தீயாகிய தீபம் 2
விக்கி சிறுவயது முதலே தான் பெரிய சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்பதுதான் அவன் ஆசை. நிறையப் திரைப்படங்கள் பார்த்தபடி இருப்பான். படிப்பில் அசகாயசூரன் இல்லை. கடைசி நேரத்தில் படித்து எப்படியோ தேர்வில் அறுபது மதிப்பெண்கள் எடுத்துவிடுவான்.
அபர்ணாவிடம் தானே சினிமாவுக்காக எழுதிய கதை எனச் சிலவற்றைக் கூறுவான். அவள் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டாள். பின்புதான் அவனின் தீவிரம் புரிந்தது. அவனே முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டாள்.
விக்கி பன்னிரண்டாம் வகுப்பு முடித்த தருணம். எதிர்பார்த்ததைவிட நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான்.
“எங்கடா பி.ஈ. சேர போற?” விசு கேட்டார். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து சவரம் செய்தபடி
“அப்பா நான் . . .”தயங்கியவனிடம்
“சொல்லுடா பி.ஈ வேண்டாமா? சரி பி.டெக் படி” என்றார்.
“இல்லப்பா ..எனக்கு சினிமா டைரக்டர் ஆகணும்னு ஆசை” என ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி மிடறு முழங்கியவன் போல விழித்தான்.
அவன் சொன்னதைக் கேட்ட விசு முதலில் திடுக்கிட்டார். அந்த தாக்கம் அவர் முகத்தில் பிளேட் லேசாகப் பட்டு சிறிய ரத்த கீறல். மனதிலும் ஒருவகை கீறல்.
“என்னங்க?” என கண்களால் அதிர்வலைகளை கோதாவரி கண்ணாடி வழியே காட்ட “பொறுமை” என கை காட்டினார் அதே பாணியில்.
அபர்ணா என்ன தீர்ப்பு வருமென்று பெற்றோரையும் தன் தம்பியையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னமே விக்கியின் எண்ணம் தெரியும் அல்லவா?.
விசு “அதுக்கென்னடா தாராளமா சினிமா டைரக்டர் ஆகலாமே” என்றார்.
“நிஜமாவா?” சந்தோஷமாய் கேட்டான். சத்தியமாய் இதை எதிர்பார்க்கவில்லை விக்கி.
சண்டையில் வீடே இரண்டாகும் என அச்சத்தில் இருந்தான்.
“நல்ல கதை ரெடி பண்ணு. அவசரமில்லாம பொறுமையா.. முடிஞ்சா எனக்கும் உன் அம்மாக்கும் ரோல் கொடு .நான் காலேஜ் டிராமால நல்லா நடிச்சவன்டா முன் அனுபவம் இருக்கு தெரியுமா?” என்றார் பெருமையாக.
இதைக் கேட்ட விக்கிக்கு இரண்டு காதுகளிலும் கபகபவென புகை வராத குறைதான். தன்னை இளக்காரமாக பேசுகிறார்கள் என்ற கோபம் எழுந்தது “நிச்சயமா ஒரு நாள் நான் பெரிய டைரக்டர் ஆவேன்” சூளுரைக்காத குறையாக அவன் பொங்கினான்.
பதிலுக்கு வராத புன்னகையை வரவழைத்து “இன்னொரு மணிரத்னம்,சங்கர், பாரதிராஜாவா நீ வந்தால் சந்தோஷப்படற முதல் ஆள் நாங்கதாண்டா” என்றார் விசு. அதை ஆமோதிப்பதாய் தலையசைத்தார் கோதாவரி.
கோதாவரி அரவணைப்பாக அவன் அருகில் அமர்ந்து தலை கோதினார். குளிர்ந்து போனான் விக்கி.
“என்ன இருந்தாலும் கையில ஒரு டிகிரி இருந்தா நல்லா இருக்கும் இல்லையா? . . . ” மீண்டுமாய் விசு கேட்டார்
என்ன சொல்வதென்று தெரியாமல் விக்கிக் குழம்பினான்.
“சரி … விக்கி ஒரே நாள்ல டைரக்டர் ஆக முடியுமா? சொல்லு” அப்பா கேட்க.
“அது எப்படிப்பா?”
“கரெக்ட் . . . முதல்ல பி.ஈ. படிச்சி முடி அடுத்த நாளே .. உனக்கு எது பிடிக்குமோ அது செய் .என்ன இருந்தாலும் கைல படிப்பு இருந்தா தெம்பா இருக்கலாம் இல்லையா?”
“ஆமாம்பா” அரைமனதோடு சம்மதித்தான்.
விக்கி விஷவல் கம்யூனிக்கேஷன் படிக்க நினைத்தான். ஆனால் பெற்றோருக்காக பி.ஈ.யில் டிரிபில் ஈ பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படித்தான்.
விசுவிற்கு நன்கு தெரியும் விடலை பருவத்தில் செய்ய வேண்டாம் என்பதை தான் செய்வார்கள். அதனால் நயமாக அவன் போக்கிலேயே பேசி பி.ஈ.யில் சேர்த்தார்.
பெற்றோர் என்றும் தங்கள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும்என்று தான் நினைப்பார்கள். சினிமா டைரக்டர் என்பது சாதாரணவிஷயம் அல்ல. இன்று எத்தனை பேர், ஆயிரம் கனவுகளோடு கோடம்பாக்கத்தைச் சுற்றி வருகின்றனர்.
ஆயிரம் பேர்களில் ஐவர் கனவுதான் நினைவாகிறது. படிப்பு என்றுஒன்று இருப்பது மிக அவசியம் என்பது அவர் எண்ணம். டைரக்டர் ஆவதற்கு முன் டிகிரி எடுக்க வைத்தார். அதன் பிறகு அவன் விருப்பம். படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல் அவன் கஷ்டப்படக் கூடாது என்பது அவர் எண்ணம்.
விக்கி பி.ஈ. இறுதி ஆண்டின் கடைசி செமஸ்டரக்கு தயார் செய்து கொண்டிருந்தான். பி.ஈ முடித்ததும் தனக்கு விடுதலை என ஒருவகை சந்தோஷம் உந்த அதன் விளைவாக அரியர்ஸ் இல்லாமல் இதுவரை படித்தான்.
அப்போது அவன் கல்லூரியில் பெரிய ஐ.டி. நிறுவனம் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தினார்கள்.
“இன்டா்வியூ அடெண்ட் பண்ணுடா.நாளைக்கே வேலை கொடுக்கப் போறாங்களா என்ன?” விசு சொல்ல
தனக்கு வேலை கிடைக்கக் கூடாதென என எல்லா தெய்வங்களையும் வேண்டினான்.
விக்கியின் நல்ல காலமா கெட்ட காலமோ தெரியவில்லை வேலை கிடைத்துவிட்டது. அவனுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் அந்த நேர்காணலின் மேற்பார்வையாளராக இருந்தார். அதனால் அனைத்து கேள்விகளுக்குத் தவறான பதிலைக் கூறலாம் என்னும் அவனது திட்டம் பலிக்கவில்லை.
அது மிகப் பெரிய ஐ.டி. நிறுவனம் ஆதலால் ஊழியர்களின் முதல் ஒருவருட வேலைத் திறனின் அடிப்படையில்தான் பணி நிரந்தரம் செய்வார்கள். ஆனால் எடுத்தவுடன் நல்ல சம்பளம்.
“ஒரு வருஷம் வேலைக்கு போ அப்படியே டைரக்டர் ஆக என்னென்ன செய்யணும் பாரு” என்றுவிட்டார் அப்பா.
அவனுக்கும் சரியென பட்டது. இந்த ஒரு வருடம் சரியாக வேலை செய்யாமல் இருந்தால் அவர்களே கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுவார்கள் என சந்தோசப்பட்டான்.
தினமும் மாலை ஆறு மணிவரை தான் வேலை செய்தான். அப்பொழுதுதான் வேலை செய்யவில்லை என நினைப்பார்கள்.
பின்பு கோடம்பாக்கம் ஏவி எம் ஸ்டூடியோ எனத் தினம் ஓரிடம் சென்று வந்தான். சினிமா உலகம் … அவன் நினைத்தது ஒன்று காண்பது வேறாகவும் இருந்தது.
“நான் பத்து வருஷமா அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்கேன் . . என்னாலேயே முடியலை . .”
“ஒரு பீடி வாங்கிட்டு வா ” என அனுப்பினான் ஒருவன்.
“நல்ல வேலையை விட்டுவிட்டு இங்க வராத தம்பி” என முதியவரின் ப்ரீ அட்வைஸ் கிடைத்தது.
அவனின் கனவு கோட்டை மெல்ல மெல்லத் தகரும் நிலையை அடைய .. அதைத் தானே மீண்டும் எழுப்பி நிறுத்தினான். அவனுக்கென்று ஒரு காலம் வரும் என நம்பிக்கை கொண்டான்.
அந்த நிலையில் அவன் அக்கா அபர்ணாவிற்கு ரவியுடன் திருமணம் நிச்சயம் ஆனது. இருவருக்கும் ஜாதகம் நன்கு பொருந்தியிருந்தது.
ரவி வீட்டிற்கும் தங்கள் வீட்டிற்கும் இருபது கிலோமீட்டர் தூரம். ரவிக்கு ஒரே அண்ணன் அவனுக்குத் திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிட்டான். பெரிய மருமகள் உடல்நிலை காரணமாக ரவியின் பெற்றோர் பெரும்பாலும் பெரிய மகன் வீட்டில் வசிப்பார்களாம். அதனால் அபர்ணாவிற்கு மாமனார் மாமியாரைக் கவனித்துக் கொள்ளும் வேலை குறைவு.
வரதட்சணை ஒரு பைசா கூட வேண்டாம் என்றுவிட்டனர். நகை புடவை அனைத்தும் பெண் வீட்டார் இஷ்டம். ஒன்றுமே இல்லை என்றாலும் பாதகம் இல்லை என்றுவிட்டனர்.
அவர்கள் வேண்டாம் என்று சொன்னால் அதற்காக அப்படியே அனுப்ப இயலாது ஆதலால் விசு தம்பதி தங்கள் பெண்ணிற்கு நிறைவாகவே செய்ய முனைந்தனர்.
திருமணத்தை மட்டும் விமர்சையாக நடத்தச் சொன்னார்கள். இது ஒன்றுதான் அவர்கள் பக்கம் கேட்டுக் கொண்டது.
அடுத்து ரவி அவன் அம்மா பேச்சைத் தட்டமாட்டான் என்பதை விசு எப்படியோ கண்டுபிடித்துவிட்டார். இது ஒன்றும் தவறு இல்லை. இத்தனை நல்ல வரனை விட அபர்ணா பெற்றோருக்கு மனசு வரவில்லை.
விக்கி வேலையை விட நினைத்த தருணத்தில் அபர்ணா திருமணம் நிச்சயம் ஆனது. தன் வேலையைத் தொடரும் முடிவுக்கு வந்தான்.
“விக்கி நீ வேலைக்குப் போக வேண்டாம் … ரிசைன் பண்ணிடு” என்றார் விசு அவன் முடிவைக் கேட்டு.
“இல்லபா அபர்ணா கல்யாணம் முடியட்டும் அதுவரை வேலைக்கு போறேன். செலவு இருக்குல”
“அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்குவோம். நீ ஏன் கவலைப்படற கண்ணா?” எனக் கோதாவரி சம்பாஷணையில் சேர்ந்தார்.
“விழுப்புரத்துல இருக்கிற நம்ம நிலத்தை வித்திடலாம்னு இருக்கேன். எப்படியும் நாம அங்க போய் வீடு கட்டி இருக்கப் போறது இல்ல” என விசு சொன்னதுதான் தாமதம்
அவசரமாக “அது உங்க அப்பா உங்களுக்குக் கொடுத்தது. உங்க குடும்ப சொத்து. அதை விற்க வேண்டாம்.” என மறுத்தான் விக்கி
“இப்ப எனக்குக் கல்யாணத்துக்கு என்ன அவசரம். முதல்ல விக்கி டிரைக்டர் ஆகட்டும்” என அபர்ணா மறுபக்கம் வர
“நீ சும்மா இரு அபர்ணா. கல்யாணம் முடியட்டும் உடனே ரிசைன் செய்றேன். கொஞ்ச நாள் வேலைக்கு போறேன்” விக்கி உறுதியாகக் கூற
இறுதியில் விக்கி பக்கம் தீர்பானது. அவன் நினைத்தால் வேலையை ராஜிநாமா செய்யலாம். ஆனால் பெற்றோர் பணத்திற்காக சிரமப்படுவதை அவனால் காணச் சகிக்கவில்லை.
திருமணம் முடிந்த சில மாதங்களில் அபர்ணா கர்ப்பம் தரித்தாள். அடுத்த இரண்டு ஆண்டுகளும் விக்கி வேலையை விட முடியவில்லை. தன் குடும்ப சுமையை மனமுவந்து தாங்கினான்.
வேலையில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டது. விக்கிக்கும் வரன் கேட்டு ஆட்கள் வரத் தொடங்கினர்.
அபர்ணாவிடம் கேட்ட அதே கேள்வியைக் கோதாவரி மகனிடம் கேட்டார்.
“விக்கி யாரையாவது லவ் பன்றியா? இப்பவே சொல்லிடு கல்யாணத்த முடிச்சிடலாம்”
“இல்லமா யாரையும் லவ் பண்ணலை … டைரக்டர் ஆனதும் தான் எனக்குக் கல்யாணம் .. அதுவரை சும்மா இருங்க .. எதாவது வரன் வந்திருக்குனு தொந்தரவு பண்ணாதீங்க” என அணுக்குண்டை வீசினான்.
அவன் ஆசையைக் கெடுக்க வேண்டாமென வருகிற வரனை வாசல் கதவிலேயே தடுத்து அனுப்பினர் பெற்றோர்.
ஆனால் ருத்ரா அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து உள்ளே வந்தாள்.
ஒளிரும் ….
Interesting sis👍👍
Thank you so much Vino sis
Very nice
Thank you so much Abirami sis
Started nice
Thank you so much Kalidevi sis
Arumai sis
Mikka nandri Priya sis
Interesting
Thank you so much Kothaihariram sis.
Good going 👍
Thank you so much Eswari sis