Skip to content
Home » நீயென் காதலாயிரு-13

நீயென் காதலாயிரு-13

அத்தியாயம்-13

  இந்திரஜித் நகத்தை கடித்தபடி அன்வர் ரெடிமேட்ஸ் கடைக்கு வெளியே நின்றிருந்தான்.

    தன் எண்ணத்தில், கனவில், நனவில் என்று நித்தம் நித்தம் ஆட்டிப்படைக்கும் ப்ரியதர்ஷினியை காணவில்லை.
  
   அலுவலகம் செல்லும் நேரமோ நெருங்கியது.

    இதற்கு மேல் அவளை தரிசித்து, அதன்பின் தன் அலுவலகத்திற்கு சென்றால், தனது வேலை கேள்விக்குறியாக மாறிடும் என்பதால் ப்ரியாவின் அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து விட்டு, ப்ளூ டூத்தை காதில் வைத்து பைக்கில் பயணித்தான்.

   ‘தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை. மாமானை அள்ளி நீ தாவனி போட்டுக்கோ மச்சினி யாருமில்லை.’ என்று லீயோ படப்பாடல் அதில் ஒலித்தது. பசும்பொன் படப்பாடலென்றதை தான் லீயோ ரீமேக் செய்து பாட்டின் படத்தையே மாற்றிவிட்டதே.

   இங்கு ஒருத்தன் தன்னையே மாற்றிக்கொண்டிருப்பதை கண்டு சலித்தபடி போனை கருப்பி(blocked) விடாமல், ‘முதல் நாள் வேலைக்கு வந்ததும் போனா?’ என்று மற்றவர் பார்வைக்கு ஆளாக கூடுமென்று இந்தர் அழைப்பை துண்டிக்காமல், வேலைக்கு செல்லும் இடம் வரும் முன் பேசிடும் முடிவோடு தொடர்பை ஏற்றாள்.

   “என்ன?” என்று சிடுசிடுப்பாய் கேட்டாள் தர்ஷினி.

   “என்னன்னா? எங்கயிருக்க?” என்றவன் குரல் அநியாயத்துக்கு தவிப்பாய் இருந்தது.

   ப்ரியதர்ஷினிக்குள் இந்தரின் தவிப்பான குரல் தேனாய் இனித்தது.

   தனக்காக ஒருவன் தவம் கிடப்பது. ஆனால் அடுத்த நொடி ‘அவன் சந்தோஷ் பிரெண்ட் மனசுல வச்சிட்டு பேசு.’ என்று நடுமண்டையில் விதி எள்ளியது.

   “எதுக்கு என்னை தேடற? சென்னையில ஆயிரம் பொண்ணுங்க இருக்காங்க. உனக்கு நான் தான் கிடைச்சேனா? எவப்பின்னாடியாவது போக வேண்டியது தானே. எதுக்கு என்னை துரத்தற?” என்று திட்டவும், ப்ளூ டூத்தில் அவளது இன்னிசை கானம் கேட்டவன், “மேம்  இந்த சென்னையில ஆயிரம் என்ன, லட்சம் பேர் இருக்காங்க. அதுவும் சுண்டிவிட்டா தக்காளி கலருல அழகா, ஸ்டக்சரா, மாடலா நிறைய பொண்ணுங்க இருக்காங்க. பட் நான் எப்படி அவங்க பின்னாடி போறது?” என்று இடைவெளியிட்டான்.

   ப்ரியாவோ உதடுவிரிய, சிறு வெட்கம் கொண்டவள் அடுத்த பேச்சில் பல்லை கடித்தாள். ஆம் இந்தரோ “எத்தனையோ பேர் இருந்தாலும் நான் ஏன் உன் பின்னால வர்றேன்னா, என் டிபன் பாக்ஸ் உன்கிட்ட தான் இருக்கு. பூரி சாப்பிட்டியே டிபன் பாக்ஸ் திருப்பி கொடுத்தியா?” என்றதும் உதட்டை பல்லால் வலிக்காமல் கடித்து, விடுவித்து சத்தமின்றி சிரித்தாள்.

    “நான் பிறந்து எனக்கு பெயர் வைக்கிறப்ப, ரிட்டர்ன் கிப்டா இந்த டிபன் பாக்ஸை தந்தாங்களாம். இதுல ஸ்பெஷலே எங்கப்பா என் பெயர் போட்டு வச்சிருப்பார்.” என்றதும் பேருந்தில் பயணித்தவள் கைப்பையை துழாவி டிபன் பாக்ஸை எடுத்தாள்.
   அதில் ‘இந்திரஜித்’ என்று அழகாக தமிழில் எழுதியிருந்தது. அதனை வருடினாள். “சின்னதுல அதுல தான் லஞ்ச் எடுத்துட்டு போவேன். சோ எனக்கு அது மெமரிஸுக்கு வேண்டும். எப்ப தருவ?” என்றான்.

  அவன் பேச்சு தன்னை உலுக்க, “நேர்ல பார்த்தா கொடுத்துடறேன். இரண்டு நாள் கொடுக்க எடுத்து வச்சேன். உன்னை பார்த்ததும் மறந்துட்டேன். அந்தளவு இம்சை நீ.” என்றதும், “சரி நான் இம்சை பிடிச்சவனா இருந்துக்கறேன். எங்கயிருக்க?” என்றான்.

    பஸ்ஸில் இறங்குமிடம் கூறி கண்டெக்டர் கத்தவும், “தேங்க்ஸ் அண்ணா” என்றாள்.

  “இப்ப எதுக்கு அங்க போற?” என்ற இந்தரின் கேள்விக்கு “உன்னால தான். ஒழுங்கா வேலை பார்த்த இடத்துல நிம்மதியா இருந்தேன். அடிக்கடி வந்து லவ் பண்ணறதா இம்சை கூட்டவும் முதலாளி வேலை விட்டு துரத்திட்டார். இப்ப வேற வேலைக்கு சேர்ந்திருக்கேன் போதுமா?” என்றதும் இந்தருக்கு கவலை தாக்கியது.
 
   “ஹே.. நிஜமாவா?” என்றவன் குரல் ஸ்ருதி குறைந்திருந்தது. “பின்ன வயசு பொண்ணு பின்னாடி டெய்லி ஒருத்தன் வந்து கடைமுன்ன நின்றா கடை படுத்துக்காது.” என்று திட்டவும், “தர்ஷு ஐ அம் சாரி. நீ என்ன வேலைக்கு போற? என்னிடம் உன் ரெஷ்யூம் கொடு. நான் பெட்டரா ஜாப் தேடி தர்றேன்” என்று அவளுக்காக வேலையில் உதவ முன் வந்தான்.
 
   ப்ரியதர்ஷினியோ போனை கீழே வைத்து, “புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கேன். அன்வர் பாய் அனுப்பினார்” என்று லெட்டரை காட்டவும், செக்கியூரிட்டியோ “நீ தான் புதுசா வந்த கணக்கெழுதற பொண்ணா. உள்ளப்போம்மா வலது பக்கம் படிக்கட்டு மூனாவது மாடிம்மா” என்றதும் நன்றியுரைத்தாள். 

   “ஓ அந்த பாய் வேற வேலை வாங்கி தந்தாரா? நல்லது தான். படிச்சிட்டு சேல்ஸ் கேர்ள் எதுக்கு? மச் பெட்டர். நானே உன் ரெஸ்யூமை கேட்க நினைச்சேன். தேங்காட் அந்த பாய் ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கார்.

  சரி ஆபிஸ் நேம் என்ன?” என்று கேட்டதற்கு, “ம்ம் உங்க தாத்தா நேம், போனை வைடா. முதல் நாள் போனிலே பேசிட்டு இருக்க முடியாது. இங்க வந்தப்பிறகு கால் பண்ணுவனு தான் உடனே எடுத்தேன்.  தயவு செய்து தொந்தரவு பண்ணாத. குட்பை” என்று அணைத்திடும் வேகத்தில் “ஏ.. ஆல் தி பெஸ்ட்.’ என்று கத்தவும் ப்ரியாவோ மென்புன்னகையோடு அணைத்தாள்.

   படியேறி மேலே வந்தவளுக்கு அலுவலகம் கண்டதும் கண்ணை சுழற்றியது.
  ஒரு ரெடிமேட் கடை வைத்திருக்கும் பாயுக்கு இத்தனை செல்வாக்கா?
நல்ல வேலை கிடைத்த திருப்தியில் அங்கிருந்த இறைவன் வெங்கடசாலபதியை வணங்கினாள்.

    அதன் பின் தன் சர்டிபிகேட் அனைத்தும் மேலயிகாரியிடம், நீட்டினாள்.
வேலைக்கு செல்லும் போது அதையெல்லாம் நகல் எடுத்து வரக்கூறியிருந்தனர்.

  அதன் பின் சிலதை வாங்கி வைத்து கொண்டு பணி செய்யும் இடம் காட்டி, அருகேயிருக்கும் அனைவரிடமும் ஒரு அறிமுகம் செய்தும் வைத்தனர். ப்ரியாவும் வணக்கம் வைத்து முடித்தாள்.

     பெரும்பாலும் நடுத்தர வயதுக்கொண்ட ஆட்களாக இருக்க, சில பெண்கள் மட்டும் இவள் வயதிற்கு கூடுதலாக இருந்தனர்.

   அங்கிருந்தவரில் ஒருவர் வந்து அன்றாட பணியின் நுணுக்கத்தை தாமாக சொல்லிக் கொடுத்தார்.
  
   விவரமாக கேட்டு விட்டு நன்றி தெரிவித்தாள் ப்ரியா.
 
  “தேங்க்ஸ் எல்லாம் எதுக்கும்மா. பயப்படாம வேலையை பாரு. இது நம்ம ஏரியா. ஏதாவது டவுட்னா பிரச்சனை என்றால் ‘மோகன்’ அப்படின்னு ஒரு குரல் கொடு ஓடிவந்துடுவேன்.” என்றதும் ப்ரியதர்ஷினியோ வாய் விட்டு புன்னகைத்தாள்.

   இந்த மோகன் இந்திரஜித்தின் தந்தை என்று தனியாக விளக்கவுரை அறிவிக்க வேண்டியதில்லை.
  எப்படியும் சங்கிலிதொடராக உலகத்தில் மனிதர்களை பிணைத்திடுகிறது இந்த விதி. ஒரு கெட்டது நடந்தால் அதில் நல்லதும் பிறக்கும். விதியின் ஆட்டம் கோரமாக இருந்தாலும் முடிவில் நல்லதும் அதில் கலந்து கட்டி செல்வது தான் நியதி.

      “ரொம்ப தமாஸா பேசறிங்க சார்.” என்று நட்பை வளர்த்தாள் ப்ரியா.

   ஏற்கனவே மைந்தனின் போனில் கேலரி முழுக்க, ப்ரியா புகைப்படமாக பார்த்ததால் மோகனும் மருமகளிடம் தான் யாரென்ற அறிமுகத்தை காட்டிக்கொள்ளாது பழகினார்.

   மதியம் உணவருந்தும் நேரம் பக்கத்திலிருக்கும் மதுவதி என்ற பெண்ணோடு சாப்பிடும் இடம் நோக்கி நகர, மோகன் கூடவே இணைந்துக்கொண்டார்.

  “முதல் நாள் எப்படிப் போச்சு.” என்று கேட்டதும் “மோகன் சார் நீங்களா? சட்டுனு பின்னால் குரல் என்றதும் யாரோனு பயந்துட்டேன். உங்க வாய்ஸ்.. உங்க வாய்ஸ் இதுக்கு முன்ன கேட்டது போலயிருக்கு.” என்றதும் மோகன் பூடகமாய் சிரித்தார்.
  
    சில நேரம் கஷ்டப்பட்டு மைந்தனின் குரலில் பேச முயல்வார். இந்திரஜித்தின் சிறு வயது முதல், அவனின் கியூட்டான பேச்சை அப்படியே சித்ராவிடம் பேசி காட்டுவார். ‘நம்ம பையன் எப்படி பேசினான் தெரியுமா?’ என்று அதை செய்து காட்டும் திறமை. இன்றும் ப்ரியதர்ஷினியை லேசாய் அதிர வைக்க, இந்திரஜித்தின் குரலில் முயன்றார்.

  ப்ரிய்விற்கு இந்திரஜித்தே இங்கும் வந்துவிட்டானோ என்ற ஆர்வத்தில் தான் திரும்பி திரும்பி பார்த்தாள்.

“மோகன் சார் உங்க குரல் மட்டும் இல்லை. நீங்களே ஏற்கனவே பழகிய மனிதர் போல தான் எனக்கு தெரியறிங்க. இதுக்கு முன்ன எங்கயாவது சந்தித்தது கூட இல்லை. ஆனா நல்லா தெரிந்தவர் மாதிரி மனசுக்கு நெருக்கமா இருக்கு. இங்க புது மனிதர்களா இருப்பாங்கன்னு பயந்தேன். உங்களை பார்க்கறப்ப அப்படி பீல் பண்ண முடியலை.
  அன்வர் பாய் உங்களுக்கு பிரெண்டா? என்னை பத்தி சொல்லியிருக்காரா?” என்று குதுகல குரலில் உணவருந்தும் இடத்தில் யாவரும் அமர, அவர்களும் அருகருகே அமர்ந்திட பேசினார்கள்.

   ‘சேசே எந்த அன்வர் பாயும் பிரெண்ட் இல்லை. உன்னோட பாய் பிரெண்ட் என்னோட சன்.
   என் மகன் தான் உன் போட்டோ காட்டி உன்னை காதலிக்கறதா சொன்னான்.’ என்று கூற ஆசை தான் அவருக்கு.

   ஆனால் ஒரு சக மனிதனாக பழகி தன் மைந்தனை பற்றி என்ன கண்ணோட்டத்தில் இருக்கின்றாளென்று அறிய ஆர்வமானார்.
   அதோடு யார் பழி போட்டதென்று, இவளுக்கு தெரிந்தே வாயை மூடிக்கொள்வதாக இந்திரஜித் புலம்புவதை கேட்டதால், நல்ல நட்பாகி இவளிடம் இவரே கேட்கும் எண்ணத்தில் மைந்தனுக்கு மேலாக திட்டங்கள் தீட்டினார்.
  
   “என்னம்மா டிபன் பாக்ஸில் இந்திரஜித் நேம் இருக்கு? யாரு இந்திரஜித்” என்று அறியாதவர் போல கேட்க, ப்ரியாவின் வதனத்தில் சிறு வெட்கம் முறுவல் ஓடியொளிந்து திரிய, “என்னோடது சார். இது என் பிரெண்ட் பெயர்” என்றவள் கடையில் விற்கும் ப்ரிஞ்ச் சாதம் வாங்கியிருந்தாள்.

   மோகனோடும் கூட பணிப்புரியும் மதுமதியும் ஒரே நாளில் தோழமையோடு பழக, அந்த நாள் ப்ரியாவை பொறுத்தவரை இனிமையான நாளாக சென்றது. மாலை ஐந்து மணிக்கே அலுவலக நேரம் முடிவடைய, ப்ரியதர்ஷினி கிளம்பினாள்.

   மோகனோ “ஹாஸ்டல்ல போய் என்ன பண்ணுவம்மா? பொழுது போக்கு என்ன? போரடிக்குமா?” என்று வரிசையாக கேட்டதற்கு “இல்லை சார் எனக்கு க்விலிங்ல ஹாண்ட்மேட் ஹியரிங் செய்ய தெரியும். அதனால க்விலிங் ஹியரிங் செய்து அதை எனக்கு தெரிந்த ஒரு பாய் கடையில ஒரு சின்ன பாக்ஸ்ல சேல்ஸ்க்கு விற்க செய்துட்டு இருப்பேன். தனியா இருக்க போரடிக்காது. அதோட எனக்கு பிடிச்ச கிராப்ட். சோ டைம் நல்லா போகும்.” என்று கூறவும் ப்ரியதர்ஷினியை கண்டு ஆச்சரியப்பட்டார்.
  
   “சோ பிஸினஸ்வுமனா மாறிடுவிங்க” என்று கேட்டதும் “சேசே அப்படியில்லை சார், நேரம் போகணும். அதோட உபயோகமா போகணும். சின்ன கைதிறமை வேலைகள்” என்று கூறவும் முதல் நாளே ஒரே ஏரியா என்று கூறி தன் வண்டியில் மருமகளை அழைக்க மோகனுக்கு தயக்கம் பிறந்தது.

  என்ன இந்த ஆள் ஓவரா அட்வான்டேஜ் எடுக்கின்றாரென ப்ரியா நினைத்தால்…

  அதனால் ஒரேயிடமாக இவளது ஏரியா தாண்டி போனாலும் அதனை குறிப்பிடாமல் கிளம்பினார்.

    பாதி தூரம் சென்றதும் ‘பச் மோகன் சார் என்னை பற்றி விசாரித்தார். நான் அவரை பத்தி ஒன்னும் கேட்கலை. அட்லீஸ்ட் எங்கயிருக்கார் என்றாவது கேட்டிருக்கணும். நாளைக்கு கேட்டுப்போம்’ என்று நினைக்கும் நேரம் இந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. பஸ் ஏறியதும் அதனை ஏற்று, “சொல்லு” என்று வேண்டாவெறுப்பாய் கேட்பது போல நடித்தாள்.

   “முதல் நாள் எப்படி போச்சு?” என்று மோகன் கேட்ட அதே அச்சு பிசாகாத வார்த்தை. “குட்” என்றாள்.

   “எனக்கு குட்டா போகலை. எங்கயிருக்க உன்னை சந்திக்கணும்.” என்றான்.

  ஏன் எதற்கு என்ற கேள்விக்குமுன் “என் டிபன் பாக்ஸை அம்மா கேட்டுட்டே இருக்காங்க.” என்று அவனும் நல்ல நடிகனாக பேச்சில்  சலித்தான்.
  
   ‘வேற டிபன் பாக்ஸே இல்லையா. இடியட் என் கூட அதுவாது இருக்கட்டுமே.’ என்று மனதில் கருவியவள், “ஹாஸ்டல்ல இருக்கு.” என்று கூறினாள்.

   நான்கு ஸ்டாப் கொண்ட பேருந்து நிறுத்தம் என்பதால் இறங்கி நடக்க, பைக்கில் அருகே வந்து “நான் கூடவே வந்து வாங்கிக்கறேன்.” என்று நின்றான்.

   சுத்திமுத்தி பார்த்து “இங்க பாரு இப்படி பக்கத்துல வந்து பயமுறுத்தாத. எனக்கு பூரின்னா பிடிக்கும். அது முன்னபின்ன தெரியாதவங்க கொடுத்தா கூட வாங்கி திண்ணுடுவேன். அதான் நீ கொடுக்க திண்ணுட்டேன். டிபன் பாக்ஸ் ரூம்ல இருக்கு. என் ஹாண்ட்பேக்ல இருந்தா இப்பவே மூஞ்சில தூக்கி எறிந்திருப்பேன்.” என்று கூற, இந்திரஜித்தோ பெண்ணவளை பேசவிட்டு அவளை ரசிக்க ஆரம்பித்திருந்தான்.

    ப்ரியதர்ஷினி அவனது பார்வை மாற்றங்களை தாமதமாக கண்டவள், அவனை சத்தம் வராமல் திட்டிமுனங்கி ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள்.
 
  “அப்பறம் சந்தோஷ் பேசினானா?” என்று பின்னால் பைக்கால் தள்ளியபடி கேட்டான் இந்தர்.

“ரீச்சாகிட்டேன்னு மெஸேஜ் பண்ணினான். போனை நான் அட்டன் பண்ணலை.” என்று நகத்தின் மீது கொண்ட வண்ணப்பூச்சை ஆராய்ந்தபடி கூறினாள்.

    “சந்தோஷோட போனை அட்டன் பண்ணலைனா பிராப்ளமில்லை. என் போனை அட்டன் பண்ணு. சரியா” என்றவன் பைக்கை உதைக்க ஆரம்பித்தான். ப்ரியதர்ஷினியின் தங்கும் விடுதி வந்து சேர, அவன் பைக்கை உதைக்கவும், ப்ரியா பதில் எதுவும் கூறவில்லை.

    மௌனமாக சென்றவளிடம், “தர்ஷினி” என்றதும் திரும்பினாள்.

    “பை” என்றதும் அவனது புன்னகை முகம் அவளை தாக்கியது.

   யாரிவன் இப்படி தனக்காக தன் பின்னால் இத்தனை தூரம் பைக்கை தள்ளிக்கொண்டு நடந்து, என்னை தரிசித்து போகின்றான். நான் அவனுக்கு இத்தனை முக்கியத்துவமா?

   சந்தோஷை ப்ரியா காதலித்தது எல்லாம் கிடையாது. அத்தை மாமாவின் உரிமையாக ‘மருமகள்’ என்ற அழைப்பு மட்டும் பிடிக்கும். அதே போல சந்தோஷிடம் உண்டான நட்பு பிடிக்கும்.

   என்னதான் கண்ணன் அண்ணன் முறை என்றாலும் ‘கண்ணன் அண்ணனிடம் கடைக்கு டவுனுக்கு என்று பைக்கில் சுற்ற அழைத்தாலும், பெண் பிள்ளைகள் இப்படி சுற்ற கூடாதென்றும், விலாசினியை அழைத்து செல்ல கூறுவான். பைக்கில் போக தான் ஆசைப்பட்டு கேட்டது. அதை புரியாதவன்.

  பெண்கள் அண்ணனாகவே இருந்தாலும் அவர்களோடு சுற்றக்கூடாது என்ற பழமைவாதி கண்ணன். அதனால் கண்ணனிடம் சிறு கருத்து பிரிவு உண்டு. ஆனால் சந்தோஷ் அப்படியில்லை. ‘ஆண் என்ன? பெண் என்ன? என்று எண்ணுவான். சிலர் கல்யாணம் கட்டிக்கும் முறை என்பதால் சுற்றுகின்றனர், விரும்புகின்றார்கள் என்ற வதந்தி கூட திரித்தாலும், சந்தோஷ் ப்ரியா காதில் கூட வாங்க மாட்டார்கள்.

  ‘அதுங்க கிடக்கு அரத பழசுங்க. இந்த டிக்கெட் எல்லாம் லாஸ்ட்டா வந்த வைரஸ் வியாதில மண்டையை போட்டிருக்க  வேண்டியதுங்க.’ என்று சபாங்களை அள்ளி வழங்குவாள்.

   சந்தோஷிடம் நட்பையும், அத்தை மாமா வீட்டில் உறவில் உரிமையும் எதிர்பார்த்தவளுக்கு கடைசியில் அந்த உரிமையால் தான் பழியும் சுமக்கின்றாள்.

   இந்திரஜித் மட்டும் தினமும் வந்து சந்திக்காவிட்டால் தன் உடை, நடை கூட ஏனோ தானோ என்று மாறியிருக்கும். அவன் முன் உடைந்திடக்கூடாதென்ற திடம், தற்போது எல்லாம் பளிச்சென்ற வலம் வருகின்றாள்.
   அவளே அறியாது காதல் இருந்தாலும் முகம் புது பொலிவை முகத்தில் காட்டிக் கொடுத்திடும்.
 
  -தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்




1 thought on “நீயென் காதலாயிரு-13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *