அத்தியாயம்-2
தந்தையின் நண்பர் குடும்பத்தின் இறப்புக்காகச் சென்றிருந்தான் திவாகர்.
கூகுள் செயலியில் தான் இருக்கும் இடம் வேம்பத்தூர் எனக் காட்ட,
எப்போதாவது இப்பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறோமா என
யோசனையுடன் நின்றுகொண்டிருந்தான் அவன்.
கூடத்தில் நின்றபடி யோசனையில் ஆழ்ந்திருந்த திவாகரைக் கையைக்
காட்டி அருகில் அழைத்தார் அவன் தந்தை வேதாசலம்.
போகலாமா வேண்டாமா எனத் தயங்கியவன், சுற்றத்தாரின் பார்வை
தன்மீது படர்வதை உணர்ந்து அப்பாவின் திசையில் நகர்ந்தான்.
“கூப்டீங்களா அப்பா..?”
மகனிடம் திரும்பி, “தம்பி திவா, இது வானதி.. இந்தக் குடும்பத்தில
இப்போதைக்கு உயிரோட இருக்க ஒரே வாரிசு. உனக்கு வானதியை
ஞாபகம் இருக்கா?” என்று வினவினார் பெரியவர்.
பொய்சொல்ல விரும்பாமல் மறுப்பாகத் தலையசைத்தான் திவாகர்.
“சரியா தெரியலப்பா..”
அவள் நிமிர்ந்து அவனை நம்பமுடியாமல் பார்த்துவிட்டு முறைக்க,
சிவந்திருந்த அவள் கண்களில் ஏதேதோ புரியாத கேள்விகளெல்லாம்
இருப்பதைக் கண்டு குழம்பிப்போனான் அவன்.
மேற்கொண்டு அவர் எதுவும் பேசுவதற்குள் அறையில் திடீரென்று
சலசலப்பு ஏற்பட, ஒருநொடி அனைவரின் கவனமும் திரும்பியது.
அவ்வூரின் பெயர்போன பணமுதலையான மலையப்பன் தன்னுடன் மேலும்
நான்குபேரை சேர்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். கூடத்தில்
கிடத்தப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்தவன் அலட்சியமாக முகத்தைத்
திருப்பினான். பொதுவாக யாரையும் பார்க்காமல் தன் அல்லக்கைகளுடன்
பேசுவதுபோல, “என்ன பாலு… இப்படி ஆகிப்போச்சு? போனவாரம் தான்
என்கிட்ட வந்து இன்னும் ஒருவாரத்துல உன் பணத்தை வட்டியும்
மொதலுமா திருப்பித் தந்துடறேன்னு வீம்பா பேசிட்டுப் போனாரு
பெரியவரு… அதுக்குள்ள குடும்பமா இப்டி நடுக்கூடத்தில செத்துக்
கிடக்கறாய்ங்களே..” என்றான்.
பலரும் தங்களுக்குள் முணுமுணுக்கத் தொடங்க, திவாகர் ஏதோ பிரச்சனை
என்பதை மட்டும் உணர்ந்தான். வேதாசலம் ஆவேசமாகத் திரும்பினார்.
“ஏய்… இழவு வீடாச்சேன்னு பாக்குறேன்… இல்லைன்னா பல்லுப்
பகடெல்லாம் பேந்துரும்!! கேட்க யாருமில்லைனு நினைச்சிட்டு வந்து
தகராறு பண்றயா? மரியாதை கெட்டுப் போகும் பாத்துக்க!!”
அவன் அதிலெல்லாம் அசந்ததாகத் தெரியவில்லை.
“ஐயா, பெரிய மனுசரே.. நீங்களே நியாயத்தை சொல்லுங்க… எட்டு லட்சம்
வட்டியும் மொதலுமா இழந்துட்டு நிக்கிறேன் நானு… அதைக் கேட்டது ஒரு
குத்தமாய்யா?”
இருபுறமும் அணியாக ஆட்கள் சேரத் தொடங்கினர்.
இவர்கள் பக்கத்து ஆள் ஒருவர், “ஏன்யா, அதைக் கேக்கறதுக்கு ஒரு நேரம்
வேணாமாய்யா? அப்பனை ஆத்தாளை அண்ணனைன்னு குடும்பத்தையே
இழந்துட்டு நிக்குது அந்த மக… இப்பப் போயி காசைக் குடு, கடனைக் குடுனு
கேட்டா அது என்ன செய்யும்?” என்றிட, அப்போதுதான் வானதியைத்
திரும்பிப் பார்த்தான் மலையப்பன்.
அவளைக் கண்ணால் புசித்தபடியே, “சரிங்க ஐயாமாருகளே… கடனைக்
கேட்கல.. பொண்ணு பாவம் அனாதையா நிக்குதுல்ல? அதைப் பாக்க மனசு
பதைக்குதுல்ல? அதான்… நான் கட்டிக்கறேன் அதை! அப்றம் கடனும்
கழிஞ்சமாதிரி ஆச்சு.. பொண்ணுக்கும் துணையாச்சு… என்ன
சொல்லுறீக?” என்றிட, வீட்டிலிருந்த மகளிர் சிலர் திடுக்கிட்டு எழுந்தனர்.
வேதாசலத்தின் கண்களில் நெருப்பு எரிந்தது. திவாகரே சற்று
முகம்சுழித்தான்.
வானதியோ நடப்பது எதையும் உணராமல் சவம்போல நின்றிருக்க, ஒரு
பாட்டியம்மாள் அவளை மறைவாக இழுத்து திவாகரின் பின்னால்
நிற்கவைத்தார். அப்பாவின் கோபம் இப்போது எல்லைமீறியதைக் கண்டு
துணுக்குற்றான் அவன்.
“ஏப்பா… இழவு வீட்டுல வந்து என்ன பேச்சு பேசுற? பாத்துப் பேசுய்யா..
முத்துப்பட்டி வேதாசலம் ஐயா வேற நிக்கிறாக..”
மலையப்பனின் பக்கம் நின்றிருந்த ஒருவன் அவனை அடக்க, அவனோ
தலையைத் தடவியபடி, “எப்பயாச்சும் பேசித்தானய்யா ஆகணும்? எம்
பணத்துக்கு என்ன வழி? அனாதையா நிக்கிறாளே.. அவ குடுப்பாளா?
இல்லை வக்காலத்து பேசறாங்களே இவிக குடுப்பாகளா? இல்ல, ஐயா…
பெரிய மனுசரே.. நீங்க குடுப்பீகளா?” என்றான் எகத்தாளமாக.
அதுவரை அவரும் அதையேதான் யோசித்தவர், ஒருகணமும்
தாமதிக்காமல், “ஆமாய்யா… என் நண்பன் அவன். அவனுக்காக எதுவும்
செய்வேன். உன் பணம் உன் வீடுதேடி வரும். போ இங்கிருந்து!!” என்று
கர்ஜித்தார்.
ஒருநொடி மிரண்டாலும், சுதாரித்துக் கொண்டவன், “அதுசரி, அப்ப அந்தப்
பொண்ணுக்கு என்ன வழி? அப்பன் ஆத்தாளோட சேர்த்து அதையும்
புதைச்சிடுவீகளோ?” என வினவ, அவர் பொறுமை பறந்தது.
துக்கம் விசாரிக்க வந்தவர்களும் தங்களுக்குள் சலசலத்துக்கொள்ள,
திவாகருக்கு இந்த நாகரீகமற்ற மனிதர்களைப் பார்க்கவே என்னவோபோல்
இருந்தது. நமக்கெதற்கு வம்பு என்பதுபோல் தந்தையைப் பார்த்தபடி
நின்றான் அவன்.
ஆனால் வேதாசலம் அப்படி இருக்கமுடியாதே… தன் ஆருயிர் நண்பனின்
குடும்பமே இல்லாமல் போயிருக்க, அதில் ஒற்றை மரமாக நிற்கும் இந்தச்
சின்னப் பெண்ணுக்கு அவமானம் நிகழ, அவர் ரத்தம் கொதித்தது.
மலையப்பனின் காமுகப் பார்வை பார்க்கும் கண்களை அப்படியே
தோண்டிவிடத் துடித்தது அவர் கரங்கள்.
இவன் வாயை இன்று மட்டுமின்றி என்றுமே திறக்காமல் அடைக்க
வேண்டுமென எண்ணியவர், தன்னருகில் நின்றிருந்த மகனை ஏறிட்டார்.
“தம்பி திவா, அப்பா சொல்றதை கேள்வி கேட்காம செய்வியா?”
அவர் என்ன நினைக்கிறாரெனப் புரியாவிட்டாலும், அப்பாவின்
மரியாதையைக் காக்க, அவனும் ஆமெனத் தலையசைத்தான்.
இறந்த நண்பனின் மனைவியின் தலைமாட்டில் வைத்திருந்த மஞ்சள்
கயிற்றை எடுத்தவர், கண்மூடி ஒருகணம் ஆண்டவனை வேண்டிவிட்டு
அதை மகனிடம் தந்தார்.
“கட்டுடா வானதி கழுத்துல!”
ஒருகணம் உலகம் நின்றது அவனுக்கு.
அவன் அப்பாவின் வார்த்தையை மீறாத புதல்வன்தான் என்றாலும்,
அத்தனை பயங்கரமான முடிவை அவர் எடுப்பார் எனத் தெரியாததால்
திடுக்கிட்டான்.
கண்ணில் ஒருமுறை தன் அமெரிக்கக் காதலியின் முகம் வந்துபோனது.
என் வாழ்க்கை..
என் காதல்..
என் வேலை..
என் விருப்பம்…
இதெற்கெல்லாம் மேலாக இருக்கிறதா என் தந்தைப்பாசம்? இந்த
செயலைச் செய்துவிட்டு என்னால் நிம்மதியாக உறங்க முடியுமா இனி?
ரூபாவுக்கு என்ன பதில் சொல்வேன்? நம் காதலை வீட்டில் சொல்லப்போன
நேரத்தில் எனக்கு எதேச்சையாகத் திருமணமாகிவிட்டது என்றா? அவளை
மனதில் நினைத்தபடி இன்னொரு பெண்ணை எவ்வாறு மணப்பது? இவள்
யாரோ, என்னவோ? இவளுக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ..
முன்பின் தெரியாத ஒருத்தியை இனி மனைவி என்று எப்படி அழைப்பது?
வீட்டில் அம்மாவுக்கு இங்கு நடந்தது தெரிந்தால் என்ன சொல்வார்கள்?
எப்படி ஏற்பார்கள்? அப்பாவிடம் முடியாதென்று எப்படி சொல்வது? அவரது
கவுரவமே இதிலே அடங்கியிருக்கிறது அல்லவா? அப்போது என் முடிவு
இதுதானா?
ஒருகணத்தில் ஓராயிரம் சிந்தனைகளை ஓடவிட்டவன், தனக்குள்
சன்னமாய் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டுவிட்டு, தன்னருகில் சோகமே
உருவாக நின்றவளை ஏறிட்டான்.
“எதையும் யோசிக்காத… இதை ஒரு எமர்ஜென்சின்னு நினைச்சுக்கோ”
அவன் அவளுக்குச் சொல்கிறானா, இல்லை தனக்கே
சொல்லிக்கொண்டானா என்பது இறைவனுக்கே வெளிச்சம். படபடவென
அந்தத் தாலிக்கொடியை அவள் கழுத்தில் பூட்டியவன், அப்பாவைப் பார்த்து
தலையைத் தாழ்த்தினான்.
முகத்தில் பெருமிதம் மின்ன இருவரையும் சேர்த்துப் பார்த்தவர், அதே
தோரணையில் திரும்பி, “இனி அவ என் மருமக. எங்க வீட்டுப் பொண்ணு.
என் சம்பந்தியோட கடன் நாளைக்கு அடைஞ்சிடும். வேற யாராவது எங்க
வீட்டுப் பொண்ணை வேறமாதிரி எண்ணத்தோட பாத்தா, அவங்க தலை
கழுத்துல இருக்காது! ஜாக்கிரதை!” என்றிட, மலையப்பன் முகத்தைத்
திருப்பிக்கொண்டு வெளியேறினான்.
எந்த உணர்வும் காட்டாமல் கண்ணீர்விட்டபடியே நின்ற வானதியை
ஆதரவாய்ப் பார்த்தார் வேதாசலம்.
“உங்கப்பா இருந்திருந்தாலும் இதைத்தானம்மா செஞ்சிருப்பாரு… உன்னை
எங்க வீட்டு மருமகளாக்கிக்க நாங்க குடுத்துவச்சிருக்கணும்..
இப்போதைக்கு நீ ஒண்ணும் கவலைப்படாதம்மா.. எல்லாம் நான்
பாத்துக்கறேன்”
தலையை மட்டும் அசைத்துவிட்டு பாட்டியுடன் மீண்டும் அமர்ந்துகொண்டாள்
அவள்.
அவளை சிலநிமிடங்கள் உறுத்துப் பார்த்தபடி நின்றான் திவாகர்.
இனி நீ என் மனைவியா? எதுவரை? சாகும்வரையா? இல்லை
உன்னைவிட்டு நான் போகும்வரையா? யார் நீ? ஏன் என் வாழ்வில் இப்படி
அத்துமீறி நுழைந்தாய்? என் மனதில் உனக்கு இடமில்லை பெண்ணே..
வேறொருத்தி இருக்கிறாள் இங்க வெகுகாலமாய்! இப்படி எந்த
முன்னறிவிப்பும் இன்றி என் வாழ்வின் அங்கமாக உனக்கு எந்தத் தகுதியும்
இல்லை.
உனக்கும் ஒரு வாழ்க்கை உண்டல்லவா? இங்கே கிராமத்தில்
எவனையாவது மணந்துகொண்டு, அவனுக்கு சமைத்துப்போட்டு, துணிகள்
துவைத்துக்கொடுத்து, வீட்டைப் பெருக்கிக்கொண்டு பணிவிடை செய்து
பார்த்துக்கொண்டிருப்பாய்.. உன்னை நான் அமெரிக்கா அழைத்துச்
செல்லவேண்டுமா? அங்கே என்ன செய்வாய் நீ? உன்னை நான் எப்படி
ஏற்பேன்? யார் நீ? ஏன் உன் முகத்தைப் பார்த்தால் எங்கேயோ
பார்த்ததுபோன்ற பிரம்மை ஏற்படுகிறது எனக்குள்?
கடைசிக் கேள்வி வந்தபோது திகைத்தான் திவாகர்.
‘எங்கேயோ பார்த்தது போல??’
-madhu_dr_cool
Interesting 😍😍
Thank you. Keep supporting!
Superr
Tnks
Super🥰…. Semmaiya pogudhu interesting ah iruku…. Waiting for next ud….
Thanks so much! Keep supporting ❤️
Interesting , rendu perum ithuku munnadi pathu irukangala etho flash back iruku papom
💜