Skip to content
Home » தீரா காதலே – 4

தீரா காதலே – 4

நிலவனை சுற்றி நீந்தி வரும் விண்மீன் கூட்டங்கள் இமையசைப்பது போல மூடி மூடி திறந்து தன் இருப்பை ரம்மியமாக ராட்டினமாடும் இரவு வேளையில், எங்கே இமைத்தால் கண்ணீர் மழை பொழிந்திடுமோ என்ற அச்சுறுத்தலால் இமைக்காமல் நிலவனை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் பால்கனியில் அமர்ந்திருந்த ஆதினி.

கொஞ்ச நேரத்திற்கு முன் நடந்த விஷயங்களை அவளுக்கு எப்படி எடுத்து கொள்ளவென்று தெரியவில்லை. துணை துரோகம் பண்ணிட்டேன் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று தெரியாத அளவுக்கு அவள் பேதை இல்லையே.

காதல் கொண்ட மனம் அப்படி இருக்காது என்றும் காதால் கேட்ட மனம் வேறு எப்படி என்றும் மனப்போர் நடத்திக் கொண்டிருக்க எனக்கும் இதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று வயிற்றில் இருக்கும் சிசு ஆனந்தமாக அசைந்து தன் இருப்பை வெளிகாட்டி கொண்டிருந்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த சூழல் எவ்வளவு மகிழ்ச்சியை தரும் அதை ரசிக்கும் மனநிலை கூட இல்லாமல் நிலவனை வெறித்தவளை வறவேற்பறையில் கேட்ட தீராவின் உளரல் மீண்டும் வலியினை கண்களில் ஏற்றிட பாரம் தாங்காத இமை நீர் இமையை விட்டு கொட்டியது.

மெல்ல பால்கனியில் இருந்து எழுந்தவள் வரவேற்பறையில் சோபாவின் அருகில் தரையில் படுத்து பிதற்றி கொண்டிருந்த தீராவை பார்க்கையில் நெஞ்சம் விம்ம படுக்கையறையில் தஞ்சம் அடைந்து படுத்து கொண்டாள்.

✍️உயிர் வாழும் போதே நரகம் உணர்கிறேன்…
ஆம்..
நிலவனை காதல் செய்தவளை
உன் வசம் ஆக்கி
துரோகத்தை பரிசளித்தாய்…
பேரன்பில் செதுக்கிய காதலை
வார்த்தை உளியால் உடைத்து
வலிகளை பரிசளித்தாய்…
என்னுள்ளே ஓர் உள்ளிருப்பு போராட்டம்..
ஒவ்வொரு கணமும் தேய்கிறேன்..
ஒரு சொல் உதிர்த்திடு..
உன் நேசம் மொத்தமும்
நான் மட்டுமே என்று…
மீண்டும் மலர்ந்திடுவேன்…
✍️

மனம் தங்களின் காதல் காலத்திற்கு செல்ல அதை நினைத்து கண்ணீர் விட்டவள் அப்படியே உறங்கி போனாள்.

***

இரண்டு வருடங்களுக்கு முன்

சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் தனியார் பேருந்து அந்த இரவு நேரத்தில் வண்ண ஒளிகளுடனும் காதை பிளக்கும் ஒலியுடனான பாடல்களோடும் நவீன யுவதிகளின் ஆடல்களுமாய் கொண்டாட்டமாக சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த அனைவரும் யுவன் யுவதிகளாக இருக்கவே பாடல்களும் நவீன இசை பாடல்களாகவே இருந்தது. தங்கள் தோழியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். பேருந்து முழுவதுமே அவர்கள் முன்பதிவு செய்து வைத்திருந்தார்கள் ஒரு சிலரே வெளி ஆட்கள்.

🎶 போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு
ஏய் சக்கப்போடு நீதான் போட்டு தாக்கு
ஹே போட்டு தாக்கு போட்டு தாக்கு
ஹிட்டு சாங்கு ஒன்னு போட்டு தாக்கு
🎶

பாடல் ஒலித்துக் கொண்டிருக்க அந்த இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடிக் கொண்டிருந்தாள் யுவதி ஒருத்தி. கிளட்சில் அடக்கிய கூந்தலும் அவளுக்கு போட்டியாக காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. பாடலுக்கு ஏற்றவாறு நடன அசைவுகள் இருக்க அவளின் தோழியரும் அவளோடு இணைந்து ஆட திடீரென்று பேருந்து நின்றது. ஒரு வயதான மனிதர் போகும் வழியில் இறக்கி விடுமாறு சொல்லி ஏறி கொண்டிருந்தார்.


அவரை கண்டதும் நடனம் ஆடிக் கொண்டிருந்த யுவதி அப்படியே கடைசி சீட்டுக்கு ஓடி சென்று அமர்ந்து கொண்டு அடிக்குரலில் தோழியரிடம் “இவர் எதற்கடி இங்கு வந்தார் இவர் அப்பாவோட வேலை செய்பவராச்சே இவர் மட்டும் என்னை இப்படி பார்த்தால் கண்டிப்பா அப்பாவிடம் சொல்லிவிடுவார். நானே வேலை விஷயமா வந்திருப்பதாக தானே பொய் சொல்லிட்டு வந்து இருக்கேன். நான் இறங்குற வரைக்கும் இவர் என்ன பார்க்க கூடாது. ஒரு நாலு மணி நேரம் ஜாலியா இருக்கலாம்னா முடியுதா ச்சே” என்று புலம்பினாள்.

இதையெல்லாம் ஜன்னல் ஓரமாக அமர்ந்து ரசனையோடு சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்த மனிதர் இடையில் இறங்கி விடவே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தாவினார்கள் யுவதிகள். நடனமும் கேலியும் பாடல்களுமாய் என்று மகிழ்ச்சியாக நேரம் கழிய சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அமர்ந்து பேசினார்கள். பேச்சு காதல் பக்கம் தாவியது. நடனம் ஆடிய யுவதியிடம் ஒருவள் காதலை பற்றி சொல்ல சொன்னாள்

காதல் என்பது என்ன
அழகான உணர்வா..?
உணர்வை உணர்தலே காதலின் வடிவம்..!

காதல் என்பது என்ன
எழுதாத ஒப்பந்தமா..?
வாழ்க்கையை வாழ்தலே காதலின் வடிவம்..!

காதல் என்பது என்ன
தெய்வீகமானதா..?
தன்னவன்(ள்) மீதான ஆழமான அன்பே காதலின் வடிவம்..!

காதல் என்பது என்ன
புனிதமானதா..?
வனப்பு வண்ணம் பருவம் என எதுவுமே இல்லாததே காதலின் வடிவம்..!

காதல் என்பது என்ன
அமரத்துவமானதா..?
காதல் வானில் தான் இந்த மேதினி இயங்குகிறது
நேசமழை ஒன்றே அதன் பற்றுகோல்..!”

அவள் பேச பேச பேருந்தின் இயங்கு சத்தம் தவிர மிக அமைதியாக அனைவரும் அவள் சொன்னதை தான் ரசித்து கேட்டு கொண்டிருந்தார்கள். அதில் அவனும் ரசனையோடு அவளைதான் பார்த்திருந்தான். காதலை பற்றி கேட்ட முதலாமவளோ
” வாவ்டி கவிதாயினினு நிரூபிச்சிட்ட உனக்கு இதையே பேராக வச்சிருக்கலாம்”

“போதும்டி பாட்டு பாடலாமா”

“ஓ ரெண்டு குரூப்பா பிரிஞ்சிக்கலாம் மாத்தி மாத்தி பாடலாம்”


பாடல்கள் பாடி ஆடி மகிழ்வோடு அந்த பயணத்தை கழித்து அவர்கள் இறங்குமிடத்தில் இறங்கினார்கள். அதுவரையில் அந்த யுவதியையே அவன் கண்கள் சுற்றிக்கொண்டிருந்தன.

***

அதிகாலை 4 மணி.
அந்த உயர் ரக உணவக விடுதியில் நண்பர்கள் பட்டாளம் சிறிது நேரம் ஓய்வெடுக்க சென்றது. காலை எட்டு மணிக்கு எழும்பியவர்கள் அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாரானார்கள்.
குளித்து புதிய உடை உடுத்தி வந்து அடுத்த குறும்பை ஆரம்பித்தார்கள். ஒருவர் பொருளை ஒளித்து வைத்து விளையாடுவது தான் அது. ஓடி கொண்டிருந்தபோது கவிதை மொழிந்த யுவதி தடுமாறி கீழே விழ போக அவள் கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டான் ஒரு ஆடவன். இவள் தடுமாற்றத்துடன் பார்க்கையிலே அவன் அலைபேசியை எடுத்து அவளை சுயமி எடுத்துக் கொண்டே,

சுயமிக்கு இணையாக மட்டும் அல்ல..
வாழ்க்கை துணையாகவும் வரவா அன்பே..”

என்று அமர்த்தலாக மொழிந்தவாறே சுயமி கிளிக்கிவிட்டு அவளை நேராக நிறுத்தினான். நண்பர்கள் அனைவரும்

” ஹோஓஓ ” என்று கூச்சலிட

அவளோ ” ஷட்அப் மேன் ஆர் யூ கிரேஸி?”

” மீள முடியாத புதைகுழியில்
விழுந்து விட்டேன்
உன் கன்னக்குழியில்..
மீள ஆசை இல்லை
இன்னும் மூழ்கவே விரும்புகிறேன்
என் காதல் நீயடி..”

என்றவாறு முழந்தாலிட்டான்.

பதறியவள் ” ஹோ ஷிட் கெட் அப் மேன். கீழ விழாமல் பிடிச்சதுக்கு தேங்க்ஸ்” என்று நகர போனவளை

” ஜஸ்ட் அ மினிட். பையன் கொஞ்சம் பிளாக்தாங்க ஆனால் தங்கமான பையன்ங்க நல்லா பாத்துப்பான்” என்றவாறு காலரை தூக்கி விட்டான்.

” ஓஹ்
காதலுக்கும் நிறத்திற்கும் என்ன சம்மந்தம்..?
மனசை பாரடா இதயத்தில் வாசம் செய்வோம்..”
என்று தானும் அமர்த்தலாக மொழிந்தபிறகே தான் என்ன சொன்னோம் என்று புரியவர நாக்கை கடித்து கொண்டாள்.

” டேய் என்னடா பண்ற? உன்ன எல்லாரும் அங்க தேடிட்டு இருக்காங்க. இங்கயும் உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா? வா. சாரி சிஸ்டர்” என்றவாறு அவனது நண்பன் அவனை அழைத்துக் கொண்டு செல்ல அவன் இவளை பார்த்துக்கொண்டே கண்ணடித்தபடி நகர்ந்தான்.

தோழியர் இவளை கேலி செய்ய அடுத்து ஒளித்து வைக்கும் விளையாட்டை கைவிட்டு வயிற்றை கவனிக்க சென்றனர்.

நண்பர்கள் தங்களுக்கு வேண்டிய உணவை எடுத்து வைத்து உண்டுகொண்டிருக்க இவள் சாப்பிடாமல் அவனை தான் கண்களால் தேடினாள்.

“டட்டடொயின்” என்றவாறு அவள் அருகில் வந்தமர்ந்தான். அவள் பார்க்காதது போல் திரும்ப

” என்னை தேடுன மாதிரி இருந்துச்சே”

” “

” ஓ பேச மாட்டீங்களா ஓகே இந்த போட்டோ பாருங்களேன் அழகா இருக்கு ” என்றவாறு தன் அலைபேசியை அவளுக்கு முன் நீட்டினான். அவன் அவளது தோளை பிடித்து தாங்கியிருக்க அதிர்ச்சியில் அவள் விழிகள் விரிந்திருக்க இவன் அவளை பார்க்க அவள் அவனை பார்த்தவாறு நிற்கும் போது கிளிக் செய்யப்பட்டிருந்தது.

” யா இட்ஸ் நைஸ் பட் டிலைட் பண்ணிடுங்க”

” ஹே நல்லா இருக்குனு சொல்லிட்டு டிலைட் பண்ண சொன்ன எப்படி? உங்களுக்கு இந்த போட்டோ ஷேர் பண்ரேன். வாட்ஸ்அப் நம்பர் சொல்லுங்க”

” வாட்? நம்பர்? என்ன என்னை பாலோ பண்றீங்களா” அவள் சத்தம் கேட்டு தோழியர் என்னவென்று வர

” ஹேய் ரிலாக்ஸ் ரிலாக்ஸ். ஓகே சாரி. சாரி கைஸ்”

” என்னடி ஆச்சு ” தோழி ஒருத்தி கேட்க

” நத்திங்” என்று எழுந்து சென்று விட்டாள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு. அவனை பற்றி தான் யோசித்து கொண்டிருந்தாள். ஒரு மனம் அவனை நினைக்காதே என்றும் மறுமனம் அவன் கண்களில் கண்ட காதலை ரசித்தும் உள்ளுக்குள் இம்சை பண்ணியது.

மாலை திருமணத்திற்கு தங்க கலரில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட நெட்டட் புடவையில் அவள் தயாராகி வரவும் எதேச்சையாக அங்கு வந்த அவனும் வரவும் பாடல் இசைத்தது.

” 🎶 நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகைக் காண்போம்…
காதல் ஒளியில் கால வெளியில்
கால்கள் பதித்துப் போவோம்…

இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததால்

நான் உன் அழகினிலே தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே என்னை உணருகிறேன் “🎶

அவளுக்கு எதிரே வந்தவனோ பாடலுக்கு அபிநயம் காண்பித்து தன் கைகளால் இதய வடிவை உருவாக்கி காண்பித்தான். அதனை கண்டு பொய்யாக முறைத்து வைத்தாள்.

அந்த பாடல் அவர்களுக்காகவே இசைத்தபோல இருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அவளின் அருகே வந்தவன்

” ஹாய் நான் தீரா”

” ஹாய்… நான் ஆதினி”

” நைஸ் நேம்”

“தேங்க்ஸ். ப்ரெண்ட்ஸ்” என்றவாறு கையை நீட்டினாள்

” வெறும் ப்ரெண்ட்ஸ் தானா ?பட் நான் அப்படி மட்டும் நினைக்க மாட்டேன்”

” லிசன் மிஸ்டர் தீரா. எனக்கு இந்த லவ் அட் பஸ்ட் சைட்லாம் ட்ரஸ்ட் இல்லை அதெப்படி பாத்ததும் ..”

“வெயிட் நான் உன்னை நேத்தே பாத்துட்டேன். உங்க கூட தான் டிராவல் பண்ணேன். எனக்கு பிடிச்சிருக்கு சொல்லிட்டேன் உனக்கு எப்ப பிடிக்குமோ அப்ப சொல்லு ” என்று தோள்களை குலுக்கினான்

” ஓ காட் நேத்து எங்க கூட வந்தீங்களா? நாங்க பண்ண அட்ராசிட்டிய பாத்துமா பிடிச்சிருக்குனு சொல்றீங்க”

“இது கூட இல்லனா லைப் ரொம்ப போராகிடும். லைப்ல அப்ப அப்ப டிராவல்ஸ் என்ஜாய்மெண்ட் எல்லாம் இருந்தா தான் இனிக்கும் “

” ம்ம்ம் சரி சரி”

” நீ சிரிக்கும் போது உன் கன்னத்தில் குழி விழுது அழகா இருக்கு”
வெட்கசிரிப்புடன் தலையைசைத்தாள். அதற்கு பின் நண்பர்கள் இணைந்து கொள்ள அவரவர் தோழமைகளோடு இணைந்து திருமணத்தை கண்டு களித்தபடியே விழிகளால் பேசிக்கொண்டனர்.

மேடையில் மணமான ஜோடி ராகவ் ❤️ மலர் சிரித்து கொண்டே அனைவரிடமும் பேசுவதை கண்களால் சுட்டி காட்டிய தீரா புருவத்தை உயர்த்த செல்லமாக முறைத்தாள் ஆதினி. அவளுக்கும் அவனை பிடித்திருந்தது ஆனாலும் உடனே அதை ஒப்புக்கொள்ள மனம் விரும்பவில்லை.

இரவு உணவும் பஃபே முறையில் இருக்க அவரவர்க்கு தேவையான உணவினை எடுத்து கொண்டு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்ப வேண்டும் அவரவர் இல்லத்திற்கு. அறைக்கு சென்று தங்களது உடைமைகளை எடுத்து கொண்டு மணமான ஜோடியிடம் சொல்லி கொண்டு விடைபெற்று ஒவ்வொருவரும் சென்று கொண்டிருக்க தீராவும் சொல்லி கொண்டு சென்று விட்டான். அவன் தூரமாக சென்று கொண்டிருக்கும் போது தான் ஆதினி வந்தாள். அவளும் சொல்லி கொண்டு கிளம்பினாள். மனமோ வெறுமையாய் இருந்தது. சொல்லாமல் சென்று விட்டானே என்று தவிப்பாக இருந்தது.

பேருந்து வர இன்னும் பத்து நிமிடமே இருக்க பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அத்தனை நேரம் இருந்த உற்சாகம் வடிந்து ஆதினி வானை அண்ணாந்து நிலவனை தேடினாள். அதற்குள் அவன் குரல் கேட்க

“ஹாய்..”

“ஹேய் தீரா சொல்லாமல் போயிட்டீங்களேனு நினைச்சேன்”

“அதெப்படி என் லவ்வர் கிட்ட சொல்லாமல் போவேன்?”

“தீரா பிளிஸ் …”

“ஓகே கூல்”

பேசிக்கொண்டிருக்கையிலே அவர்கள் பேருந்து வந்து விட்டது.
“உங்களுக்கும் இந்த பஸ் தானா?”

“நோ ஆக்சுவலி நாங்க இப்ப கிளம்பறதாவே இல்லை இன்னும் பார்ட்டி எண்ட் ஆகல”

“ஓ அப்ப எதுக்கு வெளியே வந்தீங்க?”

ஒரு சின்ன பரிசுபெட்டியை அவளிடம் தந்து ” இதை வாங்க தான் வெளியே வந்தேன்… உனக்காக..”

கண்களில் சந்தோஷம் மின்ன “தேங்க்யூ” என்றாள்.
இதனை கண்ட இருவர் தோழமைகளும் “கல்யாணத்தை பாக்க வந்த இடத்தில் கல்யாணம் முடிவு பண்ணியாச்சு டோய்” என்று சந்தோஷ கூச்சலிட்டனர். நிலவொளியில் கண்கள் ஜொலிக்க இருவரும் விடைபெற்று கொண்டார்கள்.

தீரா காதலுடன்…

8 thoughts on “தீரா காதலே – 4”

  1. CRVS 2797

    ஆரம்பத்துல எல்லாருமே சின்சியராத்தான் காதலிக்கிறாங்க. ஆனா, அதற்குப்புறம் தான் காதல் காணாம போயிடறது போலயிருக்கு.

  2. Kalidevi

    Story going good. Avan tha first love solran iva aasaiya vachitu sollama iruka but love panni mrg panni pathila vitu poitan

  3. Avatar

    ஆரம்பம்லாம் நல்லாதான் இருக்கு!!.. ஆனால் இப்போ ஏன் இப்படி நடந்துக்குறான்???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *