Skip to content
Home » தீரா காதலே – 15

தீரா காதலே – 15

தீரா காதலே – 15


நல்ல நண்பன் அண்டை வீட்டுகாரன் தீபக்கின் இழப்பு இருவர் மனதையும் வருத்தியது. தங்களுக்கே இப்படி இருக்குமாயின் மெர்ஸிக்கு அவன்தானே யாவும் அவளுக்கு எப்படி வலிக்கும் என்று உணர்ந்தவர்கள் அவளை தனியாக விட்டுவிடவில்லை. மெர்ஸி இனி இவர்களின் பொறுப்பு என்று ஏற்றுக்கொண்டு அவளையும் கவனித்து கொண்டார்கள்.

இதற்கிடையில் தனக்கு சீக்கிரமே பணம் வாங்கி தந்தால் தன்னால் இந்த பிரச்சினையில் இருந்து மீளமுடியும் என்று தீரா ஆதினியிடம் வாக்குவாதம் செய்தான்.

“இங்க பாருங்க தீரா டூ மன்த்ஸ் வெயிட் பண்ணி தான் ஆகனும் தரேனு சொன்னவகிட்ட போய் தா தானு டார்ச்சர் எல்லாம் பண்ண முடியாது. இல்லைனா நீங்க வேறு யார் கிட்டயாது வாங்கிகோங்க” என்று கண்டிப்புடன் உரைத்தவள் மெர்ஸியின் வீட்டிற்கு சென்றாள்.


அவள் தூங்கி கொண்டிருக்க இவள் வரவேற்பறையில் அமர்ந்திருக்க அலைபேசியில் அழைப்பு வந்தது. யாரென்று பார்க்க எண்களிலிருந்து வந்திருந்தது. அழைப்பை ஏற்று பேச முற்பட எதிர்முனையில் பேசும் மொழி புரியவில்லை இந்தியில் கத்திகொண்டிருந்தாள் ஒரு இளம்பெண்.


“எக்ஸ்கியூஸ்மீ கைண்ட்லி டாக்ட் டூ தமிழ் பிளிஸ்” என்று உரைக்க அழைப்பில் காத்திருக்குமாறு சொல்லி சில நிமிட இடைவெளியில் தமிழ் பேசும் பெண் இவளிடம் சிடுசிடுவென்று பேசினாள்.


“ஹலோ மேடம் நீங்க ஆதினி பிரபாவா?”


“ஆமா நீங்க யாரு?”


“உங்க ஹஸ்பெண்ட் நேம் தீரா.. ரைட்?”


“ஆமா என்ன விஷயம்? நீங்க யாரு?”


“மேடம் நாங்க கேஷியூ லோன் பேங்க்ல இருந்து பேசுரோம். உங்க ஹஸ்பெண்ட் பாஸ்ட் 2 மன்த்ஸ் லோன் கட்டல”


“ஓகே” யோசித்தவாறு உரைத்தாள்.


“ஓகேவா? என்ன மேடம் கிண்டலா? லோன் மட்டும் வாங்கி வீட்டில் ஏசி பிரிட்ஜ் வாஷிங் எல்லாம் வாங்கி போட்டு அனுபவிக்க தெரியுதுல்லா? கட்ட சொன்ன ஒழுங்க கட்டமாட்டீங்களா?” என்று பொங்கினாள்.


கட்டுங்கடங்காத கோவம் கரையுடைக்க நினைக்க இழுத்து வைத்த பொறுமையுடன்


“யார் லோன் வாங்குனாங்க? எப்ப வாங்குனாங்க? எவ்வளவு வாங்குனாங்க?” என்று ஆதினி கேட்டாள்.


“உங்க ஹஸ்பெண்ட் தான். ஃபைவ் மன்த்ஸ்க்கு முன்னாடி 50,000 வாங்குனாரு. பஸ்ட் மன்த் மட்டும் ஒழுங்கா கட்டுனாரு அதுக்கு அப்புறம் நாங்க கால் பண்ணி பண்ணி கேட்டா தான் கட்டுவாரு இப்ப போன் எடுக்கறதே இல்லை”


“மொத்தமா 50000 வாங்குனாரா?”


“இல்லை பஸ்ட் இருபதாயிரம் எடுத்து அது முடிச்சு ரீலோன் எடுத்து அதுக்கு வட்டி எல்லாம் சேர்ந்து இப்ப அம்பதாயிரத்து நானூற்று இருபது ரூபாய்ல நிக்குது. இன்னும் டிலே பண்ணா இந்த அமௌண்ட் இன்னும் இன்கிரீஸ் ஆகும்”


“சரி எனக்கு ஏன் கால் பண்ணி கேக்ரீங்க?”


“என்னம்மா நக்கலா? நீங்க தானே அவர் ஒய்ப் உங்கள தான் நாமினியா போட்ருகாரு. அப்ப உங்ககிட்ட தான் கேக்க முடியும்”


“ஓ அப்படியா? லோன் கொடுக்கும் போது மட்டும் என்கிட்ட கேட்டு தான் கொடுத்தீங்களா என்ன? லோன் வாங்குன விஷயமே எனக்கு இப்பதான் தெரியும். உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு போறீங்க”


“என்னம்மா ஓவரா பேசுர. போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி கோர்ட்க்கு இழுத்து விட்ருவேன். அப்புறம் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமா காலம்பூரா அலைய வேண்டியதான் நீ”


“அப்படியா சரி கம்ப்ளைண்ட் பண்ணிக்கோங்க எனக்கு இஷ்யூ இல்லை. நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன். இவ்வளவு மோசமா பேசுற உங்கள தான் பஸ்ட் போலீஸ் என்கொயரி பண்வாங்க”


என்றதும் ‘டக்’கென்று அழைப்பை துண்டித்தாள் எதிர்முனையில் பேசிய இளம்பெண். பெருமூச்சுடன் சாய்ந்தமர்ந்தாள் ஆதினி இன்னும் என்னென்ன பிரச்சினை சமாளிக்க வேண்டுமோ என்று.


ஒரு வாரம் கடந்த நிலையில் மீண்டும் தீராவின் அலுவலகத்தில் ஜஸ்டினை சந்தித்து தீரா சொன்ன விஷயங்களை பகிர்ந்து கொண்டாள். மேலும் அவனிடம் பண உதவி கேட்கவும் செய்தாள். இரண்டு நாட்களில் தருகிறேன் இனி வீணாக அலைய வேண்டாம் என்று சொல்லி அவனது அலைபேசி எண்ணை பதிவேற்றி கொடுத்தான். அவனிடம் ஒன்றரை லட்சங்கள் வாங்கியிருந்தாள். சில அவசர கடன்களை அடைத்தான் தீரா. அவனிடம் வாங்கியதோ பேசியதோ தீராவிற்கு தெரியாது. அவளும் சொல்லி கொள்ளவில்லை.

மலர் தரும் பணத்தை கொண்டு எல்லாவற்றையும் சரிசெய்து விடலாம் என்றெண்ணியிருக்க மீண்டும் புதிய எண்ணிலிருந்து புலனத்திற்கு குறுஞ்செய்தி வாயிலாக மிரட்டல் வந்தது பணத்தை கொடுக்கும் படி.


லோன் அமௌண்ட் 20,456 தீரா
லோன் அமௌண்ட் 16,217 தீரா
பணம் கட்டு
இல்லை புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்படும்”


இப்படி இருக்கும் சமயத்தில் ஒருநாள் ஜஸ்டின் அலைபேசியில் அழைத்தான். அழைப்பை ஏற்றவள்


“சொல்லுங்க ப்ரோ” என்றாள்.
“தீரா இன்னைக்கு வீட்டுக்கு வரமாட்டான் அண்ணி”


“ஏன்? என்ன ஆச்சு அவருக்கு?” என்று பதறினாள்.


“பதறாதீங்க அண்ணி. என்கூட தான் இருக்கான். கொஞ்சம் அதிகமா…. வீட்டுக்கு வரமுடியாத சூழல்ல இருக்கான். நீங்க சாப்பிட்டு தூங்குங்க நான் காலையில் அனுப்பி வைக்றேன்”


“ட்ரிங்க்ஸ் பண்ணியிருக்காரா?”


“ஆங்.. அது .. ஆமா அண்ணி”


“சரி” என்று துண்டித்தாள்.


மறுநாள் மெர்ஸியை பார்த்து வரலாம் என்று மாடிப்படிகளில் இறங்க ஜஸ்டின் அழைப்பு விடுத்தான். அழைப்பை ஏற்று பேசினாள்.


“அண்ணி எங்க இருக்கீங்க?”


“வீட்டில்தான்”


“அவன் இங்கயே கிளம்பி அப்படியே ஆபிஸ் போய்ட்டான்”


“இத சொல்லத்தான் போன் பண்ணீங்களா?” சலித்து கொண்டாள்.


“இல்லை… நேத்து அவன்கூட பேச தான் இங்க இருக்க வச்சேன்… சாரி அண்ணி”


“ம்ம்ம் ஏதாவது சொன்னாரா என்ன? “


“ஆமாங்க அண்ணி. உங்களுக்கு இவனோட ஹாஸ்டல்மேட் குருனு ஒருத்தன தெரியுமா?”


“ஆமா தெரியுமே இரிடேஷன் மேன். ஏன் அவன் தான் இப்படி பிளாக்மெயில் பண்றானா?”


“அவனும் ஒரு காரணம் அண்ணி ” என்று நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தான்.


💡குரு தன் தங்கை திருமணத்திற்கு செய்வதறியாது நின்றவன் தீராவிடம் பண உதவி கேட்க அவனும் இரண்டு லட்சங்களை வட்டிக்கு விடும் நபரிடமிருந்து வாங்கி கொடுத்தான்.


சரியாக இரண்டு மாதங்களில் தனது பணியாளர் நிதி(PF) கிடைத்துவிடும் அப்போது தந்து விடுகிறேன் என்ற வாக்குறுதி எல்லாம் ஒரே மாதத்தில் காற்றில் கரைந்து போக தன் தாயுடன் தீராவிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் சொந்த ஊருக்கு போய் தொழில் செய்யும் முனைப்பில் சென்று விட்டான். அலைபேசியில் அழைத்த போது


“மச்சான் நானே ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் இதுல தங்கச்சி வேறு கன்சீவா இருக்கா அவளுக்கு தேவையானத பாக்கனும் டெலிவரி செலவு எல்லாம் இருக்குடா” என்று ஏதேதோ காரணம் சொல்லி தட்டிகழித்தான்.


முதல் மாதம் வட்டி கட்டும் நாள் வர அன்று தாமதமாக கிளம்பிய அவசரத்தில் அலுவலகத்தில் வந்ததன் விளைவு வெளியே டீ குடிக்க டீக்கடைக்கு வர வட்டிகாரன் தீராவிடம்


“**தா வாங்கும் போது இனிச்சிது இப்ப கட்டனும்னா கசக்குதோ போன்ன போட்டா எடுக்க மாட்டியோ *** ஒழுங்கு மரியாதையா வட்டிய கட்டு இல்ல வூடு பூந்து கழிஜ் பண்ணிடுவேன் யாருகிட்ட ம்ம்”


என்று நாக்கை துருத்தி எச்சரிக்கை விடுத்தவனிடம் தான் ஞாபகமறதியில் வந்ததாக சொல்லி உடனே ‘கூகுள் பே’யில் பணத்தை செலுத்தினான். ஆனால் அவமானத்தில் முகம் கறுத்தது.


ஆதினியிடம் சொன்னால் திட்டுவாள் என்று இதனை மறைக்கவும் செய்தான். எவனோ ஒருவன் அசிங்கமாக திட்டும் போது கேட்க முடிந்தவனால் மனைவி நல்லதுக்கே திட்டினால் கூட ஏற்றுக்கொள்ளும் மனநிலை வரவில்லை போலும் இங்கு பலரும் அப்படியே. விளைவு தீக்குச்சி தீக்குளித்து வாழ்வு முழுவதையும் எரித்து விட்டதல்லவா…


மாதம் மாதம் வட்டி கட்ட முடியாது என்றெண்ணிய தீரா வங்கியில் தனிநபர் கடன் வேண்டுமென்று கோரினான். அவனது கோரிக்கை நிராகரிக்கபட்டது ஏனெனில் அவன் வாங்கும் சம்பளம் மாதாந்திர தவணைக்கு சரியாக இருப்பதால் போதிய பணம் கட்டமுடியாது என்றெண்ணி நிராகரித்தது வங்கி.


ஆனால் வேறு ரூபத்தில் உதவியது. அவன் கோரிக்கை விடுத்தது அலைபேசி வாயிலாக தான். எனவே அவன் உபயோகிக்கும் சமூக வலைத்தளங்கள் கூகுள் முகநூல் இன்ஸ்டா எல்லாம் விளம்பரம் வாயிலாகவும் குறுஞ்செய்தி வாயிலாகவும்

எந்த ஆவணமும் இன்றி பணம் பெற்றிடுங்கள்

என்ற செய்தி வலம் வந்தது. அதனை தவிர்த்தவன் தனக்கு தெரிந்தவர்களிடம் உதவி கேட்டு பார்த்தான். மொத்தமாக யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை.


“அவ்வளவு முடியாதுடா தம்பி நம்மளால ஒரு பாஞ்சாயிரம் இருபதாயிரம் வேணா தரலாம்”


சரியென்று தருபவர்களிடம் எவ்வளவு கிடைக்கிறதோ அவற்றை எல்லாம் வாங்கி சேர்த்து இரண்டு லட்சங்களை அடைத்தான். ஆனால் தனித்தனியாக கொடுத்து உதவிய நபர்கள் தங்கள் தேவைக்கு தேவைப்படும் நேரத்தில் தீராவிடம் வந்து நிற்க வேறுவழியின்றி


ஆவணங்கள் தேவையின்றி கிடைக்கும் பணம் ஆபத்தானது’


என்றுணராமல் அதில் தன் கையை பதித்தான். முதலில் தவிர்த்தவன் முற்றிலுமாக தவிர்த்து இருக்கலாம். அன்றிலிருந்து ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்தான்.


நேரில் சந்தித்த வட்டிக்காரனை விட மிக மிக மோசமாக நடந்து கொண்டனர் அலைபேசி வாயிலாக கடன் கொடுத்தவர்கள். பினந்தின்னி கழுகுகளையே மிஞ்சி விடும் பணந்திண்ணி அட்டைகளிடமிருந்து தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்தான் தீரா.

அவைகளாது இறந்தபின் சூறையாடி உண்ணும் பணந்திண்ணி அட்டைகளோ உயிர் துறக்கும் வரைக்கும் விடாது உயிரை உறிஞ்சி, உயிர் துறந்தாலும் விடாது கூட இருப்பவர்களையும் உள்ளிழுக்கும் மாயச்சுழல்.


மீள வழி தெரியாது இருக்க மனைவியிடம் சொல்ல ஈகோ தடுக்க நிரந்தர தீர்வை தேடாமல் தற்காலிக தீர்வை நாடினான். கடன் செயலிகளை பதிவேற்றி அதன் மூலம் கடன் பெற்று அடைத்தான். சம்பளம் வாங்கிய அடுத்த நொடி முழு மொத்தமும் பறித்து கொண்டார்கள்.


ஆதினியின் நகைகளை அவளுக்கே தெரியாமல் விற்று கொடுத்தான் பணந்திண்ணி அட்டைகளிடம். அந்த குற்ற உணர்வில் தான் மதுவருந்திவிட்டு வந்து “துரோகம் பண்ணிட்டேன் மன்னிச்சிடு” என்று புலம்பியது.


காதலுக்கு உண்மையும் நம்பிக்கையும் தான் அஸ்திவாரம் அதையே தீரா உடைத்து விட்டான். அவனால் அவளை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. உணவை உண்க முடியவில்லை. நிம்மதியான உறக்கம் இல்லை.


தனித்திருக்கும் தன்னை தன் தந்தை போல சந்தோஷமாக வைத்திருக்கும் பொக்கிஷமவள் என்றெண்ணி காதல் செய்து உருகியவன் இன்று தானே அவளை தனித்து விட்டான்.


போதாதுக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்து வேற்று மொழிகளில் மிரட்டுவதும் ஆபாச புகைப்பட உருமாற்றம் செய்து அனுப்புவதும் நாமினியாக தேர்வு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதும் என்று அதிக தொந்தரவு கொடுத்தார்கள்.


அன்று ஆதினி ‘பசிக்குது’ என்று சொல்லவும் துடித்து போனான். எப்படி வாழ வேண்டியவள் தனக்காக தந்தையை கூட விட்டுக்கொடுத்தாளே இன்று தவிக்க விட்டுட்டேனே என்று கலங்கியவன் வெளியே வந்து ஈருருளியை இயக்கி கட்டுப்பாடின்றி வேகமாக பயணம் செய்தான். இன்னும் பிறக்காத மழலையின் புன்சிரிப்பு கண்முன்னே வந்து போக நிதானித்தவன் மீண்டும் வீட்டிற்கு வந்தான்

தேனீக்கள் மலர்களை
கொல்வதில்லை…
மலர்கள் தேனீனத்திற்கு
விஷத்தை சுரப்பதில்லை…

மேதினி வனவியலை
வெட்டுவதில்லை…
நிலவியல் மேதினிக்கு
அழிவை தருவதில்லை…

ஆனால் மனிதன் மனிதனை
கொல்வான் வெறும் காகிதத்திற்காக
ஆம்..!
பண காகிதத்திற்காக…

கடந்து வந்த பாதையிலிருக்கும்
வாழ்வின் சித்திரங்களும்
சிதைவுகளும் சொல்லும்…
நம்பி ஈர்த்துக்கொண்ட அன்பை
எங்ஙனம் வழிநடத்தினாய் என்று..?

நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
வாழ்வின் பேரிருட்டான பணச்சாத்தானிடம்
எப்படி மாட்டிக்கொண்டேன்?
பணபற்றற்றவன் வாழ்வான்..
பணபிணியில் விழுந்தவன்….?

தன் நேசத்தை மறந்தவனாகிறான்…
அனாதையாகிறான்…
கருணையற்றவனாகிறான்…
நிராகரிக்கபடுகிறான்…
ஏளனமாக பார்க்கபடுகிறான்…
அவமரியாதைக்குள்ளாகிறான்…
அடிமையாகிறான்…
அலங்கோலபடுகிறான்…

ஆம் பணத்தின் மறுபெயர் சாத்தான்
அது ☝️அத்தனையும் செய்யும் வல்லமை கொண்டது…

நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
நேசித்தவளின் காதல் கானம் கேளாமல்…
அவளின் வாசம் நுகராமல்…
ஒரு நேர உரையாடல் தொடங்காமல்…
முத்தமிட்டு அணைக்காமல்…
எப்படி என் உணர்வுகளை கடந்து வந்தேன்..?
நினைவுகளிலேயே மூழ்கி திளைத்து நிற்கிறேனே…

மன்னித்து கொள்ளடி பெண்ணே..!
என் மீதான நேசத்தை தவிர
வேறென்ன தவறு இழைத்தாய்…?
உன்னை உணராமல் போனது என் தவறே..
உன் நேசகண்ணாடியை உடைத்தது என் தவறே..

என் நேசத்திற்காக காத்திருந்தாய்…
என் ஸ்பரிசத்தை உணர காத்திருந்தாய்…
என் வாசனையை நுகர காத்திருந்தாய்…
முத்தமிட்டு அணைக்கும் இரவுகளுக்காக காத்திருந்தாய்…


உறங்காத உன் விழிகள் என் மீதான தேடலை சொல்ல
உன்னை நிராகரித்தது என் தவறடி பெண்ணே…!
மன்னித்து கொள்ளடி …
மீண்டும் புது நேசம் புது வாழ்வை
ஆரம்பிப்போம்
ஏற்றுக்கொள்ளடி கண்ணே…..!

💡


அலைபேசியில் பேசி வைத்தவள் கீழே இறங்கி வந்து மெர்ஸியை பார்க்க வெறும் தரையில் தீபக்கின் புகைப்படத்தை கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். அவளை வலுக்கட்டாயமாக குளியலறையில் தள்ளி முகம் கழுவி வரசெய்து பழச்சாறை குடிக்க வைத்தவள் அவள் சொன்ன விஷயங்களை உள்வாங்கி கொண்டு பதற்றத்துடன் தீராவின் அலுவலகத்தை தேடி ஓடினாள்.

தீரா காதலுடன்…

4 thoughts on “தீரா காதலே – 15”

  1. CRVS 2797

    அநேகமா, இவளாவது புத்திசாலித்தனமா நடந்து தேவலை…செய்வாளா..?

  2. Kalidevi

    Intha prachanaiya first eh aadhini kitta solli iruntha ava ethana solution koduthu irupa problem solve paninirupa ipo paru uyira koduthutu ava thaniya nikura

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *