Skip to content
Home » துளி தீயும் நீயா 2

துளி தீயும் நீயா 2

எப்பொழுதும் போல அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த ஷிவேஷ் அன்றைய மீட்டிங்கிற்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்

யார் என்ன வேலை செய்தார்கள், இடையில் ஏற்பட்ட பிழைகள் என்ன, அதனை அடுத்த முறை வராமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற அவனது அறிக்கையை தயார் செய்து விட்டு தன் குழு உறுப்பினர்கள் அனைவரும் வந்து விட்டனரா என்று சரிபார்த்தான்.

இத்தனை நாள் கடுமையான உழைப்புக்குப் பின் விடுமுறை கிடைக்காத எரிச்சலும் கோபமும் அனைவருக்கும் இருந்தாலும் அவனது வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அனைவருமே வந்திருந்தனர்.

பிராஜெக்ட் மேனேஜர் ஷீத்தல் , கம்பெனி பிராஜெக்ட் ஆபரேஷன்ஸ் ஹெட் உஜ்வல் இருவரும் வேறு ஒரு மீட்டிங்கில் இருக்க அனைவரும் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

இயல்பாக ஷிவா இடையில் சென்றதும் பேச்சு பாதில் நின்று போனது.

“என்னப்பா பேசிட்டு இருந்தீங்க, ஏன் நிறுத்திட்டீங்க கண்டின்யு பண்ணுங்க.” என்று நண்பனாக அவன் கூற,

“இல்ல வேண்டாம். நாங்க சாதாரணமா யாரையாவது கலாய்ப்போம் நீ அது இதுன்னு எங்களுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிப்ப. எதுக்கு வம்பு?” என்று ஒருவன் கூறிவிட்டு கணினியின் பக்கம் திரும்பிக்
கொள்ள அவனை பின்பற்றி அனைவரும் கணினி திரையை வெறிக்க ஆரம்பித்தனர்.

ஷிவாவிற்கு இது புதிதல்ல. ஒருவரை உருவ கேலி செய்யக்கூடாது, தெரியாத விஷயங்களை தெரிந்தது போல பேசி யாரையும் சிக்கலில் மாட்டி விடக் கூடாது என்பதெல்லாம் அவன் கொண்ட கொள்கைகள்.

கேளிக்கை பேச்சு என்ற காரணத்தை வைத்துக் கொண்டு நண்பர்கள் கூட்டம் இதை செய்யும்போது அவன் அதனை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறான். ஆனால் அவனுக்கு கிடைத்தது என்னவோ கெட்ட பெயர் தான்.

அதிலும் அவர்கள் குழு இருக்கும் கியூபிகலுக்கு எதிரில் உள்ள டீமில் இருக்கும் ஒரு திருமணமான பெண்ணை அந்த குழுவில் உள்ள ஆண் ஒருவருடன் இவர்கள் சம்பந்தப்படுத்தி கேலி செய்வார்கள். அது அவனுக்கு தெரிய வந்ததும் தயங்காமல் கண்டித்துவிட்டான்.

“என்ன பேசுறோம்ன்னு கவனம் வேண்டாமா? அவங்க மேரீ்ட் வுமன். நீங்க பேசுறது அவங்களுக்கு இங்க அஃபேர் இருக்குன்னு சொல்றது போல இருக்கு. உங்களுக்கு அவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன நடக்குதுன்னு கண்டிப்பா தெரியாதப்ப எதுக்கு காசிப் பண்றீங்க? நாளைக்கு அவங்க லைப்ல பிராப்ளம் வந்தா நீங்களா ஹெல்ப் பண்ணுவீங்க?” என்று கோபமாக பேசிவிட்டான்.

அன்று முதல் அந்த குழுவின் எந்த பேச்சுகளிலும் ஷிவாவை அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அவனும் அதனை கண்டுகொள்வதில்லை.

சில நேரங்களில் குழுவுடன் தனக்கு நெருக்கம் குறைந்தால் வேலை பாதிக்கும் என்று அவனே பேச வந்தாலும் அவர்கள் அவனை நாசுக்காக ஒதுக்கிவிடுவர். அவனுக்கு புரிந்ததும் அவனும் விலகிவிடுவான்.

சமீபமாக நடக்கும் இந்த விஷயங்கள் அவனுக்கு தன் குழு மீது வருத்தத்தைத் கொடுத்தாலும் வேலையை மனதில் வைத்துக் கொண்டு அதன் போக்கில் சென்று கொண்டிருந்தான்.

இன்னும் அவ்விருவரும் ரிவ்யூ மீட்டிங்கிற்கு வராததால் தன் குழுவின் வேலைத்திறன் பற்றி அவர்களிடம் கலந்தாய்வு செய்ய எண்ணி அழைத்தான்.

அவன் குறிப்பிட்டு சொன்ன
எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த கூட்டம் அமைதியாக இருக்க அவனது நண்பன் அஜய் முன்னே வந்து,

“போதும் ஷிவா எல்லாருமே வெறுத்து போய் இருக்கோம். மீட்டிங்ன்னு வர சொன்ன, இன்னும் ஷீத்தல் வரல. அவங்க வந்தா மறுபடி இதெல்லாம் சொல்லுவியா?” என்று கேட்க,

சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்தனர் ஷீத்தலும் உஜ்வலும்.

அவர்களை வர்வேற்றவன்,

“ஏற்கனவே எங்க டீம் பெர்பார்மன்ஸ் மீட்டிங் அண்ட் ரிவியு முடிஞ்சுடுச்சு. சோ ரிப்போர்ட் உங்களுக்கு மெயில் பண்ணிட்டேன். பெஸ்ட் பெர்பார்மன்ஸ் அஜய் அண்ட் நஜ்மா. அவங்களுக்கு இன்செண்டிவ்ல கிரெடிட் சேர்க்க சொல்லியும் எச் ஆர் டீமுக்கு சிசி பண்ணிருக்கேன். இதை தவிர உங்களுக்கு எந்த டவுட் இருந்தாலும் கேளுங்க ஐ வில் எக்ஸ்பிளைன்.” என்று அமர்ந்தான் ஷிவேஷ்.

“வீ ஆர் கிலாட் பை தி பெர்பார்மென்ஸ் ஆஃப் யுவர் டீம். சம் ஃப்ளாஸ் டு பி ரெக்டிஃபைட். தட்ஸ் ஆல். மீட் அஸ் இன் கான்ஃப்ரன்ஸ் ரூம் ஷிவேஷ்.”என்று சொல்லிட்டு உஜ்வல் எழுந்து கொள்ள,

“கிரேட் வர்க் டீம்” என்று பாராட்டு விட்டு ஷீத்தலும் கிளம்பினாள்.

அவனை அழைத்ததை கவனித்த குழு ஷிவேஷை அழுத்தமாக பார்க்க, அவனோ கண்டு கொள்ளாமல் தன் மடிக்கணினியில் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

அஜய் அவனை நெருங்கி, “மச்சி அவங்க உன்னை வர சொல்றது அடுத்த பிராஜெக்ட் பண்ணன்னா பிளீஸ் ஒரு வாரம் பிரேக் கேளு மச்சி. அட்லீஸ்ட் வீக்கென்ட் அப்பறமா” என்று தோளில் கைவைத்து வினவினான்.

“ஐ ஆம் ஜஸ்ட் அ டீம் லீட் ஹியர். தேர் இஸ் செயின் ஆஃப் கமேன்ட் விச் ஐ கென்னாட் டிக்கிலைன். லெட்ஸ் சீ” என்று எழுந்து அவர்களை சந்திக்க சென்றான்.

“எனக்கு தெரியும் அஜய், இவன் நம்மளை இன்னிக்கு வர சொன்னதே அடுத்த பிராஜெக்ட்ல மாட்டி விட தான். பாரு, அவங்க கூப்பிட்டதும் பின்னாடியே போறான்.” என்று ஆளாளுக்கு கத்த ஆரம்பித்தனர்.

அவர்களை சந்திக்க அறைக்கு சென்றவனிடம் அடுத்த பிராஜெக்ட் பைல் ஒன்றை அவனது மெயிலுக்கு அனுப்பி இருப்பதாக கூறினர்.

“ஷீத்தல் யூ ஹாவ் டு சிட் இன் தெயர் பொசிஷன் அண்ட் திங்க். போன வாரம் முழுக்க ராத்திரி பகல் பார்க்காம வேலை செய்தது உடனே அடுத்த பிராஜெக்ட் வாங்க இல்ல.  டெட்லைன்குள்ள அதை முடிக்க, அட்லீஸ்ட் ஒரு டே ஆஃப் கூட கொடுக்காம பிராஜெக்ட் தர்றது நல்லாவே இல்ல” என்று மனதில் இருந்ததை மறைக்காமல் கூறி விட்டான்.

“சீ ஷிவேஷ் உங்க டீம்  எல்லாரும் நல்லா பெர்பார்ம் பண்றீங்க அதுனால தான் மத்த டீம் விட உங்களுக்கு பேக்கேஜ் அதிகம். ஆக்சுவலா லாஸ்ட் வீக் நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு செய்ய வேண்டிய சூழல் வந்தது நடுவுல நிறைய சொதப்பல் வந்து லேட் ஆனதால் தானே! இந்த முறை லேட் பண்ணாம செய்ங்க. நாங்க ஒன்னும் ஆறு மாச பிராஜெக்ட் பிளானை மூணு மாசத்துல முடிக்க சொல்லலையே!” என்று ஷீத்தல் பேசிவிட அவள் பேசுவதில் உள்ள நியாயம் அவனுக்கு புரிந்தது.

“ஓகே. அப்ப இன்னிக்கு எல்லாரையும் போக சொல்லிடுறேன். மன்டேல இருந்து ஸ்டார்ட் பண்ணட்டும்” என்று அவனாக இறங்கி வந்து பேச,

“நோ ஷிவா, ஸ்டார்ட் ஸ்ட்ராங் அண்ட் பின்னிஷ் ஸ்ட்ராங்” என்றாள் ஷீத்தல் அழுத்தமாக.

“வீ வில் ஸ்டார்ட் டுமாரோ.” என்று மறத்த குரலில் கூறிவிட்டு குழுவிடம் செல்ல நினைக்க அங்கே யாருமே இல்லை. மதிய உணவு நேரம் என்பதால் அனைவரும் சென்றிருக்கக் கூடும் என்று எண்ணி கேபிடீரியா வந்தான் ஷிவேஷ்.

அவனது குழுவினர் சிலர் ஆங்காங்கு அமர்ந்து சாப்பிடுவது தெரிந்தது.  பிராஜெக்ட் டீடெயில்ஸ் அனைத்தையும் டீம் மெம்பர்s அனைவருக்கும் மெயில் அனுப்பி விட்டு, இரண்டு நாட்கள் இலகுவாக செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு அனுப்பியவன், உணவுக்குப்பின்  அவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொள்ளலாம் என்று அவனது உணவை பெற்றுக்கொண்டு ஒரு டேபிளில் அமர்ந்தான்.

அந்த கட்டிடத்தில் பணிபுரியும் பலரும் அங்கிருந்த கஃபீடீரியாவில் மதிய உணவு முடித்துக் கொண்டு அவசர அவரசமாக தங்கள் அலுவலகங்களை நோக்கி சென்று கொண்டிருக்க நிதானமாக தன் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தான் அவன்.

அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் பொத்தென்று வந்தமர்ந்த அவனது அலுவலகத் தோழன் அஜய் ரெட்டி,

“நீயெல்லாம் மனுஷனா டா?” என்று மேஜை மேலிருந்த காகித கைக்குட்டையை அவன் மீது வீசி எறிந்தான்.

“என்னாச்சு டா? ஏன் இவ்வளவு கோபம்?” என்று நண்பனைக் கேட்டாலும் அவன் கையும் வாயும் உணவு உண்ணும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.

“நேத்து தான் பிராஜெக்ட் முடிஞ்சது. அதுக்குள்ள இன்னிக்கு காலைல புது பிராஜெக்ட்ன்னு மேனேஜர் கூப்பிட்டப்ப உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? ஒரு வாரமா வீட்டுக்கு கூட சரியா போகல அதுனால இந்த வீகெண்ட்டுக்கு அப்பறம் அடுத்த பிராஜெக்ட் ஓகே சொல்லலாம்
டான்னு சொன்னேனா இல்லையா?” என்று இம்முறை வாட்டர் பாட்டிலை அவனை நோக்கி எறிந்தான்.

அதை லாவகமாக பிடித்தவன், “ஆமா சொன்ன, அதுக்கு? ஆபிஸ்ல டி.எல்.ன்ற முறையில என்னைக் கூப்பிட்டு அடுத்த பிராஜெக்ட் சொல்லும்போது பண்ண முடியாதுன்னு சொல்ல முடியுமா?” என்று சாதாரணமாக கேட்டுவிட்டு கடைசி கவள உணவை உண்டு முடித்தான்.

“டேய் ஒழுங்கா தூங்கி ஒரு வாரம் ஆச்சு. முழு டீமும் இப்ப உன் மேல கொலைவெறில இருக்கு.” என்று எரிச்சலோடு கூறிய நண்பனை ஆழ்ந்து நோக்கியவன்,

“யாரையும் இன்னிக்கே முழு பிராஜெக்ட் வேலையையும் பார்க்க சொல்லலையே. ஜஸ்ட் அதோட மெத்தட்ஸ், நம்ம ஸ்கெட்டியுல் இதெல்லாம் தானே ரெண்டு நாள் செய்ய சொல்லி இருக்கேன். அதுக்கு என்ன இப்போ?” சாதாரணமாக கேட்டுவிட்டு நண்பன் முகத்தை ஏறிட்டான் ஷிவா.

“டேய் கொஞ்சம் ரெஸ்ட் டா. அது புரியலையா?” என்று அஜய் மீண்டும் பல்லைக் கடிக்க,

“ஓஹோ ரெஸ்ட். அதாவது ரெண்டு நாள் வருவீங்க எதுவும் செய்யாம அரட்டை மட்டும் அடிச்சிட்டு வீட்டு போயிடுவீங்க. திங்கள்ல இருந்து தான் வேலையை ஆரம்பிக்க முடியும் உங்களால.”

“ஆமா டா. இல்ல ஆபிஸ்ல சொல்லி லீவு வாங்கிக் கொடுத்தாலும் பெட்டர் தான்” என்றான் அஜய் எளிமையாக.

“போன பிராஜெக்ட்ல நீங்க அதிக நேரம் பார்த்த வேலைக்கு இன்செண்டிவ் வாங்கினது போல இந்த ரெண்டு நாளுக்கு சம்பளம் பிடிச்சுக்கலாமா?” என்று நக்கலாக அஜயை நோக்கினான்.

“டேய் டேய்.. ஏன் டா? லீவ் வித் சேலரி ன்னா ஓகே டா. இல்லன்னா நீ சொன்னபடி வந்துட்டு சும்மா கூட இருந்துட்டு போறோம். சம்பளத்துல கையை வைக்காத டா.” என்று பதறினான்.

“அது எப்படி? வேலைக்கு நடுவுல டீம் லஞ்ச், டின்னர், வீகெண்ட்ல பார்ட்டி, பாட்டில் இதெல்லாம் மட்டும் கரெக்டா உங்களுக்கு வேணும். ஆனா ஒரு வேலை முடிஞ்சு அடுத்தது எடுத்தா செய்ய கஷ்டமா? இதென்ன என் அப்பா வீட்டு ஆபிஸா, நான் அடுத்த வாரம் வேலை செய்யறேன்னு சொல்ல, சும்மா ஒன்னும் வேலை செய்யல தானே? அவன் காசுல சந்தோஷமா இருந்தப்ப இனிச்சுது, இன்னிக்கு வேலை செய்ய சொன்னா கசக்குதா?

எப்படி இருந்தாலும் இந்த வீகெண்ட் டீம் எல்லாரும் அவுட்டிங் போறதுன்னு முடிவு பண்ணி இருந்தோம்ல இந்த ரெண்டு நாள் வேலை செய்துட்டு வெளில போன என்ன?

இங்க பாரு உனக்கும் அங்க இருக்குற எல்லாருக்கும் சேர்த்து தான் சொல்றேன், எப்படி என்ஜாய் பண்றீங்களோ அதே போல வேலையும் பார்க்கணும். இஷ்டம் இருந்தா இதே டீம்ல கண்டின்யு பண்ண சொல்லு. இல்லன்னா ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த பிராஜெக்ட் எந்த டீம் லீடர் கிட்ட போகுதோ அவன் டீமுக்கு ரெகொஸ்ட் கொடுத்து காத்திருக்க சொல்லு. வேலை செய்யற, வேலை தெரிஞ்ச எத்தனையோ பேர் லாங்குவேஜ், டீம் லீடர் பாலிடிக்ஸ்னால பல மாசமா பெஞ்ச்ல இருக்காங்க. நான் அவங்களை என் டீம்ல சேர்த்துப்பேன்.” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறிவிட்டு நிற்காமல் விறுவிறுவென்று சென்று விட்டான் ஷிவேஷ்.

கேட்ட இரண்டு வரிக் கேள்விக்கு இரண்டு பக்க அளவில் எகிறி குதிக்காமல் அதே நேரம் முகத்தில் அடித்தது போல பேசி விட்டுச் செல்லும் நண்பனைக் கண்டு திருதிருத்தான் அஜய். அவன் நேர்மையான குணம் தெரிந்தும் நண்பன் என்ற உரிமையில் வாயை விட்டுவிட்ட தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.

2 thoughts on “துளி தீயும் நீயா 2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *