தீயாகிய தீபம் 8
விக்கியின் மனைவி என்னும் புதிய பதவியை ருத்ரா அடைந்துவிட்டாள். இந்த நொடிக்காக தானே எத்தனை எத்தனை ஆசை கனவுகளோடு காத்திருந்தாள். ஆனால் அவை அனைத்தும் மொத்தமாக இடிந்து தரைமட்டம் ஆகிவிட்டது. திருமண சடங்குகள் எதிலும் அவள் மனம் லயிக்கவில்லை.
விக்கி மற்றொரு பெண்ணுடன் இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் உடனே கேள்வி கேட்டு திருமணத்தை நிறுத்தியிருக்கலாம். ஆனால் தான் ஏன் அப்படிச் செய்யவில்லை எனத் தன்னை தானே பலமுறை கேட்டுவிட்டாள். “நீ விக்கியை நேசிப்பதுதான் காரணம் வேறு என்ன? ” உள்ளம் உண்மையை உரைத்தது.
சிறு வயது முதலே ருத்ராவிடம் ஒரு பழக்கம் உண்டு. தனக்கு வேண்டுமென்பதை எப்பொழுதும் யாருக்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டாள். அதை எப்படியும் தன் வசம் ஆக்கிக் கொண்டே தீருவாள்.
விக்கி தனக்கானவன். அவன் என்றுமே தனக்கு மட்டுமே சொந்தம். அதனால் மனதில் ஓர் தீர்மானத்திற்கு வந்தாள். அவள் மனதைப் போலவே ஹோம குண்டத்திலிருந்த அக்னி கொழுந்துவிட்டு எரிந்தது.
தன் முடிவு சரிதானா? என்னும் சந்தேகம் தோன்றியது. இருப்பினும் தன் வாழ்க்கை .. தன் விக்கி தனக்கு முக்கியம் என்னும் நிதர்சனமான கூற்று அவள் நிலைப்பாட்டை ஊக்குவித்தது.
அனைத்து திருமண சடங்குகளும் முடிந்தன. அடுத்து இருவரும் சேர்ந்து ஒரே வாழை இலையில் விருந்து உண்ண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இனி தாங்கள் இருவர் அல்ல ஒருவரே என்பதைச் சொல்லும் விதமாக ஒரே இலையில் உணவு அருந்துவது. பெரிய வாழை இலையை இட்டு அதன் நடுவே வெள்ளி தட்டு வைக்கப்படும். சுற்றிலும் பெரிய வண்ண வண்ணக் கோலங்களால் அலங்கரிக்கப்படும். வாழை இலையில் பலகாரங்கள் வைக்கப்பட்டு. வெள்ளித் தட்டில் சுடச்சுடச் சோறும் அதில் நெய் ஊற்றி சாப்பிட வேண்டும். இதுதான் அடுத்த சடங்கு. இவையெல்லாம் ஏற்பாடு செய்ய சிறிது நேரமாகும்.
விக்கி மற்றும் ருத்ரா அவரவர் அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். உறவுப் பெண்கள் ருத்ரா அணிந்திருந்த மாலைகளை எடுத்துவிட்டு அவள் நகைகளை சரி செய்துவிட்டனர். இருவரும் காலையிலிருந்து சாப்பிடவில்லை. திருமண சடங்கு முடியும்வரை எதையும் உண்ணக் கூடாது. எதுவும் சாப்பிடாமல் சட்டென விருந்து உண்டால் உடல் ஏற்காது என்பதால் குடிக்கச் சிறிது பழரசம் கொடுத்தார்கள். இருவரும் அவரவர் அறையில் ஓய்வெடுத்தார்கள்.
ருத்ரா நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினாள். தலைக் கனத்தது. அதற்கான காரணம் மனதின் பாரமா அல்லது பசியின் காரணமாத் தெரியவில்லை.
விக்கி திருமண சடங்கின் போது அவளைப் பார்த்துப் புன்னகை பூத்த தருணங்கள் மனதில் மலர்ந்தன. தாலி கட்டும் நிமிடம். நெற்றி வகிட்டில் குங்குமம் இட்ட நொடி என ஒவ்வொரு நிகழ்வும் ரம்மியமாய் உள்ளத்தில் வளம் வந்தது. விக்கி மெட்டி அணிவிக்கையில் “வலிக்குதா?” என அவளைக் கேட்டான். இல்லையென அவள் தலையசைத்தாலும் அவன் நம்பவில்லை.
“கொஞ்சம் பெரிசா வாங்கியிருக்கலாம்” என தன் அம்மாவுக்கு மட்டுமே கேட்கும் வகையில் மெட்டியைக் காண்பித்து குறைபட்டுக் கொண்டான் “பெருசா இருந்தா அதுக்கு பேர் கொலுசு .. விரலை அழுத்தி மெட்டியை மாட்டிவிடு” என அம்மா சொல்ல அப்படியே செய்தான்.
இதைக் கேட்ட அவள் உறவுகளும் தோழிகளும் “ருத்ரா நீ ரொம்ப லக்கி .. எவ்வளவு கேரிங் உன் வீட்டுக்காரர் ” எனக் கிண்டலும் கேலியுமாக அவளிடம் சொல்ல .. உண்மையில் அந்த நொடி நாணமும் பெருமையும் கலந்தவள் ரெக்கை இல்லாமல் பறந்தாள்.
இருவரும் அக்னியை வலம் வருகையில் விக்கி அவள் கரங்களை மென்மையாகப் பற்றியிருந்தான். ஒவ்வொரு நிகழ்வையும் மனதில் அசை போட்டாள். சொல்ல முடியாத ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது.
விக்கியின் எந்த ஒரு செயலிலும் நடிப்போ அல்லது பாசாங்கோ தெரியவில்லை. அவன் கண்கள் அவள் மேல் அன்பை பொழிந்ததை நன்றாகவே உணர முடிந்தது.
ருத்ரா துணிந்து ஒரு முடிவை எடுத்தாள். விக்கியின் கடந்த கால வாழ்க்கை இனி தனக்குத் தேவையில்லை. அவன் தன் மேல் அன்பு செலுத்துகிறான். இனி அவன் தனக்கு மட்டுமே சொந்தம்.
அந்த பெண்ணை தங்கள் இருவர் வாழ்க்கையிலிருந்தும் நிரந்தரமாக நீக்கிவிட வேண்டும். விக்கியின் நினைவிலும் அவள் வரக் கூடாது. அவ்வாறு நிகழவேண்டுமெனில் தான் முழுமையாக அவனின் உடல் பொருள் ஆவி என அனைத்திலும் நிரந்தரமாக இடம் பெற வேண்டும்.
அறையில் யாருமில்லை கதவைச் சாற்றினாள். தன் செல்போனை எடுத்து விக்கியும் அந்த பெண்ணும் இருந்த படத்தைப் பார்த்தாள். இருவர் கண்களும் உடல் மொழியும் புன்முறுவலும் காதலை வெளிப்படுத்தின. இதை அறிய புலனாய்வு தேவையில்லை.
விக்கி தன்னிடம் மறைத்ததை எண்ணுகையில் கோபம், வேதனை, வருத்தம் எனப் பல உணர்வுகள் கலவையாய் நெஞ்சை அடைத்தது. விக்கியிடம் இப்போதைக்கு அப்பெண்ணை பற்றி விசாரிக்கக் கூடாதென முடிவெடுத்தாள்.
படத்தை ஸ்கிரீன்ஷார்ட் எடுத்தாள். பின்பு அதில் க்ராப் (crop) மூலம் விக்கியை நீக்கி அந்த பெண் படத்தை பத்திரப்படுத்தினாள்.
அதை ரதி என்னும் பெண் கான்ஸ்டபிள் வாட்சப்பில் அனுப்பினாள். தான் மிகப் பெரிய துரேகத்தை செய்கிறோம் எனத் தெரிந்தே செய்தாள்.
எப்பொழுதும் தொல்லியல் துறையில் தோண்டி எடுக்கப்பட்ட பொக்கிஷங்களைப் பத்திரப்படுத்த காவல்துறை உதவி செய்யும். அந்த வகையில் காவல்துறையில் ருத்ராவிற்கு நல்ல நண்பர்கள் இருந்தனர்.
அடுத்த பத்தாவது நிமிடம் ரதி போன் செய்து “இனிய திருமண நாள் வாழ்த்துகள் மேடம். சாரி கல்யாணத்துக்கு வர முடியலை” என்றாள்.
“தேங்க்ஸ் மா .. என்ன மேடம்னு .. எப்பவும் போல அக்கானு சொல்லு ரதி”
“இன்னிக்கு உங்களுக்குக் கல்யாணம்… ” என ரதி பேச
“ஒரு முக்கியமான விஷயம் ரதி” என ருத்ரா விஷயத்தைத் தொட
குரலின் வீரியத்தைப் புரிந்த ரதி “ சொல்லுங்க அக்கா … யார் போட்டோ இது?” என அவளும் அதே பாணிக்கு வந்தாள்.
“சமீபத்துல ஒரு இடத்துல மூணு ஐம்பொன் சிலைகளை க ண்டுபிடிச்சோம் … அதுல ஒன்ற காணோம்”
“போட்டோல இருக்கிற பெண் ஆட்டையை போட்ச்சா”
“அவசரப்படாத ரதி .. முழுசா கேள்”
“சரி சொல்லுங்க”
“இதுல எந்த விஷயமும் மீடியாக்கு போகலை .. அரசாங்கம் ரகசியமா செயல்படுறாங்க .. ஏனா இது நம்ம நாட்டு பொக்கிஷம் இல்லையா?”
“ஆமா”
“சிலை கடத்தினவனென்று ஒரு ஆள் மேலை சந்தேகம் இருக்கு ஆனா ஊர்ஜிதம் ஆகலை .. அந்த ஆளுக்கும் இந்த பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதா தகவல் வருது”
“சரிங்க கா”
“நீ இந்த பொன்ன கண்டுபிடிச்சி அவளுடைய பேக்ரௌண்ட் என்ன .. எல்லா விஷயமும் சேகரித்து எனக்கு சொல்லு. இந்த பொன்னுக்கும் சந்தேகம் வரக் கூடாது. இப்ப இவ எங்க இருக்கானு தெரியாது. நீ தான் எல்லா கண்டுபிடிக்கணும்”
“ம்ம்..”
“உன்னுடைய மேலதிகாரிக்குக் கூட இது தெரியக் கூடாது .. ரகசியமான மிஷன் இது .. செய்வியா ரதி?”
“உங்களுக்காக இது கூட செய்யாமல் எப்படி கா .. கண்டுபிடித்து சொல்றேன்”
“இப்ப எங்க இருக்க?”
“ டியூட்டிக்கு கிளம்ப போறேன். மதுரைல அக்கா. மந்திரி இந்த பக்கம் இன்னிக்கு ராத்திரி போக போறார். அதான் பாதுகாப்புக்காக டியூட்டி.”
“சரி .. ரகசியமா இருக்கணும் ரதி .. ஜாக்கிரதை”
“கவலப்படாதிங்க அக்கா .. நானே கண்டுபிடிச்சி சொல்றேன். யாருக்கும் விஷயம் போகாது”
ரதியின் தலைமை அதிகாரி “டியூட்டிக்கு கிளம்புங்கள்” என ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தார்.
திருமண மண்டபத்தில் “ருத்ரா சாப்பிட வாமா மாப்பிள்ளையோடு முதல் விருந்து சாப்பிட போறே” என அவள் அம்மா அழைத்துச் சென்றார்.
பந்தியில் நடுநாயகமாக இருவரும் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மனையில் அமர்ந்தனர். அவர்களுக்கு முன்னால் வாழை இலையில் வகைவகையாக ருசிகரமான உணவு வகைகள்.
“விக்கி முதல்ல இனிப்பு எடுத்து ருத்ராக்கு ஊட்டிவிடு” எனப் பெரியவர் கூற
விக்கி தயக்கத்துடன் அவளை பார்க்க .. அவள் தலைகுனிந்தபடி சரி என்றாள்.
விக்கி அவளுக்கு ஊட்டினான்.
பிறகு “ருத்ரா நீ மாப்பிள்ளைக்கு ஊட்டிவிடு” என ஒருவர் கூற
அவளும் அதையே செய்தாள்.
அடுத்து போட்டோகிராபர் அவன் பங்கிற்கு உயிரை எடுத்தான். அதனோடு செல்போனில் போட்டோ எடுக்கிறேன் என சிலர் வந்துவிட்டனர்.
விக்கி பொறுமை இழந்தவனாக “சாப்பிட விடுங்க பா பசிக்குது” என புன்னகையோடு சொன்னான். உள்ளே கோபம்தான் ஆனால் காட்டமுடியாதே…
“பசி தாங்க மாட்டாயா விக்கி?”மனதில் குறித்துக் கொண்டாள் ருத்ரா.
அவளின் ஆராய்ச்சி பார்வையைப் பார்த்தவன் “என்ன?” எனப் புருவத்தை உயர்த்த .. புன்முறுவலுடன் எதாவது சொல்ல வேண்டுமென “ஐ’ம் ஸ்டார்விங் (starving)” என்றாள்.
அவளைக் காணவே பாவமாகிப் போனது “நல்ல சாப்பிடு ருத்ரா” என்றான்.
புதுமணத் தம்பதியினர் தங்களுக்குள் பேசிக் கொள்ள மற்றவர் நாகரீகம் கருதித் தள்ளி நின்றனர்.
நெஞ்சம் விம்ம“இந்நேரம் தன் விக்கி வேறொரு பெண்ணுக்குத் தாலி கட்டி இருப்பான். அவளுக்கு சொந்தமும் ஆகிவிட்டான். இனி அவனுக்கும் தனக்கும் எந்த பந்தமும் இல்லை” என நினைக்கையில் துக்கம் தொண்டையை அடைத்தது. தன் கண்ணீரை உள்ளிழுத்து விழுங்கினாள் நந்தினி.
ருத்ரா அழிக்க நினைக்கும் நந்தினி இவள்தான்…
இன்றைய நந்தினியின் நிலைக்குக் காரணம் ருத்ராதான். அதன் காரணத்தை இருபெண்களும் அறியவில்லை. நந்தினிக்கு இன்னமும் பல தொல்லைகளை ருத்ரா பரிசளிக்கப் போகிறாள்.
ஒளிரும் …
OMG 😮
Didn’t expected this from Rudra
Let’s see what happens next.
Thank you so much Abirami sis.
Rudhra eppdi panninathukku valid reason erukkumo 🤔🤔🤔🤔
Thank you so much Eswari sis
Interesting👍 good epi
Thank you so much Vino sis.
Intresting👌👌👌 eagarly waiting for nxt epi😍😍😍😍
Thank you so much Priya sis
Rudra villiya nee ithula ills unoda life theve illama varavsngaluku tha intha villi character kamipiya
Thank you so much Kalidevi sis.