Skip to content
Home » தாயன்பு

தாயன்பு

காலை ஐந்து மணி.


செம்பரிதி செந்நீராய் செவந்து செம்மையாய் செவ்வானில் சீராய் பரவிடும் அதிகாலை நேரப்பொழுதில் விடியல் தொடங்கிட நிலவன் துயில் கொள்ள மெல்ல செம்பரிதியின் செவ்வொளியில் தன்னை மறைத்து கொண்டான். பறவை இனங்களும் தங்களின் இருப்பை விடியலில் உற்சாகமாக பாடிக்கொண்டே பறந்திட்டன.

அதிகாலை குளிரும் ஊதகாற்றும் உடம்பில் ஊடுருவி சிலிர்ப்பை ஏற்படுத்திட வீட்டின் கதவை சாற்றி பூட்டி விட்டு வெளியேறினாள் ரூபி. சற்றுமுன் அவளது கணவன் நேகோன் குழந்தைகள் ஜோனிஸ் டெய்சியை அழைத்துக்கொண்டு நடந்துக்கொண்டிருந்தான் பேருந்து நிலையத்திற்கு. நேகோனின் தமக்கை குழந்தைக்கு ஞானஸ்நானம் வழங்கும் விழா நடைபெறுவதால் வெளியூரில் இருந்து முன்தினம் தான் வந்திருந்தான்.

கங்கனாகுளத்திலிருந்து திங்கள்நகர் தாண்டி அரைமணி நேர பயணத்தில் இருக்கும் தமக்கையின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவ்வளவு தொலைவு குழந்தைகளை வைத்துகொண்டு ரூபிக்கு செல்ல மனமில்லை தன்னவனுக்காக செல்ல ஆயத்தமாயிருந்தாள்.

பேருந்து தூரமாக வரும் போதே கூட்டமாக வந்தது. முகூர்த்த நாளால்லவா? பரிசினை ஒரு கையிலும் எட்டு வயது ஜோனிஸை ஒரு கையிலும் பிடித்து கொண்டு ஏறினாள். நான்கு வயது டெய்சி நேகோனிடம். நின்று கொண்டு பயணிப்பது ரூபிக்கு சிரமமாக இருந்தது. அவளின் நிலையறிந்து ஒரு நன்மனிதர் ‘உட்காருங்கள்’ என்று எழுந்து கொள்ள அமர்ந்தாள். அவரின் நிறுத்தம் வர நேரமும் இருக்கவே அங்கேயே நின்றார்.

பேருந்தின் ஆட்டத்தில் தெரியாமல் அருகிலிருக்கும் பெண்ணின் தோள் மீது இடித்திட அப்பெண் வசவுகளை பரிசளிக்க விரக்தி புன்னகையுடன் படிக்கட்டு அருகில் நின்றார். ‘உன்னால் தான் காலையிலேயே அந்த மனிதர் பேச்சு வாங்கினார் இப்படி வருவதற்கு வீட்டிலேயே இருந்துருக்கலாம்’ என்று மனம் இடிந்துரைத்தது. சில மனிதர்களின் தவறான செய்கையால் நன்மனிதர்கள் மேலும் சேறு தூற்றபடுகிறதே…

அடுத்தடுத்த நிறுத்தத்தில் பயணிகள் இறங்கிட நால்வரும் ஒரே சீட்டில் அமர்ந்து தற்படங்களை எடுத்துக்கொண்டு பேசி சிரித்துக்கொண்டு எடுத்து வந்திருந்த பண்டங்களை கொறித்துக்கொண்டு என்று நேரம் இனிமையாக சென்றது. வடசேரியில் இறங்கியவர்கள் அடுத்து திங்கள் நகரிலிருந்து ஆட்டோவில் போய் ஆலயத்தில் இறங்க ஞானஸ்நானம் விழாவே முடிந்திருந்தது. நான்கு மணி நேர பிரயாண களைப்பு தான் மிஞ்சியது.

தமக்கை டல்சி வரவேற்றவள் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்துபசரித்தாள். குழந்தைக்கு வாங்கிய பரிசுகளை வழங்கி கொஞ்சினார்கள். ஐஸ்கிரீம் விருந்துணவில் பரிமாறியதில் டெய்சி ஆசையுடன் உண்டிருக்க ஒவ்வாமையால் வீசிங் வர ஆரம்பித்தது. ரூபி துடித்தே போனாள். உடனே கிளம்ப எத்தனித்தவர்களிடம் டல்சி வந்து


“சாயங்காலம் போ மோனே உடனே கிளம்பினா என்ன சொல்வாய்ங்களோ” என்றுரைக்க முறைத்தவன் ரூபி குழந்தைகளுடன் வெளியேறினான். வழக்கமாக செல்லும் மருத்துவமனை வீட்டிற்கு போகும் வழியிலிருக்க அங்கு சென்று மருத்துவரை அணுகினால் அவர் ‘இத்தனை மணி நேர பிரயாணம் சிறு குழந்தைக்கு தேவையா?’ என்று கடிந்து கொண்டே மருந்து எழுதி கொடுத்தார்.
நேகோன் வருந்தியவன் உடனே ஊருக்கு கிளம்பியிருந்தான். ஜோனிஸ் நேகோன் உடனடியாக கிளம்பி சென்றதால் அழ ஊசி போட்டதால் டெய்சியும் அழ தன் மனபுழுக்கத்தை வெளிப்படுத்தும் வழியறியாது ஆட்டோ பிடித்து வீட்டிற்கு கிளம்பினாள் ரூபி.

இருவருக்கும் உணவளித்து மருந்து புகட்டி சமாதானம் செய்து படுக்கையில் அமர வைத்தவள் வழமை போல் வேதாகமம் எடுத்து வாசிக்க ஆரம்பிக்க பிள்ளைகள் கேட்டிருந்தனர்.


“அம்மா பெற்றோருக்கு கீழ்படிறதுனா என்ன?” ஜோனிஸ்.


அந்நேரம் அலைபேசி ஒலிக்க அழைப்பையேற்று ஓரமாக வைத்தவள்

“அம்மா அப்பா எது சொன்னாலும் தங்கள் நன்மைக்கேனு புரிந்து கொண்டு நம்பிக்கையோடு அதனை மனதார செய்வதுமா” என்றாள்.


“ஏன்மா? எங்களுக்கு பிடிச்சமாதிரி நாங்க எதுவுமே செய்ய கூடாதா?”


“குழந்தைகளுக்கு எது சரி எது தவறுனு பகுத்தறிய தெரியும் வரைக்கும் பெத்தவங்க நாங்க உங்களுக்கு கைட் பண்வோம்டா”


“சரிம்மா” என்றபடி படுத்துக்கொண்டனர் இருவரும்.


அலைபேசியை எடுத்து காதில் வைத்தாள்.


“இதலாம் அவங்களுக்கு புரியுமா? டெய்லி இப்படி ஏதாவது சொல்ற” நேகோன்


“குழந்தைகளுக்கு சின்னதுலேயே இப்படி சொல்லி கொடுக்கும் போது அவங்க தவறான பாதையில் போக மாட்டாங்க. பசுமரத்தாணி போல மனசுல ஆழமா பதிஞ்சிருக்கும்”


“என்னவோ சொல்ற”


“குடும்ப விழுமியங்களின் முக்கியத்துவமே யாருக்கும் புரியமாட்டிக்குங்க. குடும்பம்ன்றது புனிதமான உறவுகள் அடங்கிய அன்பால் இணைக்கப்பட்ட பசை. அந்த அன்பு குடும்பத்தை ஒற்றுமையா இருக்க வைக்கும் புரிஞ்சிக்க வைக்கும்…


…அன்பு வெறும் வார்த்தையில் வெளிவரகூடாது செயல்ல காட்டனும் அது அக்கறையா இருக்கலாம் ரெஸ்பெக்ட் கொடுக்கிறதா ரெஸ்பான்ஸ் எடுக்கிறதாவும் இருக்கலாம்…


…பரஸ்பர அன்பு பரஸ்பர மரியாதை ஒபிடியன்ஸ் இருந்தா தான் அதை பாத்து வளரும் குழந்தைங்க பின்னாளில் அதை பாலோ பண்வாங்க”


“குழந்தைகள் தானா வளருவாங்கடி”


“கடவுள் கொடுத்த வெகுமதி தான் குழந்தைகள். குழந்தை வளர்ப்பு ஒரு ஆழமான பொறுப்பு. அதிலிருக்கும் சவால்கள் சந்தோஷங்கள் வலிகள் அறிவுரைகள் கைடன்ஸ் எல்லாம் அம்மாக்கு மட்டும் கிடையாது அப்பாக்கும் சமமான பங்குண்டு. எந்நேரமும் அதைபற்றி பசங்களோடு பேசனும். பெத்தவங்க நாம முறையா சொல்லி கொடுத்து வளத்தா சரியான வழியில் போவாங்க”


“சாரிடி நான் நாளைக்கே வரேன் நானும் இனி தாய் தான் பசங்களுக்கு” இருவரும் மறுநாள் விடியலுக்காக மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர்.


முற்றும்.

2 thoughts on “தாயன்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *