Skip to content
Home » நீயின்றி வாழ்வேது-1

நீயின்றி வாழ்வேது-1

நீயின்றி வாழ்வேது-1

“துதிப்போர்க்கு வல்வினைபோம்
துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி

சஷ்டியை நோக்கச் சரவணப் பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக், கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில் வாகனனார்….” கந்தசஷ்டிக் கவசம் வசந்த் டிவியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

சுகன்யா விளக்கெற்றும் நேரம் சரியாக இந்தப் பாடலை இசைக்கவிட்டு பக்தியோடு இறைவனை வணங்குவது வழக்கம்.

அதுவும் தீவிர முருகபெருமானின் பக்தை. திருச்செந்தூருக்கு வந்தாலே முருகனை தரிசிக்காமல் அவ்விடம் விட்டு நகரமாட்டார்.

உதயகுமாரன் தன் மனைவி சுகன்யாவை வருடம் ஒருமுறையாவது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்.
அதில் திருச்செந்தூர் முக்கியப் பங்கு வகித்திடும். இல்லையேல் சுகன்யா புலம்பியே தள்ளிடுவார்.

சுகன்யா இறைவனைத் துதித்துத் தீபராதனை முடித்து, வாசலுக்கும் வீட்டுக்கும் நடையிட்டார்.

உதயகுமாரன் சுகன்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள்.
மூத்தவன் விஷாகன் இந்த வீட்டின் நாயகன். பெயரே பறைச்சாற்றிடும் இதுவும் முருகனின் அபிமானத்தில் சுகன்யா தேர்ந்தெடுத்து வைத்த பெயர். இளையவனுக்கும் முருகன் பெயரே சுகிர்தன்.

சுகன்யா வாசலில் எதிர்பார்த்துக் காத்திருப்பது விஷாகனுக்காக. எப்பொழுதும் சரியாக ஆறுமணிக்கு கந்தசஷ்டி கவசம் டிவியில் ஒளிப்பரப்பும் நேரம் வாசலில் ஆஜராகிடுவான்.

விஷாகன் என்ன தான் பி.எஸ்.சி பிசிக்ஸ் படித்தாலும் எங்கும் வேலைக்குச் செல்ல பிடிக்காதவன்.
எதிலும் யார் பேச்சும் கேட்டு தலையாட்டும் வழக்கம் இல்லாதவன். அதனாலே அடுத்தவருக்குக் கீழ் பணிப்புரியும் நிலையை வெறுத்துத் தனிச்சையாகச் சொந்த நிறுவனம் வைத்து மற்றவரை வேலைக்கு வைத்து ஏவியே ‘பிசினஸ்’ செய்பவன்.

‘பிசினஸ்’ என்றால் கோர்ட்சூட்டும், உயர்தர வாட்சும், கூலிங் கிளாஸும் ஆடிக்காரும் என்று வந்திறங்கி, பி.ஏவை வாட்டி வதைத்து படுத்தி எடுப்பவன் அல்ல.

‘விஷாகன் வாட்டர் சப்ளையர்’ மற்றும் ‘விஷாகன் ஆர்.ஓ.வாட்டர் சர்வீஸ்’ என்று நடத்துபவன். சென்னையில் எல்லார் வீட்டிலும் குடித்தண்ணீர் என்பது வரப்பிரசாதம்.

இங்கே ‘ஆர்.ஓ’ வாட்டர் ப்யூரிப்பர் மாட்டி விட்டு அதன் சர்வீஸும் செய்பவன். கூடுதலாக வாட்டர் சப்ளை, மற்றும் எலக்ட்ரிஷன், ஜன்னலில் கொசுவலை அடித்துக் கொடுப்பது என்று இதுபோன்ற இதர வேலைக்கும் ஆள்வைத்து நிர்வாகம் புரிகின்றான்.

எல்லாம் மேற்பார்வை புரிந்து நயமாய், பேச்சுதிறனால் மற்றவரை வேலைக்கு எடுத்துச் சம்பளம் தந்து எஜமானாய் வளர்ந்தவன்.
ஆறுமணிக்கு மேல் வீட்டுக்கு வந்து அன்னை செய்து வைத்த சிற்றுண்டியை சுவைத்து, பாட்டு கேட்டு, ஏழுமணிக்குப் படம் ஒன்றை பென்டிரைவில் பதிவிறக்கம் செய்ததை டிவியில் இணைத்து பார்த்து காலாட்டி கண்டு களிப்பான். அப்படிப் படம் பார்க்க பிடிக்காவிட்டால் தனுஷ், ரவி என்ற இரு நண்பர்களோடு ஊர்சுற்ற சென்றிடுவான்.

தாய் சுகன்யா செய்து வைத்த சிற்றுண்டியை விழுங்கி, நண்பர்களோடும் வெளியே சாலையோர உணவு பழக்கமும் வாடிக்கையாய் சிலநேரம் விழுங்குவான்.

‘பேட்சுலர் லைப்’ என்பதை நித்தம் நித்தம் ரசித்து வாழ்பவன்.

இன்றோ சுகன்யா உளுந்து களி செய்து வைத்து, நேரத்துளிகள் கடந்தும், விஷாகன் வரவில்லை.
சுகன்யாவுக்குப் பொறுக்க முடியாமல் கைப்பேசியை எடுத்து விஷாகன் எண்ணை போட்டுக் காத்திருக்க, மறுபக்கம் போன் எடுக்கப்பட்டு என்ன பேசினார்களோ, “என்னது… ஹாஸ்பிடலா… அய்யோ… என்னாச்சு… இதோ வர்றேன்” என்று சுகன்யா கலங்கியவராக வேகமெடுத்துக் கிச்சனில் லைட்டை அணைத்து, பீரோவில் பணத்தை எடுத்துப் பர்ஸில் வைத்துக் கொண்டு, வீட்டு வாசலை பூட்டி விட்டு, காலில் செருப்பைப் பதட்டத்தோடு போட்டு, ஆட்டோ பிடித்துப் போனில் கூறிய ஹாஸ்பிடலின் இடத்தை தெரிவித்து அங்கு போகுமா என்று கேட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.

“கடவுளே நான் யாருக்கு என்ன பாவம் பண்ணினேன். ஏன் இப்படி ஹாஸ்பிடல் பக்கமே போகாத என்னை இப்போ இப்படி ஓடவைக்கிற?” என்று வாய்விட்டு புலம்பியபடி சுகிர்தனுக்கு அழைத்து விஷயத்தைக் கூறி அவனை அங்கே நேராக வரக்கூறினார் சுகன்யா.

ஆட்டோக்காரன் சுகன்யாவை கண்ணாடியில் பார்த்து பாவப்பட்டு யாருக்கு என்னவோ என்று வேகம் கூட்டி ஓட்டினார்.

விஷாகன் போனிலிருந்து வந்த அழைப்பு சுகன்யாவை பைத்தியமாக்காத குறையாக மாற்றியது.

மருத்துவமனையில் நுழையும் நேரம் பணத்தைக் கொடுத்து விட்டு, ரிசப்ஷனில் உதயகுமார் என்ற பெயரை கேட்டு முடிக்க, ரிசப்ஷன் பெண்ணோ ‘இப்ப தான் நார்மல் வார்டுக்கு வந்திருக்காங்க’ என்ற உபரி தகவல் கொடுத்து அறை எண்ணையும் கூறினார்.

‘என்னது நார்மல் வார்டுக்கா? அப்படின்னா எப்ப அட்மிட் ஆனார்?’ என்ற சிந்தனைக்குச் சென்று மீண்டு வந்தார் சுகன்யா.
எப்படியும் விஷாகனிடம் கேட்டுக் கொள்ள முடிவெடுத்தார். ரிசப்ஷன் பெண்ணின் ஆங்கிலமே அதற்குக் காரணம்.

அடையாரில் இருக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உதயகுமார் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வெள்ளை மாளிகை ஆங்காங்கே பளிச்சிட்ட விளக்குகளும், ஒரத்தில் ஆக்ஸிஜனை வெளியிட்ட செடிகளும், மருத்துவமனை என்றாலும் மாடர்ன் ஆர்ட் போட்ட சட்டகத்தையும் கவனிக்கும் நிலையில் சுகன்யா இல்லை.

அரக்க பறக்க ஓடிவந்து விஷாகனை காணவும் மூச்சு வந்தது.

அறைக்கு வெளியே போட்ட சேரில், பின்னந்தலையைக் கோதியபடி விஷாகன் அமர்ந்திருக்க, தாய் “விஷாகா” என்று பரிதவிப்பாய் ஓடிவரவும் எழுந்தான்.

சாதாரணமான உயரத்தில் இருப்பவர்களே விஷாகனை நிமிர்ந்து பார்க்க வேண்டிய நிலையில் நல்ல உயரத்தில் இருப்பான். சுகன்யாவோ சாதாரணப் பெண்களின் உயரத்திற்கும் இரண்டு இஞ்ச் குறைவானவர்.

வேகமாய் வந்து மகனை தழுவி “அப்பாவுக்கு என்னடா ஆச்சு. யாரு என்ன பண்ணினா. இப்ப எப்படியிருக்கார்?” என்று வினா தொடுத்து விம்மி அழுதார்.

அவனின் நெஞ்சில் சாய்ந்த அன்னையைப் பிரித்து “முதல்ல போய் அவரைப் பாரும்மா” என்று முத்தாய் வார்த்தை உதிர்த்து அறைக்குள் அனுப்பி வைத்தான்.

சுகன்யா கணவரை காண அறைக்குள் சென்றதும் மீண்டும் ஆற அமர யோசித்தான்.

கைகள் வலியெடுக்க வலதுகையை நீட்டி நிமிர்த்திச் சற்று உடற்பயிற்சி போலக் கைகளுக்கு வேலை கொடுத்தான்.

உள்ளே தாய் சுகன்யா அழுவதும், புலம்புவதும் வெளியே கேட்டது. வராண்டா போன்ற நடைபாதையில் நடக்க ஆரம்பித்தான். வார் வைத்த செருப்பு லேசாய் சத்தமிட்டது.

கண்ணாடி போன்ற தடுப்பில் தன் உருவத்தைப் பார்த்து வளர்ந்திருந்த கருமீசையை நீவி விட்டபடி ஷேவ் செய்து இரண்டு நாளான முட்தாடியை தடவினான்.

முதல் இரண்டு சட்டை பொத்தனை கழட்டி விட்டான். லேசாய் வேர்க்கவும் ஜன்னல் இருக்கும் பக்கம் நடையிட்டான்.

தீவிரமாய் எதையோ யோசிப்பது அவன் முகம் இறுகுவதில் நன்றாகவே தெரிந்தது. கை முஷ்டிகள் மீண்டும் கடினமாகியது எதிரே அவன் வீட்டு பொருட்களாக இருந்தால் கோபத்தை அதில் காட்டியிருப்பானோ என்னவோ.

மருத்துவமனை கண்ணாடி கதவுகள் என்பதால் அடக்கப்பட்ட கோபத்தை மனதில் கொண்டு வந்தான்.

அதற்குள் சுகிர்தன் வந்து சேர்ந்தான் முதுகுப்பை மாட்டி ஷூகால்கள் ‘டொக்டொக்’ என்று சத்தமிடவும் விஷாகன் திரும்பினான்.

“அப்பாவுக்கு என்னா ஆச்சு? இப்ப பரவாயில்லையா? ஆக்சிடெண்டா? வண்டி ஏதாவது இடிச்சிடுச்சா?” என்று கேட்டு முதுகுப் பையை வெளியேயிருந்து இருக்கையில் கழட்டி வைத்தான்.

சுகிர்தன் விஷாகன் ஒரு வருட இடைவெளியில் பிறந்தவர்கள். அதனால் சுகிர்தன் அண்ணன் என்று அழைப்பதில்லை. அதே கணம் விஷாகனும் அப்படிப்பட்ட அழைப்பை எதிர்பார்க்கவில்லை.

“முதல்ல அந்த ஆளை பார்த்துட்டு வா. பேசுவோம்” என்று விஷாகன் அன்னைக்கு அறையைச் சுட்டிக் காட்டியது போலவே தம்பி சுகிர்தனுக்கும் உள்ளே போகக் கூறினான்.

அவனோ ‘அந்தாளா?’ என்று திகைத்து, உள்ளே போக, தாய் சுகன்யாவின் ஒப்பாரி புலம்பல்கள் அதிகமானது.

“பாருடா சுகிர்… யாரோ அடிச்சி வெளுத்துயிருக்காங்க. யாரு அடிச்சானு அவரால சொல்ல முடியலை.
இப்படி வைரம் பாஞ்ச கட்டையாட்டும் மூங்கில் மாதிரி நிமிர்ந்து விரப்பா இருப்பார். இப்ப தண்ணீல நனைஞ்ச வாழை தாரா இருக்காரே.” என்று அழுது வடியவும் சுகிரோ தாயை அணைத்து நின்றான்.

அவனுக்கு அப்பாவை விட அம்மாவை பிடிக்கும். அம்மா அழுது புலம்பத் தோளை அணைத்து “யாரு என்னனு விசாரிப்போம் மா. அழாதே.” என்று தட்டி கொடுத்தான்.

உதயகுமார் உடலில் ஆங்காங்கே கட்டுகளுடன் மனைவியையும் சின்ன மகனையும் வேடிக்கை பார்த்தார். லேசாய் கண்களில் நீர் துளிர்த்தது.

செவிலி வந்து உதயகுமாரின் ட்ரிப்ஸில் மருந்து செலுத்தி “பேஷண்ட் பக்கத்துல நின்று கூடி கூடி அழாதிங்க. யாராவது ஒருத்தர் இருங்க. டாக்டர் வந்தா என்னைத் திட்டுவார்.” என்று கூறி வெளியே அனுப்பினார்.

“அம்மா.. நீங்க அப்பாவோட இங்க இருங்க. நான் வெளியே விஷாகனோட இருக்கேன்.” என்று சுகிர் வெளியேறினான்.

விஷாகன் இருக்கையில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டு, தந்தை அனுமதிக்கப்பட்ட அறையில் லேசாய்த் திறந்திருந்த கதவு வழியாக அன்னையைக் கவனித்தான்.

தந்தையருகே “யாருங்க இப்படி அடிச்சா?” என்று கேட்டு நின்றார். தந்தை வாய்த் திறக்கவில்லையென்றதும் பெருமூச்சை கடத்தி கோபமாய்த் திரும்பினான்.

சுகிர்தனோ “உடம்பெல்லாம் கட்டுப் போட்டிருக்கு. நான் ஆக்சிடெண்ட் வண்டி மோதியிருக்கும்னு வந்தேன். யாரோ அடிச்சதா அம்மா புலம்புது.” என்று தமையனை நோக்கி கேட்டான்.

“டாக்டர் அடியை வச்சி யாரோ அடிச்சதா சொல்லிட்டுப் போனார். அம்மா அதைத் தான் சொல்லிருப்பாங்க” என்று விளக்கினான்.

சுகிர்தன் தமையன் பக்கம் அமர்ந்து “யாரு அடிச்சிருப்பா? எதுக்கா இருக்கும்? யார் வம்புக்கும் போக மாட்டாரே.” என்று எதனால் இருக்குமெனக் கேட்டான்.

விஷாகன் அமைதியாக இருந்தான். ஏதோ ஒரு முடிவெடுப்பது போன்ற பாவனை அவன் முகத்தில் தெரிந்து தெளிவாகியது.

தம்பியை ஒரு முறை ஆழ்ந்து பார்த்து விட்டு வாயெடுக்கும் நேரம், சுகிர்தனுக்குப் போன் கால் வந்தது.

தமையனிடமிருந்து நழுவி சற்று தள்ளி வந்து, போனை அட்டன் செய்து காதில் வைத்தான்.

எதிரே என்ன கேட்டிருப்பாரோ, “அப்பாவுக்குச் செம அடி. உடம்பெல்லாம் கட்டு, பேச முடியலையா இல்லை பேசாம தவிர்க்கிறாரானு தெரியலை. ரொம்பச் சோகமா, கவலையா முகத்தை வச்சியிருக்கார். அம்மா அப்பா பக்கத்துல உட்கார்ந்து புலம்பிட்டே இருக்காங்க. போதாதுக்கு ஊருக்கு போன் போடமுயற்சி பண்ணினாங்க. விஷாகன் தான் இப்ப யாருக்கும் போன் போடாதிங்கனு சொல்லியிருக்கான்.

விஷாகன் இங்க தான் இருக்கான். நான் அப்பறம் பேசறேன்” என்று அணைத்து முடித்தான்.

விஷாகனுக்கு அடிக்கடி தம்பி தனியாகப் போனில் பேசுவது கருத்தில் படாமல் இல்லை. ஆனால் பெரிதாய் கேட்டுக் கொள்ளவில்லை. எப்படியும் ஒரு நாள் எதுவும் மூடிவைத்தது தெரியவராமல் போகாதே என்ற நம்பிக்கை.

ஆனால் இனியும் இது போன்ற நம்பிக்கை யார் மீதும் வைக்க மனமின்றித் தம்பியை உறுத்து நோக்கினான்.

விஷாகனின் பார்வை பொருளுணர்ந்து அவனை இயல்பாக்கிடும் முனைப்பிலும், பேச்சை திசைமாற்றிடவும், “அப்பாவை யாரு இப்படி அடிச்சது? உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.

விஷாகன் மெதுவாய் அறைக்குள் இருக்கும் அன்னைக்குக் கேட்காது “அவரை நான் தான் அடிச்சேன். நான் தான் ஹாஸ்பிடல்ல சேர்த்தேன்” என்றான் நிதானமாக.

சுகிர்தன் அதிர்ச்சி அடைந்தவனாகத் தந்தை இருக்கும் கதவை நன்றாக மூடி, “நீ… நீயா… எதுக்கு?” என்று குழப்பமாய்க் கேட்டான்.

சுகிர்தனுக்கு அம்மாவை பிடிக்கும். விஷாகனுக்கு அப்பாவை பிடிக்கும். அப்படிப்பட்டவன் தந்தையையே அடித்தேன் என்கின்றானே?

-தொடரும்.
-Praveena Thangaraj


23 thoughts on “நீயின்றி வாழ்வேது-1”

 1. Avatar

  Super sis semma starting 👌👍😍 vishagan arumaiyana name pa appavaiye adichana appo periya reason yetho eruku parpom 🤔

 2. Avatar

  Already indha kadhai padichen akka… Thirumba padikumbodhu pudhusa padikura feel varudhu… Super akka vishagan ah marupadiyum kondu vandhadhuku….. Waiting for next epi akka🥰

 3. M. Sarathi Rio

  நீயின்றி வாழ்வேது…!
  (அத்தியாயம் – 1)

  அய்யய்யோ..! இது என்ன புதுகதையா இருக்குது…?
  விஷாகன் எதுக்கு அப்பாவை அடிச்சான்…? அதுவும் அப்பாவை புடிக்கும்ன்னு சொல்லிக்கிட்டே…! தவிர, அவனே அடிச்சு போட்டு, அவனே கொண்டு வந்து ஆஸ்பத்திரியிலேயும் சேர்த்துப்பூட்டு, ராஜ வைத்தியமும் பண்றான்னா…
  இதுல அப்பன்காரன் வேற ஊரை சொன்னாலும் பேரை சொல்லக்கூடாதுன்னு, ரொமடப கமுக்கமாவே இருக்கிறான். விட்டா, மூத்தவன் அடிச்சிட்டான்ம்மான்னு பொண்டாட்டி முந்தானையில கண்ணைத் துடைப்பாரு போலவே…? ஆஹா.. இந்த விஷாகன் ரொம்ப வில்லங்கம் புடிச்சவனாஇருப்பானோ…? ரைட்டு… புரிஞ்சுப்போச்சு ஒருத்தன் வில்லங்கம் புடிச்சவன்னு தெரிஞ்சுப்போச்சு.

  இன்னொருத்தன் எப்படின்னு தெரியலையே…? இந்த சுகிர்தன் வேற ஓரம் ஒதுங்கிறான், ரன்னிங் கமென்ட்ரி வேற யாருக்கோ கொடுத்திட்டு இருக்கிறான்…. அது யாருக்குன்னு தெரியலையே..? ஆஹா….ரெண்டும், ரெண்டு துருவங்களோ..???
  சுகன்யா அம்மா தான் ரொம்ப பாவம்…!
  😂😂😂
  CRVS (or) CRVS 2797

 4. Kalidevi

  Started very interesting sisy ithu ena periya twist vachitinga na kuda sigirthan tha etho panitana ninachen 1mn la patha hero tha adichi irukaru ena vishayama irukum

 5. Avatar

  என்னது இவனே அடிச்சிட்டு இவனே அட்மிட் பண்ணி இருக்கானா? ஆரம்பமே அதிரடியா இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *