Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

அருணாச்சலம் அழைத்துவிட்டுப் போக,
பெருஞ்சீறலாய் வெளிப்படத் துடித்த கோபத்தை அடக்கியவள்,
உள்ளே செல்வதற்குப் பதிலாக வெளியே செல்லத் தொடங்கினாள்…

பின்னே அவளுக்கு வேறு வேலைவெட்டி இல்லையா என்ன?
எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட ஒருவார்த்தை கூட கேக்காம இந்தாளு வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டு வந்து விட்டிருப்பான்…’ கொந்தளித்தபடி வந்தவளின் கண்களில் சாவியுடன் நின்றிருந்த சக்தியின் பைக் பட்டது…

அவனுக்கு இந்த பைக் மிகவும் பிடித்தமானது…
அவனுடைய முதல்மாத சம்பளத்தில் வாங்கியது..
எங்கு சென்றாலும் அதைக்கட்டிக்கொண்டு அழுவான்…

“மகனே இன்னைக்கு இருக்கு உனக்கு…எஸ்கேப்பா ஆகுற… எஸ்கேப்பு… உன் பைக் எப்படி எஸ்கேப் ஆகுதுன்னு நானும் பார்த்துறேன்…”
அதில் ஏறி அதை ஸ்டார்ட் செய்தாள்…

அவளுடைய தந்தை அவர்கள் இருவருக்கும் ஒன்றாகத் தான் வண்டி ஓட்ட சொல்லிக்கொடுத்திருந்தார்…
அவனை விட நன்றாகவே ஓட்டுவாள்… அவள் அதை யூடர்ன் எடுத்துத் திருப்பிய நேரம், “அம்மாடி” என்றொரு குரல் கேட்டது…

பத்மினி…

அருளின் அந்த அலட்டலில்லாத கம்பீர அமைதி எங்கிருந்து வந்தது என்பது அவரைப் பார்க்கும்போது அவளுக்குப் புரிந்தது…

ஆண்கள் ஓட்டக்கூடிய அந்த கனமான பைக்கை அனாயசமாகத் திருப்பியவள், அவர் அழைத்ததும் அதை நிறுத்தி அலட்சியமாகத் திரும்பிப்பார்த்த அந்த அழகு அவரையும் கவர்ந்தது போலும்…

“நீதானாம்மா அமிழ்தா?”

“ஆமா ஆன்ட்டி…”

“உள்ளே வருவன்னு சொன்னாங்க… நீ வெளியே போற… அதுவும் அரசு பைக்கை எடுத்துக்கிட்டு…”

“கண்ட இடத்திற்கெல்லாம் என்னால் வர முடியாது…” எடுத்தெறிந்து பேசத்தான் அவளுடைய எரிச்சலுற்ற மனம் துடித்தது…
ஆனால் எதிரில் நிற்பவர் தன்னவனின் தாய் ஆயிற்றே… அமைதிகாத்தாள்…

“இல்ல ஆன்ட்டி… எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு… அதான்… சக்திக்கிட்ட சொல்லிருங்க…”

“இன்னொருநாள் ப்ரீயா இருக்கறப்ப கண்டிப்பா வரணும்மா… “

“பார்க்குறேன் ஆன்ட்டி… இப்ப கிளம்புறேன் ஸாரி…”

“சரிம்மா…”

அவள் வேகமாக பைக்கைக் கிளப்ப, “அமிழ்தா” என்று மீண்டும் அவளை அழைத்தார் அவர்…
இப்பொழுது என்ன? என்று அவள் திரும்ப, “வண்டில போறப்ப கொஞ்சம் கவனமா வேகம் கம்மியா போம்மா…” என்றார்… அவருடைய கண்களில் இருந்த கவலை அருளுடைய நினைவு என்பதை உணர்த்தியது.

அந்தக்கவலை அவளது எரிச்சலை மட்டுப்படுத்த, “சரி ஆன்ட்டி” என்று தன்மையாகவே கூறிவிட்டு மெதுவாகவே கிளம்பினாள் அவள்.

ஆனால் கிளம்பியது மட்டும்தான் மெதுவாக… அந்தத் தெருவைத் தாண்டியதுமே பைக் பறந்தது…
சக்தியின் மேலிருந்த கோபத்தை அவனது வண்டியின் மேல் காட்டியதில் ஐந்து நிமிடங்களில் அவளது அலுவலகம் வந்துவிட்டது…
அதே வேகத்தில் உள்ளே நுழைந்தவள், அலுவலகத்தின் பரபரப்பைக் கண்டு பிரேக் பிடித்தாள்.

ஸ்டாண்ட் போட்டு நிமிரவும் எதிரில் தெரிந்த நாகாபரணத்தின் முகத்தைக் கண்டு அவளது எரிச்சல் கூடினாலும் அதில் கவனத்தைச் செலுத்தாமல் பிரச்சனையில் கவனத்தைச் செலுத்தினாள்.
சிலர் கவனஈர்ப்புக்காக இப்படி செய்வதுண்டு…
அவர்களில் பலருக்குத் தங்கள் உயிர் மீது ஆசை இருக்கும்…
ஆனால் சிலர் உண்மையிலேயே உணர்ச்சி மிகுதியில் ஏதாவது விபரீத முடிவெடுத்து விடுவதுண்டு…
இதற்காகவே அவள் பெரும்பாலும் அலுவலகத்தை விட்டு அலுவல் நேரத்தில் செல்ல மாட்டாள்…
இன்று விவேகனால் செல்ல வேண்டியதாயிற்று…

அந்த ஆள் மட்டுமில்லாமல் அவனைப் பிடித்திருந்த காவலர்களும் நனைந்திருப்பதைக் கண்டவளுக்கு விபரீதத்தின் வீரியம் உறைத்தது. எனவேதான் முதலில் தண்ணீரைத் தேடினாள்…
அங்கே அந்தக் குடங்களைக் கண்டதும் நிம்மதி பரவியவளாக, விரைந்து சென்று அதை எடுத்தாள்…
ஆனால் அதற்குள் அந்த ஆள் தீக்குச்சியைப் பற்ற வைத்திருந்தான்… நல்லவேளையாக ஒரு காவலர் அதை லாவகமாகத் தூர எறியவைக்க, அது கெட்டவேளையாக லேசாகக் காலின் ஆடைப்பகுதியில் மட்டும் பெட்ரோல் பட்டிருந்த மற்றொரு காவலரின் ஆடையில் சென்று பற்றியது…
இதனை ஒரு விஷமச்சிரிப்புடன் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த நாகாபரணம் அமிழ்தா அவரை நோக்கி செல்லவும் இன்னும் அதிகமாகச் சிரித்தார்…

“டேய்… இன்னைக்கு ஒரு சிறப்பான சம்பவம் இருக்குடா… சும்மான்னாலாவது அவன் காலோடு போயிருக்கும்… இப்ப இவ தண்ணீன்னு நினைச்சு பெட்ரோலைத் தூக்கி அவன் மேல ஊத்தப்போறா… அவன் முழுசாப் பத்தி எரியறது மட்டுமில்லாம மொத்தபேரும் திகுதிகுன்னு பத்தி எரியப்போறானுங்க…
அதைப்பார்த்து நம்மளால செத்துட்டாங்கன்னு அவ குற்ற உணர்ச்சிலயே சாகணும்…
இல்ல ஊத்துறப்ப அவ மேலயே சிந்தி இப்பவே செத்தாலும் சரிதான்…”

அந்தக்காவலரை நோக்கி ஊற்றுவதற்காக குடத்தை உயரத்தூக்கிய அமிழ்தா அவளின் நாசி சொன்ன செய்தியில் அதிர்ந்தாள்…
ஆனால் அவளது மூளையின் முதல் கட்டளையை அவளது கை நிறைவேற்றியிருந்தது…
பாதியை அவர் மேல் ஊற்றியிருந்தாள்…
செய்வதறியாமல் ஸ்தம்பித்து நின்றுவிட அவளது கண்கள் உள்வாங்கிய காட்சியை அவளால் நம்ப இயலவில்லை…
அவள் ஊற்றியதில் அந்தத்தீ அணைந்திருந்தது…
நம்ப இயலாமல் கையிலிருந்த குடத்தில் மீதியிருந்த திரவத்தை முகர்ந்து பார்த்தாள்…
பெட்ரோல் வாடை முகத்தில் அறைந்தது… குடத்தைக் கீழே வைத்தவளுக்குப் புரிந்தது…
தீயை அணைத்தது அவள் ஊற்றிய பெட்ரோல் அல்ல…
அவளவன்…
கண்களைச் சுழற்றி அவனைத் தேடினாள்… அவன்தான் அவளது கண்களுக்குத் தெரிவானே… அவளது கட்டளைப்படி… தெரிந்தான்…
கண்ணை மூடித்திறந்து நானிருக்கிறேன் உன்னுடன் என்று உணர்த்தியவனை ஓடிச்சென்று கட்டியணைக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு…
ஆனால் அதைச் செய்தால் அனைவரும் அவளைப் பைத்தியம் என்று கருதக்கூடும்… அதனால் அமைதிகாக்க, சிலர் நிஜமான தண்ணீரை எடுத்து வந்து பெட்ரோலால் நனைந்திருந்தவர்கள் மீது ஊற்றினர்…
அதில் நிகழ்வுக்கு வந்தவள் அந்தக்காவலரின் அருகில் சென்று அவரது காயத்தைப் பார்த்து மருத்துவ உதவிகள் செய்து..
அந்த நாடகம் நடித்துக்கொண்டிருந்தவன் போட்ட மற்றொரு நாடகத்தைப் பொறுமையாகக் கேட்டு..
பின் மற்ற அனைவரிடமும் மனுக்களை வாங்கி, அவர்களது குறைகளைத் தீர்ப்பதாய் உறுதியளித்து… உறுதியளித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு உடனடியாக ஆவண செய்து…
எனச் சூறாவளியாய்ச் சுழற்றியடித்த வேலையில் அவள் சுழலத்தொடங்க, அருளாளனும் அவ்விடத்தை விட்டு மறைந்திருந்தான்…

ஜீப்பில் அமர்ந்து அந்தக் குடத்தை மடியில் வைத்து அதனுள்ளே உற்றுப்பார்த்தும் முகர்ந்து பார்த்தும் அதைத் தூக்கி மேலே பார்த்தும் ஆராய்ச்சி செய்தபடி வந்துக்கொண்டிருந்த நாகாபரணத்தை விசித்திரமாகப் பார்த்தான் அருகில் அமர்ந்து கார் ஓட்டிக்கொண்டிருந்தவன்…

ஒரு குரூரத்தோடு அமிழ்தா அந்தக் காவலரின்மேல் பெட்ரோலை ஊற்றுவதைப் பார்த்தபடி இருந்தவர் தீ பற்றுவதற்குப் பதிலாக அணைந்து விடத் திடுக்கிட்டுப்போய் சில கணம் ஸ்தம்பித்திருந்தார்…
அவரை உலுக்கி அழைத்து வரும்போது மறக்காமல் அந்தக் குடத்தை எடுத்தவர் அதை மடியில் கட்டிக்கொண்டு வந்ததுமல்லாமல்
அணு ஆராய்ச்சி செய்வது போல முகத்தை வைத்துக்கொண்டு வந்தால் மனிதனுக்குப் பயமாயிருக்குமா இல்லையா?

“என்னண்ணே பார்க்கறீங்க.. அப்ப இருந்து?”

“பெட்ரோல் ஊத்தி தீ எப்படிடா அணையும்?”

“தெரியலண்ணே… ஒருவேளை எதுவும் சயின்ஸ் இருக்குமோ என்னமோ? யார் கண்டா?”

“சயின்ஸ்ல்லாம் ஒண்ணுமே இல்லடா…இது பெட்ரோலே இல்ல… தண்ணீ… பச்சத்தண்ணீ…”

“அண்ணே… இதோட என்னைப் பத்துத் தடவை அதை மோந்து பாக்க வச்சுட்டீங்க… பெட்ரோல் வாடை குப்புன்னு அடிக்குது.. அது எப்படி பச்சைத்தண்ணியா இருக்கும்? விடுங்க… ஏதோ ஒண்ணு…”

அவன் சொன்னதைக் கேட்காமல் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபடி வந்தவர் எதிரே வண்டியோடு ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ விளையாடிக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்தார்…

“டேய்… என்னடா பண்றான் அவன்… வண்டியை அவனே கீழே போட்டுக் கீழே போட்டு நிமித்திக்கிட்டுருக்கான்…”

“அண்ணே… வண்டில்ல பெட்ரோல் இல்லன்னா இப்படி பண்ணுவாங்க… கொஞ்ச தூரம் போகலாம்…
ஆனா இவன் உலுக்கிறதைப் பார்த்தா பலதடவை இப்படி பண்ணி சுத்தமா பெட்ரோல் இல்லாம வண்டி காஞ்சிக்கிடக்கிற மாதிரி இருக்கு…”
சொல்லியபடி அவனைக் கடந்துபோன வண்டியை ‘நிறுத்து…நிறுத்து…’
என்று நிறுத்த வைத்து இறங்கி அந்த பைக்காரனை நோக்கிச்சென்றார்…

டிரைவர் சொன்னது போலவே… அந்த வண்டியில் பெட்ரோல் துளியும் இல்லை போலும்…
ஸ்டார்ட்டாக மறுத்து மக்கர் பண்ணிக்கொண்டிருந்தது…
அதோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தவனிடம் சென்று,

“என்ன தம்பி பெட்ரோல் இல்லையா? “

“ஆமா சார் “

“எங்ககிட்ட இருக்கு வாங்கிக்கிறியா?”

“நல்லா இருப்பீங்க கொடுங்க சார்…”

அந்தக் குடத்தில் இருந்த பெட்ரோலை அவன் வண்டியில் ஊற்றிவிட்டுப் பார்க்க, அவரது எதிர்பார்ப்பிற்கு மாறாக அந்த வண்டி அழகாய் ஸ்டார்ட் ஆகி ஓடியது…

“என்னடா? இந்த வண்டி தண்ணில ஓடுது? “

“அண்ண்ணே… இது பெட்ரோல்தான்ண்ணே…”

“தண்ணிங்குறேன்… அப்ப இருந்து பெட்ரோல் பெட்ரோல்ங்கற… இப்பப்பாரு…” என்றபடி அந்தப்பைக்கில் ஊற்றியது போக மிச்சமிருந்த பெட்ரோல் இருந்த குடத்தை வாங்கித் தரையில் வைத்தவர் சட்டைப்பையைத் துழாவி தீப்பெட்டியை எடுத்தார்…

எங்கே நம் மேல் ஊற்றி கொளுத்தி காட்டி விடுவாரோ என்ற பயத்தில் அவன் பின்னால் நகர்ந்தபடி “என்னண்ணே பண்றீங்க…” என்று கேட்டான்…

“தண்ணி பத்திக்காதுன்னு காட்டப்போறேன்…” என்று சொல்லியவர் நாலு தீக்குச்சிகளை ஒன்றாக எடுத்து உரசி அந்தக் குடத்துக்குள் போட்டார்…

பட்டெனப் பற்றிய குடம் வெப்பத்தில் வெடித்து அப்படியே உருகத் தொடங்க, (அவரது) நல்ல வேளையாக கூட இருந்தவன் அவரைப் பின்னால் இழுத்திருந்தான்…

“நான்தான் அது பெட்ரோல் பெட்ரோல்ன்னு சொல்றேன்லண்ணே…”

“பெட்ரோலா இருந்தா அவ ஊத்தினப்ப மட்டும் பத்தாம எப்படிடா அணைஞ்சுச்சு?”

“அது அணையுறது இருக்கட்டும் முதல்ல இதை அணைப்போம் வாங்க…” என்றபடி ஜீப்பிலிருந்த சாக்கை எடுத்து அதை அணைத்து விட்டு அவரை அழைத்துச்சென்றான் அவன்.

தன்னை எப்பேர்ப்பட்ட பழியிலிருந்து காத்திருக்கிறான் என்பதை யோசித்தபடியே வீட்டினுள் நுழைந்தாள்…
அப்பொழுதும் அவனுடன் பேசவில்லை… இப்பொழுதாவது பேசவேண்டும் என்று எண்ணியபடி நுழைந்தவளின் கண்களில் சந்தனாவுடன் கேரம் ஆடிக்கொண்டிருந்த விவேகன் பட்டான்…
இல்லை அண்ணனுடன் பேசுவதை விட தம்பியுடன் பேசுவதுதான் இப்பொழுது அவசியம்…
திடீரென இவன் ஏன் இப்படி செய்து தொலைத்தான் என்று தெரியவில்லையே என்று யோசித்தபடியே பிரெஷ் ஆகிவிட்டு மூவருக்குமாக தேநீர் தயாரித்து எடுத்து வந்தாள்…

விளையாடியபடியே சந்தனா அவனிடம் வம்பிழுத்து, வளவளத்து, கலகலத்து அவனைச் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தாள்…
முழுமையான சிரிப்பா என்று தெரியவில்லை…
ஆனால் சிரித்தான்… விளையாட்டிலும் அவளின் முயற்சியிலும் அமிழ்தாவும் பங்கெடுக்க சற்று நேரம் மனம் விட்டே சிரித்தான்…
முதல் ஆட்டத்திற்குப்பின் சந்தனா இன்று நான் சமைக்கிறேன் என்று எழுந்து போய்விட, விவேகனும் அமிழ்தாவும் மட்டும் ஆடிக்கொண்டிருந்தனர்…
அவனுக்குக் கொஞ்சம் நேர்மறை எண்ண அலைகள் வரட்டும் என்று அவனையே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்தாள் அவள்… மூன்றாம் முறையாக ஜெயித்தவன் பின் சொன்னான்…

“அக்கா இதுக்கு சந்தனாவே தேவல…”

“ஆமா விவேகன் எனக்குக் கேரம் அவ்வளவா வராது…

“ஏன்க்கா பொய் சொல்றீங்க… நீங்க கேரம் நல்லா விளையாடுவீங்கன்னு சந்தனா என்கிட்ட பலதடவை சொல்லிருக்கா… காலேஜ்ல விளையாடுறப்பல்லாம் அவதான் என்கிட்ட தோத்துகிட்டே இருப்பா…அப்பல்லாம் எங்கக்கா இருந்தா ஜெயிச்சுருப்பாங்கன்னு சொல்லிட்டே தான் இருப்பா… அவளே இன்னைக்கு என்னை இரண்டு ஆட்டத்துக்கு ஒருதடவை ஜெயிச்சுட்டா… நீங்க வேணும்ன்னே விட்டுக்கொடுத்தாத் தெரியாம போயிருமாக்கா?”

அமிழ்தா அவன் கண்டுபிடித்துவிட்டதில் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்க, அவன் விரக்தியாகச் சிரித்துவிட்டுச் சொன்னான்…

“எங்கண்ணன் கூட இப்படிதான் பண்ணுவான்…
மூட் ஆப் ஆகிருக்க நேரம் விளையாடக் கூப்புட்டு விட்டுக்கொடுத்து ஜெயிக்க வைப்பான்…”
அவனுடைய கண்ணில் கண்ணீர் தழும்பிக்கொண்டு நின்றது…

“உங்க அண்ணனை ரொம்ப மிஸ் பண்றியா விவேகன்…” அவள் அமைதியாகக் கேட்க,

“இப்ப மிஸ் பண்ணி? உயிரோட இருந்தப்ப அருமை தெரியல…” அவன் விரக்தியில் இதழ் வளையச் சொன்னவன் கையில் முகம் புதைத்து முதுகு குலுங்க,
‘அருமை தெரியலயா? இவன் என்ன சொல்றான்?’ குழம்பியவள் நாற்காலியை இழுத்து அவனருகில் போட்டு அமர்ந்தாள்…

சற்று அவனாகவே ஆசுவாசமடையவிட்டுப்பின்
“என்ன? காலையில் பண்ணதுக்கு… அண்ணன் விஷயம்தானா?” என்று கேட்டாள்.

அவன் அமைதியாகத் தலையசைக்க,
“இந்த உலகத்துல எல்லாருக்குமே எப்பவாவது ஏதாவது ஒரு பிரியமான உறவு நம்மளை விட்டுப் பிரிஞ்சுட்டே தான் இருக்கும்…
அதுக்காக நாமளும் அவங்க கூடவே போகணும்ன்னு நினைச்சா இங்க யாருமே உயிரோட இருக்க மாட்டாங்க…
இவ்வளவு ஏன் நீ இப்படி பண்ணது உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா சந்தோஷமாவா இருக்கும்?
எவ்வளவு கஷ்டப்படுவாங்க?”
காலையில் அவனது முகத்தில் தெரிந்த பரிதவிப்பைப் பார்த்துக்கொண்டுதானே இருந்தாள். அதை உணர்ந்தவளாகச் சொன்னாள்.

“எதையாவது மனசுல போட்டுக் உழப்பிக்கிட்டே இருக்கக் கூடாது விவேகன்… ஏதாவது உன் மனசைப் பாதிச்சிருந்தா சொல்லு…”

சற்று நேரம் கண்ணீரில் கரைந்தவன், “ஏதாவது ஒரு பிரியமான உயிர் இறந்துபோறதை எல்லாருமே சகிச்சுதான்க்கா ஆகணும்… ஆனா அந்த உயிர் பிரியறதுக்கு நாமதான் காரணம்ங்கற குற்ற உணர்ச்சியைச் சகிக்க முடியாதுலக்கா…” கண்ணீருடனே தழுதழுத்த குரலில் சொன்னான்…

“என்ன?”

“ஆமாக்கா…” இருகைகளாலும் சடார்சடாரென முகத்தில் அறைந்தவன், “எங்கண்ணன் சாகிறதுக்கு நான்தான் காரணம்…” கதறியழுதபடி நாற்காலியிலிருந்து கீழே விழுந்தான்.

அதில் பதறி அவனைப் பிடித்தாலும் அமிழ்தாவிற்குள் குழப்பரேகைகள் ஓடியது…
அருளாளனைக் கொன்றது அருணாச்சலம்…
ஆனால் அருள் அவனாகச் செத்தேன் என்றான்…
இப்பொழுது இவன் என்னால் செத்தான் என்கிறான் ஒன்றும் புரியவில்லையே…

சத்தம் கேட்டு ஓடிவந்த சந்தனாவிடம் நீர் எடுத்து வருமாறு சைகை காட்டினாள்.
எடுத்து வந்த நீரைக் கதறிக்கொண்டிருந்தவனிடம் கொடுக்க, அவன் மறுத்தான்…

“குடி விவேகன் பிளீஸ்…”
மெல்ல தேம்பலுடனே குடிக்க, புரையேறியது…

“பார்த்து அழுகையை நிறுத்து முதல்ல மெதுவா…” அவனது தோளைத் தட்டிக்கொடுத்துப் பின் மெல்ல குடிக்க வைத்தாள்…

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் விவேகன் போய் ரெஸ்ட் எடு…”

“இல்….லக்கா எவ்வ…ளவு…நா…ள்தான் நா…னும் மனசுக்குள்…ளேயே வச்சுப் புழுங்க….றது?”

“சரி நீ முதல்ல அழுகையை நிறுத்து…” மற்றொரு தம்ளர் நீரைக் குடிக்க வைத்தாள்.
பின் மெதுவாக கண்ணீரெல்லாம் வற்றிப்போய் விட்டது போல் தோன்றிய பின் அழுதழுது கட்டிப்போன குரலில் சொல்ல ஆரம்பித்தான்…

“எங்கண்ணன் உண்மையில எங்க கூட பிறந்தவன் கிடையாது… ஆனா இது எனக்கும் எங்கக்காவுக்கும் ரொம்ப நாளா தெரியாது… ஒருநாள் இது எங்களுக்குத் தெரிய வந்துச்சு… எங்கக்கா அதை ரொம்ப ஈசியா கடந்து போயிட்டா… எப்பவும் போல இருந்தா… ஆனா என்னால அது முடியல… எங்களுக்கு இது தெரிய வந்த அன்னைக்கு எங்கண்ணன் ரொம்ப மனசு உடைஞ்சு போயிருந்தான்… கஷ்டப்பட்டு அக்காவும் அப்பாவும் அவனைச் சமாதானப்படுத்தித் தூங்க அனுப்புனாங்க… நானும் அண்ணனும் ஒரே ரூம்ல தான் தூங்குவோம்… அன்னைக்கும் அதே மாதிரி தூங்கப்போனப்ப, நான் ரொம்ப நேரமா பேசாம இருக்கறதைப் பார்த்து என்னடான்னு சாதாரணமா பேச ஆரம்பிச்சான்… ஆனா அவன் கண்ணில நான் அவனை ஏத்துக்கலயோங்கற பயம் தெரிஞ்சது… ஏன்னா எல்லாரையும் விட என்னோட குணம் அவனுக்கு நல்லாத் தெரியும்… ஒருத்தரைப் பிடிக்கலன்னு முடிவு பண்ணிட்டா அதை மாத்த மாட்டேன்… அதை மாத்தவைக்கணும்ன்னா அது அவனால மட்டும்தான் முடியும்… அவன்தான் கஷ்டப்பட்டு எனக்குப் புரியவச்சு அவங்களோட பேச வைப்பான்… ஆனா அப்ப நான் அவனையே அந்த லிஸ்ட்ல சேத்துருந்தேன் …” குரல் உடைய கையில் முகம் புதைத்தவன், சில விநாடிகள் கழித்து கையால் முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டுத் தொடர்ந்தான்.

“ஏற்கனவே மனசு நொந்து போயிருந்தவன நீ என் அண்ணனே இல்ல… உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்ன உரிமைல நீ என்கிட்ட பேசுறன்னுலாம் கேட்டு அவன் மனசை இன்னும் நோகடிச்சேன்… எவ்வளவு கெஞ்சுனான் தெரியுமா? அவன் யார்க்கிட்டயும் கெஞ்சி நான் பார்த்ததே இல்ல… ஆனா என்கிட்ட பேசச்சொல்லிக் கெஞ்சினான்… அப்ப மட்டுமில்ல போன்ல பேசறப்ப, அவங்ககிட்ட பேசறப்பெல்லாம் எங்கிட்ட ஒவ்வொரு தடவையும் போனைக் கொடுக்கச்சொல்லுவான்… நான் வாங்கமாட்டேன்… அக்காகிட்ட போனை ஸ்பீக்கர்ல போடச்சொல்லி அவகிட்ட பேசறமாதிரியே என்கூடப்பேசுவான்… அப்பல்லாம் கூட கண்டவங்க குரலைக் கேட்க பிடிக்கலன்னு சொல்லுவேன்…”

“இவ்வளவு பண்ற அளவுக்கு உங்கண்ணன் என்ன பண்ணாங்க விவேகன்? உன் கூட பிறக்கலைன்னா அது அவங்க தப்பா? அதுக்காக இப்படியா?” சந்தனா ஆற்றாமையுடன் கேட்டு விட்டாள்.

தலைகுனிந்தவன், “அவன் என்கூட பிறந்தவன் இல்லங்கறதால மட்டுமில்ல… அவனோட சொந்த அப்பாவைப் பத்தி சொன்னதும் எனக்குப்பிடிக்கல… அவர் அவ்வளவு நல்லவர் இல்லன்னு நினைச்சுதான் அவன் மேல அப்படி வெறுப்பைக் கொட்டுனேன்… ஆனா இப்ப யோசிச்சுப் பார்த்தா அவர் எவ்வளவோ பரவாயில்ல…தன்னோட மகன்னு தெரியாமதான் அவனைக் கொலை பண்ணாரு… ஆனா நா…ன்…”
மீண்டும் கண்ணீரில் நீந்திவிட்டுத் தொடர்ந்தான்.

“ஒவ்வொரு தடவை ஊருக்கு வர்றப்பவும் கெஞ்சுவான்… பேசுடா விவா பேசுடா விவான்னு… சில நேரம் எப்பவும் சாதாரணமா பேசற மாதிரி விளையாட்டாப் பேசிப்பார்ப்பான்… அவன் எப்படி பேசுனாலும் ஜாடையில சில ஜென்மத்துக்கெல்லாம் மானம் ரோஷமே இல்லன்னு அவனை அசிங்கப்படுத்தித்தான் அனுப்பிருக்கேன்…”

அமிழ்தாவிற்கு அப்படியே அவனைக் கன்னம்கன்னமாக அறைய வேண்டும்போல வந்தது…ஆனால் அடித்து என்ன செய்வது?

“ஆனா அவன் தம்பிக்கிட்ட என்னடா மானமும் ரோஷமும் வேண்டிக்கிடக்குன்னு திரும்பவும் வந்து வந்து பேசுவான்…அவன் இறந்தப்ப அவங்க மூணு பேரும் இங்க தான் இருந்தாங்க… என்னைக் கூப்புட்டாங்க நான் வழக்கம்போல கண்டவங்க இருக்கிற இடத்துக்கு வரமுடியாதுன்னு போகல… ஒருநாள் விடியல்காலையில அப்பா கூப்பிட்டுட்டே இருந்தாரு… நான் எடுக்கவே இல்ல… அவங்க அவன் கூட இருக்கறப்ப நான் அவங்ககூடவும் பேசமாட்டேன்… எரிச்சலோட போனை எடுத்து ஏன்;ப்பா காலங்காத்தால தூது வர்றீங்க… அவனுக்கெல்லாம் கொஞ்சம் கூட சூடு சுரணையே இருக்காதா? நான் செத்தாலும் அவன் கிட்ட பேசமாட்டேன்னு சொல்லிருங்கன்னு சொல்லிட்டுப் போனைக் கட்பண்ணிட்டேன்.. அப்பா திரும்பவும் கூப்பிட்டு நீ சாகவேண்டாம்… அவன் செத்துட்டான்… இனி உன்கிட்ட பேசவே மாட்டான்னு சொல்லிட்டு வச்சுட்டாரு… அப்ப எனக்கு எப்படியிருந்ததுன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்… இல்ல உண்மையா இருக்காது ஏதோ என்னைப் பேச வைக்கிறதுக்காக விளையாடுறாங்கன்னு நினைச்சு அண்ணன் போனுக்குக் கூப்புட்டேன்… அப்பக் கூட அவன் கிட்டப் பேசணும்ன்னு நினைக்கல… அவன் குரலை மட்டும் கேட்டுட்டு வச்சுரலாம்ன்னு நினைச்சுதான் கூப்புட்டேன்… ஆனா இப்ப அவன் எடுக்கவே இல்ல… அம்மா அப்பா அக்கா போனுக்கும் கூப்புட்டேன் யாருமே எடுக்கல… ஒரு மாதிரி ரொம்பப் பதட்டமா இருந்துச்சு… இந்த ஊருக்கே கிளம்பி வந்தேன்… அண்ணனுக்கு ஒண்ணும் ஆகிருக்கக் கூடாது… ஆகிருக்கக் கூடாது… அவன் கிட்டப்போய் சாரி கேட்டுப் பேசிரலாம்ன்னு நினைச்சுலாம் வந்தேன்… ஆனா அவனோட… அவ…னோட ச…வத்துக்கிட்ட கூட என்னால மன்னிப்பு கேக்க முடியல… நான் வர்றதுக்குள்ள அடக்கத்தையே முடிச்சிட்டாங்க… அவன் கல்லறைல விழுந்து கதறுனேன்… ஆனா அப்ப கதறி? எவ்வளவு தடவை என்கிட்ட கெஞ்சிருப்பான் தெரியுமா? பேசுடா விவா… பேசுடா விவான்னு… அய்யோ அந்தத்தடவை பேசிருக்கலாமே… இந்தத்தடவை பேசிருக்கலாமேன்னு இப்ப அடிச்சுக்குது… அப்பல்லாம் அவன்கிட்ட பேசாம அவனைத் துச்சமா மதிச்சுட்டு அவன் இறந்ததுக்கப்பறம் அவனோட கல்லறைலபோய்ப் பேசுண்ணா பேசுண்ணா இப்ப என்கிட்ட பேசுண்ணா நான் பேசுறேண்ணான்னு புலம்பிகிட்டே இருந்தேன்… இன்ன வரைக்கும் மனசுக்குள்ள அந்தப் புலம்பல்ல விடல்ல…”

அவன் முட்டியில் முகம் புதைத்து அழத்தொடங்க, சந்தனாவிற்குக் கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது…
அமிழ்தாவிற்கும் மனம் கனமாகத்தான் இருந்தது…
விவேகன் மேல் இருந்த கோபம் போய் பரிதாபம்தான் வந்தது…
இதெல்லாம் மிகப்பெரிய கொடுமை… உயிரோடிருக்கும்போது உரிய மதிப்பைத் தராமல் உயிர்போனபின் உருகி என்ன? புலம்பி என்ன? அழுதென்ன? கதறி என்ன?

“இங்க பாரு விவேகன்… கஷ்டம்தான் ஒத்துக்குறேன்… ஆனா அதுக்காக நீ சாகலாம்ன்னு முடிவெடுக்கலாமாடா? அப்பா அம்மாவைப் பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பாத்தியா? அண்ணன் மர்டர்… அக்கா ஆக்ஸிடன்டல கோமா… அவங்களால தடுத்திருக்க முடியாது… விதி… ஆனா நீ? சூசைட்ல நீயே போய் சாகணுமா விவேகன்? மூணு பேரையும் மூணு பக்கம் பறிகொடுத்தா அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்?”

“அதெல்லாம் நினைக்காம இல்ல சந்தனா… ஆனா என்னால எங்கண்ணன் சாவுக்கு நான்தான் காரணம்ங்கற குற்றஉணர்ச்சியைத் தடுக்கவே முடியல…”

“என்ன? நீ உங்கண்ணன் கூட பேசாம இருந்த அவ்வளவுதான… அதுக்கும் அவர் மர்டர்ல இறந்ததுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”

(தொடரும்)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *