நீயின்றி வாழ்வேது-7
விஷாகனுக்கு அப்பத்தா வீட்டுக்கு வந்தப்பின்னும், இதோ இலையில் நாட்டுக்கோழி குழம்பை ஊற்றியப்பின்னும் சாப்பிடாமல் பருக்கையை ஆராய்ச்சி செய்தவனை “என்ன விஷாகா? சாப்பிடு. மணி மூனாகுது எங்க போனிங்க” என்று சுகன்யா அவித்த முட்டை வைத்து நகரவும் சாப்பிட ஆரம்பித்தான்.
மனதிற்குள், அவ என்ன பதில் கூறியிருப்பாளென்ற எண்ணவோட்டமே குதிரையோட்டத்தை விட வேகமாக ஓடியது.
“நாளைக்கு இந்நேரம் சங்கரன் மகளை விஷாகனுக்குப் பேசி முடிச்சி அங்க கைநனைச்சிருப்போம்” என்று அப்பத்தா கூறவும் நேரத்தை பார்த்தான். மணி மூன்றே கால் காட்டியது.
இன்னும் இருபத்தி நான்கு மணிநேரம் இடையில் இருக்க, அவளின் முடிவு அறிந்திடலாமென்று உணவை சுவைக்க ஆரம்பித்தான்.
மாலை ஆறரை வரை பக்கத்து வீட்டு மணி தான் கூடவே பொழுதை போக்கும் விதமாகப் பேசி விஷாகனுக்குத் தோழமையாக உணரவைத்தான்.
நள்ளிரவு வீட்டில் அனைவரும் படுக்க, விஷாகனோ தனியாக உறங்க விருப்பம் கொண்டு மாடிக்கு வந்தான்.
அறையில் உறங்க வேண்டுமென்றால் உதயகுமாரை சகிக்க வேண்டும். இதுவரை சகித்துக் கொண்டதே அதிசயம்.
மாடியில் பிறைநிலா அழகாய் அவனை வரவேற்றது.
அப்பத்தா கொடுத்த போர்வையை எடுத்து கொண்டானே தவிர அவர்கள் ‘குளிரும் ராசா, சளிப் பிடிக்கும்’ என்பதைச் செவியில் ஏற்கவில்லை.
பாயும் தலையணையும் தூக்கத்தைத் தரவில்லை. மாறாகக் கனவு காண வழியில்லையா? என்று தலையணை அவனிடம் அணத்தியது.
மாடியில் சுவரோடு சாய்ந்து தலையணை மடியில் வைத்துக் கொண்டான்.
“எழவு தூக்கமும் வரலை சாப்பிடவும் தோணலை. எப்ப விடியும்னு இருக்கு.” என்று புலம்பினான்.
‘தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்வது இது தான் போலும்.’ என்பதை அக்கணம் அறிந்தான்.
அந்தாளை அடிச்சி ஹாஸ்பிடல்ல படுக்க வச்சி, ஊர்ல இருக்கற பெரியவங்க மறந்திருந்த என் கல்யாணத்தை நினைவுப்படுத்தி, இப்ப விருஷாலி அவளை எனக்குக் கட்டி வைக்க இங்க வந்து, அவளைப் பார்க்க போனா…
சும்மா போறவள் அமைதியா கடந்து போயிருந்தா கூடப் பெட்டரா இருந்துயிருக்கும். நான் அவளை ரசிச்சிட்டு வந்து நல்லா சாப்பிட்டுத் தூங்கியிருப்பேன். பக்கத்துல ஒரு கொடுக்குக் கேள்வி கேட்க, அந்தக் கேள்வி மட்டும் என் காதுல விழணுமா? அவ என்ன பதில் சொன்னாளோ… எனக்கு இங்க தூக்கமே வரலை. இதுல இந்தக் குளிர் வேற ‘முருகா’ என்று வேண்டினான்.
‘ம்கூம்.. சாமியே சரியில்லை. இரண்டு பொண்டாட்டி, பேசாம பிள்ளையாரப்பாவை பிக்ஸ் பண்ணுவோம்.’ என்று யோசிக்க மனசாட்சியோ ‘அவர் பக்கா பேட்சுலர்’ என்றது.
“நான் சாமியே கும்பிடலை. விட்ரு…’ என்று மனசாட்சிக்கு பதில் தந்து போர்வை போட்டு படுத்தான் இரண்டு நொடிக்கூட முடியவில்லை எழுந்தான்.
‘நாளைக்கு… நான் முதல் வருடம் படிக்கிறேன். எனக்குக் கல்யாணம் வேண்டாம். படிக்கிற பொண்ணிடம் கல்யாணம் பத்தி பேசறிங்க.’ என்று ஷாலி அழுவதாகக் கற்பனை செய்து பார்த்தான்.
லேசாய் வலது கை இடது பக்க இதயத்தை என்னவோ செய்தது.
மறுப்பாளா? என்று இரவில் முதல் முறையாகக் காதல் அவஸ்தையை அனுபவித்தான்.
குளிருக்கு போர்வை போர்த்திச் ‘சொல்லிப்பாரு குட்டக் கத்திரிக்காய் தூக்கிட்டு போறேன். இந்தளவு புலம்ப விட்டவளை இனி நான் விடறதா இல்லை.’ என்று படுக்க, நெடுநேரம் அவன் புலம்பலில் குளிருக்கே குளிர் காய்ச்சல் வந்து விடியலை பிரசவித்து அதிகாலையை வரவழைத்தது.
துளி முகமும் வெளியே தெரியாத அளவிற்குக் கம்பளி போர்வையால் படுத்திருந்தவனை பக்கத்து வீட்டு மணி வந்து எழுப்பினான்.
“அண்ண… அண்ண… விடிஞ்சிடுச்சு. எழுந்திருங்க அப்பத்தா காபி ஆத்தி கொடுத்துச்சு” என்று எழுப்பினான்.
அவனோ அசையவில்லை…. “இப்படித் தூங்கினா அண்ணி வீட்டுக்கு எப்ப போக?” என்றதும் போர்வையை அகற்றி எழுந்தான்.
“மணி என்னடா ஆகுது?” என்று கேட்க, எனக்கு ஒன்னும் ஆகலைண்ணா” என்று கூறினான்.
“ஜோக்கா… டைம் என்னனு கேட்டேன்” என்றதும்
“ஓ…. அதுவா… மணி ஏழு ஆகுது. அப்பத்தா காபி கொடுத்துச்சு.” என்று நீட்டினான்.
மாடியிலிருந்த செங்கலை வைத்து பல்லை தேய்த்து, இரவு குடிக்கக் கொண்டு வந்த குடிதண்ணீரால் கொப்பளித்து முடித்தான்.
காபியை பருகி, “இங்கிருந்து எப்ப போறாங்க?” என்று கேட்டான்.
“தெரியலிங்க அண்ணா. கீழே போய் கேட்கவா” என்றதும் வேண்டாமென்று அவனை நிறுத்தினான்.
தோளில் கையைப் போட்டு மெதுவாய் படியில் நடந்தான்.
“இந்தாயா பேஸ்டு” என்று சின்னதாய் க்ளோஸ்அப் மற்றும் பிரஷை நீட்டினார் அன்னபூரணி.
விருஷாலியை பார்க்க வரும் ஆர்வத்தில் உடுத்தும் உடையில் கவனம் செலுத்தினானே தவிர, பேஸ்ட் பிரஷ் எடுத்து வரவே மறந்தான். அதனாலே எழுந்ததும் நினைவு வர இங்கே அப்பத்தா சென்னை வந்தே செங்கலில் பல் விளக்கிய ஆள் என்பதால் இங்கே பேஸ்ட் கிடைக்காதுயென்று செங்கலால் பல் விளக்கினான்.
தற்போது அன்னபூரணி அப்பத்தா நீட்டவும் ஷாலியை பார்க்க போற பேஸ்ட் வச்சி ஒருமுறை விளக்கிடு’ என்றது மனசாட்சி.
செந்தூரன் தாத்தா வீட்டில் இருந்த ஓடையில் குளிக்கச் சென்றான் விஷாகன்.
வீட்டுக்கு வந்து தலையைத் துவட்டும் நேரம் பத்து மணியானது.
பதினொன்று செல்லலாமென்று விஷாகன் எண்ணயிருக்க, அப்பத்தாவோடு செந்தூரன் தாத்தா, செல்லம்மா அம்மாச்சி பன்னிரெண்டு போகலாமென்று கூறி சங்கடமாய் நின்றனர்.
விஷாகனுக்கோ கல்யாண தடங்கலோ என்று சீப்பால் தலைவாறி முடித்து அதன் இருப்பிடத்தில் வைத்து விட்டு, “என்ன அப்பத்தா பொண்ணு என்னைப் பிடிக்கலைனு சொல்லிடுச்சா. கூடிக்கூடி பேசறிங்க” என்று மனதில் தோன்றியதை கேட்டு விட்டான்.
“என்னயா இப்படிக் கேட்கற? என் தங்கச்சி என் மேல இருக்கற பாசத்துல அவ பெத்த பொண்ணுக்கு அன்னம்னு பெயர் வச்சியிருக்கா. நான் கேட்டு என் பேரனுக்கு அவ பேத்தியை தரமாட்டாளா.” என்று அன்னப்பூரணி பதறி போய்ப் பேசினார்.
“அப்பத்தா… நான் உங்க தங்கச்சியைக் கட்டிக்கப் போறதில்லை. அவங்க பேத்தியை… பேத்தி படிக்குது, படிக்கிற பிள்ளை என்ன நினைச்சிருக்குமோ” என்றான். மனதிலிருந்தவை அவளிடம் கேட்க வேண்டியது ஏனோ அரை மணி நேரமாகக் கூடிக்கூடி பேசவும் திருமணத்திற்கு மறுத்திருப்பாளோ என்று அவனாகவே அனுமானித்தான்.
“ஏன்யா இப்படிப் பேசற.” என்று செல்லம்மா அம்மாச்சி பேரன் இப்படிப் பேசுகின்றானே என்று கன்னம் பிடித்துக் கொஞ்சி கேட்கவும், “பின்ன என்ன அப்பத்தா. நானும் பார்க்குறேன் கிசுகிசுனு சத்தம். யாரும் கிளம்பாம இங்கயே இருக்கிங்க. அப்ப இந்தப் பிள்ளைக்கு என்ன பிடிக்கலைனு தானே அர்த்தம். என்னிடம் சொல்ல தயங்குறிங்க” என்றான் விஷாகன்.
“எய்யா… நீ கல்யாணத்துக்குச் சம்மதிச்சு இங்க வந்ததும் முதல் வேலையா அன்னத்திடம் கேட்கறது விடப் பேத்தியிடம் கேட்டுடுவோம்னு நேத்தே சாயந்திரம் அங்க போய்க் கேட்டேன். நீ நினைக்கிறது போலப் படிக்கிற பிள்ளை பாரு.
அதுக்கு என்ன சொன்னா தெரியுமா?” என்று பீடிகை போட்டார் அன்னபூரணி.
இவ்வளவு நேரம் தேவையற்றதை அனுமானித்துக் கிடந்தவன், “என்ன சொன்னா?” என்று ஆர்வத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் அப்பத்தாவின் வாய்மொழியில் உதிரும் சொற்களுக்காகக் காத்திருந்தான்.
“என் பேரனை கல்யாணம் பண்ண உனக்குச் சம்மதமாடினு போட்டோ காட்டி கேட்டா . ‘மச்சானை கட்டிக்க என்னிடம் ஏன் ஆச்சி கேட்கற. எனக்குப் பெரிய மச்சானை ரொம்பப் பிடிக்கும். எப்பவும் யாரையும் அதட்டி ஒரு வார்த்தை பேசமாட்டார். சாப்டா பேசுவார் நான் இதுக்கு முன்ன பார்த்திருக்கேன்’ சொன்னாயா” என்று கூறியதும் என்னது முன்னவே பார்த்திருக்காளா? நான் தான் லேட்டா.’ என்பது போல இனிய திகைப்பில் லயித்தான்.
ஆனால் தற்போது கிசுகிசுப்புக்கு என்ன காரணம் என்றதும் “அதுவொன்னுமில்லையா அங்க வீடு சின்னது. நம்ம சொந்தத்துல எத்தனை பேர் போறோம்னு விசாரிச்சி கறிச்சோறு ஆக்கறா, வீட்ல இடம் வேண்டும்லயா.” என்றதும் அன்னை சுகன்யா சொன்னதும் நினைவு வந்தது. நேற்று தூரத்தில் பார்த்தபோதும் வீடும் அளவாய் இருந்தது.
அதுக்கென்ன அப்பத்தா வெளியே திண்ணையிருக்கு அதுக்குப் பக்கத்துல இடமிருக்கு, சேரை போட்டு உட்கார்ந்தா போச்சு” என்றான்.
“வெளியே திண்ணையிருக்கா?” என்று சுகிர்தன் அண்ணன் விஷாகனிடம் கேட்க, ‘போச்சு போச்சு… வருஷம் தவறாம வர்றான். இவன் வீட்டை பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் நேத்து போயிட்டு வந்து உலறுறேன். சமாளிடா விஷாகா’ என்று குரலை செருமி, “ஏன்டா கிராமம்னா வீடு வாசல் எல்லாம் திண்ணை வச்சி கட்டியிருப்பாங்க அது தெரியாதா? எப்ப பாரு போனை நோண்டிட்டு” என்று அன்னை சுகன்யாவிடம் போனையே நோண்டறான் என்று மாட்டி விட்டான்.
அப்பத்தாவோ பெரிய பேரன் சமாளித்ததை எண்ணி நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தார். நேற்றே மணியிடம் எங்க போனிங்கனு கேட்டு பேரனின் கள்ளத்தனத்தை அறிந்துவிட்டாரே.
அதன் பின் தான் பேரன் இந்தளவு எதிர்பார்ப்போடு அவளைக் காண சென்றதை வைத்து பேத்திக்கும் பிடிக்குதா என்று அறிந்திட மாலை படையெடுத்தார்.
“சரிசரி கிளம்புங்க பேசிட்டே நேரம் கடத்திட்டோம்” என்று செந்தூரன் கூற, செல்லம்மா அம்மாச்சி, அன்னபூரணி பூஜையறையில் சாமி கும்பிட்டு, விஷாகனின் வெறும் நெற்றியில் திருநீறை பூசிவிட்டார்கள்.
சங்கரன் வண்டி ட்ரிப் அடிப்பவர் என்பதால் அவருக்குத் தெரிந்த இடத்தில் காரை வாடகைக்கு எடுத்து இங்கே அனுப்பி வைத்திருந்தார்.
விஷாகன், அப்பத்தா, அம்மாச்சி தாத்தா என்று காரில் ஏறவும் உதயகுமார் சுகன்யா சுகிர்தன் மணி, மற்றும் அங்கேயே இருந்த மற்றுமொரு சொந்தம் உதயகுமாருக்கு தம்பி செல்வகுமாரும் தாமரையும் ஒரு குடும்பமுமென நல்லநேரத்தில் கிளம்பினார்கள்.
விஷாகன் கையைச் சூடுபறக்க தேய்த்துக் கன்னத்தில் வைத்து முடித்தான். லேசாய் தெண்டை அடிக்கடி செருமினான்.
“மாடில படுக்க வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா பாரு.” என்று அப்பத்தா பேரனை சிறுவனாகவே எண்ணி அதட்டு போட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது அப்பத்தா.” என்றவன் கையைக் காரின் கண்ணாடியில் வைத்து அமர்ந்திருந்தான்.
அவனின் ராஜதோரணை கண்ணுக்கு நிறைவை தர, சுகன்யா மகனின் புதிய சோபையை ரசித்து வந்தார்.
நேற்று வந்த ஊர் பாதைக்குள் கார் நுழையவும், இருபத்தியொன்பது வயதற்கு உண்டான மிடுக்கோடு நிமிர்ந்தான்.
சின்னப் பிள்ளைதனங்கள் மூட்டைகட்டி போட்டுவிட்டு பெரிய மனிதனாக மாறினான்.
உதயகுமாருக்கு ஒரு பார்வையை வீசினான். இங்கு வரும் போதே வாயை திறக்க கூடாதென்று அடக்கி வைத்து அழைத்து வந்தான்.
வரதட்சனையை கேட்டு வாயை திறக்க கூடாதென ஒட்டுமொத்த ஆட்களிடமே தெளிவுப்படுத்தியிருந்தான்.
‘பொண்ணைப் பார்க்கறோம், தட்டை மாத்தறோம், கை நனைச்சி சாப்பிட்டு நாள் குறித்துக் கிளம்பறோம்’ என்று மிரட்டலாய் தான் கூறி அழைத்து வந்தான்.
கார் வீட்டின் முன் நின்றதும் குழுமியிருந்த ஆட்களைக் கண்டதும் கண்கள் தெரித்தது.
“அப்பத்தா இவ்ளோ கூட்டம் எதுக்கு அப்பத்தா. யாரு இவங்க எல்லாம்” என்று நெற்றி சுருக்கி இறங்காமல் கேட்டான்.
“இங்க விருஷாலியை பொண்ணு பார்க்க வர்றேன்னு ஊருக்கே தெரியும் கண்ணு. அவங்கள்ல தெரிந்தவங்க எல்லாம் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க” என்று செந்தூரன் கூறவும் சற்று லேசாய் ‘காட்சி பொம்மையா?’ என்று சலித்தான்.
ஆண் தனக்கே இப்படி இத்தனை கூட்டம் கண்டு பிடிக்காது என்றால், விருஷாலி சின்னப் பெண் அவள் நிலை’ என்று தன்னவளுக்காகத் தவிக்க ஆரம்பித்தது.
அவளைக் காணும் எண்ணம் உதிக்கவும் எதையும் யோசிக்காமல் இறங்கினான்.
பெண் பார்க்க வார் வைத்த செருப்பை மாட்டி இயல்பாய் கிளம்பியவனைச் சுகிர்தன் நிறுத்தி, ஷூ-சாக்ஸ் போட கூறி, உடையையும் டக்கின் செய்து வரும்படி சொல்லவும் சரியென்று வந்தான். வேலையைப் பொறுத்து டக்கின் செய்வதைத் தவிர்ப்பான் விஷாகன்.
இன்று விருஷாலி தன்னை முதல் முறை பார்க்க போகின்றாளென்று ஆர்வமாய்க் கிளம்ப அவன் காரிலிருந்து இறங்கியதும் அந்த மிடுக்கு காண்போரை கவர்ந்தது.
முழுக்கையை வேறு பாதி மடித்து விட்டிருந்ததால் அவனின் புஜங்கள் வலிமையாகக் காட்டியது.
அங்கே வீசிய தென்றலில் அலைபாய்ந்த கேசத்தைக் கோதி நடந்தான். யாரையும் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் காண்போர் அனைவரும் உதயகுமாரின் பெரிய மகனா?’ என்று வாயில் ‘ஈ’ சென்று திரும்பும் நிலையில் கண்டு ரசித்தனர்.
சுகிர்தனை விடச் சிறியவனாக மணியின் வயதில் ஒருவன் வேகமாய் “மச்சான் வந்துட்டார்” என்று குரல் கொடுத்தான்.
சங்கரன், அன்னம் இருவரும் வாசல் வந்து வரவேற்றார்கள்.
விஷாகன் கூறியது போல ஆங்காங்கே சேரில் வயசானவர்களும் ஆண்களும் அமர்ந்திருக்க, பெண்கள் எட்டி நின்று வேடிக்கை பார்த்தனர்.
ஒருவருக்கொருவர் நலன் விசாரித்து மகிழ்ச்சியைப் பறைச்சாற்றிக் கொண்டனர்.
திண்டில் உதயகுமார் அமர்ந்து விட, ராஜ உபசாரம் விருஷாலி வீட்டில் அளிக்கப்படவும், நாயகன் கோபமாய் அம்பு தேய்த்த பார்வையைத் தந்தையை நோக்கி வீசினான்.
உதயகுமாரோ, “தம்பியை கவனிங்க.” என்று விஷாகன் பக்கம் மற்றவர்களை அனுப்பினார்.
அப்பத்தாவோ “நல்லநேரம் முடியறதுக்குள் விருஷாலியை வரச்சொல்லு” என்று விஷாகனின் நெஞ்சில் பாலை வார்த்தார்.
மென்பாதங்கள் நேற்றைய கொலுசொலியை விஷாகனின் செவிக்கு இசைமீட்டி அரக்கு வண்ண சேலையில் நடந்து வந்தாள்.
லேசாய் கூட்டத்தைக் கண்ட பதட்டத்தோடு, கை நடுங்க காபி டம்ளரை எடுத்து வந்து வரிசையாக இருந்த சிவப்புச் சேரில் உள்ளவருக்குக் கொடுக்க அன்னம் பணித்திட, மெதுவாய் சரிவான பாதையில் தடுக்கி விழுந்திட கூடாதென்று தலைகுனிந்து நடந்து வந்தாள்.
சிவப்பு சேருக்கு நடுவே நீலநிறம் சேர் இருக்க, மெதுவாய் நிமிர்ந்தாள். ஏற்கனவே மாப்பிள்ளை இந்த சேரில் அமருவான் என்று கூறியிருந்தனர்.
மருதாணி கையோடு தட்டை இறுக பற்றி நீட்டவும் ‘நேற்று மருதாணி இல்லையே’ என்றவன் அவள் முகத்தை நோக்கினான்.
மஞ்சள் தேவதை அரக்கு வண்ண சேலையில், தன் முன் நிற்பதாக வியந்தான். நேற்று எளிமையான அழகென்றால் இன்று குத்துவிளக்கு துடைத்து வைத்த ஒளிப்போன்ற சுடரான அழகு.
இருகண்களும் சந்தித்துக் கொண்டு கவிதை பேசும் நேரம், விருஷாலியின் அம்மாச்சி செம்பருத்தியின் செருமல் விருஷாலியை ‘காபியை கொடுத்துவிட்டு வா’ என்று சொல்லாமல் மிரட்டியது.
ஊர்க்கூடி மற்றவைகளைப் பேசி முடித்திடும் ஆர்வத்தில் இருந்தார்கள். ஏற்கனவே வரதட்சனையை பற்றிப் பேசக் கூடாதென்றதால் நேரடியாகத் திருமணத்திற்குக் காலண்டரில் நாள் பார்த்து தோதுபடுமா என்று இருவீட்டார்களிடமும் கலந்தாலோசித்து இருந்தனர்.
விஷாகனோ வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் மையத்தில் இருந்த ஜன்னலில் தெரிந்த அரக்கு நிற சேலைக்குரியவளின் முகத்தைக் காண, இரண்டு மீன்கள் துள்ளுவது போலக் கண்கள் மட்டும் உருள்வதைக் கண்டு வலது கையால் இதயத்தை மெதுவாய்த் தடவினான்.
அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் வேகமாய் அடித்துக் கொண்டு, துடித்துக் கூச்சலிட்டு ஆர்பரித்தது அவன் இதயம்.
அப்பொழுது தான் விருஷாலி கூறியதாக அப்பத்தா கூறிய வார்த்தையை மீண்டும் ஒட்டி பார்த்தான்.
‘மச்சானை கட்டிக்க என்னிடம் ஏன் ஆச்சி கேட்கற. எனக்குப் பெரிய மச்சானை ரொம்பப் பிடிக்கும். எப்பவும் யாரையும் அதட்டி ஒரு வார்த்தை பேசாமாட்டார். சாப்டா பேசுவார் நான் இதுக்கு முன்ன மச்சானை பார்த்திருக்கேன்’ என்ற சொல்லில் நான் ஏழுவருஷமா இங்க வரலை. இவ என்னை எப்படிப் பார்த்திருப்பா?’ என்று யோசித்தவன் முன் சுகிர்தன் அவனின் போனில் தமையனை படம் பிடித்துக் கொண்டிருந்தான்.
ஒரு வேளை தம்பியை… என்றவன் மனம் அதற்கு மேல் யோசிக்கவில்லை. விஷாகன் முகம் வெளுத்துவிட்டது. சட்டென வீட்டின் பக்கவாட்டு ஜன்னலை கவனிக்க, தான் காணவும் உதட்டில் புன்னகையோடு விருஷாலி மறைந்து கொள்வதைக் கவனித்தான்.
எதற்கும் தெளிவுப்படுத்திடும் நோக்கத்தில் சந்தர்பத்திற்காகக் காத்திருந்தான். மற்றவர்களோ சாப்பிட அமர்ந்து கை நனைக்கவே ஆரம்பித்தார்கள். வெளியே சாமினார் போட்டுக் கறிச்சோற்றை வாழையிலையில் விருஷாலி அண்ணன் விவேக் பரிமாறினான்.
சந்தர்ப்பம் வராது… தானே சந்தர்ப்பத்தை உருவாக்கும் முடிவோடு செருமலோடு எழுந்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Achooo enna thidirnu ipdi oru doubt ivanuku….. 🙄neenga heroine ab romna maraichu mariachu vaikiringa sis epo tha pesa vida poringa vishagan kooda senthu engalukum heart beat increase aaguthu….
Dei vichu payalae maanathavaangatha da…. Porumaiya iru da vitta ipovae kalyanam panni kutitu poiduvan pola😂….
Dei vichu payalae maanathavaangatha da…. Iru da vitta ipovae kalyanam panni kutitu poiduvan pola😂….
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍
Super narration sis. Intresting. Vishakan intresting loveable man.
Super super epi 😍😍😍😍😍
Vishagan yen sudden ah unnaku ipadi oru doubt ithu varaikkum nalla than ah pochi
Vishaka uns pathutu vetka patu oliyirale ava tha apram ethuku ketkanum avlo doubt ah unaku po un appatha kittaye poi ketu thelivayidu
Superb epi interesting
Intresting kadaisila iptium irukkumo🤔🤔🤔 ena da vishaka unakku vantha sothanai…. Spr going waiting for nxt epi😍😍😍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
expecting the twist…………….
Super super sago
Very interesting
அட இவனென்ன இந்த பற பறக்குறான்