Skip to content
Home » தீரனின் தென்றல் – 8

தீரனின் தென்றல் – 8

ஆதீரன் சொன்னது போல சித்ரா தந்த கொட்டேஷன் வாங்கிக் கொண்டு ஆதீரனின் வீட்டின் முன்னர் தன் பைக்கை நிறுத்தினான் மதன்…

Thank you for reading this post, don't forget to subscribe!

வீட்டை பராமரித்து ஆதீரன் இங்கு தங்கும் நாட்களில் அவனுக்கு சமைத்து போடும் கமலம் என்பவர் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்து “மதன் தம்பி… உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு… எப்படி ப்பா இருக்க?” அக்கறையாக விசாரிக்க

“எங்கம்மா நல்லா இருக்க விடுறாங்க… எப்போ பாரு எதாவது பூடகமா பேசி என்னை குழப்பி விட்டுட்டே இருக்காங்க…” என்று அவன் பாட்டுக்கு புலம்ப அவனை வித்யாசமாக பார்த்தார் கமலம்.

அதை உணர்ந்து “நான் நல்லா இருக்கேன் மா… போய் பாஸை பார்த்திட்டு வரேன் எனக்கும் சேர்த்து உலையில அரிசியை போடுங்க…” என்று கூறியபடியே மேலே ஆதீரன் அறைக்கு சென்றான் மதன்.

நேற்று ஆதீரனின் கையெழுத்துக்காக வைத்த ஃபைல் அனைத்தும் அப்படியே கிடந்தது.

ஷோபாவில் காலை நீட்டி இடது கையில் தலைக்கு அணையாக வைத்து வலது கை நெஞ்சில் ஒரு ஃபோட்டோ வை அணைத்து இருந்தது.

“பாஸ்…” மதன் அழைக்க நிமிர்ந்து பார்த்தான் ஆதீரன்.

“சொல்லு மதன்…” என்று எழுந்து அமர இன்னொரு இருக்கையில் அமர்ந்த மதன் கீழே வைக்கப்பட்ட ஃபோட்டோவை கூர்மையாக பார்த்து “பாஸ்… இது தென்றல் தானே? ஆனா சத்தியமா அடையாளம் தெரியல பாஸ்… ஆக்சுவலா அபூர்வாக்கும் தென்றலுக்கும் பெரிய வித்யாசமே இல்ல… தென்றல் ஆரம்ப காலத்துல ரொம்ப குழந்தை தனமா இருந்திருப்பாங்க போலவே?” மதன் பேசிக் கொண்டே போக ஆதீரன் மீண்டும் ஒரு முறை உற்று பார்த்தான் புகைப்படத்தை…

ஆம்… தென்றல் முகத்தில் இப்போது இருக்கும் அந்த அனுபவ முதிர்ச்சி இறுக்க தன்மை எதுவுமே இல்லை… எந்த கள்ளம் கபடம் இன்றி கறந்த பால் போல சிரித்து கொண்டு இருந்தாள் அந்த மாநிறத்து மஞ்சள் முகத்தழகி… சில நிமிடங்கள் அதை ரசித்துக் கொண்டு இருந்தான் ஆதீரன்.

“சார்… திரும்ப திரும்ப கேட்குறேன் னு தப்பா நினைக்க வேண்டாம் பாஸ்… தென்றல் உங்க வொய்ஃப்… அபூர்வா உங்க குழந்தை உங்களுக்குள்ள ஏதோ மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்… ஓகே. ஆனா அதுக்காக அபூர்வா கிட்ட அப்பா இறந்துட்டாரு னு சொல்லிருக்காங்க..‌ நம்ம ஆஃபிஸ் ல சித்ராகிட்ட கூட ஹஸ்பண்ட் இறந்திட்டதா சொல்லிருக்காங்க… ஏன் பாஸ்… அப்படி என்ன கல் நெஞ்சம் அந்த தென்றலுக்கு…” மதன் படபடவென்று பொரிந்து தள்ள

“முதல்ல தண்ணீ குடி மதன்..‌” என்று குவளையை அவன் பக்கம் நகர்த்தி வைக்க மதன் எடுத்து பருகினான்.

“மதன்… முதல்ல ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லனும்.. எனக்கும் தென்றலுக்கும் இன்னும் கல்யாணம் ஆகவே இல்லை…” என்று ஆதீரன் சொல்ல மதனுக்கு புரையேறியது..

“பாஸ் என்ன சொல்றீங்க பாஸ்?” என்று தனக்கு தானே தலையில் தட்டிக் கொண்டு இருமியபடி கேட்க

“ஆமா மதன்… எனக்கும் தென்றலுக்கும் கல்யாணம் ஆகலை… அது எங்களுக்குள்ள தேவையும் படலை..‌ தென்றல் எனக்காக பிறந்தவ… இருபது வருஷம் என்னை மட்டுமே நினைச்சு எனக்காக வாழ்ந்தவ… இப்போவும் என் நினைவுகள் அவளுக்கு இருக்கு ஆனா, அது வெறுப்பா மாறி இருக்கு…” என்று சொல்ல

“பாஸ் எதுவா இருந்தாலும் முழுசா சொல்லிடுவாங்க பாஸ்…” என்று கையெடுத்து கும்பிட்டு மதன் கேட்க அவனை செல்லமாக முறைத்தான் ஆதீரன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு… மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான தேனி மாவட்டத்தில் ஒரு அழகிய மண்மணம் மாறாத கிராமம் தான் ஆதீரன் தென்றலுக்கு சொந்த ஊர்…

தென்றலின் தந்தை ரங்கநாதன் அவரின் ஒரே தங்கை அன்னபூரணியின் மகன் தான் ஆதீரன். ஆதீரனின் தந்தை அவனுடைய பத்தாம் வயதில் இறந்து போக கணவனை இழந்த தமக்கை தந்தையை இழந்த ஆதீரன் இருவருக்கும் ரங்கநாதன் தான் எல்லாம்… ஆதீரன் தந்தையும் அதே ஊர் என்பதால் இவர்கள் இருவர் மட்டும் தனியே அதே வீட்டில் தங்கி இருக்க நான்கு தெரு தள்ளி அமைந்திருந்தது தென்றலின் வீடு.

தென்றல் பிறந்த உடனேயே அன்னபூரணி கையில் வாங்கும் போதே என் மருமக என்று கூறி தான் வாங்கினார். அது தொட்டு தென்றல் வளர வளர அவளை தன் மகனுக்கு மணம் முடிக்கும் ஆசையும் வளர்ந்தது அன்னபூரணிக்கு… ஆனால் ரங்கநாதன் இதை மறுக்கவில்லை பிள்ளைகள் முடிவு வேறாக இருந்தால் அதை ஏற்கும் திடம் வேண்டும் என்று மனதை பக்குவப்படுத்தி இருந்தார்.

அதனால் தென்றலிடமோ ஆதீரனிடமோ இதைப்பற்றி அவர் பேசியதே இல்லை…

ஆனால் யாரும் சொல்லாமலேயே தென்றலுக்கு ஆதீரன் மீது ஒரு வித பிடித்தம்… அது விருப்பமாகி காதலான நாள் எது என்று அவளே அறிய மாட்டாள்… ஆனால் ஆதீரன் அவளைப் பார்த்து விருப்பமாக பேசியதோ அல்லது சிறுபார்வை கூட வெளியிட்டது இல்லை… அதனால் தன் மருமகன் மீது பாசம் வைத்த ரங்கநாதன் மகள் குழந்தை தனமாக ஆதீரனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினாலும் எடுத்துச்சு சொல்லி தன் மகளை அதட்டுவார். ஆனாலும் தென்றல் ஒரு நாள் கூட அடங்கியதே இல்லை…

பொதுவாக ஊருக்கு கதிரவன் வந்தால் தான் பொழுது விடியும் ஆனால் ஆதீரனின் வீடு துயில் கலைவது  தென்றலின் வருகையில் தான்…

வாசலில் அழகாக கோலம் வரைந்து வண்ணம் தூவி இத்தனை நேரம் ஆகியும் அத்தையும் அத்தை மகனும் எட்டி கூட பார்க்கவில்லையே என்று மனதில் பொருமி விட்டு

“என்ன அத்தை… மருமக இந்த நேரத்துல வருவாளே… புள்ளைக்கு காஃபி போடுவோம் னு நினைப்பு இல்லாம என்ன இன்னும் தூக்கம் உனக்கு?” அதட்டலோடு தான் உள்ளேயே வர

“வாடி யம்மா… என்னடா பொழுது விடிஞ்சு அரைமணி நேரம் ஆச்சே இன்னும் ஆளைக் காணோம் னு நினைச்சேன் வந்துட்ட…” என்று அன்னபூரணி கூறியபடி அடுப்பில் பாலை வைத்துவிட்டு

“தென்றல்… தீரன் அறையில இருக்குற அழுக்கு துணிகளை எல்லாம் எடுத்துட்டு வந்து ஊற வைம்மா… காஃபி போட்டுட்டு நான் துவைச்சு போடுறேன்…” பூரணி சொல்ல

“ஏன் ஊற வச்ச நானே துவைக்க மாட்டேனா?” சொல்லாத வேலைகளையும் தானே செய்வேன் என்று கூறி விட்டு அவசரமாக ஆதீரன் அறைக்கு வந்தாள் தென்றல்.

துணியை எடுக்க கால்களை தரையில் ஊன்றாமல் பாதத்தை தூக்கி கொண்டு கொலுசு சத்தம் வராமல் நடந்து வந்தவள் உள்ளே வந்து கதவை தாழிட்டு பூட்டாமல் வெறுமனே சாத்தி விட்டு ஆதீரன் அருகில் படுத்துக் கொள்ள அவனோ உறக்கத்தில் புரண்டு படுத்து அவள் மீது கை போட்டு கட்டிக் கொண்டான் ஆதீரன்.

  • தொடரும்…

3 thoughts on “தீரனின் தென்றல் – 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *