Skip to content
Home » தீரனின் தென்றல்-50

தீரனின் தென்றல்-50

தீரனின் தென்றல் – 50

Thank you for reading this post, don't forget to subscribe!

இறக்கை இல்லாத பட்டாம்பூச்சி போல அந்த பெரிய வீட்டில் சுற்றி சுற்றி வந்தாள் அபூர்வா. அவள் பின்னவே ஓடித்திரிந்த கமலத்திற்கு மனதளவில் பத்து பதினைந்து வயது குறைந்து போயிருந்தது.

பொன்னிக்கு ஏற்கனவே இவளின் சேட்டைகள் எல்லாம் தெரியும் என்பதால் பேத்தி செய்யும் சேட்டைக்கும் தன் மகளை “அப்படியே உன்னை மாதிரி ஒரு அறுந்தவாலா பெத்து வைச்சிருக்கா..” என்று செல்லமாக கடிந்து கொண்டார் பொன்னி.

“கமலாம்மா பூர்வி இப்படி தான் ஓடிட்டே இருப்பா… கொஞ்சம் நேரம் நீங்க ரெஸ்ட் எடுங்க நம்ம வீட்டுக்குள்ள தானே ஓடி விளையாடுறா…” என்று ஆதீரன் சொல்ல

“பரவாயில்லை தம்பி… குழந்தையோட சிரிப்பு சத்தம் தான் இந்த வீட்டுக்கே உயிர் வந்த மாதிரி இருக்கு…” கமலம் சொல்ல

“அம்மா என் லஞ்ச் ஏன் இன்னும் பேக் பண்ணாம இருக்க? நான் ஆஃபிஸ் போகனும் ல…” என்றபடி தன் கைப்பையை மாட்டியபடி தென்றல் வர

“அம்மா தென்றல்.. உங்கம்மா லஞ்ச் டப்பால போட்டு வைக்கனும் னு தான் சொன்னாங்க… நான் தான் மதியத்துக்கு ஆதீ தம்பிக்கு சாப்பாடு எடுக்க ப்யூன் வருவாரு அவர்கிட்ட சூடா ஹாட் பேக்ல வைச்சு கொடுத்திடலாம் னு சொன்னேன்…” என்று கமலம் சொல்ல

வேறு மறுப்பு எதுவும் கூறாமல் “சரிங்க ம்மா..‌ நான் கிளம்பறேன் பாப்பாவை பார்த்துக்கோங்க… அவ கேட்டா ஸ்வீட் ஐஸ்கிரீம் எதுவும் கொடுத்திடாதீங்க… அம்மாவுக்கு ஏற்கனவே தெரியும் உங்களுக்கு தெரியாதுல உங்களை செல்லம் கொஞ்சி ஏதாவது கேட்பா.‌..” என்று தென்றல் அறிவுறுத்த அவளை முகத்தை சுருக்கி முறைத்து பார்த்தாள் அபூர்வா.

“தென்றல் நானும் ஆஃபிஸ் கிளம்பிட்டேன் வா… சேர்ந்தே போகலாம்” என்று ஆதீரன் சொல்ல அவனை முறைத்தாள் தென்றல். வேறு என்ன செய்ய முடியும்… “நமக்குள்ள இருக்குற இடைவெளி வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம்.. இன்னும் அவங்க மனசை எல்லாம் நான் கஷ்டப்படுத்த விரும்பலை… என் அம்மா என்னை நினைச்சு வருந்தக்கூடாது…” என்று பல கட்டளைகளை பிறப்பித்ததே தென்றல் தானே… அப்படி இருக்க பொன்னி கமலம் அபூர்வா என்று இருக்க இப்போது மறுத்தால் தன்னை நினைத்து வருந்தக்கூடும் என்று அமைதியாக அவனோடு கிளம்பினாள் தென்றல்.

இவர்கள் ஜோடியாக வாசல் வந்த நேரம் ஒரு கார் வந்து நின்றது வாசலில்… யார் என்று பார்க்க தர்மலிங்கம் வந்திருந்தார். அவரை திடிரென்று பார்த்து மகிழ்ந்த ஆதீரன்

“வாங்க சார்… வாங்க என்ன விஷயம் சார் வீட்டுக்கே வந்துருக்கீங்க…” படபடவென்று ஆதீரன் கேட்க

“ஏன் ஆதீ நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா?” தர்மலிங்கம் கேட்க

“ஐயோ அப்படி இல்லை சார்.. திடீர்னு வரவும் கொஞ்சம் சர்ப்ரைஸ்.. பேசனும் னு சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே…” என்றபடி வரவேற்று உள்ளே அமர வைத்து “கமலாம்மா… சாருக்கு காஃபி.. சுகர் கம்மியா” என்று சொல்ல

அவன் அக்கறை நினைத்து சிரித்தார் தர்மலிங்கம். “அப்பறம் ஆதீரன்… ஒருவழியா குடும்பஸ்தன் ஆகிட்ட போல ரொம்ப சந்தோஷம் ப்பா…” என்றிட

“ஆமா சார்… இவ என் மனைவி தென்றல்… இவங்க என் அத்தை பொன்னி அப்பறம் இவங்க தான் என் குட்டி இளவரசி அபூர்வா” என்று அனைவரையும் அறிமுகம் செய்ய

“ரொம்ப சந்தோஷம் தான் ஆதீ.. ஆனா கோவில்ல கல்யாணம் நடந்துருக்கு. என்கிட்ட சொல்ல கூட உனக்கு தோணலை இல்லையா?” தர்மலிங்கம் கேட்க

“அப்படி எல்லாம் இல்ல சார்… கொஞ்சம் அவசரமா நடந்தது. இப்போ ஒருவாரம் தான் ஆகுது சார் கல்யாணம் ஆகி.. ஆஃபிஸ் வேற ரொம்ப நாள் போகாம வேலை நிறைய பெண்டிங் ஆயிடுச்சு அதை முடிச்சிட்டு உங்களை பார்க்கனும் னு தான் நான் மனசுல நினைச்சிருந்தேன்…” என்று ஆதீரன் சொல்ல

“சரிப்பா சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன். அப்பறம் தென்றல் தானே மா உன் பெயர் நல்லா இருக்கியா?” என்று தென்றலை பார்த்து விசாரிக்க

“நல்லா இருக்கேன் சார்..‌” என்றாள் புன்னகையோடு…

“ஆதீ உன்னைப் பற்றி நிறைய சொல்லிருக்காரு… நீ அவரை புரிஞ்சு இப்போ வாழ்க்கையில திரும்ப ஒன்னு சேர்ந்திருக்கிறது ரொம்ப சந்தோஷம் ம்மா..” என்று பேசிக்கொண்டே போக சிரித்தபடி முகத்தை வைத்து காதுகளை மானசீகமாக அடைத்துக் கொண்டாள் தென்றல்.

“சரிப்பா… ஆதீ நான் எதுக்கு வந்தேன்னா நம்ம கம்பெனி ஷ்ரதா க்ரூப்ஸ் ஆரம்பிச்சு ஆண்டவன் புண்ணியத்துல இருபத்தைஞ்சு வருஷம் நிறைவா முடியப் போகுது.. அதனால தொழில் முறை நண்பர்கள் நெருங்கின சொந்தங்கள் மட்டும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி தரலாம் னு இருக்கேன். அதுக்கு தான் உன்னை உன் குடும்பத்தோட அழைச்சுட்டு போகலாம் னு நேர்ல வந்தேன்” என்று தர்மலிங்கம் சொல்ல

“சார் அதுக்காக நீங்க வீட்டுக்கே வரனுமா? ஒரு ஃபோன் பண்ணிருக்கலாமே… உங்களுக்கு தானே அலைச்சல்..” ஆதீரன் அவர் மீது அக்கறையில் கூற

“அட இதுக்கு மட்டும் இல்லப்பா… நான் ஏற்கனவே சொன்னேன் ல நீயும் உன் மனைவியும் திரும்ப ஒன்னு சேர்ந்த உடனே உங்களுக்கு முதல் விருந்து நான் தான் தருவேன் னு.. மத்தவங்களுக்கு தான் இது பார்ட்டி… உங்களுக்கு விருந்து.. நீயும் உன் மனைவி மகள் அத்தை கமலாம்மா னு எல்லாரும் வரனும்…” என்று அன்புக்கட்டளை போட

“கண்டிப்பா சார்…” என்று உறுதி அளித்த ஆதீரனை முறைத்த “தென்றல் என்னமா வருவீங்க ல்ல?” என்று தர்மலிங்கம் இவளை பார்த்து கேட்க “ம்ம்… ம்ம் சரிங்க சார்..” என்று புன்னகைத்து வைத்தாள் தென்றல்.

“சரி நீங்களும் கண்டிப்பா வரனும் ம்மா..” என்று பொன்னி கமலம் இருவரையும் பார்த்து சொல்ல

“நீங்க வீடு வரைக்கும் வந்து கூப்பிட்டதுல ரொம்ப சந்தோஷம் ஐய்யா… நான் எதுக்கு.. எனக்கு இந்த மாதிரி பெரிய ஆளுங்க நடத்துற பார்ட்டி விருந்தெல்லாம் கலந்து பழக்கம் இல்லை அத்தோட தென்றல் அப்பா இறந்தப்பறம் நான் வெளியே விஷேசங்கள் ல கலந்துக்கிறதையும் கூட அதிகம் தவிர்த்திடுவேன்.. தப்பா எடுத்துக்க கூடாது.. பிள்ளைங்க வருவாங்க” என்று பொன்னி கூற

“ஆமாங்க.. கல்யாணம் ஆனதுல இருந்து ஆதீ தம்பி பொண்டாட்டி பிள்ளையோட தனியா எங்கேயும் போனதே இல்ல… முதல் விருந்து தர உங்க விசேசத்துக்கு அவரு பொண்டாண்டியையும் மகளையும் கூட்டிட்டு வரட்டும். நாங்க இன்னொரு நாள் இவங்க வரும்போது வீட்டுக்கு வரோம் ஐயா…‌” என்று கமலமும் மறுத்து விட்டார்.

“சரி… ஆதீ அப்போ நீ உன் வொய்ஃப் குழந்தையை கூட்டிட்டு கண்டிப்பா வரனும்… நான் கிளம்பறேன்…” என்று விடை பெற்றார் தர்மலிங்கம்.


“அண்ணா.. இப்போ புதுசா தாம்பரத்துல ஸ்டார்ட் பண்ணிருக்க ப்ராஜெக்ட் ஃபைல் எங்க இருக்கு?” அலுவலகத்தில் தன் கேபினில் இருந்து மதனுக்கு அழைத்து தென்றல் கேட்க

“ஏன் தென்றல் பாஸ் கேபின் ல தானே இருக்காரு… அவர்கிட்ட கேட்டா சொல்லுவாரே…” அப்பாவித்தனமாக மதன் சொல்லி விட

“அண்ணா… உங்களுக்கு தெரியும்ன்னா சொல்லுங்க… இல்ல விடுங்க” என்று கடுப்பாக தென்றல் கூற திருதிருவென விழித்து விட்டு

“அம்மா தென்றல்.. உங்க கேபின்ல பாஸ் சீட்க்கு நேரா ஒரு கபோர்ட் இருக்குல…. அதுல மேல் அடுக்குல இருக்குமா…” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டான் மதன்.

“ம்கூம்.. அவருக்கு அசிஸ்டென்ட் வேலை கொடுத்தா பக்கத்துலயே இருப்பா ன்னு பாஸ் ப்ளான் பண்ணாரு.. ஆனா தென்றல் அந்த கேபின் ல கூட உட்கார மாட்டேன் னு அடம் பண்ணி கடைசியா ‘பாஸ் உனக்கு உன்மேலயே நம்பிக்கை இல்லையா’னு பூடகமா ஏதோ சொன்னதும் அந்த கேபின் போனா தென்றல்…

இப்போ அவர்கிட்ட ஒரு ஃபைல் பத்தி கூட கேட்காம நமக்கு கால் பண்றா. இவங்க நடுவுல வந்து மாட்டிக்கிட்டு படாத பாடு பட வேண்டி இருக்கே மதனு…” என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டான் மதன்.

அவன் நிலை அப்படி இருக்க ஆதீரன் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது.

ஆறரை அடி ஆண்மகன் அவன் உயரத்திற்கு ஏற்ப தன் அறையில் கபோர்ட் வடிவமைத்து வைத்திருக்க ஐந்தரை அடி தென்றல் அதில் மேல் அடுக்கில் இருந்த கோப்புகளை எடுக்க கையை தூக்கி.. எகிறி குதித்து என்று ஏதேதோ முயற்சி செய்தும் ஃபைல் கையில் அகப்படவில்லை..

மாறாக தென்றல் கட்டியிருந்த புடவை இழுத்து சொருகி இருந்த முந்தானை கழன்று கீழே விழ பளிச்சென்று அவளின் இடை மின்னல் கீற்றாக ஆண்மகனின் விழிகளை பறித்து போனது…

தென்றலை அவள் குழந்தை பருவம் முதல் பலவித உடைகளில் பார்த்திருக்கிறான் ஆதீரன். முட்டி அளவு கவுன் கணுக்காலை தொட்ட பட்டுப் பாவாடை சட்டை… பின்னர் பருவ காலத்தில் பள்ளிச் சீருடை என்ற காரணத்தால் அதிக நாட்கள் பாவாடை தாவணி..‌ கல்லூரி காலத்தில் சுடிதார்.. அவ்வப்போது கோவில் திருவிழா நேரங்களில் புடவை என்று பல உடைகளில் பார்த்திருக்கிறான் தான்…

ஆனால் அப்போது எல்லாம் தென்றல் மிகவும் ஒள்ளியாக இருக்க எதுவும் விகல்பம் தெரியாது. அத்தோடு ஆதீரனும் அப்படி அவளை பார்த்ததே இல்லை. ஆனால் இப்போது பருவ மாற்றம் என்பதை விட தாய்மையை அனுபவித்த குழந்தைப்பேறுக்கு பின்னர் தென்றலுக்கு இடை என்றொரு பகுதியே இப்போது தான் ஆதீரனுக்கு புலப்படுகிறது…

இத்தனை நாட்கள் தென்றலை பிரிந்து முனிவர் போல தவ வாழ்க்கை வாழ்ந்த ஆதீரன் தென்றல் அருகில் இருக்கும் போதும் அவனை புரிந்து கொள்ளாமல் விலகி இருக்க இப்போது இவளின் இந்த கோலம் ஆண்மகனுக்கு உரித்தான உணர்வுகளை ஆதீரனுக்கு தூண்டப்பட அதை வெளிக்காட்டவும் முடியாமல் அடக்கிடவும் வழி தெரியாமல் திண்டாடிப் போனான் ஆதீரன்.

எத்தனை முறை எட்டி எடுக்க முயன்றும் முடியாமல் போக எதார்த்தமாக தலையை ஆதீரன் பக்கம் திரும்பிய தென்றல் ஆதீரனின் பார்வை அறிந்து சட்டென்று புடவையை இழுத்து மறைத்தவள் தீயாக முறைக்க தன் இருக்கை விட்டு எழுந்து தென்றலை நெருங்கி வந்தான் ஆதீரன்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

2 thoughts on “தீரனின் தென்றல்-50”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *