Skip to content
Home » தீயாகிய தீபம் 3

தீயாகிய தீபம் 3

தீயாகிய தீபம் 3

விக்கி வாழ்வதும் வீழ்வதும் அன்பு, பாசம், காதல் என்னும் பிணைப்பினால் மட்டுமே. அவன் வேண்டும் என நினைப்பது தள்ளிப் போவதும். வேண்டாம் என்பது அவனுடனும் பயணிக்கிறது.

விக்கி மற்றும் ருத்ரா திருமணம் நிச்சயம் ஆனதே ஒரு எதிர்பாரா சந்தர்ப்பத்தில்வாழ்க்கை எப்போதும் முழு படத்தையும் ஒரே சமயத்தில் காட்டிவிடாதுமுதலில் படத்திற்கான டீசர் வெளியாகும்.

அப்படிதான் விசு முருகன் கோயிலில் தன் பால்ய நண்பன் வரதராஜனை எதிர்பாரா விதமாகச் சந்தித்தார். இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர் மூலமாகத் தான் ருத்ரா ஜாதகம் பெற்றார்.

“என் பிரெண்ட் பொண்ணு இருக்கா . . . உன் பையனுக்கு பார்க்கலாமே” என வரதராஜன் சொல்ல

“என் பையனுக்கு இன்னும் கல்யாண பேச்சே ஆரம்பிக்கல” விசு தயங்கினார்.

“அதான் இப்ப இந்த நிமிஷம் ஆரம்பிசாச்சே” எனச் சிரித்தபடி  ருத்ராவின் போட்டோ ஜாதகம் மற்றும் பயோடேட்டாவை விசு வாட்சப்பிற்கு தட்டிவிட்டார்.

ஆனால் விசு அவருக்கு நம்பிக்கை தரவில்லை.  “நான் பெத்தது அப்படி .. டைரக்டர் .. கனவு .. லட்சியம்னு பேசுவானே”என மனதைத்  தேற்றிக் கொண்டார். வீட்டிற்கு வந்து மனைவியிடம் விஷயத்தைக் கூறினார்.

ஆனால் ருத்ரா போட்டோவை பார்த்ததுமே விசு மற்றும் கோதாவரிக்கு மிகவும்ப் பிடித்துப் போயிற்று.

எல்லாப் பெற்றோரைப் போல தங்கள் மகனை மணக்கோலத்தில் காண ஆசைப்பட்டனர். ஆனால் தங்கள் சீமந்த புத்திரன் இதைக் கேட்டால் மண்ணுக்கும் விண்ணுக்கும் அல்லவா குதிப்பான். அதனால் கல்யாண பேச்சை நிறுத்திவிடத் தான் விசு நினைத்தார். அவன் விருப்பம் தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என நினைத்தார்.

கோதாவரி “முதல்ல ஜாதகம் பார்க்கலாம். அப்புறம்தான் மத்ததெல்லாம்” என விசு வயிற்றில் மில்கை ஊற்றினார். அப்பாடா ஜாதக பொருத்தம் இல்லைனா பிரச்சனை இல்லை என எண்ணினார்.

“ரெண்டு ஜாதகமும் பேஷா பொருந்தி இருக்கு. பத்துக்கு எட்டு பொருத்தம் சரியா இருக்கு” என ஜோசியர் அமிலத்தை விசு வயிற்றில் ஊற்றிவிட்டார்.

இப்போது மகனிடம் இதைப் பேசினால் அவன் ஒரே வார்த்தையில் “வேண்டாம்” என்று விடுவான். ஆனாலும் முதல் முதலில் வந்த வரனைத் தட்டவும் மனமில்லை. பெண்ணை பார்க்கலாம் விக்கிக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடலாம் என முடிவெடுத்தார்.

விசு கோதாவரியுடன்  தன் ஜாலத்தை தொடங்கினார். விக்கி  பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் சினிமாவைப் பற்றி சொன்னதும். அவனை மடைமாற்றிப் படிக்க வைத்தனர். அதே பர்முலாவை மீண்டும் பிரயோகித்தார். 

ஆனால் திருமணம் என்பது வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனை ஆதலால் அவனுக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றால் விட்டுவிடலாம் என்று நினைத்தார். அவனை எந்த விதத்திலும் நிர்பந்தம் செய்யக் கூடாது என்பதில் இருவரும் திடமாக இருந்தனர்.

விக்கியிடம் நேரடியாக இந்த விஷயத்தைப் பேசலாம்தான். ஆனால் விக்கியிடம்  பிரச்சனையை அலசி ஆராயும் தன்மை இன்னும் போதவில்லை என்பது விசுவின் எண்ணம். அவனிடம் திருமணம் பற்றிச் சொன்னால் ஒரே நொடியில் “இப்ப வேண்டாம் இஷ்டமில்ல” என்று சொல்லி பைக்கில் கிளம்பிவிடுவான். ஏன்? எதற்கு? என்று  விரிவாகப் பதில் வரவே வராது.

விசுவும் கோதாவரியும்  ஹாலில் அமர்ந்தனர்.  விக்கி தன் அறையில் லேப்டாப் முன்பு எதையோ துழாவிக் கொண்டிருந்தான். அவன்  காதுக்கு தங்கள் பேச்சு சரியாகச் சென்று தொபகடீர் என விழும்படி பேசினார்கள்.

“கோதாவரி நம்ம விக்கிக்கு வரன் வந்திருக்கு. பொண்ணு  தொல்லியல் துறையில் வேலையாம்” விசு தொடங்கினார்.

“இப்ப கல்யாணத்துக்கு என்னங்க அவசரம்?” இது கோதாவரி.   தன் கணவன் சொல்லிக் கொடுத்ததை அப்படியே கிளிப்பிள்ளை போலப் பேசினார்.

“இல்ல நம்ம வரதராஜனுடைய பிரெண்ட் பொண்ணு அதான்” என விசு இழுழுழுழுத்தார்.

“யாரா இருந்தா என்ன? நம்ம பையன் முதல்ல பெரிய டைரக்டர்  ஆகணும். அதுவரை அவனுக்குக் கல்யாணம் வேண்டாம்”

“பொண்ணு பாக்க தானே போறோம்? உடனே கல்யாணம் நடக்க போகுதா என்ன?” என்றார் விசு.

“என்னங்க நீங்க” அலுத்துக் கொண்ட கோதாவரியிடம்

“ஜாலியா பிரெண்ட் வீட்டுக்குப் போய் ருசியா சொஜ்ஜி பஜ்ஜி சாப்ட்டு வர மாதிரி வெச்சிக்கோ” என்றார்.

“என்னது ருசியாவா? அப்ப நான் செய்ற சொஜ்ஜி பஜ்ஜி ருசியா இல்லையா?” சண்டைக் கோழியாய் கோதாவரி கேட்க

“நான் உன்ன பொண்ணு பாக்க வந்தப்போ சொஜ்ஜி பஜ்ஜி சாப்படது . . . அதுக்கு அப்புறம் நீ ???  . . .” வாய் தவறி  உண்மை வெளிவர

“ஓ!! நான் செய்யவே இல்லனு சொல்றீங்க அப்படிதானே”  முறுக்கிக் கொண்டார் கோதாவரி. கோபத்துடன் தங்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.

”ஐய்யயோ இது ஸ்கிரிப்டலயே இல்லையே” எனப் படபடப்பானவர் “கோதாவரி . . . கோதாவரி” என தனக்கே உரியப் பாணியில் விசு அழைத்து “உன் கையால் கிலோ கிலோவா சொஜ்ஜி பஜ்ஜி சாப்டிருக்கேன். உன் கை பக்குவம் யாருக்கு வரும் விளையாட்டுக்கு சொன்னா  தப்பா எடுத்துகிட்டியே கோதாவரி”

என பின்னே தொடர்ந்து சரண்டர் ஆனார். காரணம் ஏதோ பேசத் தொடங்கி விஷயம் எங்கோ முட்டிக் கொள்கிறது என்பதால்.

“நிஜமாவா?” கோதாவரி நம்பிக்கையில்லாமல் கேட்க

“நான் என்னிக்காவது பொய் சொல்லி இருக்கேனா?” விசு அழகாய் நடிக்க

“ம்கூம்” எனத் தலையாட்ட

“சரி வா  நீ பெத்தது  அடம் பிடிக்குது அதை வழிக்குக் கொண்டு வரணும்” 

“நான் பெத்ததா?” புருவங்கள் மேலேறின

“சாரி . . . நாம பெத்தது . . . இப்ப சரியா?”

“அதுதுது” என மிரட்டல் பார்வையோடு முன்னே சென்றார் கோதாவரி

“டேய் விசு இன்னிக்கு உன் நாக்கில் சனி பகவான் டெண்ட் போட்டு துாங்கறார் போல . . .” என தனக்கு தானே பேசிக் கொள்ள

“என்ன முணுமுணுப்பு?” கோதாவரி கேட்க

“ஒண்ணுமில்லயே ஒண்ணுமில்ல”  என்றார் அவசரமாக

தங்கள் மகன் அறை முன்பு எட்டிப் பார்த்தனர். அவன் எப்பொழுதும் போல லேப்டாப்பில் எதையே நோண்டிக் கொண்டு இருந்தான்.  

இதைப் பார்த்து ஏமாற்றமடைந்த கோதாவரி “என்னங்க இவ்வளவு நேரமா கத்தினது வேஸ்டா?”

“அட சில சமயங்கள்ல பிளாப் ஆகும். அதுக்கெல்லாம்  சோர்வாகலாமா? இப்ப பிளான் பி” என அடுத்த பந்தை வீசத் தயாராகினார்.

சத்தமாக தன் பாணியில் மீண்டும் தொடங்கினார்  “கோதாவரி . . . நம்ம  அபர்ணாவை பொண்ணு  பாக்க வரேனு சொல்லிட்டு அந்த தஞ்சாவூர் எம்.சீ.ஏ பையன் குடும்பம் வரவே இல்ல . . . ஞாபகம் இருக்க?”

“இருக்குங்க” எசைப்பாட்டு

“மதுரை வரனும் வரவே இல்ல…”

“ஆமாங்க”

“சேலம்?”

“அவங்களும் வரலை”

“அது அபர்ணாவுக்கும் நமக்கும் ஏமாற்றமா இருந்திச்சா இல்லையா?”

“நிறையவே ஏமாற்றமா இருந்தது”

“இப்போ இந்த பொண்ணு நமக்காக  அலங்காரம்லாம்  செய்துகிட்டு காத்திருக்கும். நாம போகலைனா அந்த பொன்னும்  பீல் பண்ணும் இல்லையா?. சொஜ்ஜி பஜ்ஜி வீணா போகும்”

“பெண் பாவம் பொல்லாதது” என்று பேசி பேசியே அவன் மனதைக் கரைத்துவிட்டார்.

“அப்பா எத்தனை மணிக்கு பொண்ணு பாக்க போகணும்” என ஒரு கேள்வியைக் கேட்டு தன் பெற்றோரை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினான் விக்கி. தன் பெற்றோர்கள் நடிப்பு விக்கிக்குப் புரியாமல் இல்லை.

“நாளைக்கு காலைல பத்து மணிக்கு” விசு முந்திக் கொண்டார். பின்பு வரதுவுக்கும். பெண் வீட்டிற்கும் தங்கள் வரவை பற்றிச் சொன்னார்.

விக்கி நேரிடையாக பெண்ணிடமே விஷயத்தைக் கூறிவிட வேண்டும். இதோடு இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கிளம்பினான். ஆனால் இது முற்றுப்புள்ளி அல்ல கமா என அவனுக்குத் தெரியவில்லை.

விக்கிப் பெற்றோருக்கு அவன் சம்மதம் சொன்னது அதிர்ச்சியாகதாக தான் இருந்தது.

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நடக்கக் கூடாது என எண்ணுவார்கள். ஆனால் அந்த குறிப்பிட்ட நிகழ்வு  நடந்தே தீரும்.  விக்கி ருத்ரா இருவரின் வாழ்க்கைக்கு இது மிகச் சரியாகப் பொருந்தும்.

விக்கி தன் லட்சியம் கனவு பற்றி பெண்ணிடம் சொல்லி திருமணத்தை நிறுத்தும் முடிவுடன் பெண் பார்க்கச்  சென்றான்.

ஆனால் பெண் பார்கக போன இடத்தில் சில  நிகழ்வுகள் நடந்தேறின. அவன் கை மீறி அனைத்தும் சென்றுவிட்டது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ருத்ரா தனக்கு வேண்டுமென நினைப்பதை அடைந்தே தீருவாள். யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத் தர மாட்டாள்.

ஒளிரும்

Tags:

8 thoughts on “தீயாகிய தீபம் 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *