Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42

  சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 42

இரண்டு வருடத்திற்குப்பின், வேறொரு மாவட்டத்தின் கலெக்டர் குவார்ட்டஸில்…

சோபாவில் போனைக் காதில் வைத்து அமர்ந்திருந்தாள் அமிழ்தா….
அவளிடம் “அக்கா… நீ இன்னமும் அந்த அருளாளனை மறக்கலயா?” எதிர்முனையில் சந்தனா கேட்டாள்.

அமிழ்தாவின் பதில் நிதானமாக வந்தது…

“யாரந்த அருளாளன்?”

“அக்கா? என்னக்கா இப்படி சொல்ற? உன்னோட லவ்வர்… நாலு வருஷத்துக்கு முன்னாடி இறந்துகூட போயிட்டாங்களே…”

“சந்தனா என்ன உளறிட்டு இருக்க? நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் காதலிச்சனா? எனக்குக் காதலிக்கல்லாம் எந்தக்காலத்துலயும் நேரமிருந்ததில்ல… பேசாம போனை வச்சுட்டுப் போய்த் தூங்கு போ…”

சந்தனாவிற்கு என்ன இவள் இப்படி சொல்கிறாள் என்று இருந்தது. ஆனால் அவளே மறந்தது போல பேசுவதைத் தான் தூண்டிவிட வேண்டாம் என்று நினைத்தவள், வேறு பேச்சிற்கு மாறிவிட்டு போனைக் கட்செய்தாள்.

அமிழ்தா அலுவலக விஷயமாக தனக்கு வந்திருந்த மெயில்களையும் மெசேஜ்களையும் செக் செய்து கொண்டிருந்தாள். மீண்டும் அழைப்பு இடையிட்டது… இம்முறை எண்ணைப் பார்த்தவள் உற்சாகத்துடன் எடுத்துக்காதில் வைத்தாள்.

“என்ன புதுப்பொண்ணு எப்படி இருக்கீங்க?”

“சூப்பரா இருக்கேன் அம்மு… அத்தையும் மாமாவும் என்னை அவங்க பொண்ணு மாதிரியே பார்த்துக்கிறாங்க தெரியுமா?”

“சந்தோஷம்… பத்மினி ஆன்ட்டி பத்தி தெரியும் ஆனா பரவால, அருணாச்சலம் இப்படி மாறுவார்ன்னு நான் எதிர்ப்பார்க்கல…”

“ஏன் அவருக்கென்ன? சொல்லப்போனா அவர் எனக்கு அப்பாதான்… இடையில இவராலதான் முறை குழம்பிருச்சு… ” என்று காலடியில் அமர்ந்திருந்த சக்தியின் தலையில் தட்டினாள் மேகலை…
“அதுசரி..மகள்ன்னா என்ன? மருமகள்ன்னா என்ன? நீ எப்படி இருக்க அம்மு? “

“நல்லா இருக்கேன்… உன் புருஷன் எப்படி இருக்கான்?”

“அவருக்கென்ன? என் உயிர வாங்கிகிட்டே சந்தோஷமா இருக்காரு…”

“நான் உன் உயிர வாங்குறனா அடிப்பாவி” என்றபடி மேகலைக்குக் கால்பிடித்துவிட்டுக்கொண்டிருந்த சக்தி அவளிடம் இருந்து போனைப் பிடுங்கினான்.

அவனையும் சற்று நேரம் மேகலையுடன் இணைந்து ஓட்டி சிரித்துக் கொண்டிருந்தவள், அம்மு… என்று சக்தியின் குரல் ஆழமாக மாறவும் சிரிப்பை நிறுத்தினாள்.

“என்னடா நீயுமா? என்ன வயசாகிட்டே போகுது… கல்யாணம் பண்ணனுமா? டேய் நீ பெஞ்ச் தேச்சு தேச்சு என்கூட படிச்சன்னா எனக்கும் உன் வயசே ஆகிருமா? எனக்கு 26 வயசு தான்டா ஆகுது…”

“26 வயசு தான் இல்ல அம்மு… இரு…பத்தி…யாறு…. வயசு… பொண்ணுங்களுக்கு இதுவே ரொம்ப அதிகபட்சம்…”

அவளோ “குட்நைட் போனை வை தூக்கம் வருது…” என்று விட்டு தொடர்பைத் துண்டித்து விட, சக்தியும் மேகலையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்…

இங்கே கொட்டாவி விட்டபடி அமிழ்தா எழ, மீண்டும் அலைபேசி அடித்தது… இம்முறை எரிச்சலுடன் எடுத்தாள். இப்பொழுது அவளது தாயும் தந்தையும்… ‘என்னாச்சு இவங்களுக்கு? ஏன் இன்னைக்கு எல்லாரும் ஒரேடியா போன் பண்றாங்க என்று அலுத்தபடி போனை எடுத்தாள்… பின்னே எல்லாரும் கல்யாணம்கல்யாணம் என்று அதே பாட்டைப்படித்தால்? பேசும் ஆசை கூடபோய்விடுகிறது… அவளுக்குத் தனியாக இருக்கத்தான் பிடித்திருக்கிறது என்று சொன்னால் ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்?’

அவள் எதிர்ப்பார்த்தபடியே சற்று நேர சாதாரண பேச்சு வார்த்தைக்குப்பின் அவரது தந்தை மெல்ல ஆரம்பித்தார்… போன் ஸ்பீக்கரில் இருப்பது அவளுக்கு எதிரொலி கேட்டது… ஆக தாயும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்…

“அப்பா… இப்ப என்ன உங்களுக்கு சக்தி- மேகலை கல்யாணத்துல பார்த்த உங்களோட அந்தப் பழைய ஸ்டூடன்ட் விஜயனைக் கல்யாணம் பண்ணிக்கணும்… அவ்ளோதான? பண்ணித்தொலையறேன்…விடுங்க…

“என்னடா இப்படி பேசுற…

“அப்பறம் என்னப்பா? அவனை பிடிக்கலன்னு அன்னைக்கே சொல்லிட்டேன்… ஓவர் ஆட்டிட்யூட் காட்டறவங்களைக் கண்டாலே எனக்குப்பிடிக்காதுன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்… இவன் அதிலயும் ரொம்ப காட்டறான்… என்னமோ அவன்தான் ஊர்ல இல்லாத பிஸினஸ் மேன் மாதிரி… எரிச்சலும் கடுப்பும் அவனைப்பார்த்தாலே எனக்குக் கைகோர்த்துட்டு வருது… ஆனாலும் நீங்க அவனைக் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்ன்னு போர்ஸ் பண்ணா நான் என்ன பண்ணுவேன்? நான் மாட்டேன்னு சொன்னதுக்காகவே என்னமோ மாட்டை அடக்கிக்காட்டுற மாதிரி என்னை அடக்கிக்காட்டணும்ன்னு நினைக்கிறான்… அவனை நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லிருங்க… ஆனா ஒண்ணு… என்னைக் கல்யாணம் பண்ணா அவன் உயிருக்கு உத்தரவாதம் இல்லன்னு சொல்லிட்டு சொல்லுங்க…

“என்ன அமிழ்தா ரொம்ப பேசுற… இதுவா உனக்குப் பார்க்குற முதல் சம்பந்தம்? இதோட எத்தனாவது? நீ சொன்னங்கறதுக்காகத்தான் நல்ல நல்ல சம்பந்தத்தையெல்லாம் தட்டிக்கழிச்சோம்… ஏதோ இந்தப்பையன் விடாப்பிடியா இருக்கானேன்னு கேட்டா… உனக்குப் பின்னாடி ஒரு தங்கச்சி இருக்கா… அவளுக்கும் வயசு ஏறுதுங்கற நினைப்பு இல்லயா?” அவளது தாய் படபடவெனப் பொரிந்தார்…

அவளுக்கு அவர் சொல்வது புரிந்தது… ஆனால் தன்னை ஏன் யாருமே புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்றிருந்தது…

உதட்டைக் கடித்து அழுகையை அடக்கியவள், சரிம்மா சாரி… இந்த சம்பந்தத்தைப் பேசி முடிங்க… என்று போனை வைத்துவிட்டுப் படுக்கையில் போய் விழுந்தாள்… அவளுக்கு எதற்காக அழுகிறோம் என்றே தெரியாமல் அழுகை பொங்கி வந்தது. கடந்த இரண்டு வருடமாகவே அவளுக்கு இது அடிக்கடி நிகழ்வதுதான்… எதற்காகவோ அழுவாள்… ஆனால் எதற்கு அழுகிறாள் என்று தெரியாது… எதையோ இழந்தது போல இருக்கும்… ஆனால் எதை இழந்தோம் என்று தெரியாது… அழுதழுது ஓய்ந்தவள் அப்படியே தூங்கிப்போனாள்…

*************************************************************

வானத்திலிருந்த இருளை வெறித்தபடி தன் கல்லறையின் மேல் படுத்திருந்தான் அருளாளன்… இரண்டு வருடங்களாகி விட்டது… இரண்டு வருடங்களுக்கு முன் இதே இடத்தில் இதே நாளில் ஐ லவ் யூ மிஸ்டர் கோஸ்ட் என்று பூவை நீட்டியவளை நினைத்துப் பார்த்தான் அவன்… நினைக்க வேண்டிய அவசியமில்லை… மறந்தால்தானே… ஆனால் அவன் மறக்க வேண்டும் என விரும்பினான்… அவளது நினைவுகளிலிருந்து அவனை அழிக்க அவனுக்கு ஒரு நிமிடம் போதுமானதாயிருந்தது… ஆனால் அப்படி அவனது நினைவுகளிலிருந்து அவளை அழிக்கும் வழி அவனுக்குத் தெரியவில்லை… அவன் இறந்துபோகும்போதும் அதற்குப்பின்னரான இரண்டு வருடங்களிலும் இதை விட வேறு என்ன துன்பம் வந்து விடப்போகிறது என்று தான் எண்ணியிருந்தான்… ஆனால் அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்னும் அளவிற்கு துன்பத்தைக் கொடுக்கும் வலிமை காதலுக்கு உண்டென்று அவன் அறியவில்லை… அனுபவிக்கும்போதுதான் தெரிந்தது… இருளையே வெறித்து வெறித்து வெறுத்துப் போனவன், கண்களை மூடினான்… ஒருவேளை கண்ணீர் இருக்குமாயின் கடைவிழி வழி படர்ந்தொழுகி அவனது கல்லறை முழுவதும் இந்நேரம் அது படர்ந்திருக்கும்…. அதற்கும் வழியன்றி கனத்துப்போன மனதோடு கண்மூடிப்படுத்திருந்தவனின் காதில்  ஒருகுரல் கேட்டது…

“மன்னவனே அழலாமா?
கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க,
என்னுயிராய் நீயிருக்க…
கண்ணை விட்டுப் போனாலும் கருத்தை விட்டுப் போகவில்லை…
மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை…” என்று பாடியது அந்தக்குரல்.

திகைத்துப்போய் எழுந்தமர்ந்தவனின் முன்னால் “ஹாய் மிஸ்டர் கோஸ்ட்…” என்று குதூகலமாய்க் கையசைத்தபடி நின்றாள் அவனது அமிழ்தா.

                                                                                                                         
                                              (தொடரும்…)

3 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *