Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39

39

தன் முன்னால் வந்து நின்ற நாகாபரணத்தை நிமிர்ந்து பார்த்தார் அருணாச்சலம்…

அவரைப் பார்த்து ஒரு சிரிப்புடன் “என்ன நாகா? நடுரோட்டுல குடத்துல வெடி வெடிச்சு விளையாடிகிட்டு இருந்தியாமே… தனா சொன்னான்…” என்றார் நக்கலாக.

“அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா…” என்றார் நாகாபரணம் உள்ளே புசுபுசுவென்று வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு.

“சரிசரி விடுவிடு என்ன விஷயமா என்னப் பார்க்க வந்த? அதைச் சொல்லு…”
“அந்தப்பொண்ணு அமிழ்தா விஷயமாதான்ண்ணா… அந்தக்குடத்தில இருந்தது பெட்ரோல்… ஆனா அவ ஊத்துன உடனே பச்சைத்தண்ணி மாதிரி தீ அணைஞ்சுருச்சு… அவ சொன்னமாதிரியே அவளுக்குப் பின்னால ஏதோ அமானுஷ்ய சக்தி துணைக்கு இருக்குன்னா…”

“அவளே ஒரு அமானுஷ்யம்… அவளுக்குத் துணைக்கு வேற ஒரு அமானுஷ்யம் வேணுமா? ஆனாலும் நான் பார்த்தாலும் பார்த்தேன்… இவ்வளவு திமிரு பிடிச்ச ஒரு பொண்ணைப் பார்த்ததே இல்ல.. அவளை மெனக்கெட்டு என் பையனை விட்டு கூட்டிட்டு வரச் சொன்னா வாசப்படியைக் கூட மிதிக்காம திரும்பி போயிருக்கா… நீ ஏன் அவளைப் போட்டுத் தலைக்கு ஏத்திக்கிற… அப்படி பண்ணன்னா உனக்குத்தான் பைத்தியம் பிடிக்கும்… அவளுக்குப் பின்னாடி அப்படி என்ன அமானுஷ்யம் இருக்கும்;ங்கற? நாம கொலை பண்ணது அந்த அருளாளனை மட்டும்தான…”

‘நீ பண்ணது அந்த ஒரு கொலைதான்… ஆனா நான் பண்ணது?’

“அவன் நம்மளை ஒண்ணும் பண்ண மாட்டான்டா… எனக்கென்னவோ யோசிச்சுப் பார்க்கும்போது அவன் நம்மளை ஏதாவது பண்றதா இருந்தா உயிரோட இருக்கறப்பவே பண்ணிருக்கலாம்… ஆனா அவன் அந்தக்கல் குவாரியை மூடுறதுலயேதான் குறியா இருந்தானே தவிர, நம்மளை எதுவுமே பண்ணலயே… நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காத… அப்பறம் இன்னொரு விஷயம்… இன்னொரு தடவை இன்னைக்கு மாதிரி நான் சொல்லாம நீயா ஏதாவது பண்ணப்போகாத… சொல்றவன் முட்டாள் கிடையாது… எனக்குத் தெரியாம நீ எதுவும் பண்ணக்கூடாது… புரிஞ்சுதா…” கடைசி வாக்கியத்தை முடிக்கும்போது இருந்த குரலே நடுக்கத்தைக் கொடுக்க, இவனுக்குத் தெரியாம செஞ்சதெல்லாம் தெரிஞ்சா என்ன பண்ணுவானோ என்று நினைக்கும் போதே உள்ளுர நடுங்கியது…

அந்த அமிழ்தா வேறு இந்த விஷயத்தைக் கிளறத் தொடங்கியிருக்கிறாள்… இந்தாள் வேறு அவளிடம் நட்புணர்வை ஏற்படுத்த நினைக்கிறார்… அவளுக்குத் தெரியக் கூடாத விஷயங்கள் தெரிந்து அது இந்தாளுக்குத் தெரிந்து விட்டால் அருணாச்சலம் எவ்வளவு மோசமானவராக மாறுவார் என்று அவருக்கே தெரியாது… இருவருக்கும் இடையில் இருக்கும் பாலமே அந்த சக்திதான்… அவனை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்… அந்த விளங்காதவன் எதற்காக இப்படி நடித்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியவில்லை… சொந்த மகனை வேறு எவனோ என்று நினைத்துத் தன்கையாலேயே கொன்று விட்டு வேறு எவனையோ மகன் என்று அழைத்து வந்து நடுவீட்டில் அமர வைத்திருக்கும் இந்தாள் ஒரு கிறுக்கன்… தந்தையிடம் தான்தான் மகன் என்று சொன்னால் உயிரையும் கொடுப்பார் என்று தெரிந்தும் உயிரைவிட்ட அவன் ஒரு கிறுக்கன்… அவன் இறந்த பிறகு நீ கொன்றது உன்மகனைத்தான் என்று சொல்லி இந்தாளை நிஜக்கிறுக்கனாக மாற்றலாம் என்று பார்த்தால் அந்த நேரம் பார்த்து இந்த வீணாப்போனவன் எங்கிருந்து வந்தான் என்று தெரியவில்லை… நினைத்த நாகாபரணத்திற்கு அப்படியே பற்றிக்கொண்டு வந்தது…

“அண்ணா…”

“என்ன நாகா…”

“இல்…லண்ணா… எனக்கு ஒரு விஷய….ம் ரொம்ப… நாளா… சொல்லணும்ன்னு தோணிட்டே இருக்…கு… ஆனா சொல்ல…கொஞ்சம் தயக்கமா இருக்கு…”

“பரவால நாகா சொல்லு… எங்கிட்ட என்ன தயக்கம்?”

“இந்த விஷயம் நம்ம தம்பியைப் பத்தினதுண்ணா…”

மகன் என்றதும் அருணாச்சலத்தின் விழிகளில் கூர்மை ஏறியது. “அரசுக்கு என்ன?” அவரது நிதானமான குரல் நாகாபரணத்தைப் பயமுறுத்தியது.

“சை இந்தாள் மட்டும் எப்படி இப்படி கண்ணுலயே பயமுறுத்துறானோ?” அந்தப் பயத்தை சற்று சிரமப்பட்டு எச்சிலோடு சேர்த்து மென்று விழுங்கியவர்,

“நம்ம வீட்ல இருக்கது நிஜமாவே நம்ம தம்பி இல்லையோன்னு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்ண்ணே…” மூக்கைப்பிடித்துக்கொண்டு கஷாயத்தைக் குடிப்பது போல ஒரே மூச்சில் சொல்லி முடிக்க
அவர் சொல்லி முடிக்கும் முன்பே நாற்காலியில் இருந்து சட்டென எழுந்தார் அருணாச்சலம்…

“நாகா… உன்கிட்ட பலதடவை சொல்லிருக்கேன்.. யார்கிட்ட என்ன பேசறோம்ன்னு யோசிச்சுப் பேசு…”

“இல்லண்ணா…நான் யோசிச்சுதான் பேசறேன்… அந்த சக்தி நம்ம தம்பியா இருந்திருந்தா… எதுக்குத் தேவையில்லாம அவ்வளவு நாள் நம்ம வீட்ல டிரைவரா வேலை பார்க்கணும்… அவனோட காரணம் வேற ஏதோ… நீங்க மகன்னு சொல்லவும் இதைப் பற்றிக்கிட்டு வேற ஏதோ காரியம் சாதிக்கப் பார்க்குறான்ண்ணே…”

“நாகாஆ…” கர்ஜித்தவர், “நீங்கறதானல மட்டும்தான் சும்மா இருக்கேன்… என் கோபத்தை இதுக்கு மேல சீண்டாத…”

அதில் பம்மியவர், “இல்லண்ணே… அது நம்ம தம்பியா இருந்தா சந்தோஷப்படுற முதல் ஆள் நான்தான்ண்ணே… நீங்க தம்பி மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதாண்ணே? ஆனா அது நம்ம தம்பிக்குக் கிடைக்க வேண்டியதுண்ணே… ரோட்டில போறவனுக்கெல்லாம் கிடைக்கக் கூடாதுல்ல… இப்ப ஒண்ணுமில்லண்ணே… நீங்களும் தம்பியும் ஒரு டி.என்.ஏ டெஸ்ட் பண்ணிக்கோங்க…”

“ஓ…பண்ணலாமே… தாராளமா பண்ணலாம்… என்னப்பா இப்பவே போலாமா?… ஆனா டி.என்.ஏ டெஸ்ட்ங்கறது சும்மா ப்ளட் டெஸ்ட் மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு எடுக்க முடியாது… சில ப்ரசீஜர்ஸ் இருக்கு…என்னப்பா அதுக்கான ப்ரசீஜரை ஆரம்பிக்கவா?”

பின்னால் சக்தியின் குரல் அழுத்தமாகக் கேட்டது… அந்த அழுத்தத்தின் பின்னால் அவன் புதைத்து வைத்திருந்த ஆழமான பயம் அவன் மட்டுமே அறிந்தது… அருணாச்சலம் வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும் என்று அவனது இதயம் வேகமாகத் துடித்துக்கொண்டிருந்தது…

ஆனால்…

“பண்ணலாம்ப்பா…” என்று வந்த பதிலில் அவன் இதயம் ஒருகணம் துடிப்பை நிறுத்திப் பின் மெல்லத் துடிக்க ஆரம்பித்தது… அவன் மனமும் தான்…
அவனது அருகில் வந்தவர், “நீ என் பையன்ங்கறது எனக்குத் தெரியும் அரசு… ஆனா இனி ஒருத்தனும் இப்படி வந்து என் முன்னாடி நின்னு கேள்வி கேக்கக் கூடாது… அதுக்காகவாவது எடுத்து சந்தேகப்படுறவங்க முகத்துல வீசிருவோம்…”

கடினப்பட்டு இதழ்களை இழுத்துப் பிரித்துப் புன்னகையாக மாற்றினான் சக்தியரசன்…

———

“சரிவா…என்றபடி அவளை ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான்… அங்கே எதுவும் எரியவில்லை… எந்தக்கல்லறைகளும் இல்லை… ஆனால்… ஆனால்… கல்லிடுக்குகளில் அங்கங்கே எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கிடந்தன…

அவற்றைப் பார்த்துத் திகைத்தவள், “அருள் இது என்னது? இது எந்த மயானம்? ஏன் இப்படி இருக்கு?” எனக் கேட்டாள்.

“இது எந்த மயானமும் இல்ல அமிழ்தா…. நீ திறக்கப்போறேன்… திறக்கப்போறேன்னு சொல்லிட்டு இருக்கக் கல்குவாரிகள்ல ஒண்ணு…”

“குவாரிகள்ல கல்லும் மண்ணும்தான இருக்கும்… இதென்ன மண்டையோடும் எலும்புக்கூடுமா இவ்வளவு திகிலா இருக்கு…இப்பப் பார்த்த அந்த இடுகாடும் சுடுகாடும் கூட இப்படில்லாம் இல்லையே…”

“அதெல்லாம் இறந்துபோனவங்களை ஒழுங்கா அடக்கம் பண்றது எரிக்கறதுன்னு பூமியைச் சுத்தப்படுத்;துற இடம்… ஆனா இது…”

“இது?”

அருள் ஏதோ சொல்ல வரும்முன் அவளது அலைபேசி அழைத்தது…

“ஒருநிமிஷம் அருள்… இந்த நேரம் யார் கூப்புறாங்கன்னு தெரியல…” என்றபடி அதை எடுத்துப்பார்த்தவள் சக்திதான்… என்று விட்டு காதில் வைத்தாள்.

“ஹலோ…”

“அம்மு…”

“சாரி அம்மு…”

“நீ பார்த்த வேலைக்கு உன்னை என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியல… இந்த நேரத்தில கால் பண்றன்னு தான் எடுத்துருக்கேன்… ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் என்னன்னு சொல்லு… இல்லன்னா காலைக் கட் பண்ணு..”

“முக்கியமான விஷயம்தான் அம்மு…”

“என்னதது?”

“எனக்கு அந்த விவேகனோட ப்ளட் சாம்பிள் வேணும்…”

“என்னது? எதுக்கு?”

“டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு…”

“ஆங்?”

“ஆமா…” என்று நடந்ததை அவளிடம் சொன்னான்…

“அச்சோ… இப்ப என்ன பண்றது?”

“அதான் அம்மு எனக்கும் தெரியல… அட்லீஸ்ட் அந்த விவேகனோட ப்ளட் சாம்பிள் இருந்தாலாவது எப்படியாவது மாத்தி ஏதாவது கோல்மால் பண்ணமுடியுதான்னு பார்க்கலாம்…அவன்தான் நமக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னான்ல… ப்ளீஸ் அம்மு…எப்படியாவது கலெக்ட் பண்ணி வை… நான் காலையில 6.30க்கு வந்து வாங்கிக்குறேன்…”

“அதில்ல சக்தி… விவேகன் அருணாச்சலத்தோட மகன்.. கி…”
அவள் சொல்ல வருவதை காதில் வாங்காமல் “யாரோ வர்றாங்க அம்மு அப்பறம் பேசுறேன்” என்று தொடர்பைத் துண்டித்திருந்தான்… மீண்டும் முயன்று பார்த்தாள்… ம்கூம்… மற்றொரு முறை… இல்லை… எடுக்கவே இல்லை…

“அருள்… சக்தி ஏதோ பெரிய பிரச்சனையைச் சொல்றான்…” என்றவளிடம் “தெரியும் அமி…” என்றான் அருள்.

“அவன் மாட்டப்போறான்னு தோணுது அருள்…” என்றாள் அமிழ்தா சற்றுக்கவலையாக…

“மாட்டட்டும் அமி… அவன் மாட்டணும்ன்னுதான் நான் பழைய யோசனையே கொடுத்தேன்.. ஆனா அதை அவன் இன்னும் செய்ய ஆரம்பிக்கவே இல்ல… பரவால… இப்படி மாட்டுனாலும் நல்லதுதான்…”

“என்னடா சொல்ற? அருணாச்சலத்துக்கிட்ட அந்தப்பிள்ளைப்பூச்சியை மாட்டிவிடணும்ன்னு பிளான் போட்டியா?”

“ஆமா.. அமி… அவன் மாட்டணும்…அவன் மாட்டுனாதான் இந்தக்கதைக்கு ஒரு முடிவு வரும் அமி… இல்லன்னா இப்படியேதான் சுத்திட்டு இருக்கும்…”

“ஆனா அருணாச்சலம் சக்தியை ஏதாவது பண்ணிட்டாருன்னா?”

“பண்ண மாட்டாருன்னு நினைக்கிறேன்… அப்படியே நினைச்சாலும் என்னை மீறி பண்ண முடியாது அமி…”

“ஓ.கே… மணி இப்பவே ஐஞ்சே முக்கால் ஆகிருச்சு… வீட்டுக்குப் போவோம் சக்தி வேற வர்றேன்னு சொல்லிருக்கான்…”

“சரி… போலாம்” என்று அவளது கையைப் பிடித்தவன் கண்களை மூடித்திறந்தான்… அவளது வீட்டு மொட்டைமாடியில் இருந்தனர்…

“இது என்ன டிராவல்ஸ்டா? இவ்வளவு பாஸ்ட்டா கண்ணை மூடித்திறக்கறதுக்குள்ள கொண்டுவந்து விட்டுட்ட?”

“ஆங்… மிஸ்டர் கோஸ்ட் டிராவல்ஸ்… போய்த் தூங்கு… நீ நினைச்சமாதிரி ஞாயித்துக்கிழமைன்னு காலையில தூங்க முடியாதுன்னு நினைக்கிறேன்… வரிசையா பிரச்சனையா வர ஆரம்பிக்கும்… ஒரு முக்கால் மணி நேரமாவது தூங்கு…”

“நான் வர்றப்ப உன்கிட்ட அந்தக் கல்குவாரி பிரச்சனையைப் பத்திக் கேட்கலாம்ன்னு நினைச்சேன்… ஆனா இப்படி பண்ணிட்டியே….”

“அது காலையில உனக்கே தெரிஞ்சுரும்… போய்த் தூங்கு…”
அவன் சொன்னபடி குளித்து முடித்துவிட்டு வந்து படுத்தவளுக்கு உடனே உறக்கம் வரவில்லை… மாறாக, அவனுடன் செலவிட்ட அந்த அருமையான நிமிடங்கள் தான் நினைவில் நின்றன… தன் நினைவிலிருந்து அவை நிரந்தரமாக அழியப் போவதை அறியாமல் நிம்மதியாகக் கண்களை மூடிப் படுத்து உறங்கினாள் அவள்.

அரை மணி நேரத்தில் சந்தனா தட்டி எழுப்பினாள்… “அக்கா….அக்கா…” மெல்லக்கண்பிரித்தவளைப் பார்த்து “நைட்டு புல்லா சரியா தூங்கலையாக்கா?” என்றாள் அவளது செவ்வரி சற்று அதிகமாக ஓடிய கண்களைப் பார்த்து…

அமிழ்தா எதுவும் சொல்லாமல் படுத்திருக்க, “இப்பதான்க்கா விவேகன் சொன்னான்… இன்னைக்குத் தான் அவங்க அண்ணனோட நினைவுநாளாமே… அவரோட கல்லறைக்குத் தான் போயிருக்கான்… உன்னையும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னான்.. நான்தான் நீ போ… அவ பார்த்துக்கலாம்ன்னு சொல்லி அனுப்பிட்டேன்… அக்கா இறந்து போனவங்களை நினைச்சு உன் வாழ்க்கை வீணாயிரக் கூடாதுல்லக்கா… ப்ளீஸ்க்கா… அவரை மறக்க முயற்சி பண்ணுக்கா…”

மீண்டும் தலையணையில் முகம் புதைத்துப் படுத்தவள், “அதெல்…லாம் மறந்து…ரலாம்… மறந்துர…லாம்… என்னைத் தூங்கவிடு” என்றாள் அரைத் தூக்கத்திலேயே…

“அப்ப சக்தியண்ணனைப் போகச் சொல்லிட்டு அப்பறம் வரச்சொல்லவாக்கா? நீ தூங்கு எனப் பரிவாகத் தலையைத் தடவிவிட, அப்பொழுதுதான் அவளுக்கு முழிப்பே வந்தது… “இல்ல…ல்ல.. வேண்டாம்… நான் வர்றேன்… நீ போ…” என்று எழுந்தவள,; ஹாலில் அமர்ந்திருந்த சக்தியிடம் வந்தாள்…

“அருணாச்சலத்தோட பையனை எங்க?”

“இங்கதான் எங்கயாவது இருப்பான்… அவன் எதுக்கு உனக்கு” என்றாள் அப்பொழுதும் இருந்த லேசான தூக்கக் கலக்கத்தோடே…

“என்ன அம்மு இப்படி கேக்குற… ப்ளட் சாம்பிள் எடுக்கதான்…:”

“அவன் கிட்ட இருந்து எப்படி ப்ளட் எடுக்க முடியும்… மத்தவங்க மாதிரி இருந்தா அவன் வேணும்ன்னா நம்ம கிட்ட இருந்து ப்ளட் எடுக்க முடியும்… ஆனா அவன் அப்படிப்பட்டவன் இல்ல…”

“அம்மு என்ன உளறிட்டு இருக்க… போய் முதல்ல முகத்தைக் கழுவிட்டு வா… எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்…நீ என்னன்னா?” சக்தியின் கலக்கம் கலந்த பதட்டக்குரல் அவளை முழுமையாக நடப்புக்குக் கொண்டு வர, “சாரி” என்றுவிட்டு முகத்தை நன்கு குளிர்த்தண்ணீரை அடித்து கழுவி அழுந்தத் துடைத்து விட்டு வந்தாள்…

“சொல்லு சக்தி… என்ன வேணும்?”

“அந்த விவேகன் வேணும்…”

“விவேகனைக் கூப்புடு சந்தனா…”

“நான்தான் சொன்னனேக்கா… அவங்க அண்ணனோட நினைவுநாள்ன்னு அவர் கல்லறைக்குப் போயிருக்கான்…” என்று மீண்டும் சொன்னாள்…

“என்னது? அவன் அண்ணனோட கல்லறை இங்க இருக்கா?” சக்தி ஆச்சரியமாகக் கேட்டான்…

‘உனக்கு இதுவே இப்பத்தான் தெரியுதா?’ மனதில் நொந்த அமிழ்தா… “ஆமா சக்தி நீ நினைக்கிற மாதிரி அருணாச்சலத்தோட மகன் விவேகன் இ…”
அதற்குள் ஒரு போன் வர, ஒருநிமிடம் உஷ்.. என்று வாயில் விரல் வைத்துக் காட்ட அமிழ்தா அமைதியானாள்.

“ஹலோ… அப்பா… என்னப்பா…”

“என்னய்யா? காலையிலயே வெளியே போய்ட்ட?”

“ஆமாப்பா…ஒரு பிரண்ட பார்க்க வேண்டியிருந்தது… அதான்…”

“அதை இன்னைக்குப் பார்த்து போகணுமாய்யா? “

“ஏன்ப்பா இன்னைக்கு என்ன?”

அமிழ்தாவிற்குச் சட்டென்று உறைத்தது… இன்று அருணாச்சலத்துடைய மகனுக்குப் பிறந்தநாள்… அதைக் கேட்கிறார்… ஆனால் சக்திக்கு அது தெரியாதே… பிறந்தநாள் என்பதை எப்படி சைகையில் காட்டுவது என்று தெரியாமல் குழந்தை என்பது போல சைகைக்காட்டினாள்…

“ஏன்ய்யா உனக்கு இது என்ன நாள்ன்னு ஞாபகம் இல்லையாய்யா?”
அமிழ்தா காட்டிய சைகையில் “அதெல்லாம் ஞாபகம் இருக்குப்பா குழந்தைகள் தினம்தான?”

“தம்பி அரசு…”

‘அடேய்… அது நவம்பர் மாசம்டா…இது ஜீலைடா…’ என்று தலையில் அடித்தவள், பின் டீபாயில் மேலிருந்த பழம் வெட்டும் கத்தியை எடுத்து கேக் வெட்டுவது போல சைகை காட்டினாள்…அவளிடம் கட்டைவிரலை உயர்த்திக்காட்டியவன், “இன்னைக்கு யாரோட பிறந்தநாள்ன்னு கேக்குறீங்க? அதானப்பா?” என்றான்.

“ஆமாய்யா…” அருணாச்சலத்தின் குரலில் உற்சாகம் பிறந்தது…

“முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள்ப்பா…” அமிழ்தாவிற்குக் கொலைவெறியே வந்துவிட்டது… கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தில் வைத்து தலையில் ஓங்கிக் கொட்டியவள், “உன் பிறந்தநாள்… அதாவது அந்தாள் மகன் பிறந்தநாள’; என சைகை காட்டினாள்.

“அதற்குள் அருணாச்சலம் என்னப்பா காலையிலேயே அப்பாக்கிட்ட விளையாடுறியா?”

“அப்பறம் என்னப்பா? போனை எடுத்தவுடனே பிறந்தநாள் வாழ்த்து சொல்வீங்கன்னு பார்த்தா என்கிட்டயே என்ன நாள்ன்னு கேக்குறீங்க…” சமாளித்து விட்டான்.

“ஹாஹா…” என்று சிரித்தவர் “நேர்ல சொல்லணும்ங்கற ஆசைதான்… நீ நேர்ல வாயா… காலையில சொல்லலாம்ன்னு பார்த்தா ஆளையே காணோம்… சீக்கிரம் வா…”

சரிப்பா… என்று விட்டுப் போனைக் கட்செய்தவன், அதைக் கட் செய்து விட்டோமோ என ஒருமுறைக்கு இருமுறை செக் செய்துவிட்டு, “அம்மு ப்ளீஸ்…இப்பவாவது கொஞ்சம் கழுத்தில இருந்து கத்தியை எடேன்… அதான் சமாளிச்சுட்டேன்ல..”. என்றான்…

கத்தியை எடுக்காமலேயே அவன்தலையில் மீண்டும் கொட்டியவள், “குழந்தைகள் தினம் எப்ப” என்றாள்…

அவன் முழிக்க, “எத்தனை தடவை எனக்குக் கொடுத்த மிட்டாயையும் சேர்த்துப் பிடுங்கித் தின்னுருப்ப… ஸ்கூல்ல… சொல்லு… நேரு பிறந்தநாள்ன்னு சொன்னியே…அது எப்ப?” என்று மேலும் கொட்டினாள்…

“நவ…நவம…;பர் 19…”

“அது அவரோட மகள் பிறந்தநாள்… நான் அவர் பிறந்தநாள் கேட்டேன்… இந்த லட்சணத்துல இவர் பெரிய வக்கீல் வேற… குழந்தைகள் தினம் என்னைக்குன்னு தெரியாத நீயெல்லாம் எப்படிடா லா செக்ஷன்ஸை ஞாபகம் வச்சு பரிட்சை எழுதின…:”

“ரொம்ப அசிங்கப்படுத்தாத அம்மு… எனக்குல்லாம் எக்ஸாம் ஹால்ல டீச்சர் பக்கத்துல வந்து நின்னு பேப்பரை உத்து உத்துப் பார்க்கும்போதே எழுத வராது… நீ இப்படி கழுத்துல கத்தி வச்சுட்டுக் கேட்டா ஆன்ஸர் எப்படி வரும்… கத்;தியை எடு பிளீஸ்… பயமா வேற இருக்கு…”

அவன் கழுத்திலிருந்து கத்தியை எடுத்தாள்… ஆனால் அவள் கையிலிருந்து கீழே வைக்கவில்லை… முன்னும் பின்னும் திருப்பி, அதன் கூர்மையைச் சரி பார்த்தவள், “இப்ப சொல்லு…” என்றாள்.

“நவம்பர் 14…”

“இது என்ன மாசம்?”

“ஜு..ஜு…”

“ஜு..ஜு… ஆங்?” மீண்டும் கத்தி;யை அவன் கன்னத்தருகே கொண்டு செல்ல,

“ஜுலை…”

“அந்த அறிவு கூட இல்லாம அந்தாள் கிட்ட உளறிட்டு இருக்க… நீ புத்துக்குள்ள காலை விட்டுருக்க… பாம்பு கடிச்சுருமோங்கற நினைப்பு எப்பவுமே இருக்கணும் சக்தி… நீ இந்தளவு கேர்லஸா இருந்தேனா எப்படிடா?”

“ஸாரி அம்மு… ஆனா நான்தான் சமாளிச்சுட்டேன்ல…”

“இல்ல சக்தி… இனிதான் நீ சமாளிக்கணும்…”

“புரியல அம்மு…”

“அந்த டி.என்.ஏ டெஸ்ட்…”

அதான் விவேகன் இருக்கான்ல…

அவன் இருந்து… என்றவள், அவனிடம் சொல்லப்போகும் போது மீண்டும் அவனது அலைபேசி அடித்தது… அதை எடுத்துப் பார்த்தவன், “இப்ப அந்தம்மா கூப்புடுறாங்க நான் கிளம்புறேன் அம்மு…” என்றபடி கிளம்பினான்…

“டேய் … நான் சொல்றதைக் கேட்டுட்டுப் போடா…”

“எதுனாலும் நாளைக்குப் பேசிக்கலாம் அம்மு…”

“சக்தி… சக்தி…” அவள் கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல், சந்தனா முன்பே எடுத்துக்கொடுத்திருந்த அவனது பைக் சாவியை எடுத்துச்சென்று பைக்கைக் கிளப்பி கேட்டையும் தாண்டிச்சென்றிருந்தான்…
சோபாவில் பொத்தென அமர்ந்தவள், “பொறுமை கெட்டவனே… இனி உன்னை உன் மச்சான் காப்பாத்துனா தான் உண்டு” என்றபடி தலையில் கைவைத்தாள்.

அவளது அருகில் வந்த சந்தனா அக்கா “ஏதாவது பிரச்சனையாக்கா?” என்று கேட்டாள்.

அவளுக்கு இல்லையென்று தலையசைத்துவிட்டு.. ‘இல்ல… ஏதாவது பிரச்சனை இல்ல… எல்லாமே பிரச்சனைதான்’ என்று மனதில் நினைத்தவள், “நான் தூங்கப்போறேன்… சந்தும்மா.. போன் வந்தா அட்டன்ட் பண்ணி பேசு…ஏதாவது பிரச்சனைனா மட்டும் என்னை எழுப்பு… இல்லன்னா நானா எழுந்திருக்கிற வரை எழுப்பாத…” என்று போய்ப் படுத்து இரண்டு நிமிடங்களில் உறங்கியும் விட்டாள்.

அதே நேரத்தில் சக்தியின் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த விவேகன் கேட்டான்…

“வழியில போன என்னை சந்தனா வீட்ல இறக்கிவிடுறேன்னு வம்படியா வண்டில ஏத்திட்டு எங்க போறீங்க மாமா…”

“டேய் என்னை ஏன்டா மாமா மாமான்னு கூப்புடுற…”

“உங்களைக் கூப்புடாம நான் வேற யாரை மாமான்னு கூப்புட முடியும்? அது சரி.. நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க…”

“உங்கப்பன் கிட்டக் கூட்டிட்டுப் போறேன்…”

“ஆனா அவர் வெளிநாட்லல இருக்காரு…”

“டேய்… அந்த அருணாச்சலம் கிட்டக் கூட்டிட்டுப் போறேன்…”

விவேகனுக்கு ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கையிலேயே சக்தி தொடர்ந்தான்…

“இங்க பாரு…நான் உன் அப்பன் கிட்ட எப்ப மாட்டுவேன்னு தெரியாது…. அப்படி மாட்டுறப்ப என்னைக் காப்பாத்தி விட நீ என் பக்கத்துலயே இருக்கணும்… அதுக்குத்தான் உன்னைக் கடத்திட்டுப் போயிட்டு இருக்கேன்…”

“என்னது கடத்தலா? பிஞ்சு முகத்தை வச்சுக்கிட்டு ஏன் இப்படி காமெடி பண்றீங்க மாமா? நானாத்தான் உங்க பின்னாடி உட்கார்ந்து வந்துட்டு இருக்கேன்… நீங்க என்னை எங்க வேணும்ன்னாலும் யார்க்கிட்ட வேணும்னாலும் கூட்டிட்டுப் போங்க… பிரச்சனை இல்ல… ஆனா நான் சொல்லவர்றதைக் கொஞ்சம் கேளுங்க மாமா…”

“ஷ்ஷ்ஷ் நீ சொல்றது எதையும் நான் கேட்க வேண்டிய அவசியமில்ல… அந்தாள் வீடு வந்துருச்சு.. பேசாம வா…” என்றபடி வீட்டினுள் வண்டியைச் செலுத்தி இறங்க, வாயிலிலேயே நடந்து கொண்டிருந்த அருணாச்சலம் முகம் மலர அவனை நோக்கி வந்தார்…

“பிறந்தநாள் வாழ்த்துக்கள்யா… நூறு வருசம் தீர்க்காயுசா சந்தோஷமா இரு…”

“தேங்க்ஸ்ப்பா…”

அருகில் நின்றிருந்த நாகாபரணத்திற்கு இந்த வாழ்த்தைக் கேட்டதும் இதழ்கள் ஏளனமாக வளைந்தன… ‘நூறு வருசம்????.. உன் பிள்ளை????… இருப்பான்… இருப்பான்… இங்கதான் எங்கயாவது ஆவியா அலைஞ்சுகிட்டு இருப்பான்…’ என்று மனதில் நினைத்தவர்,

“என்ன அங்கிள்… காலையிலயே வந்துட்டீங்க… எதுவும் வேலை இல்லையா என்ன?” என்ற சக்தியின் குரலில் நினைவுக்கு வந்து…

“அதெப்படிப்பா? எனக்கு வேலை இல்லாம இருக்குமா? இருக்கிற வேலையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டுத்தான் உனக்கு வாழ்த்து சொல்றதுக்காக வந்துருக்கேன் தம்பி… இனிஇஇஇஇஇய பிறந்த…நாள் வாழ்த்துக்கள”; என்றார் பல்லைக்கடித்தபடி…

“ஓ…தாங்க்ஸ் அங்கிள் சொல்லிட்டிங்கள்ல… போய் உங்க வேலைகளைப் பாருங்களேன் அங்கிள்… எனக்காக டைம் வேஸ்ட் பண்ண வேணாமே…”

“அதெல்லாம் இருக்கட்டும் தம்பி… இது யாரு உன் கூட…” என்று விவேகனைப் பார்த்துக் கேட்டார் நாகாபரணம்.

“இது என்னோட பிரண்டுப்பா… அப்பா அம்மா கூட சண்டை போட்டுட்டு கோவிச்சுட்டு வந்துட்டான்… அதான்… ஒரு ரெண்டு நாள் நம்ம வீட்ல இருக்கட்டும்ன்னு…”

“தாராளமா இருக்கட்டும்யா… ஆனா பார்க்க சின்னப்பையனா தெரியறானே.. உனக்கு எப்படி பிரண்டு…”

“ஜீனியர்ப்பா ஆனா தம்பி மாதிரி…”

“இல்ல மச்சான் மாதிரி…” சக்திக்கு மட்டும் கேக்குமாறு முணுமுணுத்தான் விவேகன்… அவனைப் பார்த்து சக்தி முறைக்க, “தம்பி என்ன சொல்றாப்ல” என்றார் நாகாபரணம்…

என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே பத்மினி வந்துவிட, அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே உள்ளே சென்று விட்டான்…

அவனைப் பார்த்து முறைத்த நாகாபரணம் ‘பார்க்குறேன்டா நீ எத்தனை நாளைக்கு இப்படி கழுவுற மீன்ல நழுவுற மீனா நழுவுறன்னு…’ என்று கருவினார்.

மதியம் இரண்டு மணிக்கு அமிழ்தா எழுந்து வந்த பொழுது சந்தனா கன்னத்தில் கைவைத்தவாறு அமர்ந்திருந்தாள் ஹாலில்.
போனை எடுத்து அதில் குவிந்திருந்த வாட்ஸப் மெசேஜ்களைப் பார்த்தவாறே வந்து அவளருகில் அமர்ந்தவள், சந்தனாவின் வாடிய முகத்தைக் கண்டு “என்னாச்சு சந்து ஏன் இப்படி உட்கார்ந்துக்க?” என்றாள்.

“விவேகனை இன்னும் காணோம்க்கா…”

“காலையில ஆறு மணிக்குப் போனவன், இன்னுமா வரலை? போன் பண்ணி பார்த்தியா?”

“போனை இங்கையே வச்சுட்டுப் போயிருக்கான்க்கா…”

“ஓ… சரி நான் எதுக்கும் அவங்கண்ணன் கல்லறை வரை போய்ப் பார்த்துட்டு வந்துர்றேன்…” என்று கிளம்பினாள்.

“அக்கா நானும் வர்றேன்க்கா…”

“இல்லடா நீ இங்கயே இரு… ஒருவேளை அவன் இங்க வந்தா எனக்குக் கால் பண்ணு…

“சரிக்கா…

கிளம்பி அருளாளனது கல்லறையை அடைந்தவள், விவேகனைத் தேடினாள்… ஆனால் அங்கே விவேகனுக்குப் பதிலாக மற்றொரு பெண் நின்றாள்..

(தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 39”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *