தீயாகிய தீபம்
1
விக்னேஸ்வரன் என்னும் விக்கி தனது கைப்பேசியைப் பார்த்தபடி தன்னையே தொலைத்திருந்தான். ருத்ரா அவள் கண்களில் தான் என்னவொரு மயக்கும் சக்தி.
இன்னும் இரண்டு நாட்களில் இவன் மனைவியாகப் போகிறவளின் புகைப்படத்தை கைப்பேசியில் கண்டுதான் சொக்கி போயிருந்தான். அவளுடன் பேச வேண்டுமென்ற என்ற தன் ஆசையை அடக்கினான். இன்னும் இரண்டே நாட்கள் தானே…
இது எப்படி சாத்தியம் ஆயிற்று? தன்னையே பலமுறை கேட்டுக் கொண்ட வினாவை மீண்டுமாய் கேட்க … கீற்றாய் புன்னகை உதித்தது.
நம் கதையின் நாயகன் விக்கி வயது 27 சுருள்சுருளான முடி இல்லை அவ்வப்போது ஹேர்ஸ்டைல் மாற்றுவான். பார்க்க ஆறடி போல இருப்பான் ஆனால் உயரம் அதுவல்ல அதற்கும் சற்றே குறைவு.
விக்கி தந்தை விஸ்வநாதன் பெரும்பாலும் விசு என்றே அழைக்கப்படுவார். தனியார் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவர். தாய் கோதாவரி வங்கியில் பணிபுரிபவர்.
விக்கியின் அக்கா அபர்ணா அவள் கணவன் ரவி. அத்தம்பதியினருக்குப் பவன் என்றொரு ஆண் குழந்தை. தன் அம்மா கிழித்த கோட்டை அந்த ராமனே வந்து கட்டளை இட்டாலும் இந்த ரவி தாண்ட மாட்டான். அத்தனை அம்மா பக்தி.
பல ஆண்டுகளுக்கு முன் விசு கடனை வாங்கி காலி மனையில் தனி வீட்டைக் கட்டினார். இரண்டு படுக்கையறை கொண்ட தனி வீடு.
அவ்விடம் சென்னைக்கு மிக மிக மிக அருகில் இருந்தது என்று கூற மட்டும் செய்யலாம். கூகுள் மேப் பிரபலம் ஆகாத காலம் அதனால் கிரக பிரவேசத்திற்கு நண்பர்களும் உறவினர்களும் தட்டுத் தடுமாறிச் சென்றடைந்தனர். (கூகுள் இருந்தால் மட்டும் இந்த இடத்தை கண்டுபிடித்திருக்கும் … ம்கூம் வாய்ப்பே இல்லை)
“இத்தனை தொலைவில் வீடு கட்டணுமா?” என சில உறவுகளின் முணுமுணுப்புகள் காதை அடைந்தாலும். விசு கோதாவரி கண்டு கொள்ளவில்லை.
வாடகை வீட்டில் பல தொந்தரவுகள் எதிர்கக் கொள்ள வேண்டியிருந்தது. “என்னடா வாழ்க்கை எனப் புலம்ப வைத்தது” நடுத்தர வர்க்கத்திற்கே உண்டான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று.
“இங்க ஆணி அடிக்காதீங்க”
“குடித்தண்ணி குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும்தான்” என குடிதண்ணீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத குறையாகத் தண்ணீர். ஆனால் செயல்பாடு என்னவோ சொட்டுநீர் பாசனத்தைப் போல.
உரிய மின் கட்டணத்திற்கு மேல் வசூல்
அவ்வப்பொழுது வாடகை தங்கத்தின் விலை போல ஏறியது. (ஆனால் ஒரு ரூபாய் குறையவில்லை)
இவற்றையெல்லாம் சகிக்க முடியாமல் தான் சொந்த வீடு கட்டினர். குழந்தைகளுக்கு பள்ளி கொஞ்சம் தூரம்தான் இருப்பினும் ஏதோ ஒன்றை விட்டுக் கொடுக்கத்தான் வேண்டியிருந்தது.
அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை எனத் துணிச்சலாக வீடு வாங்கிவிட்டனர். வாடகை தருவதை வங்கியில் ஈ.எம்.ஐ ஆகக் கட்டி விடலாம் எனத் திட்டம் தீட்டினர்.
புது வீட்டிற்கு கிருகப்பிரவேசம் செய்கையில் பன்னிரண்டு வயது சிறுமி அபர்ணா பச்சை பட்டுப் பாவாடை இரட்டைச் சடை என வீட்டை வளைய வந்தாள். அவளை விட மூன்று வயது சிறுவனான தம்பி விக்கியுடன் விளையாடினாள். இருவருக்கும் அன்று பள்ளிக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதில் இன்னுமே சந்தோஷம்.
சுட்டித்தனமும் குறும்பும் குத்தகைக்கு எடுத்தது போல இரண்டு குழந்தையும் வானரத்தின் மறுவுறுவாய் விளங்கியது.
அடுத்த ஆறு மாதத்தில் அக்கா பெரிய மனுஷி ஆகிட்டா என போனில் அம்மா யாரிடமோ சொன்னது விக்கி காதில் விழுந்தது. அவனுக்கு எதுவும் புரியவில்லை. அடுத்த சில நாட்களில் உறவுப் பெண்கள் புடைசூழ அக்காவை அலங்கரித்து மனையில் அமர்த்தி ஆரத்தி எடுப்பது என வைபவங்கள் நடந்தன.
“ஏன் எல்லாரும் அக்காவையே சுத்தி வராங்க? என்னை யாருமே கவனிக்கல்ல” என குழந்தைத்தனம் கொஞ்சமும் குறையாமல் ஒன்பது வயது விக்கி தன் அம்மாவிடம் கேட்க அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.
பின் அப்பா அவனை அழைத்துக் கொண்டு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுத்தார்.
அபர்ணா பத்தாம் வகுப்பு படிக்கையில் “இதுல புக் வெச்சி படிமா” என அப்பா எதார்த்தமாக மகளிடம் சொல்லி தன் மேஜையை அவளுக்குக் கொடுத்தார்.
அதில் தான் அவர் அப்பா எப்போதும் அலுவலக வேலை செய்வது வழக்கம்.
“பாரு அப்பா அவரோட டேபிளை எனக்குக் கொடுத்திட்டாரே” என ஏதோ ராஜ்ஜியம் கைக்கு வந்தது போலக் குழந்தை மகிழ்ந்தாள். அதோடு நில்லாமல் விக்கியை வெறுப்பு ஏற்றிப் பழிப்புக் காட்டினாள் அபர்ணா.
“நானும் இதுல தான் படிப்பேன்” என விக்கி தன் புத்தகத்தை மேஜையில் வைக்க இருவருக்குமான சண்டை ஆரம்பித்தது.
“டேய் அவ டென்த் டா நல்லா படிக்கணும் இல்லையா?” அப்பா சமாதானம் செய்ய முயன்றார்.
“எனக்கும் டேபிள் வேணும்” என அடம்பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்ய .. இறுதியாய் அப்பா அவனுக்கும் ஒரு சிறிய மேசை வாங்கிக் கொடுத்தார்.
“என் டேபிள் பெரிசா இருக்கே ..” என அபர்ணா மீண்டுமாய் வம்பிழுக்க
விக்கி முகம் கோணலாகப் போனது.
“உன்னை ஆஸ்பெட்டல இருந்து வாங்கிட்டு வந்தாங்க அதான் உனக்கு சின்ன டேபிள்” என்று அவள் கூற
அபர்ணா மூன்று வயது இருக்கையில் விக்கிப் பிறந்தான். அம்மாவும் அப்பாவும் மருத்துவமனைக்குச் சென்றனர் வரும்போது விக்கியுடன் வந்தனர்.
கடைக்குச் சென்று திரும்புகையில் பொருள் வாங்கி வருவது போல விக்கியை வாங்கி வந்தனர். அவள் அம்மா “ நம்ம வீட்டுக்குப் பாப்பா வர போகுது”என தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக் காண்பிப்பாள்.
ஆனால் சிறுமிக்கு அந்த வயிற்றில் இருக்கும் குழந்தை தான் பிரசவித்து தம் வீட்டிற்கு வந்துள்ளது என்றெல்லாம் அந்த வயதில் தெரிய வாய்ப்பில்லைதான்.
“என்னை ஆஸ்பத்திரில இருந்து வாங்கிட்டு வந்தீங்களா?” எனப் பெற்றோரிடம் கேட்டுப் பிழியப் பிழிய அழுதான் விக்கி.
அவனைச் சமாதானம் படுத்த போதும் போதும் என்றாகிவிட்டது. அபர்ணா முதுகில் இரண்டு அடி விழுந்தது.
ஆனால் அபர்ணா விக்கி இருவருக்கும் பாசம் இல்லாமல் இல்லை.
அபர்ணா தன் தோழி மூலம் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டாள். அப்போது அவள் தவறி விழுந்ததும் விக்கிப் பதறிப் போனான். அக்காவின் தோழியிடம் சண்டை போட்டான். அக்காவை வீட்டிற்கு அழைத்து வந்தான். காயத்திற்கு மருந்து தடவினான்.
இருவரும் ஒரே பள்ளி ஆதலால் தன் தம்பியை அபர்ணா கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டாள். அவனை ஆசிரியர் ஏதேனும் கடுஞ்சொற்கள் சொன்னால் “ அக்கா அந்த மிஸ் அடிச்சிட்டாங்க” என அழுதபடி தம்பி வந்தால் அடுத்த நிமிடம் அந்த ஆசிரியரிடம் சென்று “ஏன் தம்பியை அடிச்சிங்க” எனத் தைரியமாகக் கேட்பாள்.
காலம் உருண்டோட அபர்ணா திருமணமாகிச் செல்லுகையில் விக்கி அவளைத் தனியே அழைத்து டெபிட் கார்ட் ஒன்றைக் கொடுத்தான் “ இதுல கொஞ்சம் பணம் இருக்கு. யாரையும் கேட்க வேண்டாம். உனக்காக வெச்சிக்கோ”
நெகிழ்ந்து போனாள் “என்னடா பெரிய மனுஷன் ஆகிட்டயா … நீ எனக்குத் தம்பிதான் .. பெரிய டேபிள் எப்பவும் எனக்குத்தான்” என்று அவள் சொல்லவும். இருவரும் தங்களை மறந்து சிரித்துவிட்டனர். கண்களில் நீர் தழும்ப.
அவள் கணவன் வீட்டிற்குச் செல்கையில் அபர்ணாவைவிட விக்கித்தான் அதிகமாக அழுதான். அபர்ணா “நல்லவேளை தனி ரூம்ல அழற” எனக் கிண்டல் செய்து சமாதானப் படுத்தினாள்.
பெற்றோர் மற்றும் தம்பியைப் பிரிகையில் அபர்ணாவுக்கும் அழுகை தொண்டை அடைத்தது. ஆனால் இவள் அழுதால் விக்கி இன்னும் அழத் தொடங்கிவிடுவான்.
அதுதான் விக்கி பாசத்தைக் காட்டுவதில் அவனை மிஞ்ச ஆள் இல்லை.
அடுத்த இரண்டு நாட்கள் விக்கி அக்கா அறையை வளைய வந்தபடி இருந்தான். அந்த இரண்டு மேசைகளும் கேட்பார் அற்று அனாதையாகக் கிடந்தன.
அபர்ணா வீட்டிற்கு வருகையில் எல்லாம் அவள் கணவன் அருகிலேயே அமர்ந்திருப்பான். விக்கியால் மனம் திறந்து பேச முடியாது.
“இவன் வேற நந்தி மாதிரி” என மனதில் எண்ணிக் கொள்வான். உண்மையில் இவன்தான் நந்தி எனப் புரிய சில காலம் தேவைப்பட்டது.
தற்பொழுது அபர்ணாவிற்குக் குழந்தையும் பிறந்துவிட்டது. தன் குடும்பத்தை நன்றாக நிர்வகிக்கிறாள் என அவள் மாமியார் அவ்வப்பொழுது சர்டிபிக்கேட் கொடுப்பார். பெருமையாக இருக்கும் அவனுக்கு.
எப்படி தங்களை எல்லாம் மறந்து அக்கா அங்கே இருக்கிறாள். தங்களை மறக்கவில்லை மனதில் சுமக்கிறாள் என மெல்ல மெல்ல புரிந்தது. அவன் அம்மாதான் புரிய வைத்தார். எல்லா பெண்களும் இப்படிதான் ஏன் நான் இல்லையா? எனக் கேட்க
தனக்கும் இப்படி பாசமான மனைவி அமைவாளா? என்ற ஏக்கம் அவனுள் தோன்றியது.
இதோ ருத்ரா அவன் வாழ்க்கையில் இணைய இருக்கிறாள்.
வீடே திருமண ஏற்பாட்டில் களைகட்டியிருந்தது. அபர்ணா ஒரு வாரம் முன்னதாகவே வந்துவிட்டாள்.
விக்கி தன் அக்கா அபர்ணாவை விடாமல் கவனித்தான். அன்று அபர்ணா தன் கணவன் வருகைக்காகக் கடிகாரத்தைப் பார்ப்பதும் பின்பு வெளி வாசலை எட்டிப் பார்ப்பதும் எனத் தவித்துக் கொண்டிருந்தாள்.
விக்கி கேலியுடன் புன்னகைக்க “என்னடா?” என அபர்ணா முறைக்க ஒன்றுமில்லை எனத் தலையாட்டினான். அவளுக்குத் தம்பியின் மனவோட்டம் புரிந்தாலும் வெளிக்காட்டவில்லை.
விக்கி எண்ணங்கள் அக்காவை நோக்கித்தான் இருந்தன. இன்னும் பசுமையாய் பழைய காட்சி மனதில் ஓடியது.
ஒளிரும் …
Good start👍Nice
Thank you so much sis
Nice sis
Thank you sis
Started nice
Thank you so much Kalidevi sis
Nice starting
Thank you so much Priya sis
Nice
Thank you so much Kothaihariram sis.
Good start ma 👍👍👍
Thank you so much Eswari sis