Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35

அமிழ்தாவிற்குப் பொதுவாகப் பயணங்களின் போது கவனம் அதிகமாகவே இருக்கும்…
அவள் தன்னை மறந்து வருவது அவளுடைய தந்தையுடன் செல்லும்போதுமட்டும்தான்…
ஏதாவது வளவளத்தபடியே வருவாள்… அவருக்கடுத்து சக்தியுடன் செல்லும்போதுதான் வெளியுலக கவனமின்றி இருப்பாள்…
அதிலும் இன்று விவேகனது இந்தத் திடீர் முடிவிற்குக் காரணம் என்ன என்று குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த அவளது மனம் அலுவலகப்பாதை மாறிச்செல்வதைக் கூடக் கவனிக்க மறந்தது.
அவன் வண்டியை நிறுத்திய பின்னரே சுற்றுப்புறத்தில் இருந்த வேறுபாட்டைக் கவனித்தாள் அவள்..
. ஏற்கனவே இருந்த குழப்பத்தில் இவன் எங்கோ கூட்டி வந்திருக்கிறானே என்னு அவளுக்கு எரிச்சல் மண்டியது…
அதை குரலில் அப்படியே வெளிப்படுத்திக் கேட்டாள்…

“சக்தி இது என்ன இடம்? எங்கே கூட்டிட்டுப் போகச் சொன்னா எங்கே கூட்டிட்டு வந்துருக்க?”

“இறங்கு அம்மு சொல்றேன்…”

“டேய் …இது எனக்கு டூட்டி டைம்… முக்கியமான வேலை இருக்குடா…ஆபிஸ்க்கு வண்டியைத் திருப்பு…”

“இதுவும் ரொம்ப முக்கியமான வேலைதான் அம்மு… இறங்கு…”
எரிச்சலுடன் இறங்கியவள் கேட்டாள்…

“அப்படி என்ன தலைபோகிற விஷயம்?”

“உள்ளே வா சொல்றேன்…” அவளது கையைப் பிடித்துக் கிட்டத்தட்ட இழுத்துச்சென்றான்.

கையை உதறி விட்டு, “விடு…நானாவே வர்றேன்”; என்றபடி வந்தவள்,
“இது யாரோட வீடுன்னாவது சொல்லித்தொலை..”. என்று அவள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே அருணாச்சலம் வர,
சக்தியைப் பார்வையால் கொலை செய்யத் துடித்தத் தன் விழிகளை மிகவும் சிரமப்பட்டு அடக்கினாள்.

“அடடா… வாங்க மேடம்… என்னய்யா அரசு… என்னைக்காவது மேடத்தை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வான்னு தான சொன்னேன்? இன்னைக்கே கூட்டிட்டு வந்துட்ட? உள்ளே வாங்க… பத்மினி… பத்மினி…” என்றழைத்தபடி அவர் செல்ல, அமிழ்தாவின் கைகளில் தனியாகச் சிக்கினால் தன் உயிர் தன்னிடம் இருக்காது என்றறிந்த சக்தியும் அவருடனே உள்ளே ஓடிவிட்டான்…

அவனிடம் “போய் அம்மாவைக் கூட்டிட்டு வாயா அரசு” என்று அனுப்பியவர் தன் போனை எடுத்தார்…

“நாகா…”

“அண்ணா…”

“தம்பி சொன்னமாதிரியே செஞ்சுட்டான்…”

“என்ன இருந்தாலும் உங்க பிள்ளை இல்லையாண்ணே…”

“அதேதான்… சரி… நேரத்தை வீணாக்க வேண்டாம்… உடனடியா செய்ய வேண்டியதைச் செய்…”

போனைக் கட்செய்து விட்டுத் திரும்பியவர் அங்கு நின்றிருந்த சக்தியைக் கேள்வியாகப்பார்த்தார்.

“என்னய்யா… அவளைக் கூப்புட போகலை…”

“அப்பா… அவ திமிரு பிடிச்சவ… நீங்க சொன்னீங்கன்னுதான் பேசி சமாதானப்படுத்தி வீடுவரைக் கூட்டிட்டுவந்தேன்… அதுக்காக போய் ஆரத்தி எடுத்துல்லாம் அழைக்க முடியாது… அம்மா கூப்புட போயிருக்காங்கல… வரட்டும்…” போனால் மண்டை உடைவது நிச்சயம் என்பதை எவ்வாறெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்று மனதில் நினைத்தபடியேதான் சொன்னான்.

அவன் தோள்மேல் கைபோட்டவர் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்….
“அவ திமிரு பிடிச்சவளா இருந்தா என்னய்யா? நமக்கு இல்லாததா? நம்ம கோபம் திமிரு இதெல்லாம் உடனே உடனே வெளியே காட்டக் கூடாது… பொறுமையாவே இருந்து எப்ப காலம் வருதோ அப்ப காட்டணும்… காட்டுற காட்டுல எதிர்க்க இருக்கவன் எந்திருக்க நினைக்கக்கூடக் கூடாது…”

‘யோவ்… நான் கிரிமினல் லாயர்யா என்கிட்ட உன் கிரிமினல் தனத்தைச் சொல்லிக்கொடுத்துக்கிட்டு இருக்க…’ மனதிற்குள் நினைத்தவனுக்கு நாமே அமிழ்தாவை எதுவும் வில்லங்கத்தில் மாட்டிவிட்டுவிட்டோமோ என்று தோன்றியது.’

“அப்பா என்கிட்ட இன்னைக்கு அதுவும் இப்ப எப்படியாவது அவளை கூட்டிட்டு வந்துருன்னுதான சொன்னீங்க… அப்பறம் ஏன் அவகிட்ட என்னைக்காவது கூட்டிட்டு வரச்சொன்னேன்னு சொன்னீங்க…”

“பின்ன நம்ம மேல சந்தேகம் வரக்கூடாதில்லையா? எப்படின்னாலும் நம்ம மேல சந்தேகம் வரத்தான் செய்யும்.. ஆனா அதை உறுதிப்படுத்த விடக்கூடாது… அதுக்காகத்தான்… அப்பறம் ரொம்ப நன்றியா… பிடிக்காதவளா இருந்தாலும் அப்பன் சொல்லைத் தட்டாம சொன்னதைச் செஞ்சதுக்கு…”

‘அவளைப் பிடிக்கலன்னாலும் நீ சொன்னதுக்காகச் செய்யல… அவ சொன்னதுக்காகத்தான் உன்னைப்பிடிக்கலன்னாலும் நீ சொன்னதெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்… ஆனா இப்ப அவளையே ஏதோ பெரிய பிரச்சனையில மாட்டிவிட்டுட்டேன் போலயே…’

“சரி வா போகலாம்…”

‘அய்யோ இவங்க கூடவே இருந்தாங்கன்னா அவளை எச்சரிக்கைக் கூடப்பண்ண முடியாதே…சும்மா ஐஸ் வைக்கறதுக்காகக் கூப்புட்டானுங்கன்னு நினைச்சா இப்படி வயித்துல புளியைக் கரைக்கிறானுங்களே…’ மனதில் நொந்தவனால் எச்சரிக்கை செய்ய இயலாமல் தான் போயிற்று…

அருணாச்சலத்திடம் பேசிவிட்டுப் போனை கட் செய்த நாகாபரணம், அருகிலிருந்தவனிடம், “அண்ணன்தான் பேசினாரு… அந்த அமிழ்தாவை அண்ணன் பார்த்துக்குவாரு அவ இங்க வரமாட்டா… நீ போய் ஆரம்பி…”

“ஒண்ணும் ஆகாதுல்லண்ணே…”

“என்னய்யா ஆகப்போகுது… நீ போய் சும்மா தீக்குளிக்கிற மாதிரி நடிக்கப் போற… அது நியூஸ்லலெல்லாம் வரும்… அதை வச்சு நாம கலெக்டர் அமிழ்தா ரொம்ப முக்கியமான நேரத்தில மக்கள் கிட்ட மனு வாங்கறப்ப இங்க இல்லன்னு அவளுக்கு பிளாக்மார்க் வாங்கித்தரலாம்… அவ்வளவுதான் இதுக்குப் போய் எதுக்குப் பயந்துகிட்டு…”

“இல்லண்ணே… பெட்ரோலை ஊத்தி தீக்குச்சியை வச்சு மிரட்டச்சொன்னீங்க… நிஜமாவே பத்திக்கிச்சுன்னா?”

“அதெல்லாம் பத்தாதுய்யா… அப்படியே பத்துன்னாலும் அருகிலிருந்த ஜுப்பில் குடங்களைக் காட்டியவர் “இங்க பாரு தண்ணீ… ஊத்தி அணைச்சுர மாட்டோம்… தைரியமா போ… பாத்துக்கலாம்…”

அந்த ஆள் பெட்ரோல் கேனை எடுத்துத் தலைமேல் ஊற்றுவதைப் பார்த்த போலீசார் தடுக்க ஓடிவந்தனர். அவன் அவர்கள் மேலும் பெட்ரோலை ஊற்றிவிட, “வாரே வா… இதை நானே எதிர்ப்பார்க்கல… கொடுத்த காசுக்கு மேல நடிக்கிறானேயா?” அருகிலிருந்த இன்னொருவனிடம் கேட்டார் நாகாபரணம்.

“ஆமாண்ணே… அண்ணன் எதுக்கும் தண்ணியை எடுத்து வச்சுக்குவோம்..” என்றபடி ஜுப்பை நோக்கிச் சென்றான்…

“ஏய்… இருடா எதை எடுக்கப்போற…”

“தண்ணி…”

“அது எங்க இருக்கு?”

அவன் குடத்தைக் காட்ட, வில்லத்தனமாய்ச் சிரித்தவர்,
“ஏன்டா குடத்தில இருக்கறதெல்லாம் தண்ணியா அதுவும் பெட்ரோல்தான்…”

“ஐயோ அண்ணே அப்பறம் ஏதாவது ஆயிட்டா எப்படி அணைக்கிறது?”

“எதுக்கு அணைக்கணும்?”

“அண்ணே…”

“ஆமாடா… சும்மா நடிக்கவச்சு அவளுக்கு பிளாக்மார்க் வாங்கித்தர்றதை விட உண்மையாவே நடக்கவச்சோம்ன்னு வச்சுக்க… கல்குவாரிகள் திறக்கப்படாததால் வேலையிழப்பு… மனமுடைந்து தீக்குளித்த வாலிபர்… தடுக்க முற்பட்ட இரு போலீசாரும் பலி… குறைதீர் கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு காதலனுடன் ஊர்சுற்ற சென்ற கலெக்டரால் நிகழ்ந்த விபரீதம்ன்னு ஒரு பிளாஸ் நியூஸ்… யோசிச்சு பாரு… எப்படி இருக்கும்?”

அங்கே கலவரமாக நிகழ்ந்து கொண்டிருந்த களேபரத்தை ரசித்தபடி சொன்னவரைப்பார்த்தவன்,
“ஆனா அருணாச்சலம் அண்ணன் அப்படில்லாம் பண்ண சொல்லலையேண்ணே…”

“அவர் சொல்லித்தான் செய்யணும்ன்னு இல்ல… நாம செஞ்சுட்டுச்சொன்னாலும் ஒண்ணும் சொல்லமாட்டாரு… அது சரி…இவன் என்னடா… தீப்பெட்டில இருந்து தீக்குச்சியை எடுக்கிறான்… ஆனா பொருத்த மாட்டேங்கறானே…பொருத்திவிட்டான்னா அவனோட சேர்ந்து அவனைப் பிடிச்சுருக்கிற போலீஸ் காரங்களும் சேர்ந்து போனா இன்னும் சென்சேஸனால இருக்கும்ன்னு பார்த்தா விட மாட்டேங்கிறான்…. சரி விடு நாமதான் கொளுத்திப் போடணும்போல… கொளுத்திப்போட்டு விடு…”

“அண்ணே… என்னண்ணே சொல்றீங்க…”

அவனது கையில் தீப்பெட்டியைத் திணித்தவர் “கொளுத்திப்போட்டு விடுடா…” என்றார்.

அதை வாங்கியவனது கைகள் நடுங்க குச்சியை எடுத்து, நெஞ்சிற்கு நேராக வைத்து பற்ற வைக்க முயல,… “ஏன் இன்னும் ஊருக்கெல்லாம் சொல்லிட்டுப்பத்த வச்சு விட வேண்டியதுதான? மறைவா கீழ வச்சு, கொளுத்திப்போட்டு விடுடா…”

அவனுக்கு அப்பொழுதும் கைகள் நடுங்க… “ஒன்னத்துக்கும் லாயக்கு இல்ல கொடுடா” என்றபடி தீப்பெட்டியைப் பிடுங்கியவர், பற்றவைத்து அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் மேல் போட முயன்ற நொடி சரியாக, அவருக்கும் அவர்களுக்கும் இடையே சரேலென ஒரு பைக் வந்து நின்று சடென் பிரேக்கடித்தது.
அதை ஸ்டாண்ட் போட்டு விட்டு அலட்சியமாக நிமிர்ந்த அமிழ்தாவைக் கண்டு அவர் கையிலிருந்த தீ மனதிற்குள் சென்று கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
அவருக்கு அந்த அலட்சியப் பார்வைக்கு மேல் மரியாதை அளிக்க விரும்பாதவள் அங்கு நடந்து கொண்டிருந்த பிரச்சினையில் கவனத்தைச் செலுத்தினாள். நொடியில் பிரச்சினையைக் கணித்தவளின் கண்கள் அலை பாய்ந்தன.
அங்கு நின்று கொண்டிருந்த ஜீப்பைப் பார்த்தவள் வேகமாக சென்று அதிலிருந்த குடத்தை எடுத்தாள்.
அதைப் பார்த்த நாகாபரணத்தின் இதழ்கள் விஷமச்சிரிப்பில் விரிந்தன.

(தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *