அமிழ்தாதான்…
இப்பொழுது பத்மினியின் கண்கள் இவளைக் கேள்வியாக நோக்கின.
“வாங்க கலெக்டர் மேடம்.உங்களுக்கும் என் பையனுக்கும் என்ன சம்பந்தம்?” அருணாச்சலமும் கேள்வியைத் தொடுத்தார்.
“உங்க பையனா? யார்??? யார் உங்கப்பையன்?” அமிழ்தாவின் குரல் குழப்பத்தைப் பிரதிபலித்தது.
“இதோ இங்க இருக்கானே அரசு இவன்தான் என் பையன் இவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?” கட்டிலில் படுத்திருந்த சக்தியைக் கைகாட்டிட, “இது அரசன்,சக்தியரசன்…என் பிரெண்ட்.இவனையா நீங்க உங்கப்பையன்னு சொல்றீங்க? ”ஆச்சரியமாய் எதிர்க்கேள்வி கேட்டாள்.
“ஆமாம் ஏன் என்பையனை நான் என்பையன்னு சொல்லக்கூடாதா?” அழுத்தமாய் மற்றொரு எதிர்க்கேள்வி வந்து விழுந்தது.
“இ…இ…ல்ல…, ஆனா இவனோட…வந்து இவனுக்கு அப்பா அம்மா கிடையாது. ஆசிரமத்துல தான் வளர்ந்தான்.நீங்க தப்பா புரிஞ்சுருக்கீங்கன்னு நினைக்கிறேன். இவனை எனக்குச் சின்ன வயசுல இருந்து நல்லாத்தெரியும்.”
“சின்ன வயசுன்னா? எத்தன வயசு?”
” பத்து வயசுல இருந்து .”
அருணாச்சலத்தின் உதடுகள் அலட்சியமாகப் புன்னகையில் வளைந்தன.
“பத்து வயசுல நேரா வானத்துல இருந்து குதிச்சுட்டானா? அதுக்கு முன்னாடி பத்து வருசமா அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை இருந்துருக்கும்ல…அதப்பத்தி உனக்குத் தெரியாதுதான?”
யோசனையோடு அமிழ்தாவின் தலை ஒப்புதலாய் அசைந்தது.
“ஆனா நீங்க எப்படி அரசனை உங்கப்பையன்னு சொல்றீங்க?”
“அரசன்ங்கிற பேரை வச்சுத்தான்…”
அமிழ்தாவிற்கு ஏதோ புரிவது போலும் புரியாதது போலும் இருக்க, பத்மினியின் குரல் கோபத்துடன் குறுக்கிட்டது.
“நம்ம பையனுக்கு நாம வெறும் அரசன்னு மட்டும் பேர் வைக்கலங்க.அவனுக்கு வச்ச பேர் அருளரசன்…முதல்ல அது ஞாபகம் இருக்கட்டும்.அடுத்தது வெறும் பேரை மட்டும் வச்சு எப்படி ஒருத்தனை நம்ம மகன்னு சொல்லமுடியும்ன்னு நீங்க எங்கிட்ட ஏற்கனவே ஒரு கேள்வி கேட்டுருக்கீங்க. அதே கேள்வியை இப்ப நான் திரும்பக்கேக்குறேன்.வெறும் பேரை மட்டும் வச்சு எப்படி இவனை நம்ம மகன்னு சொல்றீங்க?”ஆக்ரோஷமாய் கேள்விகள் சீறின.
“நீ யாரை மனசுல வச்சுட்டு இந்த பேச்சு பேசுறன்னு தெரியுது.அந்த அருளாளன தான?.”
“ஆமா அவனைத்தான் சொல்றேன்.அரசன்ங்கிற பேரை வச்சு நீங்க இவனை நம்மப்பையன்னு சொன்னா,நானும் அருள்ங்கிற பேரை வச்சு சொல்லுவேன் அவன்தான் நம்மப்பையன்னு”
அருகில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பேசன் தெறித்து விழுந்தது.
அதில் அதிர்ந்து பேச்சை நிறுத்திய பத்மினியை நோக்கி, அத்தனைக் கோபத்தையும் உள்ளடக்கிய சீறலாக அருணாச்சலத்தின் அமைதியான குரலும் தெறித்து விழுந்தது.
“அவன் என்னோட பையன்னா இருக்க முடியாதுன்னு உனக்கு எத்தன தடவை சொல்றது? என் பையனோட பேரை வச்சுருக்கவனெல்லாம் என் பையனா மாறிருவானா? இன்னொரு தடவை…”
“அதேதான் நானும் கேக்குறேன்… என் பையன்னோட பேரை வச்சுருக்கான்ங்கறதுக்காகக் கண்ட நா…”
அருணாச்சலத்தின் அத்தகைய சீறல் அவரின் உச்சபட்ச கோபத்தின் அறிகுறி.இதுவரை அந்தச்சீறலை பத்மினி எதிர்த்ததில்லை.ஆனால் ‘எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமல் விட்டுவிட்டோமா’ என்று மனதிற்குள் குமைந்து கொண்டிருந்த பத்மினியின் குரல் இன்று உயர்ந்துவிட, இதுவரை பத்மினியை நோக்கி உயர்ந்திடாத அருணாச்சலத்தின் கையும் உயர்ந்துவிட்டிருந்தது.
“ஏய்…”
“அப்பா ஒரு நிமிஷம்…” உயர்ந்த கையை சக்தி பிடித்திருந்தான்.
அவனின் அப்பா என்ற அழைப்பில் அருணாச்சலத்தின் கை தானாக இறங்கிட அவரின் உணர்வுகள் ஏறியிருந்தது.
அமிழ்தாவை ஒருபார்வை பார்த்தவன் “நம்ம வீட்டு விஷயத்தை சில துரோகிங்க முன்னாடி பேசுறது எனக்குப் பிடிக்கல.அவங்களை முதல்ல வெளில போகச்சொல்லுங்க”என்றான்.
அவனுடைய துரோகி என்ற வார்த்தையில் துடிதுடித்துப்போன அமிழ்தா, “அரச…”எனத்தொடங்க “சக்தி” என எச்சரித்தவன்,
“அப்பா போகச்சொல்லுங்கப்பா” எனக்கத்த,
“சக்தி நான் சொல்றத…சார் நீங்களாவது நான் சொல்றத..”.என்ற அமிழ்தாவின் சொற்களைக் காதில் வாங்காமல் “என் பையனுக்குப் பிடிக்காதவங்க யார் பேச்சும் எனக்குத் தேவையில்ல” என்றவாறு அவளைக் கிட்டத்தட்டத் தரதரவென இழுத்து வந்து அறையை விட்டு வெளியே தள்ளினார் அருணாச்சலம்.
‘இவற்றையெல்லாம் இது என்ன புதுநாடகம்’ என்பது போல பார்த்திருந்த பத்மினியை நோக்கி ஒரு வறட்டுப்புன்னகை புரிந்தவன், அவருடைய கைகளைப் பற்றி திருப்பினான்.
“உங்கப்பையனோட பேரை வச்சுருக்க கண்ட நா…யெல்லாம் உங்கப்பையனா ஆகமுடியாதுதான்.”
அவருடைய வலது கையில் இருந்த ஆழமான தீக்காயத்தை மென்மையாக வருடியவன்,
“ஆனா யாரைக் காப்பாத்துறதுக்காக இப்படி உங்க கையெல்லாம் சுட்டுத் தழும்பா மாறிப்போச்சோ அவனுமாம்மா உங்கப்பையனா ஆகமுடியாது. நீங்க அப்படி யாருக்காக உயிரைக் கூடப் பொருட்படுத்தாம தீயில இறங்குனீங்களோ அவனுமாமா உங்கப்பையனா ஆகமுடியாது.அந்த விபத்துல இதோ இந்த தீக்காயத்தை தோளில வாங்குன நானுமாம்மா உங்கப்பையனா ஆக முடியாது.”
எனத் தன்னுடைய சட்டையைக் கழற்றியவனின் தோளில் காணப்பட்ட தழும்பைப் பார்த்த பத்மினியின் கண்கள் அதிர்ச்சியை உள்வாங்கின.
கண்கள் கலங்க அதை மெல்ல வருடியவர் மேலே கழுத்தோரத்தில் இருந்த மச்சத்தையும் சேர்த்தே வருடியவாறு அருணாச்சலத்தைப் பார்க்க, அவருடைய கண்களும் கலங்கிதான் இருந்தது.
கைகளைப் பின்னால் கட்டியவாறு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தவர் பத்மினியைப் பார்த்துப் பார்த்து வருத்தமான புன்னகை ஒன்றைச் சிந்தினார்.
அது இத்தனை வருட வலியையும் இந்தக் கணத்தின் மகிழ்ச்சியையும் இணைத்துப் பிரதிபலித்தது.
பத்மினியின் முகமும் அதையே பிரதிபலிக்க சக்தியை உச்சிமுகர்ந்து நெற்றியில் முத்தமிட்டவர் அருணாச்சலத்தை நோக்கி, “ஸாரிங்க… ” எனவும்
இருவரையும் இணைத்து அணைத்த அருணாச்சலத்தின் பெருமூச்சு அவருடைய நிம்மதியைக் காட்டியது.
வெளியே அருணாச்சலத்தால் தள்ளப்பட்ட அமிழ்தா தடுமாறி விழப்போக, அவளை இருகரங்கள் விழாமல் அணைத்துத் தாங்கியிருந்தன.
(தொடரும்…)
Interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super