கம் கேட்டன… தம்பியின் கண்கள் நீ என் அண்ணனில்லையா என்று கேட்டன …

அவர்கள் மூவரும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, தனியாகக் கிடந்த சோபாவொன்றில் அமர்ந்து அவர்கள் மூவரையும் ஆழப்பார்த்தவன் பின் சொல்ல ஆரம்பித்தான்……………..

வேகமாகக் கையை உதறிய அமிழ்தா அவனைக் கடுப்புடன் ஏறிட்டுச் சொன்னாள்….

“ஐயா சாமி தெரியாம கேட்டுட்டேன்… உன் கதையைத் உன் தம்பி ஏற்கனவே சொல்லிட்டான் நீ திரும்ப ஆரம்பிக்காத தாங்க மாட்டேன். இங்க ஒரு கொசுவர்த்தியையே தாங்க முடியலை… அதையும் ஜவ்வா இழுக்குற… என்ன தான்யா உனக்குப் பிரச்சனை? என்ன நடந்துச்சுன்னு அப்பவே உன்ன ஷார்ட் அன்ட் ஷார்ப்பா சொல்லச் சொன்னேன்… நீ என்னன்னா இப்படி ஜவ்வு மிட்டாய் வித்துக்கிட்டுக் கிடக்க…. போடா நீயும் உன் பிளாஷ்பேக்கும்… எனக்கு ஒண்ணும் தேவையில்ல…”

“சரி அப்ப எனக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்ல…”

“ஆமா இவர் கதை பெரிய இந்தக்கதை… பைத்தியம்… பைத்தியம்… அதான் வளர்த்தவங்க அவ்வளவு பாசம் காட்டுனாங்கள்ல… அவங்க கூடவே இருந்துருக்கலாம்ல… அதை விட்;டுட்டு இங்க வந்து… ஆமா நீ எப்படி இங்க வந்த? வெயிட்டிங் லிஸ்ட்ல இருந்தா திரும்ப அதே ஊருக்குப் போட மாட்டாங்களே… வேற ஊருக்குத் தான போடுவாங்க… வந்து ரெண்டு வாரத்துல வெயிட்டிங் லிஸ்ட்க்குப் போனவன் திரும்ப வந்து எப்படி ரெண்டு வருஷம் இதே ஊர்ல வேலை பார்த்த?”

“அதெல்லாம் உனக்குச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல…தேவையில்லன்னுட்டல்ல அப்ப போ…”

“சரி பரவால்ல… நீ சொல்லாம இருந்தா எனக்குச் சந்தோஷம்தான்… ஆனா சில பல கண்டிஷன்கள் இருக்கு…”

அவன் எதுவும் சொல்லாமல் பார்க்க, அவள் தொடர்ந்தாள்…

“கண்டிஷன் நம்பர் 1 – நீ உன்னைப் பத்தின புல் டீடெய்ல்ஸ என்கிட்ட சொல்லல… அதனால நீ எப்பவுமே என்கூடதான் இருக்கணும்… நான் உனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாம எங்கையாவது போய் மாட்டிக்கிட்டேன்னா அந்த நேரத்துல என்ன பண்ணனும்ங்கறத எனக்குக் கைட் பண்ணனும்…”

அவள் கேட்ட மாதிரி சில வரிகளில் என்ன நடந்தது என்பதைச் சொல்லியிருக்கலாம்தான்… ஆனால் கேட்டுவிட்டு அப்பொழுதே வேறு வேலை பார்க்கப் போயிருப்பாள்… அவனுக்கு அவளுடன் இருக்க வேண்டும் போலிருந்தது… அதனால்தான் எங்கெங்கோ என்னென்னவோ கதைச் சுற்றி;க்கொண்டிருந்தான். அப்படியிருக்க, அவள் அவனைத் தன்னுடனே இருக்கச் சொன்னதும் அவனுக்கு மனதில் சாரல் அடிக்கத்தான் செய்தது…. அதைக்காட்டிக்கொள்ளாமல் அவளிடம் கேட்டான்…

“அதை நான் எதுக்குப் பண்ணனும்? நான் என்ன உன்கிட்ட ஹெல்ப்பா கேட்டேன்…”

“நீ கேக்கலடா நீ கேக்கல… நான்தான் கேக்குறேன் போதுமா? அந்த சக்தி பக்கி உன் கொலைகார அப்பன்கிட்ட மாட்டிட்டு இருக்கு…”

“ஏய்…”

“என்ன? உண்மையைச் சொன்னா ரோஷம் வருதோ? மாட்டிக்கிட்டு இருக்கிறது உன் மச்சான் தான்… எனக்கொண்ணும் இல்ல… நீ ஹாயா பேயா சுத்திட்டு இரு… அவனையும் உங்கப்பா ஒருநாள் உனக்குத் துணைக்கு அனுப்பி வைப்பாரு…”

“என்னை மீறி அது நடக்காது…”

“உன்னை மீறி நடக்காது சரி… நீயே நடக்க விட்டுட்டன்னா? “

“ஆங்.?..”

“என்ன ஆங்? நீ உன் உசுர பத்தியே கவலப்படல…சக்தி உயிர பத்தி கவலப்படுவன்னு எனக்கு என்ன உத்தரவாதம்? அதனால அவனை பத்திரமா மீட்கற வரை நீ என்கூடயே தான் இருக்கணும்…”

“கண்டிஷன் நம்பர் 2 – அப்படி இருக்குறேன் பேர்வழின்னு சும்மா சும்மா என் கண்ணுக்குத் தெரியாம இருந்துக்கிட்டு திடீர்திடீர்ன்னு முன்னாடி வந்து என்னைப் பயமுறுத்தக்கூடாது… என் கண்ணுக்குத் தெரியற மாதிரி தான் இருக்கணும்…”

“லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் இன்னொரு தடவை கொசுவர்த்தி சுத்தக்கூடாது…”

“அப்ப நான் எதுக்குச் செத்தேன்னு உனக்குத் தெரியவேண்டாம்?”

“தெரியணும்… ஆனா அதை நீ சொல்ல வேண்டாம் இந்த அமிழ்தாவே கண்டுபிடிச்சுருவா…”

“ஆஹான்…”

“ஆமாம்… சரி வா கீழப் போவோம்… நைட்டுப் பன்னெண்டு மணி… பேய் நடமாடுற நேரம்…”

“ஏன் மத்த நேரத்துலலாம் நாங்க நடமாட மாட்டோமா?”

‘ஐயோ இவனே பேய்ங்கறத அடிக்கடி மறந்துருற அமி…’ என்று தலையிலடித்தவள், “உன்னை மாதிரியே எல்லாப்பேயும் இப்படி பைத்தியம் பிடிச்ச பேயா இருக்குமா?”

“என்னது?”

“ஆமாம்…நான் தனியா பைத்தியம் பிடிச்சுப் பார்த்துருக்கேன்… பேய்ப் பிடிச்சுப் பார்த்துருக்கேன்… ஏன் பேய்ப் பிடிச்ச பைத்தியம் பத்திக் கூட கேள்விப்பட்டுருக்கேன்… ஆனா பைத்தியம் பிடிச்ச பேயை இப்பத்தான் பார்க்குறேன்…”

“ஏய்… ரொம்பப் பேசுனன்னா உன்னைப் பிடிச்சுருவேன்…பார்த்துக்கோ…”

“இதோடா… இவர் அப்படியே பிடிச்சுட்டாலும்… நாங்கல்லாம் டெர்ரரான பேய்க்கே பயப்பட மாட்டோம்…”

“நிஜமாவா?”

“நிச்சயமாக”

“பேச்சுமாறமாட்டியே…”

“நெவர்…”

“சரி அப்ப அக்கா இவளுக்கு ஓக்கேவாக்கா இங்கேயே வாங்க…” அவன் எங்கோ வெற்றிடத்தைப் பார்த்துப் பேச அவளுக்கு லேசாகக் குளிரடித்தது…

“எந்த அக்காகிட்டடா பேசுற…”

“அதுவா? ஒரு அக்கா பாவம்… என்னை மாதிரியே செத்துப்போயிட்டாங்க… அவங்களுக்கு உன்னை மாதிரி வயசுப்பொண்ணுங்க உடம்புல இறங்குறதுன்னா ரொம்பப் பிடிக்கும்… ஆனா என்ன அவங்க வெளில வர்றப்ப அந்தப் பொண்ணுங்களையும் கூடக் கூட்டிட்டு வந்துருவாங்க…”

“ஆங்?”

அவளது முகம் பயத்தில் வெளிறுவதைப் பார்த்து தனக்குள் சிரித்தபடியே தொடர்ந்தான்…

“ம்ம்…அவங்க மலையில இருந்து குதிச்சுதான் இறந்தாங்களா? ஏதோ ஒரு ஞாபகத்துல வேற உடம்புல இருக்கோம்ங்கறத மறந்து ஏதாவது மலையில இருந்து குதிச்சுருவாங்க… பாவம் அந்தப் பொண்ணுங்களும் சேர்ந்து இறந்துருங்க… இப்பக் கூட உன்னைப் பார்க்கவும் ஆசையா பக்கத்துல வந்தாங்க… என்கூட பேசிட்டு இருக்கறதைப் பார்த்துட்டு அப்படியே போயிட்டாங்க… ஆனா உன்னை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுருச்சு போல… கூப்புட்ட உடனே வந்துட்டாங்க பாரேன்…”

“எ..என்…என்…என்னடா சொ…சொல்ற?”

“ஆமா அமி இந்தா நிக்குறாங்க பாரு…” என்றவன் அவளது அருகில் இருந்த வெற்றிடத்தைக் காட்டியவன் அங்கே பார்த்து “அக்கா ஆனா பாவம்க்கா கொஞ்சம் பார்த்து என்ன? இந்தத்தடவையாவது உயரம் கம்மியான மலையா பார்த்துக் குதிங்கக்கா” அக்கறையோடு சொல்ல… அவ்வளவுதான்….

“ஐயோ அம்மா…நான் இல்ல…” என்று அலறியவள், அவனுக்கு இந்தப்பக்கம் வந்து அவனது பின்னால் ஒளிந்தாள்.

(தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 31”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *