Skip to content
Home » தீராகாதலே – 12

தீராகாதலே – 12

தீரா காதலே – 12

🎶 அடடா.. எனகென்ன ஆகுது
தினம் போகும் வழியெல்லாம்
இப்ப மறந்து மறந்து போகுது
தனியா நான் நிக்கும் போதெல்லாம்
உன் எண்ணம் மட்டும்தான்
நிக்காம போதை ஏறுது

முழுசா உனக்கென நான் வாழுறேன்
புதுசா தினம் தினம் என பாக்குறேன்
அழுதா தோளுல நான் சாஞ்சுப்பேன்
அளவில்லாம ஆசை வெக்குறேன்
ஏனோ தானோ என்று போன நாளும்
எல்லாம் நீயே என்று மாறுதே🎶

தொலைக்காட்சியில் பாடல் ஒலித்து கொண்டிருக்க அதனோடு சேர்ந்து பாடி ரசித்தவாறு ஆதினி அமர்ந்திருந்தாள். அடுத்த வரி தொலைக்காட்சியில் ஒலிக்கும் முன் தன் காதருகே கேட்க திரும்பி பார்க்க தீரா அவளருகில் அமர்ந்து பாடினான்.

🎶 யாரும் இல்லா நேரம் வந்த பின்னும்
உனதருகில் காதல் ஒன்று கண்டேன் பெண்ணே
லேசா அழகுல தான விழுகுறேன்
நீ பேசி சிரிக்கையில்
உன் உதட்டுல உறையுறேன்
வாழ்க்க வாழத்தான் உன்னோட இருக்குறேன்
உன்கூட நடக்கும் போது
மழையில்லாம நனைஞ்சு போகுறேன்
கண்ண வீசி கண்ண வீசி
கட்டி போடும் காதலி
கண்ணு ரெண்டும் முத்தம் கேக்குதே🎶

பாடியபடி அவளது கன்னங்களை பற்ற தட்டிவிட்டவள் எந்த உணர்வையும் வெளிகாட்டாது எழுந்து பால்கனியில் சென்று அமர்ந்து கொண்டாள். பின்னோடு வந்தவன்


“ஹேய் ஆது பிளிஸ் அதான் சொன்னேன்லா குருவோட அப்பாக்கு ஆக்ஸிடண்ட் ஆகிருச்சி அவன் கூட யாரும் இல்லை கணேஷ் அபிஷியல் மீட்டிங்ல மாட்டிகிட்டான். ஒரேயொரு நாள் தானே வீட்டுக்கு வரல அதுக்கு இவ்வளவு கோவமா? அதான் காலைல வந்து அத்தனை சாரி சொன்னேனே?”

“சாரி சொன்ன எல்லாம் சரி ஆகிடுமா? நீங்க தானே எனக்கு எல்லாம் பழக்கபடுத்தினீங்க அப்புறம் திடீர்ன்னு தனியா சாப்பிடு தனியா தூங்குனா எனக்கு எப்படி இருக்கும்?” என்று ஆதினி கண்ணை கசக்கினாள்.

“ஹேய் லூசு என்னடி இதுக்கே கண்ண கசக்குற நாளைக்கே நான் செத்..” வார்த்தைகளை முடிக்கும் முன் வாயிலேயே அடித்திருந்தாள் ஆதினி.


“ஹேய் என்னடி புருஷன பொசுக்குனு அடிச்சிட்ட?” இன்ப அதிர்வில் கேட்டவனை முறைத்தவள்


“ஆமா பொல்லாத புருஷன் பேச்ச பாரு இனி இது மாதிரி பேசாதீங்க தீரா “


“சரி சரி சண்டை எல்லாம் போட்டது போதும் பசிக்குது சாப்பாடு எடுத்து வை”


இருவரும் உண்டுவிட்டு பால்கனியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். தீரா எதையும் மறைக்காது சொல்ல அவளுக்கு தான் ஏதோ சரியில்லை என்று மனதில் உறுத்தியது. மறுநாள் குருவின் தங்கைக்கு திருமணம் அதற்கு செல்ல வேண்டும் என்றும் உரைத்திருந்தான்.

மறுதினம் இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து வந்தனர். மனதார மணமக்களை வாழ்த்தினர். தன் தங்கை திருமணம் என்பது போல அனைத்து வேலைகளையும் மனம் சுணங்காமல செய்தான். அன்றைய தினம்தான் இருவரும் இணைந்து வெளியே போனது.

***

அடுத்து வந்த இரண்டு மாதங்களில் தீராவிடம் நிறைய மாற்றங்கள். எதுவும் சொல்லாமல் காலையே கிளம்பி சென்று விடுவான். இரவும் மிகவும் தாமதமாக தான் வருவான். வீட்டில் சாப்பிடுவதையே மறந்துவிட்டான். பேசினாலும் ஓரிரு வார்த்தைகளை உதிர்த்து விட்டு கடந்திடுவான். சில நேரங்களில் எரிச்சல்படுவான். வீட்டில் இருக்கும் நேரத்தில் அலைபேசியில் மூழ்கி விடுவான். ஆதினி தான் மனசுடைந்து போனாள்.

அப்படி இருக்கும் வேளையில் ஒருநாள்
“இன்னைக்கு என்ன நாள்னு நிபாகம் இருக்கா தீரா?” என்று காலை அவன் எழுமுன்னே கேட்டிருந்தாள்.

பதிலேதும் உரைக்காமல் இருக்கவே
“இன்னைக்கு ராகவ் மலரோட வெட்டிங் ஆன்வர்சரி”


“சோ வாட்? ஏதோ நம்ம ஆன்வர்சரி போல முறைச்சிகிட்டு நிக்ர”


“எஸ் நமக்கும் ஆன்வர்சரி தான். இந்த டேயில் தான் பஸ்ட் பஸ்ட் நாம மீட் பண்ணோம் மறந்துட்டீங்கள்ள”
ஏதும் சொல்லாமல் விருட்டென்று கிளம்பி சென்று விட்டான்.

மனமோ அலுத்து கொண்டது என்ன தான் ஆச்சு இவங்களுக்கு என்று. அன்றைய தினம் அலுவலகத்தில் மயங்கி விழுந்ததால் இடைப்பட்ட நேரத்திலே ஆதினி வீட்டுக்கு வந்திருந்தாள். விஷயம் கேள்விப்பட்ட தீரா ஓடோடி வந்தவன் குற்றவுணர்ச்சியுடன் மருத்துவமனை அழைத்து சென்றான். பரிசோதித்த மருத்துவர்


” வாழ்த்துக்கள் மிஸஸ் ஆதினி நீங்க அம்மாவாக போறீங்க”


“வாவ் தேங்க்யூ டாக்டர்” என்று ஆதினி குதூகலமாக தீராவிடம் சொல்ல அவனுக்கோ மகிழ்ச்சியும் அல்லாத துக்கமும் அல்லாத இரு மனதோடு சிரித்து வைத்தான். அதனை கவனித்தாலும் ஏதும் சொல்லாமல் வீட்டிற்கு வந்தார்கள்.


“இனி நீ வேலைக்கு போக வேண்டாம் ஆது வீட்டில் இருந்து ரெஸ்ட் எடு மத்தத நான் பாத்துகிறேன்” வந்ததும் உரைத்திருந்தான்


“ஏன்?”


“சொன்னா சரினு கேளேன். அதென்ன ஏன்னு கேள்வி? இந்த நிலைல உன்னை வேலைக்கு அனுப்புனா எல்லாரும் என்னை பற்றி என்ன நினைப்பாங்க?”


“என்ன நினைப்பாங்க?” பொறுமையாகவே கேட்டாள்.

தன் தோளை தழுவி இருந்த அலுவலகபையை தூக்கி எறிந்தவன் விருட்டென்று வெளியேறினான். ஒரு மனமோ அவள் இந்த நேரத்தில் அலைய வேண்டாம் வீட்டில் ஓய்வு எடுத்து குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்து சொன்னதை அவள் ஏற்காமல் கேள்வி கேட்கிறாளே என்று குமைந்தது. மறுமனமோ அவள் இனி வெளியே வராமல் இருப்பது தனக்கு நல்லது என்று நினைத்தது. சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வீட்டிற்கு வந்தான்.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்”


“ம்ம்ம்” என்றவாறு சோபாவில் அமர்ந்தான்.


“நான் வேலைக்கு போகல பட் எதுக்கு இந்த திடீர் கரிசனைனு தெரிஞ்சிக்கலாமா?”


“வாட்? திடீர் கரிசனையா? என்ன பேசுறனு புரிஞ்சிதான் பேசுரீயா?” தீரா


“எனக்கு புரியரது இருக்கட்டும் நீங்க இத்தனை நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க…….? எங்க இருந்தீங்க?”


” “


“என்ன சைலண்ட் ஆகிட்டீங்க? இந்த திடீர் கரிசனை குழந்தைக்காகவா…… இ..ல்..லை.. குழந்தையை சுமக்கிற எனக்காகவா?” அழுத்தமாக உதிர்ந்தன வார்த்தைகள்.


“ஆதினி.. பிளீஸ் ஸ்டாப் இட்”


“எனக்கு தெரிஞ்சாகனும் சொல்லுங்க”


குளியலறை சென்றவன் ஷவரை திறந்து விடும் சத்தம் தான் பதிலாய் வந்தது.


இரவு உணவை தயார் செய்தவள் அதை மேஜையில் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.


“வா ஒரு ரைய்டு போய்ட்டு வரலாம்” என்று வெளியே வந்தவன் அழைக்க பதிலேதும் உரைக்காமல் சென்றாள். நிலவனின் குளிர்ச்சியுடன் தென்றல் முகத்தில் வீச அந்த ஐந்து நிமிட ஈருருளி பயணம் மனதிற்கு இதமாக இருந்தது.


“ஐ அம் சாரி ஆது… …. …. … இனி அப்படி நடக்காது ……. எனக்கு ரெண்டு பேரும் இம்பார்ட்டன்ஸ் தான் பட் பஸ்ட் எப்போதும் நீ தான் எனக்கு” என்று வீட்டுக்கு வந்ததும் சொல்லிய தீரா அவனே தட்டில் உணவை எடுத்து வைத்து ஊட்டினான். அமைதியாக உண்டு முடித்தவர்கள் பால்கனியில் அமர்ந்திருந்தனர்.

மௌனம் ஆட்சி செய்ய வார்த்தைகள் தான் வெளிவருவேனா என்று போராடியது இருவருக்குள்ளும். ஆதினி அவன் மடியில தலை வைத்து படுத்து நிலவனை ரசிக்க ஆரம்பித்தாள். தீராவின் கைககள் அவள் தலையை கோதின. வெளியே தான் வார்த்தைகளை உதிர்க்கவில்லையே தவிர மனதிற்குள் இருவரும் தங்கள் மனநிலையை சொல்லி பேசிக்கொண்டனர். எதிரில் பேசி இந்த அழகான தருணத்தை கெடுத்து கொள்ள இருவருமே விரும்பவில்லை.

மறுநாள் தீரா காலையே எழுந்து காலைக்கும் மதியத்திற்குமான உணவை தயார் செய்ததோடு இடையே குடிக்க பழச்சாறும் ஹெல்தி ஸ்னாக்ஸூம் தயார் செய்து வைத்து வீட்டை சுத்தம் செய்து குளித்து கிளம்பி இன்னும் தூங்கி கொண்டிருந்தவள் அருகே வந்து ஒரு பேப்பரில்

‘செல்ல பொண்டாட்டி சாப்பிட்டு ரெஸ்ட் எடு எனக்கு வேலை இருக்கு பை’

என்று எழுதி வைத்து விட்டு சென்றுவிட்டான்.
எட்டு மணியளவில் எழுந்தவள் எழுதிய பேப்பரை பார்த்து பெருமூச்சு விட்டபடி பால்கனியில் வந்தமர்ந்து கதிரவனின் கதிர்களை உள்வாங்கினாள்.

சிறிது நேரம் கழித்து அலுவலகத்திற்கு அழைத்து தான் இனி வரமுடியாது என்பதை சொல்லி மன்னிப்பு கேட்டாள். சாப்பிட்டு தொலைக்காட்சி பார்த்தாள் நேரம் தான் நகர்வேனா என்று தர்ணா செய்தது.


வேலைக்கு செல்லும் போது நேரம் போதவில்லை என்ற கவலை இப்போது வீட்டில் இருக்கும் போது நேரமே போகவில்லையே என்று அழுத்தத்தை தான் கொடுத்தது. மாலை வந்தவன் பாலில் பாதாம் கலந்து கொடுத்தான்.

சில மாதங்களுக்கு பிறகு அவளிடம் முகம் பார்த்து பேசவும் அவனின் கனிவிலும் அன்பிலும் மீண்டும் உருக ஆரம்பித்தாள் ஆதினி. இருந்தாலும் ஒரு விலகல் இருந்ததை இருவருமே உணர்ந்து தான் இருந்தனர்.

***


மூன்று மாதங்கள் வரை நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்வில் மீண்டும் காதல்பஞ்சம் சூழ்ந்தது. ஆம் தீரா மீண்டும் காலை எழுந்தவுடன் வெளியே செல்வதும் அலுவல் நேரம் நெருங்கும் நேரத்தில் வந்து கிளம்பி போவதும் இரவு தாமதமாக வருவதும் வீட்டில் இருந்தால் அலைபேசியில் யாரிடமாது பேசுவதும் சண்டையிடுவதுமாக தனியுலகில் மூழ்கினான். மீண்டும் தான் தனித்துவிடப்பட்டதை ஆதினி உணர்ந்தாலும் இப்படியே விடுவது சரியல்ல என்றெண்ணி பிடிவாதமாக அவனை நிறுத்தி உணவை உண்க வைத்து அனுப்புவதை வழக்கமாக்கினாள்.

வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி தர மறந்து போனான் செலவிற்கு என்று அவளிடம் தரவும் மறந்து போனான். அன்றைய தினம் ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமையில் அவன் வீட்டை விட்டு வெளியேறும் முன் வீட்டின் பொருளாதார நிலையை சொன்னவள் தனக்கும் நிதி வேண்டும் என்று சொன்னாள். அந்நேரம் அலைபேசி அழைப்பு வரவே பேசிக்கொண்டே வெளியேறி விட்டான். மனதாங்கலுடன் அவன் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வாயிலாக கவி ஒன்றை அனுப்பினாள்.

காதலிக்கும் போது காதல்பேசியாக இருந்தது இன்று மணமானபின்னே தொல்லைபேசியாக மாறிவிட்டது


அன்று தொலைவில் இருந்தோம் பேசிக்கொண்டே காதல் பேசியில் அன்பை பகிர்ந்தோம்


இன்று அருகில் இருந்தும் என்னை அணைக்காமல் அப்படி என்ன அந்த தொல்லை பேசியில் பார்க்கிறாயோ


அன்று என் சந்தோஷம் நீயே என்று உரைத்து விட்டு இன்று அருகில் இருந்தும் அலை பேசியை பார்த்து பேசுகிறாய் சிரிக்கிறாய்


காதல் மறந்து விட்டதா


காதல் மரத்துவிட்டதா


காதல் மனைவி கசந்து விட்டாளா”


டீக்கடை – கல்மண்டபம்


“இன்ன தல.. காலையிலேயே வூட்டுல சண்ட இழுத்துனு வந்திட்டியா” டீ குடித்தபடி ஒரு இளைஞன் கேட்டிருந்தான். அவன் தலையில் எண்ணெய் தடவி பல மாதம் கடந்த நிலையில் தலை கேசம் தன் நிறத்தை இழந்து காய்ந்த காட்டுச்செடி போல் காட்சியளித்தது.

“அய்யோ அப்படிலாம் இல்ல ஜி” தீரா

“மூஞ்ச பாத்தா அப்டி தெர்லயே இன்னா அண்ணி திட்டிருச்சா”

“வேலை டென்ஷன் ஜி “


“வேலை டென்ஷனா? இந்தா இத்த இழுத்து வுடு சும்மா எல்லா டென்ஷனும் காத்தா பற்ந்துடும்” என்று சொல்லி தான் பாதி புகைத்த புகைப்பூஞ்சுருளை அவன் வாயருகே வைத்தான். இதுவரை பழக்கம் இல்லாதவன் இன்று பழக்கி கொண்டான்.


“ம்ம்ம் ஜி உங்களுக்கு தெரிஞ்சி யாராவது காசு கடன் கொடுப்பாங்களா? தெரிஞ்சா சொல்றீங்களா?” தீரா


“அப்படி வா வழிக்கு பாத்தியா உள்ள போனதும் எப்படி டென்ஷன டக்குன்னு குறைச்சிடுச்சி. ஆங் இருக்காப்ல நம்ம ப்ரெண்ட் ஒருத்தர் வட்டிக்கு விடுவாப்ல வேணும்னா சொல்லு வாங்கி தர்ரேன்”
சரியென்று அவனுடன் சென்றான்.


அன்றைய மாதம் மாதாந்திர பரிசோதனைக்கு செல்ல வேண்டும். சத்து மாத்திரை வாங்க வேண்டும். தீராவோ எதையும் கண்டு கொள்ளாமல் இருக்க அரசு மருத்துவமனையில் சென்று பரிசோதனை முடித்துவிட்டு வந்தாள். வீட்டில் சமைக்க எதுவுமே இல்லை. பசியோ தீயாக பரவியது. ஈருயிர் அல்லவா? தீராவிற்கு அழைத்து அழைத்து பார்த்தவள் தண்ணீர் குடித்து விட்டு படுத்துக்கொண்டாள். இரவு அவன் வந்ததும் கதவை திறந்தவள்


“ரொம்ப பசிக்குது தீரா ” என்று கண்ணீர் வடித்தாள்.


செய்வதறியாது குளியலறை சென்று ஷவரை திறந்து வைத்து கொண்டு நின்றான்.
ஆதினிக்கோ பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தும் வழியறியாது தன் மனவலியை அவனது அலைபேசிக்கு குறுஞ்செய்தியாய் அனுப்பிவிட்டு பால்கனியில் வந்து படுத்துக்கொண்டாள் நிலவனின் குளிர்ச்சியிலாது தன் பசி அடங்கும் என்று.


குளியலறையிலிருந்து வந்தவன் அலைபேசியே பார்க்க


எத்தனையோ இரவுகளை பசியோடு கடந்து வந்திருப்பேன்
அந்நாளில் இல்லாத வலியை விட இந்நாள் வலிக்கிறது
என் சிசுவையும் பசியோடு இவ்விரவை கடக்க பழக்கபடுத்துகிறேனே என்று”


பார்த்தவுடன் விழிகளை நிறைத்தது விழிநீர். அலைபேசியை மெத்தையில் எறிந்தவன் தரையில் அமர்ந்து விட்டத்தை அண்ணாந்து பார்க்க விழிநீர் வழிந்தோடியது. தன் கையில் ஐந்து காசுகள் கூட இல்லாத தன் இயலாமை அவனை வேறு எண்ணத்திற்கு வித்திட மனமோ உன்னை நம்பி வந்தவளை பாதியில் விட்டு செல்லாதே என்று அறிவுரை கூறியது.


மறுநாள் கிறிஸ்டி எதேச்சையாக வந்து அவளுக்கு உணவு கொடுத்து விட்டு போனாள். அதற்கு இருதினங்கள் கழித்து தான் மதுவருந்திவிட்டு துரோகம் பண்ணிட்டேன் மன்னிச்சிடுனு அவன் பிதற்றிய நாள்.


நினைவிலிருந்து மீண்டவள் ஒரு முடிவுடன் வெளியே கிளம்பி சென்றாள்.

தீரா காதலுடன்…

4 thoughts on “தீராகாதலே – 12”

  1. CRVS 2797

    முதல்ல காதலிக்கிற எல்லாமே ஜோராத்தான் இருக்கும்… அப்புறம் எல்லாமே கசந்துடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *