Skip to content
Home » நன்விழி-2

நன்விழி-2

அத்தியாயம்-2

“என்ன நன்விழி இதெல்லாம்? இன்னமும் நீ இது மாதிரி பேசறவங்களுக்காக பொறுத்து போனா என்ன அர்த்தம். எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. அட்லீஸ்ட் என்னையாவது பேச விடறியா. எப்ப பாரு தடுத்துடற?” என்று நித்திஷ் சலித்தான்.

     “அடுத்த நிமிடம் என்ன வாழ்வு என்று தெரியாத ஒரு மூடிய புத்தகமா வாழறோம் நித்திஷ். இதுல அந்த புத்தகத்தில் நல்ல விஷயத்தை மட்டும் பார்ப்போமே. கெட்டதை கடந்து வந்திடனும். எனக்கு பழகிடுச்சு.” என்று தண்ணீரை அருந்தி தன்னை ஆசுவசுப்படுத்தினாள்.

     “அதுக்காக இப்படியா? இந்தளவு பொறுமை நான் பார்த்ததில்லை.” என்று நித்திஷ் அந்த பெண்மணியை கண்டு முனங்கியபடி முறைத்து வைத்தான்.

     அதற்குள் அருகேயிருந்த பெண்மணியோ, “இவள் இருக்காளே… புருஷனை பறிக்கொடுத்து ஆறு மாசம் கூட ஆகலை… அதுக்குள்ள இவனை புடுச்சிக்கிட்டா. இந்த பையனும் அவ விரும்பியவளை விட்டுட்டு இதோ இந்த வயிறு வீங்கியவளை தாங்கிட்டு இருக்கான். என்ன கன்றாவியோ… என்னவோ இவன் தான் அந்த குழந்தைக்கு அப்பா மாதிரி நடக்கிறான். ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறதென்ன… மளிகை சாமான் வாங்கி வந்து தருவதென்ன? எப்ப பாரு இவன் வீட்ல இருப்பதை விட இவ வீடே கதினு இருக்கான்.” என்று புரளி பேச ஆரம்பித்தனர்.

     “இவங்க அப்பா அம்மா எல்லாம் தண்ணி தெளித்து அனுப்பிட்டாங்களா? இவங்களை மாதிரி ஆட்களால் தான் இந்த மாதிரி துப்பாக்கி வைச்சிருக்கறவன் எல்லாம் நம்ம குடியிருப்புக்கு வந்து மிரட்டுற தலைவிதி வந்திருக்கு” என்று நொடிந்தார்.

    “இது மட்டுமா தினமும் வாக்கிங் என்ற பெயரில் கையை கோர்த்து போகுதுங்க. சை கன்றாவி. எங்க வீட்டுக்காரர் கூட என்னை பொதுயிடத்துல கையை பிடிச்சி நடக்க மாட்டார். இதுங்க ஊரே பார்க்க நடக்குதுங்க.” என்றாள் மற்றொருத்தி.

    “இந்த வாரம் மீட்டிங்ல பேசணும்னு இருந்தேன். என்ன செய்ய அதுக்குள்ள இவங்க வேற” என்று மூவரை கைகாட்டி நிறுத்தினார் பக்கத்து வீட்டாள்.

    வாழ்வா சாவா என்று துப்பாக்கி முனையிலும் இது போன்று அடுத்தவரை பழி போட்டு பேச இந்த மனித மனம் ஆசைப்படுகின்றதா? அல்லது எந்த கெட்ட நிகழ்வுக்கும் வேண்டாதவர்களை அதில் நுழைத்து ஆனந்தம் கொள்கின்றதா? அது அவர்களே அறிவார்கள்.

     இவர்கள் பேசுவதும் நியாயம் தான். நன்விழியோடு அதிக நேரம் செலவு செய்பவன் நித்திஷ் மட்டுமே.
  
   தன் காதலி வினோதினி நன்விழியோடு பேசக்கூடாது என்ற பொழுதிலும் அவளை தவிர்த்து விட்டு நன்விழியோடு பேசினால் இந்த மனிதர்களுக்கு இவர்கள் மெல்லும் அவலாக தான் மாறி போவார்கள்.

      அதிலும் நித்திஷ் எந்நேரமும் நன்விழியோடு இருப்பான். நன்விழியும் மறுத்ததில்லை. உதவிக்கு நித்திஷ் இருப்பதில் தவறாக எண்ணவில்லை.

     அங்கும் இங்கும் சத்தம் கேட்க அடுத்து தங்களை காப்பாற்ற செய்வார்களா என்றும், உயிரோடு விடவேண்டும் என்ற வேண்டுதலோடு கடவுளை வேண்டி நின்றனர்.

       “ஸ்டீபன் பசிக்குது. இங்க புட் எல்லாம் இருக்கு சாப்பிடலாமா?” என்று மதன் கேட்கவும் துப்பாக்கி ஏந்தியிருந்தவர்கள் மதன் ஸ்டீபன் முகமது மூவரிடம் கொடுத்துவிட்டு அம்மூவர்கள் தட்டை ஏந்தி உண்ண ஆரம்பித்தனர்.

    வெளியே நெல்சனிடம் விமல், “சார் இங்க இருபது குடும்பம். மொத்தம் எழுபத்தி மூன்று பேர் இருக்காங்க. இதில் குழந்தை பெரியவர்கள் என்று இருபத்தி ஏழு பேர்கள், பெண்கள் இருபத்தி நாலு. ஆண்கள் இருபத்தி இரண்டு. இதுல குழந்தைங்க சிலர் கீழ் தளத்தில் விளையாடியதிலும் பெரியவங்க ஆண்கள் சிலர் குழந்தையை பார்த்துக்க வந்ததில், இப்ப விமானத்துல பதிவாகிய பெயரான ஸ்டீபனிடம் மாட்டிய ஆட்களின் எண்ணிக்கை நாற்பத்தி ஒன்பது சார்.

   அந்தப்பக்கம் வழியில்லை. வெளியே போகணும்னா அந்த டோர் திறந்தா மட்டும் தான். ஆனா சார். அந்த டோர் திறந்துட்டா… அந்த ஜிம் பக்கமா மாற்றொரு வழி இருக்கு. ஆனா அது பெரும்பாலும் வாட்ச்மேன் தான் பயன்படுத்துவாராம். இடமும் ஒரு ஆள் போகிற அளவுக்கு தான் இடம் இருக்கும். விசாலமா இருக்காதாம்.” என்று கூறினான்.

    நெல்சனோ “நாற்பத்தி ஒன்பதா பேரா… எப்படியும் உயிர் போக வாய்ப்பு இருக்கு. எதுக்கோ ஆம்புலன்ஸ் ரெடி பண்ணி டாக்டரை ரெடியா இருக்க சொல்லுயா. இன்னிக்கு தூங்கின மாதிரி தான். ஆமா… இந்த நிலவரம் கமிஷனருக்கு சொல்லியாச்சா…” என்றார் நெல்சன்.

    “ஆல்மோஸ்ட் தெரிந்துடுச்சு சார். காப்பாற்ற டீம் ரெடி பண்ணறாங்க.” என்றதும் போனில் கமிஷனர் செல்வன் அழைப்பை தொடுத்தார்.

    “சார்… ஸ்பாட்ல தான் இருக்கேன் சார். அவங்க எஸ்கேப் ஆக வண்டி மட்டும் போதும் என்று சொல்லறாங்க. மோட்டிவ் எதுவுமில்லை சார். ரமேஷ் பின் தொடரவும் பக்கத்துல இங்க இந்த குடியிருப்புக்கு வந்து பிணைகைதியா மாற்றி தப்பிக்க பார்க்கறாங்க.” என்று பேச அந்த பக்கம் கமிஷனர் செல்வன் என்ன கூறினாரோ நெல்சன் தலையிலடித்து போனை அணைத்தார்.

   “என்னாச்சு சார்.?” என்று விமல் கேட்டு நின்றான்.

      “அந்த பயலுகலை தான் போட்டு இருக்காங்க. தள்ளுயா… எப்படியும் ஒரு வார்த்தை என் பேச்சை கேட்டு மதிக்க மாட்டானுங்க. இனி நான் பொம்மையாக தான் இருக்கணும்.” என்று நெல்சன் சலித்து கொண்டார்.

   இதற்கிடையே செய்தியாளர்கள் லைவ்வாக அங்கே நடக்கும் கலவரத்தை வீடியோவாக பரபரப்பாக பதிவு செய்தனர்.

   அந்த கட்டிடம் மற்றும் அந்த கட்டிடத்தின் வசித்து வந்தவரை பேட்டி எடுத்து தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி-காக உழைத்து கொண்டிருந்தனர்.

    குடியிருப்பில் “எங்க வீட்டுக்காரர் மேல இருக்கார். எப்பவுமே இது மாதிரி விழாவுக்கு வரமாட்டார்
இன்னிக்கு பார்த்து போனார். இப்படி ஆகிடுச்சு. எப்படியாவது மீட்டு கொடுங்க.” என்றும்

    “என் குழந்தையும் என் மகளும் சாப்பிட போனாங்க அங்க மாட்டிக்கிட்டாங்க. எப்படி காப்பாற்ற போறாங்கனு தெரியலை. எத்தனை பேர் ஓடி வந்தாங்கனும் தெரியலை.” என்று அழவும் கண்ணீர் முதல் கொண்டு ஜூம் செய்து நேரடியலையில் போட்டு போட்டு பார்க்கும் நபரை உச்சுக்கொட்ட வைக்கும் அளவிற்கு ஒளிப்பரப்பினார்கள். 

       அங்கிருந்த போலீஸ் ஆட்கள் கிசுகிசுக்கும் சத்தம் கேட்க, நெல்சன் திரும்பி பார்க்காது, “அவனுங்க வந்துட்டானுங்க. இனி எவனையும் பேச விடமாட்டானுங்க.” என்று முனங்கியபடி திரும்பினார்.

     “இங்க வரை எதுக்கு கிரவுட். பத்திரிக்கை ஆளுங்க தானே. சப்போஸ் அவனுங்களோ குடியிருப்பு வாசிகளோ  வெளியே வந்தா நேர இங்க கிராஸ் பண்ணணுமா வேண்டாமா.? நந்தி மாதிரி நின்றால் எப்படி அபார்ட்மெண்ட் ஆட்கள் ஓடுவாங்க. விமல் பார்க்க மாட்டிங்களா… கிரவுடை இன்னமும் தள்ளி அங்க அனுப்புங்க.” என்று கண் காட்டினான் தர்ஷன்.

     “குட் டே சார்.” என்றான் ரூபன்.

     “குட் டே வா? யோவ் நாற்பத்தி ஒன்பது பேர் மாட்டியிருக்காங்க. ஒர் உசிரு போனாலும் பேட் டே தெரியுமா?” என்று நொடிந்தார் நெல்சன்.

     “எந்த உயிரும் போகாது.” என்று ஸ்டீபன் இருக்கும் மாடியின் எதிர் மாடியை தான் கண்டு கொண்டிருந்தான் தர்ஷன்.

    தற்போது பல கேஸ்களில் தீயாய் வேலை செய்து பெயரும் புகழும் பெற்று பணியில் பெயர் வாங்கி கொண்டிருப்பவன் தர்ஷன். அவனின் ட்ரையினிங் நண்பன் ருபன். இருவரும் தான் இந்த களோபரத்தை சரிசெய்ய கமிஷனர் செல்வன் அனுப்பி வைத்தார்.

7 thoughts on “நன்விழி-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *