Skip to content
Home » தீயாகிய தீபம் 5

தீயாகிய தீபம் 5

தீயாகிய தீபம் 5

விக்கி மற்றும் ருத்ரா நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்ததுவிக்கி பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அடுத்த இரண்டு நாட்களில் ருத்ரா தன் வேலைத் தொடர்பான  வெளிநாட்டுப் பயணத்தை தங்களின் குழுவுடன் மேற்கொண்டாள். ருத்ரா தன் வேலையில் தன்னையே தொலைத்தாள் என்பதுதான் உண்மை.

அங்கோர்வாட் கோயில் அதன் பிரம்மாண்டம் மற்றும் அதிலிருந்த கற்பனைக்கு எட்டாத சிலைகளும் கட்டிடக் கலை அமைப்பு நுணுக்கங்களும் ருத்ராவை மொத்தமாக விழுங்கியது.

அவர்களின் ஆராய்ச்சிக்கு பெருந்தீனி கிட்டியதுபொக்கிஷங்களாய் பல தரவுகள் கிட்டியது. தமிழகத்திற்கும் கம்போடியாவிற்கும் இருந்த தொடர்புகள் பற்றிய விவரங்களும் கிடைத்தன.

கோயிலை முடிந்தவரை அனுமதியுடன் புகைப்படங்கள் எடுத்து அதை ஆராய்ந்து கட்டுரை எழுதுதல் எனப் பல வேலைகள் இருந்தனஇத்தனை செய்திகளும் ருத்ரா உள்ளத்தில் விக்கியை பின்னுக்குத் தள்ளியது.

இந்தியாவிற்கும் கம்போடியாவுக்கும் அதிக நேரம் வித்தியாசம் இல்லை. இன்றைய அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் மூலமாக இருவரும் நினைத்திருந்தால் மனதைவிட்டுப் பேசி இருக்கலாம். காலமும் நேரமும்  தடையாக இல்லை.

விக்கியுடன் வாழ்க்கை முழுக்க பேசலாம். ஆனால் இந்த கோயில் சில மாதங்கள் மட்டுமே ரசிக்க முடியும் என்பதால் ருத்ரா கோவிலுக்கு முக்கியத்துவத்தை கொடுத்தாள்.  விக்கியும் வேலைப் பளு காரணமாகப் பேசவில்லை.

ஆனால் பெரியவர்கள் கல்யாண வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். ருத்ரா இந்தியா திரும்பிய பத்து நாட்களில் திருமணம் என முடிவானது.

ருத்ரா திருமணத்திற்குத் தேவையான முக்கியமான புடவை மற்றும் நகையை வெளிநாட்டுப் பயணத்திற்கு முன் இருந்த இரண்டு நாட்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாங்கிவிட்டாள்.

மற்றதை எல்லாம் அவள் அம்மாவும் தங்கையும் பார்த்து புகைப்படம் எடுத்து அனுப்பி  முடிவானது. அவளின் விருப்பம் அவர்கள் நன்கு அறிவார்கள்.

விக்கி திருமணம் சார்ந்த எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. எதாவது கேட்டால் “உங்க இஷ்டம்.. ஓ.கே”இந்த சொற்கள்தான் பதிலாக வந்தது.

“என்னடா கல்யாண சமயத்துல இப்படி இருக்க?” என அவன் அம்மா கவலைப்பட்டார்.

“அட அப்படியெல்லாம் இல்ல மா நான் எப்பாவும் போலத்தான் இருக்கேன்” எனச் சமாளித்தான்.

“என்னங்க கல்யாணத்தன்னிக்கு இவன் ஓடிப் போயிட மாட்டான்ல” எனக் கோதாவரி தன் கணவரிடம்  கேட்டார்.

பக்கென்றது அவருக்கு “ நீயே சொல்லி குடுத்திடுவ போல இருக்கே சும்மா இரு” என  அடக்கினார் விசு.

இதைக் காணச் சகிக்காமல் விசு “டேய் கண்ணா உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இருக்கா இல்லையா? இது ரெண்டு பேர் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதனால உண்மையைச் சொல்லு. உன்னை  கேட்டுத்தான் ருத்ரா வீட்டுக்கு முடிவைச் சொன்னோம். இப்ப நீ  எதிலையும் தலையிடாமல் இருந்தா எப்படிடா?” எனக் கேட்டு விட்டார்.

“இல்லபா என்னோட வேலை செய்ற பிரெண்ட் சதீஷ் பெங்களூர்  பிராஞ்சுல இருக்கான். அடிக்கடி இங்க வருவான்.  எங்க எல்லாருக்கும் ரொம்ப நெருக்கம். அவனுக்கு  திடீல்னு பெரிய விபத்து. அதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு” என்றான்.

அதிர்ந்து போனார் விசு “விபத்துக்குக் காரணம் என்ன?”

“தெரியலை அப்பா” எனச் சோகமாக பதிலளித்தான் விக்கி.

விக்கி ருத்ராவை பெண் பார்க்கச் செல்லும் முன்  இரண்டு நாட்கள் வேலை நிமித்தமாக பெங்களூர் செல்ல வேண்டியிருந்தது. அவன் திரும்பியதிலிருந்து  சோர்வாகக் காணப்பட்டான்.

அதிக வேலைப் பளு அதன் காரணமாகத்தான் சோர்வாக இருக்கிறான் என விசு மற்றும் கோதாவரி அப்போது எண்ணினர். பின்பு பெங்களூர் பயணத்தைப் பற்றி அவர்கள் மறந்தே போயினர்.

விசு மகன் சினிமா பக்கம் போகாமல் இருக்க அலுவலகத்திலிருக்கும்  நட்புகளும் ஒரு காரணம் என நினைத்திருந்தார்.

விக்கி வேலை செய்யும் இடத்தில் அவனுக்குப் பாலா, கதிர் என்று இரண்டு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். விசுவிற்கு அவர்களைத் தெரியும். ஆனால் தன் மகன் நிலைகுலைந்து போகும் அளவு சதீஷ் என்ற நண்பன் உள்ளானா? என அதிர்வலைகள் எழும்பினாலும் வெளிக்காட்டவில்லை.

பாலாவைத் தனியே அழைத்துப் பேசினார். பாலா சதிஷைப் பற்றி பேசுகையில் அழுதேவிட்டான். அவருக்கு தன் மகனின் மனவருத்தம் இப்பொழுது நன்றாகவே புரிந்தது. அவர்களின் நட்பு விசுவை நெகிழச் செய்தது.

ருத்ரா வருகை மகனின் மனதிற்கு மருந்தாக அமையும் என எண்ணினார். எந்த தீவிரமும் இல்லாமல் இவ்விஷயம் அமிழ்ந்தது.

இப்படியாக இருக்கையில் தான் பாலா போன் செய்தான் “அங்கிள் விக்கி மயக்கம் ஆகிட்டான். ஹாஸ்பெட்டல சேர்த்திருக்கோம்” என்று.

விசு அலுவலகத்திலிருக்கும் தன் மனைவிக்குத் தகவலைச் சொல்லிவிட்டு மருத்துவமனை சென்றடைந்தார். அதற்குள் கோதாவரியும் அங்கு வந்து சேர்ந்தார்.

விக்கிச் சோர்வாகக் காணப்பட்டான். விக்கி எத்தனை மறுத்தும் அவனுக்கு எல்லா பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன. அனைத்து பரிசோதனைகளின் முடிவுகளிலும் விக்கி உடல்நிலை சீராக உள்ளதாக வந்தது. எந்த பாதிப்பும் இல்லை. மயக்கத்திற்கு வேலைப் பளுதான் காரணம் என மருத்துவர் கூறினார். அன்றே வீடும் திரும்பிவிட்டான். அவனுக்கு அலுவலகத்தில் ஒருவாரம் விடுப்பு கொடுக்கப்பட்டது.

விசு அவனைக் கண்ணை இமை காப்பது போலப் பார்த்துக் கொண்டார். கோதாவரிக்கு விடுப்பு கிடைக்கவில்லை.

“சம்பந்தி என்னாச்சு தெரியுமா?” என விக்கிப் பற்றிய தகவல்களை ருத்ரா பெற்றோரிடம் கூறினார் விசு.

அவர்களும் விக்கியை காண வந்திருந்தனர். ருத்ரா அன்னை மருத்துவர் என்பதால் அனைத்து டெஸ்ட் ரிப்போர்டுகளையும் அவரிடம் காட்டினார்கள். அவரும் அனைத்தையும் பார்த்துவிட்டுப் பயப்படும் வகையில் எதுவும் இல்லை. நன்றாக உண்டு உறங்க வேண்டும் என்றுவிட்டார்.

“ருத்ரா கூட போன்ல பேசறது தவிர .. உனக்கு வேற வேலையே இருக்கக் கூடாது“ விசுவின் ஆணையானது.

பின்பு ருத்ராவும் அடிக்கடி போன் பேசத் தொடங்கினாள். விக்கியும் பேசினான். அதிகமாக அவள் கவலைப்பட்டாள் “விக்கி ஹெல்த் பாரத்துக்கோங்க”

“எனக்கு எதுவும் பிரச்சனை இல்ல ருத்ரா .. டெஸ்ட் ரிப்போர்ட்ஸ்சை உன் அம்மா கூட பார்த்தாங்க” என ஆறுதல் படுத்தினான்.

“நான் சீக்கிரமா வர முயற்சி செய்றேன்” என்றவளிடம்

“உன் வேலையை நல்லபடியா முடி .. இங்க எல்லாரும் இருக்காங்கல”

இப்படி தினம் தினம் பேச அவர்களுக்குள் நல்ல உறவு உண்டாயிற்று.

நெருக்கம் எப்போதும் உரிமையை உண்டு செய்யும். தேன்நிலவுக்கு எங்குச் செல்வது. திருமண ரிசப்ஷன் மற்றும் கல்யாண முகூர்த்தம் என அனைத்து வைபவங்களுக்கு இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணியலாம் என இருவரும் நிறையவே பேசினார்கள்.

ருத்ரா தான் அங்கு எடுத்துக் கொண்ட தன் செல்பி புகைப்படங்களை அனுப்பினாள். அதைக் கண்டவன் முகத்தில் அவனையறியாமல் புன்னகை பூத்தது.

வீடியோ காலில் பேசியவன் “ஹே செமயா இருக்க” எனப் பாராட்ட .. வெட்கப்பட்டவள் கேலியும் கிண்டலுமாக அவனை வம்பிழுத்தாள்.

இந்த ஒரு வார விடுமுறையில் விக்கி ருத்ரா நெருக்கம் அதிகமானது. அதில் அவர்களை விட மற்றவர்களுக்கே ஆனந்தம்.

 அபர்ணா “உன் போன் எப்ப பாரு என்கேஜிடா இருக்கு. யாரோட பேசுற?” வேண்டுமென்றே அவள் பங்கிற்கு அவளும் கேலிச் செய்தாள்.

அதிலும் விக்கி பதிலுக்குத் திக்கித் திணறுவதைக் காண்பதில் ஒரு அலாதி ஆனந்தம்.

மாதங்கள் உருண்டோட இதோ விக்கி மற்றும் ருத்ரா திருமண வைபவம் தொடங்கியது.

ஒளிரும் …

10 thoughts on “தீயாகிய தீபம் 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *