முந்தைய நாள் அமிழ்தாவும் அருளாளனும் நின்ற அதே கல்குவாரியில் அருணாச்சலம், சக்தி, விவேகன், அமிழ்தா, பத்மினி ஐவரும் நின்றிருந்தனர். கிளம்பும்போதே சக்தி அமிழ்தாவிற்குத் தகவலளித்திருந்தான்.
சக்தி அருணாச்சலத்திடம் கெஞ்சுவான் என்று எதிர்ப்பார்த்தால் அங்கே அருணாச்சலம் சக்தியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்…
“ஐயா அரசு… அப்பா சொல்றதைக் கேளுய்யா… நான் நல்லவன் இல்லைதான்… கெட்டவன்தான்… மோசமானவன்தான்… ஆனா நீ சொல்ற அளவு கொடூரமானவன் இல்லய்யா… நம்புய்யா…”
“யாரு நீங்க? கொடூரமானவர் இல்ல… இரத்தம் ஒழுகி ஓட ஒருத்தனை நீங்க அடிச்சே கொன்னு எரிச்சதை நானே பார்த்தேன்… “
சக்தி இதைச் சொல்லவும் பத்மினியின் விழிகள் அருணாச்சலத்தை அதிர்ச்சியுடன் பார்த்தன .
அதைக் காணும் திடமின்றி திரும்பியவர்,
“அய்யோ அரசு அது வேற… நீ என்மேல போடுற பழி எவ்வளவு பெரிசுன்னு உனக்குத் தெரியலையாய்யா? உன் அப்பன் அப்படிப்பட்டவன் இல்லய்யா…”
“என்ன அப்பா அப்பான்னுட்டு இருக்கீங்க? எனக்கு என் அப்பா யாருன்னே தெரியாது… நான் உங்க பையனே இல்ல…” அவன் சொல்லி வாயை மூடும் முன் அவனது கன்னத்தில் அடி இடியாய் இறங்கியிருந்தது…
அவன் தள்ளாடி விழப்போக விவேகன் தாங்கிப்பிடித்திருந்தான்.
“என்னடா சொன்ன? ” கர்ஜித்தவர் அடியில் பொறி கலங்கி நின்றிருந்த சக்தியின் முகத்தைப் பார்த்துவிட்டு, தணிந்தார்.
“அரசு மன்னிச்சுக்கய்யா… என்று அவனது அருகில் வந்தவர் என்னதான் கோபம் இருந்தாலும் அப்படி சொல்லலாமாய்யா? கண்டவங்க பேச்சைக் கேட்டு அப்பாவைச் சந்தேகப்படாதய்யா… இந்த அமிழ்தா அவ்வளவா சரியில்லாதவன்னு நீயே சொல்லிருக்கதான… அவ பேச்சை அப்பறம் ஏன்யா கேக்குற…”
“யார் சரியில்லாதவ? என் அம்முவா? அதை நீ சொல்றியா? ” அவன் சீற,
அமிழ்தா “சக்தி… என்ன பெரியவங்களை நீ வான்னு மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க…. என்றாள்.
“ஏய்… என் மகனுக்கும் எனக்கும் இடையில ஆயிரம் இருக்கும்… அதுக்கிடையில நீ வரவேண்டாம்…”
” மிஸ்டர் அருணாச்சலம்….நான் ஒண்ணும் உங்க வீட்டுக்குள்ள நடந்த உங்க குடும்பச்சண்டையில இடையில வரல… நீங்க தான் என் வேலையில இடையில வந்துருக்கீங்க… இது முன்னாள் கலெக்டர் ஒருவரால சீல்வைக்கப்பட்ட இடம்…அந்த இடத்துல கலெக்டர் என்னோட பர்மிஷன் இல்லாம நின்னுட்டுருக்கீங்க… உங்க மேல கேஸ் பைல் பண்ண முடியும்… ஒழுங்குமரியாதையா இடத்தைக் காலி பண்ணுங்க…”
“வேண்டாம்மா… நான் மரியாதையா சொல்றப்பவே நீ போயிரு… என் பையன் மனசுல விஷத்தை விதைச்சு விட்டுருக்க உங்கிட்ட நான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கறதே பெரிசு… என் பொறுமையைச் சோதிக்காத…”
“யோவ்… திரும்ப திரும்ப நீ என்னை உன் பையன் உன் பையன்னு சொல்லாத… நான் உன் பையன் இல்ல…”
“அரசு… ” அருணாச்சலத்தின் குரல் உயர்ந்தது…
“என்பையனா இல்லாமலாடா அன்னைக்கு அந்த கார் ஆக்ஸிடன்ட் அப்ப நீ தப்பிக்கறத விட்டுட்டு என்னைக் காப்பாத்துன… அதிலயும் உன் பக்கக்கதவு அன்னைக்கு லாக் திறந்துருச்சு… ஆனா என் பக்கக்கதவைத் திறக்கவே முடியல… அந்த நேரத்துல யாரா இருந்தாலும் தான்தப்பிக்கப் பார்ப்பானே தவிர என்னைக் காப்பாத்த நினைக்க மாட்டான்… ஆனா நீ செஞ்ச… கஷ்டப்பட்டு அந்தக்கதவைத் திறந்து நீங்க முதல்ல வெளியே போங்க அருணான்னு கத்தின… நான் அப்படியே இருக்க, நீயே என்னைத் தள்ளிவிட்டுக் காப்பாத்தல…”
சக்திக்கு ஒன்றும் புரியவில்லை… உண்மையில் அவன் அன்று இவரைக் கொல்லப்பார்த்தான்… ஆம்… கொல்லத்தான் பார்த்தான்… மேகலைக்கு சீரியஸாகிறது என்று அன்று இரவு அவள் இருக்கும் ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்கும் டாக்டர் தோழி இவனிடம் கூறியிருந்தாள்… அந்த ஆத்திரத்தில் எப்படியாவது அவரைக் கொன்று விட வேண்டும் என்று திட்டம் தீட்டித்தான் போயிருந்தான்…ஆனால் அதைச் சரியாகக் கண்டுபிடித்து பிரேக்கிலிருந்து காலை எடுடா என்று அருணாச்சலம் கத்தியபோது அவனுக்கு உயிரே போயிருந்தது.. ஆனால் அவனது நல்லகாலமோ என்னவோ நிஜமாகவே பிரேக் பிடிக்கவில்லை… அதன்பின்னர் நடந்தது எதுவும் அவனுக்கு நினைவில்லை… காரின் வெளியே சிராய்ப்புகளோடு அருணாச்சலத்தை நோக்கிச் சென்றதுதான் நினைவிருந்தது… ஆனால் இந்த மனிதர் என்ன என்னென்னமோ கூறுகிறார்?
சக்தி புரியாமல் விழிக்க அருணாச்சலம் தொடர்ந்தார்.
” பதில் சொல்ல முடியல பார்த்தியாய்யா? செத்தே போனாலும் பாசம் போகாதுடா… அதை மறைக்கப் பார்க்காதய்யா… இவ உன்னை என்கிட்ட இருந்து பிரிக்கப் பார்க்குறாய்யா… இவ சொல்றதெல்லாம் நம்பாதய்யா…”
“மிஸ்டர் அருணாச்சலம் உங்களையும் உங்க பையனையும் பிரிச்சு நான் என்ன பண்ணப்போறேன்… ஆனா நான் சொல்ற எதுவும் பொய் கிடையாது… என்கூட வாங்க..” என்றபடி விறுவிறுவென்று அருளாளன் அவளுக்குக் காட்டிய இடத்தை நோக்கி நடந்தாள்.
மற்றவர்கள் அவளைப் பின்தொடர, வேறு வழியின்றி, அருணாச்சலமும் பின்தொடர்ந்தார்.
அங்கு கிடந்த எலும்புக்கூடுகளைக் காட்டியவள்,
“இது என்னன்னு தெரியுதா? கொஞ்ச காலத்துக்கு முன்னாடி தண்ணீ நிறைஞ்சு கிடந்த குட்டை… இப்ப தண்ணி வத்திப் போய்க்கிடக்கு… அதனாலதான் நீங்க வீசி எறிஞ்சுட்டுப் போன சடலங்கள்லாம் எலும்புக்கூடுகளா மாறி இப்ப வெளியில தெரிஞ்சுட்டு இருக்கு..”
.
விவேகன் அவற்றைப் பார்த்து லேசாகப் பயத்தில் சக்தியின் பின்னால் ஒடுங்கினான்… சக்தி அருணாச்சலத்தைப் பார்த்து முறைத்தான்… பத்மனி சிறுசந்தேகத்தோடு அருணாச்சலத்தைப் பார்க்க, அருணாச்சலம் அதிர்ச்சியோடு அவற்றைப் பார்த்தார்.
**********************************************
நாகாபரணத்தின் கன்னத்தில் அருளாளன் விட்ட அறையில் அவர் அறையின் மூலையில் போய் விழுந்தார்.
தடுமாறி எழ முயன்றுகொண்டிருந்தவரின் அருகில் வந்தவன், அணிந்திருந்த முழுக்கைச் சட்டையின் கைப்பகுதியை மடித்து விட்டுவிட்டு அவரது சட்டையைப் பிடித்துக் கொத்தாகத் தூக்கினான்…
“எவ்வளவு தைரியம் இருந்தா என்னை விலை பேச பார்ப்ப?
எப்படி எப்படி? தனியா வாங்க தம்பி…
நல்லா கவனிச்சுரலாமா? இந்தக் கவனிப்பு போதுமா?” என்றபடி மீண்டும் ஓர் அறை விழுந்தது.
“ஏய்… யார் மேல கை வச்சுக்கிட்டு இருக்கன்னு தெரியுதா? நீ வெறும் கலெக்டர் அதை ஞாபகம் வச்சுக்கோ…நான் நினைச்சா நீ இப்ப என்னை அடிச்சதை வைச்சே உன்னை ஒண்ணுமில்லாம ஆக்க முடியும்… இன்னொரு அடி என் மேல விழக்கூடாது…”
“விழுந்தா என்னடா பண்ணுவ? கேட்கும் போதே இரண்டு விட்டவன்,வேலை போகுமா? இல்ல உயிர் போகுமா? எது போனாலும் இன்னைக்கு நான் உன் உயிர எடுக்காம இங்கயிருந்து போக மாட்டேன்… உன் வயசுக்கு மரியாதை கொடுத்து மட்டும்தான் நான் இத்தனை நாள் அமைதியா இருந்தேன்… ஆனா இப்படிப்பட்ட ஈனப்பிறவி நீன்னு தெரிஞ்சதுக்கப்பறம் எந்த வயசா இருந்தா உனக்கென்னடா மரியாதை? இரண்டு அடி விழுந்ததுக்கே உனக்கு இவ்வளவு வலிக்குது… பாவம் சின்ன சின்ன குழந்தைங்க… அதுவும் மனநிலை சரியில்லாத குழந்தைங்க… அவங்களைக் கூட்டிட்டுப் போய் நரபலி கொடுத்துருக்க… உன் பதவிக்காக… நீயெல்லாம் வாழ்ந்து என்னப் பண்ணப்போற? உன்னைக் கொன்னுட்டு நான் ஜெயிலுக்குப் போய்க்கிறேன்…”என்றபடி அவரது கழுத்தை நெறித்தான்.
ஏதோ மிரட்டுவதற்காக நெறிக்கிறான் விட்டுவிடுவான் என்று எதிர்ப்பார்த்தவருக்கு மூச்சுத்திணறும் வேளையிலும் விடாமல் அவனது கையழுத்தம் கூட ‘அடப்பாவி அப்பனுக்குத் தப்பாம பிறந்துருக்கியேடா நிஜமாவே கொன்னுருவான் போலயே’ என்று நினைக்கும் போதுதான் சட்டென மூளையில் மின்னல் வெட்டியது… “அப்ப்ப்…படி… நீ கொல்…ற..தா… இரு…ந்…தா… அரு…அரு…ணாச்சல…ம்… அண்…ணனைத்…தான் கொல்…லணும்…” திணறியபடி சொன்னார்.
அவர் எதிர்ப்பார்த்த படியே தந்தையின் பெயரைக் கேட்டதும் தன்னையறியாமல் கையை எடுத்தான்.
“என்ன சொல்ற… “உறுமியபடி கையை லேசாக உதறியவனது கையில் முறிந்த சொடக்குகளின் ஓசை சொன்னது நாகாபரணத்திற்குப் பார்த்த வைத்தியத்தின் வீரியத்தை…
“ஹ்ஹஹ்… சற்று நேரம் இருமி முடித்துவிட்டு… உண்மைதான்ப்பா நான் வெறும் அம்பு மட்டும்தான்… இதெல்லாம் பண்றது அருணாச்சலம் அண்ணன்தான்…”
அவன் நம்பவில்லை…
“அவர் எதுக்குடா அப்படில்லாம் பண்ணப்போறாரு…” என்றபடி மீண்டும் அடிக்கத்தான் வந்தான்…
“அவரோட பையனுக்காக…”
“என்..ன?”
“ஆமாம்… சின்ன வயசுல தொலைஞ்சு போன அவரோட பையன் திரும்பிக் கிடைக்கணும்ங்கறதுக்காகத்தான் இதெல்லாம் பண்றாரு…”
அருளாளனுக்குச் சர்வாங்கமும் நடுங்கியது… எவ்வளவு அடிக்கிறோம் என்பதை விட, எங்கே அடிக்கிறோம் என்பது முக்கியமானது…
அது நாகாபரணத்திற்குத் தெரிந்திருந்தது…
அருளாளன், அருணாச்சலம் இருவரையும் ஒரே அடியில் வீழ்த்தக்கூடிய இடம் அது என்பதைத் தெரிந்துகொண்டவருக்கு அருளாளனின் முகத்தைப் பார்க்கக் குதூகலமாக இருந்தது…
ஆனால் அதை வெளியே தெரியாதவாறு கஷ்டப்பட்டு மறைத்தார்.
இதே கோபத்துடன் தந்தையை நோக்கிச் செல்வான் என்று அவர் எதிர்ப்பார்க்க, அவனோ “உனக்கு அருணாச்சலத்து மேல என்ன பகை” என்று கேட்டான்.
மீண்டும் நாகாபரணத்திற்குப் பக்கென்றது…
“எனக்கு அவர் மேல என்னப்பா பகை இருக்கப்போகுது … நீ இப்ப கழுத்தை நெறிக்கவும் உயிர்பயத்துல சொல்லிட்டேனே தவிர, அவர் என்னோட தெய்வம்… நீ இன்னமும் என்னை நம்பலன்னு தெரியுது. வேணும்ன்னா அவர்க்கிட்டயே போய்க்கேளு.”
“கேக்கத்தான்டா போறேன்… கேட்டுட்டு வந்து உன்னைப் பார்த்துக்குறேன்…”என்று விட்டுப் புயலென அவ்விடத்தை விட்டு நகர்ந்தவன் அதே வேகத்தில் அருணாச்சலத்ததின் வீட்டை அடைந்தான்…
அவனைப் பார்த்த பத்மினி முகம் மலர, “வாப்பா அருள்… உட்காரு…” என்று உபசரித்தார்.
“அம்மா… நான் அருணாச்சலம் சாரைப் பார்க்க வந்தேன்…. அவர் இருந்தா கொஞ்சம் வரச்சொல்ல முடியுமா?”
“சரிப்பா உட்காரு வந்துர்றேன்… “
அவர் காட்டிய சோபாவில் பொறுமையை இழுத்துப்பிடித்தபடி அமர்ந்தான்.
ஆனால் வந்த பத்மினி, தயக்கத்துடன்” அவர் அசந்து தூங்கிட்டு இருக்காருப்பா” என்றார்.
அவரது முகத்தைப் பார்க்கும்போதே அது உண்மையில்லை என்று தெரிந்தது…
“பரவால்லம்மா எழுப்பிவிட்டு வரச்சொல்லுங்க… ரொம்ப முக்கியமான விஷயம்…”
பத்மினி தயங்க,
“எந்த ரூம்ன்னு சொல்லுங்கம்மா நான் போய்க்கிறேன்” என்றான்…
கைகாட்டினார்…
மேலே சென்று கதவைத் திறந்தான்… எத்தனையோ முறை தந்தையின் நெஞ்சில் படுத்துறங்கிய அதே அறைதான்…
அங்கே அசந்து தூங்கியதாகச் சொல்லப்பட்டவர் கட்டிலில் அமர்ந்து கையிலிருந்த கனசதுரத்தைச் சேர்த்து சிறு பிள்ளைப் போல் விளையாடிக்கொண்டிருந்தார்.
அதைக் காணவும் அருளாளனுக்கு ஏற்கனவே இருந்த கோபம் எகிறியது…
விறுவிறுவென்று உள்ளே சென்று அவரது கையிலிருந்த கனசதுரத்தைப் பிடுங்கியவன் விட்டெறிந்ததில் அது சின்னச்சின்னக் கனசதுரங்களாகச் சின்னாபின்னமாகிச் சிதறி விழுந்தது…
அவனை அவர் அங்கு எதிர்ப்பார்க்கவில்லை…
எதிர்பாராமல் வந்ததோடு அது அவரது மகன் அவருக்குச் சிறுவயதில் பரிசாகக் கொடுத்தது…
அவனது நினைவு வரும்போதுதான் அதைக் கையில் எடுத்து வைத்திருப்பார்…
அதைப் பிடுங்கி விட்டெறிந்ததில் அவனைத் தீயாக முறைத்தவர் எதுவும் சொல்லாமல் சிதறிவிழுந்த கனசதுரங்களைப் பொறுக்க ஆரம்பித்தார்.
அருளாளனுக்கோ எரிச்சல் மண்டியது… அவன் மனதில் அப்பொழுது இருந்ததெல்லாம் அந்த நாகாபரணம் எவ்வளவு பெரிய பழியில் இவரைச் சிக்கவைக்கப் பார்க்கிறான்… இவர் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறாரே என்றுதான்…
மிஸ்டர் அருணாச்சலம்…
அவன் அழைப்பதை அவர் காதிலேயே வாங்கவில்லை…
மிஸ்டர் அருணாச்சலம்…
மிஸ்டர் அருணாச்சலம்…
ம்ஹீம்;… அந்த கனசதுரங்களைச் சேகரிப்பதிலேயே குறியாக இருந்தார். அப்பொழுதுதான் அதனைக் கண்டான்…
சிறுவயதில் சேர்த்து வைத்தப் பணத்திலிருந்து பத்து ரூபாய்க்கோ இருபது ரூபாய்க்கோ அவனது தந்தைக்கு அவன் வாங்கிக்கொடுத்தது அது. அதைப் போய் இன்னமும் பத்திரமாக வைத்திருக்கிறார்… உருகத் தொடங்கிய மனதை இறுக்கினான் அவன்…
இந்தப்பாசமே அனைத்திற்கும் காரணமாக அமைந்திருந்தால்…
அவனது மனம் சலனப்படத் தொடங்கியது…
அதனை சேகரித்து மேசை மேல் வைத்துவிட்டே நிமிர்ந்தார் அவனது புறம்…
“அந்த நாகாபரணம்…” என்று தொடங்கியவனைக் கையைக் காட்டித் தடுத்து நிறுத்தினார் அருணாச்சலம்.
“நிறுத்து… எல்லாம் எனக்குத் தெரியும்… நான் சொல்லாம எதுவும் நடக்கல… நீ எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம்…”
“என்…ன?”
“ஆமாம்… எனக்கு என் பையன் தான் முக்கியம் அவன் கிடைக்கணும்ன்னா என்ன வேணும்ன்னாலும் செய்வேன்…”
“என்..ன வேணாலும் செய்வீங்களா?”
“ஆமாண்டா… நீ என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்க…”
“என்னால என்ன செய்ய முடியும்ன்னு தெரிஞ்சா நீங்க இப்படி பேச மாட்டீங்க அருணா…ச்சலம்… இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோங்க… நீங்க நிஜமாவே இதைப் பண்ணிருந்தா யாருக்காக இதைப் பண்ணீங்களோ அந்த உங்க மகனை நீங்க உயிரோட பார்க்க நான் விட மாட்டேன்…” என்றபடி அவர் சேகரித்து வைத்திருந்த அந்த கனசதுரங்களைக் கையில் அள்ளி ஜன்னல் வழியாக வெளியே விட்டெறிந்துவிட்டு விறுவிறுவென இறங்கி பத்மினியிடம் கூட எதுவும் சொல்லாமல் வெளியே விரைந்தான்.
அப்பொழுது கூட அவனுக்குத் தன் தந்தை மேல் நம்பிக்கை இருக்கவே செய்தது… ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் அவனது மனதில் லேசாகத் துளிர் விட்டிருந்த சந்தேகத்தை ஆலமரமாய் அருணாச்சலத்திற்குச் சந்தேகம் வராமல் வளர்த்தெடுத்தார் நாகாபரணம்… எல்லாவற்றுக்கும் உச்சாணிக்கொம்பாய் ஏதோ ஒரு சாதாரண பூஜை என்று சொல்லி, அருணாச்சலத்தை வரச்செய்து ஒரு சிறுவனின் நெற்றியில் குங்குமம் பூசச்சொல்ல, அவர் சாதாரணமாய்ப் பூசிவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அடுத்து நரபலிக்கான ஏற்பாடுகள் நடக்க, கேமரா வழிப் பார்த்துப் பதறிப்போன அருளாளன் வேகமாக அந்த இடத்திற்குக் காவல்துறையுடன் விரைந்து தடுத்தான். நரபலி கொடுக்க முயன்றதாய் அருணாச்சலத்தைக் கைது செய்யவும் வைத்தான்.
அருணாச்சலத்திற்கோ தன் மகனைக் கிடைப்பதற்காக செய்த ஏதோ சிறு பூஜையைக் கூடத் தடுக்கிறான் என்ற எண்ணம் வந்துவிட்டது…
அரைமணி நேரத்தில் வெளியே வந்துவிட்டாலும் கைது செய்ததில் அவமானமாய் வேறு உணர்ந்தவர், அவனை எச்சரித்து அனுப்பவே அந்தக்குவாரிக்கு வரச்சொன்னார்…
ஆனால் அவனது முடிவு வேறாய் இருந்தது…
நான் உயிரோடு இருக்கும் வரை உங்கள் மகனைக் கிடைக்க விடமாட்டேன் என வெறியேற்றிவிட, அவன் நினைத்தது நடந்தது…
“இறந்ததுக்கப்பறமும் கொஞ்சநாள் நான் அவர் மேல கோபமாத்தான் இருந்தேன்.. நான் இறந்த மூணாவது நாளே மேகலைக்கும் ஆக்ஸிடன்ட் ஆகிருச்சு… அப்பதான் இறந்துருந்ததனால எனக்கு எந்த சக்தியை எப்படி பயன்படுத்துறதுன்னு கூடத் தெரியல… அவளைக் காப்பாத்தலாம்ன்னு பக்கத்துல போனப்பதான் எனக்கு சக்தின்னு ஒண்ணு இருக்கறதே தெரிஞ்சது… ஆனா அப்படியிருந்தும் அவளுடைய இறப்பை என்னால தடுக்க முடிஞ்சதே தவிர, அவளுடைய நினைவை என்னால மீட்க முடியல… என்மேல பாசம் வைக்க நிறைய பேர் இருந்தாங்க… ஆனா அப்ப என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒரே ஒரு ஜீவன்னா அது மேகலா தான்… அவளுக்கும் இப்படி பண்ணிட்டாங்களேன்னு பயங்கரக்கோபத்தோடு அருணாச்சலத்தையும் நாகாபரணத்தையும் தேடிப்போனேன்… ஆனா அங்க சின்னப்பொண்ணைப் போய் ஏன்டா இப்படி பண்ண?ன்னு நாகாபரணத்தை அருணா திட்டிட்டு இருந்தாரு ரொம்பக் கோபத்தோட… அப்பதான் எனக்கு ஏதோ இடிச்சது… மேகலாக்கு வயசு 21 அவளே சின்னப்பொண்ணு அவளை எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்றாருன்னான்னுதான் முன்னாடி நடந்த விஷயத்துக்கும் அருணாக்கும் சம்பந்தம் இருக்கான்னு கொஞ்சம்கொஞ்சமா தடுமாறி சக்தியைப் பிரயோகிச்சுப் பார்த்தேன்… கொஞ்சம் கூட இல்லன்னு தெரிஞ்சது…” சொல்லிவிட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தான் அருளாளன்…
“அவசரப்பட்டுட்டோமேன்னு கவலையா இருந்துச்சா அருள்…” அமிழ்தா மென்மையாகக் கேட்டாள்.
“இல்ல அமி.. முதல்ல… ரொம்ப சந்தோஷமா இருந்தது…
என்னோட அருணா அப்படிப்பட்டவர் இல்லன்னு…
அதுக்கப்பறம்…
ஆமா அப்படி தோணுச்சு…
ஆனா சின்ன வயசுல இருந்து என் அருணா எனக்குச் சொல்லிக்கொடுத்தது ஒண்ணுதான்…
ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி எவ்வளவு வேணும்ன்னாலும் யோசிக்கலாம்…
யோசிக்கணும்…
ஆனா செஞ்சதுக்கப்பறம் சரியோ தப்போ அதைப் பத்தி இம்மியளவு கூட யோசிக்கக்கூடாதுன்னு சொல்வாரு… அதனால நான் இறந்ததை நினைச்சு அதுக்கப்பறம் நான் கவலைப்படல… எந்தக்காரணமும் இல்லாம எந்த விஷயமும் நடக்காது.
என் இறப்புக்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்…
ஆனா இப்ப எனக்கு இருக்கறது ஒரே ஒரு கவலைதான்…
அருணாவுக்கு நான் தான் அவர் பையன்னு தெரியக் கூடாது…
தெரிஞ்சா தாங்க மாட்டாரு அமி…
அதைவிட அம்மா…
சும்மாவே நான் அவங்க பையனா இருப்பனோன்னு நினைச்சு அழுதுட்டு இருந்தவங்க, நான் நிஜமாவே அவங்க பையன்தான்னு தெரிஞ்சா தாங்கவே மாட்டாங்க…”
பரிதவிப்புடன் சொன்னவனின் பரிதவிப்பு அமிழ்தாவினுள்ளும் படர்ந்தது. மீண்டும் சற்று நேரம் மௌனம் அவர்களுள் படர்ந்தது…
பின் அதனைக் கலைப்பவளாய்,
“ஏன் அருள் அந்த நாகாபரணத்தை இன்னமும் விட்டுவச்சிருக்கீங்க?” கோபத்துடன் கேட்டாள்.
“அப்பறம் அவனை என்ன பண்ணச்சொல்ற? கொலையா? பேயா வந்து மத்தவன் உயிரை வாங்குவான்… அதோட எனக்கு யாராயிருந்தாலும் கொலை பண்ணப் பிடிக்காது… அவனையும் அந்த கமிஷனரையும் வேற ஒண்ணு பண்ணனும்… ஆனா அதுக்கு முன்னாடி அருணாவுக்குத் தானாவே அவங்க சாயம் தெரியணும்… அதுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்…”
நேற்று அருள் சொன்னது அமிழ்தாவிற்கு ஞாபகம் வந்தது.
அருணாச்சலத்தின் முகத்தைப் பார்த்தாள்… நிஜமான திகைப்பு தெரிந்தது…
“என்ன சார் இப்படி பார்க்கிறீங்க? என்ன எல்லாம் மறந்து போயிருச்சா? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கலெக்டரை இதே குவாரில வச்சு அடிச்சே கொன்னீங்களே ஞாபகம் இருக்கா? இல்ல… அதுக்கடுத்து அவரோட தங்கச்சியை ஆக்ஸிடன்ட் ஆக்கி கோமாவுல படுக்க வச்சீங்களே அது ஞாபகம் இருக்கா? இல்ல உங்க பையன் கிடைக்கணும்ங்கறதுக்காக சின்னக்குழந்தைங்க மனநலம் சரியில்லாத குழந்தைங்கன்னு கூடப் பார்க்காம நரபலி கொடுத்தீங்களே அது ஞாபகம் இருக்கா?”
கலெக்டரை அடித்துக்கொன்றது எனவும் பத்மினியின் விழிகள் அவரைச் சுட்டெரித்தன…
“அரசு… அப்பாவை நம்புப்பா… அந்த அருளாளனை நான்தான் கொன்னேன்… ஆனா வேற எதுவும் நான் பண்ணல…இதெல்லாம் எப்படி இங்க வந்துச்சுன்னு எனக்குத் தெரியாதுப்பா… இதோ நாகா கூட வர்றான்யா அவன் கிட்ட நீயே கேளு…” என்று அங்கு வந்த நாகாபரணத்தைப் பார்த்து ஆறுதலடைந்தவர்,
“நாகா.அரசு இந்த அமிழ்தா பேச்சையும் இந்தச் சின்னப்பையன் பேச்சையும் கேட்டுக்கிட்டு என்னன்னமோ சொல்றான்டா… நீயாவது சொல்லு நாகா…”என்றார்.
“சரிண்ணே… சரிண்ணே” என்று அவரை அமைதிப்படுத்தியவர்,
“ஆமா அரசு அண்ணே சொல்றதெல்லாம் உண்மைதான்… நீ கிடைக்கணும்ங்கறதுக்காகத் தான் இவ்வளவு பேர் தங்களோட உயிரையே கொடுத்துருக்காங்க… அதனாலதான் நீ கிடைச்சிருக்க” என்றார்.
“நாகா… என்னடா சொல்லிட்டிருக்க?”
“ஆமாண்ணே தம்பிக்காகத்தான இந்த நரபலி எல்லாம் கொடுத்தோம்…”
“டேய்…”
அவரது கைப்பிடியிலிருந்து மெதுவாகச் சட்டையை விடுவித்தபடியே
” என்னண்ணே… உங்க பையன் உங்களை விட்டுட்டுப் போயிருவான்னு பயப்படுறீங்களா?
நீங்க பயப்பட வேண்டிய அவசியமே இல்ல…
ஏன்னா இவன் உங்கப்பையனே இல்ல…”
நாகாபரணம் அருணாச்சலத்திடம் சொல்ல,
“விவேகன் ரெடியா இரு…” என்று அவனது காதில் சக்தி கிசுகிசுத்தான்.
“எதுக்கு?”
“உங்கப்பன்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த…”
“அவர் எங்கப்பாவே இல்லையே…”
“ஆங்?”
“என்ன ஆங்? யோவ் மாமா உன் வயசு என்ன?”
“27…”
“என் வயசு என்ன தெரியுமா? 20… உனக்கும் எனக்கும் 7 வருஷம் வித்தியாசம்… 27 வயசாயிருக்க உன்னைப் பையன்னு நினைச்சவருக்கு 20 வயசுப்பையன் நான் எப்படி மகனா இருக்க முடியும்? உன் மூளையில மசாலாவே இல்லையா? இதுலஉன்னை என்னமோ பெரிய லாயர்ன்னு மேகலாக்கா சொல்லுச்சு…”
“மேகலா அக்காவா? நீ யாரு?”
“உன் மச்சான்… மேகலா… அருளாளனோட தம்பி…”
“ஐயோ சாரிடா… கலை உன்னைப்பத்தி சொல்லும் போது விவாவிவான்னு தான் சொல்லுவா…அதான் தெரியல… ஆனா நீ ஏன் அன்னைக்கு அருணாச்சலத்தோட பையன்னு சொன்ன?”
“நான் எங்க சொன்னேன்? நான் அன்னைக்கு எல்லாத்தையுமே அவன் அவன்னு படர்க்கையில தான் சொன்னேன்… நீங்களா நினைச்சுக்கிட்டா நானா பொறுப்பு? “
“அப்ப அருணாச்சலத்தோட உண்மையான பையன் யாரு?”
“ஷ்ஷ்ஷ் “அமிழ்தா அவர்கள் இருவரையும் அதட்டினாள்.
“என்னண்ணே? இப்படி திகைச்சுப் போயிருக்கீங்க… ஆனா ஒண்ணுண்ணே… நீங்க இவ்வளவு பதறி… கலவரப்பட்டு…பயந்து… நான் இத்தனை வருஷத்துல இப்பத்தான்ண்ணே பார்க்குறேன்… பிள்ளை மேல அவ்வளவு பாசம் என்னண்ணே… ஆனா பாவம்… அந்தப்பிள்ளை கூட இருக்கற வாய்ப்பு உங்களுக்கு இல்லாம போயிருச்சேண்ணே…”
அருணாச்சலத்தின் கைப்பிடி இறுகியது…
“டேய்…கூட இருந்தே நீ இப்படி குழி பறிப்பன்னு நான் நினைச்சே பார்க்கல… இப்ப என்னடா என்னென்னமோ சொல்ற? என்ன கதை கட்டி என்னையும் என்பையனையும் பிரிக்கப்பார்க்குற? “
“அதெல்லாம் பிரிச்சு ரொம்ப நாள் ஆச்சுண்ணே… கையை எடுங்கண்ணே… இவன் நீங்க நினைக்கற மாதிரி உங்கபையன் கிடையாது… அந்த அருளாளனோட தங்கச்சி… ஞாபகம் இருக்கா… நீங்க கூட ஏன்டா சின்னப்பொண்ணைப் போய் இப்படி பண்ணன்னு என்னை அடிச்சீங்களே…”
இதைக் கேட்கவும் சக்தி விலுக்கென்று நிமிர்ந்தான்.
“அந்தப் பொண்ணோட காதலன்தான் இவன்… மச்சான் சாவுக்குப் பழிவாங்க வந்துருக்காராமா…. அதான் அவன் மச்சான் கூடயே அனுப்பி வச்சுரலாம்… அப்பறம் நீங்களும் நீங்க கொன்ன உங்க பையன் கூடயே போயிருங்க…”
எதையோ புரிந்தவராய் அருணாச்சலத்தின் கைப்பிடி தளர்ந்தது…
” ஆமாம்… நீங்க உங்க கையால பண்ணீங்களே…ஒரு கொலை….ஒரே ஒரு கொலை… அது யாருன்னு நினைக்கிறீங்க… நீங்க தாலாட்டி சீராட்டி வளர்த்த உங்க பையன் அரசுதான்…இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்ன்னு பார்க்கறீங்களா? நீங்க பத்து வயசுல உங்க பையனைத் தூக்கிப்போட்டுட்டு ஒரு லாரியை பாலோ பண்ணச் சொன்னீங்களே… அப்ப அவன் அதுல இருந்து கீழே விழுந்துட்டான்… அப்பவே ஏதாவது கார் ஏறும்… பிணத்தை உங்கக்கிட்ட வந்து கொடுத்துரலாம்ன்னு நினைச்சேன்… ஆனா இதோ நிக்கிறான்னே இந்தப்பய” என விவேகனைக்காட்டியவர்,
“இவனைப் பெத்ததுங்க கூட்டிட்டுப் போயிருச்சுங்க… அப்ப இருந்து அந்தக்குடும்பத்து மேல எனக்கு ஒரு கண்ணு இருந்துட்டே தான் இருந்துச்சு… எங்க திரும்பி கிரும்பி வந்துருவானோன்னு… சாகிறப்ப கூட பய எங்கே பாதியில அடிதாங்காம சொல்லிருவானோன்னு நினைச்சேன்… நான்தான் உங்க பையன்னு… ஆனா கடைசிச்சொட்டு இரத்தம் தீர்ற வரைக்கும் சொல்லவே இல்லையே… உங்களை மாதிரியே கெட்டிதான்… “
பத்மினி ஆங்காரத்தோடு கேட்டார்.
“அடப்பாவி.. இவ்வளவு பண்ற அளவுக்கு நாங்க உனக்கு என்னடா துரோகம் பண்ணோம்? தம்பி மாதிரி சின்னவயசுல இருந்து கூடவே இருந்தவன்தான நீ… “
“ஆமா அண்ணி… அதான் பிரச்சனையே… கூடவேதான் இருந்தேன்… ஆனா உங்க புருஷனுக்குக் கிடைச்ச பேர் புகழ் எதுவும் எனக்குக் கிடைக்கல… “நாகாபரணம் தொடர்ந்து கொண்டிருக்க, தரையில் தடுமாறி விழப்போன அருணாச்சலத்தை அமிழ்தாதான் கவனித்தாள்.
எந்த நினைவும் அற்றவர்போல் பின்னாடி நகர்ந்து கொண்டே வந்தவர், கீழே இருந்த ஒரு கம்பு தடுக்கி விழப்போனார்.. அமிழ்தாவும் அவளைத் தொடர்ந்து விவேகனும் சார் என்று தாங்கிப்பிடிக்கப் போகும் முன் விழுந்தே விட்டார்… முன்நெற்றியில் கூரான கல் ஒன்று கிழிக்க, இரத்தம் வழிந்தது… ஆனால் அவர் அதையெல்லாம் உணர்ந்தது போல தெரியவில்லை…
அவருடைய நினைவெல்லாம் ஒரு முறை… ஒரே ஒரு முறை கூட அவனுக்கு இந்தத்தகப்பன் தவறு செய்திருக்க மாட்டான் என்று தோன்றவில்லையா? எப்படி தோன்றும்? தான் செய்த மற்ற காரியங்கள் எல்லாம் அப்படிப்பட்டவை அல்லவே… நினைத்தவரின் நெஞ்சு நூறாக நொறுங்கியது.
சார்.. சார்… அமிழ்தாவும் விவேகனும் அவரை இருபுறமிருந்தும் உலுக்கினார்கள்… வெகுநேரம் உலுக்கியிருப்பார்கள் போலும் அந்த அழுத்தம் அவர்களது குரலில் தெரிந்தது… ஆனால் அந்த நினைவிலிருந்து விடுபடாமல் பரக்கப்பரக்க முழித்தவரிடம் விவேகனிடமிருந்த கைகுட்டையை வாங்கி சார் இரத்தம் வழியுது… என்றபடி துடைத்து விட்டாள் அமிழ்தா. அவள் கூறவும் தன்னிச்சையாக நெற்றியைத் தொட்டுப்பார்த்தார்…கை சிவப்பாக மாறியது… அப்படியென்றால் இரத்தமாகத் தான் இருக்கும்… இதே இரத்தம்… இதே இரத்தம்தானே அன்றும் நிறைந்திருந்தது இதே கையில்… இதை விட எத்தனையோ மடங்கு அதிகமாக… கையில் அன்றுறைந்த மகனின் இரத்தம் இன்றும் படர்ந்திருப்பதாய்த் தோன்ற அதையே வெறித்தார்…
கண்ணிலிருந்து நீர் வரவில்லை…
வாயிலிருந்து சத்தம் வரவில்லை…
ஆனால் கண் எங்கோ நிலை குத்தி, உதடுகள் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது.
அமிழ்தா அருள் அருள்… என்று அழைத்துப்பார்த்தாள்…
ம்ஹீம்… இங்கு கிளம்பும்போதிருந்தே அழைத்துக்கொண்டிருக்கிறாள் அவன் எங்கே போனான் என்றே தெரியவில்லை…
அவள் நினைத்த அதே வேளை, அங்கே நாகாபரணம் தள்ளிவிட்ட பத்மினியை சக்திப் பிடித்தான்.
“அம்மா நீங்க போய் அரு… அப்பாவைப் பாருங்கம்மா” என்று அனுப்பியவன் நாகாபரணத்தைப் பார்த்து விழி சிவக்க முறைத்தான்…
“என்னடா முறைக்கிற… ஓ தனியா வந்துருக்கேன்… நீங்க நாலைஞ்சு பேர் இருக்கோம்ங்கற தைரியமா? வெளியே பூரா என் ஆளுங்க நிக்கிறாங்க தம்பி… கவனம்…”
பத்மினி அருணாச்சலத்திடம் வரவும் சக்தி தனியாக நின்று கொண்டிருக்கிறான் என நாகாபரணத்திடம் அமிழ்தா வந்தாள்.
“இங்கே பாருங்க மிஸ்டர் நாகாபரணம்… நீங்க பண்ணிருக்க வேலை ரொம்பவே கேடுகெட்டது.. போலீஸ்க்குக் கால் பண்ணிருக்கேன் இப்ப வந்துருவாங்க… ஒழுங்கு மரியாதையா போலீஸ்ல சரண்டர் ஆகிருங்க… “
“எந்தப் போலீஸ்ட்டம்மா சரண்டர் ஆக? இந்த மாவட்டகமிஷனர் என் ஆளுங்கறது கூட உனக்கு தெரிஞ்சுருக்கும்ன்னுல்ல நான் நினைச்சேன்… “என்றவர்,
சக்தியிடம் திரும்பி,
“என்னடா அப்ப இருந்து விறைப்பாவே நின்னுட்டு இருக்க… உனக்கு ஒரு நல்ல சேதி சொல்லட்டுமா? உன் காதலி மேகலா இப்ப வெளிநாட்டுலலாம் இல்ல… நேத்தே இங்க கூட்டிட்டு வந்துட்டாங்களாம்ப்பா… அவளுக்கு ரொம்பப்பிடிச்ச அண்ணன் இருந்த ஊர்ல இருந்தா நினைவு திரும்பலாம்ன்னு… எதுக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டு பாவம் ரொம்ப நாள் உயிர் இழுத்துட்டு இருக்கக் கூடாதுல்ல… அதான் அந்தக் கமிஷனரைத் தான்மா அனுப்பிருக்கேன்…
விசாரிக்கப்போற மாதிரி தீர்த்துக்கட்டச் சொல்லி…
இந்நேரம் வேலையை முடிச்சிருப்பான்னு நினைக்கிறேன்…
எதுக்கும் அவனுக்குக் கூப்பிட்டுக் கேட்டுருவோம்”
என்றபடி டயல் செய்து போனைக் காதில் வைத்தவர் அமிழ்தாவிடம்,
“அது சரி ஏன்மா அமிழ்தா அந்த அருளாளன் விஷயத்துல ரொம்ப அக்கறை காட்டுற… அவன் என்ன செத்துப் போறதுக்கு முன்னாடி உன் பாய்பிரண்டா என்ன?” என்றார்.
“இல்ல.. செத்ததுக்குப்பின்னாடி பேய்பிரண்ட்…”
அவள் கடுப்புடன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எதிர்முனை தொடர்பு கிடைத்தது… எதிர்ப்புறம் சொன்ன சேதியில் அவர் முகம் வியர்க்க ஆரம்பித்தது…
முகத்தைத் துடைத்தபடி நிமிர்ந்தவர் அப்போதுதான் எதிரே நின்ற சக்தியின் முகத்தை நன்றாகப் பார்த்தார்…
அது சக்தி இல்லை…
அவரது கையிலிருந்த போன் நழுவப் பார்க்க அதை இறுக்கப் பிடித்தவரை,
சக்தி உடலில் இருந்த அருளாளன் அறைந்த அறையில் போன் ஒருபுறம் நாகாபரணம் ஒருபுறம் போய் விழுந்தன..
போன் சிதறியது…
நாகாபரணத்தின் உடலெலும்பு நொறுங்கியது..
எழ முடியாமல் கிடந்தவரைத் துச்சமாகப் பார்த்தவன், அருணாச்சலத்தை நோக்கிச் சென்றான்…
சற்று நேரம் முன்வரை கணவர் மேல் கோபமிருந்தாலும்
“ஏங்க… இங்க பாருங்க.. அது நம்ம பையன் இல்லங்க…வேற யாரோ… நம்ம பையன் எங்கயாவது இருப்பாங்க… விடுங்க…” பொய்யென்று தெரிந்தும் அப்படியாவது பித்துப்பிடித்தவர் போல் அமர்ந்திருந்த அருணாச்சலத்தை நடப்புக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்தார் பத்மினி.
ஆனால் என்ன முயன்றும் முடியாமல் போகவே, “என்னங்க…” என்று கதறி அழ ஆரம்பித்தார்…
பத்மினியின் கெஞ்சல், அழுகை, விவேகனின் உலுக்கல் எதுவுமே அருணாச்சலத்தை அசைத்துப்பார்க்கவில்லை…
அவரது நினைவு எல்லாம் பிறந்தவுடன் கையில் வாங்கியபோது அழுதது முதல் தன்கையால் இறந்தபோது சிரித்தது வரை மகனின் முகத்திலேயே நின்றிருந்திருந்தது…
தன்னைச் சுற்றி நடக்கின்ற வேறு எதுவும் அவர் மனதில் பதியவில்லை…
கண்ணீர் வராமல் ஆனால் உதடு துடிக்க, எங்கோ வெறித்தபடி பார்த்திருந்தவரின் அருகில் வந்த அருளாளன்(சக்தி) அவரைப் பிடித்து எழுப்பி நிறுத்தினான்…
சக்தி அழைப்பது போல அப்பா அப்பா என்று அழைத்துப் பார்த்தான். பொம்மை போல நின்றாரே தவிர, அவனது அழைப்பும் அவரது காதில் விழவில்லை…
பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய்க் கண்ணீர் வழிந்து கொண்டிருந்த சக்தியின் கண்களை மூடியவன்,
விரலை இணைத்து ஒரு சொடக்கிசைத்தான்.
அமிழ்தாவையும் அருணாச்சலத்தையும் தவிர, அங்கிருந்த அனைவரும் ஒரு மயக்கத்தில் ஆழ, மயங்கி விழுந்த சக்தியின் உடலிலிருந்து அருளாளனாய்ப் பிரிந்து எழுந்தவன், “அருணா…” என்று அழைத்தான்.
யாருடைய அழைப்பிற்கும் அவ்வளவு நேரம் அசைந்து கொடுக்காதவருக்கு அந்த ஒற்றைச் சொல்லில் உயிர் பிசைந்தது.
அவ்வளவு நேரம்…நாள்… வருடங்கள்… ஒரு சொட்டைக் கூட வீணாக்காமல் காத்துவைத்திருந்த கண்ணீர் அவனைக் கண்டதும் தாரைதாரையாகக் கொட்டஆரம்பித்தது…
தந்தையின் கண்களில் கண்ணீரைக் கண்டவனுக்கும் மனம் கலங்கியது… ஆனால் அழமுடியவில்லை…
அதற்கு கண்ணீர் வேண்டுமே…
அவனது அருகில் வந்தவர் “சொன்னமாதிரியே என் பையனை எனக்குக் கிடைக்க விடாம பண்ணிட்டியேடா” என்று கதற ஆரம்பித்தார்.
தந்தையின் கதறல் அவனுக்கு இன்னும் வலித்தது…
அந்த வலி தாளாமல் ” ஸாரி அருணா” என்று அவரை நெஞ்சோடு அணைத்தான்…
கதறலும் கண்ணீருமாய் தன் சோகத்தை அவர் கரைக்க முயல, அவனால் உணர முடியாமல் அவன் மேல் விழுந்த கண்ணீரும் மொத்த உணர்வையும் தூண்டும் படி அவனது காதில் விழுந்த கதறலும் அவனது ரணத்தை இன்னமும் கூட்டவே செய்தன…
” எனக்குச் சின்னக்குழந்தைங்கன்னா ரொம்பப்பிடிக்கும்ன்னு உனக்கு தெரியாதடா? நான் எதுவுமே பண்ணலயா அரசு…” அவர் கதறலுடனே சொல்ல,
வலியுடன் கண்களை மூடித் திறந்தவன்,
“தெரியும் அருணா… தெரியும்… நீங்க அதைப் பண்ணலன்னு தெரியும்… ஆனா பண்ணின மத்த தப்புகளுக்கும் பிராயச்சித்தம் பண்ணிருங்க அருணா…”
அவர் இன்னமும் அழுகையில் கரைந்து கொண்டிருக்க, “போதும் அருணா…” என்று நிறுத்தியவன், அவரது கண்ணைத் துடைத்துவிட்டு, கண்ணை மூட அவரும் மயங்கி விழுந்தார்…
அமிழ்தாவிடம் வந்தான்… அவளுக்கும் லேசாகக் கண்கள் கலங்கித்தான் இருந்தது…
ஆனால் அவன் அருகில் வருவதற்குள் அதைத் துடைத்தவள்,
“என்ன? அடுத்து நானும் மயங்கி விழணுமா?” என்று கேலிபேச முயன்றாள்.
ஒன்றும் சொல்லாமல் கலங்கிய முகத்தோடு புன்னகைக்க முயன்றவன் முடியாமல் அவளை லேசாக அணைத்தான்.
“எல்லாத்துக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அமி…”
அவனது தோளில் கைவைத்தவள்,
“ இப்ப எனக்கு எதுக்குடா தேங்க்ஸ் சொல்ற? நான் ஒண்ணும் பண்ணலயே…” என்றாள்.
ஒன்றும் சொல்லாமல் அணைப்பிலிருந்து நிமிர்ந்தவன்,
லேசாகப் புன்னகைத்தபடி அவளது கைகளைப் பற்றினான்…
அமிழ்தாவிற்கு ஏனோ அந்தப் புன்னகையில் ஏதோ விபரீதம் ஒளிந்திருப்பது போலத் தோன்றியது…
“மி…ஸ்டர் கோ..ஸ்ட்” அவள் சொல்லிமுடிக்க சரியாக அவளது உடலில் மின்சார அதிர்வு போல அவனது சக்தி பாய்ந்தது…
இரண்டு வருடத்திற்குப்பின்,
வேறொரு மாவட்டத்தின் கலெக்டர் குவார்ட்டஸில்…
சோபாவில் போனைக் காதில் வைத்து அமர்ந்திருந்தாள் அமிழ்தா…
அவளிடம் “அக்கா… நீ இன்னமும் அந்த அருளாளனை மறக்கலயா?” எதிர்முனையிலிருந்த சந்தனா கேட்டாள்.
அமிழ்தாவின் பதில் நிதானமாக வந்தது…
“யாரந்த அருளாளன்?”
(தொடரும்….)
(கதைக்கு இது முடிவல்ல… இன்னும் இரண்டு அத்தியாயங்கள் இருக்கிறது… முன்பே கூறியபடி அருளும் அமியும் பிரிய மாட்டார்கள்… தயவுசெய்து அடுத்த அத்தியாயத்தைப் படிக்கவும்)
Interesting👍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting