Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

பிரதாப் கேள்வியாக நோக்க,

“சார் ஒரு எமர்ஜென்சி… நான் உடனடியா போகணும்…”

“மேடம்… இன்னும் ஒரு மணிநேரத்தில…”

“ஞாபகம் இருக்கு சார்… ஆனால் இது ரொம்ப எமர்ஜென்சி…” என்றபடி வேகமாக வெளியேறினாள்…

“அக்கா எனக்கு ரொம்ப பயமா இருக்குக்கா…”

“ஒண்ணுமில்லடா… இந்த மாதிரி நேரத்துல தான் பயப்படவோ பதறவோ கூடாது… அக்கா வந்துட்டே இருக்கேன்… வாசல்ல செக்யூரிட்டி இருப்பாங்க கூப்புட்டு கதவை உடைக்கச் சொல்லு…”

கூப்புட்டுட்டேன்க்கா…. சக்தியண்ணனும் இங்கதான் இருக்காங்க…உடைச்சுட்டு இருக்காங்க…

நான் வேலைக்கு வந்துவிட்ட பிறகு அவன் ஏன் அங்கு வந்தான்? என்று தோன்றினாலும் வந்தது நல்லதுதானே என்று எண்ணியவள், “அப்பறம் என்ன பயம்? நான் வந்துட்டே இருக்கேன்… பயப்படாத…” ஒரு ஆட்டோவைப் பிடித்து ஏறியவள், கண்ணை மூடி அவனை அழைத்தாள்…

“அருள்…”

“நான் இங்கதான் அமிழ்தா இருக்கேன் நான் பார்த்துக்குறேன்…”

மானசீகமாக வந்த அவனது பதிலில் நிம்மதி பரவ, வழக்கம்போல ஆட்டோகாரன் அடுத்ததெருவில் இறக்கி விட்டாலும் பதறாமல் நடந்தே ஆனால் விரைவாக வந்தாள்…

வாசலில் வெளிறிய முகத்துடன் நின்ற வாட்ச்மேனிடம் நேரத்தை வீணடிக்காது அதே வேகத்தில் உள்ளே நுழைந்தவள், நின்றது விவேகனின் அறைவாயிலில்தான்… உடைபட்ட அடையாளம் ஏதுமின்றி இருந்த கதவில் கைவைக்கவுமே அது தடாலெனத் திறந்தது.

அவளுடைய கண்ணில் முதலில் பட்டது கழுத்தில் சுருக்குடன் இருமிக்கொண்டிருந்த விவேகனது தலையை ஒருவித பரிதவிப்புடன் தடவிவிட்டுக்கொண்டிருந்த அவளவன்தான்…

அடுத்து விவேகன்…

பின் அவனது அருகில் கவலை முகத்துடன் நின்றிருந்த சந்தனா…

கோப முகத்துடன் நின்றிருந்த சக்தி…

கீழே கிடந்த ஸ்டூல்…

கணநேரத்தில் அனைத்தையும் அளந்தவள், விவேகனது அருகில் சென்றாள்…

“ஏன்டா உனக்கெல்லாம் அறிவிருக்கா இல்லையா? சாகணும்ன்னு தோணுச்சுன்னா வேற எங்காயாவது போய்ச்சாக வேண்டியதுதான? ஏன் இந்த ஊர்ல பாதி இடம் உங்கப்பனோடதுதான? அங்க எங்கையாவது போய்ச் செத்துத் தொலைய வேண்டியதுதான? உன்னை நம்பி வீட்டில தங்கவச்சா அவங்க வீட்டுல செத்து அவங்களை வம்புல மாட்டி விடப்பார்ப்பியா?” சக்தி சீறிக்கொண்டிருந்தான்…

“சக்தி… என்ன பேசிட்டு இருக்கன்னு உணர்ந்துதான் பேசிட்டு இருக்கியா?” அவனை அடக்கியவள் விவேகனது கழுத்தில் சுருக்காகக் கிடந்த போர்வையை முதலில் எடுத்தாள்.

அவனது கழுத்தில் எதுவும் காயங்கள் இல்லை என்பதை உறுதிசெய்தவள், “எதுவும் வலிக்குதா விவேகன்? ஹாஸ்பிட்டல் போலாமா?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகலக்கா …” மெதுவாகச் சொன்னான்.

“நல்ல வேளை “

“என்ன நல்ல வேளை? இப்பதான் ரெண்டு நிமிஷத்துக்கு முன்னாடிதான் கதவு தாழ்ப்பாளையே உடைக்க முடிஞ்சுச்சு… உனக்கு சந்தனா போன் பண்ணி எவ்வளவு நேரம் ஆகிருக்கும்? நீ இங்க வர இருபது நிமிஷமாவது ஆகிருக்குமா? அது வரை ஸ்டூல் மேலயேதான் நின்னுட்டு இருந்தான்… பரதேசி பயமுறுத்திப் பார்த்துருக்கான் இல்லன்னா இந்நேரம் பரலோகம்ல போயிருக்கணும்…”

“நான் ஒண்ணும் வேணும்ன்னு நிக்கல… என்னால ஸ்டூல் மேல இருந்து காலை எடுக்கவே முடியல…”

“ஏன்ப்பா எதுவும் பேய்ப்பிசாசு வந்து உன்காலைப் பிடிச்சுக்கிச்சோ…”

அங்கு நின்று கொண்டிருந்த அருளாளனைப் பார்த்த அமிழ்தாவிற்கு நடந்தது புரிந்தது…ஆனால் அவர்களுக்குப் புரிய வைக்க இயலாதே…
“சக்க்க்தி அதான் ஒண்ணும் ஆகலல்ல… அதுவே போதும்…” என்று சக்தியை அடக்கத்தான் முயன்றாள்.

“என்ன விவேகன் இது? ஏன் இப்படி பண்ண?” சந்தனா கவலையுடன் கேட்க,

“சந்தனா…ப்ளீஸ்… என்கிட்ட எதுவும் கேட்காத…” குற்ற உணர்ச்சியுடன் கூடிய குரலில் பதில் வந்தது.

“ஓ… கேட்காம இருந்துருந்துருக்கலாமே… நீ போய்ச்சேர்ந்துருந்தனா கேட்காம இருந்துருப்போம்…”

“சக்க்தி…”

விவேகனது அருகில் அமர்ந்தவள், “சரி விவேகன் உன்கிட்ட எதுவும் கேட்கல… ஆனா எனக்கு இப்ப அரைமணிநேரத்தில குறைதீர்க்கூட்டம் இருக்கு…
எத்தனையோ மக்கள் மனு கொடுக்கறதுக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க…
அதெல்லாம் விட்டுட்டு ஓடி வந்துருக்கேன்…
நீ இங்க இருக்கற வரை நான்தான் உனக்கு ரெஸ்பான்ஸிபிலிட்டி…
இப்ப நான் திரும்ப போய் நிம்மதியா வேலை பார்க்கணும்…
அதுக்கு நீதான் உறுதிகொடுக்கணும்… திரும்ப இப்படி எதுவும் லூசுத்தனமா செய்யமாட்டேன்னு…
ஏன் யோசிக்கக்கூட மாட்டேன்னு…”

அவள் அமைதியாக அவனது கண்களைப் பார்த்துக் கேட்க…

“சாரிக்கா… அது ஏதோ செகண்ட்ஸ்ல அப்படிதோணிருச்சு… இனி அப்படி செய்யமாட்டேன்…”
தலைகுனிந்தபடி சொன்னான்…

“செய்யமாட்டியா?யோசிக்க மாட்டியா?”

“யோசிக்க மாட்டேன்க்கா”

“குட்… ரெஸ்ட் எடு…நான் சாயங்காலம் சீக்கிரம் வந்துர்றேன்…” என்றபடி வெளியேறப்போனவள், கூட வரப்போன சக்தியை கண்ணால் நிறுத்திவிட்டு சந்தனாவிடம் கண்காட்ட, அவளும் கூடவே வந்தாள்.

“சந்தும்மா… நீ விவேகனை விட்டு எங்கேயும் போகாத… அவன் தூங்குற வரை தூங்கட்டும்.. அதுக்கப்பறம் அவனுக்கு என்ன செய்ய ரொம்பப் பிடிக்குமோ அதைப்பண்ணுங்க… அதாவது ஏதாவது விளையாடுங்க… இல்ல சினிமா பாருங்க… கம்பர்டபிளா பீல் பண்ண வை… என்னன்னாலும் பண்ணு…
ஆனா தனியா மட்டும் விட்டுராத…
அவனை யோசிக்க விடாத… இதைப் பத்தி எதுவும் கேட்க வேண்டாம்…
அக்கா பாதி வேலையை விட்டுட்டு வந்துருக்கேன்…
முடிச்சிட்டு சாயங்காலம் சீக்கிரம் வந்துர்றேன்…
வந்த பிறகு எதுனாலும் பேசிக்கலாம்…என்னடா?”

“சரிக்கா…”

“சரிடா… கவனம்…சீக்கிரம் வந்துர்றேன்… பை…”
என்று விட்டுஎதுவும் பேசாமல் விறுவிறுவென வெளியேறிய அமிழ்தாவின் பின் சில நிமிடங்களில்,
“நில்லு அம்மு எதுவுமே கேக்காம நீ வாட்டுக்குப் போய்க்கிட்டே இருக்க…” என்று கிட்டத்தட்ட ஓடி வந்தான் சக்தி அவளது நடைவேகத்துக்கு…

“என்ன கேக்கணும்? நீ என்னைப் பார்க்க வரல… அப்பறம் நான் எதுக்கு உன்னை எதுவும் கேக்கணும்?”

“அம்மு அதில்ல நான் உன்னையும் பார்க்கத்தான் வரப்போனேன்… வர்ற வழில சந்தனா செக்யூரிட்டிகிட்டப் பதட்டமா ஏதோ சொல்லிட்டு இருந்தா… அதனாலதான் உள்ளே போனேன்…”

“அப்படியா? சாரிடா… அன்ட் தேங்க்ஸ்… சரி… என்னை எதுக்குப் பார்க்க வந்த?”

“எல்லாம் இந்த விளங்காதவனோட அப்பன் அந்த வீணாப்போன அருணாச்சலம்தான்…”

இவன் இன்னமும் விவேகன்தான் அருணாச்சலத்தின் மகன் என்று நினைத்துத் திட்டிக்கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது… அதை விளக்கிக்கொண்டிருக்க அவளுக்கு நேரமில்லை…

“சரி… எனக்கு இப்ப டைம் இல்ல…
என்னை அந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல இறக்கிவிடு… போறப்ப என்னன்னு சொல்லிட்டே போ…”

“இறக்கி விடுறேன்… ஆனா என்னன்னு அப்பறமேட்டு சொல்றேன்… எனக்கு டிரைவ் பண்றப்ப பேசப்பிடிக்காதுன்னு தெரியும்ல…”

“இன்னும் நீ அந்தப் பயத்தை விடவே இல்லையா?”

“ஆமாம்…” அமைதியாக ஓட்டிச்சென்றவன் ஆட்டோ ஸ்டாண்டைக் கடந்து செல்ல, “என்னடா? ஆட்டோ ஸ்டாண்டைத் தாண்டிப் போற?”

“ஆட்டோ ஸ்டாண்ட் என்ன? ஆபிஸ்லயே இறக்கி விடுறேன் வா…”

“பாருடா… சாருக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா… அருணாச்சலத்தோட ஆளுங்க யாராவது பார்த்தா என்ன செய்வ?”

“அருணாச்சலமே பார்த்தாலும் கவலையில்ல…”

அவன்சொல்ல… அவளுக்கு ஏதோ இடித்தது… இருந்தாலும் சொல்பவன் சக்தி என்பதால் அமைதிகாத்தாள்…

ஆனால் அந்த அமைதி அவளது அலுவலகத்திற்குப் பதிலாக அருணாச்சலத்தின் கோட்டைப் போன்ற வீட்டிற்குள் அவனது வண்டி நுழைந்த போது பறந்தது.

                                                      (தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *