Skip to content
Home »   தீர்ப்பெழுதிய பேனா

  தீர்ப்பெழுதிய பேனா

                                  தீர்ப்பெழுதிய பேனா

              ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, “இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு, குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து, இந்த நிலத்தை வாங்கினோம். முன்ன சீண்டுவார் யாருமில்லாதப்ப வாங்கிப் போட்டது. இப்ப இந்த இடத்துல ஸ்கூலு, காலேஜி, காம்பிளக்ஸ், அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுனு தெரிந்ததும் இப்படி அநியாயமா கைக்கு மீறி காசு கேட்கறிங்க. இதை கட்டி முடிக்க இவ்ளோ ஆகும்னா… பேசாம ஒரு குடிசை வீடா போட்டுயிருப்பேனே சாமி. என்னை விட்டுடுங்க” என்று தழதழத்து கூறி முடித்தார்.

   எதிரில் இருந்தவர்களோ “இங்க பாருங்க ராமமூர்த்தி ஐயா. நீங்க உங்க நிலத்தை கட்ட கொடுத்த காசுக்கு குடிசை வீடு தான் கிடைக்கும். இங்க நிமிர்ந்து பாருங்க. நாலடுக்கு வீடா மாற்றி கட்டியிருக்கேன். எங்களுக்கு எங்க பங்கா பணத்தை எடுத்து கொடுங்க. வாங்கிட்டு போயிட்டே இருப்போம். இல்லை மொத்தமா வேண்டும் இது என் நிலம் அப்படியிப்படி வீராப்பு பேசினா ஒரு செங்கல் கூட கிடைக்காது.

   இதை கட்ட செலவான கோடிகளை கணக்கு எடுத்து சொல்லறேன். மொத்தமா கொடுத்துடுங்க நாங்க போறோம். இல்லை இப்படி தான் நடக்கும்” என்று கட்டப்பஞ்சாயத்து ராஜதுரையை வைத்து, தன் நிலத்தையே ராமமூர்த்தி பேரம் பேசி வாங்க இயலாது தடுத்தான் இன்ஞினியர் சேகர்.

      ராமமூர்த்தியோ ராஜதுரையின் பார்வை ராதா மீது தழுவவும் தன் கைக்கு மீறி பணத்தை புரட்ட முடியாத நிலையிலும், தெரிந்தே ஏமாந்து வாயை மூடி சென்றார்.

     “பெரியவரே ஒரு நிமிஷம்” என்று ராஜதுரை ராதா அருகே வர, நடுங்கியபடி ராதா பின் நகர்ந்தாள்.

    ராமமூர்த்தியோ வேகமாக சேகரின் கையிலிருந்த பேனாவை எடுத்து கையெழுத்திட்டு ராஜதுரை முகத்திலே விட்டெறிந்து ராதா கரம் பற்றி நகர முயன்றார். அவரை ராஜதுரை ஆட்கள் வழிமறைத்து நின்றனர்.

*****

    காலையிலேயே பால் காய்ச்சி வந்ததும் வீட்டை அதனது இடத்தில் பொருத்தி அழகு பார்த்தாள் தாரா.

    “அட்சு இந்த இடத்துல ராதை கிருஷ்ணா சிலையை வைக்கணும். அடுத்து நான் வரைந்த டிராயிங் இந்த இடத்துல வைக்கணும்” என்று தாரா குறிப்பிட்டாள்.

    அட்சு என்ற அட்சரனோ “ஏது நீ வரைந்த டிராயிங்?” என்று இடையில் கையை ஊடுருவிக் கொண்டே கேட்டான்.

     “அட்சு… கிண்டலா… நான் கிளாஸ் போய் பெரிய ஆர்டிஸ்டா வந்துடுவேனு உனக்கு பொறாமை” என்று இடையின் அரவணைத்த கைகளை எடுத்து விட்டு கிச்சனில் சென்றாள்.

      “பொறாமை இல்லை… ஸ்டெரெயின் பண்ணாதே. போன தடவை குறிப்பிட்ட நிறங்களோட அதிகம் உபயோகித்து கண்ணுக்கு எப்ப பாரு ஏதேதோ நிறங்களா வருதுனு புலம்பின. டாக்டரிடம் காட்டி சரிப்பண்ணி ஸப்பா… அதனால சொன்னேன். ஓகே தாரா நான் ஆபிஸுக்கு கிளம்பறேன். லஞ்ச் அங்க பார்த்துக்கறேன்.” என்று புறப்பட்டான்.

     தாரா தனியாக இந்த வீட்டில் மற்ற பொருட்களை தன் ரசனைக்கு ஏற்ப அடுக்கி வைத்தாள்.

   புதிதாய் திருமணமானவர்கள் இந்த அட்சரன் தாரா தம்பதி. திருமணம் ஆனதும் புது வீடு வாங்கி இங்கு குடிபெயர்ந்து விட்டனர்.

  இந்த நான்கு மாடி அப்பார்ட்மெண்டில் தளத்திற்கு இரண்டு வீடாக கட்டி மொத்தம் எட்டு வீடுகள் இருந்தது. ஆனால் குடிப்பெயர்ந்து இருப்பது என்னவோ மூன்று குடும்பங்கள் மட்டும் தான். மற்றவை இனி தான் விற்பனைக்கு தயாராக இருந்தது.

    அதில் ஒன்று தான் தாரா வீடு. மான் பொம்மை, யானை பொம்மை, கிளி பொம்மை என்றிருக்க கண்ணாடியில் அடுக்கினாள்.

     பூங்கோத்தும் அடங்கிய அட்சரன் வாங்கிய மெடல்களையும் அடுக்கி வைத்து பூரித்தாள்.

   நேரம் மதியம் ஆகவும் கிச்சனில் கேரட்டை நறுக்கி கொண்டு அதில் ஒரு துண்டை மென்றபடி புலாவ் ரைஸ் செய்தாள்.

    சாப்பிட்டு கொண்டிருந்த தாராவுக்கு அருகே யாரோ அசைவதாக தோன்றவும் திரும்பி பார்த்தாள். யாரும் இல்லாமல் போக தோளைக் குலுக்கி கொண்டாள். கதவு திறந்திருக்க தனக்கு அப்படி தோன்றியதாக இருக்குமென தட்டில் புலாவோடு வந்து சாற்றும் நேரம் “என்ன புலாவா வாசனை நல்லாயிருக்கே” என்று எதிர் வீட்டு பெண் கூறவும் சிரித்து அவசரமாய் ஒரு கின்னத்தில் வைத்தும் கொடுத்தாள். அவர் யார் என்ன பெயர் என்று சின்ன சிநேகம் வளர்த்து கொண்டாள்.

   “நீங்க காலையில் கொடுத்த ஸ்வீட் நைஸ்.” என்று விடைப் பெற்றனர்.

   சிறிது நேரத்திற்கு பின் உறங்கி எழுந்தவளுக்கு, மாலையும் இதே போல தோன்றிட, தன் தோழியிடம் கதையளந்தவள் போனை காதில் வைத்து பேசிக்கொண்டு திரும்ப காலையில் வைத்த பொருட்கள் எல்லாம் திரும்ப பெட்டிக்குள் இருக்க திடுக்கிட்டாள்.

     காலையிலேயே எல்லாம் எடுத்து வச்சோமே இது என்ன எதுவும் எடுத்து வைக்காம திரும்ப பெட்டியிலேயே இருக்கு’ என்று குழம்பியவளாக மீண்டும் எடுத்து வைத்தாள்.

      பக்கத்தில் ஒரு பார்க் இருப்பதை இங்கு வருவதற்குள் அறிந்திருந்தமையால், அங்கு செல்ல முடிவெடுத்து இருந்தவள் வேகமாக, அங்கு சில மணி நேரம் செலவழிக்க சென்றாள்.

     புது வீடு பொருட்களை தனக்கு பிடித்தவிதமாக எடுத்து வைத்து நிறைவாய் கொடுக்க அட்சுரனின் வருகைக்காக கனவுகளோடு காத்திருந்தாள்.

       அங்கு அபார்ட்மெண்ட் செல்வதற்கு ஒரே வழியாக இருக்க அந்த வழி மீது விழி வைத்திருந்தாள்.

    அட்சுரன் பைக் ஓசை கேட்டதும் துள்ளளாய் எழுந்து ஓடினாள். அவளின் காலில் முள்ளாய் குத்தியது.

    அது என்ன என்று குனிந்து பார்க்க, ஒர் பேனாவாக காட்சி தந்தது.

   ஏனோ அந்த முனை உடைந்திருந்தாலும் அதை எடுத்து செல்ல தாராவிற்கு உத்வேகம் பிறக்க, பர்ஸில் எடுத்து கொண்டாள்.

  வீட்டை நோக்கி செல்ல அட்சரன் பைக்கை இருப்பிடத்தில் வைத்து வரவும் சரியாக இருக்க இருவரும் சேர்ந்தே லிப்டில் பயணமானார்கள்.

    “அட்சு… இன்னிக்கு திங்க்ஸ் எல்லாம் அடுக்கி வச்சிட்டு தூங்கி எழுந்து பார்த்தா, திங்க்ஸ் அகைன் அட்டப்பெட்டியிலே இருக்கு. ஷாகிங்கா போச்சு.” என்றாள்.

   கூட லிப்டில் வந்த மற்றொரு பெண்மணி ஒருமுறை தாராவை திரும்பி பார்த்து விட்டு லிப்ட் பட்டனை சிவனேயென்று பார்த்தாள்.

     “தூங்கிட்டு எடுத்து வைக்காம இருந்திருப்ப. தூக்கத்துல கனவுல எடுத்து வச்சதா இருக்கும். நாம கூட சம் டைம் எக்ஸாம் எழுத ப்ரிப்பேர் ஆவோம். நைட் தூக்கத்துல என்னவென்வோ கொஸ்டின் வரும். நாம முழிச்சு பார்த்தா இனி தான் எக்ஸாமிற்கே கிளம்புனு வீட்ல சொல்வாங்க. அது மாதிரி உனக்கு தூக்கத்துல செய்ததா இருக்கும் அதே மைண்ட்ல இருப்பதால தூக்கத்துல நீ எடுத்து வச்சதா தோன்றி உன்னை நீயே குழப்பியிருப்ப” என்றான்.
  
     பக்கத்தில் இருக்கும் பெண் லிப்ட் கண்ணாடி முன் அட்சரனை ஒர்கணம் பார்வை தழுவியதும் கதவு திறக்க இறங்கினாள்.

      கதவு மூடும் முன் மீண்டும் அட்சரன் தாராவை கண்டாள்.

      “அட்சு… நான் நிஜமா சொல்லறேன் கனவு எதுவும் இல்லை.” என்று கோபித்தவளை சாந்தப்படுத்தும் விதமாக பின்னாடியே கொஞ்சினான்.

     தாரா அவனை அலட்சியப்படுத்தி நடக்க காலில் அட்டைப்பெட்டி இடித்தது.

     என்னவென்று குனிந்து பார்க்க, அட்டைப்பெட்டிகளில் ஓபன் கூட செய்யாமல் இருந்தது.

     தாராவிற்கு குழப்பமாய் அதை எடுத்து பார்க்க மற்றவை எல்லாம் அப்படியே இருந்தது.
 
   காலையில் அட்சரன் செல்லும் பொழுது இருந்த அதே நிலவரமாக வீடு காட்சியளித்தது.

     “அட்சு… நான் எல்லாத்தையும் எடுத்து வச்சேன். எல்லாம் மறுபடியும் பெட்டியிலேயே இருக்கு” என்றாள்.

     “ஏ… இட்ஸ் ஓகே டி. நீ ஒரு சோம்பேறி பொண்டாட்டி. நானே எடுத்து வைக்கறேன்” என்று அடுக்கினான்.

     “இல்லை அட்சு. எல்லாத்தையும் எடுத்து வச்சேன்.” என்று பதில் தந்து குழம்பினாள்.

    அதே நேரம் கதவு தட்டி ஒரு பெண் “புலாவ் வாசனை மட்டும் இல்லை. டேஸ்ட்டும் நல்லா இருந்தது.” என்று நீட்டினார்.

    “அட்சு… இங்க பாரு. எதுவும் எடுத்து வைக்கலைனா.. இந்த புலாவ் செய்தது எப்படி? இங்க பாரு கிச்சனில் காலையில காய்ச்சிய பாலை தவிர வேற பாத்திரமே இல்லை. ஆனா நான் கேரட் பீன்ஸ் நறுக்கி சமைச்சிருக்கேன் டா. அவங்களுக்கும் கொடுத்து விட்டேன். அதெல்லாம் அப்போ எப்படியாம்.” என்று கேட்க எதிரேயிருந்த பெண்மணி “என்னாச்சு?” என்று கேட்க தாரா மடமடவென விவரித்தாள்.

    “காலையில அட்டைப்பெட்டியில இருந்ததை எல்லாம் எடுத்து வைத்து நீட் பண்ணி பாக்ஸ் எல்லாம் அதோ இந்த ஸ்டோர் ரூம்ல வச்சேன். அகைன் இது இரண்டாவது முறை.” என்று தாரா பயத்தில் பேச அட்சரனோ “இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே. கூல் மா. என்னனு பார்த்துக்கலாம்.” என்று அமைதிப்படுத்தினான்.

    புலாவ் பாக்ஸை கொடுக்க வந்த பெண்மணியோ வீட்டையும் தாராவையும் விசித்திரமாக பார்த்து கடந்து சென்றார்.

   அட்சரன் வேகமாக கதவை சாற்றி முடித்து வந்து தாரா முன் அமர்ந்தான்.

     “இங்க பாரு தாரா… அளவுக்கு அதிகமா ஒரு விஷயத்தை நாம செய்ய செய்ய அதே தான் மூளையில் ஆக்கிரமிக்கும்.

    நீ மறுபடியும் டிராயிங் பண்ண உட்கார்ந்துட்ட. வேலையை செய்ய மறுந்துட்ட. இங்க பாரு… இன்ஸ்டெண்ட் புலாவ் பேக்கேட். இதை தான் பாத்திரத்தில் வச்சி சமைத்து சாப்பிட்டுருக்க. அவங்களுக்கும் கொடுத்திருக்க.” என்று கூறினான்.

      சமையல் அறையில் இன்ஸ்டெண்ட் புலாவ் பேக்கேட் எப்படி வந்தது.? என்று குழம்பி “சரி அப்ப நான் எதுவும் பண்ணலையா. தூங்கிட்டே இருந்தேனு சொல்லறியா?” என்று கேட்டாள்.

     “நான் எங்க சொன்னேன். இங்க பாரு சும்மா இல்லாம வந்ததும் திங்க்ஸ் கூட எடுத்து வைக்காம டிராயிங் பண்ணியிருக்க” என்று அவள் ஹாண்ட் பேக் அருகே பேனாவினால் ஏதோ வரைந்திருந்ததை காட்டினான்.

     தனியாக இதே வீட்டில் ஒரு பெண் இருப்பதாக வரைந்திருந்தாள். என்ன வழக்கத்திற்கு மாறாக பென்சிலோ, வரைய உபயோகிக்கும் திங்க்ஸோ எதுவுமின்றி சிவப்பு வண்ணத்தில் இருந்தது.

     “நான்.. நான் வரயலை அட்சு.” என்றாள்.

    “ஓகே… நீ வரையலை. விடு…” என்று சாப்பிட அமர்ந்தான். எதுவும் செய்யாதது நினைவு வர “நீ உட்கார் நான் சமைக்கறேன்.” என்று கோதுமை மாவை எடுத்து கரைத்து தோசையை ஊத்தினான்.

     தாரா சின்னதாய் கண்ணீரோடு மீண்டும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

     அட்சரனோ இருவருக்கும் சுட்டு முடித்து, அவளுக்கு ஊட்டி விட்டு கொண்டே “தாரா… இந்த ஐடி பீல்டு மனுஷங்க லைப் எப்படி தெரியுமா. என்ன தான் லட்சத்துல சம்பளம் என்றாலும் ஸ்டெஸ் அதிகமான வேலை. ஏன் தெரியுமா. நாள் முழுக்க கம்பியூட்டர் திரையை பார்த்து மைண்ட் எப்பவும் செய்யற வேலையை தான் தூங்கும் போது கூட நினைக்க வைக்கும்.

    இந்த ஜாப்னு இல்லை…. எல்லா ஜாபும். இப்ப எழுத்தாளரை எடுத்துக்கோ அவங்களுக்கு மனசுல இருப்பது எழுத்துல வரும் வரை மனழுத்தம் அதிகரிக்கும்.

     ஸ்கூல்ல போர்சன் முடிக்கிற வரை பேப்பர் கரெக்ஷன், அகவுண்டன்ஸுக்கு டேலி ஆகற வரை, இப்படி மண்டைக்குள்ளயே இருக்கும். நீ வரையற பெயிண்டிங் அப்படி தான். நிறங்களோட புது புது டிராயிங் பண்ண பண்ண உனக்கு மற்ற வேலைகள் கண்ணுக்கு தெரியலை.

   இங்க வந்ததும் உனக்கு மனசுக்கு பட்ட டிராயிங்கா இதை வரைஞ்சிட்டு எதையும் எடுத்து வைக்கலை மா.” என்றான்.

     தாரா இல்லையென மறுக்க அட்சரன் கையை உதறி உடை மாற்ற அறைக்குப் புறப்பட்டான்.

   சற்று நேரம் கழிய தாராவே அறைக்குள் வர அட்சரன் கையை தலைக்கு வைத்து உறங்க முற்பட, “நான் டாக்டரை பார்த்ததிலருந்து எதுவும் வரையலை. இங்க பாரு… அந்த ரூம்ல வரையற திங்க்ஸ் எல்லாம் மேல வச்சிட்டேன்” என்றாள்.

     “சரி தூங்கு.” என்று படுத்து கொண்டான்.

      நள்ளிரவில் யாரோ ஹாலில் உருட்டும் சத்தம் கேட்க தாரா எழுந்து வந்து லைட்டை போட்டாள். யாருமில்லையென்றாலும் ஏதோ இருப்பதாகவே தோன்ற, அச்சத்தை மறைக்க, பால்கனி கதவை திறந்து வைத்து காற்று வாங்கினாள்.

     யாரோ அருகே வர ஆவென கத்த ஆரம்பித்தாள். ஆனால் அதற்கு பின் மயங்கி சரிந்திருந்தாள். சற்று தொலைவில் இருந்த பில்டிங்கில் யாரோ பார்த்து முடித்திருந்தனர்.

    இன்று மட்டும் அல்ல இதோ கடந்த இரண்டு வாரமாக இதே போன்று தான் தாரா இந்த வீட்டில் அமானுஷ்யமான சம்பவங்களை கடந்துக் கொண்டிருக்கின்றாள்.

     தினமும் அந்த அப்பார்ட்மெண்டில் யாரோ ஒருவர் தாராவின் விசித்திரத்தை கடந்து வேடிக்கை பார்த்து செல்வது வாடிக்கையாக மாறியது.

   அட்சரனுக்கு அலுவலகத்தில் இருந்து வந்ததும் பதில் சொல்லியே தொண்டை வரண்டது.

     இப்படியே செல்ல அங்கு அரசல் புரசலாக அபார்ட்மெண்ட்டில் பேய் நடமாட்டம் என்று வதந்தி பரவியது.

     வீட்டில் ரத்தம் ஹால் முழுவதும் உறைந்திருந்தது என்பாள்.

   அடுத்த நாள் தூக்கிலிட்டு தொங்குவதாக கூறி முடித்தாள்.

    பால்கனியில் இருந்து ஒரு பெண் விழுந்தாள் என்று, ஒவ்வொரு முறையும் அவள் அஞ்சியதை கூற அது கதையாக பரவி சுவாரசியமாக மாறியது. இது அக்கட்டிடம் விலைக்கு வாங்கவோ, வாடகை தங்கவோ வருபோர் வாங்காமல் செல்ல நேரிட அது ராஜதுரை மற்றும் சேகர் காதுக்கு சென்றது.

      அன்று அந்த அபார்ட்மெண்ட் இன்ஞினியர் சேகரும், ராஜதுரையும் இருவரும் வந்து “இதென்ன ரோதனை, இந்த ஒரு அப்பார்ட்மெண்ட் வச்சி பக்கத்துல இருக்கற அப்பார்ட்மெண்ட் விலை போக மாட்டேங்குது. இருக்கற வீடும் வந்து பார்த்து நீங்க சொல்லற கதையை கேட்டு வாங்காம ஓடறாங்க. என்ன பிரச்சனை இது” என்று வந்தார்.
   
   காரணம் பக்கத்தில் இரண்டு அப்பார்ட்மெண்ட் ராஜதுரையின் கட்டுப்பாட்டில் விற்க தயாராக இருந்தனவையே…

     “நீங்க வேண்டுமின்னா இங்க இருந்து பாருங்க சார் அப்போ புரியும். அட்சரன் சொல்லு டா…” என்ற போது பேச்சிழந்து நின்றான்.

    இரண்டு நாளுக்கு முன் ஒரு பெண்   நடுவீட்டில எறிந்து போனதை கண்டு அவனுமே தாரா பேசியது கட்டுக்கதை அல்ல என்று நம்ப துவங்கிவிட்டான்.

     “சார் இது யாரோட சாபத்துல வாங்கி தொலைச்சிங்க. முடியலை… இப்ப நீங்க விற்றுட்டு போயாச்சு. நாங்க இல்லை கஷ்டப்படறோம். நீங்க விற்கற எல்லா அப்பார்ட்மெண்டே இப்படி தானா?” என்று பொங்கி விட்டான்.

     “இங்க பாருங்க தம்பி இது என் கட்டிடமே இல்லை. ஏதோ இங்க பஞ்சாயத்துனு சொன்னாங்க வந்தேன். ஏலேய் சேகரு… நீயாச்சு… அந்த ராமமூர்த்தியாச்சு” என்று செல்வதாக கண் காட்டி கிளம்பிவிட்டார்.

     “தம்பி வர்றேன்” என்று தாராவை நோட்டம் விட்டு கிளம்பினார்.

    அவருக்கு ஏதோவொரு ரிகழ்வை தாரா முன் வைப்பதாக தோன்ற நழுவினார்.

    தாராவும் ராஜதுரையை துளைத்திடும் பார்வையை வீசினாள்.

   ராஜதுரை சென்ற பதினைந்து நிமிடத்தில் சேகருக்கு போன் வந்தது.

    பாதி வழியிலேயே ராஜத்துரை அந்த ஒஎம்ஆர் ரோட்டில் ஆக்சிடெண்ட் ஆனதாக கேள்வியுற்றதும் சேகர் நிலைகுலைந்து போனான்.

     ஏன் என்றால் இறக்கும் நேரம் ராஜதுரை உச்சரித்த பெயராக ‘தாராவோ ராதாவோ’ என்று கூறி முடித்ததாக சொன்னதும் பதறி விட்டார்.

    இந்த வீடும் ராமமூர்த்தி ராதாவிற்கு சொந்தமென்பதால் விதிர்த்து போய் வியர்வை மழையில் நின்றான்.

   அட்சரன் தாரா இருவரும் சொன்னதை பார்த்தால் இது பேயின் வேலை என்று அவர் நம்பினார்.

சேகரை பிடித்து அட்சரன் கேள்வியாய் துளைக்க, அவனோ “சார் பில்டிங் கட்டறது தான் என் வேலை. ஏதோ அந்த ராமமூர்த்தி விற்று தர சொல்லி என்னையே நியமிச்சதால உங்களை அவரோட நேர்ல பேசவிடலை. இந்தாங்க இதான் அவர் அட்ரஸ் போய் கேளுங்க.” என்று அந்த நேரம் நழுவ பொய்யை உரைத்து கிளம்பினார்.

     ராஜதுரை தான் மொத்த கட்டிடத்தையும் ராமமூர்த்தியை மிரட்டி கையெழுத்து வாங்கி அனுப்பினார். ஆனால் நடப்பதை எல்லாம் பார்த்தால் சேருவோருக்கு சேரட்டும் என்று சேகர் விழுந்தடித்து சென்றான்.

      அட்சரன் மற்றும் தாரா இருவரும் அந்த கார்டை எடுத்து செல்ல ராதா கதவை திறந்தாள்.

     “நீ… நீங்க..” என்று திணற, “முதல்ல கதவை மூடு ராதா.” என்று தாரா கூறவும் ராதா கதவை தாழிட்டாள்.

    “என்னாச்சு?” என்றாள் குரலில் பதட்டத்தோடு.

     “சக்சஸ்… அந்த சேகர் ராஜதுரை இரண்டு பேருமே அந்த கட்டிடம் ராமமூர்த்தி பெரிப்பாவோடதுனு சொல்லிட்டு ஓடிட்டாங்க.” என்று வெற்றி களிப்பில் கத்தினாள்.

      “நான் கூட பிளான் சொதப்பும்னு நினைச்சேன். ஆனா தாரா பயமுறுத்தி வச்ச அந்த எதிர் வீட்டுல புலாவ் சாப்பிட்ட அக்கா… லிப்டுல எங்களை கவனிச்ச காலேஜ் பொண்ணு…  பக்கத்து பில்டிங் வயசான தாத்தா… இப்படி எல்லாரும் ராஜத்துரை வந்தப்ப சொல்லவும் ராஜதுரையே ஆடிட்டார்.

     பற்றாத குறைக்கு நான் வீடு முழுக்க ரத்தம், ஒரு பொண்ணு பால்கனியில் இருந்து குதிச்சதுனு சொல்ல, ஹால்ல ஏதோ எரிந்தது இப்படி அடுக்கடுக்கா சொன்னதும் தலையை பிடிச்சிட்டு ஓடிட்டார்.
  
    கூடவே அந்த சேகரும் என்னனே தெரியலை வியேர்த்து ஓடிட்டார். அப்படி பயமுறுத்திட்டோம். இனி பார்றேன்.. இப்ப தானே வீடு உங்களோடது என்று சொன்னாங்க. முழுசா மாற்றிடுவாங்க. இல்லை…. அவரோட மற்ற அப்பார்ட்மெண்ட் சேல் ஆகும் வரை இந்த நாடகம் தொடருமே” என்று அட்சரன் கூறவும் ராதா மகிழ்ச்சியாய் சின்னதாய் முறுவளித்து முடித்தாள்.

   “உட்காருங்க.. சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன். அப்பா அந்த சேகர் கூப்பிட்டாருனு தான் போயிருக்கார்.” என்று டிவியை ஆன் செய்து விட்டு ராதா செல்ல தாராவும் அட்சரனும் தங்களால் இவர்களின் பிரச்சனையை ஏதோ சரிப்படுத்த நடந்து கொண்டதை எண்ணி பெருமையாய் இருந்தனர்.

     அந்த நேரம் டிவியில் ராஜதுரையின் விபத்து செய்தி ஒளிப்பரப்பினார்கள். அதை பார்த்து ராதா சந்தோஷமாய் கண்ணீர் வடித்தாள்.

    “இந்த மிருகம் செத்துடுச்சு தாரா… எனக்கு வீடு கிடைச்சதை விட இவன் இறந்தது தான் நிம்மதியா இருக்கு. எப்படி கேவலமா பார்த்தான் தெரியுமா.

    அப்பாவும் நானும் அன்னிக்கு அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்குள் செத்துட்டோம். அந்தளவு அவனோட பார்வையே கற்பழிச்சிடுச்சு.” என்று அழுதாள்.

     தாராவும் அட்சரனும் ஆறுதலளிக்க முடியாதிருந்தனர்.

     “ராதா… அம்மாடி ராதா… இந்தாடா ஸ்வீட் எடுத்துக்கோ…” என்ற் ராமமூர்த்தி ஓடிவந்தார்.

    தனது தம்பி மகள் தாராவையும் மாப்பிள்ளையும் கண்டு “அந்த சேகர் பையன் புது கட்டிடம் கட்டற இடத்துல ராஜதுரை இறந்தது பேசிட்டே பத்திரத்தை கொடுத்து மன்னிப்பு கேட்டார்.
    என்னிடம் பேசி முடித்து படிக்கட்டு ஏற, மாடில இருந்து தடுக்கி விழுந்துட்டான்.” என்று மகிழ்ந்து கூறினார்.

     அட இவங்க இரண்டு பேரையும் பேய் தீர்த்து கட்டிடுச்சுனு புரளி கிளப்பி அடுத்து நாம இரண்டு குடும்பமும் அங்க போயிடலாம் சித்தப்பா” என்று தாரா கூறவும் அட்சரனோ நீ டிராயிங் பண்ணறதுக்கு பதிலா ஸ்கீரின் பிளே பண்ணலாம் டி” என்றான்.

  தாரா கூறியதை போலவே அப்பார்ட்மெண்டில் கூறி, பேய் சென்றதாக காட்சியமைப்பை மாற்றிட்டனர்.

     ராமமூர்த்தி ராதா கீழ் தளத்தில் குடிப்புகுந்தனர். தாரா அட்சரன் அவர்கள் ஏற்கனவே தங்கிய வீட்டில் வந்து நிம்மதியாய் வாழ ஆரம்பித்தனர்.

   தாரா வரைவதற்கு அதற்குண்டான அவளின் பென்சில் டிராயிங்கை நோட்டை எடுத்தாள்.

   பக்கங்கள் திருப்ப திருப்ப, ஏதோ ஒரு பெண்ணும் ஆணும் இருக்கும் புகைப்படமும், அதற்கு பின் பெண் ஒருவள் பால்கனியிலிருந்து குதிப்பது போலவும், அதற்கு பின் ஒரு பெண்ணை கயவன் ஒருவன் மானபங்கம் செய்யும் விதமாகவும், பின்னர் அந்த பெண்ணை எறித்து விடுவதாகவும் என்று மாறி மாறி இந்த வீட்டுக்குள்ளேயே நடைப் பெற்றதாக வரைந்து இருப்பதை பார்த்தாள். 

     பற்றாத குறைக்கு பூங்கா அருகே மற்றொரு இடத்தின் ஆண் அமர்ந்து கையை தலையில் வைத்து அமர்ந்திருப்பதும், அதே ஆணை வேறோரு கட்டடத்தில் படிக்கட்டில் புதைத்து விட்டு குழிப்போடும் விதமாகவும் வரைந்து வைத்திருந்தாள்.

    “இதெல்லாம்… எப்ப வரைஞ்சேனு தெரியலை அட்சரன். ஆனா பார்றேன். ஏதோ தொடர்ச்சியா… கதை மாதிரி இருக்கு” என்றாள்.

    “எம்மா தாயே… கதையோ வரைஞ்சி வச்சியோ, என்னவோ நேரம் கடத்தாதே… சமைச்சி போடுடி” என்று வரைந்த பென்சில் ஓவிய நோட்டினை எடுத்து வைத்தாள்.

    அவளுக்கே தான் எப்பொழுது வரைந்தோமென்று தெரியவில்லை. அட்சரனிடம் கூறினால் மீண்டும் வரைவதற்கு தடை விதித்து வண்ணங்கள் கொண்ட பென்சில் பெயிண்டும் பறித்து விடுவானோ என்ற அச்சம் உருவாகியது. அவளுக்கு வரைவது அலாதியான ஒன்று. அதனால் புது குழப்பம் ஏற்படுத்தாமல் இதனை கடந்து அட்சரனை கவனிக்க சென்றாள்.

     அந்த நோட்டின் மேலே அன்று தாரா எடுத்து வந்த நிப் உடைந்த பேனா நிமிர்ந்து சரியானாது.

நடந்தவை

    ராஜதுரை சிங்கம் படத்தில் வரும் மயில் வாகணம் போன்று கட்டப்பஞ்சாயத்து செய்து இடத்தின் உரிமையாளரிடம் பணம் பிடுங்குவதாக ‘தி ட்ரூத்’ என்ற பத்திரிக்கைக்கு ரூமர் வந்தவண்ணம் இருக்க, அதனை நிருபிக்க ரபீக் மற்றும் சித்தாரா என்ற இரு பத்திரிக்கையாளரும் ராஜதுரையின் செயல்களை நுட்பமாக கவனிக்க பின் தொடர்ந்தனர்.

     அப்படி தொடர்ந்த நேரம் தான் சித்தாரா, ரபீக் இருவரும் பைக்கில் ராஜதுரையை தேடி ராமமூர்த்தியின் இடம் வரை வந்தனர்.

    சித்தாரா தான் ராஜதுரையின் வீக் பாயிண்ட் பெண்கள் என்று கூறி தான் சென்று பேச்சு தொடுத்து செய்தி சேகரிக்க போவதாக பேனா கேமிராவை எடுத்து சென்றாள். ஏதேனும் தவறாக பட்டாளோ உடனே  பக்கத்தில் இருக்கும் போலிஸையும் தொடர்ப்பு கொண்டு ரபீக்கை வர சொன்னாள்.

  ரபீக் மறுத்தும் கிளம்பினாள்.

    ஆனால் எதிர் பாராதவகையில் சேகர் மற்றும் ராஜதுரையின் அடியாட்கள் என்று மூன்று நபர்கள் வந்திட, நழுவும் எண்ணத்தில் சித்தாரா திரும்பினாள். ஆனால் அடியாட்கள் ஒருவனின் பார்வையில் பட்டு ராஜதுரையின் முன் நின்றாள்.

    முதலில் சித்தாராவின் கைப்பையை ஆராய அவள் பத்திரிக்கை துறையை சேர்ந்தவளென தெரியவும் தனியாக வந்தாளயென சந்தேகம் அடைந்தனர்.

    அதனால் அவளின் போனை வாங்கி பார்க்க ரபீக் என்ற எண்ணிற்கு ஒரு மணி நேரம் முன் அழைத்திருக்க, ஆண் ஒருவனின் துணையோடு வந்ததாக யூகித்து அவனை தேடி படையெடுத்தனர்.

    கேமிராவில் ரபீக் பார்த்து கொண்டே மற்றொரு பாதையில் போலிஸ் இருக்கும் பக்கம் பைக்கில் விரைந்தான்.

    ஆளுக்கொரு ஆட்கள் ரபீக்கை தேடி புறப்பட, ராஜதுரை மற்றும் சேகர் மட்டுமே இருக்க, ராஜதுரையின் பார்வைக்கு பயந்து நடுங்க, அவளை அருகே வந்தவன் தொட எண்ணவும் வேகமாக பாதி கட்டி முடித்த பால்கனியில் ஏறினாள். ஆனால் உடனே சேகர் பிடித்து ஹாலில் தள்ளிட, ராஜதுரையிடம் வசமாக மாட்டினாள்.

     அவனிடம் சிக்கி சீரழிந்து விட, பேனாவோ மூலைக்கு ஒன்றாக, மூடி தனியே பேனா தனியே என்று விழுந்ததும், கேமிராவை நசுக்கி தள்ளினர்.

    “என்னையும் சாட்சியையும் அழிச்சிட்டதா நினைக்காதே. உனக்கான தீர்ப்பும் தண்டனையும் நிச்சயம் கிடைக்கும்” என்றாள்.

   ராஜதுரை சிரித்து கொண்டே நீ செத்துடுவ, இந்த பேனா கேமிரா உடைச்சிட்டேன். இப்ப சாதாரண பேனாவா போச்சி… எப்படிமா தீர்ப்பும் தண்டனையும் கொடுப்ப? நான் வேனா இங்க தீர்ப்பு தரவா? இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துல நீ என் கையால சாவ. அடுத்து உன் உடலை எரித்து சாம்பலாக்கி திசைக்கு கொஞ்சம் கொஞ்சமா தூவிடுவேன். எப்படி…?” என்றவன் தண்டனை வழங்கி விட்டால் உடைக்கப்படும் நீதியாக பேனா முனையை உடைத்தான். சொன்னது போலவே ராஜதுரையே சித்தாராவை கொன்று முடித்தான். 

      அவள் பிணத்தை மறைக்க அங்கேயே எரித்து சிமெண்ட் மண்ணோடு கலந்தனர்.

    ரபீக்கும் போலிஸிடம் கூறி முடிக்க ராஜதுரை ஆட்கள் வரவும் சரியாக இருக்க, அந்த போலிஸோ ராஜதுரையின் விசுவாசியாக போனது ரபீக்கின் துரதஷ்டம். அவனை சேகர் கட்டும் மற்றொரு கட்டிடத்தில் படிக்கட்டு வைக்குமிடத்தில் சேகரின் மேற்பார்வையில் உயிரோடு புதைத்து முடித்தனர்.

     சித்தாராவின் பை மற்றும் இதர சாம்பலை அள்ளி பூங்கா செப்பனிடும் இடத்தில் தூவலாக செய்து விட, அவளின் தீர்பெழுதிய பேனாவாக ராஜதுரை உடைத்தவை மண்ணில் புதைந்தது.

   அதன் பின் நடந்தவை தாரா நாடகமாடியதாக இருந்தாலும், சித்தாராவின் உருவமும் அச்சப்படுத்தலும் மற்றவருக்கு திகிலை தர அங்கிருந்தோர் வருவோரிடம் எல்லாம் பேய் தான் என தாராவின் பொய்யை உண்மையென அடித்து கூற உதவியது.

    தாரா அறியாதவொன்று சித்தாரா மூலமாக ராஜதுரை இங்கு வரவழைக்கப்பட்டு பக்கத்து இடத்தில் விபத்தாக மாற்றி கொண்டாளென.

   மற்றும் சேகர் ரபீக் இறந்த இடத்திலும் பழிவாங்கப்பட்டு உள்ளனர் என்பது.

     அமானுஷ்யமாக பேய் உள்ளதென நாடகம் ஆடியவருக்கே பேயின் ஆட்டம் அறியாமல் போனது தான் தீர்ப்பெழுதிய பேனாவின் எண்ணம்.

   தீர்ப்பெழுதிய பேனா தண்டனை எழுதியதும் உடைக்கப்படும் என்பது நீதி. ஆனால் இங்கோ உடைந்த பேனா முனை தீர்ப்பும் தண்டனையும் முடிந்ததும் நிமிர்ந்து சரியானது.

-முற்றும்.
-பிரவீணா தங்கராஜ். 

 (பிரதிலிபி நடத்திய ‘அந்தகாரம்’ என்ற போட்டியில் வெற்றி பெற்ற வரிசையில் இடம் பிடித்தவை.)

1 thought on “  தீர்ப்பெழுதிய பேனா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *