Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

“என்ன? நீ உங்கண்ணன் கூட பேசாம இருந்த அவ்வளவுதான… அதுக்கும் அவர் மர்டர்ல இறந்ததுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”)

“அது… அது வந்து…”

“எதுன்னாலும் சொல்லு விவேகன்…”
இப்பொழுது அமிழ்தா கேட்டாள்.

“அண்ணன் இறந்துபோறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு சின்னப்பொண்ணும் அவளோட பாட்டியும் எங்க வீட்டுக்கு வந்து அவன் தங்க வைக்கச்சொல்லி அனுப்புனதா சொன்னாங்க… அந்தப்பொண்ணு வந்து மேகலாவைத்தான் கேட்டுச்சு..
ஆனா அவங்க வந்தப்ப வீட்ல நான் மட்டும்தான் இருந்தேன்…
அவங்க அப்படி சொல்லவும் எனக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு…
கண்டவங்க பேச்சைக் கேட்டுக் கண்டவங்களுக்கெல்லாம் இடம் கொடுக்கமுடியாது கிளம்புங்கன்னு விரட்டிவிட்டுட்டேன்…
அந்தப்பொண்ணு என்னவோ சொல்ல வந்துச்சு…
ஆனா அவங்க பாட்டி மரியாதை இல்லாத இடத்துல இருக்க நாம ஒண்ணும் மானங்கெட்டவங்க இல்ல…
நம்ம ஊருக்கே போய்ச் செத்தாலும் சாகலாம் இங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லி இழுத்துட்டுப் போயிட்டாங்க… அவங்க அப்படி சொன்னப்ப ஒரு மாதிரி இருந்தது…
ஆனா கொஞ்சநேரம் கழிச்சு சரியாகிருச்சு… சாயங்காலம் வீட்டுக்கு வந்த அப்பா, அம்மா மேகலா எல்லாருமே யாராவது வந்தாங்களான்னு கேட்டாங்க…
நான் இல்லன்னு சொல்லிட்டேன்… அண்ணன் நைட்டு கேட்டப்ப அவங்க இல்லன்னு சொல்லிட்டாங்க…
பிரச்சனை தீர்ந்துருச்சுன்னு நினைச்சு நான் விட்டுட்டேன்…
ஆனா பிரச்சினை அங்கதான் ஆரம்பிச்சிருக்குன்னு எனக்குத் தெரியல… ரெண்டு வாரம் கழிச்சு அண்ணன் ஊருக்கு வந்தான்…
நுழைஞ்சவுடனே அவன் என்னைத் தேடிதான் வந்தான்…
இதைக் கேட்டான்…
முதல்ல இல்லன்னுதான் சொன்னேன்… உண்மையைச்சொல்லு விவான்னு அதட்டுனான்…
அதுல எனக்குக் கோபம் வந்துருச்சு… அதட்டுற வேலையெல்லாம் வச்சுக்க வேண்டாம்ன்னு சொல்லுக்கா…
ஆமா விரட்டிவிட்டேன் இப்ப என்ன அதுக்குன்னு கேட்டு முடிக்குறதுக்குள்ள… அவன் அறைஞ்ச அறைல மயங்கி மாடிப்படில நின்னுட்டு இருந்தவன் உருண்டு கீழே வந்து விழுந்துட்டேன்… போதாக்குறைக்குக் காதுல இருந்து ரத்தம் வேற வந்துருச்சு…
வந்ததும் வராததுமா அவ்வளவு கோபத்தோட வந்தான்ங்கறதனால பின்னாடியே வந்த அப்பா அம்மா கண்ணுல கரெக்டா அவன் அறைஞ்சதுதான் பட்டது… அப்போதைக்கு எனக்கு வைத்தியம் பார்க்கறதுல்ல கவனம் செலுத்திட்டாலும் சரியாகிருச்சுன்னு வீட்டுக்கு வந்தவுடனே அண்ணனை அப்பாவும் அம்மாவும் ரொம்பப்பேசிட்டாங்க…”

“ரொம்பப்பேசிட்டாங்கன்னா?”

அன்றைக்கு நடந்ததை அப்படியே சொல்லத் தொடங்கினான்..

“பாம்புக்கு என்னதான் பாலூட்டி வளர்த்தாலும் கொத்தத்தான் செய்யும்ன்னு காட்டிட்டல்ல…”

“அப்பா?

“யாருக்கு யார்டா அப்பா? என்பையனை உன் சொந்தத்தம்பியா நினைச்சுருந்தா இப்படி அடிச்சுருப்பியா? அப்பறம் என்னை மட்டும் எதுக்கு அப்படி கூப்புடுற? “

“அவனை என்தம்பியா நினைச்சதாலதான்ப்பா அடிச்சேன்…அவன் ஒரு தப்பு பண்ணா நான் திருத்தக் கூடாதா? அவன் பண்ண வேலையால என்ன நடந்ததுன்னு தெரியுமா?”

“என்னனாலும் இப்படியா காட்டுமிராண்டித்தனமா அடிப்பாங்க… அது சரி ஜென்மப்புத்தி செருப்பால அடிச்சாலும் போகாதும்பாங்க… உன் அப்பன் புத்தி மட்டும் எப்படிப்போகும்? நீ வாப்பா” என்றுவிட்டு விவேகனை அழைத்துச்சென்றுவிட்டார் அவர்…

அவரை ஓர்வித வலியுடன் பார்த்தவன் வாணியிடம் திரும்பி ஏதோ சொல்ல வருகையில் “எனக்கும் உன்னைவிட என்குடும்பம்தான்ப்பா முக்கியம் என்றவர் அவர்களைப் பின்தொடர்ந்துவிட, அப்படியே இடிந்து போய் அமர்ந்தான் அவன்…

அவனது தோள்களைத் தொட்டு அண்ணா என்றவாறு அமர்ந்த மேகலையை உணர்ச்சியற்றப்பார்வையைப் பார்த்தவன், “ஏன்மா நீ உன் குடும்பத்தோட போகலையா? என்றான்…

“என்னண்ணா? அவங்கதான் ஏதோ கோபத்துல பேசிட்டுப் போனாங்கன்னா நீயும் இப்படி பேசிட்டு இருக்க…”

“கோபத்துல பேசினாலும் மனசுல இருக்கறதுதான வந்துருக்கு போலடா…. என் பையன்… என் குடும்பம்…”

“அதெல்லாம் மனசுல இருந்து வந்த வார்த்தை இல்லண்ணா… நீ மனசை விட்ராதண்ணா… ப்ளீஸ்ண்ணா…
கண்ணீரோடு கெஞ்சியவளைத் தோள் சாய்த்து தலை கோதியவன், சற்று நேரம் கழித்து “சரிடா நான் கிளம்புறேன்… என்று கிளம்பினான்…

“அண்ணா நீ வந்து ஒருமணிநேரம் கூட ஆகல…

“இல்லடா நான் இங்க இருந்தா இப்ப எல்லாருக்குமே சங்கடமாதான் இருக்கும்… நான் கிளம்புறேன்…”

கிளம்பியவனிடம்
“அண்ணா விவா ஏதோ சின்னபையன் அப்பாம்மாக்கு அவன் செல்லம்ங்கறதால பதறிட்டாங்க… நீ ஹர்ட் ஆகிக்காதண்ணா…”
கண்ணை எட்டாமல் உதட்டால் சிரித்தவன்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லடா… விவாகிட்ட ஒரு ஸாரி அன்ட் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிரு” என்றான்…

“தேங்க்ஸ் எதுக்குண்ணா?”

“நான் ஒரு விஷயத்தைச் செய்யலாம்ன்னு நினைச்சேன்… ஆனா அதுக்கு ஒரு மிகப்பெரிய தடை இருந்தது… அந்தத் தடையை அவன் நீக்கிட்டான்… அதுக்குத்தான்…நான் வர்றேன்… எல்லாரையும் பார்த்துக்கோ…” என்றுவிட்டு கிளம்பிவிட்டான்…

மேகலைக்கு அப்பொழுது எதுவும் புரியவில்லை அவன் சொன்னது…
தாய்தந்தையருக்கு அவர்களது தவறைப் புரியவைத்து சமாதானப்படுத்தி அண்ணனுக்கு சர்ப்பரைஸ் கொடுக்கலாம் என்று அழைத்துவந்த இரவு அவன் இவர்களுக்கு மிகப்பெரிய சர்ப்பரைஸ் வைத்திருந்தான்…
இறந்திருந்தான்…
ஆக்ஸிடன்ட் என்று போலீஸ் சொன்னது… ஆனால் அவளது பெற்றோரை அவனுக்குப் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாய்ச் சொல்லச்சொல்லி மிரட்டியவர்கள் கொலை என்றார்கள்…
ஆனால் தன் அண்ணன் அன்று பேசியதை வைத்து பார்க்கும்போது அவனாக இறந்திருப்பான் என்று தான் அவளுக்குத் தோன்றியது…
விவேகனிடம் நடந்ததைச் சொல்லி “சந்தோஷமா சந்தோஷமா?” என்று கதறியவள்,
மூன்று நாளில் ஆக்ஸிடன்டில் அவளும் அண்ணனிடம் செல்ல முயன்று தோற்றும் போகாமல் வெற்றியும் பெறாமல் கோமா தேர்வு எழுதிவிட்டு ரிசல்டிற்காகக் காத்திருக்கிறாள்.

“அன்னைக்கு எங்கக்கா சொன்னதை வச்சுப் பார்த்தா அண்ணன் தடைன்னு சொன்னது நீ இப்ப சொன்னியே எங்க குடும்பத்தை நினைச்சுப்பாருன்னு அந்த நினைப்புதான… அதை அவனுக்கு இல்லாம பண்ண பாவி நான்தான சந்தனா”

“ஆமா விவேகன்… நீ சொன்னமாதிரி அந்தத் தடை உங்க குடும்பத்தோட நினைப்புதான்… ஆனா அதுக்குரிய செயல் நீ நினைக்கிறமாதிரி சாவு இல்ல கல்யாணம்…காதல்…” அமிழ்தா சொல்ல ஒன்றும் புரியாமல் நிமிர்ந்தமர்ந்தான் விவேகன்… சந்தனாவும்தான்…

“என்னக்கா சொல்றீங்க ஒண்ணும் புரியல… தெளிவா சொல்லுங்க…”

“உங்கண்ணனுக்கு உங்க அம்மாவோட அண்ணன்களோட பொண்ணுங்கள்ல ஒண்ணைக் கட்டிவைக்க உங்க குடும்பத்துல ஆசைப்பட்டாங்க தானே?”

“ஆமா… ஆனா இது உங்களுக்கு எப்படி தெரியும்?”

‘ம்ம்… உங்கண்ணன் எனக்குக் காட்டுன லைவ் டெலிகாஸ்டில என்னை ரொம்ப கடுப்பாக்குனது இதுதான்…’ மனதில் நினைத்தவள்,

( படக் படக்ன்னு அமி கொசுவர்த்தில தண்ணியை ஊத்தி அணைச்சுருதுன்னு வருத்தப்பட்ட மக்களே… அவ அப்படி அணைச்சதுக்கான காரணம் இதுதான்… நம்ம அவன் தன் உறவினர்களிடம் வெகுநேரம் போனில் பேசிக்கொண்டிருந்தான்னு ஒரு வாக்கியத்துல முடிச்ச உரையாடலெல்லாம் அவ ஒருமணிநேரமா கேக்கணும்… எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு…😁😁😁😁)

“வெயிட்… ஆனா உங்க அண்ணனுக்கு அதுல விருப்பம் இல்லதானே…”

“விருப்பம் இருக்கு இல்ல எதுவுமே அவன் சொல்லல… ஐஞ்சு பேருமே சின்னப்பொண்ணுங்க… படிச்சு முடிக்கட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்ன்னு தான் சொன்னான்…”

“அவருக்கு விருப்பம் இல்ல… அதான் அப்படி சொன்னாரு…”

“சரி… அப்படியே இருக்கட்டும்… ஆனா இது எப்படிக்கா உங்களுக்குத் தெரியும்…”

“உங்க அண்ணன்தான் சொன்னாரு…”

“என்னக்கா சொல்றீங்க? அண்ணனுக்கும் உங்களுக்கும் என்னக்கா சம்பந்தம்?”:

“உங்க அண்ணன் உயிரோட இருந்திருந்தா என்னக்கா சம்பந்தம்ன்னு கேட்டுருக்க மாட்ட விவேகன்…
என்ன அண்ணி சம்பந்தம்ன்னு கேட்டுருப்ப… அதுதான் சம்பந்தம்…”

இப்பொழுது சந்தனா அதிர்ந்தாள்…

“அக்காஆஆஆஆ?????????”
“ஆமா சந்து… நான் ஒரு மீட்டிங்க்ல தான் அருளைப் பார்த்தேன்… நான் ஒரு பிரச்சனைல மாட்டிட்டு இருந்த நேரம் அது…”

“எப்ப? நீ கூட சப் கலெக்டரா இருக்கறப்ப ஒரு குளிர்பான கம்பெனிக்கு இடம் கொடுக்கறதுல பிரச்சனை வந்துச்சே அப்பவா?” சந்தனாவாக எதையோ எடுத்துக்கொடுக்க அதைப் பற்றி;க்கொண்டாள்…

“ஆமா சந்து… அப்பதான்… அப்ப அந்த பிரச்சனைல இருந்து வெளிய வர அருள்தான் எனக்கு ஹெல்ப் பண்ணாரு… அதுல இருந்து எங்களுக்குள்ள நல்ல பழக்கம் உருவாச்சு… நான்தான் ஒருநாள் அவரை எனக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்… அப்ப அவர் எனக்கும் உன்னை ரொம்பப்பிடிக்கும் ஆனா இந்த அத்தைப்பொண்ணுங்க பிரச்சினைதான் பெரிய பிரச்சனையா இருக்கு…. அப்பாம்மா ரொம்ப நாள் கழிச்சு சேந்துருக்காங்க… அவங்க மனசு ரொம்ப கஷ்டப்படும்ன்னு சொன்னாரு… அவங்க மனசை என்னால கஷ்டப்படுத்த முடியாதுன்னு சொன்னாரு… அப்பறம் ஒருநாள் அவராவே வந்து இந்தப்பிரச்சனையை சொல்லி அவங்க என் மனசைக் கஷ்டப்படுத்தின பிறகு நான் அவங்க மனசைப் பத்தி கவலைப்படப்போறதில்ல… நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்குறேன்… நாம ரெண்டு பேரும் காதலிக்கலாம்ன்னு சொன்னாரு…”

“நிஜமாவாக்கா சாரி நிஜமாவா அண்ணி?” அவன் அண்ணி எனவும் சந்தனா அவனை முறைக்க, மீண்டும் சாரி என்றுவிட்டு “நீங்க நிஜமாவே எங்க அண்ணனைக் காதலிச்சீங்களா?” என்று கேட்டான் அவனது குரலில் சந்தேகம் ஒட்டிக் கொண்டிருந்தது…

“காதலிச்சீங்களா இல்ல…விவேகன் உங்க அண்ணன் மேல சத்தியமா அவர் இறந்ததுக்கப்பறமும் காதலிச்சுட்டு இருக்கேன்…”

“உனக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா என்னைக் காதலிச்சதா என்மேலயே பொய்ச்சத்தியம் பண்ணுவ…” அவனது குரல் கேட்க, அவ்வளவு நேரம் அவன் அங்கே இல்லை என்பதை தன் உள்ளுணர்வால் உறுதிப்படுத்திக்;கொண்டு அளந்துவிட்டுக்கொண்டிருந்தவள், பதறிப்போய் எழுந்தாள்…

அவள் மாட்டிக்கொண்ட பயத்தில் எழுந்திருக்க, சோகத்தில் எழுந்ததாய் நினைத்து, இருவரும் சமாதானப்படுத்தத் தொடங்கினர்…மாட்டிக்கொண்டதில் திருதிருவென விழித்ததை அவர்கள் பார்த்துவிடக்;கூடாது என துப்பட்டாவை முகத்தால் மூடியிருந்தவளை, அழுகிறாள் என்று நினைத்து இருவரும் “அழாதீங்க…பிளீஸ்… அழாதக்கா.. பிளீஸ்க்கா…” என்று சமாதானப்படுத்த, துப்பட்டாவாலேயே முகத்தை அழுந்தத் துடைத்து கண்ணைச் சிவக்க வைத்துவிட்டு நிமிர்ந்தவள், விவேகனைப் பார்த்து “ஆனால் ஒண்ணு விவேகன்… உனக்காவது அவர் அண்ணன் மட்டும்தான்… எனக்கு அவர்தான் வாழ்க்கைன்னு நம்பிருந்தேன்… நானே அவர் போன பின்னாடி சாகாம உயிரோட வாழ்ந்துட்டு இருக்கேன்… நீ சாக வேண்டிய அவசியம் கிடையாது அதை நல்லாப் புரிஞ்சுக்கோ… இன்னொரு என்ன தெரியுமா? உனக்காவது நீதான் பேசாம இருந்த… உங்கண்ணன் உங்கி;ட்ட பேசிட்டேதான் இருந்தார்… ஆனா எனக்கு உங்கண்ணன் என்கூட சும்மா சண்டை போட்டுட்டுப் பேசாம இருந்தார் தெரியுமா?… அவர் பேசாமலே போயிருவாருன்னு எனக்கென்ன தெரியும்?”

மீண்டும் துப்பட்டாவால் முகத்தை மூடினாள்…

சந்தனா அவளது முதுகை மெல்லத்தடவிவிட, “அழாதீங்க… ப்ளீஸ்… நீங்கதான சொன்னீங்க… ஏதாவது ஒரு பிரியமான உயிர்நம்ம விட்டுப்போகத்தான செய்யும்ன்னு… நீங்களே அழுதா எப்படி… பிளீஸ்…” விவேகன் அவளைச் சமாதானப்படுத்தத் தொடங்க இருந்த கோபத்திலும் அருளாளன் முகத்தில் ஒரு சிறு புன்னகை படர்ந்தது…
‘அழுதுகிட்டு இருந்தவனையே ஆக்ஷன் போட்டுச் சமாதானப்படுத்த வச்சுட்டாளே…பிராடு பிராடு… இருடி தனியா சிக்குவல… அப்ப இருக்கு… உனக்கு…’

சற்று நேரம் கழித்து இருவரும் அவளைச் சமாதானப்படுத்தி(?) சாப்பிட வைத்துத் தூங்கவைத்துவிட்டு உறங்கிவிட, அவர்கள் உறங்குவதற்காக, அசந்து உறங்குபவள்போல படுத்திருந்தவளை, ‘ஏய் பிராடு எழுந்திரு’ என்று எழுப்பினான் அவன்…

அப்பொழுதும் அவள் அசையாமல் இருக்க, ‘உன் பெர்பார்மென்ஸை என்கிட்டயே காட்டுறியா? அடச்சை…எந்திரி…’ என்று அவள் தலையில் கொட்டினான் அவன்…

அவன் கொட்டியதென்னவோ மென்மையாகத்தான் ஆனால் அவளுக்கு நங்கென்று வலித்தது…
அதில் எழுந்தமர்ந்து இடக்கையால் அருகில் கிடந்த தலையணையை எடுத்து மடியில் வைத்தவள், வலக்கையால் தலையைத் தேய்த்துவிட்டபடி அவனைப் பாவமாகப் பார்த்தாள்..
.
‘அச்சோ…. பாப்பாக்கு வலிக்குதா?’ முகத்தை மென்மையாக வைத்துக்கொண்டு குழந்தையிடம் கேட்பது போல அவன் கேட்க, கையை எடுத்துவிட்டு மேலும் கீழும் தலையாட்டினாள் அவள்…

அவளது தலையில் மீண்டும் கொட்டியவன், ‘பொய்யா சொல்ற…பொய்… மாடிக்கு வா…’ என்றான்…

தலையை தேய்த்துவிட்டுக்கொண்டே தங்கையைத் திரும்பிப் பார்த்தவள், மாட்டேன் என்று தலையாட்டினாள்…

“சரி விடு… அப்ப நான் நாம நேத்து மீட் பண்ண அக்காவை கீழே கூட்டிட்டு வர்றேன்…”

‘வேண்டாம்’ என்று தலையாட்டியவள் மேலே வந்தாள்…

“ஹலோ மிஸ்டர் கோஸ்ட்… எதுக்கு என்தலையில இப்படி கொட்டுனீங்க… மனுஷன் கொட்டுனாலே வலிக்கும்… எப்படி வலிக்குது தெரியுமா?”

“ஏய் நான் மெல்லதான் கொட்டுனேன்… வேணும்ன்னா ஓங்கி ஒண்ணு கொட்டிக்காட்டட்டுமா?”

“வேண்டாம் வேண்டாம்…சரி…எதுக்கு மேல கூட்டிட்டு வந்தீங்க…”

“ம்ம்… எந்த ஸ்கூல்ன்னு கேட்க?”

“என்னது எந்த ஸ்கூல்ன்னு கேட்க…”

“ஆஅ… நம்ம குழந்தைங்க எந்த ஸ்கூல்ன்னு கேட்க… காதல் , ஊடல்ன்னுலாம் அடிச்சு விட்டியே… ரிஜிஸ்டர் மேரேஜ்… குழந்தைங்கல்லாம் மிச்சமிருக்கேன்னு கேட்டுட்டுப் போலாம்ன்னு வந்தேன்… எவ்வளவு பொய் சொல்ற நீ? ம்ம்…” மீண்டும் கொட்ட வந்தவனது கையைப் பிடித்தவள்,

“பொய்யா… நான் பொய்யே சொல்ல மாட்டேன் தெரியுமா?”

“யாரு நீ….
அப்ப நீ கீழே அடிச்சுவிட்டதெல்லாம் எந்த லிஸ்ட்ல சேரும்?”

“வள்ளுவர் லிஸ்ட்ல சேரும்…”

“ஆங்?”

“எஸ் மை ஆனர்…

‘வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும்
தீமை இலாத சொலல்…’

‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்…’

நடந்ததைச்சொல்றதுக்குப் பேரு உண்மை கிடையாது..
. தீமை தராத சொல்தான் உண்மை… குற்றமற்ற நன்மையைக் கொடுத்துச்சுன்னா பொய்யும் கூட உண்மைதான்…
சோ… அக்கார்டிங்க் டூ வள்ளுவர் ஐ டோல்ட் த ப்யூர் ட்ரூத்…
நான் இந்தப் பொய்யைச் சொல்லலன்னா உங்க தம்பி தன்னாலதான் நீங்க இறந்தீங்கன்னு நினைச்சு நினைச்சு உயிரோட செத்துட்டுருப்பான்…”

அவன் எதுவும் சொல்லாமல் பார்த்தவாறிருக்க,

“ஆனா அருள்… ஒரு பொண்ணு இறந்துபோனதுக்காக, நீங்க உங்க உயிரைக்
கொடுத்திருக்கணுமா?” என்றாள்…

“என்ன? புரியல…”

“ஆமா அருள்… உங்க குட்டி பிரண்ட் அந்த மாதவிக்காகத்தான நீங்க இறந்துபோனீங்க… கல்குவாரில ஒரு பொண்ணு இறந்திருந்ததா பிரதாப் சொன்னாரு… என்னோட கெஸ் படி மாதவியை அருணாச்சலம் ஏதாவது பண்ணிருக்கணும்… அதுக்காக அவரை நீங்க பழிவாங்க நினைச்சுருக்கணும்… அதுக்கு இறந்துபோக நினைச்சுருக்கணும்… பட் இவங்க வருத்தப்படுவாங்களேன்னு பண்ணாம இருந்திருக்கணும்… ஆனா இவங்க அந்த சண்டைல அப்படி பேசனதால நீங்க துணிஞ்சு சாக முடிவு பண்ணிருக்கணும்.. ரைட்டா…”

அவன் எதுவுமே பேசாமல்தான் நின்றிருந்தான்… அவள் தொடர்ந்தாள்…

“ஆனா அருள்… நான் அந்தக் கல் குவாரிகளைத் திரும்பித் திறக்கறதா முடிவு பண்ணிட்டேன்… எவ்வளவு குடும்பங்களோட வேலைவாய்ப்பு…”

“சரி” என்று அவனின் குரல் இடையீட மகிழ்ச்சியுடன் அவனது முகம் பார்த்தாள்… இறுகிய முகத்துடன் நின்றிருந்தவன்,

“ஆனா நானும் முடிவு பண்ணிட்டேன்…” என்றான்…

“என்னன்னு?”

அவளுக்கு முதுகுகாட்டி திரும்பியவன்,

“மத்த கலெக்டர்ஸ் மாதிரியே உன்னையும் ரிசைன் பண்ண வைக்கலாம்ன்னு…”என்றான்…

“அப்படியா ரொம்ப சந்தோஷம் அப்ப நானும் ஒரு முடிவு பண்ணிட்டேன்…”

இப்பொழுது இவளும் அவனுக்கு எதிராகத் திரும்பிநின்றாள்…

“என்னன்னு?”

“உங்க தம்பிட்ட போய்…”

“என்ன எல்லா உண்மையும் சொல்லப்போறியா?”

“இல்ல… என்னால முடிஞ்ச அளவு என்னென்ன மாத்தி சொல்ல முடியுமோ சொல்வேன்.. அதை நம்பி அவன் அவங்க அப்பா அம்மாட்டையும் சொல்லுவான்… அவங்களும் கஷ்டப்படுவாங்க… என்ன டீலா?”

“நான் என் அருணாதான் கிரிமினல்ன்னு நினைச்சேன்… நீ அவருக்கும் மேல இருப்ப போல…”

“அப்பறம் பேச்சு பேச்சா இருக்கும்போது நீங்க மிரட்டுனா நானும் மிரட்டதான் செய்வேன்…”

அதில் அவளது புறம் திரும்பியவன்,
“சரியான கேடி பிராடு பிராடு…” என்று திட்ட அவளும் சரேலென்று திரும்பியதோடு இல்லாமல்,

“ஹலோ இன்னொரு தடவை என்னை பிராடுன்னு சொன்னீங்கன்னா” அவனது முகத்துக்கு நேராக ஆட்;காட்டி விரலை நீட்டி நிமிர்ந்தாள்.. “சொன்னா?” என்றபடி அவளது கையைப் பிடித்தவன் குனிந்து அவளது முகத்தைப் பார்த்தான்…
இருவரும் ஒருவரது கண்களை ஒருவர் முறைத்தவாறு சில கணங்கள் நின்றனர்… இருவரது கண்ணிலுமே அனலடித்தது… பின் அவளது கையை அவள் உதறவும் அவன் விடவும் சரியாக இருந்தது…

“ம்ப்ச்… ஒரு ரீசனாவது சொல்லுங்க அருள்… எதுக்காக அந்தக் குவாரிகளைத் திறக்க விடமாட்டேங்கறீங்க…”

“சொல்ல முடியாது…”

“அப்ப என்னாலயும் திறக்காம இருக்க முடியாது…”

” முடிஞ்சா திறந்துக்கோ… நீ எப்படி திறக்கிறன்னு நானும் பார்த்துர்றேன்…”
என்றுவிட்டுக் கோபத்துடன் அவன் மறையப்போக அவனது கையைப்பிடித்தவள்,
“நில்லுங்க மிஸ்டர் கோஸ்ட்” என்றாள்…

“என்ன வேணும் உனக்கு? அதான் என் பேச்சைக் கேக்க முடியாதுனுட்டல்ல… அப்பறம் என்ன?”

“நான் உங்க பேச்சைக் கேட்காம இருக்கலாம்… ஆனா நீங்க என் பேச்சைக் கேட்டுத்தான் ஆகணும்…”

“என்ன தேவைக்கு?”

“நான் உங்க தம்பிக்கு கவுன்சிலிங் கொடுத்துருக்கேன் பாஸ்… ஹாஸ்பிட்டல் போனா எவ்வளவு பீஸ் கட்டணும் தெரியுமா? நான் ப்ரீயா பண்ணிக்கொடுத்துருக்கேன்…சோ எனக்கு பீஸ் வேணும்… ஆனா பணமா வேணாம்…”

“அதுக்காக அந்தக் குவாரியெல்லாம் என்னால திறக்க ஒத்துக்க முடியாது…”

“மிஸ்டர் கோஸ்ட்… நான் அப்படி சொன்னனா? நான் உங்களை அதைப் பண்ணச்சொன்னனா? அது ஆபிஸ் விஷயம்… இது பெர்ஷனல்.. அது வேறு… இது வேறு…”

“சரி… என்ன வேணும்?”

“அதை ஏன் இவ்வளவு சலிப்பா கேக்குறீங்க….”

இதழ்களை இழுத்துப் புன்னகை புரிந்தவன், “தங்களுக்கு என்ன வேண்டும்?” என்றான்…

“நேத்து கேட்டதுதான்… சுடுகாட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க…”

“நீ ஏன்டி சுடுகாட்டுக்கு வர்றதிலயே குறியா இருக்க? நான் நேத்து உன்ட்ட என்ன சொன்னேன்?”

“ம்ம்… நேத்து தேவதைன்னு சொன்னீங்க… இன்னைக்குப் பிராடுன்னு சொல்றீங்க… பேயா கூட இந்த விஷயத்துல பசங்க மாத்தி மாத்தி பேசுறீங்கயா?”

“நான் ஒண்ணும் மாத்தி மாத்தி பேசல… நீ தேவதைதான்… ஆனா என்ன கொஞ்சம் பிராடு தேவதை…”

‘இவன் நம்மளைத் திட்டுறானா? புகழ்றானான்னே தெரியலையே…’

” சரி வாங்க போகலாம்…”

“எங்க?”

“சுடுகாட்டுக்கு..”

“அங்க பேய் பிசாசுலாம் இருக்கும்ன்னு நேத்தே சொன்னனா இல்லையா?…”

“இங்க மட்டும் இல்லாமலா இருக்கு… “

“என்னது?”

“அதாவது நேத்து நீங்களே இங்க காட்டுனீங்கதானே… எவ்வளவு பேய்ங்க… எல்லா இடத்துலயும் இருப்பாங்கன்னு நீங்களே வேற சொல்லிருக்கீங்க… சும்மா கூட்டிட்டுப்போங்க மிஸ்டர் கோஸ்ட் பிளீஸ்… “

“சரி கூட்டிட்டுப்போறேன்… ஆனால் சுடுகாட்டுக்கு இல்ல… இடுகாட்டுக்கு… சுடுகாடுன்னா எரியற வாடை அடிக்கும்… அதோட அங்க எரிச்சுட்டு இருக்கற வெட்டியான்கள் முழிச்சுருப்பாங்க… அதோட கொஞ்சம் பயமாவும் இருக்கும்… அதனால இடுகாட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்… “

“சரி… “

மதிலாக அமைந்திருந்த ஒரு புற மொட்டைமாடிச்சுவரை அடைந்தவன்,

“கேட் வழியா போனா அந்த வாட்ச்மேனுக்குச் சந்தேகம் வரலாம்…”

“ஓ.கே… அதனால…”

“குதி” என்றான்…

“என்னாது???” பிடித்துக் குதிக்கக் கூட எந்த மரமும் இல்லாமல் இரண்டு பனைமர தூரத்தில் இருந்த தரையை எட்டிப்பார்த்தவள்,

“யோவ்… மிஸ்டர் கோஸ்ட் நான் என்னைச் சாகடிச்சுக் கூட்டிட்டுப்போய் மயானத்தைச் சுத்திக்காட்ட சொல்லல… செத்துட்டா நானே போய்ச் சுத்திப்பார்த்துக்குவேன்… உயிரோட இருக்கும்போது துணைக்கு வான்னு சொன்னா நீ என்னை சாகடிச்சுக் கூட்டிட்டுப்போவ போல… இவ்வளவு உயரத்துல இருந்து குதிச்சா எலும்பு கூட மிஞ்சாது…”

“அதெல்லாம் மிஞ்சும்” என்று அவளது கைபிடித்துபடி கீழே குதித்திருந்தான்…. பயத்தில் கண்ணை மூடியவள் கண்ணைத் திறந்து பார்க்கும்போது கீழே இருந்தாள்… மதிலை அண்ணாந்து பார்த்தவள், கைகாலெல்லாம் சரியாக இருக்கிறதா என்றுக் குதித்துப் பார்த்தாள்…

சில உருவங்கள், அவள் குதிப்பதை வித்தியாசமாகப் பார்த்தபடி நகர குதிப்பதை நிறுத்தியவள், “டேய் இந்த பேய் எபெக்டை எப்பக் கொடுத்த?எதுக்குக் கொடுத்த?” என்றாள்…

“இப்பதான்… இது மனுஷங்களோட இடம்… இங்க நீ தெரியாம டிஸ்டர்ப் பண்ணாக்கூட பொறுத்துப்போவாங்க… ஆனா அது எங்களோட இடம்… அங்க நீ யாரையாவது தெரியாம டிஸ்டர்ப் பண்ணிரக் கூடாதுல்ல… கண்ணுக்குத் தெரிஞ்சா விலகிருவல அதுக்குத்தான்… என்றான்.”

லேசாகத் திகிலாகத்தான் இருந்தது… ஆனால் என்னவன் அருகிலிருக்க என்ன பயம்? என தைரியமடைந்தவளிடம் போலாமா? என்று கேட்க சரியென்று தலையாட்டினாள்….

கொஞ்ச தூரம் இருவரும் நடக்கநடக்க, அங்கங்கே தெரிந்த சில உருவங்கள் இருவரையும் குறுகுறுவென்று பார்த்ததைத் தவிர, அவளுக்கு இந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது… அவனுக்கும்தான்… ஆனால் அவனுக்குச் சற்றுக் கவனமும் இருந்தது… அவளைப் பத்திரமாக மீண்டும் கொண்டுவந்து விட வேண்டுமே என்று…

மற்றபடி யாருமற்ற சாலை…
அருகே கைப்பிடித்து நடக்கும் தன்னவன்…
காற்றில் அசைந்தாடும் இலைகளின் சலசலப்பைத் தவிர வேறு சலனமற்ற அமைதி…
இதைவிட வேறு என்ன வேண்டும்? அவள் நினைத்து முடிக்கும் முன்னர் “ஊஊஊஊஊஊ” என்று ஒரு நாய் ஊளையிட்டதில் பதறிப்போய்த் திரும்பினாள் அமிழ்தா…

அவள் திரும்பியதில் இன்னும் குரைக்க,
“விடு அது ஒண்ணும் பண்ணாது… உன்னைப் பார்த்து குரைக்கல… என்னைப் பார்த்துக் குரைக்குது…அடுத்தத் தெரு போயிட்டா குரைக்காது” என்றபடி வேகமாக நடக்க, அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள்…
அவன் சொன்னது போலவே மீண்டும் அமைதி சூழ அவள் அந்த மோனத்தில் கரையும் முன் அவன் கேட்டான்…

“ஆமாம்… நாயைப் பார்த்தவுடனே தான் ஞாபகம் வருது… எதுக்காக அருணாவைப் பார்த்து நாய்ன்னு சொன்னதுமில்லாம டேபிள் வெயிட்டை வச்சு எறிய வேற செஞ்ச?”

“அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது? நீங்க அங்கதான் இருந்தீங்களா?”

“நான் கூட இருந்தாலும் இல்லன்னாலும் எனக்கு நெருக்கமானவங்க என் மனசுக்குப் பிடிச்சவங்களுக்கு ஏதாவது ஆபத்து வருதான்னு பார்த்துட்டுதான் இருப்பேன்…”

“ஓ… இந்த ஆப்ஷன் வேற இருக்கா…”

“ம்ம்… அதிருக்கட்டும் கேட்டதுக்குப் பதில் சொல்லு…”

“அப்பறம் நான் என்ன சூர்யவம்சம் மருமகளா? டேபிள் வெயிட்டை உருட்டிவிட்டு ஆசிர்வாதம் வாங்க… மண்டைலயே நச்சுன்னு போட்டுருப்பேன்… உனக்காகத்தான் கால்ல கூட போடாம காலுக்குப் பக்கத்துல தூக்கிப்போட்டேன்… அந்த மட்டுக்கும் சந்தோஷப்பட்டுக்கோ…”

“அது சரி… நீதான் கேடியாச்சே…”

அவனை முறைத்துவிட்டு இன்னும் சற்று தூரம் இரவின் குளிரையும் இருளையும் ரசித்தபடி நடக்க, அவள் கண்ணுக்குத் தெரிந்து கொண்டிருந்த உருவங்களின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது…

“வந்துட்டோமா அருள்?

“ஆமா…” என்றபடி அந்த இடுகாட்டின் சிறிய கேட்டைத் திறந்து அவளை அழைத்துச் சென்றான்…

“இனி கவனமா வா… என்கையை நல்லாப் பிடிச்சுக்கோ… நான் போற பாதையிலயே வா… யாருடைய சமாதியை மிதிக்கவோ கல்லறையை இடிக்கவோ செஞ்சுராத என்ன? “

“ம்ம்…”

மெல்ல அவனது கையைப் பிடித்துக்கொண்டு அவன் சொன்னமாதிரியே கவனமாக வந்தாள்… மனித உலகம் போலவே அங்கும் சிலர் அழுது கொண்டிருந்தனர். புதிதாக இறந்தவர்கள் போலும்… சிலர் சிரித்துக்கொண்டிருந்தனர்… மரணம் பழகிவிட்டது போலும்… சிலர் கோபத்துடனும் சிலர் கவலையுடனும் சுற்றிக்கொண்டிருந்தனர்… அதுசரி.. மனிதர்களாக இருந்து இறந்தவர்கள்தானே…சில பெரியவர்கள், சில குழந்தைகள், அருள் போல சில இளைஞர்கள் என அனைத்து வயதினரும் இருந்தனர்… மரணத்திற்கும் வயதில்லை என்று தோன்றியது… அனைவருமே இவளை ஒருபார்வை பார்த்துவிட்டு அவரவர் எண்ணங்களில் மூழ்கினர்…யாரும் எதுவும் சொல்லவோ பயமுறுத்த முயற்சி செய்யவோ இல்லை… அதுவும் அவளுக்கு நிம்மதி அளித்தது…
மெல்ல அவளை பத்திரமாக அழைத்து வந்தவன் ஒரு கல்லறையின் அருகில் நின்றான்… பழகிவிட்ட இருளில் மின்னும் எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்தப் பெயரை சற்றுச் சிரமத்துடன் படித்தாள். அவனதுதான்.

“உங்க கல்லறையா?”

“ம்ம்…”

“கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கட்டுமா? நடந்தேவந்தது கால் வலிக்குது… “

“அதுக்குத்தான் கூட்டிட்டு வந்தேன்…உட்காரு…”

“தேங்க் யூ” என்றபடி அமர்ந்தவள், அங்கிருந்த சற்று வாடிய ரோஜாப்பூங்கொத்துக்களைப் பார்த்து “என்ன இது மிஸ்டர் கோஸ்ட் இவ்வளவு ரோஸ் இருக்கு…” என்றாள்…

அந்த ரோஜாப்பூக்களை இருவரது நடுவிலும் இருக்குமாறு தள்ளி வைத்தவன் “விவா…” என்றபடி அமர்ந்தான்…

“அருள்…”

“ம்ம்… நீங்க கொஞ்சம் அவன்கிட்ட பேசலாமே…”

“அவன் கிட்ட பேச முடிஞ்சிருந்தா இந்நேரம் அவன் கதறுன கதறலுக்கு வந்து பேசிருக்க மாட்டனா அமி…”

“அப்ப பேச முடியாதா? என்கிட்ட மட்டும் பேசறீங்க…” அவள் சற்று அதிர்ச்சியுடன் கேட்டாள்…

“ஆமா அமி… என் மனசுக்கு நெருக்கமானவங்க கிட்ட இறந்ததுக்கப்பறம் போய்ப் பேசுனா அவங்களுக்கு அது நிஜமா இல்யூஷனான்னு குழம்பியே பைத்தியம் பிடிச்சுரும்… நான் இறக்கறதுக்கு முன்னாடி உன்கிட்டப் பழகாததுனாலதான் என்னால இப்ப உன்கிட்ட இயல்பா பழக முடியுது…”

ஓ… என்று சற்றுநேரம் வருத்தத்துடன் கண்களைச் சுழட்டியவளின் விழிகளில், அவனது கல்லறையில் அவனது பேருக்குக் கீழ் இருந்த பிறப்பு இறப்பு என்று எழுதப்பட்டிருந்த தேதி பட்டது…

“நீங்க பிறந்ததும் இறந்ததும் ஒரே டேட்டா?”

“ம்ம்…”

“அதுவும் நாளைக்கு…” என்றபடி கையில் வைத்திருந்த செல்போனை ஒளிர்ப்பித்துப் பார்த்தாள்…

” லைட் வேண்டாம்… அதனாலதான் உன்னை டார்ச் கூட ஆன் பண்ண விடல…”

“சாரி மிஸ்டர் கோஸ்ட்… மணி பார்த்தேன்… கரெக்டா 12.01… அப்ப இன்னைக்கு… இந்த ரோஸஸ்ல ரெண்டு எடுத்துக்கட்டுமா?”

“ம்ம்…”

அவற்றை எடுத்தவள் ஒன்றை, “ஹேப்பி டெத் டே மிஸ்டர் கோஸ்ட்” என்று அவனிடம் நீட்டினாள்… புன்னகையுடன் அதை வாங்கியவன் “தேங்க் யூ” என்றான்…

மற்றொன்றையும் முகம் நிறைந்த புன்னகையுடன் அவனிடம் நீட்ட “ஹேப்பி பெர்த் டே” என்று சொல்லப்போகிறாள் என்று எதிர்பார்த்தபடி புன்னகையுடன் கைநீட்டினான்…

ஆனால் அவளுடைய இதழ்கள் “ஐ லவ் யூ” என்று உச்சரித்தன…

(தொடரும்…)

(ஒருநாள் லேட்டாகிடுச்சுன்னு கமெண்ட் செக்ஷன்ல கத்திகபடாலாம் வரக்கூடாது… சொல்லிட்டேன்… ஆமா…
அய்யய்யோ இதுக்கே வருமோ…
விட்டுருங்கையா கொஞ்சம் பிஸி…
வெட்டியா இருந்தா சமத்தா யூடி போட்ருவேன்ங்கறது உங்களுக்கே தெரியும்…
அப்பறம் முன்னாடி சொன்ன டிஸ்க்ளைமர் ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்…
எனக்கும் முன்னப்பின்ன செத்துப்பழக்கமில்லாததால இதில் குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் கதைப்போக்குக்கான கற்பனையே… )

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *