Skip to content
Home » சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்

இருளையே வெறித்து வெறித்து வெறுத்துப் போனவன், கண்களை மூடினான்… ஒருவேளை கண்ணீர் இருக்குமாயின் கடைவிழி வழி படர்ந்தொழுகி அவனது கல்லறை முழுவதும் இந்நேரம் அது படர்ந்திருக்கும்….
அதற்கும் வழியன்றி கனத்துப்போன மனதோடு கண்மூடிப்படுத்திருந்தவனின் காதில் ஒருகுரல் கேட்டது…

“மன்னவனே அழலாமா?
கண்ணீரை விடலாமா?
உன்னுயிராய் நானிருக்க…
என்னுயிராய் நீயிருக்க…
கண்ணை விட்டுப் போனாலும்
கருத்தை விட்டுப் போகவில்லை…
மண்ணை விட்டுப் போனாலும்
உன்னை விட்டுப் போகவில்லை… “
                  
                    என்று பாடியது அந்தக்குரல்.

திகைத்துப்போய் எழுந்தமர்ந்தவனின் முன்னால் “ஹாய் மிஸ்டர் கோஸ்ட்…”
என்று குதூகலமாகக் கையசைத்தபடி நின்றாள் அவனது அமிழ்தா.

தான் காண்பது கனவா நனவா என்றிருந்தது அவனுக்கு…
ஆனால் அவனுக்கு எப்படி கனவு வரும்? கற்பனையில் வாழுமளவுக்கும் அவன் இன்னமும் ஸ்திரமற்றுப் போகவில்லை… ஆனால் இவளுக்கு எப்படி நினைவு வந்தது? அவன் அவள் மேல் செலுத்திய சக்தி சாதாராணமானதல்லவே…
ஆயுளுக்கும் அவளுக்கு அவனது நினைவு வராதபடிதானே செலுத்தினான்…
எண்ணமிட்டுக்கொண்டே போனவன் திகைத்தான்…
ஆயுளுக்கும்…
அப்படியென்றால்?

அதிர்ச்சியோடு அவளை நோக்க,
“என்ன மிஸ்டர் கோஸ்ட் அப்படி பார்க்கறீங்க? பாட்டுப் பாடுறேன்னா? சினிமாலலாம் பேய்ன்னா பாட்டுப்பாடும்ன்னு சொல்லிட்டாங்களா? ஆனா அதுல வர்ற பேய்ங்களை மாதிரி எனக்குத் தானா கவிதை எழுதி கம்போஸ் பண்ணில்லாம் பாடத் தெரியாததனால அவங்க எழுதி வச்சுருக்கறதையே பாடிட்டு இருக்கேன்…” என்றபடியே அமிழ்தா அவனது அருகில் வந்தாள்.

“அமி…”

“என்னடா நொமி…” கன்னத்தில் அறையொன்று விழுந்தது…

“ஆ…”

“என்ன வலிக்குதா? பேய்க்குப் பேய் உணர முடியுமாம்…
வர்ற வழியில நீ என்னை இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வச்சுப் பயமுறுத்தினியே ஒரு அக்கா… அவங்கக்கிட்ட விசாரிச்சுட்டுத்தான் வந்தேன்…
ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம என்னோட மெமரிஸ்க்கு டெலிட் பட்டன் கொடுத்துட்டுப் போயிருப்ப?
இவர் பெரிய தியாகச்செம்மலு… எங்கிருந்தாலும் வாழ்கன்னு சோககீதம் வாசிச்சுட்டுப் போயிருவாரு…
நாங்க மட்டும் எல்லாத்தையும் மறந்துட்டு எவனையோ கல்யாணம் பண்ணிட்டுக் குடித்தனம் நடத்தணுமா?”

அவள் அடிக்க, அதைப் பொருட்படுத்தாமல் அடித்த கையைப் பிடித்தவன், எழுந்து
” நீ உடனே என்கூட வா… “என்று அந்தக் கையைப் பிடித்து இழுத்தான்…

“டேய்… எங்கடா இழுக்கிற…”

” வா அமி… நான் நீ பேயா இருக்க வேண்டிய ஆண்டுகளையும் சேர்த்து இருந்துக்கறேன்னு ஒப்புக்கிட்டா உன்னை உன் உடலோட சேர்த்துரலாம் அதுக்குத்தான் கூப்புடுறேன்.. வா…”

“டேய்.. நீயே இன்னும் ஐம்பது வருஷம் பேயாச் சுத்தணும்… இதுல என்னோட கணக்கும் ஐம்பதையும் சேர்த்து நூறு வருஷம் பேயாச் சுத்தப்போறியா? அடச்சை…கையை விடு…”

“ச்சு…உனக்கு முன்னாடி எத்தனை வருஷம்ன்னாலும் பெரிசில்ல… உன் உடலை அழிக்கறதுக்கு முன்னாடி போயாகணும்… வா… “என்றபடி அவளைத் தரதரவென்று இழுத்தான்…

அவனது இழுப்புக்குச் சென்றவாறே,” டேய் நான் சொல்றதைக் கேளு…” அவள் சொல்லி முடிக்கும்முன்னரே இருவரும் அவளது வீட்டில் இருந்தனர்…

ஆனால் அருளாளன் எதிர்ப்பார்த்தபடி வீட்டில் கூட்டமோ அமிழ்தாவது உடலோ இல்லை… குங்குமமும் சந்தனமும் வைக்கப்பட்ட அவளது புகைப்படம் மட்டுமே மாலையோடு இருந்தது…
அதன் முன்னர் விளக்கு எரிந்துகொண்டிருக்க, அதிர்ச்சியுடன் அமிழ்தாவை நோக்கினான்…

அவனிடமிருந்து கையை உருவியவள், “என்உடலை எரிச்சு அந்தச் சாம்பலைக் கரைச்சு இன்னையோட இருபத்திரண்டு நாளாச்சு மிஸ்டர் கோஸ்ட்… “என்றாள் அமைதியாக…

திகைப்புடன் கண்களைச் சுழற்றியவனது பார்வை, அங்கே இடிந்து போய் அமர்ந்திருந்த அவளது தந்தையிடம் சென்றது.
அவருடைய வேதனை படிந்த முகத்தைக் கண்டு மனதில் பாரம் பரவ, அவன் அதிர்ச்சி கலையாமல் நிற்கும்போதே சந்தனா அங்கே வந்தாள்…
தட்டில் உணவெடுத்து வந்தவள், தந்தையிடம் கொடுத்து சாப்பிடுங்கப்பா என்றாள்..
மறுக்காமல் வாங்கியவர் அம்மா சாப்டாளாடா? என்றார்…
இப்பதான்பா சமாதானப்படுத்தி சாப்பிட்டுத் தூங்கவச்சுருக்கேன்…

மௌனம் நேரத்தை விழுங்க,
அவர் ஒருவாய் கூட உண்ணாமல் உணவை அளைவதைப்பார்த்துக்கொண்டே இருந்த சந்தனா அப்பா என்றழைத்தாள் மென்மையாக..

கலங்கிய கண்களோடு ஏறிட்ட ஞானசேகரன், “இப்படியாகும்ன்னு தெரிஞ்சுருந்தா சின்னவயசுல அவ பயந்துஅழுதப்பவே அவளுக்கு நீச்சலே கத்துக்கொடுத்துருக்காம இருந்துருப்பேன்டா “என்றார்…

அப்பா… சந்தனாவுக்கும் குரல் தழுதழுத்தது… அந்தக்குரலைச் செருமி சரிப்படுத்தியவள், “அப்பா என்ன பேசறோம்ன்னு உணர்ந்துதான் பேசறீங்களாப்பா? நீங்க நீச்சல் கத்துக்கொடுக்காம இருந்திருந்தா நம்ம அக்கா உயிரோட இருந்திருப்பா… ஆனா ஒண்ணு இல்ல… ரெண்டு இல்ல… 67 உயிர் போயிருக்கும்ப்பா… இப்ப நம்ம குடும்பம் அழுகற மாதிரி 67 குடும்பம் அழுதுட்டுருந்திருக்கும்… அதைத் தடுத்து நிறுத்திருக்காப்பா… அதுக்கு நாம பெருமைதான் படணுமே தவிர, அழக்கூடாதுப்பா… நாம அழுதா அக்காவும் கஷ்டப்படுவாப்பா… ப்ளீஸ்ப்பா… சாப்பிடுங்கப்பா…”

அவர் அழ அழ  மெல்ல மெல்ல சமாதானப்படுத்தி தந்தைக்குத் தன்கையாலேயே ஊட்டி முடித்தவள், அவரையும் தூங்க அனுப்பி விட்டு, தட்டோடு சமையலறைக்குள் சென்றாள்…

தட்டை சிங்கில் போட்டுவிட்டுக் கையைக் கழுவியள்,
அதற்கு மேல் தாங்கமாட்டாமல் சுவற்றோடு சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
தாய்தந்தைக்கு அழுகைச்சத்தம் கேட்காமல் இருகைகளாலும் வாயை மூடியவள் அப்படியே அமர்ந்து அழுகையைத் தொடர,

அதைக் காண இயலாமல் அருளின் தோளில் முகம் புதைத்த அமிழ்தா
“அருள்… ப்ளீஸ் அருள்… என்னால முடியல அருள்… என்னை இங்கயிருந்து கூட்டிட்டுப் போ அருள்.. “என்றாள் அழுகை கலந்த குரலில்.

வலியோடு  அவளைத் தோளோடு அணைத்தவன், கண்ணை மூடித்திறக்க, இருவரும் ஏதோ ஒரு சாலையோரத்தில் இருந்தனர்…
அமி… என்றழைத்தான் மென்மையாக…

நிமிர்ந்தவள், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “இருபது நாளா இதைப் பார்க்க முடியாமத்தான் அருள் உன்னைத் தேடி வந்தேன்… அம்மாவையும் அப்பாவையும் தேத்திட்டுச் சந்தனா தனியா யாருக்கும் தெரியாம அழுகிறா அருள்… எனக்குச் சின்னவயசுல இருந்து அவ அழுதாலே தாங்காது… எப்படியாவது அழுகையை நிறுத்திருவேன்… ஆனா இப்ப முடியல அருள்… அதைவிட அப்பாம்மா… “என்றபடி மீண்டும் விசும்பலோடு அவனது தோளில் முகம் புதைத்தாள்…

“சரிடா…சரிடா… “என்று அவளது கூந்தலை வருடிவிட்டு அவளைச் சமாதானப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தாலும் அருளாளன் மனதில் வேறோர்  எண்ணம் ஓடி அவனை அரித்துக்கொண்டிருந்தது…

வெகுநேரம் கழித்து ஒருவாறு மனதைத் தேற்றி நிமிர்ந்து அருளாளனின் முகத்தைப் பார்த்த அமிழ்தா திகைத்தாள். எண்ணிலடங்கா கவலையும் வருத்தமும் சோகமும் அதில் தோய்ந்திருந்தது…

“அருள்…அருள்… “அவனைப் பற்றி உலுக்க, திடுக்கிட்டுத் தெளிந்தவனின் கண்களில் வலி நிறைந்திருக்க,
“என்னாச்சு அருள்” என்றாள்.

“ஒருவேளை நான் உன்னோட நினைவுகளை அழிக்காம இருந்திருந்தா… நீ கேட்டமாதிரி உன் கூடவே இருந்திருந்தா உன்னைக் காப்பாத்திருக்கலாம்ல அமி…” கேட்டவனது குரலிலும் வலி நிறைந்தோடியது.

“அருள்… நீ பண்ணதுலயே அதிகபட்ச நல்ல காரியம் அதுதான்… நீ ஒருவேளை என்கூட இருந்திருந்தா இப்ப வலிக்கறதை விட அதிகமா வலிச்சிருக்கும் அருள்…. ஏன்னா நீ என்கூட இருந்திருந்தாலும் உன்னால என்னைக் காப்பாத்திருக்க முடியாதுதான…”

அருளாளன் கேள்வியாகப் பார்க்க,

“ஆமா அருள்… மறந்துட்டீங்களா? நீங்க இறந்தது நெருப்புல… உங்களால நெருப்பை ரொம்ப எளிமையா கட்டுப்படுத்த முடியும்… ஆனா நான் இறந்துபோனது ஆத்துவெள்ளத்துல… தண்ணி நெருப்புக்கு நேரெதிர்… அதை எப்படி உங்களால கட்டுப்படுத்திருக்க முடியும்? “

“ச்ச்… அமி… நான் நேரா இறங்கிதான் காப்பாத்தணுமா? பக்கத்துல உதவிக்காவது யாரையாவது வரவைச்சுருக்கலாமே…”

“அருள்…” நிதானமாக அழைத்தவள்,
” நான் ஆத்துல குதிச்சப்ப அங்க ரெண்டு பயர் சர்வீஸ் வண்டியும் ஆம்புலன்ஸூம் இருந்தது…” என்றாள் நிதானமாகவே…

என்ன? அதிர்ந்தவன், இருந்தும் உன்னை எப்படி காப்பாத்தாம விட்டாங்க? என்றான்.

“அந்த ஆறு ரொம்ப ஆபத்தான ஆறு அருள்… இறங்கனவங்க யாரும் பிழைச்சதில்லன்னு தான் சொல்வாங்க… சும்மாவே அப்படி…
அன்னைக்கு ரொம்ப வெள்ளம் வேற வந்துட்டு இருந்தது…
கரையோர பகுதிகள்ல இருக்கற மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றிட்டு,
பாலத்து மேல நின்னு சோதனை பண்ணிட்டு இருக்கறப்பதான் ஒரு ஸ்கூல்வேன் ஆத்துக்குள்ளப் பாய்றதைப் பார்க்க முடிஞ்சுச்சு… வேன் கட்டுப்பாட்டை இழக்கறதைத் தெரிஞ்ச டிரைவர் இந்த சைட் குதிச்சுத் தப்பிச்சுட்டான்… ஆனா அதுல இருந்த ஸ்டூடன்ஸால தப்பிக்க முடியல… நல்லவேளையா வேன் ஆத்துக்கு நடுவில இருக்கற ஒரு பழங்கால மண்டபத்துல முட்டிமோதி நின்னுருச்சு… ஆனா வேன் அடிச்சுட்டுப் போயிருந்தா கூடக் காப்பாத்திருக்கலாம்… அந்த மண்டபத்துக்கிட்ட யாரும் போக முடியாது… சுழல் ரொம்ப வரும்… காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்க… மீறி கரைவழியா கயிறுகட்டி இறங்குன நாலுபேரை ஆறு கயித்தோட சேத்து அடிச்சுட்டுப் போயிருச்சு… அதுக்கப்பறம்தான் துணிஞ்சு வேற யாரும் வேணாம்… நானே போறேன்னு போனேன்… சின்னவயசுல ஊர்ப்பக்கம் அப்பா ஆத்துல தான் நீச்சலே கத்துக்கொடுத்துருந்தாங்க… நீச்சல் நல்லாவே வரும்… சில சுழல்லயும் கூட சிக்கி மேல நீந்திவந்துருக்கேன்… ஆனா அந்த மாதிரி ஒரு ஆறைப் பார்த்ததே இல்ல… அதோட பிரவாகத்துல போராடி அத்தனைக் குழந்தைகளைக் காப்பாத்துரதுக்குள்ளயே உயிர் போயிருச்சு…” என்றலுத்தவள், பின் சிரித்து “நிஜமாவே உயிர் போயிருச்சு… கடைசியா உன்னைக் காவு வாங்கிக்கிறேன்னு தான் அத்தனை பேரைக் காப்பாத்தவே விட்டுச்சு போல” என்றாள் சிரித்தபடியே…

அவளது கண்களில் வலி சிறிது கூட இல்லை… ஏதோ தோழியுடன் விளையாடிவிட்டு வந்தது போல சொன்னாள். அதுசரி அவள் என்றைக்குமே விசித்திரமானவள்தானே..

ஆனால் அருளாளனது கண்களில் இன்னும் வலி போகவில்லை…

அதைப்பார்த்தவள்,
“நீங்களே யோசிச்சுப்பாருங்க அருள்… என்கூடவே இருந்தும் என்னைக் காப்பாத்த முடியாம நீங்க நின்றிருந்தா அந்த நிலைமை எப்படி இருந்திருக்கும்? புரிஞ்சுக்கோங்க அருள்… நடந்ததை நினைச்சு வருத்தப்படாதீங்க அருள்…”

“இறந்த பிறகாவது என்னைக் கூப்புட்டுருக்கலாமே அமி… என் ஞாபகம் வந்திருக்குமே… எப்படியாவது உயிர்ப்பித்திருக்கலாமே…” ஆதங்கத்தோடு கேட்டான்.

சற்று நேரம் அமைதிகாத்தவள்,

“எனக்கு இறந்தவுடனே உங்க முகம்தான் அருள் முதல்ல நினைவு வந்தது… உங்கக்கிட்ட வரணும்ன்னுதான் நினைச்சேன்… ஆனா நீங்க இப்படி ஏதாவது பண்ணிருவீங்கன்னுதான் எல்லாச்சடங்குக் காரியமும் முடிச்சு, இவ்வளவுநாள் கழிச்சு வந்தேன்…”

” லூசாடி நீ… உன்குடும்பம் எவ்வளவு வருத்தப்பட்டாங்கன்னு பார்த்ததான… சை…” என்று காற்றில் கையை உதறியவன், அங்கிருந்த கல் ஒன்றில் போய் அமர்ந்தான்.

அவனது அருகில் அமர்ந்தவள், அருள் என்றழைத்தாள்…

அவன் கோபத்துடன் முகத்தை அந்தப்பக்கம் திருப்பினான்…

அருள்… ப்ளீஸ் திரும்புங்க…

ம்ஹீம் அசையவில்லை…

அவனது கன்னத்தைப் பற்றியவள், தன்புறம் திருப்ப முயன்றாள்.
அவளது கையைத் தட்டிவிட்டுவிட்டு ஒரு முறை முறைத்தவன், மீண்டும் அந்தப்பக்கம் முகத்தைத் திருப்பினான்.

“அருள்… நான் சொல்றதைக் கேளுங்க அருள்… என் குடும்பம் ரொம்ப கஷ்டப்படுவாங்கதான்… ஒத்துக்கிறேன்.. ஆனா அவங்களால அதுல இருந்து மீண்டு வரமுடியும் அருள்… உங்க அருணாவே சக்தியை தன்னோட மகனா ஏத்துக்கிட்டு முடிஞ்சளவு நிம்மதியா இல்லயா? மேகலா? அவளுக்கு உங்க மேல எவ்வளவு பாசம்? அவ மெல்ல மெல்ல உங்களோட இறப்புல இருந்து மீண்டு வந்து தன்னோட வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிக்கலயா? விவேகன்? உங்கம்மா பத்மினி? உங்களை வளர்த்த அப்பா அம்மா? அவங்களுக்கெல்லாம் உங்க மேல பாசம் இல்லயா? இல்ல அவங்களாம் இப்ப நிம்மதியா இல்லயா? மேகலாவாலயும் உங்கப்பாம்மாவாலயும் முடிஞ்சது சந்தனாவாலயும் எங்கப்பாம்மாவாலயும் முடியாதா? அவங்களுக்கு நம்மளோட நினைவுகள் இருக்கத்தான் செய்யும்.. அவங்களால நம்மளை மறக்க முடியாது… ஆனா அவங்களால இதுல இருந்து மீண்டு வாழ முடியும்.. ஆனா நான்? உங்களை மறந்துருந்த இந்த ரெண்டு வருஷத்துல கூட எதைப் பறிகொடுத்தேன்னே தெரியாம…எதையோ பறிகொடுத்த மாதிரியே தான் இருந்தேன் தெரியுமா? எனக்கு எதிலயுமே ஒரு பிடிப்பு வரல… இத்தனைக்கும் நான் ஒண்ணும் நானாப் போய்ச் சாகலயே… எனக்கு வந்த சாவைத்தான ஏத்துக்கிட்டேன்… திரும்ப உயிரோட போயிருந்தாலும் என்னைக்குனாலும் திரும்பி சாகத்தான போறேன்… “

பேசிவிட்டு உணர்ச்சியுடன் சில நொடி அவனது முகத்தைப் பார்த்தவள், “இவ்வளவு பேசியும் நீ இப்படியே உட்கார்ந்துருந்தனா நான் உன்கூட இருக்கது உனக்குப் பிடிக்கலன்னு நினைக்கிறேன்.. நான் தனியாவே இருந்துக்கறேன்..விடு” என்று எழுந்தாள்…

ஆனால் அவளால் செல்லமுடியவில்லை… அவளது கை அமர்ந்திருந்த அருளாளனின் கைப்பிடியில் இருந்தது…

அவன் கையைப்பிடித்திருப்பதைத் தெரிந்தாலும் திரும்பாமல் அப்படியே நின்றாள் அவள்,
அருளாளன் எழுந்து அவளருகில் வந்தான். இப்பொழுது இவள் முகத்தைத்திருப்பினாள்…
அவன் இவளது கன்னத்தைப் பற்றித் திருப்பினான்…
தட்டிவிட்டாள்…

“அமி…
என்னைக்குனாலும் சாகத்தானப் போறேன்னு சொல்ற… திருமணம்,குழந்தைங்கன்னு வாழ்ந்து அனுபவிச்சு சாகிறதுக்கும் இப்படி பாதியில இறந்து போறதுக்கும் வித்தியாசம் இல்லயா அமி” என்றான்.

“இருக்கு அருள்… ஆனா எவனையோ கல்யாணம் பண்ணி உயிரோட இருக்கறதுக்கும்… செத்துப் பேயா அலைஞ்சாலும் உன்கூட இருக்கறதுக்கும்மான வித்தியாசம் உனக்குப் புரியலயா அருள்? நான் உயிரோட இருக்கறதவிட உன்கூட இருக்கறதுதான் அருள் எனக்குப்பிடிக்கும்… அதை ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்குற?” என்றாள் ஆதங்கத்துடன்…

எதுவும் சொல்லாமல் அவளை அணைத்தவன் அவள் தலையை மென்மையாகத் தடவிவிட அவனது நெஞ்சத்தில் ஐக்கியமானவளின் மனதில் வெகுநாட்களுக்குப் பிறகு நிம்மதி விரவியது…

வெகுநேரம் கழித்து, அவனது அணைப்பிலிருந்து விடுபட சிறு முயற்சி கூட செய்யாமல் சுகமாக சாய்ந்தபடியே, “நான் கூட இருக்கறது பிடிக்காதவங்க கூடல்லாம் நான் இருக்க மாட்டேன்… நான்போறேன்… என்னை விடுங்க..” என்றாள்…

“அதைக் கொஞ்சமாவது நிமிர்ந்து சொல்லிருந்தா நம்பிருப்பேன்” என்றான் அருளாளன் நகைகலந்த குரலில்.

அந்தக்குரலில் கொத்துவதற்காக சிலிர்க்கும் கோழிபோல நிமிர்ந்து முறைத்தாள் அவள்…

அவள் முறைப்பதைப் பார்த்துச் சிரித்தவன் என்ன என்றான் புருவம் உயர்த்தி…

“நான் போறேன்…”

“போ…”

அவனை மீண்டும் முறைத்தவள், விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்…

அவளது பின்னாலேயே வந்தவன், “ஆனா நானும் கூட வர்றேன்… “என்றான்.

அதில் நின்றவள், அவனைப் பார்த்து முறைக்க முயன்று தோற்றுச் சிரித்தாள்…

அவனும் வெகுநாட்களுக்குப்பின் மனமார சிரித்தபடி அவளிடம் கையை நீட்ட அவள் தனது கையை அவன் கையில் வைத்தாள்…

அந்த இருளையும் இரவையும் வழக்கம்போல தன்னவனையும் ரசித்தபடி அவன் கைகோர்த்து நடந்துவந்து கொண்டிருந்தவள், சற்று நேரம் கழித்து அவனிடம் கேட்டாள்…

“ஆமாம் மிஸ்டர் கோஸ்ட் அந்த நாகாபரணத்தையும் கமிஷனரையும் என்ன பண்ணீங்க?”

” இந்த நேரத்திலதான் அவனுங்களை ஏன் ஞாபகப்படுத்துற…”

“சும்மா சொல்லுங்க மிஸ்டர் கோஸ்ட்…”

“அவனுங்க ரெண்டு பேரும் என்ன பண்ணானுங்க?”

” ம்ம்.. கமிஷனர் மேகலா கோமாக்குப் போனதுக்கு காரணம்…”

“அப்ப அந்தாளும் கோமாக்குத்தான போகணும்…”

“அருள்… அப்ப நாகாபரணத்தை நரபலி கொடுத்துட்டீங்களா? “அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“சை… இல்ல… மனநலம் சரியில்லாத குழந்தைகளைத்தான அவன் அப்படி பண்ணான்…”

” அதனால”

“அதனால…பைத்தியமாக்கிட்டேன்… ஆனா மேகலா சந்தோஷமா வாழ ஆரம்பிக்கவும் கமிஷனரை மன்னிச்சு சரியாக்கிட்டேன்.. ஆனா அந்த நாகாபரணத்தை மன்னிக்க என்னால முடியல அமி… “

அமிழ்தா அவனை ஒரு பார்வை பார்த்தாள்…

“என்ன அமி?”

“ஆக்சுவலி நீ கொடுத்தது ரொம்ப சின்ன தண்டனை… பேசாம வா…”

மேலும் சற்றுநேரம் அமைதியாக நடக்க, இப்பொழுது அருளாளன் கேட்டான்…

“ஆமாஅமி… ஒரு நாலு பேரை ஆறு இழுத்துட்டுப் போச்சுன்னு சொன்னல… என்னானாங்க? “ஒரு சிறுபதட்டத்தோடு கேட்டான்.

“கரையில பேச்சுமூச்சு இல்லாம ஒதுங்கிருந்தாங்க அருள்… நான் இறந்ததுக்கப்பறம் காப்பாத்திட்டேன்…” அமைதியாகச்சொன்னவளைப் பார்த்து அழகாய்ச்சிரித்தான் அருளாளன்…

சில வருடங்கள் கழித்து…

வழக்கம்போல அந்த இருளையும் தன் அருளையும் ரசித்தபடி அவனின் கையோடு கைகோர்த்து நடந்தபடி வந்த அமிழ்தாவிடம் அவளவன் கேட்டான்…
“அமி…”

“சொல்லுங்க மிஸ்டர் கோஸ்ட்…”

“ஏன் நமக்குச் சம்பந்தப்பட்;ட எந்த ஊர்கள்லயும் இருக்க வேண்டாம்ன்னு சொன்ன?”

“ஆமா அருள்… நம்ம குடும்பம் மெல்ல மெல்ல துக்கத்துல இருந்து மீண்டு சந்தோஷத்துக்குப் பழையபடி மாறத்தொடங்கியிருக்காங்க… சந்தனாவுக்கும் விவேகனுக்கும் நல்ல வேலை கிடைச்சுருச்சு… ரெண்டுபேருக்கும் (நீங்க தனித்தனியான்னு நினைச்சுக்கிட்டாலும் சரி.. இல்ல அவங்க ரெண்டு பேருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டாலும் சரி உங்க இஷ்டம்…) கல்யாணம் பண்றது குறிச்சு வீட்ல பேசிட்டு இருக்காங்க… சக்தி, மேகலைக்கு ரெண்டு அழகான குழந்தைங்க… வீட்ல பெரியவங்க எல்லாரும் நிம்மதியா இருக்காங்க… நாமளும் இப்ப அவங்களை விட்டுக் கொஞ்சம் விலகி இருக்கறதுதான் அருள் நல்லதுன்னு எனக்குத் தோணுது… அதுக்காக அவங்களை அப்படியே விடச்சொல்லல… நல்லது நடக்குறப்ப நம்ம துணையும் ஆபத்து வர்றப்ப நம்ம பாதுகாப்பும் அவங்களுக்கு இருக்கும்… மத்தபடி நாம நம்ம பழைய விஷயங்கள் சம்பந்தப்பட்ட ஊர்கள்ல இருக்க வேண்டாம்ன்னுதான் சொன்னேன்…”

“அதுவும் சரிதான் அமி” என்றபடி அருளாளன் நடக்க,

அமிழ்தா “அதுசரி மிஸ்டர் கோஸ்ட் இது எந்த ஊரு? ” என்றாள்…

“தெரியல அமி… சும்மா காத்துப் போற திசையில தான வந்தோம்…”

“ஆமால…எந்த ஊரா இருந்தா நமக்கென்ன?” என்றவள்,
‘போவோமா ஊர்கோலம்’ என்று பாட ஆரம்பித்தாள்…

“அமிம்மா… “என்று அருள் இடையிட்டான்…

“என்ன அருள்…” என்றுவிட்டு மீண்டும் பாட ஆரம்பித்தாள்…

“செல்லம்மா…” என்றான் அவன் மீண்டும்…

“என்ன மிஸ்டர் கோஸ்ட்?”என்று விட்டு அவள் மீண்டும் பாட ஆரம்பித்தாள்…

“கண்ணம்மா..” என்றான் இப்போது…

“என்னடா…” என்று பாடுவதை நிறுத்தி அவனை முறைத்தாள்…

“இல்ல…நாமதான் செத்துட்டோம்… நல்லநல்ல பாட்டையல்லாம் கொலை பண்ணனுமா? வேண்டாமே ப்ளீஸ் தயவு செஞ்சு பாட மட்டும் செய்யாத…”

“அடேய்… என் குரல் ஒண்ணும் அவ்வளவு மோசம்லாம் இல்ல…”

“உன்குரல் மோசம்ன்னு நான் சொல்லவே இல்லையே… நீ பாடுறதைக் கேக்க முடியலன்னுதான் சொன்னேன்…”

“நான் நல்லாத்தான் பாடுவேன்… ஸ்கூல்ல ப்ரைஸ்லாம் வாங்கிருக்கேன் தெரியுமா?”

” அந்தப்போட்டியில கலந்துக்கிட்டதே 3 பேர்தான்னும் நீ வாங்கினது 3வது பிரைஸ்ன்னும் நீ ஏற்கனவே என்கிட்ட சொல்லிருக்க அமி.. “என்றான்.

“சை… இவன்கிட்ட இப்படி சங்கத்து ரகசியத்தை எல்லாம் சொல்லிட்டு அசிங்கப்படுறோமே” என்று தலையிலடித்தவள்,
அவன் அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க. அவனை முறைத்துவிட்டு அங்கிருந்த வேப்பமரம் ஒன்றில் ஏறி அதன் கிளையில் அமர்ந்தாள்.

அவனும்  ஏறி அவள் அருகில் அமர்ந்து அவள் தோளில் இடித்தான்…

அவள் எதுவும் பேசாமல் அவனை ஒருமுறை முறைத்துவிட்டு கைகளைக் கட்டிக்கொண்டு எதிர்ப்புறம் பார்த்தாள்…

“கோபமா இருக்கீங்களா மேடம்?” அவள் திரும்பவில்லை…

அவள் முகத்தைத் திருப்ப கையை அருகே கொண்டு போனான்…
அவனது கையைத்தட்டிவிட்டு மீண்டும் அவனை முறைத்தவள்,
நன்றாகத் தள்ளி அமர்ந்தாள்…

“ரொம்ப தேங்க்ஸ் அமி ”  என்றவன் அவளது மடியில் அப்படியே படுத்தான்…

கொலைவெறியாய் முறைத்தவள்,
“கீழே தள்ளிவிட்டுருவேன் எழுந்திரிடா” என்றாள்…

“தள்ளிவிடு… ” என்றான் அலட்சியமாக…

அவனை அவள் மீண்டும் முறைக்க, அவன் கண்ணடித்துச் சிரித்தான்…
முறைப்பு மறைவதைத் தடுக்க இயலாதவள், அதை மறைக்க, அவனை படபடவென்று அடித்தாள்…

“என்னை பிராடுபிராடுன்னு சொல்லிட்டு நீதான்டா பிராடு வேலையெல்லாம் பார்க்கிற… “அவளது கைகளைப் பிடித்தவன் , “ஏன்டி அடிக்கிற… அதான் சிரிப்பு வந்துருச்சுல்ல சிரிச்சுத் தொலையேன்… “அவன் சொன்னதில் சிரித்துவிட்டாலும் அவனை மீண்டும் அடித்தாள்…

அவர்கள் தங்கள் செல்லச்சண்டையைத் தொடர்ந்துகொண்டிருக்க, திடீரென ஒரு சத்தம் கேட்டது…

அடிப்பதை நிறுத்திவிட்டு அமிழ்தா சத்தம் வந்த திசையை நோக்க, அவளது மடியிலிருந்து எழுந்த அருளாளனும் அதே திசையைப் பார்த்தான்…
இருவரது கண்களிலும் கூர்மை ஏற இருவரும் ஒரே நேரத்தில் திரும்பி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

    (தொடரும்… ஆனால் இப்போதல்ல…)

    🖤 ‘சுடுகாட்டில் தென்றல் வீசினால்’ 🖤
       
           🖤🖤🖤நிறைவுற்றது 🖤🖤🖤

6 thoughts on “சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்”

  1. Kalidevi

    தொடரும் potu irukinga thrupi next season varuma intha story superb ah irunthuchi story climax different ending cute couples avanukaga ava sagala nalum eranthu rendu serthu vachi irukinga arul um avan ninaipu iruka kudathunu panitu poi irukan antha vsli therinji. Nice nice congratulations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *