Skip to content
Home » தென்றல் நீ தானே-2

தென்றல் நீ தானே-2

அத்தியாயம்-2

Thank you for reading this post, don't forget to subscribe!

அண்ணாமலை பணிக்கு வந்து, தன்னுடன் பணிப்புரியும் அதிகாரிகள் முன் கேக்கை நீட்டினார்.
சிலருக்கு நேற்றே அண்ணாமலையின் மகள் பிறந்த நாளென்று அறிந்திருந்தனரே.

“ஏன் அண்ணாமலை… பொண்ணுக்கு இருபத்திரெண்டு வயசு இருக்குமா? மாப்பிள்ளை பார்க்கறியா?” என்று மருதமுத்து என்பவர் கேட்டார்.‌

“பார்க்கணும் மருதமுத்து, என் மனைவி வள்ளியும் நேத்தே சொன்னா, இனி தான் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கணும்” என்றார்.

“சரி சரி. நமக்கு தெரிந்த இடத்துல ஒரு பையன் இருக்கான். விவரம் என்னனு விசாரிக்கறேன். தோதுபட்டா உன்னிடம் சொல்லறேன்.” என்று கூற ஆகட்டும் என்று தலையாட்டினார்.

அண்ணாமலை அருகே, அப்பொழுது மிடுக்கான தோற்றத்தோடு, “சார் இங்க கேண்டீன் எந்த பக்கம்” என்று கேட்க, அண்ணாமலை கவனிக்காமல் “நீங்களும் கேக் எடுத்துக்கோங்க” என்று வார்த்தை உதிர்த்து நீட்டினார்.‌

எதிரே இருந்தவன் பேசவும் தான் மருதமுத்துவிடம் பேசிக்கொண்டே தன்னோடு வேலை செய்யும் காலலதிகாரிக்கு பதில் ஒர் இளைஞனிடம் கேக்கை கொடுப்பதை கவனித்தார்.

அவனுமே மறுக்காமல், “தேங்க்யூ என்ன ஸ்பெஷல் அங்கிள்” என்று எடுத்து கொள்ள, அண்ணாமலையும், “என் பொண்ணு பிறந்த நாள் தம்பி” என்றவர் கேண்டீன் செல்லும் வழியையும் கூறினார்.

“வாவ் பெர்த்டேவா? அவங்க கனவுக்கு எந்த தடங்கலும் இல்லாம சந்தோஷமா இருக்கணும்” என்று நன்றி கூறி அகன்றான் ஹர்ஷவர்தன்.‌ நம் கதையின் நாயகன்.

அண்ணாமலை அங்கிருந்து செல்பவனை நிதானமாய் கவனித்தார். தோற்றம் என்னவோ வெளிநாட்டுக்காரன் என்று பறைச்சாற்றியது. ‘இந்த ஊர் இல்லைனு பார்க்கறப்ப தெரியுது. ஆனா தமிழ் நல்லா உச்சரிக்கின்றார்.’ என்று தனது பணியை கவனிக்க ஆரம்பித்தார்.

நம் நாயகன் ஹர்ஷவர்தன் என்ற ஹர்ஷா கேண்டீன் வந்து, தனது நண்பன் ராம்கி என்பவனுக்கு போனில் அழைத்தான்.

“எங்கடா இருக்க?” என்று கேட்டதும், “இங்க தான் ரெஸ்ட் ரூம்ல” என்று, மாறிமாறி அவரவர் இடத்தை கேட்டுக் கொண்டனர்.

நாயகன் ஹர்ஷாவுக்கு இந்தியா முற்றிலும் புதிது.
தமிழ்நாட்டை சேர்ந்த தாமோதரன் என்ற தந்தைக்கும், ஆஸ்திரேலியாவில் நான்சி என்ற தாயுக்கும், பிறந்த ஆஸ்திரேலிய சிட்டிசன்.

பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆஸ்திரேலியா என்றாலும் தமிழ் சரளமாக பேச தெரியும். தந்தை தாமோதரனின் பயிற்சி அப்படி.

இங்கு உறவுகள் யாருமில்லை, ஆனால் தன்னுடன் ஆஸ்திரேலியாவில் படித்த நண்பன் ராம்கியின் வீட்டுக்கு வந்தான். ஒரு மாதம் இருந்துவிட்டு, இதோ சென்னையில் நடக்கப்போகும் கலைநிகழ்ச்சியை கடைசியாக காணவும், அதன் பின் இன்றிரவே திரும்பி செல்வதாக இருக்க, இங்கே வந்தான்.

நண்பனுக்குமே மதுரை பக்கம் ஊர். இன்றைய கலைநிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவே இரவு வந்திருந்தனர்.

அதனால் தான் அதிகாலை நேரு ஸ்டேடியத்தில் கேண்டீனை தேடி நிற்கின்றான் ஹர்ஷா.

“எங்கடா விட்டுட்டு போன?” என்றான் ஹார்ஷா.

நண்பன் ராம்கியோ ”ரெஸ்ட் ரூம் போறேன்னு சொல்லிட்டு தானே டா வந்தேன்.” என்று இருவருக்கும் காபி கேட்டு வாங்கி தொண்டையை நனைத்தனர்.

“இதென்னடா கையில” என்று கைகடிகாரத்தில் கேக்கின் க்ரீம் ஒட்டியிருக்க, “ஒரு போலீஸ் அங்கிளோட பொண்ணுக்கு பெர்த்டேவாம், கேக் தந்தார். தேங்க் பண்ணி சாப்பிட்டேன். அதுன்னு நினைக்கிறேன்” என்றவன் க்ரீமை கைக்குட்டையில் துடைத்தான்.

“என்னது போலீஸேவா? டேய்… பார்த்து டா” என்று தள்ளிக்கொண்டு வெளியே சென்றான் ராம்கி.

மதுரையிலிருந்து வந்ததால் அருகேயிருந்த ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டு குளித்து முடித்து முதுகுப்பையோடு வெக்கெட் செய்து இங்கு வந்திருந்தனர்.

“ஈவினிங் நாலு மணி ஷோவுக்கு இப்பவே வந்துட்டோம். பச்.” என்று சலிப்படைய, “டேய்… நாலு மணின்னு லேட்டா வரமுடியாது. பத்து மணியிலிருந்தே ஏதேதோ கலை நிகழ்ச்சி நடக்குமாம். பார்த்தல்ல இப்பவே போலீஸ் கூட்டத்தை. அதனால இரண்டு மணிக்கு முன்னே இங்க வந்துடணும். இன்னிக்கு முழுக்க விழாக்கோலம் தான் ” என்றான் ராம்கி.‌ இந்த நேரத்திலேயே வெளியூரிலிருந்து வந்த இளைஞர்கள் அங்கும் இங்கும் உலாத்தினார்கள்.

“சரி வா, வெளியவே சாப்பிட்டு வந்துடலாம். இங்க பீட்சா, பர்கர், கட்லட் இப்படி தான் இருக்கு. எனக்கு உங்க ஊரு சாப்பாடு வேண்டும்” என்று ஹர்ஷா வருந்தினான்.

“இங்கவொரு அடையார் ஆனந்தபவன் இருப்பதா, நம்ம கூகுள் ஆண்டவர் சொல்றார். வா அங்க போயிட்டு வந்துடலாம். நீ விரும்பிய முறுகல் தோசை இட்லி, வித் மூன்று வித சட்னி அங்கயிருக்கும்” என்று இழுத்து சென்றான் ராம்கி.

பிறந்த நாளுக்குரிய பெண் துஷாரா காலையிலிருந்து பரபரப்பாய் மாறினாள்.

தந்தை வாங்கி தந்த புத்தாடை அணிந்து, அன்னையோடு கோவிலுக்கு சென்று வந்தாள்.

துஷாராவுக்கு பிடிக்குமென்று மதியம் பன்னீர் புலாவ் செய்யப்பட்டது‌.

நான்கு மணிக்கு விழா, அதற்கான நுழைவு டிக்கெட் இருக்க. துஷாரா, அன்னை வள்ளி இருவரும் சாப்பிட்டு முன்னதாகவே போகலாமென்று இரண்டு மணிக்கே வந்தனர்.
அப்படி வரவும் தந்தைக்கும் சேர்த்தே உணவை கொண்டு வந்து தந்தாள்.

என்ன தான் கூட்டம் இருந்தாலும் தெரிந்தவர்கள் கொஞ்சம் பேர் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா?! அப்படி தான் துஷாராவுக்கு இருந்தது.

தந்தையிடம் உணவை கொடுத்துவிட்டு தங்கள் உள்ளே செல்வதாக கூறினாள்.

மகளிடம் ”அடிக்கடி வந்து பார்க்கறேன்மா. அப்படி வரமுடியலைன்னா கோபிக்கக்கூடாது.” என்று முன்னெச்சரிக்கையாக உரைத்தார்.

இது தான் அண்ணாமலை. தன் பொறுப்பை சம்பந்தப்பட்டவரிடம் கூறுவார். அவரால் செய்ய முடியாது, தவிர்க்கப்பட வேண்டிய சூழ்நிலை அமைந்தால் அதையும் தெள்ளத்தெளிவாக உரைத்திடுவார்.

“சரிப்பா.” என்று மகள் புன்னகை முகமாக கூறவும் வழியனுப்பி வைத்தார்.

மகளை பார்த்தவாரே நடந்தவர் முன்னாலிருந்த ஹர்ஷாவை மோதினார்.

“சாரி தம்பி” என்று அண்ணாமலை பதற, போலீஸ் என்றதும், ராம்கி “சாரி சார் சாரி சார்” என்றான்.

ஹர்ஷாவோ “இட்ஸ் ஓகே அங்கிள். பார்க்காம தானே வந்திங்க.” என்று இனிமையாக பேசி கடந்தான்.

‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்தது போல இருக்க, அண்ணாமலை யோசிக்க, “என்னடா தெரிந்தவர் மாதிரி பதில் தர்ற? அவர் போலீஸ் டா.” என்றான் ராம்கி.

“மார்னிங் கேக் கொடுத்த போலீஸ் அங்கிள் டா. தெரிந்தவர் தான் பிசியா வேலையில் இருப்பார். தெரியாம இடிச்சிட்டார்.” என்று பேசி சென்றான்.
‘ஆஹ்ன் அந்த தம்பி. அதான் தெரிந்த முகமா தோன்றியிருக்கு’ என்று அண்ணாமலையும் அவருக்கு நிற்க கூறிய இடத்தில் வந்தார். இன்று முழுவதும் நிற்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாயிற்றே.

நேரங்கள் கடக்க ஒவ்வொரு பிரபலமானவர்கள் வரும் பொழுதும் சப்தம் காதை கிழித்தது.
இதில் பிரபல நடிகை நடிகர்கள் சிலர், டான்ஸ் ஆடும் போது விசில் சத்தமும் அரங்கத்தை அதிர வைத்தது. ஆங்காங்கே இருந்த ஸ்பீக்கரில் பாடல் வேறு ‘டாம்டூம்’ என்று ஒலித்தது.

“அம்மாடி என்ன இவ்வளோ கூட்டம்” என்று வள்ளி வாயை பிளக்க, துஷாராவோ, “ரைட் சைட் ஸ்டார் கட்டியிருக்கு தெரியுதா? அங்க பக்கத்துல மூனாவது ரோல நான் இருக்கேன் நளினி” என்று தோழிக்கு தான் இருக்கும் இடத்தை தெரிவித்தாள்.

“அய்யோ… நீ எங்கன்னு அப்பவும் தெரியலைப்பா கொஞ்சம் எழுந்து நில்லேன்” என்று நளினி கூற, “நான் எழுந்து தான் இருக்கேன்” என்று துஷாரா பல்லைக்கடித்து கூறினாள்.

“வேற அடையாளம் சொல்லுடி” என்று நளினி பாவமாய் கேட்க, “எக்ஸ்கியூஸ் மீ” என்று ஹர்ஷா முன்னே நின்று பேச, அவனது நிறத்தை வைத்து “நளினி என் பக்கத்துல ஒரு பாரின் ஆளு, நல்லா உயராம நிற்கிறான். பேஸ் கூட நல்லா ரெட்டிஷா தக்காளி மாதிரி” என்று அவனை வைத்தே அடையாளம் கூற, “ஆஹ்… பார்த்துட்டேன் துஷாரா இதோ வந்துடறேன்” என்று அணைத்தாள் நளினி.

“எருமை எருமை என்னை அவளுக்கு அடையாளம் தெரியலையாம். இந்த ‘லேம்போஸ்ட்’ வச்சி டக்குன்னு வர்றா” என்று ஹர்ஷாவுக்கு தமிழ் தெரியாதென்ற நினைப்பில் புலம்பினாள்.

“ஹல்ல்ல்லலோ.. என்ன ‘லேம்போஸ்டா?’ முதல்ல காலை மிதிச்ச, சரி கூட்டத்துல தெரியாம பட்டிருக்கும் காலை எடுக்க சொல்ல வந்தா. என்னையே ‘லேம்ப்போஸ்ட்’னு சொல்லற, சாரி கேளு” என்றான் அதிகாரமாய்.

“அச்சோ தமிழ் தெரியும் போலயே‌” என்று துஷாரா அவள் தலையிலேயே அடிக்க, “தமிழும் தெரியும் இங்கிலிஷும் தெரியும்.” என்றான் அதட்டலாய் ஹர்ஷா.

“என்ன தம்பி சத்தம்? துஷாரா என்ன சண்டை” என்று வள்ளி கேட்க, நளினியோ “ஹாய்…. துஷாரா பிரெண்டா நீங்க” என்று ஹர்ஷாவின் கையை குலுக்கினாள்‌.

ஹர்ஷாவும் இயல்பாய் கைகுலுக்க தந்துவிட்டு, “நான் அவங்க பிரெண்ட் இல்லைங்க” என்றான்.

“ஓ… அப்ப வுட்பியா? ஏ… துஷாரா அம்மா மாப்பிள்ளை பார்க்க போறாங்கனு பேசியதா போன்ல சொன்ன. இவரு தானா?” என்று கேட்டாள்.

வார்த்தைகள் வேறு கோணத்தில் பயணிக்க, வள்ளி உடனடியாக “நளினி அதெல்லாம் இல்லைம்மா. அந்த தம்பி விழாவை பார்க்க வந்தவர். லூசு தனமாக பேசாத. கோவிச்சுக்காதிங்க தம்பி. துஷாரா மன்னிப்பு கேளு” என்று கூற, துஷாரா வீம்பு கொண்டவளாய் திரும்பிக்கொண்டாள்.

“சொல்லறேன்ல” என்று அன்னை அதட்ட, “என்‌ பெர்த்டே அதுவுமா யாரிடமும் சாரி கேட்க மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தாள் மகள்.

மகளுக்காக வள்ளி “மன்னிச்சிடுங்க தம்பி ‘லேம்போஸ்ட்’னு சொன்னது தப்பு தான். அவ வாயிருக்கே… போறயிடத்துலயும் இப்படி தான் மல்லுக்கு நிற்பானு ஜோசியக்காரன் சொன்னான். இப்பவே பார்க்கறவங்களோட சண்டை பிடிக்கா. அவளுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன் தம்பி” என்றார்.

ஒரு ஆணை இப்படி ‘லேம்போஸ்ட்’ என்று அடையாளம் காட்டி பேசுவது தவறு தானே?! இதே ஒரு பெண்ணை, ஒரு ஆண் ‘கத்திரிக்கா’, ‘கருப்பி’, ‘வெள்ளை பூனை’, என்று அடையாளப்படுத்தி பேசினால் தவறு என்போம்.

அதே தவறை தன் மகள் ஒரு ஆணை பார்த்து ‘தக்காளி நிறம்’ என்று பேசினாலும் தவறு தானே.?!

“அய்யோ ஆன்ட்டி மன்னிப்பு எல்லாம் வேண்டாம். உங்க பொண்ணு, இன்னமும் என் காலை மிதிச்சிட்டு இருக்காங்க. காலை மட்டும் எடுக்க சொல்லுங்க அதுவே போதும்” என்றதும் துஷாரா திடுக்கென குனிந்து காலை எடுத்தாள்.

“தேங்க்காட்” என்ற ஹர்ஷா குனிந்து பார்க்க, பின்னால் இருந்த ரசிகர்களோ சினிமா நடிகை விருஷா ஆடுவதை காண முடியாத ஏக்கத்தில் “ஒன்னு உட்காருங்க இல்லை தள்ளி போங்க மறைக்குது” என்று கத்தினார்கள்.

ஹர்ஷா சட்டென அமர்த்தான். துஷாராவுமே பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள். நளினியோ அவளருகே அமர, அதன் பின் பிரச்சனையில்லை என்றதும் வள்ளி அமர்ந்தார்.

ஹர்ஷாவோ ‘இங்க ஒரு கலவரமே நடக்கு, கூட வந்த ஜீவன் எங்கே?’ என்று அவனுக்கு பக்கத்தில் திரும்ப, நண்பன் ராம்கியோ, வெள்ளித்திரை நடிகை விருஷாவின் நடனத்தை ஜொள்ளு விட்டுக்கொண்டு கண்டுகளித்தான்.

‘உலகமே இடிஞ்சாலும் தெரியாது. நான் கால்ல மிதிவாங்கினா கவனிப்பானா?’ என்று வலது பக்கம் பார்வையிட, துஷாராவோ “அசிங்கமா போச்சு. எல்லாம் உன்னால நளினி. இதுல ‘வுட்பி’யானு கேட்கற. இந்த மாதிரி பொது இடத்துல பார்க்கறப்ப யோசித்து பேச மாட்ட. தெரிந்தவனா தெரியாதவனானு என்னிடம் கேட்காம இஷ்டத்துக்கு பேசியிருக்க” என்று தோழியை கடிந்தாள்.

ஹர்ஷாவோ ‘பெர்த்டே பேபிக்கு டிஸ்அப்பாயின்மெண்ட் ஆக்கிட்டோமே‌’ என ஹர்ஷா கவலைக் கொண்டான். இன்னிக்கு என்ன ஒரே பிறந்த நாள் ஆட்களையா சந்திக்கறேன். காலையில் போலீஸ் ஒருத்தர் கேக் தந்தார். இப்ப இந்த பொண்ணுக்கும் பிறந்த நாள் போலயே. ஒரு விஷ் பண்ணலாமா?’ என்று பெண்ணவளை பார்வையிட, துஷாராவோ தலைக்குனிந்து வருந்தினாள்.

-தொடரும்.
-Praveen Thangaraj

keep supporting Thank u Friends.

13 thoughts on “தென்றல் நீ தானே-2”

  1. Mrs.Apsareez beena Loganathan

    பிறந்தநாளுக்காக
    பெற்றவர் கேக் தர
    பெற்றுக் கொண்ட அந்நியன்
    புன்னகையுடன் வாழ்த்து கூற
    பந்தம் ஒன்று உருவாகுதோ

    முன் பின் தெரியாத ஒருவனை
    முறைத்தும் திட்டீயும்
    மனதுக்குள் நொந்துக் கொள்ள
    மனம் கேளாமல்
    மங்கைக்கு வாழ்த்து சொல்ல துடிக்கும்
    மனம் அழகு……

    ஹர்ஷ வர்தன் ❤️ துஷாரா….
    பெயர் அருமை…..

  2. M. Sarathi Rio

    தென்றல் நீ தானே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 2)

    அச்சோ துஷாரா க்யூட்டி ! ரொம்ப ஃபீல் பண்ணாதடி செல்லம். அந்த லேம்ப்போஸ்ட் சிவப்பு தக்காளியே உனக்கு புருசனா வந்தா உன்னோட ஃபீலிங் எல்லாம் போயிடும் தானே. டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி.

    பாருங்க, நம்ம துஷாரா பேபிக்கு எங்க இருந்து, மாப்பிள்ளை வரப்போறான் பாருங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Harsha ne kalai la sapita cake indha birthday girl.oda thu than avan unna hurt pannitom nu feel panran aana ne enna na avan ah lamppost nu pattunu sollita avan hero ma konjam yosichi irukalam la

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *