சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரினுள் அமர்ந்திருந்த அமிழ்தாவின் கண்கள் வழக்கம் போல அந்த நகரை அளவெடுத்துக் கொண்டிருந்தன.
சுவரெங்கும் போஸ்டர்களையும் தெருவெங்கும் ஆளுயர பேனர்களையும் கண்டவள் முன் சீட்டில் அமர்ந்திருந்த தன் உதவியாளரிடம் ‘மிஸ்டர். பிரதாப் என்னதிது சிட்டிக்குள்ள இவ்ளோ பேனர்ஸ் ? இது ஆபத்தானதுன்னு தெரியல… இன்னைக்கு ஈவ்னிங்குள்ள எல்லா பேனர்ஸையும் அகற்றச் சொல்லுங்க’ எனக் கட்டளையிட்டாள்.
ஒரு நிமிடம் தயங்கிய பிரதாப்,அவள் கேள்வியாக நோக்க ,’ அது அருணாச்சலம் சார் சம்பந்தமான பேனர்ஸ் மேடம்… ‘ என்றார்.
அவளுடைய நினைவில் “அந்த அருணாச்சலம் இருக்கும் வரை உங்க கடமைய உங்களால ஒழுங்கா செய்ய முடியாது” என்றவனின் முகம் வந்து போனது…
“இருந்தா என்ன? ரூல்ஸ மீறி எந்த பேனர்ஸ் ம் இன்னைக்கு சாயங்காலம் நான் பாக்குறப்ப இருக்கக் கூடாது. அதுக்கான வேலையைப் பாருங்க… ” கட்டளையிட்டுவிட்டு, மீண்டும் ஜன்னல் புறம் தன் பார்வையைச் செலுத்தினாள் .
மறுத்துப் பேச முடியாத அந்தக் குரலில் சில நொடிகள் செய்வதறியாது அவளது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த பிரதாப் திரும்பி அமர்ந்தார்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதிலோ நேற்றைய இரவின் நினைவுகள் வந்து மண்டின.
கலெக்டர் மனைக்குப் போக வேண்டும் எனக் கூறியவுடன் அந்த ஆட்டோக்காரனும் முந்தைய ஆட்டோக்காரர்களைப் போலவே பேய்விழி விழித்து விட்டு வண்டியை அதிவேகத்தில் கிளப்பிச் செல்ல,
“சை… இதோட மூணாவது… இப்படியே எல்லாரும் போய்கிட்டுக் கிடந்தா நான் எப்ப போய்ச்சேர்றது? ” வாய்விட்டுப் புலம்பியவள் ,
“விடிஞ்சிரும்” என்றொரு ஏளனக்குரல் கேட்கப் படாரெனத் திரும்பினாள்.
அங்கே ஒருவன் நின்றிருந்தான். கண்களில் தெரிந்த ஏளனம் அந்த ஏளனக்குரலுக்குச் சொந்தக்காரன் என்பதை முரசம் இல்லாமல் அறிவித்தது.
ஆனால் அவனுடைய முகத்தில் ஏதோவொரு ஒளி…இல்லை…பிரகாசம்…இல்லை…தேஜஸ்…
ஏதோவொன்று…
வித்தியாசமானதாகத் தெரிந்தது.
அந்த இரவு அந்த இருளிலும் அவனை நம்பலாம் என உள்ளுணர்வு கூற அமிழ்தா அவனை நோக்கி நடந்தாள்.
அதற்குள் அவளின் அருகில் வந்தவன் “என்ன கலெக்டர் மேடம்? நான் கூட உங்கள என்னமோன்னு நினைச்சேன். இப்படி ஊருக்குள்ளேயே போகத் தெரியாம திண்டாடிகிட்டு இருக்கீங்க? சரி வாங்க போலாம். “என அவளுடைய பெட்டிகளை இழுத்தபடி நடக்கத் தொடங்கினான் அவன்.
அவனுடைய நக்கலில் கடுப்பானவள் “ஹலோ மிஸ்டர் யாரு நீங்க? என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? ” அவனைப் பின்தொடர்ந்தவாறே கேட்டாள்.
அவன் நின்று நிதானமாகத் திரும்பினான்.
“உங்களுக்கு இதெல்லாம் தெரியணுமா? இல்ல வீடு போய்ச்சேரணுமா? “
“ரெண்டுமே”
“அப்ப நீங்க வீடு போய்ச் சேர முடியாது…
விடியுறவரைக்கும் இப்படியே நில்லுங்க” தூக்கியிருந்த பெட்டியை டம்மெனப் போட்டுவிட்டு எதிர்த்திசையில் நடந்தான்.
