புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-5

நீயின்றி வாழ்வேது-5

     ஊரை விட்டு ஊர் வந்து பிழைப்பை காணும் பானிப்பூரிகாரன், பஞ்சுமிட்டாய்காரன் மற்றும் நூற்றுக்கும் இருநூறுக்கும் தினக்கூலி வாங்குவோர் கூட ஸ்மார்ட்போன் வைத்து மாலை நேரத்தில் பொழுதை கழிக்கின்றனர். அப்படியிருக்க விஷாகனோ ‘என்னதிது அவங்க வீட்ல ஒரு ஸ்மார்ட்போன் கூட வச்சியில்லையா? தடுக்கி விழுந்தா போன் கடை எத்தனை இருக்கு. விலைகம்மியா கூட ஸ்மார்ட்போன் இருக்கே’ என்று நடையிட்டான்.

இதேயிடத்தில் இருந்தால் காதல் பூதம் அவள் புகைப்படம் எடுத்து வந்திடுமா. தானே வெட்கம் விட்டு யாரிடமாவது கேட்க வேண்டும். இல்லையென்றால் ஊருக்கு போகும் வரை தன் நினைவில் முகம் கூடச் சரியாகப் பதியாத பாவாடை சட்டை போட்ட பெண்ணிடம் தான் கனவு காண இயலும்.

   அவனுக்கு விருஷாலி தாயபாஸ் போல ஒல்லியாக இருந்த காலத்தில், அவளை தாவணி கட்டிய போது பார்த்தது.
  
    அன்னை சுகன்யாவிடம் வந்து கிச்சனில் தண்ணீர் குடித்து, “இன்னிக்கு என்ன சமையல் அம்மா?” என்றான் விஷாகன்.

    “இடியாப்பம் குருமா வச்சியிருக்கேன் விஷாகா. மூன்று பேர் வயசானவங்க. அப்பாவுக்கும் சட்டுனு ஜீரணம் ஆகட்டும்னு” என்று பார்த்து பார்த்து உணவை வழங்கும் வேலையில் இருந்தார்.

   “சுகிர்தன் வந்துட்டானாம்மா” என்று கேட்டான்.

   “எங்கடா வரவர அப்பாவை பற்றித் தெரிந்ததால் லேட்டா தான் வர்றான். எதுவும் கேட்க முடியலை. நீ ஒரு வார்த்தை என்னனு கேளுடா” என்று சுகன்யாவின் அத்தை, அப்பா, அம்மா என்று மூன்று பெரியவர்களுக்கும் உணவை வைத்து வழங்க சென்றார்.

   “அம்..மா” என்று பின்னாலே செல்ல பிடிக்காமல் அங்கேயே தவித்து நின்றான். அச்சோ விஷாகா ‘விருஷாலி போட்டோ தேடி இப்பவே உன்னை நடையோநடை நடக்க விடறாளேடா. போட்டோவை கண்ணுல சிக்காதா’ என்று தவித்திருக்க மீண்டும் தண்ணீர் செம்பை எடுத்துக் குடித்தான்.

     சுகன்யா சமையலறை வந்து சேர இன்னமும் பெரியவன் அங்கேயே நிற்கவும், “பசிக்குதா விஷாகா.” என்று முந்தானையில் நெற்றியை துடைத்தார்.

     “இல்லைம்மா… சுகிர் வந்ததும் சேர்ந்து சாப்பிட்டுக்கறேன்” என்றவன் அன்னையிடம் கேட்க தயங்கினான்.

      தனக்குப் பெரியவர்கள் திருமணத்துக்குப் பெண்ணை முடிவு செய்தும், தானாக இன்னமும் வாய் திறக்காதது என்னவோ நெஞ்சை அழுத்தியது.
    நெஞ்சை தடவியவனாக, “அம்மா அந்தப் பொண்ணு பெயர் என்ன?” என்று தவறாய் எடுத்துக் கொள்வாரோயெனப் பொண்ணு பெயர் தெரிந்தே கையில் சொடக்கிட்டு முடித்தான்.

      “விருஷாலிப்பா.. என்னப்பா… அப்பா சொந்தத்துல பொண்ணு வேண்டாமா? ஒரு மாதிரி இருக்கியே” என்று மகனை போலச் சுகன்யாவும் வேறு விதமாய்ச் சிந்தித்துக் கேட்க, “சேசே இல்லைம்மா. அவர் சொந்தம் என்றால் வேண்டாம்னு எப்படிச் சொல்லறது. அவர் அப்படின்னா எல்லாரும் அப்படியா? அப்படிப் பார்த்தா என்னைத் தான் நானே சந்தேகப்படணும். அவரை மாதிரி தோற்றத்துல இருக்கறது நான் தான்.” என்று வருந்தினான்.

     சுகன்யாவோ இத்தனை நாளாய் பெருமையாய் உணர்ந்த விஷயம். தந்தையின் அச்சு வார்த்தது போல விஷாகன் இருப்பதே. இன்று அதே வருத்தமாய்த் தோன்ற வைத்து விட்டாரே. 

    “பின்ன என்னப்பா ஏதாவதுனா தயங்காம சொல்லு” என்று மகனின் கையைப் பிடித்து வாஞ்சையாய் கேட்டதும், விஷாகனுக்குத் தயக்கமாய் உடைத்து கேட்க துவங்கினான்.

    “அம்மா.. நான் அந்தப் பொண்ணைப் பார்த்ததில்லை. இப்ப ‘ரீசண்ட் பிக்சரை’ அப்பா மூலமா சங்கரன் மாமாவிடம் கேட்டா அவங்களிடம் ‘ஸ்மார்ட்போன்’ கூட இல்லையா?” என்று கேட்டதும் சுகன்யா தலைகுனிந்தார்.

    சற்று நேரம் கழித்து “விஷாகா… விருஷாலி வீட்ல வசதி எல்லாம் இல்லை. சின்னதா ஒரே ரூம் ஹால் கிச்சனு பிரிவா இருக்கும், வீட்டை சுத்தி கொஞ்சம் நிலம். கறவை மாடு, ஆடு, இதைத் தவிரப் பெரிசா எதுவுமில்லை. 

    விருஷாலி கவர்மெண்ட் காலேஜ்ல படிக்கிறா. சங்கரன் அண்ணா
வண்டில ட்ரிப் அடிக்கிறவர். அன்னம் வீட்ல ஆடு மாடு பார்த்துக்கறவங்க. விவேக் டிப்ளமோ படிச்சிட்டு எலக்ட்ரிஷனா இருக்கான். அந்தளவு பணவசதி எதுவும் இல்லை. சங்கரன் அண்ணாவும் விவேக்கும் சின்னதா போன் வச்சிருக்காங்களே தவிர ஸ்மார்ட்போன் வச்சுக்கல.

     உனக்குப் பணம் வசதி போறயிடம் செழிப்பா இருக்கணும்னு எதிர்பார்த்தா இப்பவே சொல்லிடு. பொண்ணு லட்சணமா வேண்டுமின்னா மட்டும் சொல்லு. விருஷாலியை கட்டி வைக்கிறோம்.

   ஏன்னா இப்ப சரின்னுட்டு பிறகு அத்தபொண்ணோட பிடிக்காம,  எதிர்பார்ப்பை மனசுல வச்சி வாழக்கூடாது பாரு.” என்று தன் வாழ்வின் இன்னலை கடந்து வந்த அனுபவத்தை மற்றொரு பெண்ணும் அனுபவிக்கக் கூடாதென்ற நல்லெண்ணத்தில் கூறினார்.

    “அம்மா… எனக்குப் பணம் வசதி வேண்டாம். நிம்மதி தான் வேண்டும். சுகிர் மாதிரி வேலைக்குப் போய்ப் பணம் சம்மாதிக்கத் தெரியாதவனா நான். பணவரவு கூடுதலோ குறைச்சலோ நானே முதலாளியா இருக்கணும்னு நினைக்கிறவன்.

     எனக்கு வரதட்சனையே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். மத்தது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனக்கு அந்தப் பொண்ணை மட்டும்… ஒ…ஒரு.. ஒருதடவை பார்க்கணும்.” என்று கேட்டு விட்டான். அவனின் பேச்சில் கடைசியாய் வெட்கம் வந்து லேசாய் மகனுக்கு கல்யாண கலையும், திருமணம் செய்யும் காலமும் பிறந்துவிட்டதென்று.

     “ஏன்டா கண்ணா. பொண்ணு போட்டோ வேண்டும்னு கேட்க இத்தனை தயக்கமா? கொஞ்சம் பொறு” என்று தங்கள் அறைக்குச் சென்றார் சுகன்யா.

   உதயகுமாரோ மனைவியைக் கண்டு எழுந்து அமர்ந்தார். புது மரியாதையாம்…. யாருக்கு வேண்டும்.

   மனதை எட்டி உதைத்துவிட்டாரே இனி என்ன மரியாதை தந்து என்ன பிரயோஜனம் என அவரை ஒதுக்கி வைத்து, தனது பீரோவுக்கு மேலே இருந்த ப்ளு கலர் பையை எட்டி எடுக்க முயன்றார்.

   தன் உயரத்திற்கு அவை எட்டாதென்று “விஷாகா” என்று மகனை விளித்தார் சுகன்யா.

   அன்னை குரல் கேட்டதும் ஓடிவந்து சேர, “அந்த ப்ளு கலர் பையை எடுப்பா” என்று கூறிடவும் எடுத்துக் கொடுத்தான்.

     கட்டியிருந்த சேலையால் ப்ளுகவர் பையின் மேலே இருந்த தூசை துடைத்தார்.

   அம்மா அதான் தூசிதட்டி வாங்கித் தந்தேனே” என்று கதவின் பின்னால் மாட்டியிருந்த தூசிதட்டியை எடுத்து தூசியைத் தட்டினான்.

“இப்படிச் செய்தே பழகிடுச்சு” என்றவர் பையைக் கீழே வைத்து அதிலிருந்த ஆல்பத்தை எடுத்து வெளியே வைத்து முடித்தார்.
  
     அந்த பையினுள் நிறைய ஆல்பங்கள் இருந்தது. அதில் ஊர்த்திருவிழாவில் எடுத்த புகைப்படத்தைத் தேடினார் சுகன்யா.

     உதயகுமாரோ கையைப் பிசைந்து சுகன்யாவும் விஷாகனும் எதற்கு ஆல்பத்தைத் தேடுகின்றனர் என்பதை அறிந்து எட்டி எட்டி பார்த்தார்.

     விஷாகனும் விருஷாலி என்பவளின் புகைப்படத்தைக் காணும் ஆவலோடு நல்ல கலராய் மஞ்சள் சிவப்பாய் இருக்கும் பெண்களை அன்னை புரட்டும் ஆல்பத்தில் கண் பதித்து தேடினான்.

     அன்னை புரட்டிக் கொண்டு வேகமாய்த் திருப்ப, “அம்மா… வேகமா திருப்பினா மிஸ்ஸாயிட போகுது” என்றான்.

    “அதெல்லாம் சட்டுனு பார்த்தா முகம் பளிச்சினு தெரிவாடா.” என்று திருப்புதலில் மும்முரமாய் இருந்தார்.

       விஷாகனோ பின்னங்கழுத்தை தேய்த்து திரும்பி தந்தையை ஏறிட்டான்.

   அவர் வெளியேறவும், சொல்லாமலே சென்றவரை கண்டு ‘நல்ல புரிதல்’ என்று மனசாட்சியிடம் சொல்ல, “இதோ இவதான். இவ தான் விருஷாலி” என்று எடுத்துக்காட்ட, அந்த ஆல்பத்தை அப்படியே கையில் வாங்கினான்.

    “கோவில் விளக்குப் பூஜையில் நாவல்பழ நிறத்தில் பாவாடை ரவிக்கையும், வெள்ளை தாவணியும்  அணிந்து நின்றிருந்தாள். அந்த உடை அவள் நிறத்தை இன்னமும் பளிச்சென்று காட்டியது.

   சின்னதாய் காதொட்டிய தங்க கம்மல், கழுத்தில் சந்தையில் விற்கும் ஒரு வெள்ளை பாசிமணி, கையில் இரண்டு பக்கமும் கண்ணாடி வளையல், மெரூன் வண்ணத்தில் சின்னச் சாந்து பொட்டு இது தவிர்த்து பவுடர் முகம்.

     மாசற்ற மஞ்சள் முகம், ஒல்லியான தேகம், முன்னாடி இருந்த ஜடைபின்னலால் அவளின் முடி அளவை எடுத்துக்காட்ட, காஜல் இல்லாத கண்ணில் விஷாகன் அந்த நொடியே மாயத்தில் விழுந்தான்.

    “விஷாகா… நான் போய் அம்மாச்சி அப்பத்தா பார்த்துட்டு, தூங்க போர்வை கொடுத்துட்டு வந்துடறேன்.” என்று மகனிடம் கூற அவனோ அன்னையின் மொழி வேறொரு கிரகத்தில் இருந்து உச்சரிப்பு போலக் காதில் வாங்காமல் இருந்தான்.

   மகனின் பார்வை வரப்போகும் மருமகளின் மீது பதிய சுகன்யா மகிழ்ச்சியோடு வெளியேறியிருந்தார்.

   யாரும் இல்லையென்றதும் மொத்த ஆல்பத்திலும் அவளைத் தேடினான்.

     சிறுவயது முதல் தற்போது வரை இருந்த அனைத்து புகைப்படமும் தேடி செல்போனில் படம் பிடிக்கப் பதினொன்று போட்டோ காட்டியது. அதில் பாதிச் சிறுவயது புகைப்படம் சங்கரன் அன்னம் இருவரின் அருகே நிற்க அறிந்து தனது போனில் க்ளிக் செய்து ஆல்பத்தை அடுக்கினான்.

     விருஷாலியின் 11 புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன் ஆல்பத்தை அப்படியே போட்டுவிட்டுச் சென்றிருந்தான்.

       சுகிர்தன் வரவும் சேர்ந்து சாப்பிட, அன்னை அவனிடம் ‘நீ என்னனு கேளு.’ என்று நினைவூட்ட, “காலையில கேட்கறேன் அம்மா” என்று சுகிர்தனிடம் பேசுவதை  ஒத்திவைத்தான்.

     ஹாலில் அப்பத்தா, அம்மாச்சி, தாத்தா என்று படுத்திருக்க, விஷாகன் அவனின் அறைக்கு வந்தான்.

    மூன்று அறை அட்டாச் பாத்ரூம் ஹால் கிச்சன் என்றிருக்க, சுகிர்தன் தனியாகப் போனோடு ஜெனிபரிடம் பேச தாழிட்டான்.

    விஷாகனும் விருஷாலி புகைப்படத்தைக் கையில் வைத்து விட்டத்தைப் பார்த்துக் கனவு காண ஆரம்பித்தான்.

    சுகன்யாவின் அறையில் கீழேயிருந்த ஆல்பத்தை எல்லாம் எடுத்து பார்வையிட்டவாறு, கணவனும் மனைவியுமாய் இருந்த அவர்களின் புகைப்படத்தைக் கண்டு தேம்பினார்.

      ‘தோள்ல கைப்போட்டது, கையைப் பிடிச்சிட்டு நடந்தது, ஒரே மக்காசோளத்தைச் சரிபாதியா சாப்பிட்டது எல்லாம் பொய்யான வாழ்க்கையில சேர்ந்துடுச்சுல’ என்று கண்ணீர் ததும்ப வெறித்தார்.

    உதயகுமாரோ காலை பிடித்தவராக, “என்னை மன்னிச்சிடு மா. இதைத் தவிர எனக்கு வேற என்ன பண்ணறதுனு தெரியலை” என்று அழுதார்.
  
       சுகன்யாவோ காலை இழுத்துக் கொண்டு ஆல்பத்தை மூட்டை கட்டி மீண்டும் நீல நிற பையில் வைத்து விட்டு, கையலம்பி படுத்துக் கொண்டார்.
 
    மன்னிப்பை ஏற்கவோ, நடந்ததை மறக்கவோ இனியொரு ஜென்மம் வேண்டும்.

   இனி மன்னித்து என்ன உணர்த்திட முடியும். பையனின் திருமணம் ஒன்று தான் தற்போது தன் மகிழ்ச்சி என்று முதுகு காட்டி உறங்க, உதயகுமாரும் வேறெந்த தொந்தரவு தரவில்லை.

      அவருக்குச் சங்கீதாவின் நினைவை விடக் குழந்தை அபர்ணாவின் நினைவே அதிகம் வாட்டியது. ஒருநாளைக்கு ஒரு முறையாவது தந்தையைப் பார்த்து அவரோடு கதையளக்க வேண்டும்.

   அங்கே சங்கீதா அபர்ணாவை எப்படிச் சமாளித்தாளோ? அபர்ணா தன்னைக் கேட்டு எப்படியும் அடம் பிடித்திருப்பாள்.

    தொலைப்பேசியையும் விஷாகன் பிடுங்கி வைத்துக் கொண்டான். இத்தனை அடிவாங்கியும் அபர்ணாவிடம் ஒருமுறை பேச ஆசைப்பட்டார். தந்தை மகள் பாசம் அடியும் அவமானத்தையும் கூட ஒதுக்கிவிட்டது.

   நாளை மறுநாள் விஷாகன் அனைவரோடும் ஊருக்கு சென்று, பெண் பார்த்து பேசி முடிவெடுத்து வரப்போகின்றனர். எப்படியும் சங்கரன் வீட்டில் கைநனைப்பது உறுதி.

     விருஷாலி போட்டோவை இந்தளவு ஆசையாய் தேடுவதிலேயே பெற்றவர்களுக்குப் புரிந்தது.
அங்கே செல்வதற்குள் மகள் அபர்ணாவிடம் ஒரு முறை பேச வேண்டும் என்று பரிதவித்தார்.

தன்னை அடித்து அவனே மருத்துவமனையில் சேர்த்துத் தற்போது வரை காவல் காத்திருக்கும் விஷாகனை பொறுமைசாலியாகச் சாதாரணமாக எண்ணிவிட்டார்.

மீண்டும் சங்கீதா என்று போகாமல் மகள் அபர்ணா என்ற பாசத்தில் போனாலும் தன்னை வீட்டை விட்டே துரத்தும் எல்லைக்கும், விஷாகன் செல்வானென ஒருநொடி மறந்து போனார்.
ஒருவேளை சுகன்யா கத்தி ஆர்ப்பாட்டம் செய்து தன் மானத்தை ஏலமிட்டுருந்தால் புத்திக்குப் புரிந்திருக்கும்.

சிலவற்றைக் கண்ணியமாய்க் காய் நகர்த்திட எண்ணி விஷாகன் நினைத்து செயல்பட, உதயகுமாரோ களவாணி தனத்தை அமுல்படுத்த நேரம் பார்த்துக் காத்திருந்தார்.

-தொடரும்
பிரவீணா தங்கராஜ்

வாசிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

15 thoughts on “நீயின்றி வாழ்வேது-5”

  1. Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 vishagan ku evlo aarvama love start ayiduchu aana ponnuku pidikanuney parpom 🧐

  2. 😍super epi sis ❤️ suganya amma romba pavam 😒 intha mari life la nadatha romba kodumaiya irukummm…. Aaga motham vishaga appa ethachu panna poi marriage la issue aagama iruntha ok than….

  3. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 5)

    பாவம் பயபுள்ளை…! இருபத்தொன்பது வயசு வரைக்கும் கன்னித்தன்மையை காத்துட்டான் இல்ல… அதான் இப்ப விருஷாலியோட போட்டோ பார்க்க ஆளாப் பறக்குறான். இவன் இப்படி எந்தவித சலனமும் இல்லாமப் போய்தானே அப்பன்காரன் இளவயசு பொண்ணோட ஆட்டைய போட்டதும் இல்லாம
    ஏழு வருசத்துக்கு முன்னாடியே
    அவளுக்கொரு பிள்ளையையும் கொடுத்துப்போட்டு கமுக்கமாவே இருந்துட்டான். இப்பத்தானே அவரோட எல்லா தகிடுத்தத்தமும் வெளியவே வருது. இதுல, இப்ப மகளைப் பார்க்க வேற தவிக்குறாரு போல.

    என்னாத்தைப் ப்ளான் பண்ணி என்ன பண்ணி கிழிக்கப் போறாரோ..? இதுல ஏதாவது எக்குத்தப்பா ஆச்சுன்னா விஷாகன் இப்ப கையை காலை உடைச்சதோட மட்டும் நிப்பாட்ட போறதில்லைன்னு நல்லாவே தெரியுது. அப்புறம் உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணான்னு உட்கார வேண்டியது தான் பெருசு.
    வீட்டிக்கு மருமகள் வரவேண்டிய வயசுல இதெல்லாம் இவருக்கு தேவையா..? இதுல சின்னவன் வேற ஜெனிஃபர், ஜெனிஃபர்ன்னு அவ மந்திரத்தையே உச்சரிச்சிட்டு
    இருக்கான். இதுல அவன் கதை என்ன ஆகப்போகுதோ தெரியலை…? குடும்பம்ன்னாலே ஆயிரத்தெட்டு தொல்லைடா சாமி.
    😁😁😁
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!