Skip to content
Home » நீயென் காதலாயிரு-11

நீயென் காதலாயிரு-11

அத்தியாயம்-11

     இந்திரஜிதின் பார்வைக்கு பதில் சொல்லாமல் விடுவிக்க போவதில்லையென்ற நிலையில் சந்தோஷை விடுவிக்க கூற சொன்னாள்.

   அவனோ “என்னை தான் இனி உன் லைப்ல தலையிடாதனு சொல்லிட்டியே. நான் என் பிரெண்டை தடுக்க மாட்டேன்.
   அவனுக்கு நீயே பதில் சொல்லு. அவன் உன்னை பார்க்க தான் சந்திரா கல்யாணத்துக்கே வந்தான்.”  என்று அதிர்ச்சி தரவும் ப்ரியதர்ஷினியோ கூடுதல் திகைப்போடு இந்தரை ஏறிட்டாள்.

    சந்தோஷே தொடர்ந்து காரணம் உரைத்தான் “நான் உன்னை பத்தி பேசிட்டே இருக்கவும், ‘அதென்னடா உன் லவ்வர் பத்தி பேசறப்ப எல்லாம் ப்ரியா ப்ரியா ப்ரியானு ஜெபிக்கற யாரு அது?’னு கேட்டான். உன் போட்டோ காட்டினேன்.

   அதுக்காக எல்லாம் காலேஜ் படிக்கறப்ப தேடி வரலை. அவனுக்கு மேரேஜ் பார்க்கறப்ப யாரு மாதிரி பொண்ணு பார்க்கணும்னு அவங்க அம்மா கேட்டதும் உன் முகம் தான் பளிச்சுனு நினைவு வந்துச்சாம். என்னிடம் அவளை இரண்டு தடவை போட்டோல பார்த்ததும் ஏன்டா அந்த செகண்ட் உன் அத்தை பொண்ணு முகம் நினைவு வரணும்னு கேட்டான்.

  எனக்கு என்ன தெரியும்?னு கிண்டலா கடந்துட்டு பத்திரிக்கை வைக்கிறப்ப, ‘உன் பெரிய தங்கை சந்திரா கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவேன்னு சொன்னான்.
   காரணம் உன்னை பார்க்கற ஆவல். அதனால தான் வந்ததும் வராததும் உன்னை வம்பிழுக்க பார்த்தான்.

  உன்னோட பேச பழக ட்ரை பண்ணினான்.
   நீ அவனிடம் முகம் திருப்பிட்டு நம்ம சொந்தங்களை வெல்கம் பண்ணியதும் அவன் உன்னையே தான் பாலோவ் பண்ணிட்டு இருந்தான்.” என்று இந்திரஜித் காதலிப்பதற்காகவே வந்ததை எடுத்துரைத்தான்.

   அதனை கேட்ட ப்ரியதர்ஷினிக்கு சுறுசுறுவென்ற கோபம் மூண்டது.

   இதுவரை கையை உதறி உருவ முயன்றவள், “அசிங்கமாயில்லை சந்தோஷ். அவன் என்னை விரும்ப தான் இங்க வந்ததேனு சொல்லற, இதே சந்தியாவை இந்திரஜித் விரும்ப வந்திருந்தா இப்படியா சந்தோஷப்பட்டு வேடிக்கை பார்ப்ப? நான் என்றதும் கேவலமா போச்சா? என்னை இவனுக்கு கோர்த்துவிடற” என்று கத்தினாள்.

   “சே அப்படியில்லை ப்ரியா. அவனும் நானும் பிரெண்ட்ஸ். நீயும் நானும் பிரெண்ட்ஸ். அதனால உங்க கூட்டணி நல்லாயிருக்கும்னு நினைச்சேன்.” என்று மறுத்து பேச, ப்ரிய்வோ கோபமாய் நின்றாள்.

   இதில் இந்திரஜித்தோ “ஏய் இதே நல்லா பேசி பழகிட்டு இருக்கறப்ப, சந்தோஷ் நீயா எனக்கொரு  மாப்பிள்ளையை செலக்ட் பண்ணுடானு சொல்லி அவன் ‘என் பிரெண்ட் இந்திரஜித் இருக்கான் ரொம்ப நல்லவன்’னு உங்க வீட்ல பேசினா, நீயும் உங்க வீட்லயும் யோசித்திருக்க மாட்டிங்க? அப்படி தான் சந்தோஷ் நினைச்சது. இந்த கோர்த்துவிடற வேலையில்லை.” என்று நண்பனுக்காக வக்காளத்து வாங்கினான் இந்திரஜித். அப்பொழுதும் ப்ரியா கையை விடவில்லை.

  “நீ பேசாத. என்னையே பாலோவ் பண்ணிட்டு இருந்ததால தான் நான் நகையை எடுக்கலைனு உனக்கு அக்கியூரெண்டா தெரிந்திருக்கு. இல்லைனா நீயும் அங்கிருந்தவங்களை போல திருடினு நினைச்சி கை கழுவியிருப்ப. பட் நான் திருடலைனு தெரியவும் என் கையை பிடிச்சிட்டு உயிரை வாங்கற. விடுடா கையை” என்று மரியாதையை காற்றில் பறக்க விட்டு திட்டினாள்.

  அதற்குள் துணி கடை உரிமையாளர் அன்வர் வந்துவிட்டார்.

   “என்னம்மா என்னாச்சு. என்ன தம்பி உங்க சொந்தக்கார பொண்ணு என்பதால தான் பேச அனுமதிச்சது.
   இப்படி அந்த தம்பி கையை பிடிக்க விட்டு வேடிக்கை பார்க்கறிங்க. தம்பி கையை விடுங்க, கையை விடுங்கனு சொல்லறேன்ல” என்று அதட்டவும் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்திரஜித் கையை விடுவித்தான்.

  அடுத்த நிமிடம் ப்ரியதர்ஷினி கைகள் வலியில் இருந்து முகம் சுணங்கி கையை நீவினாள். அன்வர் பாயை பார்த்து ஒரு நன்றியை விழியால் உரைத்திடவும் மறக்கவில்லை.

   “சார் எனக்கு ஒரு விஷயத்தை க்ளியர் பண்ண சொல்லுங்க. நகையை இவ மேல பழிச்சுமத்தியது யாருனு அவளுக்கு தெரியும். ஆனா சொல்லமாட்டேங்கிறா?” என்று சந்தோஷ் கூறவும், அன்வர் ப்ரியாவை பார்க்க, “யாருனு தெரிந்து என்ன பண்ணப்போறான் சார். எனக்கு கூடயிருக்க வேண்டிய தருணம் என் பிரெண்ட் சந்தோஷ் வாயை மூடிட்டான். இப்ப வந்து என்ன செய்வானாம். அவனை போக சொல்லிடுங்க சார்” என்று கூறிவிட்டு அன்வர் பின்னால் நின்றாள்.

   “அப்ப பிரச்சனை வேண்டாம்னு தவிர்க்க பார்த்தேன் பாய். இவ மேல நான் பழிசுமத்தினேனா?” என்று சந்தோஷ் தன் தோழி, அன்று அவள் பக்கமில்லையென்று தன்னை தவறாக எண்ணிவிட்டாலே என்று வருந்தினான். 

    “யா அல்லா நடந்ததை பேசி என்ன மாறப்போகுது. நடக்கப்போற விஷயத்தை பாருங்க. அவ இனி நல்லபடியா வேலை பார்த்து வாழ்ந்தா போதும். நீங்க கிளம்புங்க” என்று முடிக்க பார்த்தார்.

  இதுவரை தன்னவளை முறைத்து பார்வையாலே அனலை தெளித்தவன், “நடந்ததை பேச வேண்டாம் சார். நடக்கபோறதுக்கு பதில் சொல்ல சொல்லுங்க. அவ என்னை விரும்பறாளா இல்லையானு.” என்று தேங்காய் உடைப்பது போல இந்திரஜித் கேட்டதும் “சார் நான் கடைக்கு போறேன். யாருனு தெரியாதவனிடம் தேவையில்லாத பதில் சொல்ல எனக்கு அவசியமில்லை” என்று கிளம்பினாள்.

    “தர்ஷி ஓடாத. பதில் சொல்லிட்டு போ.” என்ற இந்தரின் குரல் அவளை இம்மியும் அசைக்கவில்லை.

  பிற்பாதி நேரங்கள் எப்படி கழிந்தது என்று இறைவனுக்கே வெளிச்சம்.

  “இரவு அன்வர் பாயே தங்கிருக்கும் இடம் வரை வந்து விட்டு சென்றார்.” சந்தோஷோ அன்றிரவு  இந்திரஜித் வீட்டில் தங்கினான்.

   இருவரும் உம்மென்று ஒருவர் முகத்தை ஒருவர் தரிசிக்க மோகன் நுழைந்தார்.

   “மருமகளை பார்த்திங்களா? என்ன சொன்னா?” என்று கேட்டவரிடம், “அப்பா ஆல்ரெடி அம்மாவிடம் சொல்லிட்டேன். நீங்க வேற இம்சை பண்ணாதிங்க. அவளுக்கு நான் யாருனே தெரியாதவன்னு சிலிர்த்துட்டு போறா” என்று கடுகடுத்தான்.
  வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மோகனோ, “தம்பி அப்பா சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கா. அவளும் உன்னை போலவே ஐடி முடிச்சிருக்கா. இப்ப அவளுக்கு வரன் தேடறாங்க. உனக்கு ஓகேனா சொல்லு. நாளைக்கே பொண்ணு பார்க்க போவோம்.
   உனக்குன்னு ஒருத்தியை நீயேன் தேடற நாங்களே பார்த்துக்கறோம். நீ ஏன் கஷ்டப்படற? அம்மா சொந்தத்துல கூட அவளோட ஒன்னுவிட்ட தம்பி பொண்ணு…” என்று பேசிக்கொண்டு செல்ல, “அப்பா நிறுத்தறிங்களா? எனக்கு லாஸ்ட் டைம் என்ன சொன்னிங்க. நீயா எங்களுக்கு மருமகளை பாருடானு சுதந்திரம் தந்திங்க. நானும் மேட்ரிமோனி முழுக்க அலசிட்டேன். என்னால தர்ஷியை தவிர யாரையும் யோசிக்க முடியலை. கண்ணை மூடினா அவ மட்டும் தான் நினைப்புல வர்றா.
    அதனால தான் சந்தோஷிடம் என் மனசை திறந்து பேசியது.

  அவனும் ப்ரியாவை நான் தான் மேரேஜ் செய்யறதா அம்மா அப்பா கனவு காணறாங்க. அவங்களோட ஆசை இடிந்துப்போகும்னு புலம்பியவனுக்கு, நான் ப்ரியதர்ஷினியை மேரேஜ் பண்ண மனபூர்வமா ஓகே சொன்னதும் தான் அவனும் எப்படியும் ப்ரியாவுக்கு வேறயொருத்தனை அத்தை பார்க்கறதுக்கு நானே உனக்கு கட்டிவைக்க பேசறேன்னு சொன்னான்.  இப்ப இவங்களுக்குள் போராட்டம் என்றால் என் காதல் அந்தரத்துல உலாத்தணுமா?

   எனக்கு தர்ஷு வேணும். அவளா நானானு பார்த்துக்கறேன். நான் யாரை கல்யாணம் பண்ணறேன்னு நான் முடிவுப் பண்ணறேன். இனி நீங்க வேற பொண்ணை தேடாதிங்க. அங்கவை வேணுமா? சங்கவை வேணுமானு வர்றார்” என்று முடிவாக பேசி போர்வையில் நீட்டி நிமிரவும் சந்தோஷை கவனித்தார் மோகன்.

   இந்திரஜித் தீவிரமா மாறிவிட்டான் என்பது சந்தோஷிற்கு புரிந்தது.

   இதென்ன மாற்றமோ? தாய் தந்தை இருவருமே சொந்த மகளாக மருமகளாக ப்ரியதர்ஷினியை பார்த்தார்கள்.

சந்தோஷோ சந்தியா, சந்திரா என்ற இருதங்கைகளை போல ப்ரியதர்ஷினியையும் சிறுவயதில் பார்த்துவிட்டான்.

‌ தங்கை என்று பொய் கூறமாட்டான். அதே கணம் காதல், திருமணம் என்ற இத்யாதி கோட்டிலும் அவளை வைத்து யோசிக்கவும் பதறியது.

   தோழி என்ற ஸ்தானத்தில் தான் பாந்தமாய் பொருந்திப்போனாள்.

   தன்னை சுற்றி விலாசினி அண்ணன் கண்ணனை தவிர்த்து அனைவருமே பெண்கள். இதில் விலாசினி முதலிலிருந்தே எட்டி பழகிடுவாள். யமுனா அண்ணி தன்னை விட பெரியவர். அதனால் மதிப்புண்டு.
  தங்கைகள் இருவரை விட வாய் துடுக்கோடு பேசுவது ப்ரியா என்பதால், எந்நேரமும் ப்ரியாவோடு சேர்ந்து மற்றவர்களை ஓட்டுவான். எங்கேனும் செல்வதாகட்டும்  கண்ணன் ஊரிலில் உள்ள அவன் நண்பர்களோடு செல்ல, கல்லூரியை சென்னையில் முடித்த சந்தோஷிற்கு கண்ணனின் நட்பு குறைவாய் கிடைத்தது.

ப்ரியா மட்டுமே எங்கேனும் முந்தி ஓடி அழைத்து செல்வாள்

  பானுமதிக்கும் சிங்கமுத்துவிற்கும் கூட ‘மருமகள் தானே ஒன்றாக செல்லட்டும்’ என்று மகிழ்வார்கள்.

   ஆனால் தங்கையாகவும் காதலியாகவும் பார்க்க இயலாதவளிடம் தோழமையாக பேசுவதை ப்ரியாவும் உணர்ந்தாள்.

    அதோடு சந்தோஷ் விலாசினியை குறுகுறுவென பார்க்க, காதலிக்கின்றானென்ற வரை அறிந்தவள் ப்ரியா.

    மருமகளாக அந்த வீட்டுக்கு போகாவிட்டாலும் அன்பு அளவில்லாமல் செலுத்த, பள்ளத்தை நோக்கி பாயும் நதியாக சென்றவளை தான் பழிச்சுமத்தியது காலத்தின் சதி.
 
   சந்தோஷிற்கு இருதலை கொள்ளி நிலை. தோழி ப்ரியாவா? காதலி விலாசினியா? இருவரையும் அவன் சமமாக மதிக்கின்றான். ப்ரியாவிடம் அன்பு செலுத்துகின்றான்  விலாசினியை காதலிக்கின்றான்.

தன் மிச்ச வாழ்வு விலாசினி என்று எண்ணுபவனுக்கு தன் தோழியை பழிசுமத்தி விரட்டியது காதலியாக இருந்தால் மிச்ச வாழ்வு நன்றாக அமையுமா? அந்த பெரிய கேள்வியே குடைந்துக்கொண்டிருக்க, இந்திரஜித் வேறு ப்ரியாவை இம்சித்து காதலிப்பது நேரிலேயே பார்த்தாயிற்று.

   இனி ப்ரியதர்ஷினியை தொல்லை செய்யாதே என்று வேண்டுக்கோல் வைத்தாலும் கேட்பானா? என்பது ஐயமே.

   எப்படியாவது மன்னிப்பு கேட்டு தன் தோழியாக எப்பவும் போல பேசுவாளென்று வந்தால், அன்று பேசாமல் அமைதி காத்து அவளுக்கு வலியை ஏற்படுத்தியதால், அவளோ இன்று தன்னை ஒதுக்குகின்றாள்.

   எப்படியாவது இந்திரஜித் காதலை ஏற்றுவிட்டால் அவன் புரியவைப்பானென்று ஒரு மனம் அடித்து கூறியது.

   இந்திரஜித் எந்த விஷயத்திலும் தோற்கும் ரகமல்ல. காதலில் மட்டும் தோற்றிடுவானா? என்ன ப்ரியதர்ஷினியை எளிதில் காதல் வலைக்குள் இழுக்க முடியாது. எல்லாம் முடிந்து எப்பொழுது பதில் கிடைக்குமோ என்று சிந்தித்தவனுக்கு அவனையறியாது நித்திராதேவி அணைத்து கொண்டாள்.

   இங்கு கை தடத்திற்கு மருந்திட்டாள் ப்ரியதர்ஷினி. “ப்ப்பா பார்க்க தான் அழகனா இருக்கான். கையை பிடிக்கிறதுல எத்தனை அழுத்தம் சரியான அரக்கன். லவ் பண்ணுனு டார்ச்சர் பண்ணறான்.

     அவனுக்கு சம்மதம் சொன்னால் தான் என்ன? என்ற ரீதியில் மூளை யோசிக்க, மனமோ ‘தேவையில்லாத ஆணி சந்தோஷை வளைக்க முடியலைனு இவனை பிடிச்சிக்கிட்டதா யாராவது சொல்வாங்க. ஏன் அத்தையே சொல்வாங்க’ என்றதும் இதயம் துவண்டது.

   ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. தன் வாழ்வு தலைகீழாக மாறிவிட்டது. பழியை யார் தூக்கி போட்டாலும் உறவுகள் உடைந்தப்பின் எதையும் மாற்றயியலாதே என்று அடிநெஞ்சம் கதறியது.
   
  இப்படி பழியை தூக்கி போட்டு அவப்பெயரை கொடுத்து தன்னை அந்த குடுபத்தோடு ஒதுக்க வேண்டுமென்று நினைப்பதற்கு உண்மையை உரைத்து தன்னிடம் வெளிப்படுத்தியிருந்தால் கூட ப்ரியதர்ஷினி புன்னகை முகமாக அக்குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பாள்.

    எவ்வித பாதிப்பின்றி அனைத்தும் சுமூகமாக கூட கடந்திருப்பாள். சந்திரா திருமணத்தை போல கலந்துக் கொள்ளாவிட்டாலும், அடுத்து சந்தோஷ்-விலாசினி திருமணத்தில், அக்கா யமுனாவை போல வந்து விட்டு உடனே சென்றிருப்பாள்.

அடுத்து கண்ணன் சந்தியா திருமணத்திற்கு எப்படியும் எங்கயாவது இதே போல வேலைக்கு  ஊர்விட்டு வந்து வேலை பார்த்து திருமணத்திற்கு விடுமுறை கிடைக்கவில்லையென்று பொய் பேசி, தவிர்த்து, இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் அந்த வீட்டு அன்பை துண்டித்திருப்பாள்.

    நொடியில் வாலறுந்த பல்லியாக துண்டித்து துடித்திருக்க மாட்டோமென விழிநீர் வெம்மை கன்னத்தில் சுட்டது.
 
   -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

1 thought on “நீயென் காதலாயிரு-11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *