Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-11

தேநீர் மிடறும் இடைவெளியில்-11

அத்தியாயம்-11

   இன்ஹேலர் தோட்டத்து பக்கம் விழவும் பால்கனியில் இருந்து எட்டி பார்த்தான். பைரவ் கண்ணிற்கு அந்த வெண்ணிற இன்ஹேலர் தென்படவில்லை. அது அவனிடம் சிக்குவேனோ என்று ஆட்டம் காட்டியது.

நான் கீழே போறேன் நீ ரம்யா வீட்டுக்கு போறதா சொன்னியே கிளம்பி ரெடியாகு சுவாதி’ என்று சாமர்த்தியமாக கீழே விரைந்தான். சுவாதி ரம்யா வீட்டிற்கு செல்ல தயாரானாள்.

இவர்கள் செல்வதற்கு முன்னர், ரம்யாவின் வீட்டில் ஆனந்தி தன் கணவர் மதுகிருஷ்ணனை திட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்.

ரம்யாவை காணவில்லை என்பதே அவருக்கு இப்பொழுது தான் தெரிய வந்தது. அவருக்கு ரம்யாவை மிகவும் பிடிக்கும். ரம்யாவின் சிறு வயதிலேயே இவர் குடிக்கு அடிமையாகிட, அப்பொழுதிலிருந்தே ஆனந்திக்கு உதவி செய்து பொறுப்பை சுமந்தவள் ரம்யா. சில நேரம் மகள்கள் மகனுக்காக மாற நினைப்பார். ஆனால் அந்த கட்டத்தை அவர் தாண்டியதால் தானாக மதுப்ரியர்கள் இடம் தேடி வந்து விடுவார். ஏனோ முதல் முறை ரம்யா காணவில்லை என்றதும் எங்கும் செல்லாமல் குலுங்கி குலுங்கி அழுதார்.

   சஞ்சனா தீப்சரண் வரவும் ஆனந்தி ‘மகளை பற்றி ஏதேனும் விஷயம் தெரிந்ததா என்று பார்வையிட்டார்.

   “சாரிம்மா… இன்னமும் ரம்யாவை பத்தி ஒரு தகவலும் இல்லை. அந்த காலேஜ் பொண்ணு ஷெர்லி வீட்ல எல்லாம் விசாரித்தோம். அவங்க ரம்யா ஏதோ ஆட்டோவில் போனதா மட்டும் சொன்னாங்க. அது கூட ரொம்ப லாங்க் ரைட் காசு போட்டு தாங்கன்னு ஆட்டோகாரன் பேரம் பேசியதா சொன்னாங்க. பட் ஆட்டோ நம்பர் எல்லாம் நோட் பண்ணலை. அவங்களுக்கு ரம்யா காணாம போவானு ஜோசியமா தெரியும்.

  பச் அங்கிருந்த சிசிடிவியில் தேடிட்டு இருக்கோம்‌ கிடைச்சா பார்க்கறோம்.” என்று கூறினான் சரண்.

   “அண்ணா… அந்த போன் சாட் பார்க்கலையா?” என்று கவிதா நினைவாக கேட்டாள்.

“ஏம்மா… நீ அந்த போன் சாட் முழுக்க படிச்சியா?” என்று சரண் கேட்டான்.

  “சாரிண்ணா… ஏதோ ‘Sun-?’ நேம் போட்டு குவஸ்டின் மார்க் போட்டிருந்தது. அதனால் ஏதாவது தொரிந்தவங்களா இருப்பாங்களானு ஓல்ட் மெஸேஜை தான் வரிசையா படிச்சிட்டு வந்தேன். அது யாரோ அக்காவிடம் ப்ளார்ட் பண்ணற மாதிரி போகவும் சிலதை ஸ்கிப் பண்ணி பார்த்தேன். ஏன் அண்ணா கேட்கறிங்க?.” என்று முழித்தாள்.

  “ஆடியோ வாய்ஸ் மெஸேஜ் கேட்டியா?” என்று சஞ்சனா அவள் தோளை பற்றி கேட்டாள்.

  “சொன்னேனே அக்கா. முதல்ல வரிசையா கேட்டேன். அப்ப எல்லாம் அக்கா அந்த பர்டிகுலர் சாட் அனுப்பியவரை கண்ட மேனிக்கு திட்டியிருந்தா. அதனால பாதி கேட்டேன்.” என்றாள் தலைகுனிந்து.

  “கடைசி ஆடியோ மெஸேஜ் கேட்கலையா?” என்று கேள்வி எழுப்பினான் கடைசியாக வந்த சுதர்ஷனன்.

   “இல்லை… பாதி படிக்கும் போதே, ஒரு மாதிரி இருந்தது. சம்டைம் லவ்வர் பேசறது போல, டீப்பா உரிமையா இருந்தது. அக்கா அந்த நேரம் ரிப்ளே பண்ணலை. அதனால சிலதை படிச்சிட்டு க்ளோஸ் பண்ணிட்டேன். அதோட தாமதிக்கற ஒவ்வொரு நொடியும் அக்காவுக்கு ஆபத்தா அமையுமோனு போலீஸ் ஸடேஷன் வந்துட்டேன். ஏன் ஏதாவது பிராப்ளமா?” என்று தீப்சரணை பார்த்து கேட்டாள்.

   “ஒன்னுமில்லைம்மா… பிராப்ளம் ரம்யா மிஸ்ஸிங் மட்டும் தான்.” என்று சுதர்ஷனன் கூற, அவன் கண்ணில் கண்ணீர் எட்டி பார்த்தது.
 
   “யார் இவரு?” என்று சஞ்சனாவிடம் கவிதா கேட்க, “அந்த சாட் எல்லாம் அனுப்பியவர். உங்க அக்கா ரம்யாவை காதலிப்பவர். அவளை காணோம் என்றதும்…” என்று இழுத்தாள். ஆனந்திக்கும் கவிதாவுக்கும் மதுகிருஷ்ணாவுக்கும் மகளுக்காக ஒருவன் கண்ணீர் சிந்த ஏக்கமாய் பார்வையிட்டார். இதுவரை மகளின் பின்னால் யாரும் வரும் அளவிற்கு ரம்யா இழுத்து வைத்தது இல்லை. முதல் முறை அவளது காதலன் என்று அவனாக வருகின்றான். இதே ரம்யா இருந்தால் சுதர்ஷனனோடு வாழு என்று ஆசிர்வாதம் கூட அளித்திருப்பார்கள்.

   “விஷால் எங்க?” என்று தீப்சரண் வேலையை சுதர்ஷனன் ஆரம்பித்ததும் தீப்சரணுமே, “ஆமா அவன் எங்க? அவனும் காணோம். அவனை பத்தி கம்பிளைன் பண்ணலை?” என்று விசாரணையை துவங்கினான்.

   “காணாம போனா புகார் தரலாம். அவன் வீட்டை விட்டு வெளியே போயிருக்கான்” என்று ஆனந்தி கவிதாவை கண்டு பதற்றமாய் பேசினார்.

    “எங்கே? போன் கான்டெக் இருக்கா?” என்றதும் ஆனந்தி நம்பரை கூற, தீப்சரண் அதனை வாங்கி டயல் செய்ய ஆரம்பித்தான்.

  புது நம்பர் என்றாலும் இரண்டாவது முறையில் தான் எடுத்தான்.

  “விஷால்?” என்ற தீப்சரண் குரலில், “யாரு?” என்று கேட்டான். அக்குரலில் சுரத்தையில்லை.

     “மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீப்சரண்.  எங்கயிருக்க? உன்னிடம் விசாரணை செய்யணும்” என்றதும், “ஏன் எதுக்கு?” என்று காரணம் கேட்டான்.

  “டேய்… வான்னா வரணும். ஏன் எதுக்குன்னு அங்க வந்து கேளு” என்று கடிந்திட, விஷால் மறுபக்கம் போனை வெறித்து அணைத்தான்.‌

   சுதர்ஷனன் “என் ரம்யாவுக்கு ஒன்னும் ஆகாதுடா. அவ வருவா.” என்று நம்பிக்கையாக உரைத்தான்.

தீப்சரண் நண்பனை தட்டிக்கொடுத்தான். “நாங்க ப்யூட்டிபார்லர் போயிட்டு அங்கவொரு என்கொய்ரி முடிச்சிட்டு போறோம்மா. ஆமா ப்யூட்டிபார்லர் ஓபனா தானே இருக்கு?” என்று கேட்டான் தீப்சரண்.

  “அந்த ப்யூட்டிபார்லர் ரம்யா இல்லைன்னாலும் அங்க ஓபன் பண்ணிடுவாங்க சார். இந்த அப்பாயின்மெண்ட் வந்தா மட்டும் தான் ரம்யா பிஸியா இருப்பா. மத்த நேரம் ப்யூட்டிபார்லர் தானே மெயின். அதனால் அவ இருந்தாலும் இல்லைன்னாலும் கடையில் கயல்விழின்னு ஒரு பொண்ணு பார்த்துப்பா.
   ரிசப்ஷன் பொண்ணு சுதா இருப்பா‌. அதனால் வரவு செலவு எழுதி வைப்பாங்க” என்று கூறவும் “சரிம்மா நாங்க வர்றோம்” என்று புறப்பட முனைந்தனர்.

  அப்பொழுது சுதர்சனன் கவிதாவை பாரத்து, “ரம்யா போன் நான் தான் வச்சியிருக்கேன். ஆதாரம் எதுவும் அழியாதும்மா. அவளோட மெஸேஜை நான் அழிக்கவே மாட்டேன் அதெல்லாம் எனக்கு பொக்கிஷம். ரம்யா திரும்ப வருவா. அப்ப நான் உன் அக்கா கணவரா அவளே என்னை அடையாளப்படுத்துவா. அந்த நாள் விரைவில் வரும். அப்ப ரம்யா சொல்வா.. சுதர்ஷனனால எனக்கு எந்த ஆபத்தும் இல்லைனு” என்று கூறினான்.

   சுதர்ஷனன் பெயரை தான் அக்கா Sun-? ஆக இருக்குமென்ற கேள்விகுறியோடு போட்டு வைத்தாளா? எல்லாரும் தனக்கு பிடித்த காதலன் பெயர் பக்கம் இதயத்தையும் முத்த ஸ்மைலியும் வைப்பார்கள். ஆனால் அக்கா கேள்விக்குறியை இணைத்துள்ளாள்.

  அக்கா எப்பவுமே புரியாத புதிர் தானே?! அந்த பெயரை போலவே sun-விடியல் கிடைக்கட்டும் என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தாள்.

  இங்கு சஞ்சனா தீப்சரணோடு சுதர்ஷனன் புறப்படும் நேரம் பைரவ் கார் வாசலில் நின்றது. அதிலிருந்து சுவாதி இறங்கினாள்.

  “சஞ்சு… ரம்யா கிடைச்சிட்டாளா டி” என்று கையை பற்ற, “இல்லைடி. அவ எங்கனு ஒன்னும் தெரியலை. ப்யூட்டிபார்லர் போயிட்டு என்கொய்ரி முடிச்சி, ரம்யாவோட தம்பி விஷாலை ஸ்டேஷன்ல வச்சி விசாரிக்கப்போறதா சரண் சொன்னார். சரண்… என்னோட வுட்பி தீப்சரண்” என்று அறிமுகப்படுத்தினாள்‌

   “அடுத்த வாரம் உனக்கும் அவருக்கும் நிச்சயம்ல? அப்பாயின்மெண்ட் கேட்டப்ப கூட ரம்யா சொன்னா?” என்று கூறவும் தீப்சரணோ, “என்ன அப்பாயின்மென்ட்? எப்ப ரம்யா சொன்னா?” என்று கேட்டதும் பைரவோ ‘சுவாதியா ஏதாவது எடுத்து கொடுப்பா போலயே’ என்று பயந்தான்.

  “தொலைஞ்சுப்போனதா சொன்னியே அன்னைக்கு தான் அப்பாயின்மண்ட் வாங்கியது. ஆனா சடனா அம்மாவுக்கு மயங்கிட்டதா வேலைக்காரங்க சொல்லவும் இயர்லி மார்னிங் அம்மா வீட்டுக்கு போயிட்டேன். கார்ல திருச்சி போனதால் அப்பாயின்மெண்ட் கூட கேன்சல் பண்ணிட்டேன். தொலைந்துப்போனதா சொன்னியே அன்னைக்கு பதினொரு மணிக்கு எனக்கு வீட்ல வந்து மேக்கப் பண்ண நினைச்சா.   
   அவ போன் எடுக்கலை என்றதும் பார்லருக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னேன்.

   “ரம்யா எப்படியும் என் போன் மெஸேஜ் பார்த்திருப்பா” என்று ரம்யாவிடம் போன் இருக்குமென்ற காரணத்தை வைத்து சுவாதி கூறினாள்.

“ரம்யா போன் தான் ஸ்கூட்டில வச்சிட்டு போனாளே?” என்று சஞ்சனா கூற, “பச் ஸ்கூட்டில போகறதுக்கு முன்னவே மெஸேஜ் பண்ணிருக்காங்க சுவாதி.
அந்த காலேஜ் பொண்ணுக்கு மேக்கப் பண்ணி விட்ட டைம். அதனால் ரம்யாவுக்கு அப்பாயின்மெண்ட் கேன்சல் ஆனது தெரிந்திருக்கும்.” என்று தீப்சரண் கூற, பைரவோ ‘அப்பாடி’ என்ற நிலையில் வேடிக்கை பார்த்தான்.

இல்லையா பின்னே… இந்நேரம் தீப்சரண் உங்க வீட்டுக்கு ரம்யா வந்திருப்பாளா? என்று விசாரணை பைரவ் பக்கம் திரும்பியிருக்குமே.

பாவம் போலீஸ்ஸான தீப்சரண் காலையில் போனை ரம்யா கவனிக்கவேயில்லை என்பது அறியவில்லை. ரம்யாவுக்கு நல்லபழக்கம் உண்டல்லவா?! அவள் மேக்கப் போட ஆரம்பித்தால் இடையில் யார் அழைத்தாலும் எடுக்கமாட்டாள். ஒருவேளை கஸ்டமரே ‘முதல்ல போன் எடுத்தா பேசுங்க’ என்று உந்தினால் மட்டுமே போனை எடுப்பாள்.

அதனால் காலையில் இயர்லி மார்னிங் சென்றதை அறிவித்ததை ரம்யா காணவில்லை என்ற விவரம் தெரியாமல் தடையானது.

“சஞ்சனா நீ என்கொய்ரி பண்ணற இடமெல்லாம் வரவேண்டாம். அதனால உன் பிரெண்ட் சுவாதி கூட பேசிட்டு கிளம்பறதா இருந்தா இரு. இல்லை கவிதாவுடன் இருந்தாலும் இரு. நானும் சுதர்ஷனனும் பார்லர் போயிட்டு விசாரணை முடிச்சிட்டு விஷாலிடம் விசாரணை செய்ய போயிடறோம்‌ எதுனாலும் போன்ல பேசறேன். பைம்மா” என்று சஞ்சனாவை துண்டித்தான். எங்கு சென்றாலும் மணக்க போகும் பெண்ணை இழுத்து செல்ல முடியுமா?

சரி நீ கிளம்பு" என்று அனுப்பிவிட்டாள். 

தீப்சரணோடு சுதர்ஷனன் புறப்பட, சஞ்சனா சுவாதி இவர்களோடு பைரவ் ரம்யா வீட்டிற்கு வந்தான்.

சின்னஞ்சிறு அப்பார்ட்மெண்ட் வீடு, இந்த ஏரியாவில் வாடகைக்கு இருப்பது கஷ்டம் தான். ப்யூட்டிபார்லர் வருமானத்தை வைத்து கடைக்கும், வீட்டுக்கும் வாடகை கொடுத்து, தம்பி தங்கை இருவரையும் படிக்க வைக்க கஷ்டம் அனுபவித்தாளோ?!

பைரவிற்கு அந்த நிமிடம் கூட ரம்யாவின் எண்ணங்களே.
இறந்து புதைந்து போனவள் என்று அவன் மட்டும் அறிந்தது. மற்றவர்களுக்கு காணாமல் போனதாக அல்லவா ரம்யாவை பற்றி அறிந்துள்ளனர். காணாமல் போனவள் திரும்ப கிடைக்க மாட்டாள் என்பதை என்று தான் போலீஸும் இந்த குடும்பமும் அறிய நேருமோ? அப்படியில்லாமல் சுவாதியை தேடி வந்து என்னோடு உடலால் இணைந்து மூச்சுதிணறலில் இறப்பை நாடியவளென்று அந்த போலீஸ் கண்டறிவானா? ஆம் இன்னொருவன் யார்?’ என்று சுவாதியிடம் விசாரிக்க, இவனுக்கு முன் சுவாதி சஞ்சனாவிடம் “அதுயாரு? சுதர்ஷனன் மாதிரி தெரியுது. அவன் எங்க இங்க?” என்று கேட்க சுதர்ஷனன் காதல் பற்றி சஞ்சனா ரத்தின சுருக்கமாக கதைத்தாள்.

அங்கிருந்தவர்களுக்கு ரம்யா காதல் விவகாரம் அறிந்துக்கொண்டனர். பைரவோ ‘பச் நல்லா வாழ வேண்டியது, ஏன் ரம்யா என் வீட்டுக்கு வந்து உன்னை பறிக்கொடுத்து, இறந்து போன? இப்ப திருடனுக்கு தேள் கொட்டியது போல என்னால எதையும் யாரிடமும் சொல்ல முடியலை. காணோம்னு உன்னை தீவிரமா விசாரிக்கறாங்க. செத்துட்டதா தெரிந்தா எப்படி துடிப்பாங்களோ’ என்றவனுக்குள் அந்த உண்மை தன்னுடன் புதைந்து இருப்பதே தனக்கு நல்லதென்று புரிய இயல்பாக இருக்க போராடினான்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

13 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-11”

  1. M. Sarathi Rio

    தேநீர் மிடறும் இடைவெளியில்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 11)

    ஆனாலும்.. இந்த பைரவ்க்கு ரொம்பவே தைரியம் ஜாஸ்தி. அவன் கொலை பண்ணலைன்னாலும், அவளோட உயிர் போக அவனும் ஒரு விதத்துல காரணம் தானே ? அதை ஒத்துக்கிட்டுத் தானே ஆகணும். அன்னைக்கு மட்டும் ரம்யா பைரவ் வீட்டுக்கு போகாம இருந்திருந்தா, அவனோட இணையாம இருந்திருந்தா, இன்னைக்கு சாகாமலும் இருந்திருப்பா, இதோ இந்த சுதர்ஷனையும் மணந்திருப்பான்னு…. எத்தனையோ பாஸிபிளிட்டியைத்தான் நினைக்கத் தோணுது. பட்..
    அதெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லைங்கிற நிதர்சனமும் புரியுது.

    போகட்டும், இந்த விஷால் ஏன் ஒளிஞ்சுக்கிட்டுத் திரியுறான்.
    கவிதாவும் ஆனந்தியும் எதையோ மறைக்கிறாங்களோன்னு தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *