‘அப்பா… என்னைப் பத்திரமா திரும்பிக் கூட்டிட்டுப் போயிருவலப்பா… ‘
10 வயது மகனின் பிஞ்சுக்குரல் காதுகளில் எதிரொலிக்க சட்டென கண்களைத் திறந்தார்.
கார் இப்பொழுது சுழன்று கொண்டிருந்தது.லாரியும் நிற்பதாகவோ வேகத்தைக் குறைப்பதாகவோ தெரியவில்லை.
டிரைவரைப் பார்த்தார். ஸ்டியரிங்கைத் தாறுமாறாகச் சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.
திடீரென ஒரு சந்தேகம் தோன்ற ‘கையை எடு’ என்றார்.
அந்த நேரத்திலும் அதிர்ந்து போய் அவரது முகத்தைப் பார்த்தான் அவன்.
‘என்…என்ன சார்?’வியர்வையில் நனைந்திருந்தத் தொண்டைக்குழி ஏறி இறங்கியது…
‘ஸ்டியரிங்ல இருந்து கையை எடுடா… ‘ சிம்ம முழக்கமாகத் தொனித்த அந்தக்குரலில் தன்னையறியாமல் அவன் கையை எடுக்கவும் அவர் பிரேக்கை மிதிக்கவும் சரியாக இருந்தது… ஆனால் வண்டி நிற்பதற்குப் பதிலாக மேலும் வேகமெடுத்துச் சுழலுவதைப் பார்த்த இருவரும் செய்கையறியாமல் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்து விழித்திரை…
எதிரே வந்த லாரியும் அதே வேகத்தில் சுழலத் தொடங்க அருணாச்சலத்திற்கு வாழ்வில் முதல்முறையாக உள்ளூர ஒரு நடுக்கம் தோன்றியது…
வாழ்வு முடிந்தது என்று நினைத்த கணம் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தார்…
என்ன நடக்கிறது என்பதை அறியும் முன்னே லாரி அவரருகில் வந்து தன் பங்கிற்கு பயமுறுத்தி விட்டு நூலிழை இடைவெளியில் பின்னோக்கிச் சுழல இவர் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளில் விழுந்திருந்தார்…
பின்னோக்கி சுழன்ற லாரி முன்னோக்கி
சுழன்று கொண்டிருந்த காரருகில் செல்லத் தொடங்கியது…
தன்னை வண்டியிலிருந்து தள்ளிவிட்டு உயிர்காத்த டிரைவர் சக்தி அந்தக் காருக்குள் இருப்பதை உணர்ந்தவருக்கு எழத் தோன்றியது. ஆனால் கை கால்களுக்குக் கட்டளையிடாமல் மூளை வேலைநிறுத்தம் செய்ய, ஓர் அசைவுமின்றி உடல் ஸ்தம்பிக்க கண்கள் மட்டும் அவரினுள்ளே அந்தக் காட்சியைச் செலுத்தி அவரின் பரிதவிப்பைக் காட்சிப்படுத்தும் கண்ணாடியாய் மாறியிருந்தன.
மோதுவது போலச் சென்ற லாரியும் காரும் கண நேரத்தில் எதிரெதிர்ப்பக்கத்தில் சுழன்றபடியே பெரும் கிரீச்சிடலுடன் நின்றன. அந்நேரத்தில் லாரி டிரைவர் ஒருபுறமும் சக்தி ஒருபுறமும் வெளியே வந்து விழுந்தனர்…
வெளியே தூக்கி எறியப்பட்ட சக்தி தட்டுத்தடுமாறி எழுந்து அவரைத் தேடினான். அவனுடல் சிராய்ப்புகளின் வழி இரத்தவண்ணத்தைக் குழைத்துப் பூசியிருக்க, அருணாச்சலம் சிறு கீறல் கூட இல்லாமல் குத்துக்கல்லாய் அமர்ந்திருப்பதைக் கண்டவனுள் திகைப்பும் வியப்பும் கூடவே பயமும் எழ , நொண்டியபடியே அவரை அடைந்தான்.
அவரது எங்கோ வெறித்த பார்வை அவனுக்கு மேலும் திகிலூட்ட
‘சார்… ‘என அழைத்ததான் சக்தி. அவனழைத்தது அவனுக்கே கேட்கவில்லை… தைரியத்தை வரவழைத்து மீண்டும் ‘சார் சார்’ என்றான்…
அவர் அசையாமல் இருக்க,
ஒருமுறை மென்று விழுங்கியவன் அவரது தோளை மெல்ல உலுக்கினான்…
அவனது உலுக்கலில்
மூளை வேலை நிறுத்தத்தைத் திரும்பப்பெற நிமிர்ந்து சக்தியின் முகத்தைப் பார்த்தவர் திடீரென எழுந்து அவனை அணைத்துக்கொண்டு ‘அரசு…அரசு… அய்யா அரசு ‘ எனப் பிதற்ற சக்தி அதிர்ச்சியடைந்தான்.
கூடவே ஒரு நிம்மதிப் பெருமூச்சு அவனிடமிருந்து வெளிப்பட, அருவமாய் அங்கு நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கோபம் வெப்பத்தை விட வெம்மையாய்த் தகித்து அவ்விடத்தில் இருந்த காற்றை வெப்பமாக்கத் தொடங்கியது.
(தொடரும்…)
👌👌👌
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting
Interesting 👏