ஹே என்று மொத்த டீமும் தங்கள் வெற்றியை கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டாடிக் கொண்டிருந்தது.
மிகவும் நுணுக்கமாக வேலைகளை சரிபார்த்து வாங்கும் ஒரு கிளைண்டின் பிராஜெக்ட் முடிந்ததில் அந்த குழுவே அன்று தான் நிம்மதியாக மூச்சு விட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.
ஹைதராபாத்தில் உள்ள மாதாபூரில் இருக்கும் ரஹேஜா ஐடி பார்க்கில் நான்காம் தளத்தில் இருக்கும் டாப் நாட்ச் சொல்லுசன்ஸ் கம்பெனியின் முதன்மை மென்பொருள் வடிவமைப்புக் குழுவினர் தான் அவர்கள்.
அவர்களுக்கெல்லாம் குழுத் தலைவனாக இருந்தவன் ஷிவேஷ்.
மாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது அவர்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய கடிகார முட்கள்.
“மச்சி ரெண்டு நாளைக்கு லீவு டா” என்று அஜய் ஷிவேஷிடன் கூறிக் கொண்டிருக்க,
“நாளைக்கு எல்லாரும் சப்மிஷன் மீட்டிங்க்கு கண்டிப்பா வரணும். இந்த பிராஜெக்ட்ல உங்க பார்ட் என்ன? கிளைண்ட் எதிர்பார்த்த மாதிரி கொண்டு வர உங்களுக்கு எந்த அளவு வேலை நேரம் ஆச்சு, அது போக எவ்வளவு நேரம் இதுக்காக செலவு செய்தீங்கன்னு நாளைக்கு சொல்லணும். நம்ம பிராஜெக்ட் மேனேஜர் ஷீத்தல் , கம்பெனி பிராஜெக்ட் ஆபரேஷன்ஸ் ஹெட் உஜ்வல் எல்லாரும் இருப்பாங்க.” என்று அவர்களுக்கு அறிவிப்பு வழங்கிக் கொண்டிருந்தான்.
அவன் பேச்சைக் கேட்டு பெருமூச்சு விட்டனர் பாதிக்கும் மேற்பட்டோர். அழைத்து விட்டான். இனி வர மாட்டேன் என்று சொல்ல முடியாது என்று கிடைத்த சில நிமிட நிம்மதியும் பறிபோன கோபத்தில்,
“யூ ஆர் சோ மீன் ஷிவா.” என்று பலரும் அவனிடம் முகம் திருப்பி விட்டுச் சென்றனர்.
அவன் அதற்கெல்லாம் அசரவில்லை. அவனுடைய அன்றைய வேலை நாளின் கிளாக் புக்கை அவர்கள் சென்ற பின்னர் முடித்து விட்டுத் தான் வீட்டிற்குக் கிளம்பினான்.
ஷிவேஷ் ஒரு வித்தியாசமான பேர்வழி. அவனிடம் அன்பும் பணிவும் இருக்கும் அதே நேரம் நேர்மையும் துணிவும் அதிகமாகவே இருக்கும்.
மொத்த குழுவையும் ஒரு பார்வையில் கட்டி வைத்து வேலை வாங்குவதில் கெட்டிக்காரன்.
எந்த சிக்கல் வந்தாலும் அதனை கவனித்து சரி செய்யும் முறைகள் அனைத்தும் கூறுவனே அன்றி அவன் அமர்ந்து சரி செய்து தர மாட்டான். அது அவர்களுடைய வேலை என்பதில் தெளிவாக இருப்பான்.
நிறுவனத்தின் மேல் மட்ட ஆட்கள் அனைவருக்கும் அவனது வேலைத் திறமை பிடித்தாலும் , அவனது நேர்மை குணத்தால் சற்று தள்ளியே நிறுத்தி விடுவர். தொழில் என்று வந்த பின் அவர்கள் நேர்மையை பிடித்துக் கொண்டு தொங்கினால் சம்பளம் கொடுக்க முடியாது என்பது அவர்கள் பார்வை.
எது எப்படிப் போனாலும் நேர்மையாக இருப்பது மட்டுமே சிறந்தது என்பது ஷிவேஷின் எண்ணம்.
இதனால் நண்பனும் அல்லாத, எதிரியுமில்லாத இடத்தை தான் பலரிடம் பிடித்திருப்பான் ஷிவேஷ்.
யார் என்ன சொன்னாலும், அதனை இலகுவாக கடந்து விடும் அவனது குணம் தான் அவனை இத்தனை உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது.
வேலை முடித்து அந்த நகரத்தின் ஜனத்திரளில் கலந்து தன் வீட்டை அவன் அடையும் போது மணி எட்டைத் தொட்டு விட்டது.
அவனது அலுவலகத்துக்கு ஓரளவு பக்கத்தில் அவனது வசதிக்கு ஏற்ப
மணிகொண்டாவின் ஷிர்டி சாய் நகரில் ஒரு அபார்ட்மெண்ட் எடுத்து தங்கி இருந்தான்.
முகம் அலம்பி, உடை மாற்றிக்கொண்டு இரவு உணவை சமைத்து விட்டு, அதனுடன் தொலைகாட்சியில் செய்திகள் பார்த்தபடி அமர்ந்தான் ஷிவேஷ்.
அவனது அன்னை அவனை ஒன்பது முப்பதுக்கு அழைத்து பேசுவதற்குள் உண்ட பாத்திரங்களை கழுவி சமையலறையை ஒதுங்க வைத்து படுக்கைக்கு வந்து விடுவான்.
எந்த வேலை செய்யவும் சுணங்காத அவனது குணம் அவனது அன்னைக்கே ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
“என்ன ஷிவா வேலை எல்லாம் முடிஞ்சுதா? இன்னிக்கு பிராஜெக்ட் முடிஞ்சிடும்ன்னு சொன்னியே?என்ன ஆச்சு?” என்றவரிடம்,
“எல்லாமே ஓகே தான் மா. இந்த வாரம் இங்க வர்றேன்னு சொன்னீங்களே?” என்று ஆர்வமாக அவன் வினவ,
“எங்க டா உன் அப்பா இன்னிக்கு ஆபிஸ்ல இருந்து வரும்போதே இருமிக்கிட்டே வந்தாரு. இப்ப லேசா காய்ச்சல் அடிக்குது. இனி எங்க உன்னைப் பார்க்க வர்றது?” என்று வருத்தமாக கூறினார்.
அவனது இந்த பொறுமையான குணம் அவனுக்குக் கிடைக்கப்பெற மிகப்பெரிய காரணமாக இருந்தவர் அவனது தந்தை கதிர்வேல்.
மனைவியை இம்மி அளவுக்கும் மகனுக்கு விட்டுத் தராத பெருமைக்குரியவர். சிறுவயது முதலே அவனை விட அவன் அன்னை நளினாவுக்கு அவனது தந்தையை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். அவனிடம் அவர் வரும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி மனைவியின் கவனத்தை தன் புறம் திருப்பிக் கொள்வார் கதிர்வேல்.
அவரின் இந்த செயலை நளினா இன்று வரை புரிந்து கொண்டாரா என்பது ஷிவாவுக்கு தெரியாது. ஆனால் அவனுக்கு என்று புரிந்ததோ அன்றே தன் வேலைகளை தானே செய்யப் பழகிக் கொண்டான்.
மனைவி மேல் அதீத காதல் கொண்டவர் கதிர்வேல். அனைத்திற்கும் அவர் நளினா என்று அழைக்காமல் எதையுமே முடித்ததில்லை. எப்படித்தான் அலுவலகத்தில் அன்னை இல்லாமல் இருக்கிறாரோ என்று ஷிவேஷ் ஆச்சரியப்பட்டு ஒருநாள் விளையாட்டுப் போல அன்னையிடம் வினவ,
ஆபிஸ்ல இருந்தாலும் போன் பண்ணி பேசிட்டு தான் இருப்பாரு என்று பெருமையாக கூறிய அன்னையை பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு.
ஏற்கனவே தந்தையின் மீது கவனம் செலுத்தி ஓய்ந்து போகும் அன்னையை தானும் கஷ்டப்பட வைக்க வேண்டாம் என்று எண்ணிய நாளில் இருந்து இன்று வரை அவனது செயல்கள் அனைத்தும் முதிர்வுடன் அமைய ஆரம்பித்தது.
இன்று அன்னை ஊருக்கு வர முடியாது என்று சொன்னதும் லேசாக மனம் வாடியது அவனுக்கு. அதனை அன்னையிடம் காட்டிக் கொள்ளாமல்,
சரிம்மா அப்பாவை கவனிங்க. நான் நாளைக்கு பேசுறேன் என்று அழைப்பைத் துண்டித்தான்.
மணி பத்தை நெருங்கவில்லை. பத்து மணிக்கு தான் அவனது காதலி நிஷாவை அழைத்துப் பேசுவான். அன்னை தந்தை ஒருவிதம் என்றால் நிஷா வேறு விதம்.
அவளுக்கு எல்லாமே அவளது விருப்பம் தான். அவள் மனம் கோணாமல் நடக்கும் வரை அவள் அத்தனை நல்லவள். இல்லாவிட்டால் தேளாய் கொட்டும் நாக்கு அவளுக்கு.
இதெல்லாம் ஷிவாவுக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் பள்ளிக்காலம் முதல் தொடர்ந்த நட்பு கல்லூரி தொடங்கும் நேரத்தில் காதலாய் மலர்ந்து இன்று வரை இருவருக்கும் பெரிய சண்டைகள் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
அவளை அழைத்து விட்டு அமைதியுடன் காத்திருந்தான்.
அழைப்பை ஏற்றவள், “என்ன உன் அம்மாவை இன்னிக்கு சீக்கிரமா கொஞ்சி முடிச்சிட்ட போல!” என்று நக்கலாக வினவ,
“அப்படி எல்லாம் இல்ல நிஷா” என்று சிரித்தான்.
அன்றைய நாளைப் பற்றி நிஷா பேசிக்கொண்டே இருக்க அவனது கண்கள் தூக்கத்தில் சொருகும் வரை ம் கொட்டியவன்,
“ஓகே டா நாளைக்கு மீட்டிங் இருக்கு. இப்போ தூங்கினா தான் சரியா இருக்கும்.” என்று சொல்ல,
“உனக்கு எப்பவும் உன் வேலை தான் முக்கியம். நான் முக்கியம் இல்ல. என்கிட்ட கொஞ்ச நேரம் கூட பேசறது இல்ல. உடனே வச்சுட்டு வேலை இருக்குன்னு போயிடுற. என்னைப் பத்தி உனக்கு அக்கறையே இல்ல.” என்று கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.
தூக்கம் தூரமாய் விலகி ஓடத் துவங்கியது.
சில நேரங்களில் தன்னை சுற்றி உள்ள மனிதர்கள் யாருமே தன்னை புரிந்து கொள்வதே இல்லையோ என்ற எண்ணம் எழும் அவனுக்கு. ஆனாலும் அனைவருக்கும் ஏதாவது சூழ்நிலை சார்ந்த காரணம் இருக்கும் என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்து விடுவான்.
நிஷாவின் பேச்சு சற்று சங்கடத்தை கொடுத்தாலும் தன் மேல் உள்ள காதலில் தன்னிடம் பேசத்தான் அப்படி சொல்கிறாள் என்று சமாதானம் செய்துகொண்டு மேலும் அறை மணி நேரம் பேசிவிட்டு கடைசியாக,
“நான் நாளைக்கு ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூ போறேன் ஷிவா. அம்மாவுக்கு தெரியாது. அவங்க என்னை மேல படிக்க சொல்றாங்க. ஆனா எனக்கு வேலைக்கு போகணும்.” என்று பிடிவாதமான குரலில் கூறினாள்.
“பரவால்ல நிஷா நீ அட்டென்ட் பண்ணு. கண்டிப்பா ஜாப் கிடைக்கும். ஆன்டியை சமாதானம் பண்ணிக்கலாம்.” என்று அவளுக்கு பரிந்து அவன் பேசியதும்,
“சோ ஸ்வீட் ஷிவா. நான் போய் என் ஃபைல்ல எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கறேன். சீ யூ” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவனுக்கு உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை வெளிப்படுத்த இயலவில்லை. ஆனால் எதற்கும் மனச்சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள பழகிக் கொண்டவன் என்பதால் ஒரு பெருமூச்சை வெளியிட்டு படுக்கையில் தலை சாய்த்தான்.
சில நேரங்களில் தன்னை சுற்றியுள்ள மனிதர்களை விட தான் மிகவும் வித்தியாசப்பட்டு இருப்பதாக அவனுக்கு தோன்றும். அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, அவர்கள் சூழ்நிலைக்கு தக்க மாறிக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியை முன்னிலைப் படுத்தி கொள்கிறார்கள். ஆனால் அவனோ இது தான் நான் என்ற சில சட்டதிட்டங்களை மனதில் வைத்துக்கொண்டு இன்பதுன்பங்களை விலக்கி நேர்கோட்டில் வாழ்கிறான்.
யோசிக்க யோசிக்க தூக்கம் தொலைவில் செல்லத் துவங்கியது.
ஏதேதோ நினைவுகள் வந்து பீடிக்க, எழுந்து நேராக அமர்ந்து பத்மாசனம் போட்டான்.
சீராக மூச்சை இழுத்துக் நிறுத்தி வெளியிடத் துவங்கிய பத்து நிமிடத்தில் அவன் மனதில் கடலாக அலையடித்த நினைவுகள் எல்லாம் அமிழ்ந்து போய் அமைதி ஆட்சிக்கு வந்தது.
மீண்டும் படுக்கையில் தன்னை சரித்துக் கொண்டவனுக்கு தூக்கம் துணையாக வந்தது.
தன்னுடைய நாளை நேர்த்தியாக முடித்துக் கொள்ளப் பழகி இருந்தான் ஷிவேஷ்.
Nice
Good epi
An amazing start. Mr. Perfect shiva