அவனது செயலில் கோபம் சுர்ரென ஏற கடுப்படைந்தவள் சுற்றிப் பார்த்தாள்…
ஆளரவமே இல்லை…
ஆட்டோவைத் தேடி மெயின் ரோட்டிற்கு வருகிறேன் பேர்வழி என்று எங்கோ வந்து தொலைத்திருந்தாள்.
சற்று யோசித்துப் பின் “ஏய் ஏய் மிஸ்டர் ஒண்ணும் கேட்கல,வீட்டுக்கே கூட்டிட்டுப் போங்க”கூவினாள்.
அவனோ தூரத்தில் திரும்பிப் பாராமல் நடந்து போய்க்கொண்டிருந்தான்.
மணியையும் சூழலையும் பார்த்தவள் அவனுக்கும் அவளுக்குமான தூரம் கூடத் தொடங்கவே,
மானத்தை விடுத்து ‘ப்ளீஸ்..ப்ளீஸ் சார்…ப்ளீஸ்…’ என்று கத்தி விட்டாள்.
அவனின் நடை வேகம் மெல்லக் குறைந்தது. திரும்பி வந்து பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
குனிந்து பெட்டிகளை எடுக்கும்போது தலையை மட்டும் நிமிர்த்தி அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது…
“என்னடா லுக்கு. கண்ணைத் தோண்டி காக்காய்க்குப் போட்டுருவேன்” மனதிற்குள் பொருமியபடி வெளியே நல்லபிள்ளையாக அவனைப் பின்தொடர்ந்தாள்.
ஐந்து நிமிடம் அமைதியாக நடையில் கழிய,
“இன்னும் எவ்ளோ தூரம் போனா வண்டி கிடைக்கும். ?”என்றாள் அமிழ்தா.
“ஹலோ நீங்க போக வேண்டிய இடத்துக்கு வழிதான் காட்டமுடியும். வண்டியெல்லாம் பிடிக்க முடியாது. “
“அப்ப எப்படி போறது. ? “
“இப்ப எப்படி போறோமோ அப்படி “
“நடந்தா? “
“ஆமா “
“அவ்ளோ பக்கமா ?எவ்ளோ நிமிசம் ஆகும்? ” அவள் அப்பாவியாகக் கேட்க,
“பெருசா ஒண்ணுமில்ல ஒரு ஒன்றரை மணி நேரம் நடந்தா போதும். ” கிண்டலை உள்ளடக்கிய குரலில் பதில் வந்தது.
“என்னது…..? “
அவள் அதிர்ச்சியில் தனக்குள் நகைத்தபடி நடந்தான் அவன்.
மீண்டும் ஒரு ஐந்து நிமிட அமைதி நடை…
இம்முறையும் அதனைக் கலைத்தவள் அமிழ்தாவே.
“உங்க பேரு என்ன? “
மீண்டும் ஒரு பார்வை …
தலை தாழ்த்தியவள்
“இல்ல நீங்க கொஞ்சம் ஸ்பீடா நடக்கிறீங்களா? அதான் என்னால உங்க வேகத்துக்கு நடக்க முடியல…பேசிக்கிட்டே நடந்தா அலுப்பு தெரியாதுன்னு…”
“ஓ… நடக்கலாமே…” நிதானமாக நடந்து கொண்டிருந்தவன், இப்பொழுது உண்மையாகவே வேகமாக நடந்தான். அவள் கிட்டத்தட்ட இப்போது ஓட வேண்டியிருந்தது.
நடந்து கொண்டே, ‘வாங்க அமிழ்தா பேசலாம்… பேசுனா அலுப்புத் தெரியாதுல்ல … வாங்க வாங்க… ‘கிண்டலாகவே அழைத்தான்..
அவளோ பதில் பேசாமல் அவனை முறைத்தபடி மைண்ட் வாய்சில் சவுண்ட் விட ஆரம்பித்தாள்.
‘சும்மா இருந்தவன சுரண்டி விட்டுட்டோமோ…
இவன் என்ன இவ்வளவு பெரிய பெட்டியைத் தூக்கிட்டு இவ்ளோ வேகமா நடக்குறான்…
மனுஷனா இல்லையா? ‘
“இல்ல…”
டக்கென பதில் வர மைண்ட் வாய்சை நிறுத்திவிட்டு
“என்ன இல்ல?” என்றாள்.
“இல்ல… மனுஷனா இல்லையான்னு கேட்டியே அதான் மனுஷன் இல்லன்னு சொன்னேன்… “
அவனுடைய ஒருமையில் கோபமடைந்தவள் “மிஸ்டர் மரியாதையா பேசுங்க…” என்றாள்…
“அத யார் சொல்றது “
மீண்டும் அவன் நிதானமாகப் பார்த்து வினவ,
‘நம்ம மைண்ட் வாய்ஸ்ல தான பேசினோம்… ஒருவேளை சத்தம் வெளியே கேட்டுருச்சோ’
என மீண்டும் மைண்ட் வாய்ஸில் புலம்பியவள்,
“ஆமாம்… ” என அவன் சொல்ல ,
“என்னாது மறுபடியுமா?… “
இப்போது வெளிப்படையாகவே அதிர்ந்தாள்…
அவளது அதிர்ச்சியைக் கண்டு அவன் மெல்ல நகைத்தான்.
அவன் சிரிப்பதைக் கண்டவள்
“சீ… இப்படி அசிங்கப்பட்டுட்டோமே… இவனை ஏதாவது டேமேஜ் பண்ணனுமே ” என யோசித்தாள்.
அவளது எண்ணவோட்டத்தை அறிந்தவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது…
“ஓ… கிவ் அன்ட் டேக் பாலிசியா? பேய் சார்… ஓகே பேய் சார்… ” என இப்போது அதிர்வது இவன் முறையாயிற்று…
‘என்ன சடன் பிரேக் போட்டு ஷாக் ஆகுறான்… பேய்ன்னு சொன்னதுல கடுப்பாயிட்டானோ … ‘
மனதில் நினைத்தபடி அவன் முகத்தைப் பார்த்தவளுக்கு அதில் கோபத்திற்கான தடயம் எதுவும் தென்படவில்லை…
அவன் மீண்டும் நடக்கத் தொடங்க,
‘என்ன பேய்ன்னு திட்டுறோம்…ஒண்ணும் சொல்லாம போறான்…இவனை வெறுப்பேத்தனுமே ‘ திட்டம் தீட்டியவள்
“பேய் சார் பேய் சார் … என்னோட அறிவுத்திறனைப் பார்த்துத் தான
வியந்து போயிட்டீங்க…? “
“……….. “
“எப்படி நீங்க மனுஷன் இல்லைன்னு சொன்னதும் உடனே பேய்ன்னு கண்டுபிடிச்சேன்னு தான வியந்துட்டீங்க.. ” எனவும்
மீண்டும் நின்று ஆழமாக அவளைப் பார்த்தான்…
‘என்ன இப்படி பாக்குறான்… கடுப்பாயிட்டானோ… ‘
தனக்குள் பேசியவள் ,
அவனிடம் “என்ன பேய்சார் என்னோட புத்திசாலித்தனத்தை மெச்சுறீங்களா? ” என,
“இல்லை நீயெல்லாம் எப்படி கலெக்டர் ஆனன்னு பார்த்தேன்… ” அலட்சியமாகச் சொன்னபடி நடந்தான்.
“எக்ஸாம் இன்டர்வியூ எல்லாம் பாஸாகி டிரைனிங்க் முடிச்சு தான் சார் … சாரி… பேய் சார்…ஆனேன்…ஏன் பேய் சார் உங்களுக்கு இந்த டவுட்டு”
“ம்ம் உன்னைப் பார்த்தா கலெக்டர் மாதிரி தெரியல… “
“காலெஜ் கேர்ள் மாதிரி இருக்கா பேய் சார்? “
“இல்ல கிண்டர் கார்டன் பாப்பா சாரி பீப்பா மாதிரி இருக்கு… “
முறைத்தவளுக்கு உள்ளூர ஆச்சரியமாகத் தான் இருந்தது…
அவளுக்கு நெருக்கமானவர்களைத் தவிர யாரிடமும் அவள் வாயடித்ததே கிடையாது… முதல்முறையாகப் பார்க்கும் இவனிடம் இப்படி வம்பிழுப்பது…
அதேபோல் அவளுடைய பதவி தெரிந்த அறிமுகமற்றவர்கள் யாரும் அவளிடம் இப்படி பேசியதே இல்லை…
இவன் ஏதோ புதிதாகத் தெரிந்தான்… இவனிடம் வம்பிழுப்பது அவளுக்குப் பிடித்திருந்தது…
“ஹலோ மிஸ்டர் கோஸ்ட் (Ghost) … நான் ஒரு கலெக்டர் ஞாபகம் இருக்கட்டும்… ” என்றாள் மிடுக்காக.
பதில் பேசாமல் புன்னகையுடன் நடந்தவன், சில நொடி அமைதிக்குப் பின்
“பயமா இல்லையா?” என மென்மையாகக் கேட்டான்.
நக்கலாகச் சிரித்தவள்
“ஹலோ என்ன ஒரு பேச்சுக்கு உங்கள பேய்ன்னு சொன்னா நிஜமாவே பேய்ன்னு நினைச்சுட்டேன்னு நினைச்சீங்களா? உங்க மூஞ்சியெல்லாம் பாத்தா பேய் மாதிரியா இருக்கு. இதுல இவரைப் பாத்து நாங்க பயப்பட வேற செய்யணுமாம் ” என மேலும் கலகலவென நகைத்தாள்.
அவனே என்ன ரியாக்ஷன் கொடுப்பதெனத் தெரியாமல் திருதிருவென முழிக்க அதைப் பார்த்து மேலும் சிரிப்பு வந்தது…
அவளது சிரிப்பைக் கண்டு அவனும் சிரித்து விட பின் இருவரும் மென்நகையுடன் நடந்தனர்…
இரவுநேரத் தென்றல் வருட அவனுடனான நிதானநடை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது… அவள் அந்தச் சூழலை ரசித்தபடி நடக்க,
மெதுவான குரலில்
“நான் அப்படி கேக்கல… இந்த ஊரு… கலெக்டர்கள் பற்றிய வதந்தி…பேய் நடமாட்டம்…இதெல்லாம் நினைச்சு பயமா இல்லையா… ” என்றான்.
“எதுக்குப் பயப்படணும்?”கழுத்திலிருந்த செயினை வருடியபடி நிதானமான குரலில் கேட்டாள் அவள்…
அவன் பதிலொன்றும் சொல்லாமலிருக்க அவள் தொடர்ந்தாள்,
“நான் இங்க வந்துருக்கிறது என்னோட கடமையைச் செய்ய… அத ஒழுங்காக செய்யும் போது நான் யாருக்குப் பயப்படணும்? “
“கடமையை ஒழுங்கா செஞ்சீங்கன்னா வேற எதுக்கும் பயப்பட வேண்டாம்….என்றவன் சற்று இடைவெளி விட்டு ஆனால் அருணாச்சலத்துக்கு மட்டும் பயப்பட வேண்டி வரும்” என்றான் சிலநொடி அமைதிக்குப் பின்.
“வாட்?யார் அந்த அருணாச்சலம்? அவர் யாராவே இருந்தாலும் நான் ஏன் அவருக்குப் பயப்படணும்?” கேள்வி அலட்சியமாக வந்து விழுந்தது.
அவளின் கேள்வியில் விரக்தியாகச் சிரித்தவன்
“அந்த அருணாச்சலம் இருக்கும் வரை உங்க கடமைய உங்களால ஒழுங்கா செய்ய முடியாது…
உங்க கடமையை ஒழுங்கா செஞ்சீங்கன்னா அந்த அருணாச்சலத்துக்குப் பயப்படணும்…”என்றான்.
“பயப்படலைன்னா? “
“மரணத்துக்கும் பயப்படக் கூடாது…”
என்றவனின் உறுதியான குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது.
“மரணத்துக்குமே எதுக்குப் பயப்படணும்? ” அவனை ஆழமாகப் பார்த்துத் தெளிவாகக் கேட்டாள் .
அவனுக்கு மெய்யாகவே அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை…
அவனது நிலையைக் கண்டு புன்னகைத்தவளின் பதில் தெளிவாக வந்தது…
“மனுஷனோட அதிகபட்ச பயமே மரணம்தான்…
ஆனா அவன் பயப்படுறாங்கறதுக்காக அது வராம இருக்கப் போறதில்ல… எப்படின்னாலும் வந்துதான் தீரப்போகுது…
அது அப்படி வந்துருமோ இப்படி வந்துருமோன்னு எவ்வளவு பயந்தாலும் அது எப்படி வரணுமோ அப்படி வரத்தான் போகுது…பிறகு அதுக்காக பயப்பட வேண்டிய தேவைதான் என்ன? … “
இப்பொழுது மனதிற்குள் நிஜமாகவே அவளை மெச்சினான் அவன்…
மேலும் சில நிமிடங்கள் அமைதியில் கழிய,
“என்ன மிஸ்டர் கோஸ்ட்?
நான் கூட ஏதாவது பேய் ஸ்டோரி சொல்லி திகில் கிளப்புவீங்கன்னு நினைச்சா நீங்க கிரைம் ஸ்டோரி சொல்லிகிட்டு போரடிச்சுட்டு இருக்கீங்க…” எனச் சூழலின் இறுக்கத்தைக் கலைத்தாள்.
மென்னகை புரிந்தவன், “இனி எந்த ஸ்டோரியும் தேவைப்படாது. வீடு வந்துருச்சு ” என்றவன் அவளை வீட்டினுள் அழைத்துச் சென்று ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு விடைபெற்றான்.
“தேங்க்ஸ் மிஸ்டர் கோஸ்ட், இப்பவாது நீங்க யாருன்னு சொல்லலாம்ல,” என்றாள்.
மறுப்பாகத் தலையசைத்தான்.
“அட்லீஸ்ட் பேர் மட்டுமாவது பேய் சார்” சலுகையாகக் கேட்க,
ஒன்றுமே சொல்லாமல் வெறுமனே புன்னகைத்தபடியே கிளம்பினான் அவன்…
(தொடரும்…)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Apo athu pei thana
Interesting👍