Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32

அவனது பின்னால் வந்து ஒளிந்தவள் கைகள் நடுங்குவது போல் நடித்தபடி, “ஐயய்யோ நான் பயந்துட்டேன்… நான் பயந்துட்டேன்… பேய் சார்… பேய் சார் நீங்க என்ன பயமுறுத்தீட்டிங்க பேய்சார்…” என்றாள் கிண்டலாக…


அவன் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க, “என்ன மிஸ்டர் கோஸ்ட்… நான் என்ன சின்னப்புள்ளையா? பூச்சாண்டிக்கிட்ட புடிச்சுக் கொடுத்துருவேன்னு பயமுறுத்த? இதுக்கெல்லாமா நாங்க பயந்துருவோம்? பாருங்க மிஸ்டர் கோஸ்ட் பயமுறுத்துரதெல்லாம் ஒரு கலை…அது உங்களுக்கு வரலை… நீங்க வேணும்ன்னா ஒண்ணு பண்ணுங்க… ஏதாவது நல்ல டெர்ரரான பேயா பாத்து ஒரு கோர்ஸ் பண்ணிட்டு வாங்க…” என்று அவனது தோள் மேல் கைவைத்து அக்கறையாக அறிவுரை சொல்வது போல நக்கலடித்தாள்.


எதுவும் சொல்லாமல் அந்தக்கையைப் பற்றியவன் “இவங்கக்கிட்ட கோர்ஸ் பண்ணா ஓகேவா அமி…” என்று அமைதியாகக் கேட்டுவிட்டு கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்து இருகைகளிலும் மாறிமாறி தூக்கிப்போட்டு விளையாட ஆரம்பித்தான்… அவன் கையைப் பற்றவும் லேசாக மின்சாரஅதிர்வை உணர்ந்தவள், ‘யார்கிட்ட’ என்றபடி திரும்ப அங்கே…. அவளது அருகில் மிக நெருக்கத்தில் நிஜமாகவே ஒரு கொடூரமான உருவம் நின்று கொண்டிருந்தது…

“ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ………”

அலட்சியமாகத் திரும்பியவள், அதைக் கண்டு நிஜமாகவே அரண்டு அலறி, அவனது முதுகோடு ஒடுங்கினாள்.

“அடப்பாவி… அப்ப உண்மையைத் தான் சொன்னியா?;” அவனது முதுகில் முகத்தைப் புதைத்திருந்தவளின் நடுக்கமான குரலில் வந்த சிரிப்பை அடக்கியவன், “நான் எதுக்குப்பா பொய் சொல்லப்போறேன்… சந்தேகமா இருந்தா நீயே நல்லாப்பாரு…” என்றான் அப்பாவியாக கல்லைத் தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டே…


ஒருவேளை எதுவும் மேஜிக் பண்ணி நம்மளைப் பயமுறுத்துறானோ என்று தோன்றிவிட, மெல்ல அவனது முதுகின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாள்… ஒரு கண்ணின் ஓரக்கண்ணால் தான்…

ஆனால் அந்தப் பேய் இவளை நன்றாகப் பார்த்து விகாரமாகச் சிரித்தபடி வாவென்று கைகாட்ட… “ஐயோ…” மேலும் நன்றாக அவனை இறுக்கிப் பிடித்துக்கொண்டு முகத்தை ஆழப் பதித்தவள் “டேய்… அதைப் போகச் சொல்லுடா… நிஜமாவே பயமாயிருக்கு…” என்றாள்…

“ஆமா முன்னாடிலாம் நீ நல்ல பொண்ணா… சமத்தா… ரொம்ப மரியாதையா பேசிகிட்டு இருப்பியே…இப்ப என்ன மரியாதையே காணோம்…” பின்னால் ஒருத்தி பயத்தில் செத்துக்கொண்டிருக்க, அதைப் பற்றி கவலையே படாமல், கர்ம சிரத்தையாக கல்லைத் தூக்கிப்போட்டு விளையாடிபடியே கேட்டான்.

“ அடேய் பேயே… மரியாதையைக் கேட்டு வாங்க இதுவாடா நேரம்… அந்தப் பிசாசைப் போகச் சொல்லுடா… முதல்ல…”

“என்னது?”

““அ..அ..அது வந்து பேய் சார்… அந்தப் பிசாசு மேடத்தை முதல்ல போகச் சொல்லுங்க பேய் சார் பிளீஸ்… பயமா இருக்கு””

அச்சத்தின் உச்சத்தைத் தொட்டிருந்த அவளது குரலில் தன்னுடைய விளையாட்டை நிறுத்தியவன், அந்தப் பேயிடம் கண்காட்ட அது மறைந்தது…

“போயிட்டாங்க… கண்ணைத் திறந்து பாரு…”

“நிஜமாவா?”

“நிஜமாதான் ஏன் போனது பிடிக்கலையா திரும்ப கூப்புடவா?”

“இல்ல இல்ல வேண்டாம்” கண்ணைத் திறந்தவள் பழையபடி அவனது தோளைப் பிடித்தவாறே மெல்ல எட்டிப் பார்த்தாள்…

“அதான் போயிட்டாங்கன்னு சொல்றேன்ல… பயப்படாம வா…”

அங்கே யாரும் இல்லை என்பதை செக் செய்துவிட்டாலும் கவனத்தோடே மெல்ல அடியெடுத்து வைத்தவளின் அரண்டு போயிருந்த முகத்தைப் பார்த்துக் கலகலவென்று சிரித்தவன், “ இங்க ஒரு சூரப்புலி இருந்துச்சே எங்கப்பா… கண்ணுக்கெட்டுன தூரம் வரை ஆளைக் காணோம்” என்று சுற்றுமுற்றும் பார்த்தான்…

“வேண்டாம் மிஸ்டர் கோஸ்ட் போதும்ம்ம்ம்ம்…”

ஆனால் அவனுக்கு அவள் சொன்ன விதத்தில் மேலும் சிரிப்புதான் வந்தது…

“ஆள் வச்சு மிரட்டிட்டு சிரிக்கவா செய்யுற… உன்னை…” என்று அவனது கழுத்தை நெறிப்பது போல வந்தவளை, பார்த்து ஒற்றைப் புருவம் தூக்கி

“என்னை…” என்று கேட்க,

“ஒண்ண்ணும் பண்ண முடியாது…” என்று உயர்த்திய கையை கீழே உதறியவள்,

“சரி வா கீழப் போவோம்…” என்று அவனை அழைத்தாள்.

“நான் எதுக்கு? நீ மட்டும் போ… போய்த் தூங்கு… நான் இங்கேயே இருக்கேன்” என்றான் கல்லிலேயே கவனமாக…

அவள் போகாமல் அங்கேயே சுற்றும் முற்றும் பார்த்தபடி நிற்க, என்ன என்று வினவினான் தூக்கிப்போட்டுக்கொண்டிருந்த கல்லைப் பிடித்தபடி…

“அதில்ல அவங்களைப் பார்த்துப் பயந்ததனாலயா என்னன்னு தெரியல… எனக்கு அங்கங்க யார்யாரோ இருக்கறமாதிரில்லாம் தெரியுது… எனக்குப் பயமா இருக்கு…” அவள் சீரியஸான குரலில் சொல்ல… மெல்ல ரகசியம் பேசுவது போல சில்லிட்ட குரலில்
“மாதிரில்லாம் இல்ல… இருக்கதான் செய்யுறாங்க… நிஜமாவே…” என்றான் அவன்.


“என்ன்னது?”

ஆஊ வென்று கோரமாகக் கத்தி பயமுறுத்தும் குரலைவிட, அமைதியான அமானுஷ்யம் நிறைந்த குரலுக்குப் பயமூட்டும் வல்லமை அதிகமுண்டு… அதே பயத்தை ஏற்படுத்தும் குரலில் அவன் தொடர்ந்தான்…

“ஆமா… அன்னைக்கே சொன்னேன்ல எல்லா இடத்துலயும் இருப்போம்ன்னு… இங்க மட்டுமில்ல… எல்லா இடத்துலயும்தான் இருப்பாங்க…”

“அப்படியா? சரிசரி… இருந்துட்டுப் போய்த்தொலையறாங்க… ஆனா என் கண்ணுக்கு ஏன்டா தெரியுறாங்க?”

“நீதான சொன்ன… உன்கண்ணுக்குத் தெரியணும்ன்னு…”

“அடப்பாவி… நான் உன்னை மட்டும்தான தெரியச் சொன்னேன்… ஊர்ல இருக்கப் பேயெல்லாம் என் கண்ணுக்குத் தெரிய வைன்னா சொன்னேன்?”

“நீ நான் சொன்னதை நம்பல…அதான் நம்ப வைக்க தெரியவைக்க வேண்டியதா போயிருச்சு…”

“அடப்பேயே… சரி போனதெல்லாம் இருக்கட்டும் முதல்ல இந்த எபெக்ட்டை எடுத்து விடுடா… எதைப் பார்த்தாலும் என்னைப் பார்க்கற மாதிரியே இருக்கு… அது சரி… அதென்ன… சில பேய் மட்டும் உன்னை மாதிரி இருக்கு… அதாவது மனுஷங்க மாதிரியே… பலது அந்த உங்கொக்கா மாதிரி கொடூரமா இருக்கு…”

“அதுவா எங்கள மாதிரி சிலருக்கு மனுஷங்களைப் பயமுறுத்தப் பிடிக்காது அதனால… இப்படி இருப்போம்… இறந்து போறதுக்கு முன்னாடி இருந்த மாதிரி… சிலருக்குப் பயமுறுத்துறது பிடிக்கும்… அதனால அதுக்கேத்தமாதிரி தங்களோட உருவத்தை மாத்திக்குவாங்க…”

“என்னது? பயமுறுத்தப் பிடிக்குமா?எதுக்குப் பயமுறுத்தணும்?”

“எல்லாம் ஒரு என்டர்டெய்ன்மென்ட் தான்… எவ்வளவு வருஷம் பேயா சுத்தணுமோ… அவங்களுக்கு பொழுதுபோக வேண்டாம்…”

“என்னது என்டர்டெய்ன்மென்ட்டா?”

“எஸ்…”

“ம்க்கும்…அந்த மாதிரி கொடூரமா பயமுறுத்துற பேயைக் கூட நம்பிருவேன்… ஆனா இப்படி நல்ல பிள்ளை மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு ஆள் வச்சுப் பயமுறுத்துற உன்னை மாதிரி பேயைத்தான் நம்பவே கூடாது…”

“ஓ… அப்ப உனக்கும் அந்த அக்காவைப் பிடிச்சுருச்சா? கூப்புடவா…”

“ஐயோ வேண்டாம்…”

“அது…”

“பேய் சார் பேய் சார் முதல்ல இந்தப் பேய் எபெக்டை எடுத்து விடுங்க பேய்சார்… அதது அங்கங்க கிராஸ் பண்றப்ப எனக்குப் பயமா இருக்கு…”

“அவங்கவங்க வேலையை அவங்கவங்க பார்த்துட்டு இருக்காங்க… உன்னை என்ன பண்ணாங்க?”

“ப்ளீஸ்…”

“பிழைச்சுப் போ…” என்றபடி அவளது கையைப் பிடிக்க, அங்கங்கே தெரிந்துகொண்டிருந்த உருவங்கள் அவளது கண்பார்வையிலிருந்து மறைந்தன…

“உப்ப்ப்ப்…” அடைத்திருந்த மூச்சை விட்டவள், “சரி வாங்க” அவனை அழைத்தாள்

“எங்க?”

“கீழதான்…”

“நான் எதுக்கு நீ போ…”

“ஐயா சாமி… நீங்க கொடுத்த பேய் எபெக்ட்ல எனக்குப் பயமா இருக்கு துணைக்கு வாங்க… போதுமா?”

“பேய்க்குப் பயந்து பேயையே துணைக்குக் கூப்புட்ட ஒரே ஆள் நீயாதான் இருப்ப…” என்றபடி அவன் கீழே இறங்கத் தொடங்க, “மிஸ்டர் கோஸ்ட”; என்றழைத்து அவனது கையை இறுகப்பிடித்தபடிதான் இறங்கினாள்… அதுவும் அவள் எங்கெங்கெல்லாம் பேய்களைப் பார்த்திருந்தாளோ அங்கெல்லாம் மிகக் கவனமாக…


கீழே வரவும் “சரி போய்த் தூங்கு” என்றபடி அவன் நகரப்போக, அவளது கையை விடாமல் “எங்க போறீங்க” என்றாள்.

“ஹலோ மேடம்… நீங்க சொன்ன மாதிரி உங்கக்கூடவேல்லாம் என்னால இருக்க முடியாது…வேணும்ன்னா நான் இருக்கறப்ப உன் கண்ணுக்குத் தெரியுறேன்… போதுமா… இப்ப கையை விடு… நான் போகணும்…”

“எங்க?”

“ஆங்… சுடுகாட்டுக்கு… கூட வர்றியா?”

“ம்ம் வர்றேன்… அதுக்குத்தான் கேட்டேன்…”

அவள் ஆவலாகச் சொல்ல அவன் அதிர்ந்தான்.

“என்னது?”

“அது வந்து… எனக்கு உயிரோட இருக்கறப்பவே நைட்டு பன்னிரெண்டு மணிக்குச் சுடுகாட்டைச் சுத்திப் பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை….. பயத்துனால போனதுல்ல… கூட்டிட்டுப் போறீங்களா?”

“அது என்ன டூரிஸ்ட் பிளேஸா சுத்திப்பார்க்க… எதெதை ஆசைப்படுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா? அதுலயும் நீ எப்பேர்ப்பட்ட தைரியசாலின்னுதான் நான் மேலேயே பார்த்தேனே…” அவன் சீற அவள் கெஞ்சினாள்…

“அதனால தான் உங்களைத் துணைக்குக் கூப்புடுறேன்… பிளீஸ்…”

“அதெல்லாம் முடியாது… ஒழுங்காப் போய்த் தூங்கு போ…”

“மிஸ்டர் கோஸ்ட்…” சிணுங்கியவள்,
“அதெல்லாம் என்னை மாதிரி பேயும் பிசாசும் நடமாடுற இடம்… நீ தேவதைடா… அங்கெல்லாம் வர வேண்டாம்… சொல்றதைக் கேளு… போய்த் தூங்குடா…” அவளது தலையைப் பரிவுடன் தடவிவிட்டப்படி சொன்னவனின் குரலில் இருந்த பரிதவிப்பில் மறுத்துப் பேசத் தோன்றாமல் சென்று படுத்தாள்.

அவன் அங்கு இல்லை என்பதை அவளால் உணர முடிந்தது…
அவன் உருவமாக இருந்தாலும் அருவமாக இருந்தாலும் இப்பொழுதெல்லாம் அவன் அவளருகில் இருக்கிறான்… இல்லை… என்பதை அவளால் உணர முடிந்தது… படுத்திருந்தாளே தவிர உறக்கம் வரவில்லை…
அவனது இறந்த காலமும் நிகழ்காலமும் நினைவில் நின்று அவளது உறக்கத்தைத் தடுத்துக்கொண்டிருந்தன…
நினைவாகப் பார்க்கும்போதே அவன் அழுதது அவளுக்கு ஏதோ செய்தது… ஆரம்பமே இப்படியென்றால் அவன் அவனது தந்தையையே எதிர்த்து நிற்க வேண்டுமென்றால் அவரது கையாலேயே சாக முடிவெடுக்க வேண்டுமென்றால் எத்தனை உணர்ச்சிப்போராட்டங்களைக் கடந்து வந்திருப்பான்?
அவற்றையெல்லாம் காணும் சக்தி அவளிடம் இல்லை…
ஏனென்றால் அவற்றையெல்லாம் ஏதோ ஒரு மூன்றாம் மனுஷியாக அவளால் பார்க்கமுடியவில்லை…
அவனுடைய உயிரில் கரைந்து உணர்வில் கலந்தவளாக, அவளுக்கே நிகழ்வது போல உணர்ந்து கொண்டிருந்தாள்.
அந்த உணர்ச்சித்தாண்டவத்தை அவளால் தாங்க இயலவில்லை…
அதை விட கடந்த காலத்தில் அவனைச் சந்தித்தும் அவனைப்பார்க்கவில்லை என்பதை அறிந்தபோது ஏதோ மிகப்பெரிய பொக்கிஷத்தை…. இல்லை… அதை எப்படி சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை…
பொக்கிஷமெல்லாம் அவளுக்குத் தேவைப்பட்டதில்லை… அவளுடைய வாழ்வையே கைநழுவவிட்டதுபோல இருந்தது…
அன்று சந்தித்திருந்தால்…
அவன் இறக்காமல் இருந்திருந்தால்… என்றெல்லாம் யோசிக்கும்பொழுதே அவளுக்கே பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறோம் என்று புரிந்தது…
அவனை உயிரோடிக்கும் போது பார்த்திருந்தால், வேலை விஷயமாக ஏதாவது சந்தேகம் கேட்டிருப்பாளே தவிர, இந்த நெருக்கம் உண்டாகியிருக்காது… பத்தோடு பதினொன்றாகக் கடந்திருப்பாள்…
அவனும்தான்… இப்பொழுதும் கூட அவனுக்கு அப்படித்தானே என்று யோசிக்கும்போது அவன் தேவதை என்றது அவளுக்கு நினைவு வந்தது… அப்படியென்றால்? அப்படியென்றால்??? அவனுக்கும் அவள் தனித்துவமானவள் என்றுதானே பொருள்…
அவளுக்கு ஏதோ தெளிவு பிறப்பது போல இருந்தது…
‘ அசப்ட் த ரியாலிட்டி’ என்பார்கள்… இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்… அவன் இறந்துவிட்டான்…
அதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்… உயிரோடிருந்திருந்தால்? என்று எண்ணி ஏங்கக்கூடாது…
அவன் இறந்திருக்கலாம்…
ஆனால் அவளுடனேதானே இருக்கிறான்… அவளுக்கு அது போதும்…
அவன் அருகில் இருந்தால் போதும்…
இந்த உறுதி பிறக்கவும் அவளுக்கு உறக்கமும் பிறந்தது…


நிம்மதியாக உறங்கி எழுந்தவள் எழுந்தவுடன் அவளுடைய மிஸ்டர் கோஸ்டைத் தேடினாள்… காணவில்லை… ‘அதுசரி… அவன் எங்கே நம்ம பேச்சைக் கேப்பான்…’ திட்டினாலும் அவளது முகத்தில் ஒரு புன்னகைதான் படர்ந்தது…
அந்த அமைதிப்புன்னகையுடனே கிளம்பி அலுவலகத்தை அடைந்தவள் தன் அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினாள்…

“பிரதாப் சார்…”

“மேடம்…”

“அருணாச்சலம் சைடுல இருந்து எதுவும் பிராப்ளம்ஸ் வரலையா?” கையிலிருந்த வேலை சற்று ஓய அவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“இப்போதைக்கு எதுவும் வரலை மேடம்…”

“இப்போதைக்கு…?” அழகாய்ச்சிரித்தவள், “அப்ப அப்பறம் வரும்ன்னு சொல்றீங்களா சார்?”

“கண்டிப்பா மேடம்…”

“எப்படி இவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?”

“அருள் சார் கூட வேலை பார்த்த அனுபவம் இருக்கு மேடம்… அருணாச்சலம் கொஞ்சம் பதுங்கிப்பாயுற ரகம்…”

“அப்ப உங்க அருள் சார்?”

“அவர் எந்த ரகம்ன்னு யாராலயும் கணிக்க முடியாது மேடம்…”

‘அதென்னவோ சரிதான்’ மனதுக்குள் நினைத்தவள், “ஆமாம் பிரதாப் சார் நான் உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கணும்ன்னு நினைச்சேன்… மிஸ்டர் அருளாளன் வெயிட்டிங் லிஸ்ட்க்குப் போயிட்டுத் திரும்ப இதே ஊருக்கு வேலைக்கு வந்தாரா?” என்று கேட்டாள்.

“ஆமாம் மேடம்…”

“எப்படி?”

“அருள் சார் வந்த ரெண்டு வாரத்துலயே டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க மேடம்… அதுவும் வெயிட்டிங் லிஸ்ட்க்கு…”

“ஆனா இப்ப அப்படி பண்ண முடியாதில்ல… ரெண்டு வருஷம் எந்த அதிகாரியையுமே குறிப்பா மாவட்ட கலெக்டரை டிரான்ஸ்பர் பண்ண முடியாதில்ல…”

“ஆமா மேடம் அதுக்கே அருள் சார்தான் மேடம் காரணம்…”

“என்னது?”

“தனக்கு ரெண்டு வாரத்துலயே மாற்றல் போடப்பட்டதையே ஆதாரமா வச்சு, வேலை செய்ய விடமாட்டேங்குறாங்கன்னு கோர்ட்டுல கேஸ் பைல் பண்ணார் மேடம்… வெயிட்டிங் லிஸ்ட்க்கு அனுப்பனதோட அருளாளன் சார் விஷயம் முடிஞ்சிருச்சுன்னு நினைச்ச அருணாச்சலம் அதைக் கவனிக்கல மேடம்… இல்லன்னா கூட எந்த ஜட்ஜையாவது விலைக்கு வாங்கிருப்பாரோ என்னவோ? இந்த வழக்குக்கு வந்த ஜட்ஜ் நல்லவரா போனதுனால, அருள் சாரைத் திரும்ப இதே ஊருக்கு நியமனம் பண்ணதோட, ரெண்டு வருஷத்துக்கு அவரை மட்டுமில்ல… எந்தக் கலெக்டரையுமே தகுந்த காரணமில்லாம டிரான்ஸ்பர் பண்ணக்கூடாதுன்னு தீர்ப்பு வந்துருச்சு மேடம்…”

அவளுக்கு இதைச் செய்தியாக படித்தது நினைவு வந்தது… ‘யாரோ ஒருவர் என்று படித்தது… இவன்தானா?’

“அருணாச்சலம் கடுப்பாகிருப்பாரே…” அவள் சிரித்துக்கொண்டே கேட்டாள்…

“ரொம்பவே மேடம்… அதுலயும் அது சப் எலெக்ஷன் நேரம்… சாதாரண அதிகாரி இருந்தாலே எலெக்ஷன் நேரத்துல கெடுபிடி அதிகமா இருக்கும்…”

“இருந்தது உங்க அருள் சார்… கேட்கவா வேணும்? அதான பிரதாப் சார்?”

“ஆமாம் மேடம்…” பிரதாப்பும் சிரித்தபடியே சொன்னார்.

“அது சரி…ஆனா அவர் இருந்தும் எப்படி இந்த நாகாபரணம் எம்எல்ஏ ஆனாரு?”

“இந்த ஊர்ல பணம்ங்கறத தாண்டி அருணாச்சலம் சொல்றத கண்மூடித்தனமா கேக்கற நிறையபேர் இருக்காங்க மேடம்… அதுவுமில்லாம ஆயிரம் ரெண்டாயிரம் ஐயாயிரம்ன்னு கொஞ்சம்கொஞ்சமா கொடுத்து மக்களை வாங்குறதை விட, அதே காசை லட்சலட்சமா கொடுத்து எதிர்ல நிக்கறவங்களை மொத்தமா வாங்கறது ஈஸியில்லயா மேடம்;…”

“ஆமாம் மேடம்… ஈஸிதான்… அதுவும் எனக்கு ரொம்பவே ஈஸி…” என்றபடி அனுமதி கேட்காமலேயே உள்ளே நுழைந்தார் அருணாச்சலம்…

அவரை ஏறிட்ட அமிழ்தாவின் முகத்தில் அவ்வளவு நேரம் அழகாய் நிறைந்திருந்த புன்னகை மறைந்தது…
(தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *