Skip to content
Home » நினைவில் ஒரு வானவில் – 2

நினைவில் ஒரு வானவில் – 2

வெய்யோனின் கதிர்கள் காலையில் சிறிதாய் வானத்தில் ஓவியம்தனை அழகாய் வரைந்திருந்தது. பால்கனியில் நின்று பார்த்தால் பௌர்ணமி நிலவோ அதிகாலை அல்லது அதிகாலை கதிரவனோ அழகாய் கண்களுக்கு விருந்தளிக்கும். அதைத்தான் பால்கனியில் நின்று ரசித்துக் கொண்டு நின்றிருந்தான் தமிழ்வேந்தன்.

அவன் தோளில் ஒரு முகம் பதிய, இன்பமாய் சேர்த்தணைத்துக் கொண்டான். அந்த முகம் வேறு யார்… குழந்தைகளின் குமரிமா என்றழைக்கப்படும் நறுமுகை தான்.

கன்னியாகுமரி தான் நறுமுகையின் சொந்த ஊர். அதனைச் சுருக்கி தமிழ்வேந்தன் குமரி என்று அழைப்பதன் விளைவாக, அவளைக் குழந்தைகள் குமரிமா என்றே அழைக்கின்றனர்.அதுபோக குமரித்தமிழ் கொஞ்சம் வித்தியாசமானது.

தமிழ் உச்சரிப்பின் துவக்கமே குமரியில் தான் என்றபோது அது இப்போது சில ஆதித்தமிழ் சொற்களைத் தாங்கியும் தமிழில் இருந்து உருவான மலையாள மொழியின் வார்த்தைக் கலப்போடும் காணப்படும். பெரிய அளவில் மற்ற இடங்களில் குமரித்தமிழ் பேசப்படாது. வெளியே குமரித்தமிழில் பேசும்போது சட்டென எவருக்கும் புரிந்துகொள்ள நேரமெடுக்கவும் செய்யும். அதற்குக் காரணம் அவர்கள் பேசும் தொனி என்றும் சொல்லலாம்…

அதனாலோ என்னவோ தமிழ்வேந்தனும் நறுமுகௌயும் தங்களுக்குள் பேசும்போது குமரித்தமிழில் பேசிக்கொள்வர்.

“என்னடி… திடீர்னு… “

“சூர்யன சைட்டடிச்சுட்டு…” என்று அவள் இழுக்க, “ அத ரசிக்குறவங்களையும் சைட்டடிச்சுண்டு போலாம்னு வந்தியா என்ன…” என்று அவளிடம் எதிர்வினா தொடுத்திட,

“ஹ்ம்ம்… அப்படியும் சொல்லலாம்” என்று கூறி இன்னமும் வாகாய் தன் தலைவனின் தோளில் முகம் பதித்து அவனைக் கட்டிக்கொள்ள, “நீ சூரியன சைட்டடிச்சது எல்லாம் போதும்… இப்ப என்ன சைட்டடிச்சுக்கோ… பின்னாடிண்டு பாத்தா எப்பிடி சைட்டடிக்க முடியும்… அதனால முன்னாடி நின்னுட்டு இன்னமும் வாகா சைட்டடிசுகோ” என்றவன் முன்னிழுத்து நிறுத்திக் கொள்ள, சைட்டடிக்கிறேன் பேர்வழி என சிற்சில சில்மிஷ வேலைகளும் அரங்கேறின.

அவர்களின் காதல் மொழியில் நேரம் தாண்டிட, மணி ஏழு என்று அலாரம் அடித்ததின் விளைவாய் நிகழ்காலத்திற்கு வந்தனர்.

“வழிவிடுங்க… நேரமும் ஆகுது… எனக்கு வேற இன்னைக்கு காலேஜ் டிஸாஸ்டர் டிரில் ஒர்க் இருக்கு… நல்லா பண்ணி முடியணுமேனு ஒரு பக்கம் பயமாகவும் இருக்கு… என்ன பண்ண போறேனோ தெரியல… “ என்று கொஞ்சம் புலம்பி தன் மன எண்ணங்களை வெளிப்படுத்தினாள்.

ஏற்கனவே செய்து வைத்திருந்த உணவுகளை பாத்திரத்தில் அடைத்துத் தனக்கும் பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் நிரப்பி வைத்தாள். பின்னதாக அவசர அவசரமாக கல்லூரிக்குச் செல்ல, ஒரு மாந்துளிர் பச்சை நிறத்தில் இளமஞ்சள் நிற மாங்காய் டிசைன் வைத்த காட்டன் புடவையைத் தெரிவு செய்து, கடகடவென கட்டிக் கொண்டவள் தலைமுடியை ஆயிரங்கால் பின்னலிட்டுக் கொண்டாள். முகத்திற்கு பவுடரும் கண்ணிற்கு ஐலைனரும் வைத்து வரைந்தவள் கண்ணாடியில் தன் முகம் பார்த்துத் திருப்தியாகிக் கொண்டாள். எதேச்சையாக திரும்பும்போது லிப்ஸ்டிக் கண்ணில்பட, அவள் நினைவில் சில நினைவுகள் படர்ந்தன.

***

நறுமுகை ஒரு செவிலியாக மருத்துவமனையில் பணியாற்றிய தருணம் அது. ஒரு வார்டில் ஒரு வாரம் என்ற முறையில் வேலையானது மாறிக்கொண்டே இருக்கும். இதில் ஸ்பெஷல் வார்டு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஐ.சி.யூவில் மட்டும் நிரந்தரமாக சில செவிலியர்கள் பணியமர்த்தப்படிருப்பர். இந்தப் பிரிவுகளில் வேலை செய்வோருக்கு சற்று சம்பளம் அதிகமும் கூட…

ஐ.சி.யூவும் அவசர சிகிச்சை பிரிவிலும் திறமையான செவிலியர்கள் தேவை. எந்த நேரம் வேண்டுமானாலும் ஒரு உயிரை இழக்கும் வாய்ப்புண்டு‌‌. ஸ்பெஷல் வார்டு என்பது சற்று பணக்காரர்கள் தங்கி சிகிச்சை பெறும் பகுதி அது. அந்த பிரிவினருக்காக மட்டுமே தனி ஆம்புலன்ஸ் இருக்கும். தற்போது நறுமுகை எலும்பு முறிவு சிகிச்சை பிரிவான ஆர்த்தோ வார்டில் பணியாற்றுகிறாள்.

“நறுமுகை… உன்ன என்.எஸ் ஆபிஸ்ல கூப்பிடுறாங்க. எந்த ஒர்க் பண்ணிட்டு இருந்தாலும் அப்படியே வச்சுட்டு அவங்களைப் போய் பார்ப்பியாம்” என்று சக செவிலியர் ஒருவர் வந்து சொல்ல, தலையசைப்புடன் என்.எஸ் அலுவலகத்திற்கு லிஃப்டில் வந்தாள்.

“மே ஐ கம் இன் மேம்” என்று அழைக்க,“எஸ் கம் இன் “என்ற பதில்வர,

“குட் மார்னிங் மேம். என்ன கூப்பிட்டு விட்டதாக ஆர்த்தோ ஓபி சிஸ்டர் சொன்னாங்க…” என்று சற்று பவ்வியமாய்க் கேள்வியை வினவ,

“எஸ் நறுமுகை… உங்களை ஸ்பெஷல் வார்டுக்கு டியூட்டி மாத்தலாம்னு இருக்குறேன். இப்ப போய் என்ன ஏதுனு பாத்துட்டு கிளம்பிடுங்க‌. இன்னைக்கு நைட் டியூட்டில ஆள் குறைவா இருக்கு. எந்த எந்த பேஷன்ட் உங்களுக்குனு பாத்துக்கோங்க. கூடவே இப்படி டல்லா பேஷ் இருக்கக் கூடாது. நல்லா ஃபேஷ பிரைட்டா வச்சுக்கோங்க…

பேக்ல எப்பயும் மினி மேக்அப் கிட் வச்சுக்கோங்க… எவிரி 2 ஆர்ஸ் ஒன்ஸ் மேக் அப் செக் பண்ணி திரும்ப போடணும். இப்ப கூட செட்டிங் ஸ்பிரேலாம் வந்திருக்குல… யூஸ் பண்ணிக்கோங்க… ஓகே… ஹாங் சம்பளம் கூட உங்களுக்கு இனிமே 25,000அ இன்கிரீஸ் பண்ண பேசியிருக்கிறேன். யூ மே கோ நவ்” என்றவர் தன் வேலை முடிந்ததாக அவளைக் கிளம்ப சொல்லி விட்டாள்

மறுபதில் உரைக்க இயலாதவளாய் அலுவலகம் விட்டு வெளியே வந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். 25,000ரூபாய்… எளிதில் கிடைத்து விடாது இந்தப் பணம். 20,000 சம்பளம் வாங்கும் ஒருத்திக்கு ஐயாயிரம் ரூபாய் திடீரென அதிகரிக்கக் காரணமென்ன…

மடமடவென வரும் ஐயாயிரம் ரூபாய்க்கான வரவு செலவினங்களைக் கணக்கிட, அரசிடம் பெற்றிருந்த கல்விக்கடனைக் கட்ட உதவியாக இருக்கும்… ஆனால் அந்த ஐயாயிரத்திற்குப் பின்னிருக்கும் வேதனைகளும் அதிகம்… செவிலி என்பவள் உயிர் காக்கப் போராடும் தேவதைகள் என்ற நிலையில் இருந்து கண்ணிற்கு விருந்தளிக்கும் சாரம்சம் பெற்றவளாக மாறி பல நாட்களாகி விட்டன. பணம் படைத்த பெரு முதலைகளுக்கு எல்லாவற்றிற்கும் இயைந்து கொடுக்க வேண்டும்…

அவர்களின் பார்வை செல்லும் விதம் நம்மை அருவருக்க வைத்தாலும் கேள்வி எழுப்ப முடியாது. ஏனென்றால் அதிகமாகக் கொடுக்கப்படும் அந்த ஐயாயிரம் ரூபாயே இவர்கள் தரும் பிச்சை தானே… வேண்டாம்… இந்த அருவருப்பில் காசு பார்ப்பதற்கு பதில் நிமிர்வாக விபச்சாரத் தொழிலில் இறங்கலாம்… இதுவும் ஒரு மாடர்ன் விபச்சாரம் தான். என்ன மருத்துவ வேலையும் செய்து விபச்சாரத்தையும் செய்யும் வேலை…

என்றோ ஒரு நாள் யாரோ செய்த தவற்றிற்கு நான் பிறந்தேன் என்று என்னைப் பெற்றவளை குற்றம் சொல்லும் நான்… நான் இன்று செய்வது சரியா… சுய அலசலின் விளைவு… திரும்ப அலுவலகத்தில் நுழைந்தவள்,

“ மேம் ஐ ஆம் நாட் இன்ட்ரஸீடிங் டு ஒர்க் இன் ஸ்பெஷல் வார்டு… அன்ட் நோ நீட் டா இன்கிரீஸ் மை சேலரி… “ என்று தைரியமாகச் சொல்லி விட்டாள்‌.அதன் விளைவு 15,000 ரூபாய்க்கு ஒரு வருடம் அங்கேயே வேலை பார்த்தாள். வேலையை விடவும் முடியவில்லை… காரணம் 15 மாதங்கள் கட்டாயம் அங்கே வேலை பார்ப்பதாக அவள் இட்டிருந்த கையொப்பம்.

அந்தக் கடின நிலையைத் தாண்டி வந்தவளுக்கு சில நாட்களில் காதலும் கைகொடுக்க, புது தெம்பு தான்… இதோ அந்தக் காதல் தந்த தெம்பினைக் கொண்டு வாழ்க்கையில் தடைபல கடந்து ஓடுகிறாள்…

***

“என்னடி… அந்த லிப்ஸ்டிக்க இந்த பார்வை பாத்துட்டிருக்கிய… முடிஞ்சத அந்தப் பக்கம் தள்ளத்தான் செய்யேன்…”

அவளருகினில் ஆதரவாகக் கூறியபடி அமர்ந்து கொண்டான் தமிழ்வேந்தன்.

“எனக்கு மேக் அப் பிடிக்கும் தான் ங்க… ஆனா லைட்டா எப்பயாச்சும் தான் யூஸ் பண்ணுவேன்… மேக் அப்ங்குறது நாமளா நமக்கா தோணும்போது போடணும்… பட் அன்றைக்கு அடுத்தவன் முன்னாடி காட்சிபொருளா அலங்காரம் பண்ணிட்டு போட சொன்னாங்க…

இப்ப கிளினிக்கல் சூப்பர்வைசிங் டியூட்டில இருக்குறதால மேக்அப் போடணுமாம்… நைட்டே வைஸ் பிரின்சிபல் மேம் எனக்கு மெசேஜ் அனுப்புறாங்க… ஒருசிலருக்கு இது சாதாரணமா தோணலாம்… ஆனா இது ஒரு ஒரு நபரோட தனிப்பட்ட உரிமை தானேங்க… ஒன்னும் இல்ல… நம்ம காலேஜ் யுஜி படிக்கும்போது ஷர்ட் டக்கின் பண்ணல… லிப்ஸ்டிக் போட்டிருக்கனு ஃபைன் போட்ட இதே நர்சிங் சிஸ்டம் இப்போ அதுலாம் பண்ணுறோம்னு திட்றாங்க…”

அவளின் கேள்விகள் நியாயமானது தான் என்றாலும் அவனிடம் பதில் இல்லையே… சில பல சாதனங்கள் செய்து திரும்ப வேலைக்கு அனுப்பி வைத்தவன் பிள்ளைகளை டே கேர் சென்டரில் விட்டு விட்டு வேலைக்குக் கிளம்பியிருந்தான்.

***

மதிய வேளையில் சாப்பாடு முடிந்தபின்பு டிஸாஸ்டர் டிரில் என்ற செயல்முறைக்காக கல்லூரிக்கு வந்திருந்தனர் ஆசிரியர்கள். அந்த செயல்முறை விளக்கம் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் செய்து காண்பிக்க வேண்டி நறுமுகையிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

“முகை மேம்… “ என்றபடி அவளிடம் வந்து நின்றாள் ஒரு மாணவி.

“சொல்லு ஷிபானா… எல்லாம் ஓகே தானே…” என்று விசாரித்திட,

“ரகு பாடா படுத்துறான் மேம்… மேக்அப் போட மாட்றான்… மேக்அப் டீம் என் தலைய உருட்டுறாங்க மேம்… மீ பாவம் மேம்… “ என்று பாவமாகப் புகார் வாசித்தாள் அந்த மாணவி.

“ஏன் ரகுக்கு என்னவாம்… எஸ்டர்டே கூட நல்லா கோஅப்பரேட் பண்ணுனானே… இப்ப என்னவாம்…” என்று சந்தேகமாக வினவினாள் நறுமுகை.

“மேம் அவனுக்கு மேல் மேக்அப் போடுற ஆள் வேணுமாம்… பசங்களுக்கு மேக்அப் போட கௌதம் தான் ஒத்துக்கிட்டான்… பேதில போனவனுக்கு பேதி (வயிற்றுப்போக்கு) வந்துச்சுனு கடைசி நிமிஷத்துல வராம போயிட்டான்… இதுக்குதான் நான் அவன எடுக்காதீங்க னு சொன்னேன் மேம்…” என்று கடுப்புடன் கூறிட,

“என்னடா இப்படிலாம் பேசுற… அவன் திறமையான ஆள்டா ‌… அவனோட மேக்அப் டேலன்ட்ஸ நான் இன்ஸ்டால பாத்திருக்கேன்… அதான் அவன ஸ்ட்ராங்கா ரெக்கமென்ட் பண்ணி ரெடி பண்ணுனேன் “ என்றவளுக்குள்ளோ, இன்னும் எத்தனை மாணவர்கள் மேக்அப் போடாமல் நிற்கின்றனரோ என்ற எண்ணம் ஓங்கியிருந்தது.

“எந்தா முகே… இத்தற தீவிர யோஜனா(யோசனை)…” என்று மலர்மதி ஆசிரியர் வினவ,

“இப்ப கௌதம் ங்குற ஸ்டியூடன்ட் இல்ல மலர் மேம்… பசங்களுக்கு மேக்அப் போட அவன தான் யோசித்து வைத்தோம். என்ன பண்ணனு யோசிக்கிறேன்…”

“ஏன் கேர்ஸ் வச்சு பசங்களுக்கு இடாம் அல்லே…(போடலாம் இல்லையா) மேனேஜ்மென்ட் தன்னே பிரச்சனயெங்ஙில் பாத்தொள்ளாம் (மேனேஜ்மென்ட் தான் பிரச்சனையென்றால் பார்த்துக் கொள்ளலாம்)…” என்று ஊக்கம் கொடுக்க,

“அது பிரச்சினை இல்ல மேம்… ரகுதான் பொண்ணுங்க கிட்ட மேக்அப் போட மாட்டேன்னு முரண்டு பிடிக்கிறான்… அவனோட பிரைவசிய யோசிக்கணும்ல…” என்று யோசனேயாக இழுத்துக் கூறினாள் நறுமுகை.

“ரகு தன்ன எங்ஙில் அவன இப்பொள் செரி (சரி) செய்யாம் … டா ரகுவெ நான் கூப்டேன்னு விளிச்சி(அழைத்து) வா…” என்றவள் மேற்கொண்டு தான் பார்த்துக்கொள்வதாகக் கூறி நறுமுகையை அனுப்பி விட்டாள்.

மலர்மதி ஆசிரியர் என்ன மாயம் செய்து வைத்தாரோ… ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் அனைத்து மாணவ மாணவியரும் டிஸாஸ்டர் டிரில் நடத்துவதற்கான அலங்காரம் எல்லாம் செய்து ரெடியாகி வந்திருந்தனர். மலர்மதியிடம் எப்படி இது சாத்தியாமனது என்று வினவியபோது அவள் கூறிய காரணங்கள் நறுமுகையின் கல்லூரி நினைவிற்கு இன்பமாய் அழைத்துச் சென்றது. கல்லூரி நினைவுகள் எத்தனை இன்பமானது…

நினைவுகள் தொடரும்…

_ என்றும் அன்புடன்

மார்க் – 16

4 thoughts on “நினைவில் ஒரு வானவில் – 2”

  1. இங்க கூட இப்படியா!!… முகை கேக்குறதும் கரெக்ட் தானே!!… சூப்பர் சூப்பர்!!..

  2. Narumugai

    இங்க இப்படி மாறி பல காலங்கள் ஆகிடுச்சுமா… நர்சிங் க்கு படிக்குற பிள்ளைங்க ஒரு சிலர் எப்படி வேலைக்குப் போறது னு பயப்படுறதும் இங்க நடக்கத்தான் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *